உயிரோடுதான்…!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,427 
 

வருடா வருடம் நவம்பர் மாதம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குச் சான்று கொடுக்க வேண்டும். வேறு யாருக்கு நான் குடும்ப ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கிற எனது பாங்க் கிளைக்குத்தான். போன வருடம் வரை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் போய்விட்டார். இந்த வருடம் முதல் என் தலையில் அந்தச் சடங்கு. பரவாயில்லை,

நான் இருக்கிறேனா? இல்லையா? என்பது பற்றி நினைத்துப் பார்க்க யாராவது இருக்கிறார்களேன்னு சந்தோஷம்.

உயிரோடுதான்

அவர் கடைசியாக வேலை பார்த்தது தூத்துக்குடியில். அங்கேயே ஓய்வூதியக் கணக்கு. மூத்த மகனும் அங்கேயே வேலை பார்த்ததால் ஏதோ அங்கேயே நிரந்தரமாக இருக்கப் போவது போல நினைத்து எல்லாம் செய்தது. அது சாத்தியமாகவில்லை என்பது வேறு கதை.

நாங்கள் சொந்த ஊருக்கு மீள் குடி வந்தபோது ஏடிஎம் வசதி வந்து விட்டதால் கணக்கை மாற்ற வேண்டிய அவசியம் இன்றிப் போனது. மேலும் இந்த லைப் சர்டிபிகேட் வாங்கும் சாக்கிலேயாவது தூத்துக்குடி மகன் வீட்டில் 2 நாள் தங்கி பேரன், பேத்தியாளைக் கொஞ்சி விட்டு வரலாம்.

போற வழியில் நாங்க வாங்கிக்கிட்டுப் போற ஓலைப்பெட்டி சேவுக்கு பிள்ளைகள் அவ்வளவு சண்டை போடும்க. அவங்க அப்பா அம்மா இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க மாட்டாங்க போல. பையன் வேலை பார்க்கும் பாக்டரிக்குள் இதையெல்லாம் விடுவார்களோ மாட்டார்களோ என நினைப்பேன். சேவு காலியான பின் ஓலைப் பெட்டி கால் பந்தாக உதை படும்.

“”இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி வரேம்ப்பா, இருப்பியான்னு?” கேட்டதற்கு, “”லதாவைக் கேட்டுச் சொல்றேன்”னான். இவன் இருப்பானானு கேட்டா பெண்டாட்டியைக் கேட்டுச் சொல்றேங்கிறான். மகன் வீடு வெளிநாடு போல ஆகிவிட்டது. முன்கூட்டியே விண்ணப்பித்து விசா கிடைத்தால்தான் போய் இறங்க முடியும். ஒரு வழியா வான்னு சொல்லிட்டான். போயாச்சு. இரண்டு நாள் மட்டும்தான் இருப்பேன்னு தெரிஞ்சதுனால மருமகள் உபசரிப்பில் குறை ஒன்றும் வைக்கவில்லை.

அடுத்த காலையில் பாக்டரி குடியிருப்பிலிருந்து பிரதான சாலை வரை நடந்து சென்று பஸ் பிடித்து கீழுர் போய் பாங்க் கிளைக்குள் நுழையும் போது மணி 12 ஆகி விட்டது. ஒரே கூட்டம். எப்ப வந்தாலும் கூட்டம்தான். இவ்வளவு பேர் எதுக்குத்தான் பேங்க்குக்கு வர்றாங்களோ? எங்க வூட்டுக்காரர் வேலையில் இருந்தபோது நான் ஒருநாளும் பாங்க் கிளைப் பக்கம் போனது கூட கிடையாது. எந்தத் திசை, என்ன பாங்குன்னு கூட தெரியாது. அவர் பணி ஓய்வு பெறும்போதுதான் கணக்குத் துவங்க அழைத்து வந்தார். பிரசவம் போல அதுவும் சிரமமான காரியம்தான். ஏகப்பட்ட முன்னேற்பாடுகள்… சடங்குகள்.

நாம் யார், எங்கே இருப்பு – எல்லாத்திற்கும் காகித அத்தாட்சி. ஜாதகம் தோத்துடும் போங்க. எல்லாத்தையும் எழுதிக் கொடுத்ததுக்குப் பின்னாலே பணம் கட்ட ஒரு வரிசை. என்னைக் கூட்டிப்போனது ஒரு நாள்தான். அதுக்கு முன்னாடி நிறைய அலைஞ்சிருப்பார். பையனுக்குப் பொண்ணு பார்க்கிறதுக்குக் கூட ஞாயிற்றுக்கிழமையாப் பார்த்து வெச்சுக்கிட்டவர் அவர்.

பாங்குக்குள்ள நல்ல குளுகுளுன்னு இருந்தது. நவம்பர் மாதம் ஏன் இவ்வளவு சில்லுன்னு?

பாஸ் புக்கைக் காண்பித்தவுடன், “”என்ன லைப் சர்டிபிகேட்டா?” என்றார். நல்ல கற்பூர புத்தி. அதான் பாங்க் வேலை கிடைச்சுருக்கு, சும்மாவா?

“”ஆமாம்”

“”பின்னாடி அவர்கிட்ட போங்க”

அவர் காண்பித்த இடம் காலி.

“”வருவார்ம்மா. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க”

கொஞ்ச நேரம்ம்ம்ம் இழுத்தது. எங்களைத் தவிர எல்லோரும் ஓடிக் கொண்டே இருந்தனர். யாரும் அதிகம் சப்தம் இடவில்லை இருந்தாலும் சந்தைக்கடை இரைச்சல். இரைச்சல் என்பது வெறும் காதும் ஒலியும் மட்டுமில்லை போல.

அவர் இருக்கைக்கு வந்தவுடன் பாய்ந்து சென்றோம்.

“”என்னங்க- இப்படி பீக் அவர்ல வந்து நிக்கறீங்க?”

“”எத்தனை மணிக்கு வரலாம் சார்?”- ஒரு முதியவர்.

“”மூணு மணிக்கு வாங்க”

“”சார் இப்ப ஒரு மணிதான் ஆகுது”

“”அதுக்கு நான் என்ன பண்றது முள்ளைத் தள்ளவா முடியும்?” என்றவர் எதையோ கையில் எடுத்துக் கொண்டு காணாமல் போனார். போகும்போது ஒரு ஸ்டாபிடம் தோளைத் தட்டி என்னவோ சொல்லி சிரித்து விட்டுப் போனார். அவர்களுக்குள் மட்டும்தான் சிரித்துக் கொள்வார்கள் போலும். மீண்டும் சோபாவில் தஞ்சம். பசி கிள்ளியது. எப்போதும் போல் காலை 5 இட்டிலிகள்தான் சாப்பிட்டது. இந்த அலைச்சலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் அதிகம் சாப்பிடத் தோன்றும். அப்புறம் எல்லாமே அதிகமாகி விடும்.

நல்ல வேளையாக வெளியே வந்ததும் ஹோட்டல் தெரிந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் பாதிப் பேர் பாங்குக்கு வந்தவர்கள்தாம் போல். ஹோட்டல் கவுண்டரில் சில்லறையும், புது நோட்டும் புழங்கியது. மினி மீல்ஸ் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பாங்க். சோபா.

மூணு மணி ஆனது. அதிகாரியின் நாற்காலி காலியாகவே இருந்தது. பெரியவர் ஒருவர் கவுண்டர் அருகே சென்று, “”அவர் எங்கே?”ன்னு கேட்டார்.

“”லஞ்சுக்குப் போயிருக்கார்”

“”மூணு மணிக்கு வரச் சொன்னார்”

“”இப்பதான் போனார். நீங்க வசதியா சோபாவில உட்காருங்க”

“”வசதியா உட்காருவதற்காகவா பாங்குக்கு வர்றாங்க?”

அவர் வந்தவுடன் பாய்ந்து சென்றோம். எங்களை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை. கிளிப்பில் வைத்திருந்த செக்குகளில் கையெழுத்து கிறுக்கினார். 10 நிமிடத்தில் 100. சிவப்பு கலர் கையெழுத்து.

“”ம்.. சொல்லுங்க”

அட ராமா, மறுபடியும் முதல்ல இருந்தா? வேற வழி? சொன்னோம்.

“”மணி, மூணு லைப் சர்டிபிகேட் பாரம் எடுத்தா”

“”சார் காலியாப் போச்சுன்னு திங்கள் கிழமையே சொன்னேனே”

“”இன்னுமா வரல்லே? நேத்தே அனுப்பிச்சிடறோம்ன்னானே?”

“”சார் எனக்கு மட்டும் ஒண்ணு கொடுங்க, நான் வெளியூரிலிருந்து வர்றேன்”

“”ஏம்மா வச்சுக்கிட்டா இல்லைன்னு சொல்றோம்? நாளைக்கு வாங்க, ஏற்பாடு பண்றோம்”

அவ்வளவுதான் ஆஃப் ஆயிட்டார். சுவிட்ச் போட்ட மாதி வேற வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

பஸ் பிடித்து வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது.

“”என்ன ஆச்சி, ஏன் இவ்வளவு நேரம்?” என்றது பிள்ளைகள்.

“”கோவிச்சுக்கிட்டுப் போன கோவணாண்டி கதையைச் சொல்லுங்க”

பழனியில் முருகன் போய் உட்கார்ந்த கதையைத்தான் அவங்க தாத்தா அப்படிக் காமெடியா சொல்லிப் பழக்கி இருக்காங்க.

கேட்காமலேயே மருமகள் காப்பி கொண்டு வந்து தந்தாள்.

“”அம்மா, இவ்வளவு நேரத்துக் குடிச்சா தூக்கம் வராதே”

“”போடுறத்துக்கு முன்னாலேயே சொல்லியிருக்கலாமில்ல”

“”போடப்போறேன்னு நீ சொல்லலியேம்மா”

“”5 மணிக்கே போட்டு பிளாஸ்கில வெச்சுருந்தது”

சரின்னு குடிச்சு வெச்சேன். ஒரு நாள் தூங்கலேன்னா என்னா?

“”ஆச்சி, ஆச்சி, நாளைக்கேவா ஊருக்குப் போறீங்க?”

“”இல்லம்மா செல்லம், வந்த வேலை முடியலே. அதனாலே சனிக்கிழமைதான்”

“”நீங்க என்ன வேலை ஆச்சி பார்க்கறீங்க?”

“”ஆச்சி ஒரு வேலையும் பார்க்கலேம்மா..”

“”வேலை பார்க்கலேன்னா ரூபாய்க்கு என்ன பண்ணுவீங்க? எப்படி சாப்பிடுவீங்க?”

“”ஐயோ என் செல்லங்களே”ன்னு கட்டிக் கொண்டேன்.

“”ஆச்சி உங்களுக்கு வேலை ஒண்ணும் இல்லன்னா, இங்க வந்து எங்களைப் பார்த்துக்கிற வேலையாவது பார்க்கலாம்ல. அப்பா சம்பளம் கொடுப்பாங்க”

“”சரி, அப்பா வரட்டும். கேட்கலாம்”

“”ஆச்சி, எங்களுக்கு சனி, ஞாயிறு லீவு. அதனாலே, நீங்க திங்கட் கிழமைதான் போக முடியும்”

“”சரி”

“”குட் ஆச்சி. இப்ப கதை”

காலையில்தான் பெரியவனைப் பார்க்க முடிந்தது.

“”என்னம்மா, சர்டிபிகேட் வாங்க முடியலையா?”

“”ஆமாம்ப்பா, இன்னிக்கு மறுபடியும் போகணும்”

“”அம்மா, அந்த பாங்க் காலண்டரைப் பார். இன்னிக்கு பக்ரீத். பாங்க் லீவு”

“”போச்சுடா”

அன்றையப் பொழுதும் கழிந்தது..

அடுத்த நாள் மீண்டும் பாங்க். பெரிய கேட் பூட்டியிருந்தது. ஒரு போர்டு தொங்கியது. இன்று விடுமுறை.

“”என்ன ஆச்சு?” பக்கத்து கட்டிட வாட்ச்மேன் சொன்னார்: “”பக்ரீத் லீவு”

“”அது நேத்தில்ல”

“”இன்னிக்கு மாறிடுச்சு. பேப்பர்ல போட்டிருந்தாங்களே”

பெரியவனும் பார்க்கலே போல.

திரும்பி வீட்டுக்குப் போனதும் உடலும் மனதும் சோர்வாகி விட்டது. மருமகள் வாயைத் திறந்து ஒண்ணுமே கேட்கலை. தெரிஞ்சிருக்குமோ? அவள் என்ன நினைக்கிறாள்ன்னு தெரிஞ்சிக்கவே முடியாது.

பேரன்தான் நான் திரும்பி வந்ததைக் கொண்டாடினான்.

“”ஆச்சி, இன்னிக்குப் பத்து கதை சொல்லணும்”

அவன் அப்பா கேட்ட கதையெல்லாம் இவன் ரசிக்க மாட்டேங்கிறான். தலைமுறை இடைவெளி.

பெரியவன் இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டான். “”என்னம்மா வெட்டி அலைச்சலா?”

சனிக்கிழமை காலை பாங்குக்கு கிளம்பும்போதே சொன்னான்: “”அம்மா இன்னிக்குப் போகாதே”

“”சனிக்கிழமைன்னா பாங்கிலே ஒரு வேலையும் நடக்காது. அதுவும் ஒரு லீவு நாளைக்கப்புறம்ன்னா சுத்தம். பாதிப்பேர் வந்திருக்கவே மாட்டாங்க. எதுக்கு வெட்டி அலைச்சல்?”

“”இங்க இப்ப சும்மாதானே இருக்கேன். சர்டிபிகேட் கிடைச்சிருச்சினா நாளைக்கு ஊருக்குக் கிளம்பலாம்”

“”சரி. கேட்கமாட்டே”

பாங்கில்தான் அவன் சொன்னது சரின்னு புரிஞ்சுது.

இன்னிக்கு ஒண்ணும் கேட்காதீங்கன்னு அக்கெüன்டண்ட் ஒரே போடாய்ப் போட்டு விட்டார்.

“”சார்வாள், பாரம் மட்டும் கொடுங்க, போதும். ஃபில்லப் பண்ணிக் கொடுத்திட்டு போறோம்” என்றார் ஒரு வெள்ளை வேட்டி.

“”என்ன பேசறீங்க உங்க போட்டோ, கையெழுத்து எல்லாம் சரியான்னு செக் பண்ண வேண்டாமா? உங்களுக்குப் பதிலா யாராவது கையெழுத்து போட்டுட்டாங்கன்னா, யார் பொறுப்பு?”

“”அப்படி யாராவது பண்ணுவாங்களா?”

“”பண்றதைத்தான் சொல்றோம்”

“”வெய்ட் பண்றோமே சார். 2 மணிக்கு அப்புறமா பாருங்க”

“”எங்களுக்கு குடும்பம் கிடையாதா? மூணு மணிக்கு மேலதான் நான் கிளம்பி கடலூர் போகணும். அதுவே நடு ராத்திரி ஆயிடும். போங்க சார், போய்ட்டு திங்கள்கிழமை வாங்க”

எழுந்து போய் விட்டார்.

பசியோடு வீடு திரும்பினேன். சனி மாலை மகன் குடும்பம் ஏதோ பிறந்த நாள் பார்ட்டின்னு போய்விட்டு நடு ராத்திரிதான் வீடு திரும்பினார்கள். பழைய இட்டிலியும், மிளகாய்ப் பொடியும் எனக்கு வைத்துவிட்டுத்தான் போனார்கள்.

அடுத்த நாள் ஞாயிறு காலை உணவுக்குப் பிறகு வெளியே மதிய உணவு, சினிமா என்று கிளம்பி விட்டார்கள்.

பேரப்பயல்தான் தகவல் சொன்னான். என்னையும் வரச்சொன்னான். மகன் வாயைத் திறக்கவில்லை. எனக்குப் பழகிய விஷயம்தான். விருந்தும், மருந்தும் மூன்று நாள்தானே. அதைத் தாண்டி இருந்தால் வியாதி தீரா வியாதி, விருந்தாளி போகா விருந்தாளி. அறுவை சிகிச்சைதான் அடுத்து.

மகன் வீட்டில் விருந்தாளியாக அனுமதிக்கப்படுவதுகூட கொடுப்பினைதான். பல பேருக்கு அது கூட கிடைப்பது இல்லை. இரண்டு வேளையும் தோசை ஊத்திச் சாப்பிட்டேன். ஏகாதசி விரதம்போல.

திங்கட்கிழமை வழக்கம்போல் விடிந்தது. பாங்குக்குப் போவது பழக்கமாகிவிட்டது.

11 மணிக்குத்தான் அக்கெüண்டண்ட் தரிசனம் கிடைத்தது. உடனே அடையாளம் கண்டுகொண்டார்.

“”செல்லமுத்து, லைப் சர்டிபிகேட் பார்ம் கொண்டா” என்றார்.

“”சார், போன வாரமே சொன்னேனே காலியாப் போச்சுன்னு”

“”என்னிக்குப்பா?”

“”மறந்திட்டீங்களா உங்க அத்தைக்கு பெங்களூருக்கு அனுப்பிச்சீங்களே- அதான் கடேசின்னு சொன்னேனே”

“”ஒண்ணு கூடவா இல்லை?”

“”வெச்சுக்கிட்டா இல்லைங்கிறேன்”

கோபத்தை அடக்கியதில் உச்சந்தலைக்கு இரத்தம் பாய்ந்தது. நாலு நாள் அலைய வைத்து இப்ப பார்ம் இல்லையாம்.

அவர் முன்னால் இருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தோம். பக்கத்துக் கிளைக்குப் போன் செய்தார். அங்கும் இல்லையாம். சத்தம் போட ஆரம்பித்தோம். சண்டையாகத் துவங்கியது. தனிப்பட்ட விமர்சனமாக மாறிக் கொண்டிருந்த வேளையில் வாடிக்கையாளர் போலத் தெரிந்த ஓர் இளைஞர் வந்து அந்த ஸ்பெசிமென் பாரம் வெப் சைட்டிலிருப்பதாகச் சொன்னார். டெüன்லோட் செய்து காப்பி எடுக்கலாம்.

பாங்க் கிளையில் மேலாளர் அறையில் மட்டும்தான் இன்டர்நெட்டாம். அதுக்கும் அவர் பாஸ் வொர்டு வேண்டும். அவர் வரவில்லை.

பக்கத்துக் கம்ப்யூட்டர் சென்டர் சென்றோம். அங்கு கரண்ட் இல்லை. அடுத்த தெரு. ஜெனரேட்டர் உள்ள கடையைக் கண்டுபிடித்து பாரம் எடுத்து 100 காப்பி போடச் சொன்னேன்.

பாங்க் திரும்பி அக்கெüன்டண்ட் கையில் அத்தனையும் கொடுத்தோம்.

“”இனிமே வர்றவங்களுக்காவது இல்லைன்னு சொல்லாம கொடுங்க”

“”ரொம்ப தாங்க்ஸ்” வாங்கிக் கொண்டார்.

அடுத்த அரை மணியில் எல்லா பென்ஷன்தாரர்களும் உயிரோடு இருப்பதை உறுதி செய்தோம்.

நானும் கொடுத்தேன். வாங்கினார். ரப்பர் ஸ்டாம்ப் குத்தினார். எனது கணக்கை கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் பார்த்தார். கையெழுத்தை டிக் செய்தார். “”கொஞ்சம் மாறுதே. மறுபடியும் போடுங்கம்மா”

போட்டேன். டிக்குக் மேலேயே மறுபடியும் டிக்.

“”அம்மா, நீங்க மறுமணம் பண்ணலியே?”

புயல்.

“”இன்னொரு கல்யாணம் பண்ணலேன்னு சர்டிபிகேட் வேணும்”

“”கல்யாணத்துக்குத்தான் சர்டிபிகேட் கொடுப்பாங்க. பண்ணலேன்னு யார் கொடுப்பா?”

“”நீங்களே கொடுக்கலாம். ùஸல்ப் சர்டிபிகேட். நான் மறுமணம் செய்யலேன்னு ”

“”எனக்கு முன்னாலே கொடுத்த அந்த அம்மாகிட்ட கேட்கலியே”

“”அவங்களே வேலை பார்த்து ரிட்டையர்டு ஆன பென்ஷன்தாரர். நீங்க பேமிலி பென்ஷன். அதான்”

கல்யாணம் ஆகலேன்னு நானே எழுதிக் கொடுத்தால் போதுமாம். நல்லவர்கள்.

சிவன் கோவில் கோபுரத்தைப் பஸ் கடக்கும்போது வேண்டிக் கொண்டேன், “”அடுத்த வருடம் இந்த சர்டிபிகேட்டுக்கெல்லாம் அவசியம் இல்லாமல் செய்து விடப்பா”.

– ரெ.முத்தரசு (பெப்ரவரி 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *