உறவுகள் தொடர்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 11,758 
 

‘இரண்டு வாரமாகியும் இந்த சுந்தரியைப் பார்க்க முடியலையே… என்னாச்சு இவளுக்கு!’ என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது.

50 வயதில் தனக்கு இப்படி ஒரு நல்ல தோழி கிடைப்பாள் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. ஆறு மாத கோயில் பழக்கம். அவளது பார்வையிலேயே பாசமும் நேசமும் கலந்து வழியும். அவளைப் பார்த்த நொடியில் சட்டென்று ஒர் அந்நியோன்னியம் பசை போல ஒட்டிக்கொண்டது.

முதன்முதலில் சுந்தரியைச் சந்தித்தபோது, அவளது முகத்தில் வாழ்க்கையின் விரக்தியைத்தான் பார்க்க முடிந்தது. சொந்த சோகங்களைப் பகிர்ந்துகொள்ள யாருமே இல்லாமல் இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவானது.

புதுசாக எது பண்ணினாலும், உடனே எனக்காகக் கொண்டுவந்து கொடுப்பாள். ”இந்தா… உனக்காக இன்னிக்கு ரசகுல்லா செஞ்சு கொண்டுவந்திருக்கேன். சாப்பிட்டுப் பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லு” என்று ரெசிபியையே ஒப்பிப்பாள். ஒருநாள் பார்த்துப் பேசவில்லையென்றாலும், அன்றெல்லாம் வேலையே ஓடாது.

அவள் வீடு ரெண்டு தெரு தாண்டி இருப்பதாகச் சொன்னாள். என்ன ஒரு லூசு நான்… இத்தனை நாள் பழகியும், அவளுடைய போன் நம்பரைக்கூட வாங்காம விட்டிருக்கேனே! எங்கே போயிருப்பாள்?

அவள் மனசுவிட்டுத் தன் குடும்பத்தைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்வாள்.

”மனக் காயத்துக்கு மருந்து தேடித்தான் கோயிலுக்கே வர்றேன், ராதா. எனக்கு மூணு தங்கைங்க. அப்பாவுக்குச் சமையல் வேலை. கஷ்டத்துலயும் எங்க எல்லாரையும் நல்லாப் படிக்கவெச்சார். ஒரு தனியார் கம்பெனியில எனக்கு நல்ல வேலை கிடைச்சது. கை நிறையச் சம்பளம். சம்பளத்தை வாங்கினதும் அப்படியே அம்மா கையில கொடுப்பேன். சிக்கனமா வீட்டுச் செலவுக்கு எடுத்துக்கிட்டது போக, மிச்சத்தைச் சேர்த்துவெப்பா.

எனக்குச் செவ்வாய் தோஷம்கிறதால, மாமியார் இல்லாத வரனாப் பார்க்கணும்னு அம்மா அலையோ அலைன்னு அலைஞ்சா. அப்பாவோ, ‘என் பெண்ணை அதுக்குள்ள துரத்தணும்னு பார்க்கறியா… இன்னும் ரெண்டு வருஷமாவது போகட்டும்’னு சொல்ல, ‘நல்லா ருக்கு… இன்னும் மூணு பொண்ணுங்க இருக்கு. வயித் துல நெருப்பைக் கட்டிட்டு உட்கார முடியாது’ என்பாள் அம்மா. அப்பாவுக்கு என் மேல கொள்ளைப் பிரியம். என்னை வீட்டைவிட்டு அனுப்பவே அவருக்கு மனசு வரலை. எனக்கு வந்த வரனெல்லாம் தங்கைகளுக்கு அமைஞ்சிடுச்சு. ஒவ்வொருத்தரா கல்யாணம் ஆகிப் போயிட்டாங்க. ‘உனக்கேத்த ராஜகுமாரன் எங்காவது பிறந்திருப்பான்டி’னு அம்மாவும் சலிக்காம ஜாதகத்தை எடுத்துட்டு ஓடுவா. வருஷங்கள் ஓட ஓட, கல்யாணம் கிறது எனக்குப் பகல் கனவாப் போயிடுச்சு” என்றவள் டயத்தைப் பார்த்து, ‘ஐயையோ… மணி ஏழு. தங்கை வீட்டுக்காரருக்கு டிபன் செய்யணும். மாவு அரைக்கக் குடுத்ததை வாங்க மறந்துட்டேன்” என்று பதற்றத் துடன் வீட்டுக்குப் போய்விட்டாள்.

அடுத்த நாளும், எங்கள் குடும்பப் பேச்சு தொடர்ந்தது. ”மனைவி, அம்மா பதவி கிடைக்கலேன்னா என்ன… பெரியம்மாவா வலம் வர ஆரம்பிச்சேன். அப்பா போய்ச் சேர்ந்துட்டார். தங்கைங்க, அவங்க குழந்தைங்க எல்லாருக்கும் நிறைய செஞ்சேன். எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க முடியலையேங்கிற ஏக்கத்துல அம்மாவும் ஒரு நாள் போய்ச் சேர்ந்தா. வி.ஆர்.எஸ். எழுதிக் குடுத்து, அதுல வந்த பணத்துல தங்கைங்க பேரில் இந்த வீட்டை வாங்கினேன். எல்லாருமே ரொம்பப் பாசமாதான் கவனிச்சுக்கறாங்க. அவங்ககூடதான் இருக்கேன்” என்றாள் சுந்தரி. அவள் இப்படிச் சொன்னாலும், ஒரு கட்டத்தில், அவள் தன் சொந்த வீட்டிலேயே கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள் என்பது புரிய வர, என் மனசு பதறியது.

”வீட்டில் தினமும் பதினஞ்சு பேருக்குச் சமைக்கிறேன். குழந்தைகளைப் பார்த்துக்கறேன். ஒவ்வொருத்தரையும் பார்த்துப் பார்த்துக் கவனிக்க வேண்டியிருக்கு. காபி, டீ, ஹார்லிக்ஸ், கஞ்சின்னு சமையலறைதான் என்னோட இருப்பிடம். உட்காரக்கூட நேரமில்ல. கோயிலுக்கு வர்ற இந்த நேரம்தான் கொஞ்சம் நிம்மதி. ஹூம்… ஏன்தான் விஆர்எஸ். வாங்கினோமோன்னு வேதனையா இருக்கு. எனக்குன்னு ஒரு குடும்பம் இருந்திருந்தா, இப்படி நான் அவஸ்தைப்பட வேண்டியதில்லையே!” எனக் கடைசியாகச் சந்தித்த போது, குரல் கம்மச் சொன்னாளே!

”என்கூட வந்துடு சுந்தரி… என் மருமகள் தங்கமான பொண்ணு. நான், என் பையன், மருமகள், பேத்தின்னு சின்னக் குடும்பம். சந்தோஷமா இருக்கோம். உன்னையும் என் வீட்டில் ஒருத்தியா ஏத்துக்கறோம்” என்று கூப்பிட் டேன். வேதனை கலந்த ஒரு வறட்டுப் புன்னகையுடன் மறுத்துவிட்டாள்.

‘என்னாச்சு சுந்தரிக்கு… இன்னியோடு ரெண்டு வாரமாகுது அவளைப் பார்த்து. வீட்டுல ஏதாவது பிரச்னையா இருக்குமோ!’ – யோசனையில் ஆழ்ந்திருந்தபோது, ”அம்மா, இந்த போட்டோல இருக்கறது உங்க ஃப்ரெண்ட் சுந்தரியானு பாருங்க” என்று மாம்பலம் டைம்ஸைக் கொண்டு வந்து நீட்டினாள் என் மருமகள். பதற்றத்துடன் வாங்கிப் பார்த்தேன்.

‘ருக்மணி தெருவில் வசிக்கும் சுந்தரி என்னும் 51 வயதுப் பெண்மணி, 14.4.2009 அன்று காலை கோயிலுக்குச் சென்றவர், இன்று வரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன அன்று பச்சை நிறப் புடவை அணிந் திருந்தார். அவரைப் பற்றிய தகவல் தருபவர் களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்…’

‘இது என் சுந்தரியேதான்!’

‘வீட்டைவிட்டு ஏதாவது முதியோர் இல்லத்துக்குப் போயிருப்பாளோ? அல்லது, ஏதாவது ஏடாகூடமான முடிவு எடுத்திருப்பாளோ? என்னாச்சுன்னு தெரியலையே…’ – நினைவுகள் நெஞ்சை அடைக்க, பேப்பரில் உள்ள முகவரியைப் பார்த்து, நேராக அவள் வீட்டுக்கே சென்று காலிங்பெல்லை அழுத்தினேன்.

40 வயது மதிக்கத்தக்க வேலைக்காரம்மா வந்து கதவைத் திறந்தாள். ”நான் சுந்தரியின் கோயில் ஃப்ரெண்ட். வீட்ல யாரும் இல்லியா? பேப்பர்ல சுந்தரி போட்டோவைப் பார்த்ததும் பதறிப் போய் ஓடி வந்தேன்.”

”உங்க பேரு ராதாவா? அம்மா உங்களைப்பத்தி நிறையச் சொல்லிஇருக்காங்க. இருங்க, காபி கொண்டாறேன்” என்று உள்ளே சென்றவள், சில விநாடிகளில் திரும்பி, காபியோடு ஒரு தட்டில் ஸ்வீட்டையும் வைத்து நீட்டினாள்.

”என்னம்மா நீ… உன் வீட்டு எஜமானி காணாமப் போயிருக்காங்க. நீ என்னடான்னா ஸ்வீட் கொண்டுவந்து நீட்டறியே?” என்றேன் குரல் உயர்த்தி.

”எல்லாமே கரீட்டாதாம்மா நடந்துக்கீது. வீட்டுல யாரும் இல்லாததால, மனசவிட்டு உன்னாண்ட சொல்லிக்கிறேன்… சுந்தரியம்மா ரொம்பப் பாவம்மா. தங்கச்சிங்க, அவங்க குடும்பம், பேரன் பேத்திங்கன்னு தன்னையே உருக்கிக்கிட்டாங்க. அந்தத் தெய்வத்தைப் போய் வாய்க்கு வந்தபடி திட்டிடுச்சுங்க இதுங்க…”

”சரி, சுந்தரி என்ன ஆனாள்னு தெரியலையே!”

”கொஞ்சம் இருங்கம்மா, இதோ வர்றேன்” என்றவள், சுந்தரி காணாமல் போனதை வெளியிட்ட அதே பேப்பரைக் கொண்டுவந்து நீட்டினாள். ”இந்த பேப்பர்ல மூணாம் பக்கத்து விளம்பரத்தைப் பாருங்க” என்றாள்.

‘ராஜாராம் – 53 வயது. உயரம் ஐந்தரை அடி. 14.4.2009 முதல் காணவில்லை. கால் சற்று விந்திவிந்தி நடப்பார். காணாமல் போன அன்று பச்சை நிறத்தில் சட்டை அணிந் திருந்தார். இவரைப் பார்ப்பவர்கள் உடனே தொடர்புகொள்ள வேண்டிய முகவரி… வேங்கடநாதன், 33, ஸ்ரீநிவாசன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33’ என்றிருந்தது.

”இதுக்கும் நம்ம சுந்தரிக்கும் என்ன சம்பந்தம்?”

”அம்மா, நம்ம சுந்தரியம்மா மாதிரியே இந்த ராஜாராம் ஐயாவும் மருமகக் கொடுமையால பாதிக்கப்பட்டவருதான். கால் சரியா நடக்க முடியாத மனுஷனை அந்தப் பொம்பள படுத்தின பாடு… ஐயைய, அதை என் வாயால சொல்ல முடியாது. அவர் வூட்டுலயும் நான்தான் வேலை செய்யறேன். நிறையப் பணம் சேமிச்சுவெச்சிருந்தும், அந்த ஐயாவுக்கு நிம்மதி இல்ல. ஒரே மவன். அப்பாவைத் தன் பொஞ்சாதி கொடுமை பண்றது தெரிஞ்சும் கண்டும்காணாம இருந்துடு வாரு. ஒரு நாள், ‘என்னை எங்கேயாவது விடுதில சேர்த்து டும்மா’ன்னு எங்கிட்டேயே சொல்லி அழுதாரு ஐயா. இங்கே இந்தம்மா படற வேதனை… அங்கே அந்த ஐயா… பார்த்தேன். ஒரு நாளு ரெண்டு பேரையும் போனில் பேசச் சொன்னேன். பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாத அந்த வயசாளிப் பறவைங்க ரெண்டும் மனசுவிட்டுப் பேசிக்கிச்சுங்க. கூண்டை விட்டுப் பறந்து போய், தங்களுக்காக வாழறதுன்னு முடிவு பண்ணிச்சுங்க. அதுக்கு நான் ஒரு பாலமா இருந்தேன். அம்புட்டுதேன்” என்றாள் அம்புஜம்.

நடந்தது நிஜமா! நம்ப முடியாமல் வாய் பிளந்து நின்றா லும், என் மனதில் சொல்லொணா நிம்மதி பீறிட்டது.

உறவுகளால் உதாசீனப்படுத்தப்பட்ட என் உயிர்த் தோழி சுந்தரியின் வாழ்க்கையில் விளக்கேற்றிவைத்த வேலைக்காரி அம்புஜம், தினமும் நான் கோயிலில் பார்க்கும் அம்மனாகவே என் கண்களுக்குத் தெரிந்தாள்!

– 20-05-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *