எதிர் பார்த்த அன்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 7,358 
 
 

ஆச்சி நீ எங்கப் போக? என பேருந்து நடத்துனர் கேட்டார்.

நான் யன் போராண்டிய பாக்கப்போறேன்!

நீ பேராண்டிய பாக்கத்தான் எங்கப்போறேன்னு கேக்கேன். என்றார் சிரித்தபடி..

பேராண்டிய பாக்க எங்கப்போவாக? மவன் வீட்டுக்குத்தான், கேக்கான் பாரு கோட்டியாட்டம்! எனத் திட்டினாள் .

எங்கே ஏறினாவோ?

எட்டாங்குளத்திலே என்றாள்.

எங்க இறங்கனும்?

மானூர்லே! எனச் சொல்லி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை சுருக்குப் பையிலியிருந்து எடுத்துக் கொடுத்தாள். காந்திமதி அம்மாள்.

அதுசரி, உள்ளே வண்டி கட்டற இடத்திற்கு போகாது, முக்குலே நிறுத்துதேன் இறங்கிகடனும்..என சொல்லி மீதி என்பது ரூபாய் கொடுத்து அவளைக் கடந்துப்போனார் நடத்துநர்.

பைபாஸ் ரோடுனு ஒன்று போட்டபிறகு அருகில் இருக்கும் ஊருக்குக் கூட ஊரைச்சுற்றிதான் நடக்க வேண்டியுள்ளது.

காந்திமதி, திருநெல்வேலி மானூர், கூலி வேலை செய்த கணவன் இறப்பிற்கு பிறகு, ஆறு வருடமாகச் பல வீட்டில் சமைத்து, பாத்திரத்தையும், தன் வயிற்றையும் கழுவிக்கொண்டு வரும் என்பது வயது முதியவள், காந்திமதி.

வரும் பணத்தை தன் சிலவுக்கு கூட வைத்துக்கொள்ளாமல் மானூரில் கடை வைத்து இருக்கும் தன் மகனுக்கு கேட்கும்போதெல்லாம் கொடுத்து வந்தாள்.

நேற்று வரை.

மேலுக்கு முடியாமல் போக கண் பார்வையிலும் குறை வர நேற்று முதல் வீட்டு வேலை செய்வதிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டாள். இனி நம் மகன் வீட்டிற்கே சென்றுவிட வேண்டியதுதான், தம் மகனும் தனது தம்பி மகளான தனது மருமகளும தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள், என்று ஊரில் எல்லோரிடத்திலும் சொல்லிக்கொண்டு இறுதிக்காலமும் நாம் பிறந்த ஊரான மானூரிலேயே கழியட்டும் எனும் நம்பிக்கையோடு பேருந்து ஏறி போய்க்கொண்டு இருக்கின்றாள்.

ஆத்தா முக்கு வந்திடுச்சு, இறங்கிக்க! என கைத்தாங்கி இறக்கிவிடபட்டாள்.

ஊரும் பைய பைய மாறித்தான் போயுள்ளது. அப்போப்ப மகன் வந்து பார்த்து விட்டு போனதால் ஊருக்கு வர வாய்ப்பே இல்லாமல் போக, வந்து ஒரு வருடத்திற்கும் மேலே இருக்கும் ,
இறங்கிய இடத்தில் ஆட்டோ ஒன்று மட்டும் நின்றுக்கொண்டு இருக்க மதிய நேர வெயில் தகித்துக்கொண்டு இருந்தது.

நெருங்கி மானூர் போவனும் என்றாள்.

நூறு ரூபா ,என்றார்.

எதுக்கு? நான் நடந்தே போவேன்,போலே! என்று கிளம்பினாள்.

ஆத்தா,இந்த வெக்கைலே பொறிஞ்சிடுவே, வாணாம், என்பது ரூபா குடு..நான் விடுதேன்,என தொழிலில் நேயம் காட்டினார்.

உனக்கு கொடுக்கத்தானா நான் காசு வச்சு இருக்கேன்?!

போலே! அந்த காசிலே என் பேராண்டிக்கு ரொட்டி வாங்கிப்போவேன், வீம்பாய் நடந்தாள்.

வழியில் கடை ஒன்று வர வே, சென்று , ரொட்டி கொடுங்க,

ஒன்று மட்டும் வைத்தார் கடைக்காரர்.

எம்புட்டு?

இருபது ரூபாய்.

என்பது ரூபாய் எடுத்துக் கொடுத்து அம்புட்டுக்கும் கொடு.

நாலு எடுத்து ஒரே பொட்டலமாய் காகிதத்தைக் கொண்டு கட்டிக் கொடுத்தார்.

வாங்கி முன் உடையில் வைத்துக் கட்டிக் கொண்டாள்.

நா வறண்டு போக நடையாய் நடந்து மகன் வீட்டை அடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது.

பக்கத்து வீட்டில் சென்று கேட்க,

தெரியாது என்ற சொன்ன ஒற்றை வார்த்தையில் புரிந்தது இரு வீட்டாருக்கும் பேச்சு வழக்கில்லை…என்பது.

மருமக நல்லவத்தான் ஆனா யார்கிட்டேயும் முகம் கொடுத்து பேசாது,சுயநலம் கொஞ்சம் கூட, அதுவும் தன் குடும்பத்தை முன்னெடுத்துச் செல்லனுங்ற அக்கறை அது.

அருகே தெருவில் ஒரு மர நிழலில் ஒதுங்கி அமர்ந்தபடி,அவர்கள் வருகைக்காக காத்து இருந்தாள். வயிறு தன் கடமைக்கான ஆகாரத்தை கேட்டு வலி தந்தபடி இருக்க, நா வறண்டு தாகத்திற்கு நீர் கேட்க,உடலை குளிர்ச்சியாக்க வேக்காடு வெளியேறி ஒட்டு மொத்த சக்தியை வெளியேற்றிக்கொண்டு இருந்தாள்,கையில் ரொட்டி. இருந்தும்.

மணி 3.30 ஆகி இருந்தது..

மருமகள் ஆட்டோவில் வந்து இறங்கி, எப்போ வந்தீக அத்தை? எனக் கேட்டபடி கேட் திறந்து உள்ளே சென்றாள்.

நான் ஒரு மணிக்கே வந்து குந்தியிருக்கேன், சுடலை சாப்பிட வரலை? எனக் கேட்டது தாய் உள்ளம்.

இல்ல,அத்தே, நாங்க வெளியே போயிருந்தோம் ,அங்கனயே சாப்பிட்டுட்டோம், என்று உடை மாற்றி அறைக்குச் சென்று குறுக்கச் சாய்ந்துக்கொண்டாள்.

கல்லூரி விட்டு பெயரன் வந்து சேர்ந்து ஆச்சியைப் பார்த்து உற்சாகமானான்.

ஆச்சி ! எப்ப வந்தீக?

மதியம் வந்தேன் ராசா!

ஏளா? என்ன படிக்கிற?நீ

காலேஜ் படிக்குதேன் ஆச்சி.

நீ இன்னிக்கு வருதுன்னு எனக்கு நேற்றே தெரியும். என்றான்.

எப்படி?

நீ கிராமத்திலே ஒரு ஆசிரியர் வீட்ல வேலை செய்தீக இல்ல, அவருதான் என்னோட கல்லூரி பேராசிரியர்.

அவகதான் சொன்னாக உன் ஆச்சிக்கு மேலுக்கு முடியலை, ஊருக்கு போவச் சொல்லிட்டேன், நீங்கதான் பத்திரமாக பார்த்துக்கனும் எனச்சொன்னார்.

அம்மாகிட்டே சொல்லுதியோ புள்ள!

சொன்னேனே,என்று கூறியவாறு அடுப்படி சென்றான். சுத்தமாக இருக்கவே ஆச்சி இன்னும் சாப்பிடலை என்பதை தெரிந்துக் கொண்டு, ரவை எடுத்து உப்புமா செய்து சுடச்சுட முன் வைத்து, ஆச்சி ,சாப்பிடனும் என்றான்.

கண்களில் நீர் ஆறாய் பெருக, வாரி அனைத்து தன்னிடம் உள்ள ரொட்டியை அவனிடம் கொடுத்து நீ சாப்பிடு ராசா,என பிரித்து ஊட்டி விட்டாள்.

பல பேருக்கு சமைத்து பசி நீக்கிய கரங்கள் இன்று பெயரனின் ரவை உப்புமாவை அமிர்தமென நினைத்து உண்டது.

அன்பு எனும் ஒற்றைச் சொல்லில்தான் எத்துனை வலிமை.

எதிர்பார்ப்பே இல்லாத அன்புக்கு ஏங்கும், தமக்காகவும் தமது வருகைக்காகவும் ஏங்கும் நெஞ்சங்கள் நிச்சயம் யாரேனும் இருப்பார்கள், என்ற நம்பிக்கையை அன்று ஆச்சிக்குள் விதைத்தான் பெயரன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *