எம்.ஸீ (M. C)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 2,975 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவெல்லாம் அனலாய் அடித்த காய்ச்சலில் உடல் நைந்த துணியாய்த் துவண்டது. தொண்டையெல்லாம் ஒரே புண். ஓர் அடி எடுத்து வைக்கவும் உடலில் பலமில்லை. இருந்தாலும் மனம் மட்டும் நேரத்தைக் கணக்கிட்டது. ‘மணி ஆறாயிடுத்து போலருக்கே! தினமும் அலாரம் வைத்து எழும் எனக்கு அன்று அலாரமில்லாமலேயே முழிப்பு வந்திருந்தது. இத்தனைக்கும் பாலாவிற்குத் தொந்தரவாக இருக்க வேண்டாமென்று நினைத்து கூடத்திலேயே வெகு நேரம் இருமிக் கொண்டிருந்து விட்டு, பின்னிரவில் தான் அறைக்குச் சென்று உறங்கினேன். வழக்கத்திற்கு மாறாக எழுந்ததுமே பசி வயிற்றைக் கிள்ளியது.

பக்கத்தில் குழந்தையைப் போலத் தூங்கும் பாலாவைக் கூப்பிடக் கையை நீட்டிவிட்டு, வேண்டாமென்று மறுபடி இழுத்துக் கொண்டேன். போன வாரம் அடித்த இரண்டு நாள் காய்ச்சலில் இளைத்தாற் போல இருந்தார்.

‘ஹா,.ஹா’ வென்று இரவெல்லாம் ஒரேயடியாய் அனத்தி வீட்டில் இருக்கும் எல்லோரையும் பகலெல்லாம் ஏவிக் கொண்டு ரகளை செய்தார். வெள்ளிக் கிழமை கிடைத்த ‘எம்ஸீ’ மட்டுமில்லாமல், அடுத்து வந்த சனி ஞாயிறும் படுக்கையை விட்டு எழாமல் ஓய்வு எடுத்தார். ‘டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கார்’, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார். வெள்ளி இரவெல்லாம் அவர் கேட்ட வெந்நீரை அவ்வப்போது மைக்ரோ அவனில் சுட வைத்துக் கொடுத்த படியே நான் கழித்தேன்.

இன்னும் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து பாலா எழுந்தால் போதும்.

பெண்ணை எழுப்புவதற்கு பாவம், அசந்து தூங்கும் அப்பாவை எதற்கு எழுப்ப வேண்டும்? நானே மெள்ள எழுந்து நடந்தேன். நிவேதிதாவின் அறையை அடைந்தது உடலை முந்திக் கொண்டு என் மனம்.

“நிவேதா, மணியாறது பார். ஸ்கூலுக்குக் கிளம்பணுமே”, என் குரலை எனக்கே அடையாளம் தெரியவில்லை. அயர்ந்து தூங்கும் பெண்ணோ அதனால் சற்றும் அசையவில்லை. மெள்ள ஊர்ந்து அருகில் போய் குப்புறப்படுத்துக் கொண்டிருந்தவளின் முதுகில் கையை வைத்து எழுப்பினேன்.

“ம்,.. என்னம்மா?”

“எழுந்திரும்மா, நிவி”, கண்ணைத் திறக்கவே சிரமப் பட்டபடி.

“மம்மி, ஆர்யு க்ரேஸி? இன்னிக்கி சனிக்கெழமம்மா, ஃபார் ஹேவென்ஸ் ஸேக், ப்ளீஸ் தூங்க விடு, ஓகே”, போர்வைக்குள் புகுந்து கொண்டாள் ஆமை தன் தலையை கூட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போல.

வேகத்தில் கிழமையில் எனக்குக் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மெல்ல நடந்து படுக்கையில் சாய்ந்து மறுபடியும் தூங்க முயற்சித்தேன். ஹூஹும், முடியவில்லை. டாக்டர்.லாய் கிளீனிக்கைத் திறக்க எப்படியும் ஏழாக்கி விடுவார். அதற்குள் இன்னுமொரு ‘பாரஸிடமால்’ போட்டுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்னால், ஏதேனும் சாப்பிட வேண்டுமே. சாப்பாட்டு நினைப்பு வந்ததுமே பசித்த வயிறு கட்டுக் கடங்காமல் குதியாட்டம் போட்டது. பிரஷ் செய்து முகம் கழுவினேன். பச்சைத் தண்ணீரில் கை பட்டதும் உடல் குளிர்ந்து சிலிர்த்தது.

மறுபடியும் மெதுவாக நடந்து சமையலறைக்குப் போனேன். பிரெட் ரேக்கில் ஒரு துண்டு பிரெட் கூட இல்லை. மாத்திரை சாப்பிட பால் மட்டும் குடித்தால் போதுமோ என்ற சந்தேகத்தில் ‘மாத்திரை இப்போது வேண்டாம்` என்ற முடிவோடு, ஒரு கப் பாலைச் சுட வைத்துக் குடித்து விட்டு, அடுத்து என்னவென்று யோசிக்க முயன்றேன்.

யோசிக்கக் கூட முடியாதபடி தலை வலித்தது. அப்படியே டைனிங் டேபிள் சேரில் உட்கார்ந்தேன். ஃபிரிட்ஜைத் திறந்தால், ஜில்லென்று இரவு மீந்து போன, தாளித்துக் கொட்டிய தயிர் சாதம் மட்டுமே இருந்தது. உடம்பிருந்த நிலைக்கு தயிர்சாதம் சரி வராது. ஃபிரிட்ஜை மூடினேன். கதவில் ‘மாக்னெட்’ பிள்ளையார் விழுந்து விடாமல் பிடித்திருக்க கிழித்து வைக்கப் பட்டிருந்த ‘டெய்லி ஷீட் காலண்டாரின் அன்றைய காகிதம்.

பாலா இரவே ஒட்டியிருக்கிறார், நான் மறக்காமல் இருக்க. அன்று அமாவாசை. தர்பண நாள். பொதுவாய் எல்லா நாட்களும் கையில் சாதமோ டிபனோ எடுத்துக் கொண்டு போகும் பாலா, சில நாட்கள் ‘க்ளையண்ட் மீட்டிங் இருந்தால், எடுத்துக் கொண்டு போக மாட்டார். மற்றவர்கள் முன்னால் சாப்பாட்டு டப்பாவைத் திறக்க வேண்டுமா என்று சங்கோஜப் படுவார். அது போன்ற நாட்களில் மதியம் அவர்களோடு வெறும் பழங்கள் தின்று பழச்சாறு குடித்து வீட்டிற்கு வரும் போதே, பசியுடன் தலைவலியையும் சேர்த்துக் கொண்டு வருவார். ஆனால், மாதத்தில் ஒரு நாள், அமாவாசையன்று மட்டும் மீட்டிங் இருந்தாலும், லஞ்ச் எடுத்துக் கொண்டு போவார். பச்சைத் தண்ணீர் கூட வெளியில் குடிக்க மாட்டார்.

இன்று சனியாயிற்றே, சாப்பாடு கட்ட வேண்டாமே. ஓஹோ! ‘வெங்காயம், பூண்டு தவித்துச் சமைக்க எனக்கு நினைவூட்டல். படுக்கையை விட்டு எழாதே’ என்று கெஞ்சியது உடல். நான் இருந்த நிலையில் சமையலே இன்று எப்படி,…?

நிவேதிதா, கண்ணைக் கசக்கியபடி வந்தாள்.

“ஐயோ அம்மா, நீ காலங்கார்த்தால எழுப்பிட்ட, எனக்கு அதுக்கப் புறமாத் தூக்கமே வரல்ல மம்மி”, செல்லமாய் கோபித்தவளிடம்,

“நிவேதா, இன்னிக்கி கொஞ்சம் ரைஸ் குக்கர்ல சாதம் வச்சு மிளகு ரசம் வைப்பியா? அம்மாக்கு ரொம்ப முடியல்லம்மா. ‘கிளினிக்’ தெறந்தவுடனே நா போகணும்”,

இருமல்களுக்கிடையே கெஞ்சினேன்.

“ஐம் சாரிம்மா, நா இதோ,.. பாட்டு க்ளாஸ் கிளம்பிண்டே இருக்கேன்.”

“இன்னிக்கென்ன, நாளைக்கித் தானே பாட்டு க்ளாஸ்?”

“போன வாரம் மிஸ்ஸான க்ளாஸத் தான் இன்னிக்கி ‘மேக்கப்’ பண்றாம்மா. எனக்கு லஞ்ச் கட்டத. நான் டான்ஸ் க்ளாஸுக்கும் போயிட்டு சாயந்தரமா வந்து சாப்டுக்கறேன்”

நிவேதிதாவிற்கு பாட்டு க்ளாஸ் இல்லாதிருந்தால் பாவம், நிச்சயம் எனக்கு உதவியிருப்பாள். அவளுக்கு ரைஸ் குக்கரில் சாதம் வைத்து மிளகு ரசம் வைக்கத் தெரியும். உருளைக் கிழங்கு ரோஸ்ட் கூடச் செய்து விடுவாள். இந்த பதிநான்கு வயதிற்குள் அதுவே பெரிய விஷயம். அதிகம் சமையல் கட்டிற்குள் விட்டதில்லை நான், படிக்கும் பெண்ணிற்கு எதற்குத் தொந்தரவு என்று. பாலாவின் சமையல் மைக்ரோ அவனில் வெந்நீர் வைப்பது வரை மட்டுமே. அவர்களிடமிருந்து என்றுமே நான் உதவி எதிர்பார்த்ததே இல்லை. ஆனால், எனக்கே முடியாத போது தான்,..

பாலா பிரஷ் செய்து விட்டு காபிக்கு வந்தார். “நா இன்னிக்கு ஒரு டூ அவர்ஸ் ஆபிஸ் போணும்மா. அதுக்குள்ள தர்பணத்தையும் முடிச்சுடறேன். நீ சிம்பிளா சமைச்சுட்டீன்னா,”

முடிக்கும் முன்னே, “பாலா, எனக்கு ராத்திரி முழுக்க காய்ச்சல். ஏந்துக்கவே முடியல்ல. இன்னிக்கு நீங்க ஆபீஸ் போவேள்னு நா நினைக்கவேல்ல. இப்ப நா ‘க்ளினிக்’ போகணும்”, என்றேன்.

‘க்ளினிக்’ திறக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும்மா. நீயே போய்ப்பியோன்னோ. இல்ல, நான் கூட வரணுமா.”

“நானே போய்ப்பேன். சமையல் தான்”, இருமல் ஒரேயடியாய் உடலை உலுக்கியெடுத்தது.

“வெறும் ரசம் வைச்சுடும்மா. கறி கூட வேண்டாம், என்ன? “, சொல்லிக் கொண்டே குளிக்கப் போனார். தொட்டுக் கொள்ள ஏதாவது காய் இல்லாவிட்டால் ஆர்பாட்டம் செய்யும் நிகிலைத் தான் சமாளித்தாக வேண்டும்.

எள் நிறைத்து வைத்திருந்த பாட்டிலிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து, கல் பொறுக்கி வைத்தேன். தம்பாளம், பஞ்சப்பாத்திரம், உத்துருணி ஆகியவற்றை இருமிக் கொண்டே ‘செத்தவன் கையில் வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தது போல’த் தேய்த்துக் கழுவினேன். சாமியறையைத் மெழுகிக் கோலம் போட்டேன் குளிக்காமலேயே.

நிற்காத இருமல் தொண்டைப் புண்ணை இன்னும் மோசமாக்கியது. தொண்டையில் இருந்த புண்கள் முட்களாய் குத்தின; உறுத்தின. இருமி இருமித் துப்பிய சளியுடன் கொஞ்சம் ரத்தத் திட்டுக்கள் வேறு வந்தன. சாதாரணமாக எடுப்பதை விட ஒரொரு வேலையும் நான்கு மடங்கு நேரம் எடுத்தது எனக்கு. சமையறையிலிருந்து சாமி ரூம், அங்கிருந்து மறுபடி கிச்சன் வர ஏதோ மலை ஏறிய ஆயாசம் உடலெங்கும். மறுபடியும் பசி வயிற்றைக் கிள்ளியது.

சரி, ஒரு ரசத்தை வைத்து விட்டால் எல்லோருமே சாப்பிட்டு விடலாம். ரைஸ் குக்கரில் சாதம் வைத்து விட்டு, மிக்ஸியில் மிளகு ஜீரகம் பொடிக்க ஆரம்பித்தேன். கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.

பேசாமல், ரசம் கொதிக்கும் அடுப்பை அணைத்து விட்டுப் போய்ப் படுப்போமா என்று தோன்றியது. ஆனால், பாலாவும் நிவேதாவும் சாப்பிடாமல் வெளியே கிளம்பினால், பிறகு மாலை வீடு வரும் வரை வெறும் வயிற்றுடன் இருப்பார்களே என்று தோன்றியதும் அப்படியே கைகளைத் தலையணையாக்கி முகத்தை மேடை மீது கவிழ்த்துக் கொண்டு கொஞ்சம் கண்களை மூடிக் கொண்டேன். சற்று மயக்கம் தெளிந்தது.

சாதாரண நாளாய் இருந்தால், இந்நேரத்திற்கு ஒரு முழுச் சமையலையும் முடித்து மேடையையும் நேராக்கியிருப்பேன், சமைத்த சுவடே தெரியாமல். காய்ச்சலும் அசதியும் என்னை எண்பது வயதாக்கிவிட்டதோ! அப்பாவைப் பெற்ற பாட்டியின் ஒரு அக்கா இன்னமும் உயிரோடிருந்தார். அவர் இப்படித் தான் மெள்ள நடந்து மெள்ள மெள்ளத் தன் வேலைகளைச் செய்வார். நடந்தபடியே சட்டென்று நின்று விடுவார். சில நொடிகளில் மறுபடியும் ஊர்ந்து செல்வார். யாரையும் ஏவ மாட்டார். தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்வார். முடிந்தால் பிறருக்கும் உதவவே நினைப்பார் அந்நிலையிலும் கூட. என் அன்றைய நிலை எனக்கு அவர் நினைவைத் தான் கொணர்ந்தது.

ரசம் பொங்கி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மணியைப் பார்த்தால் எட்டரையாகியிருந்தது. க்ளினிக் திறக்க இன்னும் அரை மணி நேரம் இருந்ததால் நத்தை ஊர்வது போல மெள்ள நடந்து சாதத்தையும் ரசத்தையும் மேடையில் வைத்து விட்டு இரவு உடையை மட்டும் மாற்றிக் கொண்டேன். ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, “நிவேதா, நீயும் அப்பாவும் சாப்புடுங்கோ. சாப்டாம கெளம்பிடாத. நிகில் எழுந்துண்டா குளிக்கச் சொல்லு. நா வந்து அவனுக்குச் சாதம் போடறேன்”, என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்தேன்.

“அம்மா, கேன் யூ மேனேஜ், நா வேணா வரட்டா ஒங்கூட, அப்பிடியே க்ளாஸுக்குப் போயிக்கறேன், ம்.”

“இல்ல, நீ சாப்டு கிளம்பு. பாட்டு டீச்சர் எங்கிட்ட ஒரு ‘ரெஸிப்பி’ கேட்டிருந்தா. நா அடுத்த வாரம் தரேன்னு மட்டும் சொல்லு.”

கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்து மின்தூக்கியை அடைந்தேன். கண்ணை மறுபடியும் இருட்டியது. லிஃப்டின் சுவரில் சாய்ந்தேன். தலையைக் கையாலேயே கோதிக் கொண்டு லிஃடில் இறங்கிச் சாலையை அடைந்தேன். பளிச்சென்ற வெயில் பட்டதும் உடற் சோர்வு இன்னும் அதிகமாய்த் தெரிந்தது. எதிர் திசைக்குப் போய் க்ளினிக்கை அடைந்ததும் கால்கள் உட்காரச் சொல்லிக் கெஞ்சின.

வெளியில் இருந்த இருக்கையில் யாரோ கைக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கவே, இன்னும் திறக்கப் படாத க்ளினிக்கின் கண்ணாடிக் கதவைப் பார்த்தபடி நின்றேன். திறந்து விட்டால் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளலாம். ஆனால், சாதாரணமாகவே உள்ளே குளிர் அநியாயத்திற்கு அதிகமாய் இருக்கும். காய்ச்சலுடன் நடுக்கமே வந்து விடுமோ.

சட்டென்று கைக் குழந்தைக்காரி தோளில் கைவைத்து, ‘உட்காருகிறாயா’, என்று கேட்டதும் தான் தெரிந்தது, நின்றபடியே சில நிமிடங்கள் தூங்கியிருக்கிறேன் என்று. மலாயும் இல்லாமல் சீனமும் இல்லாமல் ஒரு இரண்டுங் கெட்டான் முகம். இனத்தை ஊகிக்க முடியவில்லை. பளிச்சென்று சிரித்தவளுக்குக் கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு உடனே உட்கார்ந்து கொண்டேன்.

க்ளினிக்கைத் திறந்து கொண்டிருந்தாள் அங்கு வேலை செய்யும் பெண். இவள் வரிசை எண்ணைக் கொடுத்து விட்டால், பிறகு மறுபடியும் வெளியில் வந்து உட்கார்ந்து விடலாமென்று நினைத்து கைக் குழந்தைக் காரியைத் தொடர்ந்து நானும் உள்ளே சென்றேன். வெப்பமானியை எடுத்து என் நாக்கின் அடியில் வைத்துச் சிறிது நேரத்தில் எடுத்தாள்.

“யூ ஹேவ் ஃபீவர். எனி அதர் சிம்பம்ஸ்?”

“யா, சோர் த்ரோட், ஹெட் ஏக், பாடி பெய்ன், காஃப் அண்ட் கிட்டினஸ்.”

“எனி ப்ரீதிங்க் ப்ராப்ளம்?”

“நோ.”

“டேக் யூர் சீட் அண்ட் வைய்ட். த டாக்டர் வில் பி ஹியர் ஸூன், ஓகே.”

வரிசையில் இருந்த அடுத்தவரைக் கவனிக்க என்னை அகற்றினாள். இன்னும் சிலர் அதற்குள் க்ளினிக்கிற்குள் வந்துவிட்டிருந்தனர். நான் சீக்கிரமே வந்து விட்டதால், எனக்கு இரண்டாவது நம்பர். இன்னும் டாக்டர் வந்திருக்கவில்லை. குளிரைத் தவிர்க்க வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.

அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு கடையாகத் திறக்க ஆரம்பித்தனர். அவ்வழி சென்ற அனைவருக்கும் காலைப் பரபரப்பு. போவோர் வருவோரைப் பார்த்தபடியிருந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் முதல் எண் கொடுக்கப் பட்ட கைக் குழந்தைக் காரி உள்ளே போனாள். டாக்டர். லாய் பின் கதவு வழியாக வந்து விட்டிருந்தார். அவள் வெளியே வந்ததும் நான் மெதுவாக எழுந்து அறையை நோக்கி நடந்தேன். கதவைத் தட்டி விட்டு நுழைந்தேன்.

“குட் மானிங் டாக்டர்.”

“ஹாய், மிஸஸ்.பாலா, வெரி குட் மானிங். ஸோ? வாட்ஸ் ராங் வித் யூ?”

இருமிக் கொண்டே ஒவ்வொன்றாக விலா வாரியாகச் சொன்னேன். நாக்கை நீட்டச் சொல்லி, ஸ்டெதஸ்கோப்பை முன்புறமும் முதுகிலும் வைத்துச் சோதித்த படி யே அவரும் கேட்டார். ரத்த அழுத்தத்தையும் சோதித்தார்.

“ம்,.. ஆமா, பாலாக்கு இப்ப எப்பிடியிருக்கு? நீங்க ஒண்ணும் கவலப் படவேணாம். உங்க ஹஸ்பண்ட் கிட்டயிருந்து உங்களுக்கு ‘இன்பெக்ட்’ ஆகியிருக்கு. ஃபுளூக் காய்ச்சல் தான். மாத்திரை, மருந்து காஃப் சிரப், அண்டிபையாட்டிஸ் எல்லாமே எழுதித் தரேன். சாப்பிடுங்க, சரியாயிடும். ம், நிறைய தண்ணீர் குடிங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. ஓகே”

“ஓகே, தேங்க்யூ டாக்டர், பை.”

எழுதிக் கொண்டே தலை நிமிர்த்தி, “ஆமா, உங்களுக்கும் ‘எம்.ஸீ’ எழுதவா?”

சிரித்துக் கொண்டே கேட்டார் டாக்டர். அவருக்குத் தெரியும் நான் வெறும் ‘ஹோம் மானேஜர் என்று. எம் ஸீ எல்லாம் எந்த விதத்திலும் எனக்கு உபயோகமில்லை என்றும் தெரியும் அவருக்கு. இருந்தாலும் ஜோக்கடிக்க முயன்றார்.

வணக்கம் கூறிவிட்டு வெளியில் மருந்துக்குக் காத்திருந்தேன். மருந்தை வாங்கிக் கொண்டு வெளியேறி வீட்டை நோக்கி நடந்தேன். ஒரு வாய் ரசம் சாதத்தைக் கரைத்துக் குடித்து விட்டால், மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு பேசாமல் படுத்து விடலாம். மறுபடி சாயந்தரம் டிபன் செய்ய மட்டும் எழுந்தால் போதும். நினைப்பிற்கே என் உடல் நூறு முறை நன்றி சொன்னது.

பாலா சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. நானும் டைனிங் சேரில் உட்கார்ந்தேன். “சாமி ரூம நா ‘க்ளியர்’ பண்ணல்லம்மா. எனக்கு நேரமாயிடுத்து, அதான். ஆமா, என்ன சொல்றார் நம்ம டாக்டர்?”

“உங்களுக்கு குடுத்த மாத்திரைகளையே தான் குடுத்திருக்கார். அதே ஃப்ளூ தானாம். பாலா, ‘எம்.ஸீ’ வேணுமா உனக்குன்னு கேக்கறார் சிரிச்சுண்டே.”

“ஓஹோ, ஜோக்கடிக்கறாரா?

“ம்,. நானும் சிரிச்சு வச்சேன். எனக்கு ஏது சனி, ஞாயிறு, பப்ளிக் ஹாலிடே, எல்லாம். இன்னும் சொல்லப் போனா, அன்னிக்கெல்லாம் தான் வேலை இன்னும் ஜாஸ்தியாவே இருக்கு. ஒரோரு சமயம், கொழந்தைகளோ பெரிசாயாச்சு, பேசாம நானும் வேலைக்குப் போலாமானு யோசிக்கறேன், பாலா. ஆனா, அப்பக்கூட எம்.ஸீ’ வேணாக் கெடைக்குமேயொழிய வீட்டு வேல இருந்துண்டே தானே இருக்கப் போறது. எனக்கே ஒரு மாத்திரை சாப்பிட, ஒரு கப் வெந்நீர் வச்சுக்கவாகட்டும், ஒரு ப்ரெட் இல்ல கொஞ்சம் ரசஞ் சாதமாவது சாப்பிடணும்னாலும் நானே தான் கிச்சன்ல நொழைய வேண்டியிருக்கு. இப்பன்னு இல்லை, ஒவ்வொரு தடவையும் இதே தான்”, மோர் சாதம் சாப்பிடும் பாலாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே சொன்னேன். அதிகம் பேசியதால், ஒரேயடியாய் இருமிக் கண்களிலெல்லாம் ஒரே கண்ணீர். தொண்டையெல்லாம் எரிச்சல்.

“இப்ப என்ன, போன வாரம் நான் படுத்திண்டே இருந்ததச் சொல்றியா?”

“இல்லவேயில்ல. பொதுவா தான் சொன்னேன். ஆமா, நிகில் இன்னுமா எழுந்துக்கல்ல?”, கட்டுப்பட்ட இருமலுக் கிடையே கேட்ட படி எனக்கொரு தட்டை எடுத்து டேபிளில் வைத்துக் கொண்டேன்.

இது ஒரு பெரிய பலகீனம் பாலாவிடம். சாதாரணமாக நான் எதைச் சொன்னாலும், உடனே வேறு ஒன்றோடு பெரும்பாலும் தன் சம்பந்தப் பட்டதோடு ஒப்பிடாமல் அவருக்குப் பேசவே வராது. முடியாத போதும் செய்ய வேண்டியுள்ள என் நிலை அவருக்கு என்றுமே புரிந்ததில்லை.

“எனக்கு காய்ச்சல் வந்தா சுத்தமா ஏந்துக்கவே முடியறதில்ல, தெரியுமா. எழுந்துண்டா மயங்கி விழுந்துடுவேனோன்னு பயமா இருக்கு. ஒடம்பெல்லாம் ஒரே வலி. அதான் சதா படுத்துண்டே இருக்கேன். உனக்கு மெதுவாவாவது வேண்டியதச் செய்ய முடியறதே”, சர்வசாதாரணமாய் சொன்னார் பாலா இருக்கையை விட்டு எழுந்துகொண்டே.

ஆவென்று திறந்த என் வாய் மூடவில்லை. கையில் எடுத்த சாதம் வாய்க்குப் போகாமல் என் கை அப்படியே நின்றது. உடல் ஆயாசத்தையும் மீறி அந்த நிமிடம் மனதில் விவரிக்க முடியாத அசாத்திய சோர்வு பரவியது. கண்களில் கண்ணீர் கொடகொடவென்று கொட்டியது. இம்முறை இருமலினால் அல்ல.

– திசைகள்.காம் ஏப்ரல்- 04

Print Friendly, PDF & Email
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *