என் மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 7,184 
 
 

எனக்கும் பிரேமாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது.

பிரேமா எல்ஐஸி யில் வேலை செய்கிறாள்.

இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அவள் மிகுந்த பதட்டத்துடன் காணப்படுகிறாள். ஏன் என்று கேட்டால் சரியாக பதில்சொல்ல மறுக்கிறாள். அவள் என்னிடமிருந்து எதையோ மறைக்கிறாள்.

இரவுச் சேர்க்கைகளில் அந்தரங்க ஈடுபாடு இல்லாமல் அவளுடைய மனம் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது…சில சமயங்களில் என்னுடைய அணுகுதலை முற்றிலுமாக தவிர்த்தாள்.

எதோ ஒன்று அவள் மனதை அரித்தெடுக்கிறது என்பது புரிந்தாலும், நான் அவளைப்பற்றி விபரீதக் கற்பனைகள் எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளைப்பற்றி நிறைய கவலைப்பட்டேன்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை….

பிரேமா மொட்டைமாடியில் நின்று அழுது கொண்டிருந்தாள். நான் திடீரென அங்கு பிரவேசித்ததும் அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.

“பிரேமா ப்ளீஸ் என்னிடம் எதையும் மறைக்காதே…எதுவாக இருந்தாலும் சொல்லிவிடு.” மிகவும் அன்புடன் கேட்டேன்.

“…………………………………”

“கணவனிடம் கூடச் சொல்லக்கூடாத விஷயமா?”

“ஆமாம்.”

“கணவனுக்கே தெரிஞ்சிக்கற உரிமை இல்லேன்னா, என்னுடன் வாழறதுக்குகூட உனக்கு உரிமை இல்லாமல் போயிடலாம் பிரேமா…” அவளைப் பொய்யாக மிரட்டினேன்.

“கணவன் என்கிறதுக்காக அவருக்கு சம்பந்தமே இல்லாத வேற ஒரு பெண்ணைப் பத்தின ரகசியத்தை அவர்கிட்ட சொல்றதுக்கு மனவிக்கேகூட உரிமை கிடையாது.”

மெளனமாக இருந்தாள்.

“என்னது, உன்னோட வருத்தம் வேற ஒரு பெண்ணைப் பற்றிய விஷயமா..?”

“ஆமாம்.”

“யாரோ ஒருத்திக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளணும்? ”

“அவ ஒண்ணும் யாரோ ஒருத்தி இல்லை.”

“அப்ப அந்தப்பெண் யார்னு சொல்லு, அவளோட ப்ராப்ளம் என்னண்ணு சொல்லு.”

“அதை மட்டும் கேட்காதீங்க… என் உயிரே போனாலும் சொல்லமாட்டேன்.”

“அதைப்பத்தி நான் கேட்கக்கூடாதுன்னா நீ நம்ம வீட்ல இயல்பா சந்தோஷமா இருக்கணும். யாரோ ஒருத்திக்காக நீ கவலைப்படறது; என்கூடச் சரியாப் பேசாம இருக்கிறது; தனியா உக்காந்து அழறது… இதெல்லாம் இருக்கவே கூடாது. சரியா?”

“…………………”

“இதுக்கும் சரின்னு சொல்லமாட்டேங்குறயே பிரேமா?”

“என்னால முடியாது போலிருக்கே…”

என் மனைவி என்னிடமே ஒரு விஷயத்தை மறைக்கிறாள் என்கிற கோபம் எனக்குள் வந்தது.

“லுக் பிரேமா, நீ சொல்லலைன்னா, என்ன ஆனாலும் சரி, நான் உன்கூடப் பேசறதையே நிறுத்திடுவேன். ஒருநாள் டைம் தரேன். சொல்றதா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்க..”

“எனக்குன்னு ஒரு ப்ரைவசியே இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?”

“ப்ரைவசி இருக்கலாம். ஆனா ஸீக்ரேஸி இருக்கக் கூடாது. அதுவும் தாலி கட்டின புருஷன்கிட்ட. புரியுதா?”

அவள் கண்கள் கலங்கின… எந்த நிமிடமும் அழ ஆரம்பித்துவிடுவாள் போலிருந்தது. சிறிதுநேர மெளனத்துக்குப் பிறகு, “யார்கிட்டையும் இத நீங்க சொல்லிடக்கூடாது” என்றாள்.

“சத்தியமாகச் சொல்லமாட்டேன்.”

“நானும் அவளுக்கு சத்தியம் பண்ணிட்டுதான் இப்ப மீறிண்டு இருக்கேன்.”

“பரவாயில்லை, சொல்லு.”

“எங்க ஆபீஸ்ல என்கூட ஒர்க் பண்ற நேத்ராவதியை உங்களுக்குத் தெரியும்.”

“ஆமா உன்னுடன் அவளை நிறையத்தடவை பார்த்திருக்கேன். சிவப்பா, அழகா இருப்பா. அவ பேரைத்தவிர அவளைப்பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.”

“ரெண்டு மாசம் முன்னாடிதான் அவளுக்கு கல்யாணம் ஆச்சு. இப்ப அவளுடைய முன்னாள் காதலன் அவளை பயங்கரமா பிளாக்மெயில் பண்றான்.”

சற்று பதட்டமானாள். நான் ஆதரவோடு பிரேமாவின் கையை பற்றிக்கொண்டேன்.

“நேத்ராவதி கல்யாணத்துக்கு முந்தி வேற ஒருத்தன்கூட ரொம்பக் க்ளோஸா இருந்தா. அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்கிற எண்ணத்தில் அவன்கூட மஹாபலிபுரம் போய் ஹோட்டல்ல இரண்டு தடவை ஸ்டே பண்ணியிருக்கா. ஏதோ ஒரு ரொமாண்டிக் மூட்ல அவன்கூட க்ளோஸா இருக்கிறமாதிரி போட்டோஸ் எடுத்திண்டிருக்கா. திடீர்ன்னு இப்ப அந்த ராஸ்கல் போட்டோவை எல்லார்கிட்டயும் குறிப்பா அவளோட ஹஸ்பன்ட்கிட்ட காமிப்பேன்னு நேத்ராவதியை பிளாக்மெயில் பண்றான். அதனால அவ தினமும் செத்து செத்துப் பொழைக்கிறா.”

“பிளாக்மெயில்ன்னா எந்த மாதிரியான டெர்ம்ஸ்ல டார்ச்சர் பண்றான்?”

“அவன் கூப்பிடும் போதெல்லாம் அவன்கிட்ட நேத்ரா போயிட்டு வரணும். முடியாதுன்னு சொன்னா அந்தப் போட்டோக்களை பல பிரதிகள் எடுத்து எல்லோருக்கும் எக்ஸ்போஸ் பண்ணிடுவேன்னு மிரட்டறான். அவ பாவம் எதையும் வெளியில் சொல்லமுடியாம தவிக்கிறா…”

“உண்மையை அவளுடைய கணவரிடமே சொல்லிவிட்டு, அவருடைய உதவியோடு அந்த ராஸ்கலை எதிர்கொள்ளலாமே?”

“என்ன நீங்க புரியாம பேசறீங்க? ஒருத்தியோட இம்மாரல் பிஹேவியர் பத்தின பயங்கரமான விஷயம் இது…. இதைப்பற்றி புருஷன்கிட்ட எப்படிச் சொல்வாள்?”

“நான் அவ புருஷனா இருந்தா இதைப் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொண்டு அந்த நேத்ராவை அன்புடன் நடத்துவேன். அதுசரி, உனக்குத் தெரியுமா அந்த அயோக்கியன் யாருன்னு?”

“தெரியாது.”

“மெதுவா அந்த நேத்ராவையே கேட்டுப்பாரேன்.”

பிரேமா சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள். “எதுக்கு கேக்கறீங்க இந்த விஷயத்துல நீங்க ஏதாவது பண்ணலாம்னு பாக்கறீங்களா?”

“ஆமா, நான் ஏதாவது பண்ண வேண்டாமா?”

“…………………..”

“என்னை அந்த நேத்ராகிட்ட அறிமுகம் செஞ்சு வை. மத்ததை நான் பாத்துக்கறேன்…”

இதைக் கேட்டவுடன் பிரேமா அதிர்ச்சியடைந்தாள்.

“என்னோட பிணத்தைத் தாண்டித்தான் நீங்க நேத்ராவை சந்தித்துப் பேசமுடியும். உங்களிடம் நான் சொன்னது தெரிந்தாலே நேத்ரா தற்கொலை பண்ணிக்கொள்வாள். அதன்பிறகு நானும் உயிரோடு இருக்கமாட்டேன்.”

விருட்டென கீழே இறங்கிச் சென்றுவிட்டாள்.

அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. நிறைய யோசித்தேன்.

‘எப்பவோ ஒருதடவை முறைகேடாக நடந்தவளை மீண்டும் மீண்டும் முறைகேடாகவே நடக்க வைக்கப் பயமுறுத்தும் அந்த அயோக்கியனுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும். அந்த விஷமுள்ளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்.’

அந்த இம்சையிலிருந்து நேத்ராவதியை நிரந்தரமாக மீட்க முடிவுசெய்தேன்.

என்னுடைய இந்த முடிவு பிரேமாவுக்கு தெரியாது. அவளிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் நேத்ராவதியை தனிமையில் சந்திக்க முடிவுசெய்தேன்.

மறுநாள்….

ஆபீஸில் இருந்த நேத்ராவதிக்கு போன் செய்து, பிரேமாவின் கணவன் பேசுவதாக அறிமுகம் செய்துகொண்டேன். நான் போன் செய்திருப்பது பிரேமாவுக்குத் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

அவள் பதில்பேசாது அமைதியாக இருந்தாள்.

“உங்களை தனியாகச் சந்தித்து பேசவேண்டும் மேடம்.”

“என்ன விஷயமாக?”

“அதை நேரில் சொல்கிறேன்…ப்ளீஸ் கம்.”

வெகுநேர தயக்கத்திற்குப்பின், “எங்கே வரணும்?” என்றாள்.

“பாலவாக்கம் பீச்சுக்கு நாலரை மணிக்கே பர்மிஷனில் வந்துடுங்க. அப்பத்தான் கூட்டம் இருக்காது.”

“சரி, வரேன்.”

நான் நாலேகால் மணிக்கே பீச் சென்று அவளுக்காக காத்திருந்தேன். மனதில் நிறையத் தடவைகள் எப்படிப் பேசவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.

நேத்ராவதி வந்தாள்.

பீச்சில் சிறிதுநேரம் மெளனமாக நடந்தோம்.

கடலைப் பார்த்தபடி சிறிது தள்ளித் தள்ளியே அமர்ந்துகொண்டோம்.

மிகப் பக்குவமாக பிரேமா என்னிடம் சொன்னவற்றை எல்லாம் நேத்ராவதியிடம் சொல்லிவிட்டு, அவளுக்காக நான் உதவ வந்திருப்பதாகச் சொன்னேன்.

நேத்ராவதி அதிர்ந்து நடுங்கினாள். அவள் முகம் ஏராளமாகச் சிவந்துவிட்டது.

தனது கறைபடிந்த கடந்தகாலம் ஒரு மூன்றாவது மனிதனுக்குத் தெரிந்துவிட்டால் எவ்வளவு பதட்டம் உண்டாகும் என்பதை அன்று நான் நேத்ராவதியை நேரில் பார்த்து உணர்ந்துகொண்டேன்.

சத்தியத்தைமீறி பிரேமா எல்லா ரகசியத்தையும் என்னிடம் சொன்னதற்காக நான் அவளிடம் மன்னிப்புக் கேட்டேன்.

நேத்ராவதி பதலே சொல்லவில்லை. அவள் முகம் இறுகியது.

“உங்களை பிளாக்மெயில் செய்யும் அவன் யாரென்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள் ப்ளீஸ்…”

“………………….”

திரும்பத் திரும்பக் கேட்டேன்.

“என்னை வற்புறுத்தாதீர்கள். செய்த பாவத்திற்கு இம்சிக்கப்படுவதுதான் நியாயம்…”

எழுந்து நின்றாள். பிறகு திரும்பி விறுவிறுவென வேகமாக நடந்து சென்றுவிட்டாள்.

எனக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.

மேலும் சற்றுநேரம் பீச்சில் அமர்ந்திருந்தேன்.

இரவு ஒன்பதுமணிக்கு வீடு திரும்பினேன். வீடு உட்பக்கமாக பூட்டியிருந்தது. என்னிடம் உள்ள மாற்றுச் சாவியைப் போட்டு உள்ளே சென்றேன்.

அங்கே பிரேமா கூடத்தில் உயிரற்ற சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு கடிதம்.

பதட்டத்துடன் அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்தேன்.

அன்பானவருக்கு,

என்னிடம் ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் நேத்ராவதி பர்மிஷனில் சென்றதும், ஏதோவொரு சந்தேகத்தால் உந்தப்பட்டு நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். பீச்சில் நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும், நான் நிலை குலைந்தேன். நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை, நீங்கள் அவளைச் சந்திப்பீர்கள் என்று.

நேத்ராவதி உங்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்லியிருப்பாள். தற்போது உங்களுக்கு அந்த பிளாக்மெயிலின் நிஜக் கதாநாயகி நான்தான் என்கிற உண்மை தெரிந்திருக்கும்.

என்னை மன்னித்துவிடுங்கள்.

பிரேமா.

“அடப்பாவி, இந்தக் காலத்தில் கல்யாணத்திற்கு முன்பு சொஞ்சம் அப்படி இப்படி இருப்பது ஆண் பெண் இருவருக்கும் மிகவும் சகஜமான ஒன்றுதான். என்னிடம் உண்மையைச் சொல்லியிருந்தாலும் உன்னை அதே அன்புடனும், மரியாதையுடனும் நடத்தியிருப்பேனே பிரேமா. என்னை நன்றாகப் புரிந்துகொள்ளாது அவசரப் பட்டுவிட்டாயே…” என்று கதறி அழுதேன்.

போலீஸுக்குப் போன் செய்தேன்.

பழியைத் தன்மீது அபாண்டமாக பிரேமா சாத்தியிருப்பது தெரிந்தும், அவளைக் காட்டிக் கொடுக்காத நேத்ராவதியை நினைத்து நினைத்து சிலிர்த்துப்போனேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *