எப்பொழுது…?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 11,116 
 
 

இருபத்திநான்கு மணிநேரங்கள் மட்டுமே கொண்டதல்ல ஒரு நாள். பூமியின் சுழற்சிக்கு ஏற்ப சில நொடிகள் கூடவும் குறையவும் செய்யும். துளி துளியாக சேர்க்கும் அமிர்தம் போல் அந்த நொடிகளே நான்கு வருடத்தில் ஒரு நாளாக நிறைகிறது. அந்த நாளும் வழக்கமாக அருந்தும் காபியைப் போலவே நம் அன்றாட அட்டவணையால் நிறைந்து மறைந்துவிடுகிறது.

ஆகவே, ஒரு நாளிற்குள் அன்றாட அட்டவணைக்குள் வராது ரகசியமாக மறைந்திருக்கும் அந்த சில நொடிகளை தேடிப் பாதுகாக்கும் தீவிரத்தில் இருக்கிறேன்.

காலையில் ஆறிலிருந்து ஒன்பது மணிக்குள்…”ம்ஹும்..அது பிள்ளைகளும், கணவனும், பள்ளிக்கும், அலுவகத்திற்கும் கிளம்பும் நேரம்.”

ஒன்பது மணிக்கு மேல்… “யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை, அறிவியல் வளர்ச்சியால் மேம்பட்டிருந்தாலும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து எடுத்து கொண்டிருக்கும் அதே அவதாரங்கள் தான்.”

அப்போ மதிய இடைவேளையில்… “ம்க்கும்… முடிக்க வேண்டிய வேலைக்கான அட்டவணைகள், வீட்டிற்கும், பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்க வேண்டிய குறிப்புகள், இன்றே இப்பொழுதே என்று பிள்ளைகளால் கட்டளையிடப்பட்ட பட்டியல்கள், அவசர சந்திப்புகள், பிள்ளைகளுக்காக அவசியம் கலந்து கொள்ள வேண்டிய பள்ளிகளின் செயல்பாடுகள், எதிர்பாரா வாகன பழுதுகள், தெரிந்தே மாட்டிக்கொள்ளும் போக்குவரத்து நெரிசல்கள் என்று சாப்பாடே சாயங்காலத்திற்கு நழுவி விடுகிறது.”

சரி ஆறு மணிக்கு மேல்… “அது…வந்து…ம்ஹும், சுத்தமாக முடியாதே…பிள்ளைகள், வீட்டுப்பாடம், உணவு, அடுத்தநாளிற்கான முன்னேற்பாடுகள்…இதற்கு இடையில் ஒவ்வொரு நாளும் காபி குடிப்பதற்காக ஒதுக்கும் அரைமணியே ஐந்து நிமிடங்களாகி விட்டது.”

வேண்டுமென்றால் வார இறுதியில்… “சனிக்கிழமைகளின் கூடுதல் வகுப்புகள், ஞாயிற்றுக் கிழமைகளில் அந்நாளிற்காகவெனவே நேர்ந்து விடப்பட்ட சிறப்பு நிகழ்வுகள், வார முழுவதும் வார இறுதிக்காக ஒதுக்கப்பட்ட வேலைகள் என்று இதற்கு நடுவில் நெருங்கிய தோழியோடு அலைபேசியில் பேச வேண்டி குறிக்கப்பட்ட நேரத்தையே இருவரும் மாற்றி மாற்றி மாற்றி கொண்டிருக்கிறோம்.”

இதற்கிடையில், “இன்று நான் சமைத்துவிடுகிறேன் என்னோடு அமர்ந்து சினிமா பார்க்க உன் இரண்டரை மணிநேரத்தை எனக்குக் கொடு” என்கிறான் கணவன்.

“துணியெல்லாம் நான் மடித்து அழகாக அடுக்கி விட்டேன் அதனால் இன்று எனக்கு மருதாணியிட உங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும்” என்கிறாள் மகள்.

கதை கேட்ட மகனிடம், “வேறு வேலையிருக்கிறது நீயே படித்துக்கொள்” என்றால், “எல்லாவற்றையும் நானே படித்து தெரிந்து கொண்டால் நீ எப்பொழுது அறிவாளியாவது” என்கிறான்.

வேலைக்கு நடுவில் திடீரென்று நினைவில் மின்னும் சிறுகதையின் ஆரம்ப வடிவங்கள் “அலைபேசியில் மட்டுமே அளவலாவும் எனக்கான அந்த ஒரு மணி நேரத்தையும் நீ கதை எழுத திருடிக் கொள்கிறாய்” என்கிற அம்மாவின் குற்றச்சாட்டில் மின்னலாக மறைந்துவிடுகிறதே…!

புருவத்தை திருத்துவதற்காக அழகு நிலையத்தில் முன்பதிவு செய்த நேரங்கள் தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

கண்டிப்பாக ‘நாளைக்கு’ கால் நகங்களை சீர் செய்து அந்த நீல வண்ண நகப்பூச்சை பூசி விடவேண்டும்…ஹ்ம்ம்…எத்தனை ‘நாளைக்கு’ சென்று விட்டது, ஆனாலும் நாளை மட்டும் மாறாமல் வந்து கொண்டிருக்கிறது.

சுவாரசியமான முக நூல் சண்டைகளை முன்னும் பின்னும் அறிந்து கொள்ள முடியாமல் நொடி நேர சுவாரசிய பதிவாக கடந்து போய் கொண்டிருக்கிறது.

“கட்டப்பட்ட, கட்டப்படப் போகும் அணைகளால் எத்தனை சதவீதம் மீத்தேன் வாயு வெளியேறுகிறது, சானிடைசர் உபயோக படுத்தலாமா கூடாதா, இன்று வீட்டை விட்டு வெளியே செல்லலாமா கூடாதா…கிழக்கே பந்த் நடக்கிறதா, மேற்கே பேருந்து எரிகிறதா, தெற்கே கடைகள் நொறுக்கப்படுகிறதா, வடக்கே துப்பாக்கிகளின் கண்கள் எந்த பக்கம் பார்த்து கொண்டிருக்கிறது,” இப்படி படித்து தெரிந்துகொள்ள நினைத்த எல்லா பக்கங்களும் கணினி திரையில் ஏற்கனவே திறந்து வைத்திருந்த விண்டோக்களோடு சேர்ந்து கொண்டு காத்திருக்கின்றன.

“இந்த விமர்சனம் அருமை, ஆஹா அந்த விமர்சனம்…”இப்படி கண்ணில் பட்டு கவர்ந்திழுக்கும் விமர்சனங்களால் ஒரு புத்தகத்தை முடிக்கும் முன்பே மேஜையில் குவிந்துவிட்டு என்னைப் பார் என்னைப் பார் என்று அம்புவிடும் புத்தகங்களை மனது ஒதுக்கிவிட துடிக்கும் அதிகபட்சம் பதினைந்து பக்கத்திற்குள் அம்சமாக அழைக்கும் சிறுகதைகளை பார்த்தால்.

முக நூலில் கடந்து செல்ல முடியாமல் கண் முன்னே பரிமாறப்பட்டு காத்திருக்கும் பத்து வரிகளில் என்னை கட்டி இழுக்கும் கவிதைகளை சில சமயம் பின்பு ஒரு நாள் படிக்க சேமித்துவிட்டு நகர நேர்ந்தாலும் பாதகமில்லை கடைசிக்கு கடைசியாக பார்வையை நகர்த்தும் முன்பே மூளையில் அச்சாகிவிடும் இந்த ஹைக்கூக்களையாவது பார்த்துவிட வேண்டும்.

“இங்கு தானே வைத்தேன்,” இரண்டு மணி நேரமாக கிடைக்கும் இடைவேளைகளில் எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். மேஜைக்கு கீழே, இருக்கைகளின் இடைவெளியில், கணினியின் அருகில், சமையல் மேடையில், புத்தக அடுக்கில் எங்கே வைத்தேன் அந்த குறிப்பேட்டை…தேடி தேடி கண்டுபிடித்து, அனைத்தையும் ஆராய்ந்து, முன்னும் பின்னும் கணக்கு போட்டு எனக்கான அந்த ஒரு நாளை அதில் தானே பொறுப்பாக குறித்து வைத்திருந்தேன்.

“என்னை மீறி ஒரு காகிதமும் குப்பையாக வெளியே செல்ல வாய்ப்பே இல்லை, உணவு, சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து இப்படி அனைத்து நிர்வாகமும் என் கையில் அல்லவா இருக்கிறது.”

அடடா மனதில் இப்படி யோசிக்கும்பொழுதே கணவன், மகள், மகன் என்று மூன்று பேரும் என்னை சுற்றி நின்று முறைப்பதுபோல் தெரிகிறதே. “சரி, இப்போ சரியாக சொல்லி விடுகிறேன்…மூவரும் ஒரு நாள் முதல்வர்கள் மாதிரி …அதாவது வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் கையில் நிர்வாகத்தை எடுத்து கொள்வார்கள்… சரி, சரி, மாதத்திற்கு ஒருமுறை, சரி ஒத்துக்கொள்கிறேன் என் மனசாட்சியே… வாரத்துக்கு ஒரு முறை.” நல்லவேளை தினமும் என்று சொல்ல முடியாது என் மனசாட்சியால் மனசாட்சியில்லாமல்.

“மனசாட்சியை எப்படி காணாமல் போக செய்வது?” இது ஆகறதில்லை முதலில் என் குறிப்பேட்டை தேடுகிறேன், எப்படியும் கண்டுபிடித்துவிடுவேன் இல்லையென்றாலும் பரவாயில்லை திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்து அந்த நாளை குறித்துவைத்து மறக்காமல் இந்த முறை பத்திரப்படுத்திவிடுகிறேன்.

ஆனால்…

“அந்த நாளை என்னால் வெற்றிகரமாக கடந்து விட முடியுமா? முன்னெப்பொழுதேனும் அப்படி ஒரு நாளை நான் வாழ்ந்திருக்கிறேனா? முன் பின் பழக்கமில்லாத அந்த நாளை எப்படி எதிர்கொள்வேன்?”

“எந்த இடையூறுமில்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க கூடிய அந்த நாளில் என்னுள் எழும் எண்ணங்களை எத்தனை வார்த்தைகளில் கோர்க்க முடியும்? இத்தனை நினைவுகள் பதிவாக சாத்தியமிருக்கிறதா?”

அடுத்த முறை அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள இந்த முறை அந்த நாளை பற்றிய குறிப்புகளை கண்டிப்பாக பத்திரமாக பதிவு செய்ய வேண்டும்.

ம்ம்ம்ம்….எப்பொழுது பதிவு செய்ய நேரம் ஒதுக்குவது?

“காலையில்…இல்லை மதியம்…ம்ஹும்…இரவு… முடியவே முடியாது வார இறுதியில்…இல்லை…இல்லை…”

Print Friendly, PDF & Email

1 thought on “எப்பொழுது…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *