கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 9,120 
 
 

“தாத்தா, நான் இங்க நட்டிருந்த செடிய எங்க தாத்தா?– பேரன் விதுரின் பதட்டமான சத்தம் கேட்டு அதிர்ந்தார் நாகசுந்தரம். எதைப் பார்த்துவிடக் கூடாது என்று மனதில் நினைத்திருந்தாரோ அதை அவன் பார்த்து, கேட்டும் விட்டான். மறக்காமல் அங்கே போய் நின்றிருக்கிறானே? அதையே நினைத்துக் கொண்டு வந்திருக்குமோ பிள்ளை? அடப் பாவமே…! மனசு பதறியது இவருக்கு. தாத்தா…தாத்தா…நில்லாத குரலுக்குச் சொந்தக்காரராய், கொல்லைப் புறம் பார்த்து ஓட்டமெடுத்தார் நாகு. “இதோ வந்துட்டேன்டா குழந்தே…..”

பார்த்துப் போங்கோ…வழுக்கிடப் போறது….என்றாள் மீனாட்சி. எந்தப் பிஞ்சு மனம் வழுக்கிவிடக் கூடாது என்று அதைச் செய்தாரோ, இப்போது அந்தக் குழந்தை உள்ளமே பதறிப்போய் கிடக்கிறது. தனக்கு வழுக்குவது ஒரு பெரிசா?

என்னாச்சு தாத்தா அந்தக் கொய்யா? இதுவா அது? என்று இரண்டடி நீளத்திற்கு மட்டும் தன் உடலை நீளமாய் நீட்டி, இன்றோ, நாளையோ என்று காத்திருப்பதுபோல் ஒல்லிக் குச்சியாய் நின்ற அந்தச் செடியையே பார்த்தார் நாகு. ஒரு இலை இல்லை. உடம்பு மட்டும் நீண்டிருந்தது.

என்ன பதில் சொல்வது அவனுக்கு? தண்ணீர் விட்டால்தானே தழைக்கும்? அருகில் உள்ள கருவேப்பிலைச் செடி கூட ஏறக்குறைய அப்படித்தான். தண்ணீர் கண்டு மாமாங்கம் ஆயிற்று. ஆனால் அது வளர்ந்து மரம்போல் நிற்கிறது இப்போது. எப்படியும் தனக்கான தண்ணீரை பூமியிலிருந்து இழுத்துக் கொள்ளும். அப்படி இழுக்கும் தண்ணீர் அந்த நெல்லோடு சேர்த்து இந்தப் புல்லுக்கும் ஆகாதா? அது வளரும் சாக்கில் இதுவும் வளரட்டும் என்றுதானே அருகே வைத்தது? இடம் போதாதோ? மண் வளம் பத்தாதோ? யோசனை வந்தது இப்போது.

வீடு முழுக்க சுற்றிலும் சிமின்ட் தளம் போட்டு இறுக்கியாயிற்று? திருஷ்டிக்காக என்பதுபோல் ஒரே ஒரு கருவேப்பிலை மரம்…வேப்பிலை…கருவேப்பிலை…அதுதான் நான்தானோ… – பாட்டு வரி வேறு ஞாபகம் வருகிறது. தன்னையே பல சமயங்களில் அப்படித்தான் நினைத்துக் கொள்கிறார் அவர்.. அது கிடக்கட்டும். குழந்தையின் கனவு சிதிலமாகிறதே இங்கே?

வரும்டா கண்ணா…வந்துரும்….- வார்த்தைகளில் நம்பிக்கை ஊட்டினார்.

எங்க தாத்தா? ஒரு இலையைக் கூடக் காணலியே? பிஞ்சு வந்திருக்கும்னு நினைச்சிட்டே வந்தேன் நான்…..நீ தண்ணியே ஊத்தலியா?… எங்க ஸ்கூல்ல நாங்கதான் செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்துவோம்….எத்தனை செடி இருக்கும் தெரியுமா? நிறைய்ய்ய…..இங்க ஒண்ணே ஒண்ணு…. ஊர்ல அப்பா செடியெல்லாம் வேண்டாம்னு சத்தம் போடுவாரு…அதான் இங்க வச்சேன்….போ தாத்தா…எங்கூடப் பேசாத நீ….!

குழந்தை கோபித்துக் கொண்டு மூஞ்சியைத் திருப்பிக் கொண்டது பார்த்து மனம் பதறிப் போனது நாகுவுக்கு. இப்படி நினைவாய் வந்து கேட்கும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

இந்தப் பக்கமெல்லாம் எங்கயும் தண்ணி கிடையாது ராஜா…எல்லாரும் காசு கொடுத்து வாங்குறாங்க….தோ பார்…லாரி ஓடுற சத்தம்….வீட்டுக்கு வீடு நானூறு, ஐநூறு கொடுத்து வாரா வாரம் தண்ணி விலைக்கு வாங்குறாங்க…அதாண்டா கண்ணா….! – சொல்லிவிட்டுப் பையனின் முகத்தைப் பார்த்தார் நாகு. ஏதேனும் சமாதானம் தெரிகிறதா? தேடியது அவர் பார்வை.

அப்டியா தாத்தா? இந்த வீட்டு மோட்டார்ல தண்ணி வராதா?

வராதுடா தங்கம்….பூமில அறுநூறு எழுநூறு அடிக்குக் கீழன்னு தண்ணி போயிடுச்சி…இந்த வட்டாரத்துல எங்கயும் பொட்டுத் தண்ணி கிடையாது…..

இந்தத் தெருக் கடைசில கம்மாய் இருக்குன்னு சொல்லியிருக்கியே…அதுலர்ந்துதான் தண்ணி இந்தக் கிணத்துக்கு வரும்னு சொல்வியே…வரல்லியா? அதான் கிணத்தை மூடிட்டியா?

என் தங்கம்….எம்புட்டு புத்தியா கேள்வி கேட்கிறே? பேரனை அப்படியே வாரி எடுத்து அணைத்துக் கொண்டார் நாகு. எத்தனை கூர்மையான அவதானிப்பு? இந்தக் காலக் குழந்தைகளுக்கே அறிவு ஜாஸ்தி….! மனதுக்குள் பிரமித்தார்.

மூடலடா ராஜா…மேலே தளம் போட்டிருக்கேன் அவ்வளவுதான்…அதோ பார் அடில…சல்லடை மாதிரி இருக்கு பார்த்தியா? கிணத்துக்குப் போற ஓட்டை…இது வழியா மாடித் தண்ணி அத்தனையும் கிணத்துல இறங்கிடுமாக்கும்…பக்கத்துல போர் இருக்கு பார்த்தியா? .மழை பெய்தா பொட்டுத் தண்ணி வேஸ்ட் ஆகாது….மழை நீர் சேகரிப்புன்னு சொல்லுவாங்கல்ல..அதான் இது….…

பெஸ்ட் ஐடியா…! தாத்தா… ….அப்பாட்டயும் சொல்லு தாத்தா…மெட்ராசுலயும் இப்டிப் பண்ணச் சொல்லி…..எம்புட்டு மழை பெய்யுது மெட்ராசுல?….தண்ணி பூரா வீணாத்தானே போகுது…அங்க நம்ம வீட்டுலயும் இதே மாதிரிச் செய்யலாமில்ல….?

நான் சொன்னா உங்க அப்பன் கேட்கமாட்டானேடா….? – சொல்லிவிட்டுப் படக்கென்று நாக்கைக் கடித்துக் கொண்டார் நாகு. இது எதற்கு இந்தக் குழந்தைக்குத் தெரிய வேண்டும்? வயதான தன் பேச்சை மகன் கேட்பதில்லை என்று இந்தப் பிஞ்சு மனதில் பதிய வேண்டுமா? சொல்றேன்…சொல்றேன்…கண்டிப்பா சொல்றேன்…-உடனடியாகத் திருத்திக் கொண்டார்…

போங்க தாத்தா…ஆச ஆசையா ஊருக்கு …வரும்போதே இதை நினைச்சிட்டுத்தான் வந்தேன்….என் உயரத்துக்கு வளர்ந்திருக்கும்னு….ஒத்த எலையக் கூடக் காணலை….

நாகசுந்தரத்தின் மனசும் சுருங்கித்தான் போனது. குழந்தைக்கு ஏமாற்றம்! கூர்ந்து பார்த்தார் செடியை. ஒன்றிரண்டு இடங்களில் புள்ளியாய்த் தலை நீட்டத் துடிக்கும் இலைத் துளிர்கள் கண்ணுக்குப் பட்டன. இன்னும் நம்பிக்கை இருக்கிறது. துளிர்த்து விடலாம்தான். ஆஉறா…அற்புதம்….இங்க பார்….இங்க பார்….இலை வருது பார்…..வந்துரும்…வாடாது….பக்கத்துல செடி இருக்குல்ல…அது இதை வாட விடாதாக்கும்….நீ ஊருக்குப் போறதுக்குள்ள தலைய நீட்டும் பார்….

உற்றுப் பார்த்த விதுர் முகம் விரிந்ததாய் இல்லை. ஏமாற்றம்தான் தெரிந்தது.

இதுவா…இதுவா….இதுவா தாத்தா….?

ஆம்மா…அதேதான்…பச்சையாத் தெரில? விரல் நீட்டக் கூடாது…அப்புறம் வளராதாக்கும்…. – என்னவோ சொல்லி வைத்தார் தோன்றியதை. என்ன செய்யலாம்? எப்படிச் சமாதானப்படுத்தலாம்? பலத்த யோசனை வந்துவிட்டது அவருக்கு. பேரன் மேல் அத்தனை பாசம்.

அன்று ஊருக்குக் கிளம்ப மகன் ஆயத்தமாகிக் கொண்டிருப்பதைக் கண்டார் நாகசுந்தரம். அதற்குள்ளாவுமா லீவு முடிந்து விட்டது? நாள் போனதே தெரியலையே? பேரனை இன்னும் சரியாகக் கூடத் தூக்கிக் கொஞ்சவில்லை.? கடந்து போன இரவு அவன் அவர் மேல் விழுந்து புரண்டதுதான். ஆஉறா, என்ன இதம்? எப்படியொரு சுகம்? கொடுத்து வைத்தால்தான் கிடைக்கும் இதெல்லாம். அதற்குள்ளேயுமா இழக்க வேண்டும்?

டே…டேய்…தாத்தாவால தாங்க முடியாதாக்கும்.. அப்டி திங்கு திங்குன்னு குதிக்காதே…..எங்கயாவது படாத எடத்துல பட்டு வைக்கப் போறது….. – பதறினாள் மீனாட்சி. அவளுக்கு என்று இருக்கும் ஒரே துணைக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் அவளுக்கு.

விடுறி….இத விட என்ன சந்தோஷம் இருக்கு உலகத்துல? நீ குதிடா தங்கம்…. என்று சொல்லி வாகாய்க் குப்புறத் திரும்பிப் படுத்தார் நாகு. உடம்பு சொடக்கு விட்டாற்போல் ஆகிப்போனது. இரவு தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிப் போனார். காலையில் கலகலவென்றிருந்தது உடம்பு.

சட்டென்று மனதில் ஒரு மின்னல். துள்ளி எழுந்தார். சட்டையை விறுக்கென்று மாட்டிக் கொண்டார். விதுர் கண்ணா….தாத்தா வெளில போறேன்…வர்றியா?

அவன் என்னத்துக்கு? நீங்க ஜாக்கிரதையா போய்ட்டு வந்தாப் பத்தாதா….?

நீ என்னடீ…ஒரேயடியா என்னைத் தொண்டு கெழம் ஆக்குற? அதெல்லாம் பத்திரமாப் போயிட்டு வருவேன்…நானென்ன புத்தி பெரண்டா கெடக்கேன்? நீ வாடா ராஜா….என்று ஓடி வந்த பேரனின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார். கால் வீசி நடக்க ஆரம்பித்தார்.

மெதுவா தாத்தா…மெதுவா… ஏன் இப்டி ஓடுற? –கேள்வியில் மகிழ்ந்து நடையைச் சுருக்கினார். குழந்தையை அப்படியே அள்ளி எடுத்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

இதுதானா தாத்தா நீ சொன்ன குளம்….? – விலுக்கென்று கீழே குதித்த விதுர் இடுப்பில் கை பதித்து, அந்தப் பெரிய கண்மாயைக் கண்கள் விரியப் பார்த்தான்.அருகில் இருந்த ராட்சச மேல்நிலைத் தொட்டிக்கு அவன் பார்வை ஏறியது.

ஏந்தாத்தா, இதுலேர்ந்து இவ்ளோ பெரிய தொட்டிக்கு எல்லாத் தண்ணியையும் உறிஞ்சிடுவாங்களா? அடடா…! இந்தக் குழந்தைகளுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாதோ? என்னவொரு புத்திசாலித்தனம்? எப்பிடிறா செல்லம் இதெல்லாம் உனக்குத் தெரியறது? அவனுக்கு ஒரு முத்தா கொடுத்துக் கொண்டே வினவினார்.

எங்க ஸ்கூலுக்குத் தண்ணியே இப்டித்தான் கிடைக்குது தாத்தா.…உசரமான பெரிய்ய்ய்ய காம்பவுன்டுக்கு வெளியே ஒரு மெகா சைஸ் கொளம் கிடக்கும். அந்தத் தண்ணிதான் எங்களுக்கு வருது…இவ்வளவு பக்கத்துலேன்னா இங்கயிருந்துதானே தண்ணிய ஏத்தியாகணும்? அதான் கேட்டேன்…

ஆமாண்டா என் தங்கக்கட்டி….. அப்புறம் எப்டி நம்ம வீட்டுக் கிணத்துல தண்ணி வரும்? இங்கியே எல்லாத் தண்ணியும் ஏத்திட்டா? இந்தத் தொட்டியே கூடாது தாத்தா. அப்பத்தான் தண்ணி பூமிக்குள்ள இறங்கி எல்லா வீட்டுக்கும் தண்ணி கிடைக்கும்….கண்மாய் அதுக்குத்தானே இருக்கு…?

ஏத்தினாலும் எல்லா வீட்டுக்குமா தண்ணி கொடுக்கிறாங்க….பாதி கூட இல்ல….அதுவும் வாரத்துல ஒரு நாள்தான்….! என்னமாப் பேசுதுங்க குழந்தைங்க? அதிசயித்தார் நாகு.

சரி தாத்தா….எனக்காக ஒண்ணு செய்யேன்…..காசு கொடுத்து வாங்குறேல்ல தண்ணி…அதுலேர்ந்து அப்பப்போ ஒரு வாளி அந்தக் கொய்யாச் செடிக்கு ஊத்தேன்….

சரிடா கண்ணு கண்டிப்பா செய்றேன்…அப்டியே இதை உன் பாட்டிகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடேன்….குழந்தை சொல்லிச் செய்ய வேண்டி வந்துவிட்டதே? செடியை நினைத்து அவர் மனம் வாடியது.

ஏன் தாத்தா? பாட்டி திட்டுவாங்களா? புரியாமல் பார்த்தவன் என்னவோ உணர்ந்தவனாய் ஓகே தாத்தா….பாட்டிகிட்டயும் சொல்லிடறேன்….என்றபோது நாகு மனதுக்குள் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டார்.

மனுஷாளுக்கே தண்ணியில்லே இங்கே…செடிக்கு என்ன வேண்டிர்க்கு?அதுவும் பணம் கொடுத்து வாங்கி? ரெண்டு கருகப்பிலை காய் வாங்குறபோது ஓசி கேட்டா, தந்துட்டுப் போறான்…. – அவளை மீறித்தான் காப்பாற்றியாக வேண்டும் அந்தக் கொய்யாச் செடியை…. மனதில் உறுதி பிறந்தது. என் செல்லப் பேராண்டிக்காக இதைச் செய்யக் கூடாதா?

வீட்டுக்குத் திரும்பும்போது அழகான அந்தச் சிறு மண் தொட்டியோடு கூடிய அந்த ரோஜாப் பதியனையும், அதில் மலர்ந்து சிரித்த வெல்வெட் சிவப்பு மலரையும் குழந்தை விதுர் தன் கன்னத்தோடு கன்னமாய் ஆசையாய்ச் சேர்த்துக் கொண்டபோது, எது அதிக அழகு என்று புரியாமல் வியந்து, பிரமித்துப் போய், தன்னை இழந்து உருகினார் நாகசுந்தரம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *