கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 15,587 
 
 

எனது தந்தையின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி எதிர்நோக்குகிறது. (29.08.1926 – 08.12.1995) அவர் நினைவாக இக்கதையை அனுப்புவதில் மகிழ்வையும், நன்றியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நன்றியோடு
நவஜோதி யோகரட்னம்.


திருமணமாகி ஒரு நாள் கழிந்துவிட்டது. மலர்மணிக்கு இப்பவும் அந்த அந்த நினைவு நெஞ்சை அறுத்து வருகிறது. அதை நினைக்கிறபோது அவள் தேகம் குலுங்கித் தவளைச் சதையாட்டம் நுளுந்திற்று. நெஞ்சில் மின்னல் அடிக்கிற ஒரு திடுக்காட்டம்.

அதை எப்படிப் புரட்டினாலும் மனசு அதுக்கு ஒப்புதில்லை.

முகத்தில் தடவிய பூசல் மா பூஞ்சாணம் பிடித்த விறுத்தத்தில் தெரிகிறது. கண்ணாடி எதிரே நின்று தன்னைப் பார்த்ததும் தனக்கே முகம் சுழித்துக் கொண்டாள்.

அப்படிச் சுழித்ததை நினைக்க, சடலத்தை நாணம் எகிறிக் குருகிற்று. நெஞ்சுப் பூரிப்பு உடனே அடங்கி மரித்தது. அப்பவும் சொண்டுக்குள் வந்த சிரிப்பு பூ மடல் விரிகிற மாதிரி அருக்கூட்டி வெடித்தது.
அந்தச் சொண்டுச் சிரிப்பும் நத்தைக் கணியம் ‘டக்’கென்று சுருங்கிற்று. சுருங்கின வாய்ச்சொண்டில் ஒரு ரஸ நுளம்பல் தேங்கிற்று. நுளம்பின சொண்டுகள் அப்பால் வறண்டு கொண்டன.

அழகே சாகிறதாக மறுவிநாடி அவளுக்கு ஒரு நினைவு சுமை வைத்து, அதுவும் அவள் கமண்டலத்தில் ஏறிற்று. அவள் பச்சோந்தி மனசு தாமரைத் தண்ணீராகக் குண்டுகட்டி நெஞ்சிற் துன்ன, சடலம் தும்பு சூர்த்திற்று. பூ விழுகிற மாதிரிக் கை போட்டு கன்னத்தில் தடவிக்கொண்டாள். தடவின விரல்களில் எலும்பிச்சங்கோது கணியம் நெய்யிட்ட சொக்கை பாம்பு வழுப்பாய் உணர்த்திற்று.

‘ஆஹ்’
இருதயச் சோணத்தில் ஊசி ஏறின வாதை. அவள் கண்ணைக் கிழித்து அது கண்ணீராய் ஊனித்தது.

‘மனசால தொட்டு ஒருதனை நினைச்சிட்டு, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்றது நெறி தவறின வேலை’ என்று மகேஸ்வரி ‘குத்தி’ச் சொன்னதுக்கு, ‘அப்பிடிப் பாத்தா, அடுத்தவனோட உறவு வைச்சுக் கொள்ள முன்னம் மனசால எவனையும் தனக்குள் நினையாத ஒரு பொம்புளை ஆரடி இந்த உலகத்தில் இருக்கிறாள் காட்டடி? யெண்டு கேட்டு அவள் வாயை உடனே அடைச்சிருந்தால் அப்பவே ஒரு முற்றுக் கண்டிருக்கலாம்’ என்று இப்ப தன்னுள்; எண்ணி வருந்திக்கொண்டாள். ‘இது பெண் புத்தி’ என்று புறுபுறுத்த வாய்க்குள், ‘எண்டாலும் மகேஸ்வரியை மறுக்காக் கண்டால் அதுக்குத் தக்க பதில் இக்கலாம்’ என்று திருப்திப்பட்டுக் கொண்ட மலர்மணி, அப்பால் அந்தத் தென்பும் அற்றுச் சாம்பினாள்.

அப்போது அவள் நெஞ்சிற்குள் வந்த பெருமூச்சு, ஊசிபுட்ட பலூன்போல ஒரு அசைவாக மூசிச் சுட்டது.

நெஞ்சுள் குறு காற்றுச் சுளித்து நீவிற்று.

எழுந்து நின்று கொண்டாள்.

மனம் அறளை கட்டினாலும் நெஞ்சுத் திடுக்காட்டம் அப்படியே தான் கிடந்தது.

‘அவள் ஒரு சிநேகிதியெண்டதால சொன்னன். அதைச் சொல்லப்போக, ‘காட்டடி அந்தப் போட்டோவை’யெண்டு என்னைப் பிச்சுப் பிடுங்கினாள். அதோட விட்டாளா? கண்ணுக்கு மறைச்சு வைச்ச கடிதங்களையும் இடுக்கி எடுத்துப் பாத்திட்டாள். அவள் அதைப் பாக்க எனக்குத் தலைபுடுங்கின வெக்கம் வந்துது. மற்றவளுக்கான கடிதத்தை தான் பாக்கிறது ஆக வெக்கமெண்டு அவள் யோசியாதபோது பிறகு எனக்குத்தான் என்ன வெக்கம்? வெக்கமெண்டது, தனதான அதை மற்றவை பாக்கிற வேளையில் வாற ஒரு மொய்ப்பு. அதுக்குப் பிறகு வெக்கம் எங்கால? குளிக்கிற அறையில விறுமாணத்தோடு நிக்கிறதை ஆரும் பாத்தா ‘அவுக்’கெண்டு தோல் உரியிற வெட்கம் தேகத்தில் மின்னி வரும். பாக்கிற ஆளே அப்பிடி ஆயிருந்தா அந்தக் கூச்சம் கொஞ்ச நேரந்தான் அவள் அந்தப் போட்டோவையும் கடிதத்தையும் பாக்கிறபோது எனக்கு அது இருந்துது. பாத்த பிறகு எனக்குள்ள மாதிரி அவளும் அதற்கு ஒத்து’ என்று தன்னுள் சாந்தி கொண்ட வேளை அவள் முகம் பூவாக விரிந்தது.

முகம் மலர்ந்த பூ.
நெஞ்சில அது இல்லை.
அது, ஒன்றுக்கு ஒன்று ஈடு, அதுக்கு அது சரி.
ஆனால், அது ஈடுகொடுக்கிற மட்டுமே சரி
மனசு மறுக்கிற போது மனமூட்டு வாள் பிரிவுதான்.
அந்த ஒட்டுறவு பிசகி ‘சட்’டென்று ஒரு விண் அறுப்பு எடுக்கிறது.
எல்லாம் மனசால சரிப் படுத்துகிற காரியம். மனசு நினைக்கிறதை வைச்சுத்தான் மனசு குளிர்கிறது. அது வெறுக்க அதுவே குறுகுது.
அது சிருஷ்டிக்கிறது அதுக்கே தீது.
கூட்டி வைக்கிறதே அது.
முகம் சிரிக்க வைக்கிறதும் அது.
அதைக் கறுக்கப் பண்ணுவதும் அதுதான்.
மனம் அதை நிர்ணயிக்கிறபோது அவன் மனமே அருவருக்கிறது.
அது நிர்ணயிக்கிறதில்; இருக்கிற நிர்ணயிப்பு அதுக்கு ஒரு வலு.

சிறிது வேளை கழுத்து நெரிக்கிற விறுத்தத்தில் மலர்மணியின் பார்வை அந்தப் போட்டோவில் எகிறி விழுந்தது.

மிலிட்டறி யூனிபோமுக்குள் அவனின் தேகம் கிளிக் குஞ்சாட்டம் கிடந்தது.

அப்பவெல்லாம் அதை நெஞ்சு றவிக்கையுள் மறைத்து அதையே நோக்கி அதையே தூக்கி, கண் மடலோடு மருவ விட்டு அக்களித்துச் சிரித்த பாங்கு இப்பவும் இருக்கிறதான அவள் நெஞ்சு அப்போது சுரித்தது.

இருந்தாலும், நெஞ்சோடு நினைவைப் புணர்த்தி, மனசால் வெறுக்கிற ஒருவித கோரத்துக்குள் சிக்கி, நாக்கிளிப் புழுவாட்டம் மலர்மணி நெளிந்தாள்.

‘மிலிட்டறிக்காறலெண்டாலும். என்ர நெஞ்சில இடம் குடுத்திட்டன். அது அந்த யூனிபோமுக்கல்ல, அது ஆளுக்கு விரிச்ச நெஞ்சு. அதை அவருக்கெண்டு விரிச்சது விரிச்சதுதானே’ண்டு அப்ப சொன்ன நாக்கு – அப்படி நாக்கு நறுக்கிச் சொன்ன அந்த வாக்கு என்ன வாக்கு?’ என்று இப்ப நினைக்கிறபோது அவள் நெஞ்சு வறுகி மறுகிற்று.

மனசும் குறுகிக் குழம்பிற்று.

அப்பொழுது –

‘ஐயோ’ என்ற அவள் வாய் அவள் மூக்கினுள் குழைந்து திணறிற்று.

முழி குத்த, முகம் வைத்துப் பார்த்தாள்.

கட்டிலில் அவள் புருஷன், நடராஜன் துயில்கின்றான்.

‘ஐயையோ!’

சடாரடீயெனக் கண்கள் கமண்டலத்துள் ஏறி மங்கின.

அறை சூழ்ந்த மௌனம்.

காதுகள் ‘கிண்’ணிட்டன.

‘க்ணங்…’

நிலை பெயர்ந்து உடனே கட்டிலில் சரிந்து விட்டாள்.

நடராஜன் அப்பவும் அதே தூக்கம்.

தானே தன்னுள்ளும்,தனதே தானாகவும், தன்னிலே தனித்தவளாக நின்ற நிலை, அவளுக்கு அடி புரண்டது. நடராஜன் சடலத்தைப் பயந்து பார்த்த கண்கள் குமைய, நெஞ்சிடிக்கிற அவன் உடம்பு அடுத்த கட்டிலில் கிடந்து ‘திக்’கிட்டுத் தவித்தது.

‘மலர்மணி’

‘ம்’

‘எழும்பன்ரி’

‘ம்’

‘எடி ஆத்தே, விடிஞ்சு போச்சு, எழும்பன்ரி’

‘ம் கூம்…’

‘விடிஞ்சு இம்மட்டும் பகலாப் போச்சு. ‘பஸ்’பண்ணிக்கொண்டிருக்கிறியே… எழும்படியாத்தை எழும்பு…’

மலர்மணிக்கு எழும்புகிற வலுமை மனசு பிய்த்துக் குறைத்திருக்கிறது. கன்னத்துச் சோணைகள் ‘பொம்’மித்தபடி தக்காளிப்பழ மெதுப்பாய்த் தொக தொகத்துக் கிடந்தன. விறைப்பு உப்பின முகம். தாடகையில் கண்ணீர் காய்ந்த அயறு கோடிட்டிற்று.

‘தாருது?’

‘என்னடியாத்தை, வாக்கு மாறிப் போச்சே? கல்யாண முகத்தைத் திருப்பி என்னை ஒருக்காப் பார்’

மலர்மணி கழுத்து முறித்துப் பார்த்தாள்.

எதிரே மகேஸ்வரி நின்று கொண்டிருந்தாள்.

அப்போது மலர்மணியின் தேகம் ‘திக்’கிட்டது.

‘அவரையல்லாமல், எந்த ஜென்மம் எடுத்தாலும் வேற ஆரையும் கட்டமாட்டான்’ என்று மகேஸ்வரியுடன் வாதிட்டபோது, தான் அவளுக்கு அடித்துச் சொன்ன வாய்ப் பேச்சுக்களையும், அதற்கு மகேஸ்வரி, ‘ஓமடியாத்தை இப்ப உப்பிடிச் சொல்றாய். பேந்து ஆரேன் ஒரு மாப்பிளை நல்ல வசதியா வந்தா இதை உதறிப்போட்டு அதைக் கட்டிக் கொள்ளுவாய்? ஏன்று மறுமொழி சொன்னதற்கு, அதையும் அடித்தாற்போல மறுத்து, ‘நான் அப்பிடி ஒண்டும் மானங்கெட்டு நடவன்ரியாத்தை, நெஞ்சால ஒண்டை நினைச்சால் அதைத்தான் உடலாலையும் தொடுவன். மற்றவளவையைப்போல என்னை அப்பிடி ஒண்டும் ஏணா கோணமா நினைச்சுக் கதையாதை’ என்று சவால் விட்டுக் கதைத்துக்கொண்டதையும் நினைத்தபோது மலர்மணியின் முகத்தில் வெட்டகமும் துக்கமும் ஒருங்கு கூடிப் பிழிந்தன.

தன் நிலையைத் தன்னாலுணராத.., உணர்ந்தாலும் தான் நினைத்தபடி காரியமாற்ற முடியாதிருக்கும் சுதந்திரமிழந்த பரிதாப ஜீவன்களை , புத்தி பூர்வமாகத் தெரிந்தோ அல்லது அதற்கு ஒரு தத்துவ விசாரணை செய்து ஒப்புவிக்கவோ மகேஸ்வரிக்குத் தெரியவில்லை. ஆனால், மலர்மணியை எப்படியோ சாந்தப்படுத்தி அவளுக்குத் தேற்றரவு அளிக்கவேண்டுமென்ற ஒரு தாபத் துடிப்பு மகேஸ்வரியின்.., இந்தப் பெண் உள்ளத்தில் இயற்கையாகவே கெந்தி எழுந்தது.

அப்பவே, மகேஸ்வரி ‘மனசால ஒருத்தனையும் அங்கத்தால இன்னொருத்தனையும் தீண்டுறது நெறிதவறின வேலை’ என்று சொன்னபோது, தான் அதை மறுத்து, வாதத்தைப் பிரயோகங்கள் இப்போது தன்னிலும் வராது, அவளிலும் இல்லாது, தான் நிர்க்கதியாயிருப்பதை உணர்ந்த அவன் முகத்தில் விழிக்கவோ என அஞ்சிய போது அவன் சதிரம் கரைந்து குறுகிக்கொண்டது.

அவள் கோலத்தைக் கண்ட மகேஸ்வரி, வலுவாக நெஞ்சுருகிக் கொண்டாள்;. ‘இவள் என்ன பைத்தியக்காரியாயிருக்கிறாளே? ஏன்று தனக்குள் சொல்லி, தனது முகவாட்டத்தினையும் மறைத்து, சிரிப்பு முகம் காட்டிச் சாடை பண்ணிய மகேஸ்வரி, ‘முதல்ல எழும்பி முகத்தைக் கழுவிக்கொண்டு வா எல்லாம் பிறகு சொல்றன்’ என்று தோளில் வைத்து அரட்டினாள்.

நெற்றிக்கு நேரே முகங் கொடுத்து மகேஸ்வரியின் கண்களைத் தன் கண்களால் எறிந்து பார்க்க மலர்மணி நாணிக் கூசினாள். தன் சடலத்தை எவரோ அங்கம் அங்கமாய்ப் பிய்ப்பதாகவும், தானே ஒரு பொம்மையிருப்பதாகவும் மலர்மணிக்கு அப்போது ஓர் உணர்ச்சி தட்டிற்று. கவிந்த முகத்தை நிமிர்த்தாமல், மௌனமாக இருந்து நிலத்தைப் பார்த்த மலர்மணிக்கு ஒரு ஷண நேரத்துள் கண்களிலிருந்த நீர் பொம்மித்துக் கொட்டிற்று. தேகம் குலுங்க அழுத வண்ணம் கைகளிரண்டாலும் முகத்தைப் பொத்திக்கொண்டு ஒரு சிறு குழந்தைபோல விம்மி, விக்கலிட அழத் தொடங்கினார்.

‘சிச் சீ, இதென்ரி மணி குழந்தைப் புள்ளபோல அழுகிறியே, இப்ப என்னதான் நடந்திட்டுது? அதைச் சொல்லன்ரி’ என்று, தான் எதுவும் தெரியாமலே கேட்கிற ஒரு பாவனை காட்டி , புதிதாக அங்கலாய்க்கிறவன் போல் நின்று கேட்டாள் மகேஸ்வரி.

‘மகேஸ்! பிளீஸ், உன்னைக்கும்பிட்டன். என்னை அலட்டாமல் இஞ்சயிருந்து போயிடு. இல்லை நீ என்னில உண்மையாக நேசமெண்டா கொஞ்சம் பொலிடோல் கொண்டு வந்து தா… டியே நான் நினைச்சிருந்த மாதிரி எனக்கொண்டும் நடக்கேலயடி…’ என்று வாய்விட்டுக் குளறினாள் மலர்மணி.

‘எது நினைச்சு எது நடக்கேல? நாங்கள் நினைக்கிறதெல்லாம் நினைக்கிறபடி நடக்கிற அளவுக்கு இந்த உலகம் முன்னேறல்ல. இந்த உலகத்தைப் பாத்து அழாமல் உன்னை நினைச்சு நீ அழுது உன்னையே நீ மாய்த்துக் கொண்டால் அதோட இது முடியிற காரியமா, உது வீண் அழுகை. முதல்ல உந்த அழுகையை விட்டிட்டு விஷயத்தைச் சொல்லு’ என்றாள் மகேஸ்.

‘என்ர மானமோ போயிட்டுது இதைத் தெரிஞ்சசு கொண்டும் தெரியாதவள் மாதிரி எனக்கு முன்னால் நிண்டு நையாண்டியும் பண்ணி என்னைக் கொல்லுறியே’ என்று மலர்மணி தொண்டை அலறச் சொல்லி அழுதாள்.

மகேஸ்வரி சிரித்தாள்.

தன் சிரிப்பு அவள் நெஞ்சில் ஊசி ஏற்றும் வாதையை உண்டாக்கும் என்று உணர்ந்த மகேஸ்வரி, வார்த்தைகளை அவள் செவியில் ஏற்றி உடலைத் தட்டி எழுப்பவியலாதபோது முகபாவனையால் ஆளை மறு உருவாக்கிவிடலாம் என்றும், தான் அதற்காக அப்படிச் சிரித்துக் கொண்டதே சரி என்று என்றும் தன்னுள் ஒப்புக் கொண்டதற்குச் சான்றாக, மலர்மணி தன் அழுகையை நிறத்தி மகேஸ்வரி முகத்தைக் குறி வைத்துப்; பார்த்தாள்.

இது கண்டு மகேஸ்வரி மறுபடி வாய்க்குள் சிரித்த சிரிப்பு, அவன் சொண்டுகளைப் பிரித்து வெளியேறி வெடித்தது.

‘நான் செத்துக்கொண்டிருக்க நீ சிரிச்சுக்கொண்டிருக்கிறாய். நெஞ்சில் ஈரமில்லாத ஒரு பெண்மையற்ற அரக்கியடீ நீ’ என்று மலர்மணி சினந்து கொண்டாள். அப்போது அவள் முகம் குல்லிட்டு அழுகையே வந்தது.

நான் அரக்கியெண்டால் உன்னோட சேந்து ஒப்பாரி பாடி ஒரு பாட்டம் கண்ணீரையும் உனக்காக ஒப்புக்கு விட்டுப் போட்டு என்பாட்டில போயிருப்பன். அரக்கத்தனம் எங்கயிருக்கும் தெரியுமா? அது உன்னை இந்தமாதிரிக் கண்ணீர் விட வைத்திருக்கிறதையும் எடுத்துச் சொல்லாமல் நான் போயிருக்கலாம், ஆனால் …’ என்று வார்த்தையை மென்று கொண்டே அவள் முகத்தை ஈறல் கக்கப் பார்த்த மகேஸ்வரி, ‘மான மெண்டா அதை என்னெண்டு தெரிஞ்சுகொண்டியா?’ என்று ‘சடா’ரென்று விடுத்துக் கேட்டாள்.

‘நீ அண்டைக் கொருநாள், ‘ஒருதனை மனசால விரும்பியிட்டு, அடுத்தவனோட உறவு கொள்கிறது கற்புத் தவறின நிலை’யெண்டு சொல்லிப்போட்டு, இப்ப அதையே விடுத்துக் கேட்டா நான் என்னெண்டு அதை வாய் துறந்து சொல்றது?’ என்று துடித்துக் கேட்டாள’ மலர்மணி.

‘நான் அண்டைக்கு அப்பிடிச் சொன்னேனே தவிர, அதுதான் சரியெண்டு சொல்லேலையே? நீதான் அப்ப இருந்து அறியாமையில இப்பவும் இருந்துகொண்டு தவண்டையடிக்கிறாய்’ என்றாள் மகேஸ்.

‘மகேஸ்வரி நிறம் மாறும் பச்சோந்தியாகப் பேசுறாளே ‘ என்று தன்னுள் நினைத்துக்கொண்ட மலர்மணி, இதற்கு மேலும் மகேஸ் என்ன சொல்கிறாள் என்று அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவண்ணம் ‘திக்’ காடினாள்.

‘மானமெண்டால் அது என்னெண்டு, நானே உன்னைப் போல ஒரு பெண்ணாயிருந்துகொண்டும் கேட்பது உனக்குப் புதுமையாயிருக்கும், அதுதான் நீ என்னை இப்பிடி முழுசிப்பாத்துப் பேந்திறாய் பழசையே கேட்டும். கண்டும், நடத்தும் பழகின மனசு ஒரு புதுசைக் கண்டால் அதை உடனே ஒப்புக்கொள்ளாமல் வெறுத்து வெருட்சி அடைகிறது சகஜம் தான். பழசோ புதிசோ அது வாழ்க்கைக்கு ஏற்றதாயிருந்தால் அதை ஏற்று வாழ்வதுதான் லட்சணம், அதுதான் மரபு…மானமென்றது மனசு கற்பிக்கிற ஒண்டே தவிர வேற அதில ஒண்டுமில்லை.

‘இந்த மானம் இருக்கே அது தானாகச் சுழண்டு தானாக மடிந்துவிடும். மனசே சஞ்சலிக்கிறதுபோல அது தோன்றினாலும் அதுகூட அந்த மனசிலே பிறப்பதில்லை. ஒரு நிலையிலிருந்து இன்னொன்றிற்காக பிடிக்கிற ஒரு எண்ணம்தான் அந்த மனசாகும். எதை நாங்கள் கூடாதெண்டு நினைக்கிறமோ அதையே மானம் போகிற விஷயமாக மனம் நிர்மாணித்து விடுகிறது. இதெல்லாம் காரியங்களைப் பொறுத்தேயல்லாது மனசைப் பொறுத்து ஒண்டுமேயில்லை’

சற்று நிறுத்தி, தான் சொல்வதை ஆமோதிக்கும் பாவனை அவள் முகத்தில் தெரிகிறதா என்று தன் கடைக்கண் எறிந்து பார்த்தாள். இவள் சொல்வதை மலர்மணி அப்படியே விழுங்கிக் கொண்டிருந்தது புலனாயிற்று.

நல்லாக் கவனி, ஒரு காலதில, புருஷன் செத்தால் அவன் செத்த பழிக்காக அவன்ர பெண்சாதி உடன்கட்டை ஏறிச் சாக வேண்டும். ஆனால், அவள் அப்படிச் சாகாட்டி, ‘அவள் மானங் கெட்டவள், கற்பிழந்தவளெண்டு கேலி செய்து, அவளை ஒதுக்கி வைச்சுச் சாக்கொண்ட அதே சமூகம், இண்டைக்குத் தாலி இழந்தவனையெல்லாம் உடன்கட்டை ஏத்தியோ, ‘மானங்கெட்டவளெ’ண்டு பழிச்சு ஒதுக்கியோவைக்குதா? அதே சமூகத்தின் சொச்சந்தான்ரி இண்டைக்கும் ’மானமெ’ண்ட மாயப் பொடி தூவி, பெண் கழுத்தை அறுக்க வருகுதடி. நீ, அஞ்சாதை, வாழ்வுக்கு இடைஞ்சலாயிருக்கிறது ஏதோ அதை ஒதுக்கிறதுதான் முறை. அதுதான் நீதி…’

அவள் முகத்தை இவள் பார்த்தாள். தான் சொன்னது அவள் காதுகளில் செவ்வையாக ஏறியிருக்கும் ஒன்று தனக்குள் நினைத்தபோது புளகித்துக் கொண்டாள்.

‘இப்ப உனக்கு மனசில் ஏதும் சபலம் இருந்தா அதைப் பயப்படாமல் கேள்’ என்றாள்.

அப்போது மலர்மணியின் நெஞ்சு விம்மி எழுந்து, ஒரு பெருமூச்சுடன் தாழ்ந்தது. முகம் மலர்ச்சியோ துக்கமோ கலவாத கோரத்தில் கிடந்தது. எறிந்த கண் வாங்கவில்லை பேசாமல் இருந்தாள்.

‘… நீ இப்ப நடராஜாவைக் கட்டிக்கொண்டதால மானம் போயிட்டுதென்றாய், அது உண்மையல்ல. அந்த மிலிட்டறிக்காறனைக் கட்டாததல்ல, … அது தவறெண்டு எண்ணயதால வந்த மன எழுச்சிதான் உனக்கு இந்த மானத்தையோ கற்பையோ நிருமாணிக்க எண்ணம் வந்தது. என்ன அப்பிடித்தானே ?’ என்று தொடர்ந்து பொறி தட்டின மாதிரி ஒரு கேள்வியைப் போட்டாள்.

‘அது சரிதான். ஆனா, அதுக்கு நீ என்ன சொல்றாய்?’ என்று தனது அழுகையெல்லாம் மறந்து அப்போது ஒரு குழந்தையைப்போல ‘அவுக்’கென்று கேட்டுவிட்டு அங்கலாய்த்தாள் மலர்மணி.

‘பிழையெண்டு கண்டும் அதைத் திருந்தத் துணிவு இல்லாம் இறுக்கிறதாலதான் மனிதன் ஆகவும் தாழ்ந்த நிலைக்கும் அடி பிசகின வாழ்க்கைக்கும் ஆளாகிவிட்டான்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்ட மகேஸ்வரி, ‘தவறு என்று கண்டதை முதல்ல திருத்திக் கொள்ளத் துணி. அது போதும்’ என்றாள்.

மலர்மணி இந்த வாக்கைப் புரிய முடியாமல் ‘தறு தறு’ வென்று முழுசினாள்.

‘என்ன உப்பிடி முழுசிறாய்? கற்புப் பறிபோகுமெண்டு யோசிக்கிறியாக்கும். ஒரு விஷயத்தை அல்லது ஒரு பொருளைப்பற்றி எங்களுக்கு நாங்களே உருவாக்கிக் கொள்ற கருத்துத்தான் சிந்தனைத் தூண்டலாகும். சில கருத்துகள் எங்கள் புலன் உணர்ச்சிகளின் வழியாகக் கிடைக்கின்றன, சில கருத்துக்கள் அப்பிடி வருவதில்லை. இதை விட்டு விட்டு, மனசால ஒரு விஷத்தைச் சரிப்படுத்த நினைக்கிறது காற்றை நெருப்பால சுடுகிற மூளை கெட்ட வேலையடி’ என்று சற்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு ‘இப்பவெண்டாலும் புரியுதா?’ என்று கேட்டு அவளையே பார்த்தாள்.

‘இல்லை’ என்று வாயசைத்துச் சொல்லுவதற்கு நாணி, தன்னை மறந்தே தலையசைத்து அதைக் காட்டிக்கொண்டாள் மலர்மணி.

மலர்மணி திருப்தி அடையாமல் கண்டு மகேஸ்வரி சற்றுச் சினப்புடன் சொன்னாள்.

‘மாதவி எத்தனையோ ஆண் அழகன்களை மனம் ‘திறந்து பாத்திருக்கின்றாள். ஆனால், அவன் மனம் ‘வைத்து’ப் பார்த்தது கோவலனை மட்டும்தான். அதற்காக மாதவி மானம் இழந்தவளா? நீ மனம் ‘வைத்தது’ அந்த மிலிட்டறிக்காறப் பொடியனில. மணந்ததோ நடராஜாவை. மனம் என்ற குறளியை நாடுகிறபோதுதான் கற்பு என்ற பிரச்சினை வருகுது? மனம் நிர்ணயிக்கிற அதை, உன் எண்ணப்படி பாத்தா, கற்பின் மகிமையே கெடவில்லை. ஏனெண்டா, மனசின் விருப்பு வெறுப்பு ஆகிய இரண்டும்தான் கற்பையோ மானத்தையோ சொல்கின்ற ஒரு தராசாக இருக்கிறது. இதை நீ ஒப்புக்கொள்ளக் கடினப்படுவாய். அது, பழக்கத்துக்கு மனிதன் அடிமைப்பட்ட ஒரு கோஷம். ஆனா, அதை அறிவு பூர்வமாகப் பார்த்தால் உண்மை அதுவேயல்ல வெறும் பிரமையால் நாங்கள் வகுத்துக் கொள்ளும் இன்னொரு பிரமையின் மறு பிரதிபிம்பம்தான் அதுவேயன்றி வேற ஒண்டுமில்லை.’ என்று விட்டு, ‘உன்ர மனசு இப்ப முந்திய உணர்வு கொண்டு தாக்குவதாகப் படுகுதா? ஏன்று கேட்க எண்ணியவள், அப்படிக் கேட்கிறது சரியல்லவென்று அதைக் கேட்காமலே அவள் முகத்தைப் பார்த்தாள்.

‘மனம் வைச்ச ஒண்டை விட்டிட்டு, அடுத்ததை…?’ என்ற கேள்விக் குறியுடன் நெற்றிப் புருவத்தை நெரிடிக் கொண்டாள் மலர்மணி.

‘அப்பிடிக் கேள். மனம் வைச்ச ஒண்டை விட்டு அடுத்ததை எவரும் நாடுறேல்ல. இது மனித இயல்பு. ஆனா, சமூகத்தில இல்லாமை – உள்ளது, மேடு – பள்ளமுமான சீர்கெட்ட இரு வர்க்க வாழ்வு ஒரு நோயாகி, அதுவே மனிதர்களைச் சிப்பிலி ஆட்டி வதைத்து அந்த நோய் நமது விருப்பத்திற்கு மாறாக நம்மை அணுகிறபோது, நாம் அதை எதிர்த்து விரட்டாமல் அதையே கட்டி அழுதுகொண்டு அதுக்குப் புனுகு தடவிப் பூசை செய்து கொள்ளுறதாலதான் எல்லாத் தவறும் நேர்ந்து விடுகிறது… நான் இதை ஒரு தத்துவ முறையில் பேசுவது உனக்குப் புரியுதோ என்னவோ… தத்துவம் சிலருக்குத் தத்துவெட்டிப் பூச்சிபோல. அது உனக்கும் பிடிபடவில்லையெண்டு உன்ர முகம் சொல்லுது…சரி கவனி, நோய் பிடிச்சு நீ டொக்டரிடம் போறாயெண்டு வைச்சுக்கொள். உன்ர நோயின் தன்மைக்கு, அவர் உனது விருப்பத்துக்கு மாறாக, உன்னை நிர்வாணமாக்கி சதிரம் முழுவதையும் பச்சையாகவே சோதனை செய்ய நேரிடும்போது, ‘ஐயோ என்ர மானம் போச்சு, கற்பு அறுந்து போச்சு’தெண்டு நினைச்சு ஒப்பாரி வைப்பியா?… அந்த நேரம் வாற ஒரு உணர்ச்சி, அது பழகின தோஷத்தால அல்லது பயத்தால வருமே தவிர வேற எதுவுமே தோன்றாது. இஞ்ச கற்பையும் மானத்தையும் சொல்ல வைக்கிறது, அங்கேயுள்ள நிலையில் உருவாகிற மனமும் தவிர வேற ஒண்டுமில்ல… அதே டொக்டர் மனம் ‘வைச்சு’ப் பரிசோதிக்கத் தொடங்கினால் அப்பதான் உன்ர கற்புப் போய்விட்டதாகக் குமுறத் தொடங்குவாய். இல்லையா? இதில நீ சொல்லுற கற்பு-, மானம் எப்பிடி உருவாகி எதனால் நிறுவப்படுகிறதென்பதைக் கவனிச்சியா?… மனம் ‘வைக்காமல்’ அவர் என்ன செய்து பரிசோதிச்சாலும் பறிபோகாத கற்பு, அவர் மனம் ‘வைச்சு’ அதே பரிசோதனையைச் செய்யிறபோது மட்டும் போவதெண்டால் அந்தக் கற்பு அதுவரை எங்க கிடந்தது? அது மனசில் இருந்தல்லாது ஒரு நிலையில், வாக்கில் செய்கையில் இருந்ததில்லை. இப்ப ‘விஷயம்’ புரியும்தா?’ என்று கேட்டுவிட்டு ‘என்ன, இதெல்லாம் உனக்கு எரிசரமாயிருக்குதா?’ என்று அவளையே பாhத்தாள் மகேஸ்வரி.

மலர்மணி அப்பவும் முழுசினாள்.

‘எடிய விசரி, இதையெல்லாம் வாழ்க்கைக்கு அஞ்ஞானத் தத்துவம் பேசிற வெட்டி வேதாளங்கள் போடுகிற வெறுங் கூச்சலடி. இந்தப் பயங்தாங்கொள்ளியளை இதே எரிசரத்தால் வெட்டித் தள்ளு… அந்தக் காலத்தில் இந்த மானத்தைச் சொல்லி உடன் கட்டை ஏற்றுவித்துப் பெண்களைக் கொன்ற அதே சண்டாளர் தான்ரி இந்தக் காலத்திலும் இந்த மானத்தைப் பற்றிப் பேசி உன்னையும் என்னையும் வெருட்டிக் கொலை செய்யப் பார்க்கினம். இதுக்கெல்லாம் இனி மசியாதையடி. மனம் நினைக்கிறதை மனசாலேயே அறுத்து அதை வென்றுகொள். வாழ்க்கைக்கு அதுதான் வழி. ஓண்டைத் தெரிஞ்சுகொள். வாழ்க்கையை மனசு நிர்ணயிக்கிறதில்லை. வாழ்க்கைதான் மனசை நிர்ணயிக்கிறது. இதைப் புரிஞ்சு கொண்ட பயமில்லாமல் இந்த எரிசரத்தை எடடி…’

மலர்மணியின் தோளில் மகேஸ்வரி கை வைத்து உலுப்பினாள். அது ஒரு உலகளாவிய கரமாக அவளுக்குத் தெரிந்தது.

தன் நிலையிழந்து, ‘சடா’ரென்று எழுந்து, மகேஸ்வரியின் கரங்களை இழுத்து வருடிக் கொஞ்சினாள் மலர்மணி.

மகேஸ்வரி முகத்தில் பெருமிதச் சிரிப்பு

– வசந்தம் – மே மலர் – 1966

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *