கட்டுப்பாட்டு அறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 8,723 
 

வாசலில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்ததுமே அதிர்ந்து போனான் சங்கர்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குப் போன அவன் இருபது நிமிடங்களிலேயே திரும்பி விட்டான்.இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.அவன் சைக்கிளை நிழலில் நிறுத்திவிட்டு அறையைத்திறக்க வருவதற்குள் ஏகப்பட்ட கூச்சல்.

ஒரு பிரபல தமிழ்சேனல் மட்டும் தெரியாததால் அந்த தெரு பக்கத்து தெருக்களில் உள்ளவர்கள் கேபிள் டி.வி.கட்டுப்பாட்டு அறைக்கே வந்து விட்டனர்.

‘மாசா மாசம் பணம் வாங்க மட்டும் கரெக்டா வர்ற நீங்க ஏதாவது ரிப்பேர்னு சொன்னா மட்டும் எட்டி கூட பார்க்குறது கிடையாது.ஒரு சீரியலையாவது ஒழுங்கா பார்க்க முடியுதா? ஒண்ணு கரண்ட் இருக்காது. இல்லை எல்லாத்தையும் நிறுத்திட்டு ஏதாவது ரிப்பேர் செய்வீங்க. இப்ப அந்த ஒரு சேனல் மட்டும் தெரியலை.’

இன்னும் விதவிதமான வசவுகள். ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.அந்த ஊர் முழுவதும் சுமார் பதினைந்தாயிரம் இணைப்புகள் இருந்தன.பத்து சிறுசிறு ஆப்ரேட்டர்கள் சேர்ந்து ஒளிபரப்பை ஒருங்கிணைத்து இந்த இடத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அந்த அறை அதற்கு தகுதியானதாகவா இருந்தது? எட்டுக்கு எட்டு என்ற அறை அளவு.இடதுபுறம் ஒரு இரும்பு மேசை,பீரோ இணைப்புடன். அதன்மேல் டி.வி. வரி விளம்பரத்துக்கான கம்ப்யூட்டர் உபகரணங்கள்.எதிர்புறமும் வலது புறமும் இரும்பு அலமாரிகளில், நாற்பது ரிசீவர்கள், நாற்பது ஒளிபரப்பும் உபகரணங்கள்.ஒவ்வொன்றும் ஒரு வி.சி.ஆர் (டெக்) சைசில் அவற்றுக்கு மின்சாரம் செல்லும் வயர்கள், டிஷ் ஆண்டனாவில் இருந்து ரிசீவருக்கு வரும் வயர்கள், ரிசீவரிலிருந்து ஒளிபரப்பு உபகரணத்துக்கு செல்லும் வயர்கள் சிக்கலாக கலந்து ஒரு நரம்பு மண்டலத்தைப்போல் காட்சி அளித்தது.

அறைக்குள்ளேயே இரண்டு ஸ்டெபிலைசர்கள், அவசரத்திற்கு ஒரு ஜெனரேட்டர், இரண்டு டெக், ஒரு சி.டி.பிளேயர் என்று ஏகப்பட்ட பொருட்கள். சங்கர் டி.வி.யை ஆன் செய்து ஏதோ செய்தான்.ஒரு நிமிடம் கூட இல்லை. கோளாறை சரிசெய்து விட்டான் அவன். கூட்டத்தினர் கூறிய சேனல் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் பக்கம் திரும்பி “சரி செஞ்சாச்சு. போங்க…”என்றான்.

கூட்டம் கலைந்த உடன் ஒரு ரிசீவரை தூங்கும் குழந்தையை எடுக்கும் லாவகத்தோடு வெளியில் எடுக்க முயற்சி செய்தான்.

காலில் அடிபட்டால் கண்கள் கலங்குவதுபோல, அலமாரியின் கீழ்த்தட்டில் உள்ள ஒரு ரிசீவரை அலட்சியமாக எடுத்தால் மேல் தட்டில் உள்ள ஒரு ரிசீவருக்கு மின்சாரம் தடைபட்டு இயங்காமல் போய்விடும். அந்த அளவுக்கு வயர்கள் சிக்கலாக கிடந்தன. அதனால்தான் சங்கர் அந்த அளவு கவனமாக செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

அப்போது பத்து பங்குதாரர்களில் ஒருவரான ராமமூர்த்தி பதட்டமாக வந்தார்.

“சங்கர்…நான் உன்னைத்தேடி உங்க வீட்டுக்கு போயிட்டு வர்றேன். நீ இப்பதான் கிளம்பி போறேன்னு உங்க அம்மா சொன்னாங்க…நீ எந்த வழியா வந்த?…நீ சரிசெய்த அந்த சேனல்தான் தமிழ்நாட்டுல அதிக பேர் பார்க்கிறாங்க.அதுவும் சீரியல் வர்ற நேரம் என்பதால் என் வீட்டுக்கே எத்தனை போன்? ”

“அண்ணே! இப்போ சேனல் ஓடிகிட்டு இருக்கு.”

“அப்ப எதை வெளியில் எடுக்க முயற்சி செய்யுற? ரிப்பேரைத்தான் சரிசெஞ்சாச்சுல்ல?”

“இல்லை…என்ன ரிப்பேருன்னு இனிமேதான் பார்க்கணும்.”

“என்னப்பா குழப்புற? ”

“அண்ணே… இந்த ரிசீவர்ல ஒரு சிக்னலும் வரலை.அதனால ஒரே அலைவரிசையில வர்ற கன்னடச் சேனலை இதுல ஓடவிட்டுட்டேன்…இனிமேதான் ஏற்கனவே உள்ள ரிசீவர்ல என்ன ரிப்பேருன்னு பார்க்கணும். அது மட்டும் இல்ல…இந்த மாதிரி செய்யாம அந்த பழைய ரிசீவரை ரிப்பேர் செஞ்சுகிட்டு இருந்தா அதுக்குள்ளே ஊரே திரண்டு உதைக்க வந்துடும்.”

“அட…நல்ல ஐடியாதான் இது.உனக்கு மூளை நல்லா வேலை செய்யுதுப்பா. முதல்ல வேற இடத்துக்கு ரூமை மாத்தணும்…இவ்வளவு சிரமப்படுறியே? ”என்று கூறிய ராமமூர்த்தி கிளம்பி சென்றுவிட்டார்.

தனக்கு வரப்போகும் ஆபத்து தெரியாமல், ராமமூர்த்தி பாராட்டியதை நினைத்து சந்தோஷ­த்துடன் அந்த ரிசீவரில் என்ன ரிப்பேர் என்று பார்க்கத் தொடங்கினான் சங்கர்.

அந்த ஊரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கு இந்த கட்டுப்பாட்டு அறை அமைந்திருந்த தெருதான் முக்கிய வழி.

தரை தளத்தில் ஆறுவீடும், முதல் தளத்தில் ஆறுவீடும் உள்ள காலனியில்தான் அந்த அறை அமைந்திருக்கிறது. வீடுகள் கிழக்கு நோக்கிய வாசலுடன் இருந்தன.

ரோட்டில் போவோருக்கு, அறையில் உள்ள டி.வி. மற்றும் ஒளிபரப்பு உபகரணங்கள் நன்கு தெரியும். அறைக்கு வெளியே மூன்று அடி அகலத்தில் நடைபாதை விட்டு சுற்றுச் சுவர் இருந்தது. அந்த நடைபாதையில் தான் நாற்காலிபோட்டு உட்கார்ந்து இருப்பான் சங்கர்.

சுற்றுச்சுவர் நான்கடி உயரம் என்பதால் அவன் நின்றால்தான் ரோட்டில் போவோரை திரும்பி பார்க்க முடியும்.
வேலை நாட்களில் அந்த தெரு கலர் ஃபுல்லாக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். சங்கர், இருபத்து நான்கு வயது இளைஞன் என்பதால் அந்த கட்டுப்பாட்டு அறையில் பணி புரிவது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது வெளிநபர்கள் சிலர் டி.வி. பார்க்க வந்தால் அவர்களை உட்கார சொல்லிவிட்டு இவன் நின்று கொள்வான்.

உள்ளூர் சேனலில் விளம்பரம் கொடுப்பது தொடர்பாகவும் அடிக்கடி பலர் அங்கு வருவார்கள்.

அவர்களையும் நாற்காலியில் உட்கார சொல்லிவிட்டு சங்கர் நின்று கொள்வான்.சில சமயம் கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் ஏதாவது ஒரு படத்தை போடச் சொல்வார்கள். சங்கரும் அந்தப் படங்களைப் போடுவான்.அதை நினைக்கும்போதே அவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

******

அந்த ரிசீவரை சரி செய்து மீண்டும் செயல்பட வைத்தான் சங்கர்.அன்று இரவு வழக்கம்போல் ஒன்பது மணிக்கு படத்தைப்போட்டுவிட்டு உட்கார்ந்து இருந்தான். அப்போது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். டிப் டாப்பாக உடை அணிந்திருந்தார்.

“தம்பி…என் நண்பர் கடைத்தெரு வரைக்கும் போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்… அதுவரை டி.வி. பார்க்கலாமா?”

“ம்…தாராளமா! ”என்று சங்கர் நாற்காலியை விட்டு எழுந்தான். சிறிது நேரம் சென்ற பிறகு, “தம்பி…என்பேர் ஜெயச்சந்திரன்…உங்க பேர்?”

“சங்கர்.”

அவர் கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்தவற்றைப் பார்த்துவிட்டு வியப்புடன் சில விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணிநேரம் சென்றிருக்கும்.ஜெயச்சந்திரனை ஒத்த வயதுடைய ஒரு நபர் நடந்து அங்கு வந்தார்.

அவர் ஜெயச்சந்திரனைப் பார்த்து, “ஜெய் சார்…என்னாச்சு?…”என்றார்.

அதற்கு ஜெயச்சந்திரன், “ம்…டி.வி. இருக்கு…வி.சி.ஆர். இருக்கு…சி.டி., கேசட், எல்லாமே இருக்கு. ”என்றார்.

அவர்கள் எதற்கு இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று சங்கருக்கு சுத்தமாக புரியவில்லை.

“சரி…போகலாமா? ”என்று சங்கரைப் பார்த்து ஜெயச்சந்திரன் கேட்டவுடன் திகைத்தான் அவன்.உடனே இருவரும் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து “நாங்க சி.ஐ.டி போலீஸ்…திருட்டு வி.சி.டி.யைப் பிடிக்க திருச்சி மண்டலத்துல உள்ள ஏழு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டவங்க. ”என்றனர்.

ஜெயச்சந்திரன் தன் செல்போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து பேசினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர்கள் வந்த ஜீப் கட்டுப்பாட்டு அறையின் வாசலில் வந்து நின்றது.

– ஏப்ரல் 2003-ல் திருச்சி மாலைமுரசு-வாரமுரசு இதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *