கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 14, 2023
பார்வையிட்டோர்: 3,538 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

6. வந்ததீம் அழுவாச்சி அழுவறீங்ளே! | 7. ஏய் நாஞ்சொல்றதைக் கேளு | 8. வாழ்த்தியருள அன்புடன் அழைக்கிறோம்

“சொல்லுங்க சாமிநாதன். என்ன இன்னைக்குத் திடீர்னு எட்டு மணிகூட ஆகலை கூப்பிட்டுட்டீங்க? இன்னக்கிப் பல்லடத்துல கண்டிப்பா மழை பெய்யும்” 

“இல்ல மல்லிகா, உன்னைக் கூப்பிடலாமா வேண்டாமான்னு மதியத்துல இருந்தே எனக்கு யோசனை” 

“ஏன் அப்படி?” 

“என்கூடவெல்லாம் நீ இனி பேசுவியோ மாட்டியோன்னு தான். எப்பவும் சாமின்னு தான் என்னை நீ கூப்பிடுவே. இன்னைக்கு எடுத்த உடனே சாமிநாதன்னு முழுப்பேரையும் சொல்லிக் கூப்பிடுறே” 

“சாமிநாதன் சார்னு சொல்லி இருக்கணுமா?” 

“உனக்கு வெளையாட்டா இருக்குது” 

“இன்னைக்கு நீங்க தறிக் குடோனுக்குப் போகலையா?’ “இன்னைக்குச் செவ்வாய்க்கிழமை” 

“ஓ, மறந்துட்டேன். விசயமங்கலம் பக்கமெல்லாம் செவ்வாய் தானே லீவு. அப்புறம் சந்தைச் செலவெல்லாம் பண்ணீட்டீங்ளா?” 

“நானும் எங்கப்பனும் தானே? என்னத்த பெருசா வாங்கி வீட்டுல குமிச்சு வச்சுச் சாப்பிடப் போறோம்? சத்தியமா நீ மறுபடி என்கிட்டே பேசுவேன்னு நான் நினைக்கவே இல்ல தெரியுமா?” 

“உங்ககிட்ட பேசாம விட்டுட்டா மட்டும் எனக்கு இனிமேல் நல்லதே நடந்திடுமா? இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்றுன்னு பாட்டே இருக்குதில்ல. நெஜம்மா சொல்றேன். ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்லை போங்க. வெளியில யார் பார்த்தாலும் நல்லாவே இல்லை அப்படின்னு தான் சொல்வாங்க” 

“நான் என்ன நெனைக்கறன் தெரியுமா? அதாவது நம்மளுக்கு ஒரு பொண்ணு பண்ணின துரோகத்தை இன்னொரு பொண்ணுக்கு நாம பண்ணக்கூடாது. ஏன்னா பெண் பாவம் பொல்லாதது. உன்னைப் பொண்ணு பார்க்கத்தான் வந்தேன். உன்னையப் பார்த்ததீம் எனக்குப் பிடிக்கலை. ஆனா பசங்ககிட்ட ‘பொண்ணுக்கு என்னையப் பிடிக்கலையாமா’ன்னு தான் சொன்னேன். ஆனா ‘உன்னையப் புடிக்கலீன்னு சொல்றான்னா அவ குருடியாத்தான் இருக்கோணும்’ன்னு பசங்க சொன்னாங்க” 

“எப்டி? எப்டி?” 

“என்னையப் பிடிக்கலைன்னு நீ சொன்னதா அவனுக்கிட்ட நான் சொன்னாங்காட்டி தான் அவங்க அப்படிச் சொன்னாங்க. நான் வந்து உன்னைக் கொறை சொல்லலைடா. நான் என்னைத்தான் சொன்னேன். எனக்குப் பொண்ணைப் புடிக்கலைன்னு அவனுககிட்ட நான் சொன்னன்னா, என்னைத்தான் பேசுவானுக. என்ன பேசுவாங்க தெரியுமா? ஏன்டா போன் மேல போன் போட்டு அந்தப் பொண்ணுகிட்ட பேசுறப்ப மட்டும் நல்லா இருந்துச்சா? இப்ப நேரடியாப் போய்ப் பார்க்கங்காட்டிப் பிடிக்கலைன்னு சொன்னா அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ பாதிப்பா இருக்கும், அப்படின்னு என்னைத்தான் பேசுவாங்க. பொண்ணுக்கு என்னையப் பிடிக்கலியாமான்னு சொன்னதுக்கு உன்னையப் பிடிக்கலியா? உன் கேரக்டர் பிடிக்கலையான்னு என்னைக் கேட்கறானுக இப்ப நான் என்னப்பா பண்ணட்டும்?” 

“நேத்து நீங்க நெனைச்சதைச் சொல்லுங்க” 

“நான் நெனைச்சதைத்தன் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். உங்க மச்சான்கிட்ட, உங்கம்மாகிட்ட யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். உன்கிட்டதான் சொல்றேன். சரி என்ன பண்ணலாம்னு சொல்லு” 

“என்ன பண்ணலாம்னு என்னைக் கேட்டா? நானென்ன செய்ய முடியும்?” 

“ஏய்ய்.. நான் வந்து.. இதபாரு…’ஏய்” 

“சொல்லுங்க” 

“எனக்கு வந்து உன்னொட ஏமாற்றம் என் மனசுக்கும் எடம் குடுக்கவே இல்ல. நான் தூங்கினாலும் என்னோட மனசு என்னைத் தூங்க விடமாட்டிங்குது. நான் அதுக்காக நேத்து நைட்டு தண்ணியும் போட்டுப் பார்த்துட்டேன். அதுவும் சரிப்படலை. அட, ஒரு பொண்ணை இவ்வளவு நாள் பேசீட்டு, இப்படி ஏமாத்துறது சரியான்னு.. உண்மையாலும் தூக்கமே வர்ல. நீ எதை நெனச்சாலும் சரி. நான் என்ன பண்றது? அதையச் சொல்லு. அதாவது நீ சொல்லீட்டீன்னா சரி. இங்க பாருப்பா. நான் வந்து மனசத் தேத்தீட்டேன் நீ வந்து..” 

“ஒரு நிமிசம் இருங்க. வெளிய ஏதோ சத்தம் கேட்குது. கட் பண்ணீட்டுக் கூப்பிடுறீங்ளா? சித்தப்பா கூப்பிட்டிருக்காங்க. இன்னொரு செல்லுல” 

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம்” 

“சரி சரி, ஒரு நிமிசம் இருங்க. ஹலோ, பக்கத்து வீட்டுல அவங்க பைப்புல தண்ணி வருதுன்னு தண்ணி எடுக்கப் போயிருக்காங்க சித்தப்பா. அவங்களை வீட்டுல காணம். ம்.. மச்சான் நல்லாயிருக்குது. அம்மா நல்லாயிருக்குது. அக்காவும் நல்லாயிருக்குது. தாத்தா பாட்டியும் நல்லாயிருக்காங்க சித்தப்பா. அப்புறம் பாப்பாயி என்ன பண்றா? யாருன்னா சத்தம் போடறா? உம் பொண்டாட்டி சாமி. என்ன பண்ணீட்டு இருக்கிறா? நிதர் வர்லியா இன்னும்? ம்.. ஒரு நிமிசம் இருங்க அம்மாவ பிலிஸ்தானு, இந்தாம்மா பேசு” 

“ஹலோ..” 

“சொல்லு” 

“நீங்க என்னமோ சொல்லீட்டு இருந்தீங்கொ. சொல்லுங்க. அதுக்குள்ள சித்தப்பா போன் வந்தங்காட்டி மறந்துட்டேன்.” 

“என்ன சொல்லீட்டு இருந்தேன்? இதப்பாரு..” 

“நீங்க சொன்னது எனக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சு. என் கேரக்டர் புடிச்சிருக்கு. என்னைப் புடிக்கலை. நீங்க உங்க முடிவைச் சொல்லிட்டீங்க. அப்புறம் நான் என்ன பண்ணமுடியும்? அதெல்லாம் முடியாது. எனக்கு உங்களைத்தான் புடிச்சிருக்கு. நீங்க என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். நான் வேற யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உங்களையே தான் பண்ணிக்குவேன் அப்படின்னா சொல்ல முடியும்?” 

“என் மனசுல தோணுனதைச் சொல்லீட்டேன். உன் மனசுல என்ன தோணுது?” 

“அவங்களுக்குப் புடிக்கல. நம்மளுக்கும் புடிக்கக் கூடாதுன்னு. சரியா?” 

“இந்தக் கதையெல்லாம் வேண்டாம் சாமி. உனக்கு வந்து இந்த வளையல் புடிச்சிருக்குது. இந்தப் பட்டுபுடவை புடிச்சிருக்குது எனக்கு அதே தான் வேணும்னு சொல்லி அடம்புடிக்கிற வைராக்கியம் உன்கிட்ட இருக்குதா? இல்லையா? அதைச் சொல்லு மொதல்ல ” 

“இருக்குது” 

“அப்புறமென்ன? அப்புறம் என்னை மட்டும் ஏன் உனக்குப் புடிக்கல?” 

“அப்புடி நான் வைராக்கியம் புடிச்சேன்னு வச்சுக்கோங்க, அதையப் போயி வாங்கிட்டே வந்துடுவேன். நீங்க ஒன்னும் அந்த மாதிரி இல்ல, உங்களை வந்து கூட்டீட்டு வர்றதுக்கு. இத பாருங்க, உங்க மனசுல இருக்கிறதை நீங்க சொல்லீட்டீங்க. நீங்க ஒன்னும் கடையில விற்கிற பொம்மை இல்ல. எனக்கு அதுதான்மா வேணும். எனக்கு அவங்களையே கல்யாணம் பண்ணி வைய்யின்னு போய் நான் சொல்லுல. அப்படி எல்லாம் போய் என்னால சொல்லவும் முடியாது. அவங்க வேண்டாம்னு சொல்லீட்டாங்கள்ள சாமி. அப்புறம் அவங்களையே எப்படிக் கட்டோணும்னு சொல்வே சாமிம்பாங்க. இது வந்து ஒரு நாளைக்கி ரெண்டு நாளைக்கி இருக்கிறது இல்ல. காலம் பூராவும் இருக்கிறது. சரியா? அதனால தான் வேண்டாம். உங்க மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டிங்ளா? என் மனசையும் இனி நான் ாத்திக்கோணும். மாத்திக்கறதுக்கு முயற்சி பண்ணோனும்” 

“எப்படி? அதாவது என்னால முடியல. உன்னால மட்டும் எப்டி முடியுது?” 

“உங்களால ஏன் முடியாது? உங்களால முடியும். நீங்க தான் சொல்லீட்டீங்க. என்னெப் புடிக்கலீன்னு. உன் கேரக்டர் புடிச்சிருக்கு அப்படின்னு கேரக்டரை மட்டும் கட்ட முடியுமா? என்னைத்தான கட்ட முடியும்” 

“இப்ப என்ன பண்றது? அதை சொல்லு மொதலு” 

“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் சாமி’ 

“உங்க வீட்டுல என்னைய யாருக்கும் புடிக்கல.. உனக்கு மட்டும் என்னையப் புடிச்சிருக்குது, சரியா?” 

“யார் சொன்னா? உங்களைப் பிடிக்கலைன்னு?” 

“சொன்னாங்க. உங்கக்கா, உங்க மச்சான் யாருக்குமே புடிக்கலை. மனசு விட்டுட்டாங்கன்னு நீ சொன்னியா சொல்லலையா? அதைச் சொல்லு மொத ” 

“எங்கக்காவுக்கும் எங்க மச்சானுக்கும் எப்படின்னு தெரியுமா?” “ம்.. சொல்லு” 

“என்னைக் கட்டீட்டு போனா நல்லா வச்சிருப்பீங்ளா? மாட்டீங்களா? அதான் மேட்டராமா. அப்பிடித்தான் நெனச்சாங்க அவங்களும். இதே நீங்க வந்தீங்கள்ள? வந்து.. உங்க பொண்ணைப் புடிச்சிருக்குதுங்க எனக்கு. நான் பவானி போய் எங்கம்மாகிட்டயும் பேசிட்டு கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணீட்டுப் போறேன், அப்படின்னு ஒரு பேச்சு சொல்லீருந்தீங்கன்னு வச்சுக்கங்க. அவுங்களுக்கு உங்களையும் புடிச்சிருக்கும். என்னையும் பேசுறதுக்கு விட்டிருப்பாங்க. ஓ.கே”

“இங்கிலீசெல்லாம் நல்லாத்தான் பேசுறே” 

“நான் பேசறதைக் கேட்க வேண்டா. என் வாய்ஸ் கேட்க வேண்டா நான் என்ன பேசுறன்னு கேளுங்க. சரீங்ளா.? அதான் வாய்ஸ் கேட்டு விழுந்துட்டீங்கள்ள? அப்புறமென்ன?” 

“உன் வாய்ஸசக் கேட்டுத்தான் நான் விழுந்துட்டேன். அதாவது, எப்டி புள்ளைங்க மட்டும் இப்டி? சரி இவன் இல்லீன்னா அவன். அப்படின்னு எப்படி மனசை மாத்திக்க முடியுது? ஒரு சீலைய மாத்துற மாதிரி. இந்தக் கலர் இல்லைன்னா அந்தக் கலரு அப்படின்னு எப்பட்றா மாத்தறீங்க? உங்களால மட்டும் முடியுது. நான் உன்னைக் கட்டுறேன் கட்டலை. அது வந்து ரெண்டாவது பிரச்சினை. பர்ஸ்ட்டு வந்து இந்தப் பிள்ளைங்க மட்டும் எப்பட்றா இப்படி! அதாவுது சீலைய மாத்துற மாதிரி மனசை மாத்திக்கறாங்க!” 

“எனக்கு அப்டி எல்லாம் மாத்திக்க தெரியாது” 

“நெசமா?” 

“நெசம்மா தான். நான் தான் சொல்லீர்க்கறன்ல? நான் வந்து யாருகிட்டயும் இப்படியெல்லாம் பேசுனது இல்லைன்னு. உங்களுக்கு அனுபவம் இருக்கும். எனக்கில்ல. முடியும் அப்படின்னு நெனச்சா தான எதுவும் முடியும்.” 

“இங்க பாரு. உன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது சரியா?” 

“ஐயோ? கேரக்டர் புடிச்சிருக்குதுன்னு சொல்லவே வேண்டாம். சொல்லவே வேண்டாம். உட்டுருங்க” 

“நீ வந்து என்னைய நினைக்கவே வேண்டாங்றே! அப்படித்தான?” 

“இனி நெனைக்கக்கூடாது. உட்டுருங்க. பேசீட்டு இருந்தோம், பார்த்தீங்க, புடிக்கலை. உட்டுருங்க. அதையெல்லாம் ஏன் இனி நெனைச்சுட்டு இருக்கறீங்க? நெனைச்சுட்டு இருந்த எச்சா மனசுல பாரம் தான் ஆகும்.ஓ.கே”

“பாக்குற நெலைமைல நான் குடிகாரன் ஆயிருவனாட்ட தெரியுது” 

“அதனால தான் இனிமேல் நெனைக்காதீங்க. நெனச்சா குடிகாரன் ஆயிடுவீங்க. அப்பா அம்மாக்கு அப்புறம் கெட்ட பிள்ளையாப் போயிடுவீங்க. அப்புறம் எவ வந்தும் கட்டமாட்டா” 

“என்னைப் பத்தி நீ எதுக்குக் கவலைப்படறே? நான் யாரு? நீ யாரு? சொல்லு”

“நீங்க என்னமோ பண்ணிக்கங்க. எனக்கென்ன? எனக்கு ஏதாவது இருக்கா?” 

“இப்புடிச் சொல்றே பார்த்தியா?’ 

“பார்த்தீங்ளா! அப்படிச் சொன்னாலும் இப்படிச் சொல்றேன்னு சொல்றீங்க” 

“எனக்கு இன்னொரு கோவம். என்ன கோவம் தெரியுமா? பல்லடத்துல பஸ் ஸ்டாண்டுல இருக்குறப்ப உங்க மச்சான்கிட்ட கூப்பிட்டு சொன்னேன்” 

“என்னன்னு …?” 

“நான் காலைலயே சாப்பிடலைங்க. என்னங்க பண்றது? கூட இருக்கிற பையன் பசிங்றான்னு சொன்னேன். உங்க மச்சான் தான் வீட்டுக்கு வாங்க ரெடியா இருக்குதுன்னு கூட்டிட்டு வந்தாரு” 

“அவரு என்கிட்ட சொல்லவே இல்ல தெரியுமா? நான் கூட நினைச்சேன். சாப்பிட்டாங்ளா என்னமோன்னு. சரி சேமியாவாவது வாங்கீட்டு வந்து கிளறி வைக்கலாம்னு நெனச்சேன். சரி சாப்பிடுவாங்களோ மாட்டாங்களோன்னும் நினைச்சேன். பார்க்க வந்துட்டு முதல் நாளே யாரும் கை நனைக்கிறதே இல்ல” 

“உங்கக்கா அப்படியே வந்து கேட்டுது. கேட்கலீன்னு சொல்லுல.மறுபடியும் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எனக்குப் பசி வேற உயிரே போயிடுச்சு. அப்பா சாமீஈ.. சத்தியராஜ் சொன்ன மாதிரி ரெண்டு நாளைக்கு முன்னாடி சொன்னாத்தான் நீங்க சாப்பாடு செஞ்சு வப்பீங்க.. அப்படின்ற மாதிரி பண்ணீட்டீங்க. அப்படிப் பண்ற ஆளு. நானு தாலி கட்டினதுக்குப் பின்னாடியும் என்னைய கவனிக்காமத்தான உட்டுருவீங்க. எப்படி நம்பிக்கை வரும்?” 

“ம்.. நான் கேட்டேன்ப்பா. உனக்கொன்னு தெரியுமா?” 

“என்ன?” 

“நான் காலைலருந்து எப்படி இருந்தேன் தெரியுமா?”

“மொதல்ல உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன். சரியா?” 

“எதுக்கு?” 

“உன்னைப் பார்க்காதது மொதல் தப்பு. உன்னைப் பார்த்துட்டு புடிக்கலைன்னு சொன்னது ரெண்டாவது தப்பு. நானு மூனே தப்புத்தாண்டா பண்ணியிருக்கிறேன், எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு உன் போன் நெம்பரை நான் வாங்குனது மகா பெரிய தப்பு. நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கறேன். உங்க ஊரு பொண்ணுகிட்டதான் நெம்பர் கேட்டேன். அதுவும் குடுத்துது பாரு. அதையத்தான் காதைக் காட்டி அப்பணும். என்கூட வந்தான்ல சின்னச்சாமி. அவனுக்குத்தான் அந்தப் பொண்ணு மேல ரெண்டு வருசமா லவ்வு” 

“அவனைத் தெரியும் எனக்கு” 

“அவன் தான் இதுக்கு ஐடியா குடுத்தவன். எனக்கு வர்ற கோபத்துக்கு அந்த மீனாவைத்தான் அப்போணும்” 

“இப்ப எங்க வீட்டுலயும் அதைத்தான் சொல்லீட்டு இருக்கறாங்க” 

“இங்க பாரு, நான் சாரி கேட்டுட்டேன். சரியா. உன்னைப் பார்க்காம போன்லயே பேசுனது ரெண்டாவது தப்பு. மூணாவது தப்பு வந்து உன்னைப் பார்த்ததுக்கு அப்புறம்” 

“புடிக்கலைன்னு சொன்னது” 

“என்னுடைய கேரக்டர் எப்படியோ அதே மாதிரிதான் நீயும் இருக்கிற. இல்லீன்னு நான் சொல்லுல. சரி சப்போஸ்டா, உன்னுடைய இதுக்கே வர்றேன். உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் வந்து தாலியைக் கட்டீர்றேன். நீ வந்து அப்பா இல்லாத பொண்ணு. நான் கை நீட்டி உன்னை அடிகவல்லாம் மாட்டேன். சரியா?” 

“ம். சொல்லுங்க” 

“ஆனா எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லோருக்கும் பிடிக்கோணும்ல! எங்கம்மா வந்து எங்கப்பன் கிட்ட இருந்து தனியா போயி பத்து வருசத்துக்கும் மேல ஆச்சு. அதையக் கூட்டிட்டு வந்தா சடார்னு கூட்டத்துக்கு முன்னாடி எதாச்சும் சொல்லிடுச்சுன்னா?” 

“அம்மா! ஒரு நிமிசம் இருங்க வர்றேன். கரண்ட் ஆப் ஆயிடுச்சு. தீப்பெட்டி எடுத்துட்டு வர்றேன். ம்” 

“பார்த்தியா நான் சொன்னதீம் கரண்ட்டே ஆப் ஆயிடுச்சு. அதனால் நீயே நல்லா யோசனை பண்ணிப்பாரு. உன் மச்சானை விட்டுரு, உங்கம்மாவை விட்டுரு, உங்கக்காவை விட்டுரு, சரியா .நாலு பேருத்துக்கு முன்னாடி என்னையும் வெச்சு உன்னையும் வெச்சுப் பார்த்தா எப்டி இருக்கும்?” 

“நான் ஒரு நிமிசம் பேசட்டுமா! கேட்கரீங்ளா!”

“சொல்லு” 

“அதையெல்லாம் நினைச்சு தான், அதுவுமுங்களைப் பார்த்தீம் எனக்குத் தெரிஞ்சிடுச்சு. நம்ம இருக்கிற ரேன்ஜுக்கு அவங்க இருக்கிற ரேன்ஜுக்குக் கொஞ்சம் கூட எட்டாதுன்னு நான் நெனச்சிட்டேன். ஒரு நிமிசம் இருங்க, விளக்கு பத்த வைக்கணும்.” 

“வௌக்கு பத்த வை. அதாவது நல்லா எரியட்டும்”

“பத்தவச்சிட்டேன்” 

“வச்சிட்டியா. அந்தத் தீபம் எரியற மாதிரி நம்மளோட வாழ்க்கை இருக்குமா?” 

“அதை விடுங்க. நான் அவ்வளவு இதா இருக்கேன். நீங்க அவ்ளோ நல்லா இருக்கறீங்க சரியா. உங்களுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும். நீங்க நல்லா இருப்பீங்க. உங்க வாழ்க்கை சந்தோசமா இருக்கும்? இனிமே, நெனைக்காதீங்க. பேசினதையெல்லாம் கனவா நெனச்சு மறந்துடணும்” 

“இவ்வளவுதானா?” 

‘ஆமாம். அப்புறம் வேற என்ன செய்யமுடியும்?” 

“சேரி. நான் வந்து பையன். நான் ஆம்பளை சரியா?” 

“நீங்க ஆம்பளை. நீங்க ஆயிரம் பொண்ணு கட்டலாம். ஆயிரம் கட்டினாலும் ஆம்பளை ஆம்பளைதான்” 

“சொல்றதைக் கேளு. நாட்டாமை வசனமெல்லாம் பேசாதே. எனக்கு வந்து நீ இல்லீன்னா வேற பொண்ணு, நீ வந்து பொண்ணு. உன் மனசுல எதையோ நெனச்சிருப்பே. நான் எவ்வளவோ இது பண்ணியிருக்கேன். நான் ஆசை வச்சது இதுவரை ஒன்னுமே நடந்ததில்ல. இதெப்படி இப்படிப் பேசுறே?” 

“எப்படி?” 

“இல்ல எப்படி இப்படிப் பேசுறே? விடறதுன்னா விட்று. அப்படின்னு சொல்றே பார்த்தியா? சரி விடு. நீ சொன்ன மாதிரி உங்க பேம்லிக்கும் எங்க பேம்லிக்கும் ஒத்துவராதாட்டத் தான் தெரியுது” 

“ம். உங்களைப் பார்த்ததீம் புரிஞ்சுட்டேன்” 

“நம்மளோட இதுக்கு ஒத்துவராதாட்ட தெரியுது, அப்படின்னா?” 

“ஆமாம்” 

“எப்டின்னு சொல்லு மல்லிகா. நான் சொன்னேன்ல இப்ப” “ஐயோ, உண்மையிலயே நீ நல்லாயிருக்கே” 

“ஸ்ஸோ, நல்லா இருக்கறது எல்லாருக்குமே தெரியும். நான் என்ன எலிக்காப்டர்லயா பல்லடத்துல வந்து இறங்கினேன்?” 

“சேச்சே அப்படிச் சொல்லலை நானு” 

“பின்ன எப்டி?” 

“நீங்க நல்லா இருக்கீங்க. அழகா இருக்கீங்க. அழகான பொண்ணு தான் வரணும். அப்படின்னு தான் நெனைச்சேன்” 

“சரி உன்னுடைய வாழ்க்கையை நெனச்சுப் பார்க்கலையா?” “என்னுடைய வாழ்க்கையில நடக்குறது நல்லதுக்கே நடக்குது. அதைவிட நல்லதுக்கேன்னு நினைச்சுக்குவேன்.” 

“எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. அப்படிங்றே!” 

“ஆமாம்” 

“எனக்கென்ன தெரியுமா? சரி இத்தனை நாள் பேசினோம் பொண்ணுக்கு மனசு நோகக்கூடாது. உன்னை வந்து பார்த்துட்டு மறுபடி போன் பேசி இருந்தா எந்தப் பிரச்சினையும் கிடையாது. ரெண்டு பேருமே செஞ்சது தப்பு. நான் உன்னையும் கொறை சொல்லுல. என்னையும் கொறை சொல்லுல. இனி என்ன பண்ணலாம் அதையச் சொல்லு” 

“அட, இனி என்ன பண்ணமுடியும்? இனி ஒன்னும் பண்ண முடியாது” 

“ஏன் காலம் கடந்து போச்சா?” 

“அப்படிச் சொல்லலை. வேண்டாம்” 

“அப்படின்னா நைட்டு ஒரு மணி முடிய பேசினது எல்லாம் வேஸ்ட்டுங்றே?’ 

“என்ன பண்றது? என் தலையில் அபடி எழுதியிருக்கு. ஒருத்தர் கிட்ட பேசோணும். அவரு வந்து பார்க்கோணும். புடிக்கலின்னு சொல்லோணும்னு” 

“டேய், இங்க பாரு. நான் கூடவே கூட்டிட்டு வந்தன்ல. சின்னச்சாமி அவனோட்ட காதல் கூடப் பரவாயில்லயாட்ட தெரியுது.” 

“மீனாவோடதா?”

“ம். அவிங்களுது கூடப் பரவாயில்லயாட்ட தெரியுது. மீனகூடச் சின்னச்சாமி கிட்ட நூறு ரூபா குடுத்துச்சு. நீ என்ன குடுத்தே எனக்கு?” 

“நேத்து நீங்க போனாப்ல புடிச்சு எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் தெரியுமா?” 

“என்ன கஷ்டப்படறே?’ 

“ஒன்னுமில்ல” 

“இதென்ன பேசப் பேசக் கட் பண்ணிட்டே?” 

“நான் கட் பண்ணலீங்க. உட்கார்ந்து பேசிட்டு இருந்தனா. அந்த எடத்துல திடீர்னு டவர் போயிட்டுச்சுங்க. அப்புறம் இப்ப வந்து வேற எடத்துல உட்கார்ந்துட்டு இருக்கறேனுங்க. ஏனோ காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்கு” 

“போயிப்பாரு சித்தெ. எல்லாம் பன்றிக் காய்ச்சல்னும் அது இதுன்னும் சொல்றாங்க” 

“அப்படி எல்லாம் வரலீங்க” 

“அப்படி எல்லாம் இல்லையா? அப்புறம் உங்க மச்சான் ஏதாவது கேட்டாப்லையா? உங்கக்கா?” 

“இல்ல” 

“பொய் எல்லாம் பேசாதே. காலைல தான சொன்னே?” 

“என்னன்னு” 

“நீ எதுக்குக் கேட்டுட்டு இருக்கே? அவியளுக்கே விருப்பமில்லைனு தான போயிட்டாங்கன்னு சொன்னாங்கன்னு சொன்னே? அப்புறம் எதும்மே இல்லைங்றே?” 

“ஆமா. அப்படின்னு சொன்னாங்க. சரின்னு நானும் யார் கிட்டயும் பேசலை, விட்டுருன்னு அக்காட்ட சொல்லிட்டு வந்துட்டேன்” 

“அப்புறம் மறுபடி மறுபடி பேசுறே?” 

“அது தான் தப்பு செஞ்சுட்டு இருக்கிறேன். சரீங்ளா? பேசலைன்னு சொல்லீட்டன்ல. விட்டுடறேன்னு சொல்லீட்டு வந்துட்டேன்” 

“ம்” 

“இனிக் கேட்கமாட்டாங்க சரியா?” 

“நீ இப்ப பேசறது தான் லாஸ்ட்டுன்னு நெனைக்கிறேன்” “அப்டி நான் சொல்லவே இல்லையே!”

“நான் இப்ப பேசினங்காட்டி நீ பேசலியா?’ 

“பேசினா பேசுவேன். பேசலீன்னா பேசலை” 

“எதுக்குமே ரெடிதான், ம்” 

“சரி சொல்லுங்க. நான் நெனச்சேன்னா எதும்மே முடியும்” “முடியாது. பந்தயம் கட்டிக்கலாமா? அப்புறமென்ன பார்க்கலாமா அப்படிங்றே?” 

“நீங்க தான சொல்றீங்க முடியாது அப்படின்னு.அதனால் தான் சொன்னேன்” 

“உன்னால முடியாது சாமி” 

“முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சு. ஆனா அது முடியோணும்னு நெனச்சமுன்னா. அதெல்லாம் வேற. வேண்டாம்” 

“அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நல்லவேளை உன் நேரம் நல்லதாட்ட தெரியுது. இன்னைக்கி என்னோட தறியையும் சேர்த்தி சின்னச்சாமியே ஓட்டிக்கறேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். 

நாளைக்கி பகல்ல நான் போய் அவனை மாத்தி விடணும். நாளைக்கி வேணா பத்து மணிக்கு மேலதான் பேசுவேன். உங்கொம்மா என்ன சொல்லுச்சு?’ 

“எங்கம்மா, அது எங்க மச்சான், அக்கா முடிவுப்படிதான். நீங்க என்ன சொல்றீங்கன்னு தான் கேட்டுச்சு. நானே அவங்க சொல்றபடி தான் கேட்பேன். ஏன்னா சின்ன வயசுல இருந்தே அம்மாவும் அப்பாவும் சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ அக்காவும் மச்சானும் சொல்றாங்க. அவங்க பேச்சைத் தான் நான் கேட்பேன். அவங்க வேற எடத்துல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் குடுக்கறோம்னு சொன்னா நானும் சரீன்னு தான் சொல்லுவேன். சரீன்னு தான் சொல்லோணும் நாளைக்கு ஒரு பிரச்சினைன்னு இருந்துதுன்னு வெச்சுக்கோங்க. அவங்க தான் என்னை வந்து பார்க்கோணும்” 

“யாரு?” 

“எங்கக்காவும் மச்சானும் எங்கம்மாவும். எங்கம்மாகிட்ட ரெண்டு வார்த்தை பேசறீங்களா?” 

“ஏன் என்கிட்ட பேசப் புடிக்கலையா?” 

“இல்ல அப்பலையா இருந்து யாருகிட்ட சாமி பேசிட்டு இருக்கேன்னு கேட்டுட்டு இருந்துச்சு. நீங்க தான்ன்னு சொன்னதும் ஒன்னும் சொல்லலை. பேசுங்க” 

“அலோவ். த்தாரு சாமி பேசுறது?’ 

“நான் தானுங்க சாமிநாதன். வீட்டுல இருந்தனுங்ளா உங்க புள்ளையைக் கூப்பிட்டுப் பேசிட்டு இருந்தனுங்க” 

“இன்னிக்கி வேலைக்கிப் போவலீங்ளா?”

“எங்கீங்க வேலைக்கிப் போற மாதிரி இருக்குது? போயி போயித்தான் என்னத்த கண்டோம்?” 

“வேற பக்கம் லைன் போட்டுட்டீங்ளா? நான் போன் பேசுறது எனக்கே திருப்பிக் கேட்குது” 

“லைன் எல்லாம் போட்டு உடலீங்க. அவுட் ஸ்பீக்கர்ல வெச்சிருக்கறன். நீங்க பேசறது ஒன்னும் புரிய மாட்டீங்குது” 

“புரியமாட்டீங்குதா? சேரிசேரீங்..காதெல்லாம் செவுடா?”

“அதேங்கேக்கறீங்க” 

“ஊட்டுக்கு வந்துட்டு எல்லாம் சாப்புட்டுப் போட்டுப் போயி காது கேக்கமாட்டீங்குதுங்ளா?”

“அக்காங். நிங்க நெறையா விருந்து போட்டீங்ளா. காது வந்து கேட்காம போய்டுச்சு போங்க” 

“ஐயோ” 

“நீங்க எல்லாம் கெடா விருந்து போட்டீங்கள்ள. சாப்பிட்டு எங்களுக்குக் காது அடைச்சிடுச்சு” 

“தெரியல. இல்லீன்னா ஒரு மாட்டையே அப்பிடியே புடிச்சுப் போட்டு இருந்திருக்கலாம்” 

“ஹப்பா. எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருமாட்ட இருக்குது!” 

“இருக்கும். அப்பலையா என்னையப் பேசுனீங்ளா?”

“இல்லீங்ளே” 

“சேரிச் சேரி. அப்பலையா என்னைத் திட்டியிருப்பீங்ளாட்ட இருந்துச்சு. விக்கலு வந்துச்சு. அதான் கேட்டேன்” 

“நெனச்சிருப்பேன்.” 

“ஆமாமா, நீங்க தான் நெனச்சிருப்பீங்க”

“சரி என்ன சொன்னாங்க? ஒன்னும் சொல்லுலியா?”

“ஒன்னுமே சொல்லலீங்ளே நீங்க பேசவே இல்லீங்ளா?”

“ஏஞ்சொல்றீங்க எல்லாம். போன் நெம்பரை உங்க ஊர் புள்ளைகிட்ட வாங்கி ஸ்ஸோ..” 

“என்னாச்சு?” 

“எங்க, உங்க புள்ளை அதெல்லாம் வேண்டாம்னுடுச்சு” “வேண்டாம்னு சொல்லிட்டாளா?” 

“ம். நீங்கதான் அத்தனைக்கும் காரணம். உங்களைப் புடிச்சுச் சாத்தினா சரியாப் போவும்” 

“நாங்கெல்லாம் என்ன பண்ணுனம்?” 

“நீங்க தான் போன் நெம்பரு குடுக்கச் சொன்னது உங்க ஊரு புள்ளைகிட்ட. நல்ல புள்ளையோட போன் நெம்பரு குடுக்க மாட்டீங்ளா?” 

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே எனக்குப் புரியல”

“ஆமா. பேசுனா உங்களுக்கு என்ன சொல்றாங்கன்னே புரியாது” 

”என்ன பேச்சே வரமாட்டீங்குதே!” 

“சொல்லுங்” 

“பேசவே மாட்டீங்றீங்ளே” 

“நீங்க சொல்லுங்க. நான் தான் கேட்டுட்டே இருக்கிறன்ல” 

“சேரீஈ என்ன சொன்னாங்க” 

“நானு ஒன்னும் கேட்கவே இல்லீங்க. இன்னிக்கு வேலைக்கிப் போயிட்டனுங்க. நீங்க சொல்லுங்க” 

“என்ன சொல்றது? அது வேற இனிமே போனு பண்டாதீங்க அப்படின்னு சொல்லிடுச்சு. எனக்கு வேற பிடிக்கலைன்னு சொல்லீட்டேன்” 

“உங்களுக்குப் புடிக்கலீன்னு சொல்லீட்டீங்ளா?” 

“ஆமாம். அதாகத்தான் சொல்லுச்சு. இனிமேல் போன் பண்ணாதீங்க. நீங்க ரெண்டு நாள் கழிச்சுப் போன் பண்றேன்னு சொல்லிட்டு போனீங்க. உங்களுக்குப் புடிக்கலீன்னு அப்பவே எங்கக்காவுக்கும் மச்சானுக்கும் தெரிஞ்சிடுச்சு. அதனால பேர் ராசி, சாதகம் எல்லாம் பார்க்கவே வேண்டாம் அப்பிடின்னு சொல்லிடுச்சாமா” 

“சேரீங்க. இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. புடிக்கலைன்னு நீங்களே சொல்லீட்டீங்கள்ல. அப்புறம் அவ அப்பிடித்தான் சொல்லுவா. அவகிட்டயே பேசிக்கங்க. அவகிட்டயே குடுக்கறேன்” 

“எங்கம்மா என்ன சொல்லுது?” 

“உங்கொம்மாவுக்கு என்கிட்ட பேசவே புடிக்கலியாட்ட 

இருக்குது. சரி நீ உங்கக்கா, மச்சான் சொல்றதைத்தான் கேட்பீன்னு சொல்லிட்டே. நான் வந்த அன்னைக்கே அவங்க என்ன கேரக்டர்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு. உன்னுடைய விருப்பம் என்னவோ அதன்படிதான் நடந்துக்கோணுமின்னு அவங்க ரெண்டுப் பேருமே நினைக்கறாங்க. சரியா?” 

“என் அக்காவும் மச்சானும் என்னோட முடிவைத்தான் கேட்டு நடந்துக்குவாங்கன்னு சொல்றீங்க. அவுங்க சொல்றதையும் நான் கேட்டுக்குவேன்” 

“அப்போ தேவையில்லாத செலவு பண்ணீட்டு நான் நேத்து அங்க வந்துட்டேன். அப்படித்தான?” 

“ஐயோ, உங்களுக்கு எப்படிப் புரியவைக்கிறதுன்னே தெரியலைங்க”

“என்னன்னு தான் என்னைய நினைக்கிறே? அதையச் சொல்லு. ம்..ஹலோ.. நல்ல பையன்னு நினைக்கிறயா? கெட்ட பையன்னு நினைக்கிறயா?” 

“கம்முன்னு உண்டம்மா. மொனகுக்குண்ட கூடு தின்னு”

“ஏய் ஒன்னா என்கிட்ட பேசு..”

“இருங்க. அதுபாட்டுக்குப் பேசிட்டே இருக்குது. நானு எதையுமே நெனைக்கலீங்க. இனி.சரியா” 

“உங்கொம்ம்மா என்ன சொல்லுது?” 

“எங்கம்மாதான் அக்காவும் மச்சானும் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ சாமின்னு சொல்லிடுச்சே! அப்புறம் உங்க இஷ்டம் சொல்லுங்க.அப்புறம் நீங்க என்ன சொன்னீங்க.. ம். ரெண்டு நாள் கழிச்சு முடிவு சொல்றங்கன்னு, அப்பிடியே சொன்னாலும் இனி மீனா கல்யாணமும் வருது. அது முடிஞ்சு அப்புறம் தான இதையப் பத்தி யோசிப்பாங்க. இதெல்லாம் எப்ப நடக்குறது?” 

“ஏன் அதுவரைக்கும் உன்னால காத்துட்டு இருக்க முடியாதா?” “ம், முடியும். ஆனா உங்க ஊர்ல இருந்து இன்னம் சாப்பிடக் கூட யாரும் மீனா வீட்டுக்கு வரலை. நேரம் சரியில்லையின்னு தள்ளிப் போயிட்டே இருக்குது. அப்புறம் இங்கிருந்து அங்க இவங்க சாப்பிட வரணும். இதெல்லாம் உடனே நடக்கிற மாதிரி தெரியலையே” 

“அதுக்காக நான் என்ன பண்ணமுடியும்?” 

“ம். அதுக்காக நானும் என்ன பண்ணமுடியும்?” 

“அது முடிய உன்னால காத்திருக்க முடியுமா? முடியாதா? அதையச் சொல்லு” 

“முடியும்” 

“அப்புறமென்ன காத்திரு. சரியா?” 

“ம்” 

“சத்தத்தையே காணம்! அதுவரைக்கும் காத்திருக்க முடிஞ்சா காத்திரு. அப்படி முடியலீன்னா நீ என்ன பண்ணினாலும் எனக்குச் சந்தோசம் தான்” 

“என்ன பண்ணிட்டாலும் அதனால உங்களுக்கு ஒரு வருத்தமும் இல்ல” 

“அதனால எனக்கு எந்த வருத்தமும் கெடையாது. நீ நீ எங்கிருந்தாலும் நல்லா இருப்பே. ஏன்னா நீ என்னை லவ் பண்ணினே. என்னைய லவ் பண்ணதால நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கக்கூடாதுன்னு எல்லாம் வாழ்த்தமாட்டேன். நல்லா இருந்தா சரி. நான் இதுக்கும் முன்ன லவ் பண்ணின புள்ளைகிட்டயும் இதையே தான் சொன்னேன். நீ அது முடிய காத்திருக்றாப்ல இருந்தா காத்திரு. இல்ல கண்ட்ரோல் பண்ணமுடியாது வேற பையனை மூச்சுக்கறேன் அப்படின்னா மூச்சுக்கோ. நான் ஏதோ எனக்குத் தகுந்த எள்ளுருண்டை. அது மாதிரி பார்த்துக்கறேன். இதான் என்னுடைய முடிவு. உங்கொம்மாகிட்டயும் இதையே சொல்லீரு. உங்க மச்சான்கிட்டயும் இதையே சொல்லீரு. அதுவரை காத்திருக்க முடிஞ்சா காத்திரு. இல்லீன்னா கல்யாணம் பண்ணிக்கோ. உன்கிட்ட சொல்ற முடிவும் இதே தான். அவியகிட்ட சொல்ற முடிவும் இதே தான். ஓ.கே. தெள்ளத் தெளிவா சொல்லீட்டேன். அது முடிய காத்திருந்தா.. ஏதாவது பண்ணலாம் சரியா?” 

“ஏதாவுதுன்னா?” 

“ஏதாவுதுன்னா நான் கட்டிக்கறது கட்டிக்காதது. அதுக்கு அப்புறம் இருக்குது” 

“அதுவரைக்கும் நான் இப்பிடியே இருந்துட்டு.. அப்புறம் உன்னால் முடியும்னா தான் கல்யாணம் பண்ணிக்கறதா?” 

“சரி. இப்ப நான் என்ன சொல்லட்டும்? முடியும்னு சொல்லட்டா? வேண்டாம்னு சொல்லட்டா? சொல்லு” 

“உங்களால முடியும்னா முடியும் சொல்லுங்க. இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க” 

“இப்பவே உனக்கு முடிவு வேணும். அப்பிடித்தான?”

“அப்பிடி நான் கேட்கலையே” 

“அப்புறமென்ன? பஸ்சு அஞ்சு நிமிசத்துல வந்துடும். உடனே சொல்லுங்க அப்பிடிங்ற மாதிரி சொல்ற நீயி. நானும் யோசனை பண்ணனும்ல. நாளைக்கி எங்க கும்பல் எல்லாம் உங்க ஊர்ல வந்து எறங்கி, உங்க வீட்டைப் பார்த்து, உன்னைப் பார்த்து, என்னை வந்து நாலு பேர் கேட்டாங்கன்னா நான் என்ன பதில் சொல்லட்டும்? சொல்லு பார்க்கலாம். உனக்குப் புள்ளையே இல்லையாடா இத்தன தூரம் வந்து இப்பிடி இருக்கிற புள்ளையக் கட்டோணுமா? அப்படிக் கேட்டா?” 

“பார்த்தீங்களா” 

“அதாவது என்னோட மனசுல தோணுறதை நான் சொல்றேன். ஏன்னா என்னோட பசங்க அப்படி” 

“ம், அங்கிருக்கிற புள்ளைங்க அப்படி” 

“புள்ளை எல்லாம் இங்க அதிகமா கெடையாது. புள்ளைங்க அதிகமா இருந்தா நான் ஏன் அவ்ளோ தூரம் உன்னையத் தேடீட்டு அங்கே வர்றேன்.. அத்தனை தூரம்” 

“ஓஹோ. சேரிச்சேரி. ம்” 

“அங்க புள்ளைங்க இல்லாததனாலதான் சும்மா வந்து வெளையாட்டுப் பொம்மை மாதிரி நெனச்சிட்டே போன் பண்ணி போன் பண்ணி பேசிட்டு இருக்குறது. கட்டிக்கங்க அப்படின்னு சொன்னா வேண்டாம்னு சொல்லறது. நான் என்ன கடையில விக்கிற பொம்மையா? அப்படின்னு கேட்குறே! அப்படித்தான?” 

“அப்படி நான் இன்னும் நெனைக்கல” 

“நீ இப்படி அமைதியா இருக்கிற முடியும் எனக்கு அனத்தம் தான். எங்க ஊருக்கு ஒரு நாளைக்கு மீனாவோட வா. மீனா பிரண்டுங்ற மாதிரி வா. ஒரு சின்னக் கொழந்தையக் கேளு. இது மாதிரி சாமிநாதன்ங்ற பையன் எப்படின்னு கேளு. அந்தக் கொழந்தை தப்பா சொல்லிடுச்சுன்னா நீ என்னையக் கட்டிக்காதே! சரியா? உன்னுடைய முடிவுதான், மேல உன்கிட்ட ஏதும் பேசத் தயாரில்ல” 

“இனி தான் நான் பேசப் போறனுங்க” 

“சொல்லு” 

“ஸ்… அப்பா முருகா கடவுளே!” 

“என்ன? சும்மா ஆ ஊன்னா கடவுளக் கூப்டுட்டு இருக்கே? அவரு எத்தன பேருக்குத்தான் வருவாரு?” 

“இல்ல, கால்ல கல்லு குத்திடுச்சு. உலகத்துல யாருக்கு வேணாலும் வருவாரு. இப்ப மீனா கல்யாணம் பண்ணீட்டு அங்க வந்ததுக்கு அப்புறமா வந்து பார்ப்பேன், பேசுவேன்னு சொன்னீங்கள்ல? நான் இருக்கிறதைப் பார்த்துட்டு உங்கொம்மாவுக்கு எப்பிடிப் பிடிக்கும்? அப்பிடியே உங்கொம்மா வந்து பார்த்து வேண்டாம்ப்பா அப்படின்னு சொல்லிடுச்சுன்னு வச்சுக்கோங்க” 

“எங்கம்மா அவ்ளோ தூரமெல்லாம் வந்து உன்னையப் பார்க்காது” 

“ஓ. மேரஜுக்குக் கூட வரமாட்டாங்ளா?” 

“யாரு மேரேஜுக்குக் கூட வரமாட்டாங்ளா?”

“உங்களுக்குத்தான். எனக்கு அந்தப் புள்ளையத்தான் பிடிச்சிருக்கு அதத்தான் கட்டிக்குவேன். நீ வந்து பாரும்மா அப்படின்னு சொன்னா அவங்க வரமாட்டாங்க” 

“என்னையத் தண்ணி தெளிச்சு விட்டுருவாங்க. நீ வீட்டுக்கு வராதே, அங்கயே இருந்துக்கோன்னு. நான் உன்னையப் பாக்கட்டா? இல்ல எங்கம்மா அப்பாவைப் பார்க்கட்டா?” 

“ம்.. நான் உங்களையப் பார்க்கட்டா இல்ல எங்கம்மா, மச்சான் அக்காவப் பார்க்கட்டா? அதனாலதான் விட்டுருங்கன்ன்னு சொன்னது. அப்புறமும் நீங்க இப்படிப் பேசறீங்க? எப்படின்னு எனக்கே ஒன்னும் புரியமாட்டீங்குது” 

“ம்” 

“அப்பிடியே உங்களுக்கு என்னையப் புடிச்சிருக்குதுன்னு வச்சுக்கோங்களேன். அத நீங்க போய் அம்மாகிட்ட சொல்றீங்கன்னு வச்சுக்கோங்களேன். அம்மா வந்து கண்டிப்பா என்னைப் புடிக்கலைன்னு தான் சொல்லும். அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்க?” 

“நான் என்ன பண்றது? அப்பா அம்மா சொல்றதக் கேட்டு நடக்க வேண்டியது தான்” 

“அதே மாதிரிதான் நானும். அக்காவும் மச்சானும் சொல்றதைக் கேட்டுத்தான் நடந்துக்குவேன். தப்பா? ரைட்டா? இதையச் சொல்லுங்க” 

“நான் சொன்னா நீ கேப்பியா?” 

“நான் சொன்னத நீங்க கேட்கலைல்ல? அதைத்தான் நான் சொன்னேன்” 

“நான் சொன்னா நீ கேப்பியா? மொதல்ல அதையச் சொல்லு”

“சரி கேட்கறேன். சொல்லுங்க” 

“சரி, கேட்காதேன்னு சொன்னா கேப்பியா?” 

“உனக்குப் பைத்தியமாடா புடிச்சிருக்குது கேனக்கிறுக்கா? போனு பேச ஆரம்பிச்சாப்டி இருந்து ஒளறிட்டே கெடக்கறான். எந்த நேரத்துலடா உன்னைய உங்காத்தா பெத்தா?’ 

“ஏய்.. ஏய்.. நாஞ்சொல்றதைக் கேளு’ “என்னத்த சொல்லிக் கொட்டப் போறேடா நீ? உன்கூடப் பேசிட்டு இருந்தா பேசுறவங்களையும் பைத்தியம் பண்டி உட்டுருவீடா. நல்ல வேளைடா சாமி. இவுனுக்கு வேற நான் காத்துட்டு வருவான் வருவான்னு உட்கார்ந்துட்டு இருக்கோணுமாமா. ஆத்தா சொன்னாத்தான் நொட்டுவானாமா. அப்புறம் என்ன மயிருக்குடா என்கூட இப்பவும் உனக்கு பேச்சு வேண்டிக்கிடக்குது? பொட்டையண்டா நீயி. உனக்குக் கல்யாணம் நடக்கோணும்னா பைத்தியக்காரியக் கட்டிக்கடா. ஐயோ சாமி, உலகத்துல உன்னையாட்ட கிறுக்குப் புடிச்சவனைப் பார்த்ததேயில்லைடா சாமி. வெய்யிடா போனை. ஆளைப் பாரு, அவனையும் பாரு சோளக்காட்டுல..”

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *