என்ன பாவம் செய்தேன்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,975 
 

எனக்கு உலகம் இன்னதென்று ஒருவாறு தெரிந்த பிறகு, என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அப்போதுதான் என் தந்தைக்குப் பாரமாயிருப்பதை நான் ஓரளவு உணர்ந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியதும், “ராஜினி, ராஜினி!” என்று இரைவார் என் அப்பா. அந்தக் குரலில் தேனின் இனிமையும் பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றும்.

அக்கம் பக்கத்து வீடுகளில் என் அன்புக்குகந்த தோழர்—தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நான், அதைக் கேட்டு ஓடோடியும் வருவேன்.

அன்புடன் என் கன்னத்தைக் கிள்ளி, ஆசையுடன் என்னைத் தூக்கிக் கொண்டு, வீட்டுக்குள் நுழைவார் என் அப்பா.

அங்கே விதவிதமான பட்சண வகைகளெல்லாம் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். எல்லாம் எனக்கென்று என் அப்பா வாங்கி வந்தவைதான். அவற்றை யெல்லாம் ஒருவாறு தீர்த்துக் கட்டுவதற்கும், “காப்பி கூடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?” என்று அம்மா என்னைச் செல்லமாகக் கடிந்த வண்ணம் காப்பி கொண்டு வருவதற்கும் சரியாயிருக்கும். அதையும் குடித்து வைத்த பிறகு, அம்மா என்னைத் தன் மனதுக்குப் பிடித்த மாதிரி அலங்காரம் செய்து வைப்பதில் முனைவாள்.

ஒரு நாளாவது எனக்கென்று ஏதும் செய்து கொள்ள என்னை விடுவதில்லை என் அம்மா. உயிரற்ற என் விளையாட்டுப் பொம்மைகளில் என்னையும் ஒன்றாக அவள் எண்ணி விட்டாளோ என்னமோ! இல்லையென்றால், என் முகத்தை நானே அலம்பிக் கொள்ளக் கூடவா அவள் என்னை விட மாட்டாள்?

அம்மாவின் லட்சணம்தான் இப்படியென்றால், அப்பாவின் லட்சணமாவது அதற்குக் கொஞ்சம் விரோதமாயிருக்கக் கூடாதோ? அதுவும் இல்லை. அவரிடம் நான் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தால் போதும், “உனக்கெதற்கு, அந்தக் கவலையெல்லாம!” என்று கேட்டு, எல்லாக் கவலைகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொள்வார்.

“எதற்கும் நான் ஏதாவது ஒரு தொழிலுக்குப் படித்து வைக்கிறேனே, அப்பா!” என்றால், “குழந்தையும் குட்டியுமாகக் குடித்தனம் செய்வதைவிட, வேறு தொழில் உனக்கு என்னத்திற்கு?” என்று கேட்டு என் வாயை அடக்கி விடுவார்.

யோசித்துப் பார்த்தால், இப்போது நான் கொஞ்ச நஞ்சம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேனே, அதுகூட எனக்காக இல்லையென்று தோன்றுகிறது.

வேடிக்கையைத் தான் கேளுங்களேன்:

என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக என் அப்பா பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த போது, “இந்தக் காலத்துப் படித்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால், நம்ம ராஜினியை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது!” என்றாள் அம்மா.

“சில சமயம் எனக்கும் அப்படித்தான் படுகிறது. ஆனால் இந்தக் காலத்துப் பையன்கள்தான், ‘பெண்ணுக்குப் படிக்கத் தெரியுமா, பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா?’ என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்களே! அதற்காகத்தான் இவளைப் படிக்க வைக்க வேண்டுமென்று பார்க்கிறேன்” என்றார் அப்பா.

எப்படியிருக்கிறது, கதை? எப்பொழுதோ எவனே வரப்போகிறானே, அவனுக்காக என்னைப் படிக்க வைக்கப் போகிறார்களாம். எனக்காக, என் வயிற்றை நானே வளர்த்துக் கொள்வதற்காக அவசியமானால் என் உயிரை நானே காப்பாற்றிக் கொள்வதற்காக, வேறொருவர் துணையின்றி நானும் இந்த உலகத்தில் சுயமரியாதையோடு உயிர் வாழ்வதற்காக—அவர்களும் ஒன்றும் செய்ய மாட்டார்களாம் : என்னையும் ஏதாவது செய்து கொள்ள விட மாட்டார்களாமே!

பார்க்கப் போனால், நாளாக ஆக என்னைப் பற்றி அவர்களுக்கு ஒரே ஒரு கவலைதான் மிஞ்சியிருந்தது. அந்தக் கவலை உலக வழக்கத்தை யொட்டித் தாங்கள் கண்ணை மூடுவதற்குள் எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட வேண்டு மென்பதுதான்!

அதற்கேற்றாற் போல் அத்தகைய கவலையை அவர்களுக்கு அளிக்கக்கூடிய வயதை நானும் அப்போது அடைந்திருந்தேன். என் உடம்பிலே புதிய தெம்பு, உள்ளத்திலே புதிய உணர்ச்சி, அங்க அவயங்களிலே புதிய கவர்ச்சி எல்லாம் என்னை வந்து எப்படியோ அடைந்து விட்டன. இந்த மாறுதல் என் தாய் தந்தையர் அதுவரை என்னிடம் காட்டி வந்த அன்பிலும் ஆதரவிலும் கூடத் தலையிட்டது.

முன்போல், “ராஜினி, ராஜினி!” என்று அப்பா என்னை அழைக்கும் போது, அந்தக் குரலில் தேனின் இனிமையும் பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றுவதில்லை; விஷமும் விளக்கெண்ணெயும் கலந்திருப்பது போல் தோன்றும்.

“ஏன் அப்பா!” என்று கேட்டுக் கொண்டே வந்தால் அவர் முன்போல் என் கன்னத்தை அன்புடன் கிள்ளி, ஆசையுடன் தூக்கிவைத்துக் கொள்வதில்லை. “போ, உள்ளே ! இன்னொரு தரம் அங்கேயெல்லாம் போனாயோ, உன் காலை ஒடித்து விடுவேன்!” என்று எரிந்து விழுந்தார்.

அவர் மட்டுமா? அம்மாவும், “காப்பிசுடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?” என்று முன் போல் என்னைச் செல்லமாகக் கடிந்து கொள்வதில்லை: “இத்தனை நாழி வெளியே என்னடி வேலை, உனக்கு? பேசாமல் ஒரு மூலையைப் பார்த்துக் கொண்டு உட்காரு” என்பாள், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

“இதென்ன வேடிக்கை! இவர்கள் இப்படி எரிந்து விழும்படியாக நாம் என்ன குற்றம் செய்தோம்?” என்று ஒன்றும் புரியாமல் நான் ‘திரு திரு’ வென்று விழிப்பேன்.

என் வாழ்நாட்கள் இப்படியே புரிந்தும் புரியாமலும் சென்று கொண்டிருந்தன. கடைசியில் என் பெற்றோர் கவலையைத் தீர்க்கும் அந்த நாளும் வந்தது. “இதுவரை உன் பெற்றோர் உன்னைக் காப்பாற்றியது போதும்; இனி மேல் நான் காப்பாற்றுகிறேன், வா!” என்று சொல்லிக் கொண்டு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் வந்து என் கரங்களைப் பற்றினான். நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்.

தங்கள் கவலை தீர்ந்ததென்று எண்ணியோ என்னமோ, என் பெற்றோர் எனக்குக் கல்யாணமான சில வருடங்களுக் களுக்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடி விட்டார்கள்.

*⁠*⁠*

என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் முடிந்து, இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அதாவது நேற்று வரை என் தந்தைக்குப் பாரமாயிருந்த நான், இன்று, என் கணவருக்குப் பாரமானேன்.

ஆரம்பத்தில் என் கணவர் என்னிடம் காட்டிய அன்பு, சின்னஞ் சிறு வயதில் என் தகப்பனார் காட்டிய அன்பைக் கூடத் தூக்கியடிப்பதாயிருந்தது. அதைக் கண்டு நான் அடைந்த பெருமைக்கு ஓர் எல்லையே இல்லை. வெறும் புத்தக அனுபவத்தோடு இருந்த எனக்கு அந்த அன்பு, அமரத்துவம் வாய்ந்ததென்றே முதலில் தோன்றிற்று, உண்மையில் அவர் என் மீது காதல் கொள்ளவில்லை, என் ‘கன்னிப் பருவ’த்தின் மீதுதான் காதல் கொண்டார் என்ற விஷயம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.

அந்த நாளில் அவரைக் கண்ட மாத்திரத்தில் என்னை வெட்கம் பிடுங்கித் தின்னும். எதிரே நிற்பதென்றால் என்னவோ மாதிரி இருக்கும்! தப்பித்தவறி அவரிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டாலோ என் உடம்பே சில்லிட்டுப் போகும்.

அவரோ என்னை நேருக்கு நேராக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டு மென்றும், ஒரு வார்த்தையாவது பேசிவிடவேண்டுமென்றும் துடியாய்த் துடிப்பார். ஆடு திருடிய கள்ளனைப் போல் அக்கம் பக்கம் பார்த்து விழித்த வண்ணம், “ராஜினி, ராஜினி!” என்று மெல்லிய குரலில் அழைத்துக் கொண்டே, என்னைச் சுற்றிச் சுற்றி வருவார். அவரைக் கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டே நான் காரியமும் கையுமாக இருப்பேன். ஒரு காரியமும் இல்லாத போதுகூட யாரையாவது கூப்பிட்டு வைத்துக்கொண்டு சாங்கோபாங்கமாகப் பேசிக் கொண்டிருப்பேன்—ஆமாம், அவர் என்னை நெருங்குவதில் எவ்வளவுக்கெவ்வளவு ஏமாற்ற மடைகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அப்போது எனக்கு ஆனந்தமாய்த் தானிருந்தது.

போனால் போகிறதென்று நான் எப்பொழுதாவது அவரிடம் ஒரு வார்த்தை பேசி விட்டால் போதும்; இந்த உலக சாம்ராஜ்யமே தம்முடைய கைக்குக் கிட்டிவிட்டது போல் அவர் ஒரே குதூகலத்தில் ஆழ்ந்து விடுவார்.

இந்த ரஸமான வாழ்க்கை நெடு நாள் நீடிக்கவில்லை. சிறிது நாளைக்கெல்லாம் காதலும் ஊடலும் குடிகொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் கோபமும் தாபமும் வந்து குடிகொண்டன. அன்று என்னை ஒரு முறையாவது நேருக்கு நேர் பார்த்து, ஒரு வார்த்தையாவது பேசிவிடவேண்டுமென்று அவர் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது போய், இன்று அவரை ஒரு முறையாவது நேருக்கு நேராகப் பார்த்து ஒரு வார்த்தையாவது கேட்டுவிட வேண்டுமென்று நான் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தேன். இந்த நிலையிலே நான் எதற்காகப் பெண்ணாய்ப் பிறந்தேனோ, அதற்காக மூன்று குழந்தைகளையும் பெற்று வைத்தேன்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்த அன்பு அத்தனையும் சேர்ந்து அந்தக் குழந்தைகளாக உருவெடுத்து வந்து விட்டனவோ என்னவோ, அதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையில் துளிக்கூட அன்பே யில்லாமற் போய்விட்டது. நாளடைவில் அவர் என்னை எலியைப்போல் பாவிப்பதும், அவரை நான் பூனையைப்போல் பாவிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

இதனால் அந்த வீட்டில் குடித்தனம் செய்வதை ‘என் தலைவிதி’ என்று நான் நினைத்துக் கொண்டேன்; அந்தக் குடித்தனம் நடப்பதற்கு வேண்டிய வரும்படிக்கு வழி தேடுவதை அவர் ‘தன் தலைவிதி’ என்று நினைத்துக் கொண்டார்.

இந்த லட்சணத்தில் ‘ஏன் பிறந்தோம்?’ என்ற நிலையில் எங்கள் குழந்தைகள் வளர்ந்து வந்தன.

போதிய பணம் மட்டும் இருந்திருந்தால், துன்பத்தை எதிர்த்து நின்று நாங்கள் ஓரளவு இன்பத்தை அடைந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அதுதானே எங்களிடம் இல்லை?

*⁠*⁠*

என் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாகி எப்படியோ பத்து வருஷங்கள் கழிந்துவிட்டன. இனி மூன்றாம் அத்தியாயம் ஒன்றுதான் பாக்கியிருந்தது. அதாவது, முதலில் என் தந்தைக்குப் பாரமாயிருந்து, பின்னால் என் கணவருக்குப் பாரமாயிருந்த நான், இப்போது என மகனுக்குப் பாரமாக வேண்டும்.

இந்த மூன்றாவது அத்தியாயத்தோடு மற்ற பெண்களுடைய வாழ்க்கையைப் போல் என்னுடைய வாழ்க்கையும் முடிந்துவிடும். ஆனால் அதற்குரிய வயதை என் மகன் அடைய வேண்டியிருந்தது. அது வரை ஒன்று என் கணவர் உயிருடன் இருந்தாக வேண்டும்; இல்லையென்றால் நான் அவருக்கு முன்னால் இறந்துபோக வேண்டும்—இதுதானே நம்பாரத நாட்டுப் பெண்மணிகளுக்குப் பெரியோர் வகுத்துள்ள வழி?

வழி, நல்ல வழியாயிருக்கலாம். ஆனால் யமனுடைய ஒத்துழைப்பும் அல்லவா அதற்கு அவசியம் வேண்டியிருக்கிறது?

சின்னஞ் சிறு வயதிலே எத்தனையோ தாய்மார்கள், “மஞ்சள் குங்குமத்தோடு என்னை அவருக்கு முன்னால் கொண்டு போய்விடு, பகவானே!” என்று வேண்டிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்த வேண்டுகோளில் பொதிந்து கிடந்த பொருள் இப்பொழுதல்லவா எனக்குத் தெரிகிறது!

இந்த உண்மை தெரிந்ததும் நானும் அப்படியே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். வாழ்வதற்காக அல்ல; சாவதற்காக!

என்னுடைய பிரார்த்தனை பலிக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் என் கணவரை யமன் வந்து அழைத்துச் சென்ற போது, அந்தப் பாழும் கடவுள் எதிர்பாராத விதமாகத் தோன்றி அவனைக் காலால் உதைக்கவில்லை!

அன்றிவிருந்து நான் அனாதையானேன். அத்துடன் சம்பிரதாயப்படி என் மகனுக்கு நான் பாரமாயிருப்பது போய், அவன் எனக்குப் பாரமானான்.

இந்த லட்சணத்தில்தான் என் வாழ்க்கையின் மூன்றாம் அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. எனக்கோ குழந்தை குட்டியுடன் குடித்தனம் செய்வதைத் தவிர வேறென்றும் தெரியாது. என் அப்பாவும் அந்தக் காலத்தில் எனக்கு அவ்வளவு தெரிந்தால் போதுமென்று தானே சொன்னார்?

அவருடைய வாக்கின்படி இப்பொழுது யாருடைய வரும்படியைக் கொண்டு நான் குடித்தனத்தை நடத்துவது? என்னை நானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத எனக்கு யார் இப்போது உதவப்போகிறார்கள்? இந்தக் கதிக்கு ஆளாக நான் என்ன பாவம் செய்தேன்?

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *