சுவேதா ஸ்கூட்டியைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த…. அதிலிருந்து இறங்கிய கணவர் சுரேசைப் பார்த்த பூமிகாவிற்குள் சின்ன அதிர்ச்சி.
‘போகும்போது இவர்தானே ஒட்டிக்கொண்டு சென்றார். வரும்போது எதற்கு இந்த மாற்றம்.? ‘ திடீர் கேள்வி.
சின்னப் பெண். அதுவும் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த இவள் அண்ணன் மகள். கல்லூரியில் சேர்க்க….பத்திரமாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் திரும்பவும் அப்படியே கொண்டு வருவதான் சரி. அதை விடுத்து அவள் ஓட்ட இவர் அமர்ந்து வருவது தப்பு.
வயசு கோளாறு. சுவேதாவே ஆசைப் பட்டு, ”மாமா நான் ஒட்டி வர்றேன்!” என்று கேட்டாலும் இவர் கொடுத்திருக்கக் கூடாது!’ என்று நினைத்;து முடிக்கும் முன்….
”அத்தே! நான் கல்லூரியில் சேர்ந்தாச்சு. வேலை முடிஞ்சுது.” என்று சுவேதா வழியில் நின்ற இவளிடம் உற்சாகமாய்ச் சேதி சொல்லி உள்ளே சென்றாள்.
”சந்தோசம்!” என்ற பூமிகா அடுத்து வந்த கணவனைக் குறுக்கே கைநீட்டி மறித்தாள்.
”ஏன்டீ ? ” சுரேஷ் கொஞ்சம் திடுக்கிட்டுத் துணுக்குற்றான்.
”எதுக்கு அவளை வண்டி ஓட்டச் சொல்லி….நீங்க பின்னால் உட்கார்ந்து வந்தீங்க ?….” சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அடிக்குரலில் தாக்கினாள்.
”அதுவா…..! போகும்போது அவள் நெஞ்சு இடிச்சு எனக்கும் அது சங்கடம், அவளுக்கும் சங்கோஜமா இருந்துது. அதான் வரும்போது அவளை ஓட்டிச் சொல்லி நான் பின்னால் உட்கார்ந்து வந்தேன். பிரச்சனையே இல்லே.” சொல்லி சுரேஷ் உள்ளே சென்றான்.
பூமிகா அடுத்து வாயைத் திறக்கவில்லை.