தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,248 
 
 

காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், “”கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பும்மா” என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஸ்வேதா கண்ணாடி முன் நின்று நிதானமாக ஏதோ ஒரு கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருந்தாள்.

“”இதோ பாரு ஸ்வே… நாம ஒன்னும் செல்ஃபி எடுத்துக்கப் போகலை. உனக்கு இப்போ நிறைமாசம் இன்னும் பத்து பதினைந்து நாளில் டெலிவெரி. அதுக்காக பேபி பொசிஷன் பாக்க ஸ்கேன் எடுக்கப் போறோம். கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா..” மகேஷ் பரபரத்தான்.

“”மகேஷ் இந்த லோஷன் போட்டதாலேதான் நீ என்னை பார்த்து மயங்கினே.. பிறகு லவ் அப்புறம் கட்டிக்கிட்டே.. உன் லவ் டைலாக் எல்லாம் மறந்து போச்சா?” என்று கண் அடித்தாள் ஸ்வேதா.

“”அதெல்லாம் நினைச்சுப் பார்க்கிற நேரமா இது.. ம்… கிளம்பு கிளம்பு”

“டொடாங்’ ஏதோ சம்மட்டியால் தலையில் அடிப்பது மாதிரி ஒரு சத்தம். அது காலிங் பெல்.

கடுப்பான ஸ்வேதா, “”எத்தனை நாளா உன் கிட்டே சொல்லிக்கிட்டு இருக்கேன் இந்த காலிங் பெல்லை மாத்தச் சொல்லி. நம்ப வீட்டு ஓனருக்கு என்ன டேஸ்ட்டோ?” என்று சலித்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.

அந்த அப்பார்ட்மெண்ட்டை கூட்டிப்பெருக்கும் ஆறுமுகத்தாய்க் கிழவி நின்றிருந்தாள். எழுபது வயதை தொட்டிருந்தாள் கிழவி. ஆனாலும் முறுக்கேறிய நரம்பு மாதிரி உடம்பு. சற்று ஒல்லியான தேகம். தோல் எல்லாம் சுருங்கி யிருந்தாலும் கண்களில் மட்டும் ஒருவித தீட்சண்யம். வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தாள்.

“”ஆத்தா நேத்து ராத்திரி பக்கத்து வீட்டுக்கார ஐயரம்மா நாலு சப்பாத்தி கொடுத்துச்சு. ரெண்டை ராத்திரி தின்னுட்டேன். மீதி ரெண்டை வெச்சி

இருக்கேன். இப்போ அது வராட்டி மாதிரி ஆகிப் போச்சி. ஏதாவது சட்டினி கிட்டினி இருந்தாக் கொடு தாயி”

வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஸ்வேதாவுக்கு கடுப்பாக இருந்தது. முகமெல்லாம் சிவக்க, “”அதெல்லாம் ஒண்ணுமில்லே போ போ..” என்று துரத்தினாள். “”இல்லேனு கூடச் சொல்லு தாயி. இப்படி ஏன் மூஞ்சியைச் சிடு சிடுனு வெச்சுக்கிறே? சரி தாயி நான் பக்கத்து வீட்டிலே கேட்டுப் பாக்கிறேன்” என்று சொல்லி கிழவி அடுத்த பிளாட்டை நோக்கிப் போனபோது மகேஷ், “”பாட்டி ஒரு நிமிஷம். காலையிலே இவள் ஒண்ணும் சமைக்கலை. வேணும்னா கொஞ்சம் ஜாம் இருக்கு வாங்கிக்கோங்க” என்று டைனிங் டேபிளில் இருந்த ஜாம் பாட்டிலில் இருந்து இரண்டு ஸ்பூன் ஜாம் எடுத்துக் கொடுத்தான்.

“”தங்கராசா இது போதும்யா.. நல்லா இரு” என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டு போனாள்.

கோபம் குறையாத ஸ்வேதா, “”இது உனக்குத் தேவையா.. இவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கிறதில்லை. எப்போ பாத்தாலும் வெத்தலை போட்டு துப்பிக்கிட்டே இருப்பா.. யாரைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு. நேரம் காலம் இல்லாமே காலிங் பெல்லை அடிச்சி சாப்பிட அதைக் குடு இதைக் குடுனு ஒரே நியூசென்ஸ்”

“”சரி… சரி டேக் இட் ஈஸிம்மா. இதுக்குப் போயி டென்ஷன் ஆகலாமா… வயித்துக்குள்ளே இருக்கிற உன் குழந்தை கோவிச்சுக்கப் போறாம்மா?” என்று குழந்தையைச் சொன்னதும் சட்டென்று ஸ்வேதாவின் கோபம் வந்த இடம் தெரியாமல் மறைந்தது.

அந்த அப்பார்ட்மெண்ட்டில் மெயின்ட்டனன்ஸ் என்று ஒன்றும் கிடையாது. வாட்ச் மேன் கிடையாது. ஏதோ இந்தப் பாட்டி வந்து ஒட்டிக்கிட்டா. அவளுக்கு விசித்திரமான பெயர் ஆறுமுகத்தாய். மதுரைப் பக்கம் சொந்த ஊர். பாட்டியின் கணவர் காலமானதும் ஆதரிக்க ஆள் இல்லாமல் இங்கு வந்துவிட்டாள். இரண்டு நாளைக்கு ஒரு முறை பிளாட்டைக் கூட்டிப் பெருக்குவா. ஆண்கள் பைக் எடுக்கும் போதும், கார் எடுக்கும் போதும் சிரித்துக் கொண்டே, “”நல்லா இரு ராசா” என்பாள். அதே பெண்ணாக இருந்தால் “”நல்லாயிரு தாயி” என்பாள். சிலர் அதற்கு பதிலாக புன்னகைப்பர். பலர் அதைக் கண்டுகொள்வதேஇல்லை.

இருவரும் ஸ்கேன் சென்டருக்குப் போனார்கள். டோக்கன் நம்பர் 18. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்ததும் ஸ்வேதாவின் முறை வந்தது. ஸ்கேன் ரூமுக்குள் சென்றாள். அங்கிருந்த நர்ஸ் ஸ்வேதாவை படுக்க வைத்து வழவழப்பான ஒரு திரவத்தை வயிற்றைச் சுற்றிப் பூசினாள். ஸ்கேன் எடுக்கும் மருத்துவர் ஸ்கேன் கருவியை வயிற்றில் வைத்து மென்மையாக அழுத்தினார். “கிர்’ என்று மெல்ல அதிர்வுடன் சத்தம் கேட்டது. சிறிது நேரம் தான்.

“”ஓ.கே. மேடம் நீங்க போகலாம். ரிப்போர்ட்டை ஈவினிங் கலெக்ட் பண்ணிக்கோங்க”

“”தேங்க்ஸ் சார்”

ஸ்வேதாவை அவள் வேலை பார்க்கும் சாப்ட் வேர் கம்பெனியில் இறக்கிவிட்டு மகேஷ் தன் அலுவலகம் சென்றான். மாலை இருவருமே அந்த பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்றார்கள். டாக்டரைப் பார்த்தார்கள். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த பெண் மருத்துவர் ஸ்வேதாவை முழுமையாகப் பரிசோதித்தார்.

மகேஷைப் பார்த்து, “”நெக்ஸ்ட் வீக் டெலிவரி பண்ணிடலாம். எவரிதிங் ஓ.கே. பட் நீங்க நினைக்கிற மாதிரி நார்மல் டெலிவரி கஷ்டம்” என்று இருவரையும் பார்த்தார். ஸ்வேதா மகேஷ் இருவரும் கொஞ்சம் குழம்பிப் போனார்கள்.

“”டோன்ட் ஒர்ரி. கவலைப் படாதீங்க.. இப்போ சிசேரியன் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை”

“”இல்லே மேடம்… நாம கொஞ்சம் வெயிட் பண்ணி பார்த்தா?” மகேஷ்.

“”அது ரிஸ்க். தவிர இப்போதான் ஸ்வேதாவுக்கு இருபத்தி ஒரு வயசு. இடுப்பு எலும்பு விரிவடையக்கூடிய வலுவிலே இல்லை. ஒரு நார்மல் டெலிவரியைத் தாங்கிக்கிற சக்தி இவங்களுக்கு இல்லை. அதுவும் இல்லாமே இன்னிக்கு காலையிலே எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் படி இன்னும் குழந்தையோட தலை கர்ப்பப் பை வாயிலே பிக்ஸ் ஆகிற மாதிரி தெரியலை. இப்போ நான் இவங்களைச் செக் பண்ணப் போதும் எந்த சேஞ்சும் இல்லை. மெடிக்கலா நாங்க இதை ரோட்டேட் ஹெட்னு சொல்லுவோம். úஸô வீ டோன்ட் டேக் எனி ரிஸ்க்”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். டாக்டர் தொடர்ந்தார்.

“”இன்னும் ஒரு மூணு நாளில் அட்மிட் ஆகிடுங்க. வீட்டிலே அப்பா அம்மா பெரியவங்க யாரும் இருக்காங்களா?”

“”இல்லே மேடம் நாங்க லவ் மேரேஜ். இரண்டு பேர் வீட்டிலேயும் யாரும் ஒத்துக்கலை. ஒரு வேளை இந்தக் குழந்தை பிறந்த பிறகு அவங்க வரலாம்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் மகேஷ்.

“”இட்ஸ் ஓ.கே. எதுக்குக் கேட்டேன்னா, இப்போ எல்லாம் இந்த மாதிரி சிசேரியன் பண்ணுகிறப்போ, கிட்டத்தட்ட எல்லாருமே நாள் நட்சத்திரம் குறிச்சுதான் பண்ணுறாங்க அது உங்க விருப்பம். அப்படி அதிலே எல்லாம் நம்பிக்கை இல்லைனு சொன்னால் என் வசதிப்படி நான் சர்ஜரி பண்ணி குழந்தையை வெளியே எடுத்திடலாம்”

“”இல்லே மேடம்… குழந்தை பிறக்கிறது நல்ல நாள் நட்சத்திரத்திலே பிறந்தால் நல்லதுதானே?” என்றாள் ஸ்வேதா.

“”ஓ.கே. அப்போ நீங்களே நல்ல ஜோதிடராகப் பார்த்து ஒரு டேட் அண்ட் டைம் பிக்ஸ் பண்ணிக் கொடுத்திடுங்க”

டாக்டரிடம் விடைபெற்று இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அடுத்த நாள் மகேஷ் தன் நண்பன் நரேன் மூலமாக ஒரு ஜோதிடரைத் தேடிக் கண்டுபிடித்தான். திருவான்மியூரில் ஒதுக்குப் புறமாக அமைந்திருந்த ஒரு வீடு. உள்ளே விஷ்ணு சகஸ்ரநாமம் சி.டியில் ஓடிக் கொண்டிருந்தது. அங்கும் மூன்று பேர் காத்திருந்தார்கள்.

“”டேய் இந்த ஐயரு பெரிய ஜோதிடர். அப்பாயிண்ட்மெண்ட் இருந்தால் தான் பார்ப்பார். நான் என் அப்பா மூலமா இவரைப் பிடிச்சேன். அப்பா இப்பவும் எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும் இவர் கிட்டே ஒரு வார்த்தை கேட்காமல் செய்யமாட்டார்”

தன் நண்பன் நரேன் சொல்வதை அனிச்சையாகக் கேட்டுக் கொண்டே தலையை ஆட்டினான் மகேஷ்.

“”டேய் மகேஷ் நான் என்ன கதையா சொல்லுறேன்? உன் கிட்டே ஒரு சீரியஸ்னúஸ காணோம். ஆமா இவர் பீஸ் ரூ 500 கொண்டு வரச் சொன்னனே கொண்டு வந்துட்டியா?”

பர்ûஸ எடுத்துப் பார்த்தான் மகேஷ். அதில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக இரண்டு இருந்தது.

“”ஓ.கே” என்றான். அரை மணி நேரத்தில் இவர்களின் முறை வந்தது. உள்ளே சென்றார்கள். உள்ளே மெலிதாக ஏ.சி. ஓடும் சத்தம். அந்த ரூமில் நட்ட நடுவில் ஒரு டேபிள் சேர் டேபிளில் ஒரு லேப் டாப். சுற்றி பல சோதிடப் புத்தகங்கள். பாம்பு படம் போட்ட பஞ்சாங்கம் எல்லாம் இருந்தது. நெற்றியில் நன்கு தெரியும் படியாக நாமம் போட்டிருந்தார். “பளீர்’ என்று சிரித்தார்.

“”வாப்பா நரேன் அப்பா நன்னாயிருக்காரா?”

என்றார்.

“”நன்னா இருக்கார் மாமா. இவன் என்னோட பிரண்ட் இவனுக்கு ஒரு உதவி பண்ணனும்.

நான் என்ன உதவி பண்றது. புரோகிதம் என்னோட தொழில்? அது சம்பந்தமாக ஏதாவது இருந்தா சொல்லு. பீஸ் வாங்கிண்டு பண்ணிக் கொடுத்திடறேன்”

“”இவனுக்கு குழந்தை பிறக்கப் போறது”

“”பேஷாப் பிறக்கட்டும்”

“”அது இல்லை. குழந்தை பிறக்க தேதி நீங்கதான் வெச்சுக் கொடுக்கணும்”

ஒரு பெருமூச்சு விட்ட படி தன் இரு கை விரல்களையும் சேர்த்து மோவாயில் வைத்துக் கொண்டு நரேனைப் பார்த்தார்.

“”பிறப்பு, இறப்பு எல்லாம் ரகசியம். பகவானைத் தவிர யாரும் கணிக்க முடியாது. ஆனால் கணிக்கும் படி ஆகிட்டுத்து. நோக்கு ஒன்னு தெரியுமா. நான் ஜோசியம் சொன்னாத் தப்பாது. இந்த சிசேரியன் வந்ததிலிருந்து எங்க மாதிரி ஆளுங்க கிட்டே வந்து ஏதோ கடை திறக்க தேதி குறிக்கிற மாதிரி குறிச்சுண்டு போறாங்க. நாங்களும் பகவான் மேலே பாரத்தைப் போட்டுட்டு செஞ்சு குடுத்திடறோம். ஆனால் நான் குறிச்சுக் கொடுத்த நேரத்திலே சில குழந்தைங்க பிறக்கிறதில்லே தெரியுமோ? இப்போ நான் ஒரு லக்னம் குறிச்சிக் கொடுக்கிறேன்னு வையி. அந்த நேரத்திலே எல்லாம் சரியா நடக்கும்னு சொல்ல முடியாது. மாறும். அனஸ்தீசியா கொடுக்கும்போது லேட் ஆயிடும். அல்லது குழந்தையை எடுக்கும்போது ஏதோ பிராபளம் அப்படினுட்டு கொஞ்சம் லேட் ஆயிடுத்துனு வையி.. பிறக்கிற புள்ளையாண்டானுக்கு லக்னம் மாறிப் போயிடும். நான் குறிச்சது மீனம்னா இப்போ லேட்டானதாலே மேஷ லக்னம்னு ஆகிடும். லக்னம் மாறினால் தலை எழுத்தே மாறிடும். இந்த கால தாமம் தன்னாலே நடக்கிறது இல்லே. பகவான் பண்றது. எப்போ பிள்ளை இந்த உலகத்தை பார்க்கணும்னு எழுதியிருக்கோ அப்போதான் பார்க்கும் இது விதி. நான் என் தொழிலுக்குத் துரோகம் பண்றதில்லே. அதனாலே இதை எல்லாம் சொல்லும்படி ஆயிடுத்து. இப்போ சொல்லு } நாள் நட்சத்திரம் குறிக்கலாமா? வேணாமா?”

நரேன் மகேஷைப் பார்த்தான்.

மகேஷ், “”பரவாயில்லே நாம டிரைப் பண்ணலாம் சாமி குறிச்சுக் குடுங்கோ”

“”ஓ.கே” என்றார். ஒரு பத்து நிமிடம் சில கணக்குகளை லேப் டாப்பில் போட்டுப் பார்த்தார். பின் “சட்’ என்று ஒரு பட்டனைத் தட்டினார். கட கடவென்று பிரிண்டர் ஓட ஆரம்பித்தது. பிரிண்ட் ஆகி இருந்த நான்கு பக்க தாள்களை எடுத்தார். அவர் பெயர் பொறித்த மேலட்டைக்குள் வைத்து ஸ்டாப்ளர் போட்டார்.

பின் இருவரையும் பார்த்து, “”வர்ற 29ம் தேதி பவுர்ணமி. ஈவினிங் 5 மணியில் இருந்து 5.30க்குள்ளே நல்ல நேரம் குறிச்சு இருக்கேன். ட்ரை த லெவல் பெஸ்ட்” என்று சொல்லி பிரிண்ட் அவுட்டை கைகளில் கொடுத்தார். பீûஸக் கொடுத்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.

அடுத்த நாள் டாக்டரிடம் ஜோதிடர் சொன்ன தேதியையும் நேரத்தையும் சொன்னார்கள். டாக்டர் அதை தன் டைரியில் குறித்து வைத்துக் கொண்டார். இருபது ஆயிரம் முன் பணமாக ஆஸ்பத்திரியில் கட்டச் சொன்னார்கள். மொத்தம் ரூ 60,000 வரை பில் வரலாம் என்றும் குறிப்பிட்டார்கள். மகேஷ் தன் கம்பெனியின் மெடிக்கல் இன்ஸýரன்ஸில் 45,000 வரை கவரேஜ் கிடைப்பதால் கூடுதலாக மகேஷ் ரூ 15,000 கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது என்று நினைத்தான்.

இன்னும் நான்கு நாட்கள்தான். நாட்கள் நெருங்க நெருங்க ஸ்வேதா கொஞ்சம் பதட்டமாக உணர்ந்தாள். அட்மிட் ஆவதற்கு இரு நாட்களுக்கு முன்நாள் இரவில்,””மகி நாம லவ் மேரேஜ் பண்ணாமே இருந்திருந்தால் எங்க அம்மா இங்கே இருந்து என்னைக் கவனிச்சுப்பாங்க? இல்லையா?” என்று ஸ்வேதா சொல்லும் போது அவள் கண்கள் பனித்தன.

“”கவலைப் படக்கூடாது ஸ்வே குழந்தை பிறந்ததும் உன்னோட அப்பா அம்மா, என்னோட அப்பா, அம்மா எல்லாரும் வந்திடுவாங்க” என்று சொல்லி அவளை அதரவாக அணைத்துக் கொண்டான்.

“”நீ என்னை ஆறுதல் படுத்தச் சொல்லற பொய் இதுனு தெரியும் மகி. நமக்கு வேற வழியில்லை” பொங்கி வரும் அழுகையை மறைக்க முடியாமல் திணறித் திணறி அழ ஆரம்பித்தாள்.

எப்படி அவளைச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் சற்று நேரம் மெüனமாக அமர்ந்திருந்தான். பின் அவளே சமாதானம் அடைந்தது போல் எழுந்து படுத்துக் கொண்டாள். மகி தன் லேப் டாப்பில் தன் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய ஈமெயில் எல்லாவற்றையும் அனுப்பிக் கொண்டிருந்தான். நேரம் மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ஸ்வேதா விழித்துக் கொண்டாள்.

மகி இன்னும் தூங்கலை.

“”இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு”

“”ஒரு ஹெல்ப் பண்ணுப்பா”

“”என்னனு சொல்லு? செல்லம்”

“”ஒன் பாத்ரூம் போணும்பா. பாத்ரூம் வரை கொண்டு போய் விடு. ஒரே டயர்டா இருக்கு”

“”இதோ வந்துட்டேன்” என்று சொல்லி எழுந்து அவளைக் கைத்தாங்கலாக பாத்ரூம் வரைக் கொண்டு சென்று விட்டான்.

“”உள்ளே கதவைத் தாள் போடாதே.. சும்மா சாத்திக்கோ”

“ம்’ என்று தலையசைத்துவிட்டு உள்ளே போனாள் ஸ்வேதா.

தற்செயலாக கைகளைப் பார்த்தவன் அதிர்ந்தான். கைகள் முழுதும் நனைந்திருந்தது. அந்த ஈரம் ஸ்வேதாவின் நைட்டியில் இருந்து வந்திருக்கிறது என்று புரிந்தது. நைட்டி நனைந்து இருக்கிறது என்றால் ஒருவேளை பனிக்குடம் உடைந்து விட்டது என்பார்களே, அதுவா? இது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

உள்ளே பாத்ரூமில் சென்று அமர்ந்த ஸ்வேதாவுக்கு வயிற்றில் லேசாக ஆரம்பித்த வலி கால் வரை பரவியது. அடிவயிற்றில் யானை ஏறி மிதிப்பது போலிருந்தது.

“”மகி வயிறு ரொம்ப வலிக்குதுப்பா” என்று உள்ளே அவள் கதறும் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியாமல் கதவைத் திறந்து, “”வா ஸ்வே.. ஆஸ்பிடல் போயிடலாம்” என்று கைகளைப் பிடித்து தூக்க முற்பட, “”என்னாலே இங்கேயிருந்து எழுந்திருக்கவே முடியாது மகி”

ஓவென்னு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அங்கிருந்து ஓடிவந்து ஹாலில் இருந்த செல் போனை எடுத்து அம்புலன்ஸýக்குப் போன் செய்து விட்டு பின் மீண்டும் பாத்ரூம் வாசல் வரை வந்தான்.

“”மகி மகி தாங்க முடியலைடா” என்று கதற ஆரம்பித்தாள் ஸ்வேதா. திக் பிரமை பிடித்தவன் போல் சிலையாக நின்றான் மகேஷ். ஏதோ யோசனை தோன்றியவனாய் பக்கத்து வீட்டில் உதவி கேட்கலாம் என்று கதவைத் திறந்து வெளியே வந்தான். வராந்தாவில் ஆறுமுகத்தாய்க் கிழவி படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் உள்ளே ஸ்வேதா அழும் சத்தம் எல்லாம் கேட்டு விழித்தாள் ஆறுமுகத்தாய்க் கிழவி.

“”ராசா என்னாச்சு?” என்றாள்.

“”ஸ்வே ஸ்வே” என்று திணறினான்.

“”சொல்லு ராசா. என்ன ஆச்சு?”

“”இல்லை… அவளுக்கு வலி வந்துடுச்சு… ஆம்புலன்ஸýக்கு போன் பண்ணியிருக்கேன். என்ன பண்ணறது புரியலை”

“”அவ எங்கப்பா?”

“”பாத்ரூமிலே”

“”அடபாவி மக்கா பாத்ரூமிலே பிள்ளை பிறந்தா பிள்ளை உள்ளே விழுந்திடும். வா ராசா முதல்ல அவளைத் தூக்கு வா..” என்று உள்ளே ஒடி இருவருமாக அவளை மிகச் சிரமப் பட்டு தூக்கி வந்து வெளியே கிடத்தினார்கள். இப்பொழுது ஸ்வேதா போட்டிருந்த நைட்டி முழுதுமாக நனைந்திருந்தது.

“”இந்தா ராசா நீ அங்கிட்டு போ. நான் பாத்துக்கிறேன்”

“”பரவாயில்லை நான் இங்கேயே நிக்கறேன்”

“”கட்டையிலே போறவனே அங்கிட்டு போடானா போவேன் ..” என்று அவனைத் தள்ளிவிட்டு ஸ்வேதாவுக்குப் பிரசவம் பார்க்க ஆரம்பித்தாள் கிழவி. குழந்தையின் தலை தெரிந்தது. வலியால் ஸ்வேதா துடித்துக் கொண்டிருந்தாள். மிக லாகவமாக குழந்தையைப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டாள் அறுமுகத்தாய் கிழவி. முழுதுமாய் வெளியே வந்துவிட்டது. பெண் குழந்தை.

“”ராசா… அடுப்படியிலே கத்தி ஏதாவது இருக்கா?”

“”என்னது அடுப்படி கத்தியா?”

“”ஆமா”

“”இந்தா இருக்கு பாட்டி” என்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துக் கொடுத்தான். அதைக் கொண்டு மிகச் சிறந்த மருத்துவர் செய்வது போல் தொப்புள் கொடியை அறுத்தாள். பின் குழந்தையின் வயிற்றை ஒட்டி தொப்புளை முடிந்துவிட்டாள். பின் குழந்தையைத் தட்ட அது அழ ஆரம்பித்தது. குழந்தை அழு குரலுடன் வெளியே அம்புலன்ஸ் சத்தமும் சேர்ந்து கேட்டது.

– முத்ரா (பெப்ரவரி 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *