எட்டாம் அறிவு !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 5,662 
 

காலையிலேயே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். பிரச்சனை.

பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் தம்பி ஒரு வருட காலமாக குடி, கூத்தியாள் என்று ஒரே களேபரம். அதனால் மனைவி மக்களை அடித்து அட்டூழியம். அடித்தால் அவன் மனைவி மக்களுடன் என் வீட்டில் அடைக்கலம். நாசமாகப் போகிற டாஸ்மார்க்,சாராயக்கடைகள். நேற்றும் அவன் தண்ணி போட்டுக் கொண்டு வந்து அடி பின்னி இருக்கிறான். அருணா பெற்ற பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு படியேறிவிட்டாள்.

”இனி அந்த மனுசனோட மறந்தும் வாழ மாட்டேன் !” சபதம்.

பெண்ணுக்குப் பெண் இரக்கம். அருணாவிற்கு அம்மா இல்லாத தாக்கம். இதனால் என் மனைவிக்கு தன் ஓர்ப்படியாள் மேல் அளவு கடந்த அன்பு, பாசம்.

”அருணா சொல்;றது நியாயம்ங்க. எத்தனைக் காலத்துக்குத்தான் அந்த முரட்டு மிருகத்துக்கிட்ட அடி வாங்கி சாகிறது. குடித்தனம் வேணாம்.” சொன்னாள்.

எனக்கும் கோபம். அடுத்த நிமிடம் கிராமத்திற்குப் பறந்தேன்.

தம்பி தண்ணியில்தான் இருந்தான்.

என் கோபத்ததைப் பார்த்து அண்ணன் தம்பிக்குள் அடிதடி ஆரம்பித்து விடுமோ என்கிற பதைபதைப்பில்…பெற்ற உள்ளம்..

”அப்பா! அவன் போதையில இருக்கான்டா. தெரியாம நடந்துக்கிட்டான்டா. பொறுத்துப்போடா.” அம்மா வாசலிலேயே வழி மறைத்துக் கெஞ்சினாள்.

ஆனாலும் எனக்கு ஆத்திரம் தணியவில்லை.

”…இப்படியாடா பொழுதுக்கும் பொண்டாட்டியை அடிக்கிறது ?” கத்தினேன்.

”தத….தப்புண்ணே ! மன்னிச்சுக்கோ. இந்தப் பாழாப்போன குடியை இனி கையால தொடமாட்டேன். சத்தியம்.” சொன்னான்.

எனக்குத் தெரிந்து இவனிடம் எத்தனையோ சத்தியங்களில் இதுவும் ஒன்று. தெரிந்தாலும் மனிதன் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது புரியாத புதிர். விட்டுக்கொடுத்து செல்வதுதான் புத்திசாலித்தனம். நினைத்து….

”சரி. வீட்டுக்கு வந்து அருணாவைச் சமாதானம் செய்து அழைத்து வா. நானே அனுப்புறது சரி இல்லே.” சொல்லி திரும்பினேன்.

காலையில் அவன் வரவில்லை. அம்மா !

”அவன் ஏன் வரலை ? ” கேட்டேன்.

”நான் நேரடியாய்ப் போனால்… ஆத்திரம், அருணா வரமாட்டாள். நீ போய் அழைத்து வாம்மா சொன்னான் வந்தேன்.” சொன்னாள்.

”சரி.” நான் அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டேன்.

அம்மா அழைத்துப் போயிருப்பாளா ?! எனக்கு அலுவலகத்தில் சிந்தனை.

போயிருக்க வாய்ப்பில்லை. காரணம்…. என் மனைவி அருணாவிற்கு ஆதரவு. அனுப்பி இருக்க மாட்டாள்.! மனசு சொல்லியது.

மாலை. வீட்டுப் படியேறினேன்.

கூடத்தில் அம்மா, அருணா, பிள்ளைகளில்லாமல் வெறிச்.

”விசாலம் !” அழைத்து அமர்ந்தேன்.

”இதோ வந்துட்டேன் !” அடுப்படியிலிருந்து வந்தாள்.

”அருணா போயாச்சா ?”

”அத்தை அப்பவே அழைச்சிப் போய்ட்டாங்க.”

”அப்படியா !?”

”ஆமாம். அவளுக்கு அடியின் வலி, ஆத்திரம் இங்கே அடைக்கலத்துல அடங்கிப் போச்சு. அத்தை அழைச்சதும்…. நான் நாலு நாள் இங்கே தங்கினேன்னா….குடும்பம் குட்டிச் சுவருக்கா. பொம்பளை இல்லாத வீடு. இருக்கிறதை எடுத்துப் போய் ஆம்பளைக் குடிக்கும். பாத்திரம் பண்டங்கள் வேறு தாறுமாறாய்க் கிடக்கும். அதுவும் இருக்கோ இல்லையோ. போனதடவை வந்து நாலு நாள் தங்கி இருந்ததுல அப்படி. நான் இருந்தால் அது நடக்காது. மனுசன் சோத்துக்கு வேற கஷ்டப்படுவாரு. சொல்லி கிளம்பிட்டாள். நான் தடுக்கலை.” சொன்னாள்.

எனக்குள் நிறைவு. இருந்தாலும் குறை! ”நீ தடுக்கலையா ?” கேட்டேன்.

”இல்லே!”பதில்சொல்லிஉள்ளேசென்றாள்.

மறுநாள் தம்பி வீட்டிற்குச் சென்றேன்.

அம்மா மட்டும் இருந்தாள்.

”அவுங்களெல்லாம் எங்கே ?” சுற்றும் முற்றும் பார்த்தேன்.

”புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிருக்கு. உன் தம்பி, தம்பி பொண்டாட்டி எங்கேயோ போயிருக்காங்க.” பதில்.

”நல்லது. அருணாவை அழைச்சி வர என் மனைவி விட்டாளா ?” எதிரில் இருந்த அம்மாவை ஆழமாகப் பார்த்தேன்.

”அவள் எங்கே விட்டாள்.! நீ அலுவலகத்துக்குக் கிளம்பினதும்….அண்ணன் தம்பிக்கும், பெத்தவங்க புள்ளைகளுக்கும்தான் வக்காலத்து வாங்குவாங்க. அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்ட நஷ்டம். நீ போக வேணாம் அருணா. இங்கேயே இரு. அம்மா புள்ளைக்கு ஆக்கிப்போடட்டும். இல்லே அவர் தனியே கிடந்து சாகட்டும். சொன்னாள். கேட்ட எனக்கு வயித்துல புளி. இது சரி இல்லியே. அக்கா சொல்லாம தங்கச்சி கிளம்பமாட்டாளே…. வேற உதறல். கொஞ்சம் யோசிச்சி .உன் பொண்டாட்டியைத் தனியே அழைச்சுப் போய் ஒரு மந்திரம் சொன்னேன். அடுத்த விநாடி அவளே அருணாவுக்கு நல்லது சொல்லி கிளப்பி விட்டாள்.” நிறுத்தினாள்.

”அப்படியா ?!” எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

”என்ன மந்திரம் ?” ஆவலாய்க் கேட்டேன்.

”அருணாமேல நீ இரக்கப்படுறது இருக்கச் சொல்றதெல்லாம் சரிதான். ஓரக்கத்தி சக்களத்தியாகாம இருக்கனும். பெத்த புள்ளையாய் இருந்தாலும் சொல்றேன் ஆண் யோக்கியமில்லே. பெண்ணும் அப்படி. அப்படியே யோக்கியமா இருந்தாலும் ரொம்ப நாளைக்குப் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல பக்கத்துல இருக்கிறது சரி தப்பு. சொன்னேன்.” சொன்னாள்.

எனக்கு மயக்கம் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *