எனக்கொரு வேலை கிடைக்குமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 1,948 
 

“திருமேனி”

“ஓம் வாறன்”

திருமேனி தெருப்படலையைச் சற்றுத் திறந்து கொண்டு படலையின் கீழ்வெளியில் கால வைத்து, கால் துடையில் முழங்கையை ஊன்றி கைவிரல் முஸ்டியில் நாடியைத் தாங்கியவாறு நின்றான். அவனுடைய அக்காள் கனகம் வீட்டு முற்றத்தைக் கூட்டிக்கொண்டு நின்றாள்.

திருமேனியின் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

அவன் எஸ்.எஸ்.சி. சித்தியடைந்தபின் படித்துவிட்டு வீட்டிலிருக்கும் அந்த ஊர் வாலிபர்களுடன் சேர்ந்து, ஊர் தெருவெல்லாம் சுற்றிக் களைத்துவிட்டான். எவ்வளவு தான் நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலும் ஐந்து வருடங்களாய் வேலையின்றியிருந்து தமையனின் கூலி உழைப்பில் காலத்தைப் போக்குவது தினமும் அவன் நிம்மதியைக் குலைத்து மனதை வருத்திக்கொண்டு வந்தது. ஆனால் இப்பொழுது ஒரு கிழமையாக மனச் சஞ்சலத்தின் கனம் அவனை மீறிய அளவில் கூடிக்கொண்டுவிட்டது. அது அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் முகநிலையிலும் வெளிப்பட்டது.

“என்ன திரு. இண்டைக்கு உங்கடை கொண்டெஸ்ட் என்ன?”

“ஓம்”

அத்தெருவால் சைக்கிளில் சென்ற நண்பன் சிவா அவனைக் கேட்டுவிட்டுச் சென்றான்.

அன்று மாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாண நகர மண்டபத்தில் நடக்கவிருக்கும் ‘மிஸ்டர் யப்னா’ போட்டியைக் குறித்து அவனது நண்பர்கள் அவனிடம் கேட்கும் பொழுதும் வீட்டுக்குவந்து இந்த முறை நீதான் ‘மிஸ்டர் யப்னா’ என்று கூறிவிட்டுச் செல்லும் பொழுதும், சிறு மகிழ்ச்சியின் ஊறல் மனதில் நனைந்தாலும், அதையிட்டு அவனால் பூரணமாகச் சந்தோஷப்பட முடியவில்லை.

“மோனை இப்படியிருந்தால் இதுக்கொரு முடிவில்லையா” அவனுடைய தாய் அவனிடம் சிலசில சமயங்களில் அனுதாபத்தோடு கேட்பது அவன் நெஞ்சில் அடிக்கின்றது.

“நான் என்ன செய்வேன்?”

கிளாக் வேலைக்கு ஆட்களை எடுப்பதற்கு அரசாங்கம் நடத் தும் அத்தனை பரீட்சைகளை இவன் எடுத்தும் எதிலும் தெரிவு செய்யப்படவில்லை. ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தோற்றும் பரீட்சையாக இருந்தும் தான் தெரிவு செய்யப்படுவான் என்று அவன் ஓரளவு நம்பிக்கையோடுதான் இருந்தான். ஏனென்றால் வீட்டின் நிலைமையை உணர்ந்து அதற்காக அவன் இரவு பகலாக ஆயத்தப் படுத்தினான். இனி அவன் அரசாங்கப் பரீட்சைகள் எடுக்க முடியாது. அவனுக்கு இருபத்தி நாலு வயது கடந்துவிட்டது. அதுவும் அவன் யோசனையில் வெறுப்புடன் தலைகாட்டி மறைந்தது.

இப்பொழுது அவனுடைய மனதை அழுத்தி நோண்டி வருந் திக்கொண்டிருப்பது இன்னொரு விடியம். அவன் படிக்கும் காலம் முதல் அவனது மனதில் சிறு நம்பிக்கையைக் கொடுத்துவந்த சப்இன்ஸ்பெக்டர் வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தான். அதன்படி அந்த வேலைக்கு முதல் இரு தகுதிகாண் பரீட்சைகளிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தான். அதனால் ஒரு திருப்தியும், மனச் செந்தழிப்பும் இருந்தது.

‘ஹலோ சப் இஸ்பெக்டர் ஹௌ ஆர்யூ?’ என்று கேட்டுக் கேட்டு அவன் நண்பர்கள் ஊட்டிய நம்பிக்கை யில் நிச்சயமாக இறுதிப் பரீட்சையிலும் தான் சித்தியடைவன் என்று முழுமனதுடன் நம்பி யிருந்தான்.

‘சி- இப்படி நடக்குமெண்டு நினைக்கேல்லை’

அவனுடைய உள்ள அனுங்கலை உதடுகள் அசைத்தன.

அந்த நம்பிக்கையும் இன்று அவமாகிவிட்டது தான் அவனுக்கு பெரிய துக்கம்.

“திருமேனி எப்படி?”

“நல்லம்”

அவனுடைய ஒரு நண்பன் தெருவால் விரைவாக சைக்கிளில் ஓடிக்கொண்டே சுகம் விசாரித்தான். திருமேனியும் சுகம் சொன்னான். கடைசிப் பரீட்சை ஒழுக்கம் பற்றியது. பொலீஸ் இலாகாவினால் அனுப்பப்பட்ட பொலீஸ் அதிகாரிகள் இருவர் ஒரு மாதத்துக்கு முன்பு அவன் வீட்டுக்கு வந்தும், அயலில் சென்றும், அவன் குடும்பத்தையும்பற்றி ஒழுக்கம் சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டு சென்றனர்.

திருமேனி தன் குடும்பத்தைப்பற்றி அனுதாபத்தோடு நினைத்துக்கொண்டிருந்தான்.

அவன் குடும்பத்தில் மட்டு மன்றி, அவன் பரம்பரையில் அவன் ஒருவனே முக்கித்தக்கி எஸ்.எஸ்.சீ.வரையில் படித் திருந்தான். அன்றடித்து அன்று வாயில் போடும் பரம்பரை இவர்கள் பரம்பரை. அவனுடை தமையன் பரமு அலுப்பாந்தியில் மூட்டை தூக்கிப் பிழைக்கிறான். தகப்பன் முன்பு அதே வேலை செய்து சலரோகத்தால் இன்று வீட்டில் குத்திவிட்டார். அவன் தாயும், தகப்பனும் தன் மகனுக்கு உத்தியோகம் கிடைக்கப் போகின்றது என்னும் மகிழ்ச்சியில் கண்டவர்களுக்கெல்லாம் அதைப்பற்றிப் பெருமையாகச் சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கையும் பொலீஸ் இலாகாவிலிருந்து வந்த கடிதத்தினால் அழிந்து ஒழிந்தது. அக்கடிதத்தில் திருமேனியின் சிறிய தகப்பன் இருபது வருடங்களுக்கு முன்பு தேங்காய்ப் போரடிச் சண்டையில் ஒருவனைக் கொலை செய்து மறியலுக்குச் சென்றிருப்பதால் திருமேனி போலீஸ் இலாகாவில் எந்த உத்தியோகமும் எடுக்கமுடியாதென்பது தெரியவந்தது.

திருமேனியின் முகம் இருண்டு கொண்டது.

அவனுக்கு அந்த கடிதத்தின் பின்புதான் அந்த விஷயமே தெரியும். உண்மையில் அவன் ‘சப் இன்ஸ்பெக்டர்’ உத்தியோகத்தில் சேரவேண்டுமென்பதக்காக சைக்கிளில் ‘டபிள்’ ஏறுவதையே நிறுத்திவிட்டான்.

“தம்பி, சின்னக்கடைக்குப் போட்டுவாவன்”

“நான் இண்டைக்குப் போகவில்லை. எனக்கொரு விளையாட்டு இருக்குது, ரவுண் கோலுக்குப் போகவேணும்.” – அவன் படலை யருகில் நின்று கொண்டேயிருந்தான். நாலு மணிக்குப் பாட சாலை விட்டு, மாணவர்கள் புத்தகச்சுமைகளைத் தோழில் காவியவாறு போய்க்கொண்டேயிருந்தார்கள்,

“எப்பிடி திரு?”

“நல்லம்”

அவனுடைய சிநேகிதன் நாதன் சைக்கிளில் வந்து அவன் முன்னால் நின்றான். திருமேனி தோளிலும், கையிலும் புத்தகங்களை ஆசையோடு காவிச் செல்லும் மாணவாகளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

“இங்கைபார், இதுகள் எவ்வளவு நம்பிக்கையோடை பள்ளிக்கூடத்துக்குப் போட்டுவருகுதுகள். எதிர்காலத்தில் எவ்வளவு நம்பிக்கை”

நாதனிடம் அவர்களைச் சுட்டிக் காட்டினான்.

“அதுசரி இந்தப் புத்தகத்தை மட்டும் படிக்கினை என்ன பிரயோசனம்? இங்கை பார் நாங்கள் படிச்சுப்போட்டு என்ன செய்யிறம், படித்ததில முக்கால்வாசி மறந்தாச்சு!”

“எங்கடை படிப்பு என்ன படிப்படாப்பா? எதுக்குத்தான் உதவும்? அந்தக் காலத்திலை வெள்ளை காறன் தனக்குக் கிளாக் மாரை உற்பத்தி செய்ய உண்டாக்கின படிப்பைத்தானை இப்பவும் படிச்சுக்கொண்டு இருக்கினம்”

“ம்” – திருமேனி நாதன் கூறுவதற்கு யோசித்துக்கொண்டு தலை ஆட்டினான்.

“கிளாக்வேலை இல்லாவிட்டா வேறென்ன வேலையிருக்கு”

“எங்களுக்கென்ன தொழில் தெரியும். பள்ளிக்குடத்திலை புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் படிச்சிருக்கிறம், வேறை என்ன செய்தம்?”

“சரிதான், இங்கைபார் எங்களை. ஐஞ்சு வருசமாய் இருக்கிறம், இதுகள் என்ன செய்யப் போகுதுகள்?”

திருமேனியின் முகத்தில் வெறுப்பும், விரக்தியும் கலந்திருந்தன.

“என்ன செய்யிறது, சுதந்திரம் அடைஞ்சும் வெள்ளைக்காறனுடைய படிப்பு முறையை வைச்சுக்கொண்டிருந்தால் இது தான் நடக்கும். அவன் இந்த நாட்டிலை அன்பு கொண்டா படிப்பு முறையை அமைச்சான்?”

“எதிர்காலம் பயங்கரமாயிருக்கும்.”

“இப்படியே போனால் பயங்கரமாத்தான் இருக்கும் – வேறென்ன?”

படிப்பு முறை மாறாட்டில் வேலையில்லை. கல்வி உற்பத்தி உழைப்புடன் இணைந்திருக்கவேண்டும் எண்டு சொல்றது சரிதான். ஏனென்றால் பார் மனுசன் உழைச்சுத்தான் சாப்பிடவேணும்.– கல்வி உற்பத்தி உழைப்புடன் இணையும் போதுதான் வாழ்க்கைக்குப்பயனுள்ளதாகும்.

“அதுசரி உன்னைத் தட்டிப் போட்டாங்களாம் என்ன!”

திருமேனி மனமின்றி ஓமெ ன்றான்.

“நான் கேள்விப்பட்டன், பார் எப்பவோ உன்ரை சின்ன ஐயா செய்ததுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? யூஸ்லெஸ் முறை”

திருமேனி மௌனமாக நின்றான்.

“அந்த இடத்துக்கு ஆரை எடுத்தாங்கள்”

“கவுண்மென்ற் ஏஜென்ட் கந்தசாமியின்ரை மகன் குமார சாமியை

“ஓ… ஓ பெரிய இடம், அது சரி! – நான் வாறன். நேரமாகுது”.

நாதன் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான். திருமேனிக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது.

“திரு. கெதியாய் வெளிக் சிட்டு நில் வாறன் ! Get ready! Getting late ! காருக்குள் இருந்த கிளப் மனேஜர் சொன்னதுக்கு திருமேனி தலையை அசைத்து விட்டு நின்றான்.

“தம்பி!” அவன் தமக்கை கனகம் அவனை அழைத்தாள். இவள் அவன் கொன்ரெஸ்டுக்குப் போவதை அறிந்து தான் எரு விற்றுச் சேர்த்த பணத்தில் இரண்டு முட்டைகளை வாங்கிப் பொரித்து வைத்திருந்தாள். திருமேனி அவள் அழைப்பைக் கேட்டு உள்ளே சென்றாள்.

“தம்பி முட்டை பொரிச்சு வைச்சிருக்கு, சோற்றைச் சாப்பிட்டு விட்டுப் போ” கனகமும் அவளுடைய தங்கை மணியும் திருமேனி உழைத்துத் தங்களைக் கரை யேற்றி வைப்பானென்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டுகிறார்கள். அவன் கனகத்தைப் பார்த்தான். தன்மேல் உள்ள சுமையை எண்ணிக்கொண்டு சாப்பிடுவதற்குக் குசுனிக்குள் சென்றான். அங்கு மணி அவனுக் காகச் சாப்பாட்டை வைத்துக் கொண்டு காவலிருந்தாள். அவள் குமராகி மூன்று வருடங்கள் ஆகி விட்டன.

மாலை ஆறுமணிக்கு நகரசடை மண்டபத்தில் மிஸ்டர் யப்னா’ கொண்ரெஸ்டைப் பார்ப்பதற்காக மக்கள் கூடியிருந்தார்கள். வாலிபர்களே அதிகம். யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய பிரமுகர்களும் நகரமேயரும் முன் வரி சையிலிருந்தார்கள். போட்டியில் பங்கு பற்றியவர்கள் மேடையில் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொருவராக முன்வந்து பல கோணங் களில் உடலை ‘மசில்ஸ்’ எடுத்துக் காட்டி ‘போஸ்’ கொடுத்தனர். திருமேனியின் முறை வந்தது. அவன் தன் எண்ணெய் பூசிய கட்டுடலை நெளித்துப் ‘போஸ்’ கொடுக்கும்போது பார்த்துக் கொண்டிருந்த வாலிபர்களும், ரசிகர்களும் குரல் எடுத்துக் கத்திக் கரகோசம் செய்தனர். முன் வரிசையிலிருந்தவர்களும் தம் கைகளை மெதுவாகத்தட்டிக் கொடுத்தனர். அப்போது திருமேனியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அவர்களின் கரகோ சங்களும், போற்றுதலும், பிரமுகர்களின் கைதட்டுதல்களும் அவன் இதயத்தைக் குளுமைப் படுத்தின. அவன் சிரித்துக்கொண்டே நின்றான்.

எல்லோரும் போஸ் காட்டி முடிந்ததும் மண்டபத்திலுள்ள எல்லோரும் முடிவை எதிர்பார்த்து ஆவலுடன் நின்றார்கள். சிலர் திருமேனியிடம் முன்னதாக சென்று நீதான் ‘மிஸ்டர் யவ்னா’ கூறி கை குலுக்கினார்கள்.

அவன் புழகாங்கிதமடைந்தான்.

திருமேனி அறுபத்தைந்தாம் ஆண்டின் மிஸ்டர் யப்னா என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதும் கத்தல்களும்’ கைதட்டல் களும் மண்டபத்தைப் பிளந்தன. திருமேனி மேடையில் வந்து நின்றான். நகர மேயர் ஆவலுடன் கைகுலுக்கி தோளில் தட்டி மிஸ்டர் யப்னா என்று எழுதிய பட்டத்தை அவன் மார்பில் குறுக்காக அணிந்தார். பெரிய வெற்றிக் கிண்ணத்தை கையிலெடுத்துக் கொடுத்து திரும்பவும் கை குலுக்கினார். புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

“கொன்குராயூலேசன்ஸ்”

“தாங்யூ வெரிமைச் சேர்”

முன்வரிசையிலிருந்த பிரமுகர்களும் வந்து கைகுலுக்கினர். அவர்கள் முன் அவன் நிற்கும் போது மனப்பூரிப்படைந்தான்: எல்லோரும் அவனைப் பாராட்டி விட்டுச் சென்றார்கள்.

அவனுடைய ‘கிளப்’ தலைவர் அவனை காரில் கொண்டுவந்து வீட்டருகில் இறக்கிவிட்டுச் சென்றார். அவருக்கு அளவுகடந்த ஆனந்தம். திருமேனியில் அவருடைய ‘கிளப்’ பெருமையடைந்தது. அவன் பட்டத்துடனும்’ வெள்ளிக்கிண்ணத்துடனும் இறங்கி நடந்தான். அவனுக்கு தாய், தகப்பன், சகோதரிகளை நினைத்தும் சந்தோஷம் பெருகிக் கொண்டது. பாய்ந்து சென்று அவர்கள் முன் நிற்க வேண்டும் போலிருந்தது. எல்லோரும் அவற்றைக்காட்டி சந்தோஷப்படுத்தி பெருமைப்பட வைக்க வேண்டுமென்று எண்ணினான். அவர்களும் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். மிகவும் மன ஆரவாரத்துடன் பட்டத்தை மார்பிலணிந்து கொண்டு கையில் கிண்ணத்தை தூக்கி மிடுக்காக வைத்துக்கொண்டு படலையைத் திறந்து உள்ளே சென்றான்.

“அம்மா !, அக்கா !, மணி! அம்மா !”

அவர்கள் எல்லோரும் நித்திரை கொண்டு விட்டார்கள். அவர்களுக்கு திருமேனி என்ன போட்டிக்குப் போனான் என்பதே தெரியாது. கனகத்துக்கு, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சென்று விட்டான் என்பது தெரியும், அவன் வீட்டுக்குள் சென்று ஒவ்வொருவராகத் தட்டி எழுப்பினான்.

“அம்மா! அக்கா! அக்கா மணி எழும்பி விளக்கை கொழுத்து! அம்மா, அவன் ஆரவாரத்துடன் எல்லோரையும் எழுப்பிய தால் கண்களை துடைத்துக் கொண்டு எழும்பியிருந்தனர், தனம் எழுந்து நெருப்புப்பெட்டியை தட்டி விளக்கை கொழுத்தினாள், தாய் எழுந்து சீலையால் போர்த்துக்கொண்டு குந்தியிருந்தாள், மணி எழுந்து நின்று திருமேனியை நன்றாக பார்த்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவன் அழகாக நின் முன்கையில் இருந்த வெற்றிக்கிண்ணம் பளபளத்தது.

“இதென்ன தம்பி” கனகம் சந்தோஷ மிகுதியுடன் கேட்டான்.

“இது என்ன மோனை” தாய் ஆச்சர்யத்துடன் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தகப்பன் பாயிலிருந்த வாறே நகர்ந்து கிட்டவந்தார். ஆக்களின் சந்தோஷத்தைக்கண்டு அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவன் சொன்னான்: “இதுவா எனக்குப் பரிசுகள். நான் தான் மிஸ்டர் யாழ்ப்பாணம் அதற்குத்தான் இதெல்லாம் தந்திருக்கின்றார்கள்! எப்படி?”

தனம் அவனை நோக்கினாள். வெற்றிக்கிண்ணத்தையும், கேடயத்தையும் பார்த்தாள். அவளுக்கு மனதுள் கிடைக்க முடியாத ஒன்று கிடைத்ததைப் போன்ற குதூகலம்.

“இங்கேயம்மா! தம்பியைப் பார்!”

தாய் அவற்றைப் பார்த்துவிட்டு திருமேனியின் முகத்தை நோக்கினாள். அவள் முகத்திலும் சிறு நம்பிக்கை ஒளி.

“மோனை”

“என்னம்மா?”

“இனி இந்த அரசாங்கம் உனக்கு வேலை தருமா?”

தனம் ஆவலுடன் திரும்பி அவன கைகளப் பிடித்தாள்.

“ஓம் தம்பி இனி உனக்கு வேலை தருவாங்களா?”

“மோனை இந்த அரசாங்கம் வேலை தருமாடா?”

தாய் இருந்து கொண்டே ஆவலுடன் திரும்பவும் கேட்டாள். தகப்பன் பாயைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.

“என்ன இவன் பேசாமல் நிற்கிறான்?”

கனகம் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *