உயிர்த்தெழாத லயிப்பு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 2,480 
 
 

சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. விழாவிற்கான நோட்டீஸ்கள் அச்சாகி வருவதற்கு முன்பே, களைகட்டிவிட்டது ஏ.ஆர். மங்கலம் கிராமம். சவரம் செய்யாமல் தாடி, மீசையுடன், சுற்றித் திரிந்த ஏனோதானோக்கள்கூட, சலூன் கடைகாரனுக்கு காசு கொடுக்கத் தயாராகிவிட்டது போல, சலூன் வாசல்களில், டீகிளாசும், பேப்பருமாக உட்கார்ந்திருந்தார்கள்.

கஞ்சிபோட்ட வேஷ்டி, பட்டுப்பாவாடை, கண்டாங்கிச் சேலைகளுடன், உறவினர்களின் வருகையால், கிராமததில் லட்சணமான ஒரு சில முகங்கள் தென்படத் தொடங்கியிருந்த்து. பதுக்குவதும், எடையைக் குறைத்து சொல்லியும், சாமானியனின் நெற்களஞ்சியங்களைக் காலி செய்யும் வெங்கடேஸ்வன் கூட, நீலம் போட்ட வேட்டியைக் கட்டிக்கொண்டு , உறவினர்களை வரவேற்றான். எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சின்னப் பெருமாள், ‘ மூஞ்சிய கழுவி, பவுடர் கிவுடர் போடக்கூடாதா என்று, மகளின் அழகை மட்டும் ஆராதிப்பவன் போல், அறிவுரையாக அவ்வப்போது கடிந்து கொண்டிருந்தான். சில நேரங்களில் கடுகடுத்துப் போனான்.

இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு, சுற்றமும் சூழ உட்கார்ந்து கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஏனாதி ராமலிங்கத்தின் ஹார்மோனியம் ஒலிக்கத் தொடங்கியது. வயிற்றை நிரப்பி கொட்டாவி விட்டபடி கதையளக்கத் தொடங்கியவர்கள் , ஆலயத்தில் எதிரே அமைக்கட்டிருந்த நாடக கொட்டகையை நோக்கி, நடக்கத் தொடங்கினார்கள். உறவினர்களுடன் வீட்டில் உள்ளவர்களும் சென்று விட்டதால், வாசல்களில் பூட்டுத்தான் தொங்கிக் கொண்டிருந்தது. ஆளரவம் இல்லாமல் ஒடுங்கிப் போன அந்த தெருவில், வீட்டு வாசலில் படுக்கையில் கிடந்த,காண்ட்ராக்டர் சிவசுப்பிரமணியத்தின் குறட்டை மட்டும் ,நாய்களின் குரைப்புக்கு பக்கவாத்தியம் போட்டுக் கொண்டிருந்தது.

சின்னப்பெருமாள் வீட்டுக்கு, புறவாசலில் இருந்த, குப்பு வீட்டில் மட்டும், விடி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, இன்னிக்குப் பூராம் வேலை இருந்ததாலே, உங்களைப் பார்க்க முடியலை’ என்று ஒரு பெண்குரல். ‘ நா அதைப்பத்தி ஒண்ணும் நெனைக்கலெ, உனக்கு சுடி வாங்கிட்டு வந்திருக்கேன்’ என்றது ஆண்குரல். நாடக இரைச்சலில் நாயக்குக்கூட இந்த கொஞ்சிக் குலாவும் சப்தம் கேட்காததால்,, எந்நேரமும் திறந்து காட்டும் வாயை மூடிக் கொண்டு சயனித்துக் கொண்டிருந்தன.

தூக்க அசதியில் சோம்பிப்போன சின்னப்பெருமாள், மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது புறவாசல் வழியாக வந்த, தடக்கென்று வீட்டுக்குள் பாய்ந்த ப்ரியதர்ஷினி, முற்றத்தில் இருந்த விளக்கை எரியவிட்டாள். இதனைப் பார்த்த சின்னப்பெருமாள், ‘ இங்கெ என்ன பண்றே, நாடகத்துக்கு நீ போலையா’ என்றான். ‘ எனக்கு அந்த நாடகம் புடிக்கலப்பா என்று அறைக்குள் போய் கதவைச் சாத்தினாள். இன்ப லயிப்புகளில் சூடு குறையாத சரவணன், ப்ரியாவின் வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

விடிந்தது, முருகன் வள்ளியை மணம் முடிப்பதோடு, நாடகமும் முடிந்தது. நாட்கள் நகர்ந்தன. வைகாசி மாதம் பிறக்க ஒரு வாரமே இருந்தது. திருமண பேச்சுக்கள் தொடங்கி விட்டது. வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த துரைராஜ், மஞ்சள் பையுடன் ,கல்யாணப் புரோக்கர் வேஷத்தை போட்டுக் கொண்டார். இந்த வேஷத்துக்கு மாறாமல், புரோக்கர் வேலை பார்த்த சிலர், மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சின்னப்பெருமாளிடம் சொன்னார்கள். மாப்பிள்ளை வீட்டில் பேசி, தகுதிக்கு மீறிய ரேட்டுடன் பேசி முடிக்கப்பட்டு, நிச்சயம் செய்யப்பட்டது. படித்து பட்டம் வாங்காவிட்டாலும், மாப்பிள்ளை பெயர் அரிஸ்டாட்டில். சென்னையில் வேலை பார்த்தான். இதனால் பெண் வீட்டில் மனப்பூர்வ சம்மதம். மகளுக்குக் கிடைத்த மாப்பிள்ளையைப் பற்றி சிலாகித்தார்கள். அருகிலிருந்த சம்பந்தி செல்லியும் உச்சுக் கொட்டி பெருமை பேசுவதை மூட்டிவிட்டாள்.

திருமணம் அருகிலுள்ள நகரத்தில் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று திரும்பிய ப்ரியாவை, புறவாசல் வழியே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன். குடும்பத்தின் கட்டாயத்தால், சரவணனைக் கைவிட்ட ப்ரியா நொறுங்கிப் போயிருந்தாள் . ஒரு சிறிய பேப்பரை மடித்து, புறவாசலில் நின்ற சரவணனுக்கு வீசினாள். கலங்கிய கண்களோடு, பேப்பரைப் பிரித்துப்பார்த்தான். ‘ ‘..கோபிச்சுக்காதீங்க, அப்பா, அம்மா கட்டாயத்தாலே நடந்த கல்யாணம். I am sorry’ என்று எழுதியிருந்தாள். இப்படி ஆங்கிலம் கலந்து எழுதும் அளவுக்கு அவளும் படித்திருக்கிறாள்.

நாட்கள் வாரங்களாக, மாதங்களாக உருண்டோடி திருமணமாகி மூன்று ஆண்டுகளை எட்டியது ப்ரியாவுக்கு. ஆனால் புத்திரப் பேறு இல்லை. அவள் வேண்டிக்கொண்ட சாமியும், சிகிச்சை அளித்த மருத்துவர்களும் கைகொடுக்கவில்லை. ஆனால் அதிர்ச்சிதான் அவளுக்குப் பரிசாக கிடைத்தது. ப்ரைன் ட்யூமர் என்ற நோயால் கணவன் உயிரிழந்தான். 29 வயதே ஆன அவளுக்கு, இரண்டாவது திருமணம் நடைபெற்றது. கணவனின் அண்ணனுக்கும், ப்ரியாவுக்கும் ரகசியமாகத் திருமணம் நடைபெற்றது. முதல் மனைவியை விட்டு வந்த கணவனுடன், இப்போது கோர்ட் வாசலை மிதித்துக் கொண்டிருக்கிறாள் ப்ரியா. பாவம் அவள் பெற்ற திருமணம் வரம் அப்படி!

ப்ரியாவுக்கு இரண்டாவது திருமணத்திலும் சந்தோஷம் இல்லை. ப்ரியாவை விட 20 வயது மூத்தவன் சாக்ரடீஸ். அவனாள் அவளது தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவனுடன் ,நகரத்தில் சிறிது காலம் குப்பை கொட்டிய ப்ரியா, தாய் வீட்டுக்குத் திரும்பினாள். புதன்கிழமை காலை, தண்ணீர் பிடிக்க குழாயடிக்குச் சென்றாள். அப்போது அவளைப் பார்த்த மாலா, ‘ என்னடி பழைய குருடி கதவைத் தெறடிங்கிற மாதிரி, தண்ணி புடிக்க வந்திட்டே’ என்றாள்.

வரிசையாக குடத்தை அடுக்கி வைத்திருந்தவர்கள், தண்ணீர் பிடித்தார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும், ப்ரியாவுக்கு ஒரு குடம் கூட நிரப்பி விடவில்லை. பொறுத்திருந்த ப்ரியாவுக்கு ஆத்திரம் வந்தது் ‘ எனக்கு ஒரு குடம் விடுங்க’ என்றாள். காத்திருந்தவர்கள் ‘ இப்ப வந்த ஒனக்கு எப்டி விட முடியும் என்றார்கள். ‘ தண்ணி வாங்குறதுக்கு கூட எவ்வளவு போராட வேண்டிருக்கு, அடி ஆத்தி’ என்று சொல்லிவிட்டு குடத்தை தூக்கிக் கொண்டு புறப்பட்டாள். அவள் சொன்னதில் என்ன புரிந்தது என்று தெரியவில்லை. ‘ இது எனக்குத்தான் சொல்லிருப்பா’ என்பது போல சிரித்த சரவணன், சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

கடைக்குச் சென்று திரும்பும் சரவணின் முகம், எப்போதும் ஒரே பூரிப்பாக உள்ளது. காலையில் ஏழு மணிக்கு சலூனுக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்ட சரவணன், வழக்கத்திற்கு மாறாக 9 மணிக்கு சென்று, மாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுகிறான். அவனது வீட்டில் தொடங்கிய இது தொடர்பாக சந்தேக கேள்வி, நண்பர்கள் வரை தெரிந்து விட்டது. சில வாரங்களுக்குப் பின் அவனை யதேச்சையாகப் பார்த்த, முனியாண்டி, ‘ என்ன மச்சி புழுப்பூச்சி உண்டுமா என்று சந்தேக வார்த்தைகளில் கேள்வி எழுப்பினார். ‘ உண்டு மச்சான் ஒரு ஆம்பளைப் பையன்’ என்றான் சரவணன்.,

Print Friendly, PDF & Email

1 thought on “உயிர்த்தெழாத லயிப்பு

  1. சாதிப்பிரிவினை தெரிந்தும், பருவக் கோளாறினால், பெண்ணானவள் ஆசைக்குப் பலியாகி விடுகிறாள். இதனால் ஏமாற்றத்தை விதைத்து விளையாடும் விதியை் பற்றிய சிறுகதை. நல்ல கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *