கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 6,171 
 
 

வாழ்க்கை முழுவதும் கனவுகள்தான்; கனவுகளே இல்லாத வாழ்க்கை இல்லை. சொல்லப் போனால் முழு மனித வாழ்வுமே கனவுதான். நிகழ்தலையும் நினைவுகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது கூட ஒரு குழந்தமை புரிதலாகத்தான். வேண்டுமானால் திணிக்கப் பட்ட அல்லது விதிக்கப்பட்ட கனவுகள் என்று வேறு படுத்திக் கொள்ளலாம்; அதுவும் நம் திருப்திக்காகத்தான். நகர வாழ்வின் ஒரு எட்டு மணி பின் மாலையில் அந்த பெரிய குடியிருப்பு வளாகத்திற்குள்ளாக, தன்னுடைய ஒரே வெளிஉலகு நுகர்தலாக, உடலுக்கு ஒரு சிறிய வேலையாக நடை பயிலும் அவனுக்கு இப்படியெல்லாம் வெள்ளமாக நினைவோடைகள். இப்படியான நினைவுகளில் பாதியும், சட்டைப் பைய்யில் அலைபேசியில் முணங்கும் அவன் தேர்வுப் பாடல்களில் மீதியுமாய் இயங்கும் அவனுக்கு, வாரத்தின் இரண்டு மூன்று நாட்களில் முன்னிரவு வேளைகளில் அவனுடைய இந்த நடைப் பயிற்சி, முடங்கிக் கிடக்கும் அவன் இயக்கத்தை லேசாக உசுப்புகின்றது. செவிகளுக்குள் திணிக்கப்படும் இசை அவன் ரசனையில்லை; மிகச் சீரான நெருடலற்ற கட்டமைப்பில் வடிவாகிப் பொங்கி பெருகும் பிரவாகமாய் காற்றில் வெளியில் கலந்து கரைந்து செவி வழியில் மனம் சிலிர்த்து மறுபடியும் வெளி பரவி நனைப்பதுதான் அவனுடைய இசை. அதில், அந்தப் போதையின் அனுபவத்தில் எந்தச் சூழலிலும் அவன் சமரசம் செய்வதில்லை. எவருடனும் அதிகப் பரிச்சயமில்லாமல் அதே வேளையில் எதிரில் தென்படுபவர்களில் உடன் ஒருவனாகவும் நிழல் போல் நடமாடுவதில் , அந்த இயக்கத்தில் ஒரு சிறிய திருப்தி இருக்கின்றது; என்றாலும் அதிகமாய் அதில் ஒரு வெறுமையும் பளீரிடுகின்றது.

நாட்கள் முன் சென்று மனிதர்களைப் பின் தள்ளுகின்றனவா? மெளனமாக ஏற்றுக் கொண்டு இயங்குகிறவர்களுக்கு இதில் நெருடல்கள் ஏதுமிருக்க சாத்தியமில்லை. ஆனால் அவனால் அப்படி முடியவில்லை. இன்னமும் அவன் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு புதிய புதிய சித்திரங்களை விரிப்பதாகவும், புதுப் புது இசையில் மலர்வதாகவும், புதுப் புது அர்த்தங்களை தருவதாகவும்தான் படுகின்றது. அதைக் குறித்து அவன் தன்னுள்ளே களி கூறவே முயலுகின்றான். இப்படியொரு நுகர்தலை, புரிதலை இயல்பாய் அல்லாமல், முயற்சிக்க வேண்டிய நிலையில் விடிந்து விட்டது என்பது உரைக்கிற போது பாரமாவது எரிச்சலா இல்லை சுய கழிவிரக்கமா? இல்லை அவன் அதையெல்லாம் உதறி கடந்து விட்டான். ஆனால் அவ்வப்பொழுது ஊறும் நெருடலில் மனம் உளையவே செய்கின்றது. அதையும் துடைத்தெறிய வேண்டும் என்று முயற்சிக்கிறான். இது ஒரு திரிசங்கு சொர்க்கம் என்கிற அனுபவத்தைப் போல.

அந்த ஊஞ்சல் மெதுவாக ஆடி, தன் ஆட்டத்தை நிறுத்தப் போகிற இறுதி அசைவுகளில் இயங்கிக் கொண்டிருந்தது. சற்று முன்பாக அதில் இயங்கிக் கொண்டிருந்த இளம் சிறுமிகள் இருவரும் தங்கள் ஆட்டத்தின் நிறைவை நினைவு கூறும் விதமாக அதை ஆட விட்டு விட்டு விடை பெற்றிருந்தனர். கைகளில் மினுங்கும் அலை பேசியுடன் அதன் சுகிப்பில் தமை மறந்து, கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொண்ட இளம் கூந்தலின் முடிகள் காற்றில் நளினமாய் முன்னும் பின்னும் நடனமிட, இளமை படர்ந்து பரவத் துடித்து களமிறங்கும் அந்த வெளிர் மேனியில், கள்ளமற்ற அந்த விடுதலை உணர்வில், நிலமும் வானும் சீரான வேகத்தில் முன் தள்ளி பின்வாங்கும் அந்த ஊஞ்சலின் நளின நாட்டியம்; அதை அவ்வப்பொழுது தரிசிக்க நேர்கிற பொழுதெல்லாம், மறுபடியும் அவனுக்கு “மோகினி”யைத் தந்த ரவி வர்மாவின் ஆவியை அழைத்து வரத் தோன்றும். காங்கிறீட் வனங்களுக்குள், இரும்புச் சங்கிலிகளில் சதிராடும் இந்த தேவதைகளின் சித்திரத்தை ரவிவர்மா புறக்கணிக்க மாட்டான் என்றே நம்புகிறான்.

பூங்கா என்று பெயர்தானேயொழிய, நாலு சிமிண்ட் பெஞ்சுகளும், இரண்டு ஊஞ்சல்களும், இரண்டு ப்ளாஸ்டிக் சறுக்குகளும், ஏற்ற இறக்க இருக்கைகள் இரண்டுமாக, கட்டாந்தரையும், பராமரிக்கப் படாத புற்களும்தான் அந்த இடத்தை அலங்கரிக்கின்றன. என்றாலும் மலர்களுக்கும் செடிகளுக்கும் போட்டியாக அந்த இடத்தை மழலைப் பட்டாளமும், பதின்ம வயது மற்றும் பதின்மத்தை நெருங்கும் சிறுவர் சிறுமிகளும் மொய்க்கும் போது அவர்கள் ஒவ்வொருவருமே மலர்களும் கனிகளும்தான். மலர்ந்து வளர்ந்து படரும் அந்த இளம் தளிர்களின் ஆர்ப்பாட்டம் கண் கொள்ளாக் காட்சிதான். கால மற்றும் கள முரனாக சிமிண்ட் பெஞ்சுகளில் அமர்ந்து காலாட்டும் பெருசுகளை வளர்ந்து தழைத்து தோயும் பெரிய மரங்களாகக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அநேகமாக மாலைகளிலும் முன் இரவுகளிலும், விஷேசமாய் வெள்ளி, சனி, ஞாயிறு இரவுகளிலும் அந்த இடம் களை கட்டவே செய்கின்றது. வாழ்க்கை வானவில்லாய் ஆர்ப்பரிக்கும் அந்த அழகை ஸ்பரிசிக்க, தரிசிக்க, அந்த தரிசனத்தில் நிறைவுற, மறுபடியும் சிலிர்க்கும் மனதின் மழையில் நனைந்து தோய்வது அவனுக்கு பிரியமே. இதில் என்ன தடை? சரசரவென்று மத்தாப்பாய் அவர்கள் உரையாடலில் ஒளிர்ந்து மலரும் அந்த உறவாடல் – அந்த வார்த்தைகள் – சற்று தள்ளி நின்று தரிசிக்கிற அவனுக்கு அதிகம் புரிவதுமில்லை; பிடிபடுவதுமில்லை – அது ஒரு விஷயமுமில்லை. ஒருவருக்கொருவரான கேலி, கிண்டல், நைய்யாண்டிகள், கிரிக்கெட், சமூக வலைத் தளங்கள் ப்ரசவித்த பரிமாறல்கள், வெகு அரிதாய் விலகி நின்று அவதானிக்கிற அரசியல் அசூயைகள் என்கிற கலவையில், வெடித்துச் சிதறும் அவர்கள் உரையாடல் அந்த வளாகத்தின் இரவை அதிரடித்துக் கொண்டிருக்கும். ஒரு கை தேர்ந்த இயக்குநரின் கேமிரா கூட இப்படியொரு அழகியலின் இலக்கணத்தை எப்பொழுதாவதுதான் படம் பிடிக்கும். அது நிஜமாய், இலவசமாய் கிடைக்கிற போது அந்த புலனின்பத்தை நுகர என்ன தடை?

மனித வாழ்வின் இயக்கத்தில் எத்தனையோ சித்திரங்கள் காணக் கிடைக்கலாம். ஆனால் அது எப்பொழுதும் இயல்பாய்க் கிட்டுவதில்லை. நெடுந்தூரப் பயணங்களில் நெடுஞ் சாலைகளில் பேருந்து விரைந்து தீவிரிக்கும் போது கண்கள் உள்வாங்க மறைந்து பின் வாங்கும் பிம்பங்கள்; – சாலையின் பரபரப்பான இயக்கத்தை கேலி செய்வது போல மர நிழல்களில் வெறிக்கப் பார்த்த வண்ணம் வெற்றிலை மெல்லும் பெருசுகள், மைதானங்களில் உற்சாகமான கிரிக்கெட்டில் சிறுவர்கள் இளைஞர்கள், பள்ளி முடிந்து கலைந்து செல்லும் மழலைப் பட்டாளம், வாலிபத்தின் வாசலில் விடு விடுவென கண்கள் பரபரக்க ஒற்றையாய் அந்த காத்திருப்பின் பரிதவிப்பில் – இப்படி இந்த காணப்படாத காணல்களின் விகசிப்பை இவன் தவற விடுவதேயில்லை.

புறநகர் ரயில் பயணங்கள் இன்னமும் சுவராஸ்யமானவை. உச்ச நீதி மன்றமே வெட்கித் தலை குனியும் மருமகளின் நியாயத்தை தனக்கே உரிய பிரேரனையுடன் தன் வயது சஹாவுடன் ஆலாபிக்கும் மத்தி வயது தாண்டிய தாய்க்குலம்; தேசத்தின் அரசியலை சில சமயங்களில் தங்களது எளிமையான தர்க்க நியாயங்களில் நிறுத்துவதும் பல சமயங்களில் தங்களின் ஞான வெளிச்சத்தில் அபத்தமாய் அடையாளம் காண்கிற ஓட்டுப் போடும் இந்நாட்டு மன்னர்கள்; ஐந்து ருபாய் கடலை மிட்டாய் வியாபரத்தில் தன் ஒளி மிகுந்த எதிர் காலத்தை கொண்டாடும் பார்வை குறைவான வாலிப சகோதரன்; எல்லாவற்றுக்கும் மேலாக “ அதல்லாம் ஒன்னும் வேனாம், இந்த ஒரு ராத்ரிக்கு பல்லக் கடிச்சிக்கிட்ரு; நாளக்கு நாம யாருன்னு அவன் தெரிஞ்ச்சுக்குவான்; சேந்தமங்கலம் பங்காளிக்கு அவ்ளவு இருக்கும்னா விக்ரவாண்டில காத்தாடிகிட்டா இருக்கோம்? நீ பேசாம இரு; நான் வந்து பேசிக்கிறேன்” இப்படி அலைபேசியின் அவதாரத்திற்குப் பிறகு அதன் மூலமாகத் தங்கள் தபர்தஸ்தையும் ஆளுமையையும் எதிராளிக்கு சொல்லுகிற சாக்கில் சக பயணிகளுக்கு அறியத் தருகிற ஒரு அற்ப புரிதலில்; ஓடும் ரயிலின் ஓசையையும் மீறி ஒலிக்கும் மனித வாழ்வின், சமூகத்தின் சப்தங்களும் கூட அவனுக்கு அற்புதமான சித்திரங்கள்தான்.

இந்த நகரத்தின் நெரிசல் மிகுந்த தெருக்களில் ஒன்றையொன்று முறைத்து குரைத்து எல்லாம் கோடி ருபாய் பயணமாய் பரபரக்கும் வாகனங்கள். இடமில்லாமல் நீயா? நானா? தவறு செய்தது யார் என்று எவருக்குமே புரியாமல் ஒதுங்க மறுத்து சுயம் மோதும் போட்டி நடக்குமே? – அதையே அவன் அவ்வப்பொழுது ரசிப்பதுண்டு. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் அவரை வாடகைக்கு அழைக்கும் பயணிக்குமான உரையாடல் அவனைப் பொறுத்த மட்டும் வேத வாக்கியங்களைக் காட்டிலும் தொன்மையானதாகத் தோன்றுகிறது. இப்படியாக ஆட்டோ என்கிற வாகனத்தை மனிதன் கண்டு பிடிப்பான்; எவ்வளவு பெரிய அனுபவம் வாய்ந்த ஓட்டுநரும் கூட அதன் நியாய வாடகை தெரியாமல் திணறுவார்கள் என்று முன்னறிந்த ஆண்டவன் அப்பொழுதே இந்த பேர உரையாடலை எழுதி வைத்து விட்டான் என்றே தோன்றுகிறது. நெரிசலான பேருந்துகளில் மூச்சுத் திணறும் மனிதம் மொத்தமாய் எல்லோருக்குமாய் சேர்ந்து சுவாசிப்பதைப் போலத்தான் அவனுக்குப் புரிகின்றது. இப்படி வாழ்வின் எல்லாச் சித்திரங்களையும் உள்வாங்குவதைப் போலத்தான் , குடியிருப்பு வளாகத்தின் வாண்டுகள் மற்றும் வாலிபத்தின் சித்திரங்களையும் அவன் தரிசிக்கிறான்; தகிக்கிறான்.

என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் என்று விடாய்க்கிறவனின் கேள்விக்கு ஒரு வேளை இந்த பாரமற்ற சிறுவர் சிறுமிகள் இளைஞர்களின் கும்மாளம், ஆர்ப்பாட்டம் பதில் தரலாம். பதில் இருக்கிறது என்பதுதான் அவனின் நிறைவு. சில சமயங்களில் அது ஒரு பரிதவிப்பாய் தொடர்வதுதான் இடறலாகிறது. வாலிபம் என்பது பொய் வேஷமாய் இருக்கலாம்; ஆனால் உண்மையின் வாசம் அந்தப் பொய்யிலிருந்துதான் புலப் படுகிறது; புறப்படுகிறது என்பதுவும் உண்மைதான். வாழ்வெனும் புதிர் சில சமயங்களில் புரிவது போலவும்; பல சந்தர்ப்பங்களில் மனக் குகைக்குள் புதைவது போலவும். சற்றே விலகி நிற்கும் தரிசனத்தில், மணித்துளிகள் மறுபடியும் துளிர்க்கும் அனுபவத்தில் மனம் சிலிர்க்கின்றது; வாழ்வில் இன்னமும் கூட அர்த்தம் இருப்பதாகப் புலப்படுகிறது. ஒருவனுக்கு முடிகிற நாட்கள் வளரும் சந்ததிக்கான துவக்கமும் துலக்கமாகவும் விரிய வேண்டும் என்கிற தவிப்பு தேவை என்றால் அதன் நியாயம்? அவர்களின் ரசனையையும், ஆர்ப்பாட்டத்தையும், ஆரவாரத்தையும் அந்த அழகையும் உத்தரவாதமாக்குவதுதானே? இவ்வளவு பெரிய கரிசனத்தை விதைக்கும் அந்த தரிசனத்தை எப்படித் தவறென்று சொல்வது?

வளாகத்தை சுற்றும் ஒரு பெரிய சுற்றை முடித்து பூங்காவை நெருங்கும் போது மூன்று நான்கு பதின்ம வயது தோழியர் மற்றும் ஆறு இளைஞர்களின் கூட்டம் பூங்காவின் எதிரே நிறுத்தப் பட்டிருக்கும் கார்களில் சாய்ந்தும், ஒற்றைக் காலை உயர்த்தியும் எதிரும் புதிருமான உற்சாக விவாதத்தில் அந்த இடத்தை அதிரடித்துக் கொண்டிருந்தனர். பாதி ஆங்கிலம், பாதி இந்தி, மீதி தமிழிலிலென்று கிண்டலும் கேலியுமாய் இளமை கரை புரண்டோடிக் கொண்டிருந்தது. அவ்வப்பொழுது கைகளிலிருக்கும் அலை பேசிகளின் தகவல்களையும் பரிமாறிய வண்ணம் பகிர்ந்து கொள்ளவும் பரிகாசம் செய்யவும் அவர்களுக்குள் எவ்வளவோ இருக்கிறது. ஒரு இளைஞன் சற்று அகலமான டயர்களால் தானே வடிவமைத்திருக்கும் அந்த விநோத சைக்கிளில் அவர்களை ஒரு சுற்று; பின்னர் வேகமாய் அந்த திறந்த வெளியில் ஒரு முறை பறந்து மறுபடியும் ஒரு சுற்று. போகிற போதே சிறிது தூரத்திற்கு முன் சக்கரத்தை மாத்திரம் உயர்த்தி தூக்கிக் கொண்டே – பின்னர் தொடர்வது – இப்படியாய் அவன் குறி பார்க்கும் அஸ்திரம் இன்னமும் பலிக்காத ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாத முகத்துடன் .

ஒரு சகா கண் பொத்தி மற்றவர்கள் ஒளிந்து கொள்ளும் விளையாட்டில் இரண்டு சிறுவர்கள் இந்த இளைஞர்கள் பின்னால் தங்களை ஒளித்துக் கொள்கின்றனர்; இளமையின் பின்னால் மறையும் மழலையை நடித்து நடத்துவது போல . முழு மனித வாழ்வும் இந்த வாலிப சிறுவர் பட்டாளத்திற்குப் பின்னால் ஒளித்துக் கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குப் பட்டது. ஒளித்துக் கொண்டிருக்கிறதா? இல்லை ஒளிர்ந்து கொண்டிருக்கிறதா? நிகழ் காலத்தின் வெளிச்சத்தில் வரும் நாட்களை இருளென்றா எதிர் கொள்ள முடியும்? அதிக பட்சம் வெளிச்சம் படரும் தூரம் கடந்து என்று அறியலாமா? என்றாலும் அதற்கென்ன அவசரம் இப்போது? நிற்கக் கிடைத்த நிமிஷங்களை விட்டு விட்டு தூரம் தெரியும் நாட்களைத் துரத்த வேண்டிய அவசியத்தில் இல்லாத அவர்களுடைய பருவம் பரவசமாய் இருப்பதுதான் இயற்கை; இயல்பு. சற்று நேரம் நின்று வலித்த காலினால் ஏற்பட்ட பெருமூச்சுடன் அவன் நகர்ந்தான்.

யாருக்கும் எதற்கும் காத்திராமல் நாட்களும் வாழ்வெனும் இயக்கமும் பறந்து கொண்டே இருக்கின்றன. சில மணித்துளிகள் நகம் கடிக்க வைத்த வெறித்த பார்வைகளிலும் மன ஓட்டத்திலும் உறைந்திருக்கலாமே அல்லாமல், அவை நாட்களாய், வாரங்களாய், மாதங்களாய் வருடங்களாய் பறந்தோடி விட்டன. கல்லூரி நாட்களில் புகைக்காய் ஒதுங்கும் கேன்டீனும், மகளிர் கல்லூரியின் பேருந்திற்காய் காத்திருந்து விட்டு கலைந்து சென்ற அனுபவமெல்லாம் இப்பொழுதும் பளீரிடுகின்றது. வாழ்க்கை முழுவதும் சந்திப்புகளும், எல்லா சந்திப்புகளும் குறிப்பிட்ட திருப்பத்தில் பிரிவுகளுமாய், கல்லூரி நாட்களின் உறவென்று ஒன்று கூட மிச்சமாகவில்லை. அலுவலகத்தின் நெருங்கிய நண்பன் எப்பொழுதாகிலும் சொல்வது – “நம்மோட யோகம் மாப்ள அப்படி; ஒரு ரெண்டு தலமுற முந்தி பொறந்துட்டோம்” என்கிற அவனுடைய பெருமூச்சில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. ஐந்தாம் வகுப்பில் கிழிந்த பள்ளி தோள்பைய்யின் துவாரத்தின் வழியாக எதிர் பெஞ்சு முத்துலட்சுமியை இயல்பாய் பார்க்க, வாத்தியார் அதை மிகப் பெரிய ஆக்ரமிப்பாய், உரிமை மீறலாய் கண்டித்து ரெண்டு பீரியடுக்கு பெஞ்சில் நிற்கவைத்த காலின் – முதுகின் – அந்த பிஞ்சு மனதின் வலி இப்பொழுதும் ஆழ தைத்திருக்கிறது. எப்படியானாலும் இன்னமும் மனம் இப்படியெல்லாம் பரபரப்பதெல்லாம் சரியா? இல்லை சிறிய நெருடலா? சில கெளவ்ரவமான வரையறைகளுக்குள் மனம் இளமையாயிருந்தால் என்ன கெட்டுப் போகிறது?

“யவனம் கரைந்த கண்ணாடியில்

நினைவுகள் என்கிற ரசத்தை ஒட்டலாம் –

திரும்பிப் பார்த்து வாசம் நுகர

வாலிபம் ஒரு கட்டாயம் இல்லை”

என்கிற கவிதை வரிகளே நினவில் வருகின்றன. கண்களில் விழும் காட்சிகளை உள்வாங்கும் காணல்கள் ப்ரச்னையாவதில்லை. அதைப் பார்க்கிற போதுதான் அதன் உண்மையும் அழகும் மாசு படுகின்றது. பார்க்கிறவனின் பார்வை முன்னெழுகிற பொழுது எல்லாம் சிதைகின்றது. அறிந்த, தெரிந்த, தெளிந்த உண்மையை வார்த்தைகளில் வடிக்கும் போதே அதன் சாரம் நீர்த்துப் போகிறது என்கிற தத்துவார்த்த வெளிச்சம் போலவா இதுவும். அவனுக்குப் பிடிபடவில்லை. வாழ்வின் ஒரு அன்றாட இளமைச் சித்திரத்தில் இப்படி உளைய வேண்டுமா என்ன என்று அவனுக்குள்ளேயே கேள்வி எழுந்த போது தன்னையுமறியாமல் சிரித்துக் கொண்டான்.

தன்னுடைய கூட்டிற்கு வந்து கைய்யிலிருக்கும் சாவியால் அவனே கதவு திறக்க – ஆச்சியும் அய்யரும் மாத்திரம்தான் என்றான பிறகு, ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்யாமல் இருக்கும் ஒரு கவ்ரவமான புரிதலில், ஆளுக்கொரு சாவி என்ற நடைமுறையில் – உள்ளே சுவராஸ்யமான பேச்சு சத்தம் கேட்டது. கதவு திறந்த சத்தம் கேட்டு “ தாத்தாவாயிருக்கும் , பாரு” என்ற மனைவியின் உத்தரவில் உள்ளேயிருந்து ரெண்டு வயது வம்ச வாரிசு “தாத்தா” என்று ஓடி வந்து காலைப் பிடித்து இடுப்பில் துள்ளி ஏற, தூரத்தில் பூங்காவில் சிறுவர்களின் “ஏய் ஒளிஞ்சுக்கோ, ஒளிஞ்சுக்கோ” என்கிற எச்சரிக்கையும், தேடுகிறவனின் “ரெடியா; ரெடியா?” என்கிற வார்த்தை விளையாடல்கள் அச‌ரீரியாய் இவன் காதுகளில் விழுந்தன. உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கவும் பேத்தி “தாத்தா – ஊஞ்சல் ஊஞ்சல்” என்று கதவை நோக்கி கை காட்டுகிறாள். அவ்வப்பொழுது தலை காட்டும் மகனும் மருமகளும் பிரசன்னமாகியிருக்கும் வருகையில் அவன் இல்லம் இப்பொழுது சத்தங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அறையிலிருந்து வெளியே வந்து கொண்டே அவனுடைய முப்பத்தாறு வருட முணங்கல் “ டேய் ஒங்க தாத்தா இப்பத்தான் ஊர் சுத்தி வந்து சேந்த்ருக்கார்ல. வெளிய பனி அடிக்கு; காலேல வெயில் வந்ததும் போலாம்” என்று பேத்தியை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள். ஆச்சியின் நிமிட நேர அரியணைக்குப் பிறகு மறுபடியும் இவனிடம் தாவினாள். “தாத்தா – தாத்தா” என்று தோள்களைப் பிராண்டி வாசற் கதவைக் காண்பிக்கும் பேத்தியை தலைகோதி முத்தமிட்டவன், மருமகளிடம் பேத்தியின் மங்கிக் குல்லாயைக் கேட்டான். “ஏல ஒங்க தாத்தா முப்பது வருஷமா எனக்குக் குல்லா போட்டுட்டாரு; இப்ப ஒனக்குப் போடுறாரு; உஷார இருந்துக்க்கோடா செல்லம் “ என்று பேத்தியைக் கொஞ்சி விட்டு “இவ்ள நேரம் சுத்தியாச்சுல்ல; இப்ப பேத்திய சாக்கு வச்சுக்கிட்டு” என்று இவனிடம் முறைத்து விட்டு மகனிடம் தன் புலம்பலைத் தொடர்ந்தாள். “எங்க சின்னப் புள்ளக நின்றக் கூடாதுடா; அங்ன நின்னுக்கிட்டு அதுகளச் சீண்டிக்கிட்டு – பூராம் விடலப் புள்ளகளா நிக்ற இடத்துல இவருக்கு என்னடா வேல? வயசு வருதா? போதா? சரியா? எதுவும் புரியுதா? நானும் ஓட்டிட்டேன் போ”. கொண்டு வந்திருந்த மடிக் கணனியில் ஊன்றியிருந்த மகன் அதை மூடி விட்டு அப்பாவிடம் ஒரு மெலிதான புன்னகையுடன் “சீக்கிரம் வாப்பா” என்றவன் அம்மா விடம் திரும்பி “இன்னும் முப்பது வருஷம் கூட இப்டியேதான் ஓட்டுவ; ஆல் தெ பெஸ்ட்” என்று சீண்டினான். “நீங்கள்ளாம் நாலு எழுத்து படிச்சிட்டீங்கடா; நடப்பு என்ன தெரியுது? என்ன புரியுது?” என்று மறுபடியும் சீறி விட்டு சமையலறைக்குள் புகும் மாமியாரை, இந்த ருசிகரமான நாடகத்தின் அலுப்பு தட்டாத பார்வையாளரான மருமகள் உள்ளே தொடர்ந்தாள். மருமகளுக்கு ஓதப்படும் மந்திரத்தின் புலம்பலை ரசித்தவனாய் சோபாவில் சாய்ந்தான் மகன். எதுவானாலும் அம்மாவின் அரவணைப்பு, அருகிருப்பு அது அரற்றலானாலும் அதன் சுகமே தனிதான். இன்னும் எத்தனை நாள் இதெல்லாம் என்கிற யதார்த்தம் சுடவே செய்கின்றது.

சாப்பிட்டு விட்டு, பாதி உறக்கத்தில் மருமகளின் தோளிலிருந்து “பை” சொல்லிய பேத்தியையும் மகனையும் அனுப்பி விட்டு அவர்கள் இருவரும் வீட்டினுள் நுழைந்த போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. “வாசல் லைட்ட அனைங்க” என்ற அன்றைய கடைசி கட்டளையை கூறி விட்டு துணை படுக்கச் சென்றது. தோள்களில் இன்னமும் பேத்தியின் பாரமும், ஈரமும் அழுத்துவதை உணர்ந்தவனாய், ரசித்தவனாய் தன் அறையில் படுக்கையில் சாய்ந்தவனுக்கு “உலகம் என்கிற தோட்டத்தில் வசந்த காலம் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கிறது; அந்த அழகிய காட்சியை கண் திறந்து பார்த்திடுக” என்ற உருதுக் கவிதை நினைவில் வந்தது. புரண்டு படுத்தவனின் மனக் கண்களிலும் நினைவோடையிலும் காற்றின் கிசுகிசுப்புடன் ஊஞ்சல் ஆடிக் கொண்டுதானிருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *