நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை போட்டு ஆழ்ந்த நித்திரைக்குள் நுழையப்போனாள். சட்டென்று ஒரு நினைவு, முரளி வெளியூருக்கு சென்றிருந்தானே, அவ்வளவுதான், இந்த நினைவு வந்ததும், விருக்கென தூக்கம் கலைந்து எழுந்தவள் பக்கத்தில் பார்த்தாள். யாருமில்லை. அப்படியானால் தான் கையை போட்டு படுத்தது? கனவாய் இருக்கும் மனது சொன்னாலும், அவள் உள்ளுணர்வு இல்லை, முரளி தோள் மீது கை போட்டது உண்மை என்று சொல்லியது.
தூக்கம் போன இடம் தெரியவில்லை. எப்படி இது? முரளி பிசினஸ் விசயமாக பாம்பே செல்வதாக சொல்லி சென்றவன், நாளைதான் திரும்பி வருவதாக போனில் சொல்லியிருந்தான். அப்ப்டி இருக்கும்போது நாம் எப்படி அவனை பக்கத்தில்? பத்மாவுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. தான் இப்படி உட்கார்ந்திருப்பதே நிஜமா? இல்லை கனவா? என்ற நிலையிலேயே தடுமாறினாள்.
எப்படி விடிந்தது என்று தெரியவில்லை.கண்ணை விழிக்கும்போது உடல் அசதியாக இருந்தது. விழித்தவள் தன் அருகில் வைத்திருந்த செல்லில் மணி பார்த்தாள். ஏழு மணிக்கு மேல் காட்டியது. அடடா நேரமாகி விட்டது. அவசர அவசரமாய் குளியலைறைக்குள் நுழைந்தாள்.
அரக்க பரக்க பிளாட்டை விட்டு கிளம்பும்போது மணி எட்டரை ஆகியிருந்தது. ஒன்றும் சமைக்கவில்லை. அங்கு காண்டீனில் பார்த்துக்கொள்ளலாம். முடிவு செய்தவள், கீழ் தளத்தில் நிறுத்தியிருந்த காரை எடுக்க விரைந்தாள்.
அலுவலக பரபரப்பு ஓய்ந்து மணி பதினொன்றுக்கு அவள் செல்லில் அழைப்பு வர யார் என்று பார்த்தாள். முரளி என்றவுடன் மனது ஒரு பரவச நிலைக்கு செல்ல போனை எடுத்தாள். எங்க இருக்கறீங்க? இப்ப நம்ம வீட்டுலதான் இருக்கேன். அட..வந்தவுடனே எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாமில்லை. இல்லைம்மா இப்பத்தான் உள்ளே வர்றேன். ஒண்ணுமே சமைக்கலியா? பிரேக் பாஸ்ட்டுக்கு என்ன பண்ணுனே? லஞ்ச்சுக்கு வேணா வெளியே வர்றியா?நானும் வந்துடறேன், அன்னபூர்ணா போகலாம்.
கொஞ்சம் யோசித்தவள், வேறு ஏதாவது முக்கிய வேலை இருக்குமா? நினைத்தவள், ஒன்றுமில்லை என்று முடிவு செய்து விட்டு ஓகே நான் ஆபிசுக்கு வெளியே நிக்கறேன், நீங்க அங்க வந்து என்னை பிக்கப் பண்ணிக்குங்க. சரி சார்ப்பா ஒரு மணிக்கு அங்க நில்லு. சொல்லி விட்டு இருவருமே இணைப்பை துண்டித்தனர்.
சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் அவளுக்கு நேற்று இரவு நடந்த்தை மறந்திருந்தாள்.
வெளியே வரும்பொதுதான் ஞாபகம் வந்தது. முரளி நேற்று நீ என் பக்கத்துல படுத்து தூங்கினமாதிரியே இருந்துச்சு,ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்.அது எப்படி அங்க வரமுடியும்னு தலையை பிச்சுகிட்டு அப்ப்ப்பா இராத்திரி தூக்கமே போச்சு.
அவள் சொல்வதை சுவாரசியமாய் காது கொடுத்து கேட்டவன், நீ என் மேல ரொம்ப பாசம் வச்சா இப்படி எல்லாம் தோணும். ரியலி..நான் கொடுத்து வச்சவன். இவனின் வார்த்தைகளை கேட்டவள் புல்லரித்து போனாள்.மெல்ல அவன் கையை பற்றி அழுத்தினாள்.
கார் அவள் அலுவலக்த்தின் வாசலில் நின்று அவளை இறக்கி விட்டது. ஹேய் உன் ஆபிஸ் போறயா? கேட்டவளிடம் இல்லைம்மா நேரா வீட்டுக்குத்தான் போய் நல்லா தூங்கணும், சொன்னவன் பேசாம லீவு சொல்லிட்டு வந்துடறியா? நம்ம இரண்டு பேரும்..அடுத்து சொல்லப்போகுமுன், இவள் முகம் வெட்கத்தால் சிவந்தது. பாஸ் லீவுல இருக்காரு, என்னால் லீவு போட முடியாது, சொல்லிவிட்டு வெட்கத்தில் சிவந்த முகத்தோடு திரும்பினாள்..அங்கே அவளையே பார்த்தவாரு ஒருவன்..
சட்டென அவனின் பார்வையை விட்டு விலக்கியவள், முரளி வண்டியை கிளப்பிக்கொண்டு செல்வதை பார்த்தாள். அலுவலகத்துக்குள் நுழையுமுன் அவனின் பார்வையை வலுக்கட்டாயமாக தவிர்த்து விட்டு உள்ளே சென்றாள். பிடறியில் அவன் பார்வை தன்னை தொடர்வதை அவளால் உணர முடிந்தது
அவள் அறையில் நாற்காலியில் உட்கார்ந்தவள் சற்று முன் முரளியிடம் பேசி சிரித்து விட்டு வந்த்து மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியை கொடுத்தாலும், சற்று முன் வாசலில் அவனின் வெறித்த பார்வை மனதுக்குள் மெல்லிய கிலியாய் உள்ளே புகுந்த்தை அவளால் உணரமுடிந்தது.
ராஜேஷ், ஒரு காலத்தில் நல்ல நண்பனாய் இருந்தவந்தான். முரளியை இவள் காதலிப்பதாக முதன் முதலில் இவனிடம்தான் சொன்னாள். அப்பொழுது இவன் முகம் கறுத்துப்போய் சட்டென வேகமாய் எழுந்து சென்றது இன்னமும் இவள் மனதுக்குள் அப்படியே நிற்கிறது. இவர்கள் பேசி பழகி ஒரு வருடம் கழித்து கல்யாணப்பத்திரிக்கை கொடுக்கும்போது இவனிடமும் சென்று கொடுத்தாள். இவன் முகத்தில் சுரத்தே இல்லாமல், பத்மா நல்லா யோசிச்சுத்தான் இந்த கல்யாணம் பண்ணிக்கிறயா என்று கேட்டான். இவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
இங்க பாரு ராஜேஷ் நீ ஒரு காலத்துல நல்ல நண்பனா இருந்தியேன்னுதான் உனக்கு பத்திரிக்கை வச்சு கூப்பிட வந்திருக்கேன். உனக்கு இந்த கல்யாணத்துக்கு வர விருப்பமில்லையின்னா வர வேண்டாம். அதுக்காக எனக்கு அட்வைஸ் பண்ணறேனு சொல்லி என்னை சங்கடப்படுத்தாதே.வெடுக்கென சொல்லிவிட்டு வந்து விட்டாள்.
சே என்ன மனிதர்கள், ஒரு பெண் கண்ணுக்கு லட்சணமாய் இருந்து, அவள் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைத்தால், அவ்வளவுதான், சுற்றியுள்ள ஆண்களுக்கு, கண்ணை உறுத்தி விடுகிறது. ராஜேஷ் இவனை எவ்வளவு நல்லவன் என்று நினைத்திருந்தோம்.நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னது இவனுக்கு பிடிக்கவில்லை. அதுவும், முரளி, இவனின் நண்பனாய் இருந்தவன், இவன்தான் எனக்கு முரளியை அறிமுகப்படுத்தியவன். இவனே இப்பொழுது இந்த கல்யாணத்தை எதிர்க்கிறான்.
ஏன் முரளிக்கு என்ன குறை?, பார்க்க நன்றாக இருக்கிறான், கல்யாணம் ஆகி மூன்று மாதங்களாகிறது, இதுவரை ஒரு முறை கூட கோபப்பட்டு முகத்தை சுருக்கியதை பார்த்த்தே இல்லை. ஒரே ஒரு குறை மாதத்தில் பத்து நாளாவது வெளியூர் சென்று விடுகிறான். பாவம் அவன் பிசினஸ்மேன், அதனால் அதை குறை சொல்ல முடியாது. கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிக்கும்போதே ஆர்.எஸ்.புரத்தில். ஐந்து அடுக்குகள் கொண்ட தளத்தில் இரண்டாவது மாடியில் இந்த பிளாட் வாடகைக்கு ஏற்பாடு செய்து விட்டதால் திருமணம் முடிந்தவுடன் குடித்தனத்துக்கு தயாராக முடிந்தது. ஆனால் இந்த ராஜேஸ் இன்னும் என்னை விரட்டிக்கொண்டு இருக்கிறான். நினைக்க நினைக்க இவளுக்கு பொருமலாக இருந்தது.
அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டவுடன் இவள் நினைவுகள் அறுபட்டு “யெஸ்” என்றவுடன் கதவு திறந்து அலுவலக உதவியாளன் எட்டி பார்த்தான். மேடம் ராஜேஸ் உங்களை பார்க்க வந்திருக்காரு. சொன்னவுடன் மீண்டும் இவளுக்கு இரத்த கொதிப்பு விர்ரென ஏற ஆரம்பித்தது. முடியாது என்று சொல்ல நினைத்தவள் சரி வரட்டும், இதோடு பட்டென்று சொல்லி விடலாம், இனிமேல் என்னை பார்க்க வரக்கூடாது, என் விசயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்லி விட வேண்டும், முடிவு செய்துகொண்டவள் சரி வரச்சொல் தயாராகிக்கொண்டாள்.
நான் வரலாமா? கேட்டவனை வெறுப்புடன் நிமிர்ந்து பார்த்தவள் அதுதான் வந்து விட்டாயே? என்று நக்கலும் கோபமும் கலந்து கேட்டாள். என் மேல் கோபம் இன்னும் உனக்கு தீரவில்லை போலிருக்கிறது, சாவகாசமாய் சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவன் அவள் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
அவ்வளவுதான், தன்னை கேட்காமல் தன் எதிரில் அவன் உட்கார்ந்திருந்த தோரணை, இவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. இங்க பாரு ராஜேஸ் இங்க வர்றது இதுதான் கடைசி தடவையா இருக்கணும்? உன்னைய் மாதிரி ஒருத்தனை பிரண்டா பழகுனது எவ்வளவு தப்புன்னு எனக்கு புரியுது. மறுபடி மறுபடி முரளியை பத்தி எங்கிட்ட வந்து ஏதாவது சொல்லிகிட்டு இருந்தியின்னா, இனி நான் போலீசுல கம்பெளயிண்ட் பண்ண வேண்டி இருக்கும். அவர் இப்ப என்னோட ஹஸ்பெண்ட், நாங்க அமைதியா குடும்பம் நடத்திகிட்டு இருக்கோம்.அவ்வளவுதான், தட்ஸ் ஆல், முகத்தை திருப்பிக்கொண்டாள். பேசிய வேகத்தில் அவள் மனசு பட படவென அடிப்பது கேட்டது. முகம் சிவந்து அழுகை வந்து விடுமோ என்ற நிலையில் இருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்தது. ராஜேஸ் எதுவும் பேசாமல் அவள் அமைதிக்காக காத்திருந்தான். மெல்ல எழுந்தவன் ரொம்ப நன்றி பத்மா, இதுதான் உங்கிட்ட வந்து பேசறது கடைசின்னு நினைச்சுக்கோ. அதுவும் நான் எதுவும் பேசப்போறதில்லை. உன் புருசன் உண்மையிலேயே பாம்பே போயிட்டு வந்தானான்னு விசாரிச்சுக்கோ, அவ்வளவுதான்.
திரும்பியவன் மீண்டும் அவள் முகத்தை பார்த்து இங்க பாரு உன்னையே சுத்தி சுத்தி வர்றேன்னு நினைச்சுக்கறயே, அதுக்கு காரணம் நீ நினைக்கறமாதிரி இல்லை. ஏன்னா எனக்கு அழகான மனைவி குழந்தைக இருக்காங்க, அது உனக்கு தெரிஞ்சும், நீ முரளி மேல இருக்கற போதையில என்னை அந்த மாதிரி நினைச்சிருக்கே. நம்ம அப்பா, அம்மா காலத்துல இருந்து இரண்டு பேரும் ஒண்ணா வளர்ந்தவங்க, உன்னுடைய பேரண்ட்ஸ் இரண்டு பேரும் இறந்துட்டாங்கன்னாலும், உன்னை தனியா விடக்கூடாது அப்படீங்கற எண்ணத்துலதான் உன்னைய சுத்தி சுத்தி வந்தேன். இப்பவும் சொல்றேன், “முரளி கிட்டே ஜாக்கிரதையா இரு” அவ்வளவுதான், விர்ரென்று சென்று விட்டான்.
அப்படியே திக்பிரமையுடன் உட்கார்ந்திருந்தாள் பத்மா” கடைசியாக அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் மட்டும் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது, “முரளிகிட்டே ஜாக்கிரதையா இரு”.
அவள் வீட்டுக்கு வரும்போது மணி ஆறாகி இருந்தது. கதவை தட்டினாள். திறக்கவில்லை, மீண்டும் கதவை தட்டினாள். பதிலில்லை. காலிங்க் பெல்லை அழுத்தினாள், ஹூஹூம் பதில் வரவில்லை. என்னவாயிறு முரளிக்கு? தூங்குகிறானா? அப்படியிருந்தாலும் இந் நேரத்துக்கு காலிங் பெல் சத்தத்தில் எழுந்திருக்க வேண்டுமே, மனதுக்குள் இனம் புரியாத பயம் வந்தது.அவள் பயந்து நின்று கொண்டிருந்த பொழுதே கதவு கிளிக்கென திறந்தது.
ரொம்ப நேரமா கதவை தட்டிகிட்டு இருந்தியா? சாரி அப்படியே அசந்து தூங்கிட்டேன், உடல் நன்கு வேர்த்திருந்தது தெரிந்தது. தூங்கி எழுந்த மாதிரி தெரியவில்லை, முகத்தில் அப்படி ஒரு சோர்வு தெரிந்தது அவன் முகத்தில். நான் பயந்தே போயிட்டேன், பத்மா சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். அப்பொழுது அவள் முகத்தில் அறைந்தாற் போல் ஒரு வாடை..அது என்னவென்று தெரியவில்லை, அழுகல் பழமாகவும் இருக்கலாம், இல்லை ஏதோ கருகிய வாடையாக கூட இருக்கலாம், எதுவென்று சொல்ல தெரியவில்லை. சட்டென்று மூக்கை மூடிக்கொண்டவள் முரளி ஏதோ கெட்ட வாடை வருது..முகத்தை சுருக்கிக்கொண்டே சொன்னாள்.
அப்படியா எனக்கு ஒண்ணும் தெரியலையே, சரி போய் முகம் கை கால் கழுவிகிட்டு வா, அப்படியே வெளியே போகலாம், முடிஞ்சா நைட் டிபனும் முடிச்சுட்டு வந்திடலாம். வேலை செய்து வந்த களைப்பாய் இருந்தாலும் முரளியுடன் வெளியே போவது இன்பமாய் இருந்த்தால் வேகமாய் குளியலறைக்குள் நுழைந்தாள்.
இரவில் அவன் அணைப்பில் இருந்தவள் முரளி இன்னைக்கு அந்த ரமேஷ் வந்தான், தெரியும் என்று கண்னை மூடி பதிலளித்தான் முரளி.”தெரியுமா? அதெப்படி அவளின் சட்டென்ற கேள்விக்கு முரளி எல்லாம் ஒரு யூகம் தான் சிரித்தான். பத்மா காதல் மயக்கத்தில் இருந்ததால் அவன் முகத்தில் தென்பட்ட பளபளப்பை கவனிக்கவில்லை. உன்னை பத்தி கன்னா பின்னான்னு சொன்னான், நான் ஜாக்கிரதையா இருக்கணுமாம், இப்படி எல்லாம் பேசி என்னை நோகடிச்சான். அவனை இறுக்கிக்கொண்டாள்.
அவனுக்கு என் மேலே பொறாமை, அதை விட்டு தள்ளுமா, நீ நிம்மதியாய் தூங்கு. சொல்லிவிட்டு அவளை விட்டு விலகி போர்வையை எடுத்து போர்த்தி குட் நைட் என்று தலையில் முத்தமிட்டு விட்டு விலகினான். பத்து நிமிடத்துக்குள் ஆழ்ந்த தூக்கத்துக்குள் சென்று விட்டாள் பத்மா. மெல்ல அங்கிருந்து நகர்ந்து உள்ளிருந்த அறைக்குள் சென்று மத்தியில் சப்பனமிட்டு அமர்ந்து கண்களை மூடினான்.
தூக்கத்தில் இருந்த ரமேஷ்சுக்கு யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டு விழித்தவனுக்கு மெல்லிய சத்தத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டதும் மெல்ல நடந்து கதவை திறந்தான்.எதிரில் முரளி நின்று கொண்டிருந்தான். இந்த நேரத்தில் மணி பதினொன்றுக்கு மேல் இருக்கும், எதுவும் புரியாமல் விழித்தவன் என்ன முரளி இந்த நேரத்துல? என்னைய பத்தி பத்மா கிட்டே என்ன சொல்லி இருக்கே? கேள்வியில் இருந்த அதிகாரம் ரமேசை கோபம் கொள்ள வைத்தது.என்ன விளையாடறியா? இந்த நேரத்துல இதைய கேக்கறதுக்குத்தான் வந்தியா? எனக்கு நேரம் காலம் பத்தி எதுவும் கவலையில்லைங்கறது உனக்கு தெரியாதா?
இனி என் விசயத்துல நீ தலையிட்டியின்னா? கேள்வியில் இருந்த மிரட்டல் தொனி ரமேசை பயங்கொள்ள வைத்தது.ஏங்க இந் நேரத்துல வெளியில யார் கூட பேசிகிட்டு இருக்கறீங்க? ரமேசின் மனைவியின் குரல் இருவரையும் சற்று திடுக்கிட வைத்தது, சரி நான் வர்றேன் படியில் இறங்கி போனான் முரளி.
திகைத்து நின்று கொண்டிருந்த ராஜேசை உலுக்கி என்ன நான் கேள்வி கேட்டுகிட்டே இருக்கேன், யாரு அது? நான் வந்த உடனே இறங்கி போறாரு? ஒண்ணுமில்லை பிரண்டுதான், சொல்லிவிட்டு வேகமாக உள்ளே வந்த ரமேஷ் தன்னுடைய செல்லை எடுத்து பத்மா நம்பருக்கு அழுத்தினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பத்மா தலையணை அருகில் செல் போன் மென்மையாக ஒலிக்க அவள் தூக்கம் தடைபட்டு தூக்க கலக்கத்தோடே போனை எடுத்து பட்டனை அழுத்தி காதில் வைத்தாள். “முரளி பக்கத்துல இருக்கானா?” யார் அது இந்நேரத்துல அவள் யோசித்துக்கொண்டே முரளியை பக்கத்தில் தேடினாள். அவன் இல்லாத்தால் தூக்கம் தெளிவு வர அப்படியே எழுந்தவள் நடந்து உள்ளறைக்கு வர அங்கு மத்தியில் சப்பனமிட்டு அமர்ந்து கண்ணை மூடி ஆழ்ந்து இருந்தான் முரளி.
இது என்ன கோலம்? முரளி இப்படி உட்கார்ந்திருந்ததை இதுவரை பார்த்த்தே இல்லை. என்ன செய்கிறான் தியானமா? அதுவும் இந்நேரத்துக்கு எதற்கு? கேள்விகள் அவள் மனதுக்குள் ஓட அதற்குள் செல்லுக்குள் இருந்து வந்த குரல் மறுபடி சொல்றேன் “முரளிகிட்டே ஜாக்கிரதையா இரு” போன் உயிர் அணைந்தது.முதன் முதலாக முரளியை பற்றிய பயம் மனதுக்குள் நுழைந்தது.
காலை வழக்கம்போல் விடிந்தாலும், பத்மாவுக்கு மனதுக்குள் அவ்வளவு உற்சாகமில்லை. அதுவும் இரவு வந்த போன் கால், அந்த நடு இரவில் முரளி சப்பனமிட்டு கண்ணை மூடி அமர்ந்திருந்த தோற்றம், இவைகள் அவள் மனதை குழப்பின.
ஹலோ டார்லிங்க்.. நல்லா தூங்கினாயா? முரளியின் குரல் அவள் காதருகில் கேட்க அதை கேட்ட மாத்திரத்தில் அவளுக்கு ஏற்படும் உயிர்ப்பு அன்று ஏனோ ஏற்படவில்லை. தலையை மட்டும் ஆட்டினாள். கட்டிலிலேயே பத்து நிமிடம் குத்துகாலிட்டு உட்கார்ந்தவள் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தாள்.
ஏம்மா இன்னைக்கு டல்லாயிருக்கே, முரளியின் குரலில் அன்பு வழிந்தது, தலை வலிதான் முணங்கியவள், இனியும் உட்கார்ந்திருந்தாள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான் என்ற எண்ணத்தில் எழுந்து குளியலைறைக்குள் நுழைந்தாள்.
காலை பரபரவென வேலைகள் இருக்க அனைத்தையும் முடித்து நிமிர அவளுக்கு சரியாக இருந்தது. முரளி டிபன் சாப்பிட்டவுடன் கிளம்பி விட்டான். அவன் போன பின்னால் இவள் அலுவலகத்துக்கு கிளம்பி செல்வதற்கு முன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சோபாவில் உட்கார்ந்து யோசித்தாள்.
முரளியை பற்றி விசாரிக்க வேண்டும்.யாரிடம் விசாரிப்பது? ராஜேஸை கூப்பிடலாமா? அவனை இனிமேல் வரக்கூடாது என்று சொல்லி விட்டோம். இப்பொழுது கூப்பிட்டால் வருவானா? வருவான், இருபத்தி ஐந்து வருட நட்பு, அவ்வளவு சீக்கிரம் கோபம் கொள்ள வைக்காது, அப்படி இருந்தால் அந்நேரத்துக்கு வந்த போன் கால் கண்டிப்பாக அவன்தான் போன் செய்திருக்க வேண்டும். அவசர அவசரமாய் போனை எடுத்து “கால் ஹிஸ்டரியை” திறந்து நேற்று இரவு வந்திருந்த எண் யாரிடமிருந்து என்று தேடினாள். ஆனால் அழிக்கப்பட்டிருந்தது. என்னுடைய செல்லில் யார் அழித்தது. கண்டிப்பாக நான் அழிக்கவில்லை. அப்படியானால் முரளி அழித்திருப்பானா? நான் கண்கானிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறேனா? முதன் முதலாய் அவளுக்கு முரளிமேல் சந்தேகம் வர சுற்று முற்றும் பார்த்தாள்.
அலுவலகத்தில் உட்கார்ந்து ராஜேசுக்கு போன் செய்தாள். நீண்ட நேரமாக போன் அடித்துக்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை. சரி அவன் மனைவி கீதாவின் எண்ணுக்கு முயற்சிக்கலாம் என்று போனை அவளுக்கு முயற்சித்தாள். உடனே போனை எடுத்தவளுக்கு அதிர்ச்சி, பத்மா அங்க ராஜேஸ் வந்திருக்காரா? காலையில யாரோ கூப்பிட்டாங்கன்னு போன மனுசன் இதுவரைக்கும் காணலை,எங்க்கென்னவோ பயமாயிருக்கு.குரலில் தெரிந்த பய அழுகை இவளுக்கு பதட்ட்த்துக்கு உட்படுத்தியது.
பயப்படாதே கீதா, யார் கூப்பிட்டாங்கன்னு உனக்கு தெரியுமா? தெரியலையே, நேத்து இராத்திரி பன்னெண்டு மணிக்கு யார் கூடயோ பேசிகிட்டு நின்னுகிட்டு இருந்தாரு, நான் அவரை மிரட்டி போய் படுக்க சொன்னேன். அப்ப பேசிகிட்டு இருந்த ஆள் என்னை கண்ட உடனே வேகமா படியில இறங்கி போன மாதிரி இருந்துச்சு. அப்புறம் இவர் உள்ளே வந்து யாருக்கோ போன் பண்ணுனாரு.
நில் நில்..என்ன பேசினாருன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? ம்…..முரளி அங்கிருக்கானான்னு கேட்டுகிட்டு இருந்தாரு, அது ஞாபகம் இருக்கு, அதுக்கு மேல எனக்கு தூக்கம் வந்திருச்சு. இவளுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.அப்படியானால் நேற்று இரவு ராஜேஸ்தான் போன் செய்திருக்கிறான். அவனோடு பேசிக்கொண்டிருந்தவன் யார்? அதே நேரம் நம் வீட்டில் முரளி அப்ப்டி உட்கார்ந்திருந்தான். இவளுக்கு மண்டையே வெடித்து விடும்போல் இருந்தது. ஹலோ..ஹலோ..கையில் இருந்த போனில் குரல் வெளி வர “கீதா ராஜேஸ் இங்க வந்தா உடனே அனுப்பி வைக்கிறேன், இல்லையின்னா போன்லயாவது பேச சொல்றேன். போணை அணைத்தாள்.
ராஜேசை காணவில்லை ! யாரோ கூப்பிட்டார்கள் என்று போனவன் இன்னும் வர்வில்லை. நேற்று இவள் பேசியது ஞாபகத்துக்கு வந்தது. என்னிடம் வருவது இதுதான் கடைசியாக இருக்கவேண்டும் என்று சொன்னது. கடவுளே என்ன காரியம் செய்து விட்டேன், என்னை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த நண்பனை வாயில் வந்தபடி பேசி அனுப்பி விட்டேன். அப்படி இருந்தும் இரவு என்னை கூப்பிட்டிருக்கிறான். அதனாலேயே காலையில் காணாமல் போயிருக்கலாம். அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்கு காரணம் நான்தான். பாழும் காதல் என் கண்ணை மறைத்து விட்டது.கல்யாணம் செய்வதற்கு முன்னாவது ராஜேசிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். என்ன செய்வது? தலையை பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அப்பொழுது அவளின் செல் அழைப்பு வந்தது. எடுத்து பார்த்தால் முரளி
அவளுக்கு இப்பொழுது உயிர்ப்பு வரவில்லை. பயம்தான் வந்தது. ஹலோ என்றாள். என்னடா டல்லா இருக்கியா? குரல் ஒரு மாதிரி இருக்கு, குரலில் தேன். இவள் அப்படியே கரைந்தாள். தலைவலிதான் வேற ஒண்ணுமில்லை. சரி சும்மா இருந்தா வெளியே வாயேன், அப்படியே லஞ்ச் வெளியே சாப்பிட்டுக்கலாம். இவள் மறுப்பேதும் சொல்லாமல் வாசல்ல நில்லுங்க வந்திடறேன். கிளம்பினாள். நடக்கும்போதும் மனசு இடித்தது, உனக்காக ஒருவன் காணாமல் போயிருக்கிறான், நீ மனசாட்சி இல்லாமல் உன் கணவன் பின்னால் செல்கிறாய்? . அவன் காணாமல் போனதற்கு முரளி காரணமாயிருக்க மாட்டார். தன்னையே தேற்றிக்கொண்டாள்.
மறுபடி அலுவலக அறைக்கு வரும்போது மணி மூன்றுக்கு மேல் ஆகி விட்டது. முரளியுடன் சுற்றி விட்டு சாப்பிட்டு விட்டு வந்த அலுப்பு தீராமல் அப்ப்டியே நாற்காலியில் உட்கார்ந்தாள். ஆறு மணிக்கு பிசினஸ் விசயமாக முரளி டெல்லி போவதால் இரவு தனியாகத்தான் வீட்டில் இருக்க வேண்டும்.
மனசு இப்பொழுது அவளிடம் கேட்டது. ராஜேசுக்கு என்னவாயிற்று என்று கேட்டாயா? உனக்குத்தான் முரளியின் குரல் கேட்டால் போதும் சுருண்டு விடுகிறாயே? இடிக்கும் மனதை சமாதானப்படுத்த கீதாவுக்கு போன் செய்தாள்.
என்ன? குரலில் அப்படி ஒரு வெறுப்பு கீதாவிடமிருந்து. இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ராஜேஸ் வந்துட்டானா? அவர் வந்தா என்ன? செத்தா என்ன? வேகமாய் ஒலித்த குரலில் மித மிஞ்சிய வெறுப்பு காணப்பட்டது. ப்ளீஸ் எதுக்காக கோப்படறீங்க? ராஜேஸ் வந்துட்டானான்னுதான் கேட்டேன். ஏதோ பாவி அடிச்சு போட்டு போயிருக்கான், இப்ப ஆஸ்பத்திரியில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காரு. யாரோ முரளியாம், அவன்தான் போன் பண்ணி கூப்பிட்டிருக்கான், அவர் நல்லாகட்டும் அப்புறம் பாத்துக்கறேன் அந்த நாயை. படக்கென போனை துண்டித்து விட்டாள். சற்று முன் முரளியுடன் சுற்றி வந்த மகிழ்ச்சி காணாமல் போய் என்னால்தான் ராஜேசுக்கு இப்படி ஆகி விட்டது என்று துடிக்க ஆரம்பித்தது.
கண்டிப்பாய் முரளியிடம் ஏதோ தவறு இருக்கிறது. அதை சொல்ல துடிக்கும் ராஜேசை அடித்து போட்டிருக்கிறான் என்றால் அவனிடம் தப்பு இருக்கிறது, அதை கண்டு பிடிக்க வேண்டும். அவளுக்கு தெரிந்த துப்பறியும் அலுவலகத்துக்கு போன் செய்தாள். தன் பெயரை சொல்லாமல், எனக்கு ஒரு தகவல் வேண்டும். அதற்கான தொகை காரியம் முடிந்த பின் அனுப்பி வைக்கப்படும் சொல்லி விட்டு இன்று மாலை “முரளி” என்ற பெயரில் யாராவது கோயமுத்தூரிலிருந்து டெல்லிக்கு போகிறார்களா? என்று விசாரிக்க வேண்டும். அது இரயிலோ, விமானமோ, தெரியாது, எனக்கு விவரம் வேண்டும். தொடர்பு கொள்ள தன்னுடைய எண்ணை கொடுத்தாள். இரவு போன் செய்வதாக பதில் சொன்னார்கள்.
இரவு துப்பறியும் அலுவலகத்திலிருந்து போன் செய்தார்கள், மேடம் மன்னிக்கவும், நீங்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பிக்கும்போது எங்களுக்கு ஒரு மிரட்டல் கால் வந்தது. நாங்கள் இந்த மாதிரி மிரட்டல்களை நிறைய சந்தித்தவர்கள் என்பதால் கவலைப்படவில்லை. நீங்கள் சொல்லியிருந்த நபர் யாரும் டெல்லிக்கு போகவில்லை, ஆனால் அவர் பெயரில் விமான டிக்கட் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் ஆள் செல்லவில்லை.
இவள் நன்றி சொல்லிவிட்டு நாளை காலை செக் அனுப்பி விடுவதாக சொன்னாள்.
இரவு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் எப்படியோ தூங்கிப்ப்போனாள். ஆனாள் அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் பக்கத்தில் முரளி உட்கார்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக அவள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.
காலை எழுந்து வழக்கம்போல் அலுவலகத்துக்கு கிளம்பினாலும், தன்னை யாரோ கண்காணித்துக்கொண்டே இருப்பதாக அவள் மனதுக்கு பட்டது. இப்பொழுது அவள் மனதில் இனம் புரியாத பயம் ஒட்டிக்கொண்டது. இதிலிருந்து மீள்வது எப்படி?
அலுவலகத்துக்குள் வந்து உட்கார்ந்த அரை மணி நேரத்தில் அவளை காண்பதற்காக ஒருவர் வந்திருப்பதாக சொன்னார்கள். வரச்சொன்னாள். அவர் வரவில்லை.அலுவலக உதவியாளரை மீண்டும் கூப்பிட்டு என்னை பார்ப்பதற்காக வர்ச்சொன்ன ஆள் வரவில்லை, போய் வரச்சொல் என்றாள்
அம்மா அவரை நான் அப்பவே உங்க ரூமை காமிச்சு போகச்சொன்னேனே? வரலியா?
இவளுக்கு ஆச்சர்யமாகி விட்டது. இது என்ன விந்தை, யாரோ பார்க்க வந்தவர், தன்னை காணாமல் மறைவதற்கு என்ன காரணம்? வர வர என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தனக்கு புரியவில்லை.நினைத்துக்கொண்டிருக்கும்போதே உதவியாள் வந்து அவர் நம்ம காண்டீனுல உட்கார்ந்திருக்கறதை பாத்தேன், ஏன் மேடத்தை போய் பாக்கலியா அப்படீன்னதுக்கு உங்க மேடத்தை இங்க வந்து பாக்க சொல்லுன்னு சொல்லிட்டார்.
யாரிந்த ஆள்? என்னை பார்க்க வந்த ஆள், நான் போய் பார்க்க சொல்லி ஆணையிடுகிறான். எரிச்சலாக வர சட்டென எழுந்து காண்டீனை நோக்கி போனாள். மணி பதினொன்றாக இருந்ததால் அலுவலக பனியாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஹலோ குரல் கேட்டது. குரல் வந்த திசையை பார்த்தாள். நடுத்தர வயதிருக்கலாம், நன்கு படிய வாரிவிடப்பட்ட தலை. களையான முகம், உட்கார்ந்திருந்தார்.இங்க வாங்க கை காட்டினார். கோபத்துடன் அவரை நோக்கி போனாள். அவர் சட்டென எழுந்து அடுத்த டேபிளை நோக்கி சென்றார்.இவளுக்கு கடும் கோபம் வந்தது. அந்த டேபிளை நோக்கி சென்றாள். சாரி மேடம் வாங்க நடந்து கிட்டே பேசலாம், அவளை இழுக்கடித்து நடக்க ஆரம்பித்து விட்டார்.
ஹலோ மிஸ்டர் என்ன நினைச்சுகிட்டு இருக்கறீங்க. யாரு நீங்க? எதுக்கு என்னை பாக்க வந்திருக்கறீங்க, அதுவும் என்னை வரச்சொல்லி, அங்க வா இங்க வான்னு கலாட்ட பண்ணிகிட்டு இருக்கறீங்க? குரலில் காட்டம் ஒலிக்க சற்று உயர்த்தியே பேசினாள். நான்கைந்து பேர் அவள் குரலுக்கு திரும்பி பார்க்க, வந்தவர், ஐ ம் சாரி என்னை தப்பா நினைச்சுக்க்காதீங்க, என் பாதுகாப்புக்காகத்தான் இப்படி பண்ணறேன். சொல்லி விட்டு சிரித்தார்.
என்ன சொல்றீங்க? என்னைய பாக்க வந்த உங்களுக்கு ஆபத்தா? அவர் கூடவே நடந்து கொண்டு கேட்டாள். உண்மைதான் உங்களை பத்தி ராஜேஸ் எங்கிட்ட சொல்லியிருக்காரு. ராஜேஸா? எப்போ? அவளின் ஆர்வமான கேள்வி இவரை மெல்ல நிற்க வைத்து பத்மாவை கூர்ந்து பார்த்தவர்.அதனாலதான் பாவம் ஆஸ்பிடல்ல உங்க கணவரால அடிபட்டு கிடக்கவேண்டிய நிலைமை ஆயிடுச்சு.
பத்மாவிற்கு தலை சுற்றியது. சார் ஏற்கனவே ரொம்ப குழம்பி கிடக்கிறேன், முரளி நல்லவரா கெட்டவரா அப்படீன்னு, இதிலே நீங்க வேற இப்படி குழப்பறீங்களே.பரிதாபமாய் கேட்டது அவள் குரல். வாங்க இப்ப உட்கார்ந்து பேசலாம், உங்களை கண்கானிச்சுகிட்டிருக்கற உங்க கணவருக்கு இப்ப நான் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. மீண்டும் அவளை குழப்பிவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்தார். பத்மா எதிரில் உட்கார்ந்தாள்.
என் பெயர் பரசுராமன், தத்துவம்,மேலும் மனோதத்துவ டாக்டர், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ராஜேஸ் எனக்கு நல்ல நண்பர். ஏன் உங்க ஹஸ்பெண்ட் முரளி கூட நண்பர்தான், இப்ப எங்களை விட்டு விலகி போயிட்டார்.
முந்தா நாள் இராத்திரி மிஸ்டர் ராஜேஸ் என்னை போன்ல கூப்பிட்டு உங்களை பத்தி சொல்லி உங்களை காப்பாத்த சொன்னார்.காலையில பாவம் அவரை அடிச்சு போட்டுட்டாங்க.
என்னை பாதுக்காக்கறதுக்கா? அவள் புரியாமல் பார்க்க பொறுங்க, நான் சொல்லிகிட்டே வர்றேன் நீங்க கேட்டுகிட்டே வாங்க.இடையில குறுக்கு கேள்வி கேட்கவேண்டாம். முடிஞ்ச பின்னாடி என்ன சந்தேகமோ கேளுங்க.
உங்க கணவர் நல்லா படிச்சவர், வசதிகளும் இருக்கு. வெளியில பாக்கறதுக்கு நாகரிகமானவரா தெரிஞ்சாலும் அவரோட எண்ணங்கள் பழமையானவை. அதை வெளி காட்ட மாட்டாரு. இன்னொன்னு அவர் பெரிய மேதை, எப்படீன்னா “தன்னுடைய எண்ணங்களை ஓரிடத்துல குவிச்சு ஏதோ ஓரிடத்துல செலுத்தி அந்த செயலை செய்ய முடியும் அப்படீங்கற ஆராய்ச்சியில ஓரளவுக்கு வெற்றியும் அடைஞ்சிருக்காரு.
இவளுக்கு சந்தேகம் வர வாயை திறந்தவளை கை அமர்த்தி விட்டு அவர் இல்லாமலேயே அவர் அருகாமையில இருக்கற மாதிரி உணர்ந்திருக்கறீங்களா? இவள் ஆம் என்று தலையசைக்க, அதுதான் அவருடைய வெற்றி. அதாவது அவர் ஏதோ ஒரு இடத்துல இருந்துட்டு தன்னுடைய எண்ணங்களை உங்க மேலே குவிச்சு உங்க பக்கத்துல இருப்பாரு. இது உங்களுக்கு ஒரு உருவமா தெரிஞ்சாலும் அது அவருடைய எண்ணங்கள்தான்.இன்றைய கால கட்டத்துல இது பெரிய சாதனை. யாராலும் மறுக்க முடியாது. ஆனா..இழுத்தவரை ஆர்வமாய் பார்த்தாள். இதுக்கு மேலே போகனும்னு ஆசைப்பட்டு, தன்னுடைய ஆத்மாவை வெளியே வேற உடம்புல செலுத்தி பாக்கணும்னு அப்படீங்கற ஆராய்ச்சியில் இருக்கறாரு. இதனால இந்த ஆராய்ச்சிக்கு மேலும் மேலும் தன்னை ஈடுபடுத்திக்க ஆரம்பிச்சிட்டாரு.
இந்த மாதிரி தன்னை வருத்தி ஆராய்ச்சியில ஈடுபட்டுட்டு இருக்கும்போது அவர்கள் உடம்புல இருந்து ஒரு விதமான வாசனை வரும், இதை எப்பவாவது நீங்க உணர்ந்திருக்கீங்களா? இவளுக்கு அன்று நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காமல் இருந்த போது வீட்டுக்குள் இந்த வாசனையை நுகர்ந்த ஞாபகம் வந்தது. ஆனாலும் தலையாட்டலுடன் நிறுத்தி விட்டு குறுக்கே பேசாமல் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
இவர் ஒரு இடத்துல உட்கார்ந்து கிட்டு தன்னுடைய எண்ணங்கள் மூலமா ஒருத்தரை தூண்டி விட்டு அந்த காரியத்தை செய்ய முடியும். அப்படின்னு சொன்னேனில்லையா? நேத்து இராத்திரி உங்க வீட்டுல உட்கார்ந்து கிட்டு ராஜேசை மிரட்டியிருக்காரு. அப்படியும் ராஜேஸ் உங்களுக்கு போன் போட்டு பேசி அவர் என்ன பண்ணிகிட்டு இருந்தாரு அப்படீங்கறதை சொல்லிட்டாருன்னு தெரிஞ்சு அவரை வெளியே கூப்பிட்டு ஆளை வச்சு அடிச்சு போட வச்சிட்டாரு.இது மட்டுமில்லை, இப்ப நாம என்ன பண்ணிகிட்டு இருக்கோம் அப்படீங்கறதை அவரால கண்காணிச்சுகிட்டு இருக்க முடியும்.
அவள் பயத்துடன் சுற்று முற்றும் பார்க்க பயப்படாதீங்க, அதனாலதான், இந்த மாதிரி கூட்டமா ஆட்கள் இருக்கற பக்கமா உங்களை இழுத்து கிட்டு வந்துட்டேன். காரணம் அவர் உங்க மூலமாத்தான் என்ன என்ன நடக்கும்ங்கறதை பாக்க முடியும்.
என் மூலமாவா? ஆமா நல்லா யோசியுங்க, நீங்க அவர் மேலை உயிரையே வச்சிருக்கறீங்க. இந்த எண்ணங்கள் போதும், உங்க நினைவுல எப்பவும் அவர் இருக்கறதுனால அவரோட எண்ணங்களை உங்க எண்ணங்கள் மூலமா கடத்தி நீங்க என்ன செய்யறீங்க? என்ன பண்ணறீங்க அப்படீங்கறதை அவரால உணர முடியும். அதுக்காகத்தான் உங்களை அங்கேயும் இங்கேயும் அலை விட்டு அந்த எண்ணங்களை மறக்க வச்சுட்ட்துமில்லாம, இங்க கூட்டமா இருக்கறவங்களோட எண்ணங்களும் இங்க சுத்திகிட்டு இருக்கறதுனால அவரோட எண்ணங்களை உங்க மூலமா வர விடாம குழப்ப முடியும்.
இதையெல்லாம் விட்டுட்டு அவரால என் கூட குடும்பம் நடத்த வாய்ப்பு இருக்கா.?
மன்னிச்சுங்குங்க, அவரை பொறுத்தவரைக்கும் இந்த எண்ணக்குவியல் விளையாட்டுல உள்ளே போயிட்டாரு, அதை விட்டு வெளியே வந்தா அவருக்கு பாதிப்பு வரலாம். அது மட்டுமல்ல, அவருக்கு உங்களோட குடித்தனம் நடத்தி வாழனும் அப்படீங்கறது அவரோட எண்ணமில்லை. அவருடைய சில தேவைகளை நிறைவேத்திக்கறதுக்கு மட்டும்தான் உங்களை கல்யாணம் பண்ணியிருக்காரு. ராஜேஸுக்கு அவர் பழைய நண்பர்ங்கறதுனால எல்லா உண்மைகளும் அவனுக்கு தெரியும். அதனாலதான் உங்க கல்யாணத்தை அவன் விரும்பலை. அவன் உங்களை குழப்பி கல்யாணத்தை நிறுத்திடுவான்னு தெரிஞ்சுதான் முதல்ல உங்க மனசுக்குள்ள புகுந்து உங்க எண்ணங்களோட அவருடைய எண்ணங்களை கலக்க விட்டுட்டு, ராஜேஸ் மேல ஒரு வெறுப்பு வர்ற மாதிரி உங்களை மாத்திட்டாரு.
நான் அவர் கூட வாழனுன்னு ஆசைப்படறேன், ஆனா ஒரு குடும்பமா வாழனும்னு ஆசைப்படுறேன். இந்த மாதிரி நீங்க சொன்னீங்களே குவியல் அது இதுன்னு, அதெல்லாம் எனக்கு வேண்டாம், சாதாரணமா எல்லாரும் அடிச்சு பிடிச்சு கண்டை போட்டு சந்தோசமா வாழனும்னு ஆசைப்படறேன், சொல்ல சொல்ல கண்களில் நீர் வழிந்தது.
எமோசனல் ஆகாதீங்க, உங்களுக்கு அவர் கூட அப்படி வாழனும்னு ஆசைப்பட்டீங்கன்னா ஒரு சில தியாகங்களுக்கு தயாரா இருக்கணும், அப்பத்தான் சரி செய்ய முடியும். புன்னகையுடன் சொன்னார். இல்லையின்னா எத்தனை வருசம் நீங்க இரண்டு பேரும் வாழ்ந்தாலும், அவர் மாசம் பாதி நாள் தன்னுடைய பயிற்சிக்கு போய்கிட்டே இருப்பாரு. இன்னொன்னையும் கவனிச்சுக்குங்க, அந்த மாதிரி எண்ணமுள்ளவங்க தங்களுக்கு வாரிசு வந்திடக்கூடாது அப்படீங்கறதுல கவனமா இருப்பாங்க. நான் சொல்றது புரியுதா?
அவள் புரிந்து கொண்டதாய் தலையசைக்க இப்ப நான் என்ன செய்யணும்?
இன்னைக்கு இராத்திரி உங்க வீட்டுக்கு போகாதீங்க. அங்க தனிமையில இருந்தீங்கன்னா அவர் தன்னுடைய எண்ணங்களை உங்க மேல செலுத்தி உங்களை ஆதிக்கம் செய்ய ஆரம்பிச்சிடுவாரு. அதனால இனிமேல் கூட்டமா இருக்கற இடத்துலதான் நீங்க இருக்கணும். தொலை தூரத்துக்கு மாற்றல் வாங்கிக்குங்க, கூடுமான வரைக்கும் தெய்வ சிந்தனை மட்டுமே வச்சிக்குங்க. அவரை பத்தின எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்குங்க. காரணம் அவரை பத்தின நினைவுகள் குறைய குறைய அவரோட ஆதிக்கம் உங்க மேல இருந்து விலக ஆரம்பிக்கும்.
சுத்தமா என்னை மறந்திட்டா? சிரித்தார். ஒண்ணு தெரியுமா? எவ்வளவு மோசமானவானா இருந்தாலும் அன்பு அப்படீங்கறது அவங்களை அசைச்சுடும். நீங்க அவரோட நினைவுகளை மறக்க மறக்க, அவருக்கு உங்க மேல இருக்கற பிடிப்பு அதிகமாகிகிட்டே இருக்கும், காரணம் அவரோட எண்ண எல்லைகளை விட்டு நீங்க விலக விலக அவருக்கு உங்க மேல இருக்கற அன்பு பீறிட்டு வரும். அப்ப அவரோட அந்த முரட்டுத்தனமான பயிற்சி கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சு, நாளடைவில உங்க நினைவு மட்டுமே அவர் மனசுல நிக்கும். அப்ப அவர் சாதாரண மனுசனா ஆவாரு. அதுக்கப்புறம் நீங்க அவர் கூட வாழ்ந்து நீங்க எதிர் பார்க்கற குடும்ப வாழ்க்கை கிடைக்கும்.
இதுக்கு எத்தனை நாள் பிடிக்கும்?
சொல்ல முடியாது, நீங்க அவரை உங்க மனசை விட்டு விலக்கறதை பொறுத்து அவர் உங்க அன்புக்கு ஏங்குவதற்கு வாய்ப்பு இருக்கு.
இப்பவே லீவு போட்டுட்டு என் உறவு பொண்ணு ஒருத்து பெங்களூருல இருக்கறா, அவ கூட போய் தங்கிக்குறேன், அங்கேயே ஹாஸ்டல்ல கூட போய் இருந்துக்குவேன். எப்படியோ சாதாரண மனுசனா என்னை தேடி வந்தா போதும். கண்களை துடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்
எல்லாம் நல்லபடியாக நடந்து அவள் தன் கணவனுடன் வாழவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார் பரசுராமர்.