கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2023
பார்வையிட்டோர்: 1,106 
 

சொந்த ஊருக்கு வந்திருந்தான் தனபாலன். மிக நீண்ட காலத்துக்குப் பிறகு. யுத்தம் முடிந்து பலர் ஊர் போய் வருகிறார்களென்பது தெரிந்த பிறகு அவனெடுத்த முடிவு.

ஒரு மாதத்துக்கு அங்கே தங்குகிற மாதிரித்தான் வந்துமிருந்தான். இரத்த அழுத்த நோய்க்கும், லேசான நீரிழிவு நோய்க்குமாக ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துக் குளிசைகள் கொண்டுவந்திருந்தான். மனைவி வற்புறுத்திக் கொடுத்தனுப்பிய நுளம்புகளை விரட்டுவதற்கு உடம்பிலே பூசுகிற களிம்பும் அவனிடம் இருந்தது.

இவையெல்லாம் புறப்படுகிற முதல் வாரத்தில் செய்யப்பட்ட ஆயத்தங்கள். மூன்று மாதங்களுக்கு முன்னரே வீட்டுவேலைகள் சிற்றப்பாமூலம் ஊரிலே முடிக்கப்பட்டிருந்தன. யுத்த காலத்தில் சுவர்களில் விழுந்திருந்த குண்டுக் காயங்கள் பூசப்பட்டன. உடைந்த ஓடுகள் மாற்றப்பட்டன. கழன்றிருந்த ஜன்னல் கதவுகள் புதிதாகப் பொருத்தப்பட்டன. தூசி தட்டி, கழுவி குடியிருப்பதற்குத் தயாராக வீடு சகலமும் செய்யப்பட்டிருந்தன. தனபாலன் வருவதுதான் பாக்கியாக இருந்தது.

அவனது சிற்றப்பா குடும்பம், தனபாலன் வருவதாகச் சொல்லும் ஒவ்வொரு புதிய திகதியிலும் ஆவலாதியாய் அலைந்துகொண்டிருந்தது.
ஒருநாள் திடீரென தனபாலனின் தொலைபேசிச் செய்தி வந்தது, தான் மறுநாள் இலங்கை புறப்படுவதாக. மறுநாள் தனபாலனின் மனைவி, ‘அவர் பிளைற் ஏறியிட்டார்’ என்ற தகவலை அறிவித்து அவனது புறப்பாட்டை நிச்சயப்படுத்தினாள்.

வெளிநாட்டிலிருந்து வருவதென்பது ஒன்றும் கொழும்பிலிருந்தோ, இந்தியாவிலிருந்துதானுமோ, வருவதுபோலில்லை. அது வேறுமாதிரியான ஒன்று. பொருளாதார நிலைமையும் கலாச்சாரமும் மாறுபட்ட ஒரு தேசத்திலிருந்து வருவதென்பது, அவற்றை தவிர்க்க முடியாதபடி பயணத்துடன் சம்பந்தப்படுத்துகிறது.

சிற்றப்பா குடும்பமும் கொழும்பிலிருந்து வந்த தனபாலனின் தொலைபேசித் தகவல் வந்ததும் முழு உஷார் நிலையில் இருந்தது.

இறுதியாக ஒரு மாலை நேரத்தில் தனபாலன் ஒரு காரில் வந்து வீட்டின் முன்னால் இறங்கினான்.

சொந்தக்காரர் வந்தனர். இவனும் சொந்தக்காரர் வீடுகளுக்குப் போனான். தடல்புடலாக மூன்று நான்கு நாட்கள் கழிந்தன.

வரவேற்பு, விழுந்தடிப்பு, சாப்பாட்டழைப்பெல்லாம் ஒரு வாரத்துக்குள் சிறிது சிறிதாகக் குறைந்தன. யாழ்ப்பாணம், நல்லூர் என்றும், கிளிநொச்சி, மாத்தளன், முல்லைத்தீவென்றும் ஒருமுறை போய்வந்தான்.

தனபாலனின் வீட்டுக்கு குளியலறை கட்டப்பட்டிருக்கவில்லை. கிணற்றடியில் மோட்டாரால் தொட்டியில் நீரை நிரப்பிவிட்டு கையால் அள்ளி ஊற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறுதான் அங்கே முன்பு இருந்திருந்த பொழுதிலும் குளித்திருந்தான். அது பழக்கமானதுதான். ஆனால் அப்போது அதில் ஒரு கிளர்ச்சியிருந்ததை தனபாலன் கண்டுகொண்டான்.

தனபாலனுக்கு குளிர்தேசம் சிவப்பாக்கிய மேனி. நல்ல ஊண் ஊட்டிய வளவளப்பு அதில். குறுந்தாடி வைத்திருந்தான். உள்ளுடுப்போடு நின்று கிணற்றடியில் குளித்துவிட்டு, துவட்டிய நீண்ட துவாயைக் கட்டிக்கொண்டு முன்னாலிருந்த புல் தரையில் அவன் அங்குமிங்கும் ஏதாவது வேலையாக அலைவது அழகாக இருக்கும். பார்த்தால் யாருக்கும் ஆசையாகவிருக்கும் அந்த மாதிரி ஒழுக. சுற்றிவர மூன்றுபுற வேலிகளது மறைப்பில் தனியே இருக்கும் தனபாலனுக்கு ஒன்றுக்குப் போவதில் சுயாதீனம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. நீண்ட காலம் அனுபவித்திராத சுயாதீனம். வேலி மறைப்பினூடாக அதை யாரும் கண்டுகொண்டிருக்கப் போவதில்லை.

பத்து நாட்களாகிவிட்டன தனபாலன் ஊருக்கு வந்து.

எவ்வளவு தாபத்தோடு ஊரைப் பார்க்கவேண்டுமென்று ஓடிவந்தான்! ஊரைப் பார்த்துவிட்டான்தான். ஆனால்…

சந்தியிலே ஒரு பெரிய ஆலமரம் நின்றது. பஸ் நிற்கிற இடமாக அதுதான் முன்பு இருந்தது. ஆலடிச் சந்தியென்றுதான் சனம் ரிக்கற்றும் எடுக்கும். அது குறுகிக் குறுகி சின்னதாகிவிட்டதோடு, அதன் அடர்த்தியும் குறைந்து புதிதாக முளைவிட்ட நான்கைந்து கெவர்களோடு நின்றுகொண்டிருந்தது. ஷெல் அடித்தோ, குண்டு விழுந்தோ ஏதோ நடந்திருக்கிறது. முகரியில் நின்றிருந்த ஏழெட்டு பனைகளையும், வடலிகளையும், பறுகுப் பற்றையையும்கூட காணவில்லை. பிள்ளையார் கோவில் ஓரமாய் நின்றிருந்த பெரிய மருது வேரோடு காணாமல் போயிருந்தது. அதனருகேயிருந்த தாமரைக் குளத்தின் சுவடும் இல்லை. பிள்ளையார் கோவில்மட்டும் புதிய நிர்மாணத்தில் பல வர்ணங்கள் பூசப்பட்டு சப்பறம்போல் நின்றுகொண்டிருந்தது. அதுவும் ஊரின் பழைய பிள்ளையார் கோவிலல்ல. மண் ஒழுங்கைகள் மக்கி றோடுகளாயும், மக்கி றோடுகள் கல் றோடுகளாயும், குண்டும் குழியுமாயிருந்த கல் ரோடுகள் மட்டமான தார் றோடுகளாயும் மாறியிருந்தன.

ஊரின் எச்சமாக அங்கே அவன் கண்டது, பிள்ளையார் கோவிலுக்கு பின்புறத்தே பரந்திருந்த சிலுவில் வயலைத்தான்.

காலத்தின் அந்த மாற்றங்களை எதனாலும் தடுத்துவிட முடியாதென்றும், அது வளர்ச்சியின் அடையாளமென்றும், அதுபற்றி ஓரிரவு தன் நண்பர்களோடு கதைத்து;க்கொண்டிருந்த ஒரு புறாசல் சமயத்தில், நடேசபிள்ளை சொல்லியிருந்தான்.

அது பெரும் மாற்றமும் முன்னேற்றமுமென்று இன்னொரு நண்பன் ஆணித்தரமாகச் சொன்னான்.

அதை அவ்வாறாக எடுத்துக்கொள்வது தனபாலனுக்குச் சிரமமாக இருந்தது.

ஊரைப் பார்க்க வந்ததில் வீட்டைப் பார்த்ததுமட்டுமே நடந்திருந்தது தனபாலனுக்கு. மீதித் தவனம் மனத்தில் இன்னும் உறைந்து கிடந்தது.

அன்று காலை தனபாலன் எழுந்து குளிக்கப் போக நேரஞ்சென்றிருந்தது. மேற்கு வாசலான அந்த வீட்டு விறாந்தையிலிருந்து வெய்யில் தாழ்வாரத்துக்கு இறங்கியிருந்தது.
\
குளித்துவிட்டு வரும்போதுதான் எதிர்வீட்டைக் கவனித்தான். புதிதாகக் கட்டியிருந்த வீடுபோல் இருந்தது. அவன் வெளிநாடு போவதன் முன் பனைகளும் வடலிகளும் நிறைந்து வரண்ட நிலமாய் அது கிடந்திருந்தது. யாரும் காணாத நேரத்தில் சிலருக்கு அதுதான் கக்கூஸ்.

மேற்கொண்டு அதுபற்றி நினைக்க முடியாதளவுக்கு அவனது பார்வை ஒரு அழகில் விழுந்து நிலைத்தது.

வீட்டு வாசலில் நின்று ஒரு பெண் தலைவாரிக்கொண்டிருந்தாள். இடைஞ்சலற்ற ஒரு இடத்தில் நின்றுதான் அதைச் செய்யவேண்டிய அளவுக்கு அவளது கூந்தல் நீளமாய் இருந்தது.

காலையின் அவசரங்கள் முடிய குளித்து சேலை கட்டி வந்திருந்தாள். அந்த முகத்தின் பளீரிடுகை அதை அவனுக்குத் தெரிவித்தது. அழகானவளாய் இருந்து அவனை அதில் சில கணங்கள் மெய்ம்மறந்து நிற்க வைத்திருந்தாள்.

காலையில் வெளியே போகவேண்டி இருந்ததில் அந்த முதல் தரிசன நிகழ்வு அத்தோடு முடிந்தது.

அவளுக்கு கணவனாக இருக்கக்கூடிய எந்த ஒரு ஆணையும் அதுவரை அந்த வீட்டில் அவன் கண்டிருந்கவில்லை. அது அவளை ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்க அவனைச் செய்துகொண்டிருந்தது.

குளிக்கும்போது அவள் முற்றத்தில் நின்று தலை வாருகிறாளா, திறந்திருக்கும் வாசல் கதவினூடு தென்படுகிறாளா என்றுமான தேடலில் நாளடைவில் அவன் விழுந்துபோனான்.

அன்று ஒரு சனிக்கிழமை.

அங்கே சமைத்துச் சாப்பிடவும், தண்ணியடிக்கவும் அன்று நண்பர்களோடு ஒரு திட்டமிருந்தது தனபாலனுக்கு. அவர்களும் ஆறு ஆறரை மணியளவில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்துவிட்டிருந்தனர்.
ஒன்பது மணியாகியும் பேச்சு ஓயவில்லை. சமையல் முடிந்திருந்தபோதும் சாப்பிடுகிற எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை.

யுத்த காலத்து அவலங்கள், ராணுவச் செயற்பாடுகள், பழைய இயக்ககாரரின் நிலைமை, மாற்றியக்கங்களின் நிலைப்பாடு என பல விஷயங்களும் அவர்களது பேச்சில் உருள்பட்டன.

திடீரென எதிர் வீட்டில் குழந்தைகளின் கூச்சல் கேட்டது.

படார்… படாரென அறைக் கதவுகள் அடிபட்ட அல்லது யாரோ அதன்மீது விழுந்த சத்தம்.

கணார்… கணாரென பீங்கான் பாத்திரங்கள் விழுந்து நொருங்கின.

அங்கே ஒரு குடும்பச் சண்டை நடந்துகொண்டிருந்தது. கண்ணால் காணாமலே அதைச் சுலபத்தில் அனுமானிக்க முடிந்தது. குழந்தைகளின் கதறல் அவர்களே அடிவாங்குவதன் அர்த்தமில்லை.

அப்போது நடேசபிள்ளை தெளிந்துகொண்டு சொன்னான். “தனபாலு, நீ உதுகளைக் கண்டுகொள்ளாத. அப்பப்ப நடக்கிற சங்கதிதான்.”

“இவ்வளவு நாளில உப்பிடி நான் காணேல்லயே.”

தனபாலனின் அபிப்பிராயத்துக்கு நடராசா மறுமொழி சொன்னான். “இண்டைக்கு அவளின்ர புருஷன் வந்திருக்கிறான்போல. என்ன பிரச்சினையோ?”

தனபாலன் ஒன்றும் சொல்லவில்லை.

எழுந்து கேற்வரையும் வந்தான்.

நண்பர்களும் சளாப்பல் கதைகளோடு கூடவந்தனர்.

எதிர் வீட்டில் வாசல் கதவு மூடிக் கிடந்ததில் உள்ளே என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று கண்டுகொள்ள முடியவில்லை.

அப்போது அறைக் கதவு மறுபடி உதைபட்ட சத்தம் எழுந்தது.
குழந்தைகளின் கதறல் தொடர்ந்து கேட்டது. கூடத்துக்குள்ளிருந்த தொலைக் காட்சிப் பெட்டி தான் நொருங்குகிறேன் எனச் சொல்வதுபோல் சத்தமொன்று கணாரிட்டு எழுந்தது.

தனபாலனால் பொறுக்கமுடியாது போனது. “முந்தியெண்டா அக்கம்பக்கத்துச் சனம் உப்பிடியே இருந்ததுகள்? என்ன நடக்குதெண்டு ஒருதர் வெளிய வந்து பாக்கேல்லை.”

அவர்களும் அதை கவனம் கொண்டார்கள்போலவே தோன்றியது. தாங்களுமே அவ்வாறு இருந்துகொண்டிருப்பதில் அவர்கள் என்ன நினைத்திருக்கக்கூடுமோ?

தனபாலனின் மனத்தில் உறைப்பாக அந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் விழுந்துகொண்டிருந்தது. ‘அயல் தலையிடாத ஒரு குடும்பச் சண்டை இந்த ஊரில் எப்போது நடந்திருக்கிறது? அப்போது மட்டும் ஏன் அப்படி?’

பிள்ளைகளின் அழுகை எதிர்வீட்டில் குறைந்து வந்தது.

சந்தடிகள் அடங்கிவந்தன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

“அதுகள் இடப்பெயர்வோட வந்திருக்கிற புதுச் சனங்கள், தனபாலு. பச்சிலைப்பள்ளியோ எங்கயோயிருந்து வந்ததுகள். அப்பப்ப கண்ட பழக்கம்தான். என்ன பிரச்சினையெண்டு ஆர் போய்க் கேக்கப் போகினம்?” நடேசபிள்ளை சமாதானம் சொன்னான்.

“பக்கத்து வீட்டில இருக்கிறவையும் இஞ்சத்த ஆக்களில்லை. அவையும் இடப்பெயர்வில வந்தவைதான். அங்கால இருக்கிற வீட்டில ஆம்பிளயளில்லை. அதுக்கடுத்தது பாம்புக் காணி. ஆர் போய் சண்டையைப் புடிச்சு விடப்போகினம்?” வேறொரு நண்பன் சொன்னான்.

குடியும் சாப்பாடும் முடிய அவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்பினர். நடேசபிள்ளை மட்டும் மெதுவாக அவனிடம் சொன்னான்: “ஒண்டு கவனிச்சியோ, தனபாலு? பிள்ளையள் கத்திச்சுதுகளே தவிர, அவளின்ர சத்தம் கேக்கவே இல்லை.”

“ஏன்?”

“அது எனக்குத் தெரியாதப்பா. ஒருவேளை பிள்ளையள் கத்தினதால அவளை அவன் அடிக்கேல்லையோ? இல்லாட்டி அடியை வாங்கிக்கொண்டு விறைச்ச மண்டைச்சியாய் இருந்திருப்பாள். ஆருக்குத் தெரியும்? உனக்கு இதால பிரச்சினையொண்டுமில்லையே?”

“எனக்கென்ன பிரச்சினை?”

“சரி, நீ போய்ப் படு.”

தனபாலன் திறந்திருந்த ஜன்னலோரம் அமர்ந்து வானத்தையும், எதிர்வீட்டையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு வெகுநேரமாய் இருந்திருந்தான்.

ஐயோ என்று ஒரு அவலக் குரல் கேட்டால் ஆர் எவரென்று பார்க்காமல் அயல் கூடிவிடுவதாகத்தான் முந்திய ஊர்கள் இருந்திருந்தன. அவனுடைய அந்த ஊரும் அப்படித்தான் இருந்தது. ஒழுங்கை இல்லாதது, மக்கி றோட்டு இல்லாதது, ஆலமரமும் அரசமரமும் இல்லாதது, பாம்பு பூச்சிப் பயமில்லாமல் நடக்க வீதி வெளிச்சம் இருப்பது எல்லாம் வளர்ச்சியாக இருக்கட்டும். ஆனால் அது ஊரை விழுங்கிவிட்டு வந்த வளர்ச்சியென்றே அவனுக்குத் தோன்றியது.

ஊர் அவனளவில் விழுங்கப்பட்டாயிற்று.

அப்போதிருப்பது தனிமனிதர்களின் வீடுகளுள்ள வசிப்பிடம்.

ஊருக்கும் வசிப்பிடத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

விமானமேற கொழும்புக்குப் புறப்பட்ட நாளில், தன்னூரைப் பார்த்திருக்காத சோகம் தனபாலனின் மனத்தில் அப்பியிருந்தது.

– நடு, ஏப்ரல் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *