உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,437 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முருகானந்த பவன் என்ற அந்தப் பிரபல ஹோட்டலின் பெயர்ப் பலகையைக் கவனித்ததும் டாக்சியை நிறுத்தும்படி சாரதியிடம் கூறி, மீற்றரைக் கவனித்துக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்சீட்டில் இருந்த பார்சலை வெளியே இழுத்தெடுத்தான் திருநாவுக்கரசு. பார்சலில் வரிந்து கட்டியிருந்த கயிற்றிலே பிடித்து, அதனைத் தூக்கிக் ஹோட்டலுக்குக் கொண்டு வருவதற்குள் கயிறு அவனது உள்ளங் கையை அழுத்திச் சிவக்க வைத்துவிட்டது. சினத்துடன் பார்சலை அந்த ஹோட்டலின் வாசலிலேயே பொத்தென்று போட்டுவிட்டான்.

ஊரிலிருந்து புறப்படும்போது செல்லாச்சிக் கிழவி தனது மூத்த மருமகனிடம் இந்தப் பார்சலைக் கொடுத்துவிடும்படி அவனை வேண்டியிருந்தாள்.

இரவு றயிலில் வந்ததால் நித்திரை கொள்ளமுடியவில்லை. கண்கள் எரிச்சல் எடுத்தன. றயில்வேறு தாமதமாகித்தான் கொழும்பை வந்தடைந்தது. ‘பாழாய்ப்போன இந்த யாழ்ப்பாண றயில் எப்பொழுது தான் நேரத்திற்கு வருகிறது’ என மனதில் அலுத்துக்கொண்டான். பசி வயிற்றைக் கிள்ளியது.

ஹோட்டலின் முன்புறத்தில் மேசையருகே நிற்பவர் திருநாவுக்கரசுவை கவனிக்கவில்லை. காலை நேரமானதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலே பிள்ளையார் படம், பக்கத்தில் முருகன் படம், அதையடுத்து லட்சுமி படம். அப்போதுதான் அந்தப் படங்களுக்கு புதிய மல்லிகைச் சரம் மாட்டியிருக்கிறார்கள். இடது பக்கத்து மூலையில் இருந்த அந்த அழகான புத்தர் படத்தில் மட்டும் மல்லிகைச் சரத்திற்குப் பதிலாகக் கடதாசி மாலையொன்று போடப்பட்டிருக்கிறது.

மல்லிகைச் சரத்தின் வாசனை இதமாக இருந்தது. பணம் வைக்கும் அந்தப் பெரிய இரும்புபெட்டியின் இடுக்கில் செருகியிருந்த ஊதுபத்தி புகைந்து கொண்டிருந்தது.

வெளியே கண்ணாடிப் பெட்டியில் நிறைத்து வைத்திருந்த பேரீச்சம்பழங்களின்மேல் இரைச்சலோடு ஈக்கள் மொய்ப்பதுதான் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.

முன் மேசையருகே நிற்பவர் இப்பொழுதும் தனது வேலை யிலேதான் கவனமாக இருந்தார். உள்ளேயிருந்து வருபவர்கள் கொண்டுவரும் ‘பில்’களைப் பார்த்துப் பணத்தை வாங்குவதும் மீதிக்குச் சில்லறையை எண்ணிக் கொடுப்பதுமாக இருந்தார்.

இவர்தான் செல்லாச்சிக் கிழவியின் மருமகனாக இருக்குமோ?

செல்லாச்சிக் கிழவி தனது மகளை, உரும்பராயைச் சேர்ந்த சீவரத்தினம் என்பவருக்கு மணமுடித்துக்கொடுத்திருக்கிறாள் என்பதும், அந்தச் சீவரத்தினம்தான் முருகானந்தபவன் என்ற இந்தப் பிரபல ஹோட்டலின் உரிமையாளர் என்பதுந்தான் திருநாவுக்கரசுவிற்குத் தெரிந்த விஷயங்கள். திருநாவுக்கரசு கொழும்பில் ஐந்தாறு வருஷங்களாக வேலைபார்த்து வந்தபோதிலும், இந்த முருகானந்த பவனுக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதனால் சீவரத்தினத்தை அவன் இதுவரை பார்த்ததுமில்லை.

மேசையருகில் வேலையில் மூழ்கியிருந்தவர் தற்செயலாகத் திரும்பியபோது திருநாவுக்கரசுவைக் கவனிக்கிறார். என்ன வேண்டும் என்பதுபோல அவரது பார்வை அவன்மேல் படருகிறது.

“அண்ணை நீங்கள்தான் சீவரத்தினமோ?”

“ஓம், என்ன விஷயம்?”

“செல்லாச்சி ஒரு பார்சல் தந்துவிட்டவ; அதைத் தரத்தான் வந்தனான்.”

“ஊரிலயிருந்து வாறியளே? நான் வேலைப் பிராக்கில உங்களைக் கவனிக்கேல்ல…. தம்பியும் மாவிட்டபுரத்திலையோ இருக்கிறது?”

ஆம் என்பதற்கு அடையாளமாகச் சிரித்துக்கொண்டே தலையை மட்டும் அசைக்கிறான் திருநாவுக்கரசு.

“நான் உங்களை முந்தி ஒருநாளும் பார்த்ததில்லை, எனக்கு மாவிட்டபுரத்து ஆட்களை அவ்வளவு தெரியாது. அங்கை வந்தாலும் மனுசி வீட்டிலை ரெண்டு மூண்டு நாள் நிண்டிட்டு வந்திடுவன். தம்பி கொழும்பிலை எங்கை இருக்கிறியள்?”

“வெள்ளவத்தையிலை.”

“டேய் பெடியா உந்தப் பார்சலை உள்ளுக்கு எடுத்து வை.”

சாப்பாட்டு மேசையைத் துடைத்துச் சுத்தஞ்செய்து கொண்டி ருந்தவனை அழைத்து உத்தரவிடுகிறார் சீவரத்தினம்.

பெடியன் பார்சலை சிரமத்துடன் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு உள்ளே போகிறான்.

யார் யாரோ பில்களைக் கொடுத்து அவற்றிற்குரிய பணத்தையும் கொடுக்கிறார்கள். சீவரத்தினம் வேலையைக் கவனித்தபடியே கதைகொடுக்கிறார்.

“அப்ப ஊரிலை என்ன விசேஷம் தம்பி; மழை கிழை பெய்யுதே?”

திருநாவுக்கரசு பதில்கூற எத்தனித்தபோது அருச்சனைத் தட்டுடன் எங்கிருந்தோ வந்த பையன் ஒருவன் அந்த தட்டைச் சீவரத்தினத்தின் முன்பாக வைத்துவிட்டு உள்ளே போகிறான்.

அவனும் இங்கு வேலை செய்பவனாகத்தான் இருக்க வேண்டும். அவனை முன்பு எங்கோ பார்த்தது போன்ற நினைவு திருநாவுக்கரசுவுக்கு எற்பட்டது. எங்கே பார்த்திருக்கக்கூடும்?

“இண்டைக்கு வெள்ளிக்கிழமை தம்பி, அதோட என்ரை மூத்தவன் முருகானந்தன்ரை பிறந்தநாள். ஒருக்கால் கோயிலுக்குப் போகலாமெண்டால் அங்காலை இங்காலை விலக நேரமில்லை. அதுதான் கடையிலை நிக்கிற பெடியனை அனுப்பி அருச்சனை செய்விச்சனான். பின்னேரந்தான் நான் கோயிலுக்கு போகவேணும்.”

சீவரத்தினம் அருச்சனைத் தட்டிலிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்கிறார்.

திருநாவுக்கரசுவிற்கு வந்த வேலை முடிந்துவிட்டது. புறப்பட ஆயத்தமாகிறான்.

“அப்ப நான் போட்டுவாறனண்ணை.”

“பார் தம்பி, நான் வேலைப் பிராக்கிலை ஏதோ கதைச்சுக் கொண்டிருக்கிறன், தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.”

திருநாவுக்கரசுவின் பதிலை எதிர்பார்க்காமலே மேசையில் கிடந்த அழைப்பு மணியை அடிக்கிறார் சீவரத்தினம்.

கோவிலுக்குப் போய்வந்த அதே பெடியன்தான் வருகிறான்.

“ஐயாவை உள்ளுக்குக் கூட்டிக் கொண்டு போ.”

திருநாவுக்கரசுவுக்கு றயிலில் பயணம் செய்த களைப்பு, தேநீர் குடித்தால் தீரும்போல இருந்தது. பெடியன் திருநாவுக்கரசுவை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு “என்ன சாப்பிடுறியள்?” என விநயத்துடன் வினவுகிறான்.

“ஒரு டீ மட்டும் கொண்டு வா.”

உள்ளே தேநீருக்கு ஓடர் கொடுத்துவிட்டு ஒரு தட்டில் பலகாரங்களை எடுத்துவந்து திருநாவுக்கரசுவின் முன்பாக வைத்துவிட்டுச் சிரிக்கிறான் அவன்.

“தம்பி உன்னை எங்கையோ பார்த்திருக்கிறன். நினைவு வருகுதில்லை.” திருநாவுக்கரசு பெடியனிடம் கூறுகிறான்.

“ஐயா என்னைச் சின்ன வயசில பாத்தனீங்கள். இப்ப மறந்திட்டியள்போல இருக்கு ; நானும் உங்கடை ஊர்தான்.”

“எங்கை மாவிட்டபுரமே?”

“நாங்கள் இருக்கிற இடத்திற்கு வாசிகசாலையடி ஒழுங்கையால உள்ளுக்குப் போகவேணும்.

திருநாவுக்கரசுவின் மூளைக்குள் ஒரு பலமான தாக்கம் ; இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.

‘இவன் கள்ளிறக்கிற சின்னவன்ரை மோன்!’

திருநாவுக்கரசுவுக்கு வடை தொண்டைக்குள் விக்கல் எடுக்கிறது.

ஓடர் கொடுத்த தேநீரைப் பெடியன் கொண்டுவந்து திருநாவுக்கரசுவின் முன்னால் வைக்கிறான்.

“ஐயாவை நான் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ல அடிக்கடி பாத்திருக்கிறன். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கோயிலுக்கு வாறனீங்களெல்லே.” பெடியன்தான் சொல்லுகிறான்.

திருநாவுக்கரசுவிற்கு இப்போது தேநீர் புரையேறுகிறது.

“நான் போட்டுவாறன்.”

முன்வாசலுக்குத் திருநாவுக்கரசு வந்தபோது, “என்ன தம்பி அவ்வளவு கெதியாய் வந்திட்டியள், ஏன் சாப்பிடேல்லையே?”எனச் சம்பிரதாயமாகக் கேட்கிறார் சீவரத்தினம்.

இந்தப் பெடியனின் விஷயம் சீவரத்தினத்திற்குத் தெரியாதா ? அல்லது தெரிந்திருந்தும் அவனை இங்கு வேலைக்கு வைத்திருக்கிறாரா?

“அண்ணை உந்தப் பெடியனை எங்க பிடிச்சனீங்கள்?”

“எந்தப் பெடியனைப் பற்றித் தம்பி கேட்கிறாய்?”

“கோயில்லை அருச்சனை செய்து கொண்டுவந்த பெடியனைப் பற்றித்தான் கேட்கிறன்.”

“அவன் தம்பி உங்கை பம்பலப்பிட்டியிலை ஒரு வீட்டிலை வேலைக்கு நிண்டவன். அங்கை சம்பளம் காணாதெண்டு அந்த வேலையை விட்டிட்டு இங்கைவந்து வேலை கேட்டான் ; நல்ல பெடியன் தம்பி.” பெடியனைப் பற்றிக் கூறியபோது இவர் ஏன் அவனைப் பற்றி விசாரிக்கிறார் என்ற எண்ணமும் சீவரத்தினத்தின் மனதில் எழுந்தது.

“அண்ணை நான் சொல்லுறனெண்டு குறை நினையா தையுங்கோ, உங்கட கடையில நிற்கிற பெடியன் ஆர் தெரியுமே? எங்கடையூர்ச் சின்னவன்ரை மோன் எல்லே.”

“அதார் தம்பி அந்தச் சின்னவன்? எனக்கு எங்கடையூர் ஆக்களை அவ்வளவுக்குத் தெரியாதெண்டெல்லே சொன்னனான்.” சீவரத்தினம் கூறுகிறார்.

“சின்னவனும் அங்கை கொஞ்சப் பேரும் தங்களையும் கோயிலுக்கை விடவேணுமெண்டு கலகப்படுத்தினவையெல்லே.”

சீவரத்தினம் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை யாராவது கேட்டுக் கொண்டிருக் கிறார்களா என்பதைக் கவனித்தார். நல்ல வேளையாக வேறு எவரும் அந்த இடத்தில் இல்லை.

சிறிது நேரத்தின் பின்னர்தான் சீவரத்தினத்தால் தன்னைச் சுதாகரித்துக் கொள்ள முடிந்தது. அவரது முகம் இப்போது சிறிது சிறிதாகத் தெளிவு பெறத்தொடங்கியது.

“தம்பி பிழைக்க வந்த இடத்திலை இதையெல்லாம் பார்க்கேலாது…. நானில்லாத நேரத்திலை அந்தப் பெடியன்தான் கடையைக் கவனிச்சுக்கொள்ளிறவன். அவனைப்போல ஒரு நம்பிக்கையான ஆள்கிடைக்காது.”

சீவரத்தினம் கூறிய வார்த்தைகள் திருநாவுக்கரசுவைச் சிந்திக்க வைத்தன. அவர் கூறியதை ஆமோதிப்பதுபோல் தலையசைத்தபடியே அவன் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

– கதம்பம், நவம்பர் 1971.

– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.

Print Friendly, PDF & Email
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[2] ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *