என் காதல் என்னோடுதான்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,148 
 
 

“”வித்யா… வித்யா!” என்று அழைத்தபடி வந்தான் அவள் கணவன் பாஸ்கர். அவன் கையில் பிரபல துணிக்கடை ஒன்றின் பை இருந்தது.
அதை வித்யாவிடம் நீட்டி, “”என் தேவதைக்கு அன்புப் பரிசு!” என்றான் பாஸ்கர்.
என் காதல் என்னோடுதான்!“”என்ன பரிசு?” என்று கேட்டபடி, அதை வாங்கிக் கொண்ட வித்யா, பையைப் பிரித்துப் பார்த்தாள்.
உள்ளே சமிக்கி வேலைப்பாடு செய்யப்பட்ட ஒரு சேலை இருந்தது; சந்தன நிறம். அதில், பல வண்ணங்களில் சமிக்கி வேலை செய்யப்பட்டு, சேலை கொள்ளை அழகாக இருந்தது.
“”இப்போ எதுக்கு எனக்குப் பரிசு?”
“”இன்னைக்கு என்ன தேதி வித்யா?”
“”14…” என்றாள் வித்யா.
“”போன மாதம் இந்த, 14ம் தேதி என்ன நடந்தது வித்யா?”
“”அந்த நாளை மறக்க முடியுமா? நம்ம கல்யாணம் நடந்தது!”
“”ரொம்ப கரெக்ட்… அதுதான், என் செல்ல ராணிக்கு அன்புப் பரிசு!” என்றான், அவளை அணைத்தபடி.
“”ஒவ்வொரு மாதமும், 14ம் தேதியை ஞாபகம் வைச்சுக்கிட்டு, எனக்கு கல்யாணப் பரிசா வாங்கி கொடுப்பீங்களா?”
“”நிச்சயமா!”
“”கால, காலத்துக்கும்?”
“”ஆமாம்… வித்யா!”
“கல்யாணமான புதிதில், ஒவ்வொரு கணவனும், தன் மனைவியிடத்தில் பிரியமாகத் தான் இருப்பான். அப்புறம்? ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றாகி விடும்…’ என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்த மாதம், 14ம் தேதி, ஆபீசுக்கு லீவு போட்டு விட்டான் பாஸ்கர்.
“”பத்து மணிக்கெல்லாம் தயாராக இரு!” என்றான் வித்யாவிடம்.
“”எதுக்கு?”
“”நாம வெளியிலே போறோம்!”
“”இன்னைக்கு என்ன விசேஷம்?”
“”வித்யா… இன்னைக்கு தேதி 14.”
“”ஆமாம்… நம்ம கல்யாண நாள்; அதுக்கென்ன?”
“”என் ஏஞ்சலுக்கு நான் ஏதாவது பரிசு கொடுத்துண்டே இருக்கணும். ஒவ்வொரு மாத கல்யாண நாளுக்கும்… நாம மாம்பலம் போறோம்!”
“”போயி?”
“”என்ன செய்யப் போறேன்னு இப்போ சொல்ல மாட்டேன்; சஸ்பென்ஸ்!” என்று சொல்லி, வித்யாவின் பட்டுக் கன்னத்தை தட்டினான் பாஸ்கர்.
டூவீலரின் பின்னால் வித்யா உட்கார, வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தான் பாஸ்கர். வலது கையால் அவன் இடுப்பைச் சுற்றி அணைத்துக் கொள்வது போல, பிடித்துக் கொண்டாள் வித்யா.
“”நீ, என் இடுப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கிறப்போ எங்கேயோ, எப்பவோ படிச்சது ஒண்ணு ஞாபகத்துக்கு வருது!”
“”என்னவாம் அது?”
“”பகலில் அவள், இரவில் அவன்!” என்று சொல்லி சிரித்தான்.
“”புரியலே!”
“”பகலில் வண்டியின் பின்னால் உட்கார்ந்து செல்லும் போது, கணவனை இடுப்போடு சேர்த்து கட்டிக் கொள்கிறாள் மனைவி; இரவிலோ கணவன் அவளை இடுப்போடு கட்டிக் கொள்கிறான்!” சிரித்தான் பாஸ்கர்.
அதன் அர்த்தம் புரிந்ததும், வித்யாவின் முகம் குங்குமத்தை கொட்டியது போல சிவந்தது.
வண்டி ஒரு நகைக்கடை முன் நின்றது. அதை ஸ்டாண்டு போட்டு பூட்டி, வித்யாவை, நகைக் கடையினுள் அழைத்துச் சென்றான் பாஸ்கர்.
அங்குள்ள விற்பனையாளரிடம், “”நாலு பவுன்ல கோல்டு நெக்லஸ் காட்டுங்க!” என்றான்.
“நான்கு பவுன் தங்க நெக்லஸ் எனக்கா? ஒரு லட்சம் ரூபாய் கிட்ட ஆகுமே?’ என்று தனக்குள்யேயே கேட்டுக் கொண்ட வித்யா, “”தங்க நெக்லஸ் எனக்கா?” தன் மார்பின் மீது கை வைத்தபடி கேட்டாள்.
“”ஆமாம்… என் மகாராணியான உனக்குதான் கோல்டு நெக்லஸ்!” என்றான் பாஸ்கர்.
விற்பனையாளர், நான்கைந்து நெக்லஸ்களை எடுத்துக் காட்டினார்.
அவற்றில் ஒன்றை எடுத்துப் பார்த்து, “”இந்த நெக்லஸ் உனக்கு பிடிச்சிருக்கா?” கேட்டான் பாஸ்கர்.
அதை கையில் வாங்கி அப்படி, இப்படி திருப்பிப் பார்த்தாள் வித்யா.
அதன் நேர்த்தியும், டிசைனும் கண்களைப் பறித்தது. “பளபள’வென மின்னிற்று பொன்.
“எனக்கு இந்த நெக்லஸ் ரொம்ப பிடிச்சிருக்கு!’ என்று சொல்ல நாக்கின் நுனி வரை வந்து விட்டது; அதை, கஷ்டபட்டு அடக்கிக் கொண்டாள் வித்யா.
அவள் மனம், “இன்னும் கொஞ்ச நாளில், என்னை உங்களுக்கு பிடிக்காமல் போக போகிறதே…’ என்றது.
“”என்ன வித்யா? நெக்லசைப் பார்த்ததும், பிரமிச்சுப் போயிட்டியா? இந்த நெக்லஸ் உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேனே!”
தன்னை சுதாரித்து, “”சந்தோஷத்திலே எனக்கு பேச்சே வரலே… உங்களை எனக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி, இந்த நெக்லசையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,” என்றாள் வித்யா, அதை தன் கழுத்தோடு பதித்து, கண்ணாடியில் பார்த்தபடி.
மூன்றாம் மாத கல்யாண நாள் —
“”இன்னைக்கு என்ன, “பிரசன்டேஷன்’ உங்கள் அன்புச் செல்வத்துக்கு?”
“”கார்!”
“”காரா?” என்று வியப்புடன் கேட்டாள் வித்யா.
“”ஆமாம் வித்யா… எனக்கு ஆபீசுலே மானேஜர் புரொமோஷன் வரப் போகுது… ஒரு மானேஜர், டூ-வீலர்லே ஆபீஸ் போகலாமா… இல்லை, மனைவியை கூட்டிட்டு வெளியிலே போகலாமா? அதனால், ஒரு குட்டிக் காருக்கு, “புக்’ பண்ணிட்டேன் வித்யா… வெறும், மூன்று லட்சம் ரூபாய்தான்!” என்று பாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் கார் ஹாரன் சப்தம் கேட்டது.
“”கார் வந்திடிச்சு வித்யா… வந்து பார்!” என்று, அவள் கையை பிடித்து இழுத்துட்டு போனான்.
அம்சபட்சி மாதிரி அழகான ஒரு கார்; மெரூன் கலரில்.
“வா… மகாராணி வா… வந்து ஏறிக் கொள்!’ என்று சொல்வது போல, கேட்டருகில் நின்று கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும், சந்தோஷத்தில் வித்யாவுக்கு அழுகையே வந்துவிட்டது. “எனக்கு எவ்வளவு செய்கிறான் இந்த அன்புக் கணவன்? நான் சொன்ன சமாச்சாரம் எவ்வளவு சீரியசானது, அதை எப்படி, “ஜஸ்ட் லைக் தட்’டாக எடுத்துக்கிட்டு, மனைவியிடம் இவ்வளவு அன்பு காட்ட முடிகிறது… ஏதாவது பரிசு கொடுத்து, அவளை திக்கமுக்காடச் செய்ய முடிகிறது. விலை உயர்ந்த பொருட்களை பெரிய மனதோடு வாங்கிக் கொடுக்க முடிகிறது?’ வித்யாவின் மனம் அவளுக்குள்ளேயே விம்மியது.
திருமணத்தன்று கல்யாண மண்டபத்தில் கூடியிருந்த கூட்டத்தில், தற்செயலாக அவள் பார்வையில் பட்டுவிட்டான் செல்வம். அவனைப் பார்த்ததும் வித்யாவுக்கு, “திக்’கென்றாகி விட்டது.
அவளுடைய தோழி புனிதாவின் அண்ணன் தான் இந்த செல்வம். புனிதாவை, வித்யா பார்க்கச் செல்லும் போதெல்லாம், இந்த செல்வத்தையும் அவள் பார்க்க நேர்ந்தது; பேச நேர்ந்தது; சிரிக்க நேர்ந்தது.
வயது, பருவம் எல்லாம் வித்யா – செல்வம் இருவருக்குமே இருந்தது; ஆனால், மனம், அதில் ஒரு ஆசை, ஒரு காதல் எல்லாம் வித்யாவிடம் மட்டும் தானிருந்தது. அவனிடம் பழகி, மனதால் அவனை மிகவும் நெருங்கி, வித்யா அவனிடம் காதல் வயப்பட்ட போதுதான், செல்வத்தின் மனதில் தான் நுழையவே இல்லை என்பது தெரிய வந்தது. அவள் மனம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. தன்னுடையது, ஒருதலைக்காதல் என்பதும் புரிந்தது.
திருமணத்துக்கு வந்திருந்த செல்வம், அவளை வாழ்த்தி பரிசளித்த போது, “செல்வம்… என்னை தெரியலையா? அம்பாசமுத்திரம் தீர்த்தபடி, ஹை-ஸ்கூலில் ஒண்ணா படிச்சோமே?’ என்றான் பாஸ்கர்.
“அடடே… நம்ம பாஸ்கர்!’ என்று சந்தோஷத்
துடன் அவன் கைகளை பிடித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய் விட்டான் செல்வம்.
பாஸ்கருக்கு செல்வத்தையும், செல்வத்துக்கு பாஸ்கரையும் தெரிந்திருக்கிறது. பின்னாளில் இருவரும் சந்திக்கும் போது, வித்யா தன்னை காதலித்ததை செல்வம், பாஸ்கரிடம் சொல்லி விட்டால்?
முந்திக் கொண்டாள் வித்யா. முதலிரவு அன்றே தன் ஒரு தலைக்காதல் விஷயத்தை பாஸ்கரிடம் சொல்லி விட்டாள்.
“ஆண் – பெண்ணுக்கு கல்யாணம் நடக்கும் முன், எவ்வளவோ நடக்கும் வித்யா… அதை எல்லாம் கல்யாணத்துக்குப் பின் சுத்தமாக மறந்துவிட வேண்டும்; புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்!’ என்று சொல்லி, அந்த இரவை மறக்க முடியாத இரவாக்கி விட்டான் பாஸ்கர்; அப்படியே தொடரவும் செய்தான்.
அடுத்த மாத கல்யாண நாளும் வந்தது —
“ஆசையும், மோகமும் குறைய ஆரம்பிக்கும் போது, பாஸ்கரின் மனதில் தான் சொன்ன விஷயம் விஸ்வரூபம் எடுக்கும்…’ என்று நினைத்தாள் வித்யா; அதனால்தான், அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.
“”நான் செல்வத்தை விரும்பினேன், அவன் என்னை விரும்பவில்லை என்பதையும் சொன்னேன். உங்கள் மனைவி ஒருவனை நேசித்தவள் என்பதை உங்களால் எப்படி சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை?” என்று, பாஸ்கரிடம் கேட்டாள் வித்யா.
“”அதுதான் முதலிரவு அன்னைக்கே சொன்னேனே வித்யா… இளம் வயதில் திருமணத்துக்கு முன் ஒரு ஆணின் மனதில் ஒரு பெண்ணும், ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆணும் இடம் பெறுவது என்பது பருவ மாற்றத்தால் உண்டாவது; அதை, திருமணமான அன்றே மறந்துவிட வேண்டும். புது கணவன், புது மனைவியென்று வாழத் தொடங்க வேண்டும்,” என்றான் பாஸ்கர்.
அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து, “”நீங்கள் எவ்வளவு கிரேட்!” என்றாள் வித்யா.
“நீயாவது, மனதளவில், உன்னை விரும்பாத ஒருவனை விரும்பினாய்; ஆனால், நானோ என்னை விரும்பி வந்த எத்தனை பெண்களை கெடுத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்… எத்தனை பெண்களின் கற்பிழப்பிற்கும், அழுகைக்கும், கதறலுக்கும் காரணமாகி இருக்கிறேன் என்பது என் மனதுக்குத்தான் தெரியும் வித்யா… மன்னிக்கவே முடியாத அந்த மாபெரும் தவறுகளுக்கு முன், உன் ஒருதலைக் காதல் என்பது ஒரு பொருட்டேயல்ல…’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் பாஸ்கர்.

– திருவேங்கடநாதன் (ஜூன் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *