உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 1,503 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘காலையில் சூரியன் உதயமாகும்போதும், மாலையில் சூரியன் மறையும் போதும் உங்களைப் பற்றிய நினைவே தோன்றும். இனிமை யான அந்த இரவுகளை மறக்கவே முடியாது.

இவன் பெயர் கிளேட்டன். பிரிட்டிஷ்காரன். கடற்படைப் பிரிவைச் சேர்ந்தவன்.

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி மூன்றாம் வருடம் ஆடி மாதம் பத்தாம் நாள் இவன் செத்துப் போயிருக்கிறான்.

இவனுக்கு வயது இருபதுதான்.

இவனுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்லறைமேல் இவ்வாக்கியங் களும், விபரங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன!

காலையில் சூரியன் உதயமாகும் போதும், மாலையில் சூரியன் மறையும் போதும் உங்களைப் பற்றிய நினைவே தோன்றும். இனிமை யான அந்த இரவுகளை மறக்கவே முடியாது.’

இப்படியொரு வாக்கியத்தை யார் எழுதியிருக்க முடியும்? அவனின் மேல் அன்பு கொண்ட ஒரு ஆணா? நிச்சயமாக இருக்காது. அவனுக்கு வயது இருப்பதுதான். ஆனாலும் அவனோடு கழித்துவிட்ட இரவுகளை நினைத்துக் கொண்ட ஒருத்தி, தன் மனதைப் பிழிந்து இப்படி எழுதி வைத்திருக்க வேண்டும்!

“நீங்கள் நிரந்தரமாகப் பிரிந்து போனது சாகவல்ல; என் இதயத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கவே’

இவர் பெயர் ரூஸ்வாட். அமெரிக்கன். விமானப்படைப் பிரிவைச் சேர்ந்தவன். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி மூன்றாம் ஆண்டு தை மாதம் ஏழாம் நாள் இவன் செத்துப் போனான்.

இவனுக்கும் வயது இருபத்திரண்டுதான். இவனுக்கும் காதலி ஒருத்தி இருந்து இப்படி எழுதி வைத்திருக் கிறாள்.

இவள் உயிரோடிருந்தால், அவன் நினைவு இவளை உருக்கி எலும்புக்கூடுமாக்கி இருக்கும்.

வீட்டை விட்டு வெகு தொலை சென்றுவிட்டீர்கள். ஆனால், என் இதயத்தை விட்டல்ல.

இவன் ஒரு கடற்படைப் பிரிவைச் சேர்ந்தவன்.

எதிரியோடு போரிடும்போது மடிந்து போனான். ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தி மூன்றாம் வருடம் பங்குனி மாதத்தில் ‘பம்பரா’ என்ற பிரிட்டிஷ் யுத்தக் கப்பலில் இவனின் சடலம் எடுத்து வரப்பட்டிருக்கிறது.

எங்கோ தொலைவிலிருக்கும் இவன் மனைவிதான் இந்த வாக்கியத் தைப் பொறிக்கக் கூறியிருப்பாள்.

‘இப்படியெல்லாம் அற்புதமான வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட கல்லறைகள் எங்கே இருக்கின்றன?’ என்று கேட்கத் துடிப்பீர்கள்.

நேராகத் திருகோணமலைக்குப் போங்கள். அங்கிருந்து மேற்கு நோக்கி மூன்றாவது மைல்வரை சென்றால், சாம்பல் தீவு என்ற பகுதிவரும். அப்பகுதியில் சனநடமாட்டம் குறைந்து காடாகிக் கிடக்கும் ஒரு பகுதியில் இன்றுவரை வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான ஒரு சவச்சாலை இருக்கிறது. உள்ளே இலேசில் போய்விட முடியாது. காவல்காரனிடம் நைசாகப் பேசி, ஏதாவது கைக்குள் வைத்தால், ஒரு பத்து நிமிட நேரம் பயப்பீதியுடன் அவன் அனுமதி தருவான். அந்தப் பத்து நிமிட வேளைக்குள்ளும் அங்கிருக்கும் கல்லறைகள் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்கள் யாவற்றையும் உங்களால் நிச்சயம் வாசித்து விடவே முடியாது.

காவற்காரனின் பத்து நிமிட நிபந்தனையை மனதிற்கொண்டு அவசர அவசரமாகத்தான் நான் பார்த்துக்கொண்டு சென்றேன். என் நண்பனுக்கு அது புதிதல்ல. அத்துடன் அதுபற்றி அவனுக்கு எந்தவித அக்கறையும் இல்லை.

முன் வரிசையிலேயிருந்த பன்னிரண்டு கல்லறைகளையும் பார்த்து விட்டு, இரண்டாவது வரிசையின் கடைக் கோடியிலிருந்து பார்க்கத் தொடங்கினேன்.

அக்கல்லறை முகட்டின் மேல் புத்தகம் புதிய வெள்ளை மலரொன்று சற்றுவாடிப்போய்க் கிடந்தது. அதன் கீழாக உள்ள புல் தரையில் குவியல் குவியலாகக் கருகிச் சுருண்டு போன – வாடி மடிந்து வதங்கிப் போன மலர்க் குவியல்களைப் பார்த்தேன். இம்மலர்களைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன். தொடர்ந்து அந்தக் கல்லறைக்குச் சாத்தப்பட்டு வந்த வெண் மலர்கள்தான் இப்படிக் கிடந்தன. என் மனதில் தோன்றியது ஆச்சரியம் மட்டுந்தானா?

இந்தக் கல்லறைக்கு மட்டும் இப்படி மலர்கள் சாத்தப்பட்டு வந்திருக்கிறதென்றால்.

‘இதை யார் சாத்தி வந்திருக்கிறார்கள்?’

ஒரேயொரு கேள்விதான். ஆனால், அந்த ஒரேயொரு கேள்வி மட்டும் என் மனதை நிறைத்துக்கொண்டு நிற்கிறதே!

‘உன்னை நேசித்தவர்கள் யாரோ! அவர்களெல்லாம் உன் நினைவால் வெந்து சுருண்டு போவார்கள்.’

இவன் பெயர்…? | இவன்பெயர் கிபுக்கா. ஆப்பிரிக்கன். காலாட்படைப் பிரிவைச் சேர்ந்தவன். வயது இருபத்தெட்டு.

எனக்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர். அவனின் உருவம் என் கண் முன்னே நிற்கிறது. இவன்தானா அவன்? இவனுக்காக இந்த வாக்கியங்களை யார் பொறித்தார்கள்? ஏனோ, என் நெஞ்சு படபடத்தது. கிபுக்கா என்ற பெயரில் எத்தனை பேர்கள் இருப்பார்கள்? வயது அப்படியேதானிருக்கும்?

அவனும் ஆப்பிரிக்கன்தான். அப்படியானால் நிச்சயமாக அவன்தானா? அவனுக்காக வெள்ளை மலர்கள் சாத்தப்டுகிறதே! இது… இது…

கடந்து போன மகாயுத்தமும், அதனால், குபேர சம்பத்துப் பெற்றவர் களும் எடுத்த எடுப்பிலேயே கண்முன்னே தோன்றுவதைப்போல, வேலைக்காகத் திருகோணமலைப் பக்கம் யாழ்ப்பாணத்தவர்கள் எடுத்த படையெடுப்பும் எப்போதும் கண்முன்னே தோன்றிக்கொண்டே இருக்கிறது. அப்படை எடுப்பாளர்களில் அடியேனும் ஒருத்தன்.

எனக்கு முன்னதாகவே அங்குப் படையெடுத்துச் சென்றுவிட்டவர் களில் எனக்கு ஒரு நண்பனும் இருந்தான். புதிதாகச் சென்ற எனக்கு, உணவுக்கு, படுக்கைக்கு அவன் ஒரு வீட்டை ஒழுங்கு செய்து தந்தான். அந்த வீடு, ‘இத்தாலியன் ஹோம்’ என்ற பகுதிக்குப்பக்கத்தே இருக்கிற தென்றால் தெரிந்து கொள்ளமாட்டீர்கள். எளிதில் தெரிந்து விடக் கூடியதாக ஒரு குறிப்புச் சொல்லட்டுமா?

இலங்கையின் எப்பகுதியிலிருந்து அங்குப் போவதானாலும், ஒரு கடல் தொடுவாய்ப் பாலத்தைத் தாண்டித்தான் போய்ச் சேர வேண்டும். இந்தப் பாலத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? பஸ்ஸிலோ, ரயிலிலோ நீங்கள் செல்லும் போது, நீங்கள் நித்திரை செய்து கொண்டிருந்தா லுங்கூட மீன் கொழும்பு மச்சவாசனை ஒன்று உங்களைத் தட்டி எழுப்பிவிடும். அப்போது இடது புறம் நோக்குவீர்களாயின், அங்குத் தகரத்தினாலான ஒரு வீடு உங்கள் கண்களுக்குத் தோன்றும். அப்படித் தோன்றுமெனின் நீங்கள் அப்பாலத்தின் நட்டுக்கு நடுவே நிற்கிறீர்கள் என்பதுதான் அர்த்தமாகும்.

அந்தத் தகர வீடு இருக்கிறதே, அதற்கு அடுத்தாற்போலத்தான் நான் தங்கியிருந்த வீடு இருக்கிறது. அதற்குமப்பால் இன்று எந்தக் காம்ப்’பும் கிடையாது. ஆனால் அன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை பட்டாளக்காரர்கள்தான் இருந்தார்கள்.

நான் இருந்த வீட்டில் ஒரு கிழவி இருந்தாள். வேறும் இரு பெண்கள், நான்கு குழந்தைகள், அந்தப் பெண்களின் இரு கணவர்கள், என்னோடு சேர்த்தால் மொத்தம் பத்துப்பேர்கள்.

வீட்டின் மறுபாதி இவ்வீட்டாரின் பார்வைக்குத் தெரியாத விதத்தில் மறைத்துத்தான் வைக்கப்பட்டிருந்தது, அங்கே இரவிரவாகக் கேளிக்கையும், கும்மாளமுமாக இருக்கும். விடிந்துவிட்டாலோ மனித நடமாட்டம் இல்லாதது போல் அப்பகுதி செத்துப்போய்விடும்.

பாதி இரவிலே மதுபோதையின் பீற்றல்கள் கேட்கும், ஒருத்தியோ அல்லது இருத்தியோ நிர்வாணக் கோலத்தில் ஆடிக்கொண்டிருப் பதைப் போல நினைவுக்குத் தோன்றும்.

இரண்டு நாட்களில் அங்கே நடப்பது எனக்குப் புரிந்துவிட்டது. ஒருத்தியோ? இருத்தியா? அதற்கும் மேலேயா? இதை அறிய நான் முயற்சித்தேன். ‘ஒருத்திதான் நிரந்தரமாக இருக்கிறாள். இன்னொருத்தி தேவை ஏற்பட்டபோதெல்லாம் வந்து போகிறாள்.’

ஆள் நடமாட்டங்களை அவதானித்து இந்த முடிவுக்கு நான் வந்தேன்.

நிரந்தரமானவளை நான் பல தடவை பார்த்தேன். அவள் பெயர் கண்ணம்மா. பார்ப்பதற்கு அவள் மிகச் சாது. வயது இருபத்தைந்து இருக்கும். இருபத்தைந்துக்கு ஏற்ற வளர்த்தியில்லை. சின்னப் பெண்ணாகவே இருந்தாள். திருநீற்றுப் பூச்சு. பிராமணக் குடுமி. வெள்ளையான – அடக்கமான உடை. கால்களிலே பாதசரம்.

மூக்கிலே மின்னி. கழுத்திலே கறுப்பு நாடா. மிருதுவான கண்கள்.

நெற்றியிலே வால்மிளகு பச்சை மாமிச உணவைக் காணாதது போன்ற பட்டுத் தாடைகள். சற்றுச் செழும்பு பிடித்த பித்தளை நிறம். தூய வெண்பற்கள்.

அற்புதமான காக நடை.

ஒரு தடவையல்ல, பல தடவைகள் நான் பார்த்த ‘அனுமானனே’ இவைகள். எப்போதுமே புனிதமாக இருக்குமிவளா இப்படி ஒரு வாழ்க்கை நடத்துகிறாள்’ இப்படி நான் கேட்டுக் கொண்டேன்.

மிகவும் அதிகாலையோடு நான் எழுந்து கிணற்றடிக்குப் போவேன். கிணறு நடுவேலியில் தானிருக்கிறது.

கிணற்றின் மறு கரையிலே அவள் இருப்பாள். ஏதாவது பித்தளைப் பாத்திரத்தைத் தேய்த்து விளக்கிக் கொண்டிருப்பாள்.

ஏழு மணியாவதற்கிடையில் சாணத்தின் வாசனை அங்கிருந்து வரும். அவள் திண்ணைகளைச் சாணமிட்டு மெழுகுகிறாள் என்பது புரிந்து போய்விடும்.

திருட்டுத்தனமாக அப்பக்கம் பார்ப்பேன். முற்றம் கோலமிடப் பட்டிருக்கும்.

சந்தனக் குச்சியும், சாம்பிராணியும் எரிந்து சங்கமமாகி வரும். உலகத்தையே புனிதமாக்கும் இந்த வாசனை அங்கிருந்துதான் வரும்.

இரவில் என் காதுகளில் கேட்கும் ஓசைகளெல்லாம் என் கனவில் தோன்றியதாகவே படும்.

என் வீட்டாரிடம் அவளைப் பற்றி விசாரிக்க எண்ணினேன். ஆனாலும் மனசு கூசியது. இந்த இளம் பெண்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்.

என் வீட்டுக் கிழவி ஒருநாள்மனம் விட்டு என்னிடம் பேசினாள். அப்போது வீட்டில் யாருமில்லை. கிணற்றடிப் பக்கம் அவசியமில்லாமல் என்னைப் போகக் கூடா தெனப் பணித்தாள்.

என் பருவத்தை நினைவுபடுத்தினாள். அந்தப் பெண்ணைப்பற்றிக் கதைகதையாகச் சொன்னாள். அவள் யாழ்ப்பாணத்துக்காரியாம். ஊரிலுள்ள வேசிகளையெல்லாம் இரவோடிரவாகக் கூட்டிவந்து மாமிச வியாபாரம் நடத்துகிறாளாம்.

அவள் கணவனைப் பற்றித் தகவலே தெரியாதாம். தாயோடும், தகப்பனோடும் வந்தவள் அவர்கள் செத்துப் போக ஒருத்தியாகவே இருக்கிறாளாம்.

கடைசியில் யாரோ ஒரு காப்பிலியோடு அவள் நிரந்தரமாக நட்பு வைத்துக்கொண்டு, தொழிலையும் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்ற விபரத்தையும் சாங்கோபாங்கமாகக் கிழவி சொல்லி வைத்தாள்.

அவன் பெயர் கிபுக்கா’ என்றாள். அதன்பின் அவனையும் பல தடவைகள் பார்த்தேன்.

***

பதினெட்டு ஆண்டுகளுக்குமுன் அந்தக் கிழவி அறிமுகப்படுத்தி நான் பார்த்தேனே, அதே கிபுக்காதானா இவன்?

இவனுடைய கல்லறைக்கு மேலாக புத்தம்புதிய மலர்கள் சாத்தப் படுகின்றன?

அப்படியானால் இந்த மலர்களைச் சாத்துபவள்… ‘உன்னை நேசித்தவர்கள் யாரோ, அவர்கள் உன் நினைவால் வெந்து சுருண்டு போவார்கள்…. இதை எழுதி வைத்தது யார்?

இதற்குமேல் எந்தக் கல்லறையையும் பார்க்கும் ஆசை எனக்கு வரவில்லை. கிபுக்காவைப்பற்றித்தான் நினைவு சுற்றிச் சுழன்றது.

‘இந்த மலர்களை யார் சாத்துகிறார்கள்?’ “இந்த வாக்கியங்களை யார் எழுதி வைத்தார்கள்?’

இவன் பெயர்; அந்தக் கிபுக்காதானா?’ நேரம் முடிந்து போய்விட்டது. காவற்காரன் பார்த்த பார்வை எம்மை வெளியேறும்படி கெஞ்சுவதாக இருந்தது. வெளியே வந்து விட்டோம். மனது நமைச்சலெடுத்தது.

அன்று பகலெல்லாம் நமைச்சலாகவே இருந்தது. எனது நண்பரின் வீடு, சவச்சாலையிலிருந்து அரை மைல் தூரத்தில் தான் இருக்கிறது. அவன் வீட்டிலிருக்கும் போது மீண்டும் ஒரு தடவை வரவேண்டும்; இந்தக் கல்லறைகளைப் பார்க்க வேண்டும் போலத் துடிப்பு எழுந்தெழுந்து மடிந்தது.

‘இந்தக் கிபுக்காவை உனக்குத் தெரியுமா?’ மாலை ஆறுமணிபோல் நண்பனை நான் கேட்டேன். ‘கிபுக்காவா? எனக்கெப்படித் தெரியும்?’ என்று பதில் கேள்வி போட்டுவிட்டு, தனக்குத் தெரிந்த ஒரு விபரத்தை மட்டும் அவன் கூறினான்.

அந்தக் காவலற்காரனின் அறையில் இந்தக் கல்லறைகளைப் பற்றிய சகல விபரங்களுமடங்கிய புத்தகமொன்று இருப்பதாக அவன் கூறும்போது, மறுபடியும் அக்கல்லறைகளைப் பார்க்க வேண்டுமென்ற எனது துடிப்பு உச்சத்தை அடைந்தது.

இராச் சாப்பாட்டை வேளையோடு முடித்துக்கொண்டு மறுபடி யும் சவச்சாலைப் பக்கம் கிளம்பினேன். நண்பன் யாருக்காகவோ காத்திருக்க வேண்டியதாகிவிட்டதால் நின்றுவிட்டான்.

காவற்காரன் வயசாளி அல்ல. எனவே அவனைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக நான்கைந்து சிகரெட்டுகளையும். வாசனை வெற்றிலைச் சுருள் ஒன்றிரண்டையும் போகும் போது கடையொன்றில் எடுத்துச்சென்றேன்.

சவச்சாலையை அடையும்போது மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. அறையில் மங்கலான லாம்பு எரிந்து கொண்டிருந்தது. அவன் என்னை எதிர்பார்க்கவில்லை.

முதலில் அவன் சற்றுத் திகைத்துவிட்டான். அவனுக்குப் பேச்சுத் துணை வேண்டிக் கிடந்தது. இதனால் விரைவில் அவனை நண்பனாக்கிவிட்டேன்.

அவன் அந்த உத்தியோகத்திற்கு வந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. பல ஆண்டுகளாக இங்குக் காவற்காரனாக இருந்தவன் திடீரென்று செத்துப்போக, எங்கிருந்தோ இவன் கொண்டு வரப் பட்டிருக்கிறான்.

அந்தக் குறிப்புப் புத்தகத்தை நான் பார்த்தேன். அங்குள்ள கல்லறைகளின் விபரங்கள் யாவும் அப்புத்தகத்தில் அடங்கியிருந்தன.

கல்லறையின் இலக்கம். இலக்கத்திற்கானவரின் பெயர், ஊர், அவர் செத்துப்போன விதம், வயது சுருக்கமான வரலாறு கல்லறையின்மேல் பொறிக்கப்பட்டுள்ள வாக்கியங்களை எழுதும்படி அறிவித்தல் தந்தவர்களின் பெயர் அல்லது உறவுமுறை

ஒவ்வொன்றையும் தனித்தனியே படித்துவிடத்தான் நினைத்தேன். விரும்பினேன். ஆனாலும் அந்தக் கிபுக்காவினுடைய விபரத்தை அறிய வேண்டுமென்ற அவா அந்த இருபத்திநான்காம் இலக்கத்தைப் பார்க்க வைத்து விட்டது.

பெயர் ‘கிபுக்கா’ நேசநாட்டுப் படையின் பதினான்காம் பிரிவின் காலாட்படை வீரன்.

வயது முப்பது. ஆப்பிரிக்காவின் ‘ஹமுது’ என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவன். முப்பத்தெட்டாம் ஆண்டு பட்டாளத்தில் சேர்க்கப்பட்டான். ஆங்கிலம் எழுத, வாசிக்கத் தெரிந்தன. நிறவெறிக்கு இலக்காகிக் குடும்பம் அழிந்து போய்விட்டது. உறவினர்கள் என்று யாரும் உரிமைக்கு வரவில்லை. உள்ளுக்குள் ஒரு ஆங்கிலேயப் போர்வீரனால் சுடப்பட்டான்.

காதலியால் எழுதி வைக்கப்பட்ட வாக்கியங்கள்; ‘உன்னை நேசித்தவர்கள் யாரோ அவர்களெல்லாம் உன் நினைவால் வெந்து சுருண்டு போவார்கள்’ என்பது.

கிபுக்காவின் வரலாற்றுச் சுருக்கத்தைப் படித்துவிட்டபோது மனது நிறைந்துவிடவில்லை. போதாமை என்ற ஒன்று தானிருந்தது. இதை விட அதிகமாக அவனைப் பற்றி அறிய நான் துடித்தேன். எனது துடிப்பை அந்த மனிதன் புரிந்து கொண்டானோ இல்லையோ, அவன் எனக்கு மிகச் சமீபமாக வந்து, என் தலையோடு உரசிக் கொண்டு குறிப்பைக் கவனித்தான். அவனுக்கு அந்த ஆங்கிலம் எப்படிப் புரியும்? கழுத்தைச் சுருக்கிக் கொண்டான்.

மிகவும் அவசர அவசியமாக அவன் ஒரு அதிசயத்தை என்னிடம் சொல்லத் துடித்தான் போலிருந்தது. மெதுவாக விஷயத்தை நான் தான் தொட்டு வைக்க வேண்டியிருந்தது. அந்த வெள்ளை மலர்களைப் பற்றிக் கேட்டேன். அவன் தந்த விபரம் இதுதான்:

அவன் வந்து சேர்ந்த இந்த நான்கு வாரங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலையோடு – விடிவெள்ளி முளைத்துவிட்டதன் பின்பு, யாரோ ஒருத்தி வருகிறாள்; அவனோடு பேரம்பேசி, சில்லறையை அவன் கைக்குள் வைத்துவிட்டுக் கல்லறையை நோக்கிப் போகிறாள்; மலர் களைச் சாத்துகிறாள்; சுற்றிக் கும்பிடுகிறாள்; விரைவில் வெளியேறி விடுகிறாள்.

என் மனதிலெழுந்த ஐயப்பாட்டுக்கெல்லாம் விடை கிடைத்து விட்டது போல உணர்வு. நான் மீண்டும் மீண்டும் அவனை உற்சாகப் படுத்தி விபரமறிய முற்பட்டேன். ஆனாலும் அவனுக்கு இதற்குமேல் எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

இரவோடு வருகிறாளே அந்த மோகினி, அவளை நான் பார்த்து விடத் துடித்தேன். எப்படியும் இன்று விடிவதற்குள் அவளைப் பார்த்து விட வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தேன். அன்றிரவு அவனுடன் நான் படுத்துக்கொள்வதாக முடிவு. அவளுக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக அவளைப் பார்த்துவிடலாம்.

அவனோடு படுக்கையை வைத்துக்கொண்டேன். படுக்கை வசதி யாக இல்லை. ஆனாலும் என்ன செய்வது?

விடியற்புறமாக அவள் வருவாள்! காவல்காரனைத் தட்டி எழுப்புவாள்! தூக்கம் பிடிக்கவில்லை . கோழி உறக்கமென்பார்களே அப்படி!

நிலையத்தைக் கைவிட்டுப் புறப்பட்டுவிட்ட கப்பல் ஒன்று பெருங் குரல் எடுத்துக் கூவியது. இதனால் என் கோழித்தூக்கம் கலைந்து போய்விட்டது.

அங்குமிங்குமாக இரண்டொரு கோழிகள் கூவின. வெகு தொலைவில் நாய்கள் ஊளையிட்டன.

கடிகாரத்தைப் பார்க்கும்போது மணி நான்குக்கு மேல் நகர்ந்து விட்டது.

காவற்காரன் செய்து கொடுத்த படுக்கை வசதி எனக்குப் போத வில்லை. கூதல் உள்ளுக்குள் நடுங்க வைத்தது.

அவன் நன்றாகத் தூங்கிப்போய்விட்டான். என் நெஞ்சு இடித்துக்கொண்டு என்னையே பயமுறுத்துகிறது. உலகத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு யாரோ நடந்து பூமித் பறைள!

தாயை அதிர வைப்பது போல ஓசைகள்.

கதவு மெதுவாகத் தட்டப்படுகிறது! மோகினி – பூக்காரி வந்துவிட்டாளா? காவற்காரன் எழுந்துவிட்டான். கண்களால் சிமிட்டுகிறான்; பின் எழுந்து கதவைத் திறக்க வெளியே போகிறான்.

நான் மிகவும் நிதானமாகக் கதவுவரை நகர்ந்து வந்து விட்டேன். வெளியே படுநிலவின் வெளுப்புத் தெரிகிறது, அதனூடே காவற் காரனும் அந்த மோகினியும் கேற்றண்டை நிற்பது தெரிகிறது.

காவற்காரனையும் முந்திக்கொண்டு அவள் சவச் சாலைக்குள் நுழைந்துவிடுகிறாள்!

வெள்ளை வெளேரென்ற உடை.

அதற்கும் மேலாகக் கன்னங்கரிய கூந்தல்! அது விரிந்து, நீண்டு தொங்குகிறது. அது கூந்தலா? இப்படியும் நிறத்தில்? நீளத்தில்? அடர்த்தியில்? மினு மினுப்பில்? வெளியே ஒரு அடிகூட நகர முடியவில்லை . அது மோகினியா? பேயா? அந்த இருபத்திநான்காம் கல்லறைக்குமேல் குச்சிவெளிச்சம் மின்னு கிறது.

முகத்தின் சுருக்கங்களுக்குள்ளே வெளிச்சம் பட்டதும் படாதது மாக… பரந்த, சிவந்த, மொழு மொழுத்த உடல்… தலையிலிருந்து தொங்குவது?

அது கூந்தல்தானா? குச்சி அணைந்து போக, சந்தனக்கூர்கள் பரந்து பொட்டாகக் கலைகின்றன.

இந்தச் சிறு ஒளியில்கூட அக்கூந்தல் இப்படி மின்னுகிறதே! இது மானிடப் பெண்ணா ? இத்தனை அடர்த்தியில், மினுமினுப்பில், கருமையில் மோகினியே தான்!

மிகச் சமீபத்தில் நாய்கள் ஊளையிடுகின்றன. பேய்களைக் கண்டு விட்டால், அல்லது நடமாட்ட வாசனை வீசினால் அவை ஊளைதான் இடுமாம்! –

அவள் – அந்த மோகினி கேற்றை நோக்கிவருகிறாள். – என் உடல் வெடவெடக்கிறது.

அவள் சமீபித்து விட்டாள்; நேருக்கு நேராக வந்துவிட்டாள்… அப்புறம்… அப்புறமென்ன? வீதியோரமாகச் சென்று இருட்டோடு சேர்ந்துவிட்டாள்.

கணவேளைக்குள்…

நடந்துவிட்டவைகளை மறுபடியும், மறுபடியும் நினைத்துப் பார்ப்ப தென்றால், அது கனவுக் காட்சிகளைப் போலத்தான்.

நன்றாக விடியும்வரை இருந்தேன்; அந்தக் கல்லறைக்குச் சென்றேன்.

எரிந்து அடிச்சுவடே அழிந்த நிலையில் கிடந்த சந்தனக்கூர்கள், வெள்ளை வெளேரென்ற புத்தம் புதிய மலர்கள்… புல்தரைக்கு மேலாகத் தொங்கிக் கிடந்த மண்பதிந்த பாதச் சுவடுகள்…

‘உன்னை நேசித்தவர்கள் யாரே, அவர்களெல்லாம் உன் நினைவால் வெந்து சுருண்டு போவார்கள்.’

இந்த எழுத்துகளுக்குமேல் ஊறிக் கிடப்பது பணிநீர்த்துளிகளோ? அல்லது அந்த மோகினியின் கண்ணீர்த்துளிகளா?

***

உலகத்தை எரித்துவிடக் கூடிய வெயில்.

யாழ்ப்பாணம் வரும் பஸ் இரண்டுமணிக்கு என்றிருந்தது. தகிக்கும் வெயிலுக்கூடாகப் பஸ் நிலையத்தை அடைந்துவிட்டோம். என்னை வழியனுப்புவதற்காகவே அவன் வந்தான்.

தகிக்கும் வெயிலிலே சற்றுத் தொலைவில் ஒரு உருவம் அவசர அவசரமாக நடந்து வருவது கண்களுக்குப்பட்டது. கண்களைளக் கூர்மையாக்கிக் கொண்டேன்.

அந்த உருவம்…? கன்னங்கரேலென்ற, நீண்ட, பளபளப்பான கூந்தலுடன்… இது பிரமையா? என் கண்களை நான் நம்பித்தானாக வேண்டும்! அவள் சமீபித்துவிட்டாள். அதிகாலையில், சவச் சாலையில் என் உடல் படபடத்ததைப் போல…

நீண்ட – கறுத்த – பளபளப்பான – கூந்தலா அது?

இப்போதுதான் நண்பன் அந்த உருவத்தைக் கண்டான். ‘மச்சான், மச்சான் இவள்தான் மொட்டைச்சி; இத்தாலியன் காம்ப்பின் பிரபல….’

மிகுதியை அவன் விழுங்கிவிட்டான்.

அவளைப்பற்றி எதனையோ சொல்ல அவன் அவஸ்தைப்படுவது தெரிந்தது.

அவள் மீது வைத்தேனே என் கண்கள்; அவற்றை என்னால் மீட்க முடியவில்லை .

அவள் எமக்குப் பக்கவாட்டில் வந்துவிட்டாள். அவள் தலையில் தொங்குவது…? கறுப்பு நிறத்தில், கூந்தல் மெஸ்த்தரில் அது நளினமாகப் புரண்டு தொங்கி நெளிகிறது.

மொட்டையாகிவிட்ட கொடுமையை மறைத்துக்கொண்ட அந்தக் கறுப்புச் சாமோஸுக்கு இத்தனை கவர்ச்சி!

நான்கோ, ஐந்தோ பெருநண்டுகளை நன்றாகக் சோர்த்துக் கையிலே தொங்க வைத்திருக்கிறாள். அதன் பாரத்தைத் தாங்க முடியாமலா அவள் உடல் வளைந்து போகிறது? அல்ல, அவள் அப்படித்தான் நடக்க விரும்புகிறாள்!

தடித்து, பருக்கள் செறிந்து, மரத்துப்போய்விட்ட கன்னங்கள்தான், ஆனாலும், சிவந்துபோய், பித்தளை நிறத்தில்….

என் கண்களை அவள் கண்கள் சந்தித்துவிட்டன. அவள்… அவள்…. கண்ணம்மாவா? கால்களிலே பாதசரம். மூக்கிலே மின்னி. கழுத்திலே கறுப்புநாடா, மிருதுவான கண்கள். நெற்றியின் வால்மிளகுப் பச்சை.

அவள் எம்மைத் தாண்டிப்போய்விட்டாள்.

அவள் தலையில் தொங்கி வழிவது கறுத்த, பளபளப்பான சாமோஸ் துணியா? அல்லது நீண்ட – கறுத்த – பளபளப்பான கூந்தலா?

அவள் நடந்து போகிறாளே! அந்தக் காக நடை, அந்த நடைக்கு அசைந்தாடி நளினம் புரியும் அது…? கூந்தலுக்கு மட்டும்தான் இப்படி அசைவு வரும்!

கண்ணம்மாளை ஏன் மொட்டைச்சி என்கிறார்கள்!

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *