`அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’
`அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’
“இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, தொலைபேசியில் எல்லாரையும் அழைத்து, `கல்யாணம் நின்றுவிட்டது!’ என்று சொல்ல நேரிடும் என்று?
பரிசுப்பொருட்களுடன் எல்லாரும் வந்துவைத்தால், அது வேறு துக்கம்.
அந்த எண்ணம் உதிக்கையிலேயே, `அப்படி என்ன துக்கம் வந்துவிட்டது இப்போது?’ என்று தன்மீதே ஆத்திரப்பட்டாள் நளினி.
`ஏதோ, இதுவரைக்கும் காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்று நிம்மதி அல்லவா அடையவேண்டும்!
`பாம்பு யார், மணிவண்ணனா? நம் மனம்தான் எத்தனை சீக்கிரம் மாறுகிறது!’ லேசாகச் சிரிப்புகூட வந்தது நளினிக்கு.
அடேயப்பா! அவனைப்பற்றி நினைக்கும்போதே தான் துடித்த துடிப்பென்ன, தனக்குத்தானே சிரித்துக்கொண்டதும், நிமிடத்துக்கு நிமிடம் கண்ணாடிமுன் நின்று தன் அழகை ரசித்ததும், பாட்டு முணுமுணுத்ததும்!
முதன்முறையாக அவளைப் பார்த்தபோதே, “நீங்க எப்போ லைப்ரரிக்கு வந்தாலும், ஒங்களுக்குப் பக்கத்திலே எனக்கு இடம் பிடிச்சு வைங்க!” என்று சொல்வதானால், தான் அவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கவேண்டும் என்ற பெருமைதான் உண்டாயிற்று அவளுக்கு.
“நளினி! அன்னிக்கு, ஒன் பக்கத்திலே இடம் கேட்டேன். இப்போ, எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பியான்னு கேக்கத்தோணுது. ஒன் அழகைத் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாமில்ல?” என்று சினிமா வசனம் பேசினான், ஒரு நாள்.
“எங்கப்பாகிட்ட வந்து பேசுங்க,” சற்றே நாணியபடி நளினி பதிலளித்தபோது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த அப்பா `வேண்டாம்’ என்றால் வேறு ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிவிடுவாளோ?
“ஒங்கப்பாவைக் கேட்டுக்கிட்டா என்னோட சுத்தினே?”
எப்போதும் அதிராத குரலில் பேசியவர்! எதற்கு இந்தக் கோபம்?
அவள் மிரண்டு போனதைப் பார்த்து மணிவண்ணனின் தைரியத்தில் சிறிதளவு திரும்பியது.
அவள் தோளைப்பற்றி அணைத்துக்கொண்டான். “ஸாரிடா. எங்கே நீ என்னைவிட்டுப் போயிடுவியோங்கிற பயம்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.
அப்படியே ஒருவரை ஒருவர் உராய்ந்தபடி அந்தப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டது: “ஹலோ, நளினி!”
“டேய் சங்கர்! நீயா? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! இந்த ஒலகத்திலேதான் இருக்கியா?” கலகலவென்று சிரித்தாள்.
மணிவண்ணனின் முகம் சிறுத்தது. `யார் இந்த தடியன்? ஒரு மரியாதைக்காவது எனக்கு ஒரு ஹலோ சொல்லி இருக்கவேண்டாம்?’
“என்னடா? முந்தி சோனியா இருப்பே. இப்ப ரொம்ப குண்டா ஆயிட்டியே!” உற்சாகமாகப் பொரிந்துதள்ளிய நளினியைக் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தான் மணிவண்ணன். சந்தேகமும் பொறாமையும் கொப்புளித்தன அப்பார்வையில்.
அப்போதுதான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வந்தவளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்: “இது.. சங்கர். நாங்க ரெண்டு பேரும் கிண்டர் கார்டனிலேருந்து பன்னண்டு வருஷம் ஒண்ணாப் படிச்சோம். தமிழ்ச்சங்கத்திலே துடிப்பா இருப்போம். எத்தனை சண்டை போட்டிருக்கோம்! ஞாபகம் இருக்கா, சங்கர்?”
பேசிக்கொண்டே போனவளை ஓர் அனல் பார்வை பார்த்துவிட்டு, எதிரிலிருந்த எதிரியைப் பார்த்து, “சரி, பாக்கலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அப்பால் நடந்தான் மணிவண்ணன்.
பாலியத்தோழனிடம் விடைபெறவும் மறந்து, ஏதோ குற்றம் புரிந்தவள்போல், நிழலாகக் காதலனைத் தொடர்ந்தாள் நளினி.
அவளை அடக்கிவிட்ட பெருமிதத்துடன், “எப்பவோ ஒண்ணாப் படிச்சிருந்தா என்ன? அதுக்காக இப்படி கண்ட ஆம்பளைகிட்ட கொஞ்சிக் குலாவணுமா?” என்று மிரட்டிய மணிவண்ணனின் தலையுடன் குரலும் உயர்ந்தது. “நாளைக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் இந்தக் குணம்தானே வரும்?”
வாயடைத்துப்போயிற்று நளினிக்கு.
செல்லமாக அவளை இடித்தான் மணிவண்ணன். “என்ன செய்யறது, நளினி? நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா? என்னை அவ்வளவு பைத்தியமா அடிச்சிருக்கே நீ!”
தன் தடுமாற்றத்தை மறைக்க நளினி சிரிக்க முயன்றாள்.
`அதிகம் யோசிக்காது எதற்குள்ளேயோ காலை விட்டுவிட்டோமோ? இவரிடம் அப்படி என்ன பிடித்துப்போயிற்று எனக்கு?’
அவளுடைய குழப்பத்தைக் கவனியாது, “எங்கம்மா அவங்க மருமகளைப் பாக்க ஆவலா இருக்காங்க, நளினி. இப்பவே வா!” என்று அழைத்துப்போனான்.
நளினியை மேலும் கீழும் பார்த்த பார்வதி அம்மாளின் முகம் சுருங்கியது. “ஒரு தோடுதான் போட்டிருக்கே. அதுவும் கண்ணுக்குத் தெரியாதமாதிரி. மத்தபடி, பொட்டுத்தங்கத்தைக்கூடக் காணுமே! பாங்கிலேயாவது வெச்சிருக்கீங்களா?”
அவமானத்தால் சுருங்கிய நளினியைப் பொருட்படுத்தாது, பார்வதி தன்போக்கில் அடுக்கினாள்: “மணி எனக்கு ஒரே மகன். கறுப்புதான். ஆனாலும், ஆம்பளை இல்லியா? அவனோட படிப்புக்கு அம்பதாயிரம், லட்சம்னு குடுத்து, அதோட அம்பது பவுன் நகையும் போட எங்க சொந்தக்காரங்களே தயாரா இருக்காங்க. ஏதோ, ஒன்னோட அதிர்ஷ்டம் அவனுக்கு ஒன்னைப் பிடிச்சுப்போச்சு. அதுக்காக சும்மா பண்ணிக்க முடியுமா? ஒரு இருபதாயிரம் ரிங்கிட்டாவது கையில குடுப்பாரில்ல ஒங்கப்பா?”
மெள்ளத் திரும்பி காதலனை ஒரு பார்வை பார்த்தாள், `நீ கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்!’ என்று எப்போதும்போல் ஆதரவாக ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன்.
அவனோ, `எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!’ என்பதுபோல் தலையைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
நடந்ததைக் கேட்டு அப்பா ஏன் கொதித்தெழவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் நளினி.
“பெண்ணைப் பெத்துட்டா, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமாம்மா? முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சு நான் சேத்து வெச்சிருக்கிறதை ஒனக்கில்லாம, வேற யாருக்காக செலவழிக்கப்போறேன்!” என்று பாசத்தைக் கொட்டினார்.
உடனே, “அவசரமா அவ்வளவு புரட்ட முடியுமோ, என்னமோ!” என்று கவலைப்பட்டுவிட்டு, “வட்டிக்கு வாங்கினாப்போச்சு!” என்று வயதுக்குரிய நிதானத்துடன் பேசியபோது, தந்தையை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தாள் நளினி.
கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்தபோது அதுவரை எழுந்த கவலை, குழப்பம் எல்லாம் மறைந்தன.
“நளினி மணிவண்ணன்’ என்று மந்திரம் ஜபிப்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அடிநாக்கில் இனித்தது.
இனி யாருக்கும் பயந்து திரைப்படங்களுக்குப் போக வேண்டியதில்லை. உரிமையுடன் என் கணவரின் கையோடு என் கையைக் கோர்த்துக்கொண்டு எங்கு வேண்டுமானால் போகலாம்.
நான் அணியவேண்டிய உடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். நான் அவருக்குப் பிடித்த வகைகளைச் சமைத்துப்போட்டு..!
அத்தையிடம் கேட்கவேண்டும் அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று.
சிந்தனையில் ஒரு சறுக்கல்.
`மாமியார்!’ என்று சொல்லி, ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டால்கூடத் துள்ளுமாமே!
தலையை இருபுறமும் வேகமாக ஆட்டி, அந்த வேண்டாத எண்ணத்தைத் தள்ள முயன்றாள் நளினி.
`ஆரம்பத்தில் அப்படித்தான் கெடுபிடியாக இருக்கும். ஒரு பேரனைப் பெற்றுக்கொடுத்தால்..!’ கற்பனை போன திசையை உணர்ந்து நளினியின் முகம் சிவந்தது.
“நளினி! யார் வந்திருக்காங்க, பாரேன்!” தந்தையின் உற்சாகக் குரல் கேட்டது.
“வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க!”
`கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு!’ போலிக்கோபமும் வெட்கமுமாக நளினி வெளியே வந்தாள்.
`எத்தனை வருடப் பழக்கம்! இப்போது என்ன, புதிதாக வெட்கம்?’ தன்னிடம் தோன்றிய மாறுதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.
“ஒக்கார நேரமில்லே மாமா”. அவளைக் கவனியாது வேகமாகப் பேசினான் மணிவண்ணன். “அம்மா ஒரு சேதி சொல்லி அனுப்பினாங்க. நீங்க சொன்னதுக்குமேலே பத்து பவுனில ஒரு நெக்லஸ் போடணுமாம். அப்பத்தான் சபையில கௌரவமா இருக்கும்னாங்க”.
அந்த இடத்தில் ஓர் அசாதாரணமான மௌனம் நிலவியது.
“என்ன மாமா யோசனை? ஒங்க பொண்ணுக்குத்தானே செய்யச் சொல்றோம்? நானா வளையலும் நெக்லஸும் போட்டுக்கப்போறேன்?”
அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை நளினியால். “இப்படி அம்மாபிள்ளையா இருக்கிறதுக்கு வளையல் போட்டுக்கிட்டா ஒண்ணும் தப்பில்லே, என்று ஆங்காரத்துடன் கத்தியவள், கையிலிருந்த பத்திரிகையை இரண்டாகக் கிழித்தாள்.
“நளினி!” பதறினார் தந்தை.
“சுயபுத்தி இல்லாம, அம்மா பேச்சுக்குத் தாளம் போடறவரோட என்னால வாழமுடியாதுப்பா. இவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அந்தப் பண்டிகை, இந்தப் பண்டிகைன்னு ஏதாவது சுரண்டிக்கிட்டே இருப்பாங்க,” என்று பொரிந்தவள், “நான் மட்டும் என்னப்பா, விலைபோகாத சாமானா?” என்றபோது குரல் கம்மியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.
கரிய முகம் மேலும் கறுக்க, விறுவிறுவென்று வெளியே நடந்தான் மணிவண்ணன்.
ஏதோ சொல்லவந்த தந்தையைப் பேசவிடாது, “நல்லவேளை, அவங்க குணம் கல்யாணத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுபோச்சு! எனக்காக வேற ஒருத்தர் பிறந்திருக்கமாட்டாரா, என்ன!” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள் நளினி.
`இனிமேல் யார் என்ன புகழ்ந்தாலும் மயங்கிவிடக் கூடாது,’ என்று அவள் முடிவெடுத்தது அப்போதுதான்.