ஊனம் மனதுக்கல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,893 
 

நேரம் அதிகாலை நாலரை இருக்கும். பக்கத்து வீட்டுச் சேவல் இரு தடவை கூவி அமைதியாகிவிட்டது. இன்னும் பறவைகள் விழித்துக்கொள்ள வில்லைப் போலும். அமைதியாக இருந்தது. மார்கழி மாதக் குளிருக்கு போர்வையைத் தலைவரை மூடிக்கொண்டு படுத்திருந்த சந்திரன் விழித்துவிட்டான். ஆனால் கட்டிலில் இருந்து எழுந்து படிக்க மனம் அங்கலாய்த்தபோதும் உடலும் கண்களும் இன்னும் கொஞ்ச நேரம் படுத்திரு என அவனைக் கெஞ்சிக்கொண்டிருந்தன. அம்மாவின் அதட்டலோடு கூடிய அழைப்பை எதிர்நோக்கி பயத்துடன் காதுகள் கூர்மையாயின.நல்லவேளை அம்மா அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும்.ஆறுமணிவரை அவனை எழுப்பவில்லை.

ஆறுமணிக்குத் தானாகவே எழுந்த சந்திரன் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவசரமாகப் பாடசாலைக்குப் புறப்பட்டான்.புத்தகங்களை அடுக்கியபோது பேனாவைக் காணவில்லை.

“ஏய் சாந்தா என்ர பேனையை எடுத்தனியே? மரியாதையோட தா இல்லாட்டிப் பல்லுக் கழரும் .” என்று தன் தங்கையை அதட்டினான். தங்கை குறைந்தவளா என்ன’? அவளும் தமையனுக்கு சமனாகக் கத்தினாள் . வார்த்தையில் தொடங்கிய சண்டை சாந்தாவை ச் சந்திரன் அடித்ததோடு பெரிதாகி “ஏய் இங்க என்ன சத்தம்? என்ற அப்பாவின் அதட்டலோடுஅடங்கியது. இருவரும் மனதுக்குள் கறுவியபடி சாப்பிடப் போனார்கள்.

சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்த சந்திரனை உணவு பரிமாறிக் கொண்டிருந்த அம்மா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தா.பத்தாம் வகுப்புப் படிக்கும் இவனுக்கு இவ்வளவு வளர்த்தியா..?எவ்வளவு வாரினாலும் அடங்காத மயிர்க் கற்றைகள் நெற்றியில் தவழ்ந்து தனியழகைக் கொடுத்தன.பெரிய கண்கள் நீண்ட நாசி என்பன அவனுக்கு மேலும் எடுப்பை வழங்கின.சிறு வயதில் தன்னிடம் ஓடிவரும் பொழுது எல்லாம் அவனது கால்களை அவள் இரசித்திருக்கிறாள்.”என்னை போல நேரா நட .காலைச் சவட்டி நடக்காதே” என்று அவன் தங்கைக்கு அடிக்கடி சொல்லும் போது அதைக்கேட்டு மனதுக்குள் சிரித்திருக்கிறாள்.அவனது சுறுசுறுப்பும் ,குறும்புத்தனங்களும் மிகவும் இரசிக்கக் கூடியனவாகவே இருந்தன.படிப்பிலும் விளையாட்டிலும் சம அளவுகெட்டித்தனத்தைக் காட்டியமை அந்தத் தாயுள்ளத்துக்கு பெருமையை அளித்தன.அவனை ஒரு எஞ்சினியராய்ராக எண்ணிமனதுக்குள் மகிழ்ந்தாள்.

சந்திரன் “என்னம்மா இபடிப் பாக்கிறீங்கள்” ? என்ற போதே தனது சுய நினைவுக்கு வந்தாள் அம்மா.

“அம்மா நான் இண்டைக்குப் பின்னேரம் பிந்தித்தான் வருவன் புட்போல் மாச் முடிய நேரமாகும்.” என்று கத்தியபடி சைக்கிளில் பறந்தான் சந்திரன்.

சந்திரன் படிப்புப் போலவே விளையாட்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்வான். விளையாட்டுப் போட்டிகளில் எத்தனையோ பரிசில்களைப் பெற்றவன் அவன். அவன் மிகவும் விரும்பி விளையாடுவதும் திறமையை முழுவதும் வெளிப்படுத்துவதும் உதைபந்தாட்டத்திலேதான். இதனால் ஆசிரியர்களின் ஒருமித்த அன்பையும் பெற்றிருந்தான்.அவனது இயல்பான திறமையும் எல்லோரையும் சமமாகப் பாவித்துக் கலகலப்பாய் பேசும் தன்மையும் அவனை மாணவர்களிடையே பிரகடனப்படுத்தாத் தலைவனாய் மாற்றியிருந்தன. அவனது தலைமைப் பதவியைக் கண்டு மாணவர்கல் சிலர் பொறாமையடைந்ததும் உண்டு.

பாடசாலைகளின் இறுதிச் சுற்று உடைபந்தாட்டப் போட்டி அன்று இடம் பெற்றது. சந்திரன் கோல் காப்பாளனாகத் திறமையாக விளையாடிக்கொண்டிருந்தான்.பந்தாட்டத்தின் போது இரண்டு கோல்களை லாகவமாய்த் தடுத்தவன்மூன்றாவது கோலின் போது கால் தடுக்கி விழுந்துவிட்டான்.. வலது கால் உடைந்து பறந்து விட்டது போன்ற ஓர் உணர்வைச் சந்திரன் அடைந்தான்.நல்ல வேளை கால் இருந்த இடத்திலேயே இருந்தது, ஆனால் அவனால் மேற்கொண்டு விளையாட முடியவில்லை. அவனை உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். டாக்டர் எலும்பு விலகியதாகவும் அது பொருந்த ஒருமாத காலம் செல்லலாம் எனவும் கூறிவிட்டார்.

“நீ விழுந்ததால நெசனல் மச்சில விளையாடிர சானச மிஸ் பண்ணிட்டியேடா “ என்று அவனது நண்பர்கள் அனுதாபப் பட்டுக் கொண்டார்கள்.

“ஐயோ நீ விளையாட்டாட்டி எங்கட ரீமே தோத்துப் போயிடுமே” என்று போலியாகவும் சிலர் அநுதாபப் பட்டுக் கொண்டனர்

ஆனால் உண்மையோ பொய்யோ அனுதாபம் எதுவானாலும் .அது சந்திரனுக்கு எரிச்சலையே மூட்டியது. ஆசிரியர்கள் அநுதாபம் தெரிவித்தபோது பொறுமையுடன் சகித்துக்கொண்டவனுக்கு நண்பர்கள் அன்ந்தாபப்பட்டபோது கோபம் தலைக்கேறிவிட்டது.

“நிறுத்துங்கடா, நான் இப்ப செத்திட்டன் எண்டே அனுதாபப் பத்திரிகை வாசிக்கிறியள்? ஆரும் அனுதாபப் படுகிறதை நான் அடியோடு வெறுக்கிறன். “ எனக் கத்தினான் சந்திரன். அவனுக்கு தான் விளையாட முடியவில்லையே என்பதைவிட அவர்கள் அனுதாபப்பட்டதுதான் அதிக கவலையை அளித்தது.

வீட்டுக்குச் சென்ற போது அப்பா சமாதானமாகத் தோளில் தட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.அம்மாதான் மிகவும் அங்கலாய்த்துக் கொண்டாள்.

“உனக்கு வேணும் ..உன்ர கொழுப்புக்கு ஒரு மாசமாவது கட்டிலில் கிட அப்பத்தான் நான் அடி வாங்காமல் தப்பலாம்.”

மனதில் ஒருவகை நெருடல் இருந்தபோதும் அண்ணனை எதிர்க்க ஒரு சந்தர்ப்பம் வாய்ந்ததே என்று சாந்தா நினைத்துக் கூறியவை சந்திரனுக்கு உண்மையிலேசந்தோசத்தையே தந்தன.

நாள்கள் ஓடின. இடையிடையே நடக்கும் ஹர்த்தால்கள் குண்டுவீச்சுக்கள் ஷெல்லடிகள் இவற்றால் ஏற்படும் மரணங்கள் கண்ணீர் அஞ்சலிகள் என்பன பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருந்தன.

அன்றும் ஓர் அனர்த்தமான நாள்தான். கோட்டை இராணுவ முகாமிலிருந்து இலங்கை இராணுவம் எல்லாத் திக்குகளும் தென் திசையே என்ற எண்ணத்தில் ஷெல்களை ஏவிக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாண நகரத்துப் பாடசாலைகள் அவசர அவசரமாய் மூடப்பட்டன. மாணவத் தலைவர்கள் வாங்குகளுக்குக் கீழ்ப் பதுங்குமாறு மாணவர்களை ஏவிக்கொண்டிருந்தனர். ஷெல்கள் இடையிடையே வெடிக்கும் சத்தங்கள் பதற்றமடைந்த மாணவர்களின் குரல்களையும் அமுக்கிக் கொண்டு நாராசமாய் ஒலித்தன.

சந்திரன் பரபரப்பும் பயமும் கலந்த ஓர் உணர்வுடன் தனது வகுப்பு மாணவர்கலை வாங்குகளின் கீழ்ப் படுக்குமாறு கூறிவிட்டு அடுத்த வகுப்புக்குச் செல்லப் படியிறங்கிக் கொண்டிருந்தான்.இரண்டு படிகள் தாண்டியிருப்பான்.

ஸ்ஸ்….என்ற சத்ததுடன் தீப்பிழம்பொன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டு ஓ என்று கத்தினான். பின் அவனுக்கு நினைவில்லை.

சந்திரன் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்து சற்றுமுற்றும் பார்த்தான். பெற்றோரின் கலங்கிய விழிகளைச் சந்தித்த அவன் கண்கள் தானாகவே கலங்கின. தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை ஒருவாறு உணர்ந்தபோது தான் ஆஸ்பத்திரியில் இருப்பதையும் தன்மேல் ஷெல் விழுந்திருக்க வேண்டுமென்பதையும் சந்திரன் ஊகித்துக்கொண்டான்.அடைபட்டிருந்த செவிப்பறையிலே சிறிய சிறிய ஓசைகள் விழுகின்றன. அம்மாவின் விம்மலும் பொருமலும் துல்லியமாய்க் கேட்டன. உடலில் நெருப்பய்க் காய்ச்சி ஊற்றியது போல எரிவு ஏற்பட்டது.வேதனை தாங்காது கத்தவேண்டும் போல் தோன்றினாலும் மேல் அண்ணமும் கீழ் அண்ணமும் ஒட்டிக்கொண்டு அவனது ஓலத்தைத் தடுத்தன. சிரமப்பட்டுக் கட்டுக்கள் நிறைந்த தனது உடலைச் சந்திரன் பார்த்தான். அவன் பார்த்த முதலிடமே அவனைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

வலது கால் இருந்த இடம் …?

அம்மவால் இரசிக்கப்பட்ட கால்களில் ஒன்று…

எத்தனையோ வீர சாகசங்களை விளையாட்டில் நிறைவேற்ற உதவிய பாதங்கள்…

இவற்றில் ஒன்று இருந்த இடத்தில் பாதி வெறுமையாய்…இதற்கு மேல் தாழவில்லை…அறிவிழந்து மயங்கினான்.

நாட்கள் நத்தையாய் ஊர்ந்தன. சந்திரன் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டான். இந்த நாட்க்களில் அவன் சந்தித்தவையெல்லாம் சோகம் அப்பிய முகங்களே..அவன் அடியோடு வெறுத்த அனுதாபத்தை பிரதிபலிக்கும் முகங்கள் அவை. கால் ஊனத்தால் ஏற்பட்ட கழிவிரக்கத்திலும் அவன் நெஞ்சத்தைச் சுட்டெரித்ததெல்லாம் பிறரின் அனுதாப வார்த்தைகளே..எந்த நேரமும் எதிர்த்துப் பேசிச் சண்டையிடும் சாந்தாவின் முகத்தில் கூடச் சோகமும் அனுதாபமும்தெரிவதை அவனால் உணரமுடிந்தது.

“ஆண்ணை இந்தாங்கோ சுடுதண்ணி .உங்களை எழும்பவிடக் கூடாதாம். படுத்திருங்கோ.” என்ற தங்கைக்குப் பளார் என்ற அறைதான் பதிலாகக் கிடைத்தது. வேறு சமயம் என்றால் அங்கிருந்தபடியே கத்தத்தொடங்கும் தங்கை அன்று அழுதபடி அம்மாவிடம் போய்விட்டாள்.

மனப்பூர்வமாய் அவனுக்கு அனுதாப வார்த்தைகளைக் கூறிய நண்பர்கள் முகத்தில் கரி பூசிக்கொண்டார்கள்.

சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் நிரம்பிய சந்திரனின் முகம் எள்ளும் கொள்ளும் பொரிக்கும் தாச்சியாய் மாறிப்போய்விட்டது.எதிலும் கோபம் .அவன்செயல்களை யாரும் கண்டித்தால் கையிலிருக்கும் பொருட்களைப் போட்டுடைத்தான்.அவன் சுபாவம் இந்த நாட்களில் முற்றாக மாறிவிட்டிருந்தது. அவன் என்ன … அந்தச் சிறிய குடும்பமே மாற்விட்டது..அம்மா எந்நேரமும் தன்னைச் சுற்றி சுற்றிவந்து அடிவாங்கினாலும் தன் குறும்புகளைக் குறைக்காத சந்திரனை எண்ணி மாய்ந்து போனாள். அப்பா மௌனமாய்க் கண்ணிர்வடித்தார்.சாந்தா பழையபடி“அண்ணா எழுந்து என்னை அடித்துப் பேசிச் சண்டையிட மாட்டாரா? என்று ஏங்கினாள்.

அன்று அவனுக்கு ஜெயப்பூர்க் கால் பொருத்தப்பட்டது. முடமான காலில் அவனுக்கென அளவெடுத்துச் செய்யப்பட்ட காலைத் தோற்பட்டியால் பொருத்திவிட்டனர்.அவன் அந்தப் பொய்க்காலோடு நடந்துபயிற்சி செய்ய வற்புறுத்தப்பட்டான்.அந்த மரக்காலோடு நடப்பது பெரும் சித்திரவதையாக இருந்தது..காலில் ஏற்பட்ட எரிவும் சில காலமாய் மனதில் ஏற்பட்ட எரிவும் மரக்காலைக் கழற்றி எறிய வைத்தன.

மருத்துவர் “ஓரு கிழமை போகட்டும்.மனச்சோர்வு என்னும் சந்திரனை விட்டு போகேல்லை”என்று சந்திரனுக்கும் பெற்றோருக்கும் பலவாறு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். மீண்டும் சந்திரன் தனது அறையைத் தஞ்சமடைந்துகொண்டான்.

வெள்ளிக்கிழமை அவனைப் பார்க்க அவனது ஆங்கில ஆசிரியர் வந்திருந்தார்.

அவர் “நீ எழுதின ஆங்கிலக் கட்டுரைக்கு முதற்பரிசு கிடைச்சிருக்கு. பிரசெண்டா இதை நான் உனக்குத் தாரன்.” என ஒரு பார்சலை நீட்டினார்.

இத்தனை துன்பங்களுக்கு மத்தியிலும் சந்திரனின் கண்களில் புதியதொரு ஒளி பிறந்தது. ஆசிரியருக்கு நன்றி சொல்லிப் பரிசிலை வாங்கிய அவன் அவர் போனபின் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு ஒளிநாடா இருந்தது. அந்தக் கசற்றில் மயூரி என்ற பெயர் எழுத்தப்பட்டிருந்தது. போகமுன்பு ஆசிரியர் அம்மாவிடம் “இதைக் கட்டாயம் சந்திரனுக்குப் போட்டுக் காட்டுங்கோ “ என்றூ கூறியது சந்திரனுக்கு ஞாபகம் வந்தது.

“எனக்குப் பொழுது போக மாஸ்டர் வழி சொல்லித்தாரார்.” என்று முனுமுனுத்தபடி அந்தக் கசற்றை அம்மாவைக் கொண்டு டெக்கில் போட்டுப் பார்த்தான்.

அந்தப் படத்தின் பாதிவரையும் எந்தவித உணர்வுமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தவன் மறுபாதியைப் பார்த்த போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் அப்படத்தை போடுவித்துப் பார்த்தான்.கண்களில் அவனையறியாமலே நீர் பெருகிற்று..

அந்த நீர்த்த்துளிகளின் முடிவில் ஓர் எதிர்கால ஒளி தெளிவாகத் தெரிந்தது. அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

ஒரு காலை இழந்துங்கூட மனந்தளராது பொய்க்கால் பூட்டி மயூரி நடன ராணி ஆகலாம் என்றால் நான் ஏன் என்சினியர் ஆகக் கூடாது?” என்ற கேள்வி அவனது மனதில் விஸ்வரூபம் எடுத்தது. இவ்வளவு காலமும் மனதிலிருந்த இயலாமையும் ஊனமும் நீங்கி அது லேசாய்ப் போயிற்று.

“அம்மா நாளைக்கு டொக்டரிட்டைப் போவம்.. தாயாரா இருங்கோ.” என்று சந்திரன் சொன்ன பொழுது அந்தக்குரலிலே தாழாத தன்னம்பிக்கையும் உறுதியும் நிலைத்திருந்தன.

அம்மா அவன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *