உன்னைக் கொன்றவர்கள் யார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 10,140 
 
 

அந்த நீலமலைத்தொடர்கள் எத்தனை அழகாய் இருக்கின்றன. சலசலத்தோடும் அருவிகள், ஓடைகள், சில்லென்ற தென்றல், குருவிகள் மைனாக்களின் கொஞ்சும் ஒலியலைகள் என்பன மனதுக்கு எவ்வளவு இதமளிக்கின்றன. பார்க்குமிடங்கள் எல்லாம் பசுமைகள், புல்வெளிகள் யாருக்குத்தான் மனதில் இனிமை உணர்வை உண்டு பண்ணாது! இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் தொடுவானத்துக்கப்பால் மாலையில் சூரியன் மறையும் அந்த அற்புதக் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த அபூர்வ வர்ண ஜாலத்தை அங்கு மாத்திரம் தான் பார்க்க முடியும். மஞ்சள், சிவப்புக்கலந்த மனோரம்யமான வர்ண ஒளி மேவிப் பரவ ஊதா, கருஞ்சிவப்பு, பச்சை, நீலமென நிமிடத்துக்கு நிமிடம் உருமாறி மாயாஜாலமென இந்திரலோகத்தை நினைப்பூட்டும்.

ஆனால் இவையெல்லாம் அருகில் இருந்தும் இவற்றைப் பார்த்துப் பரவசப்பட முடியாத ஒரு மக்கள் கூட்டத்தினரும் அங்கு வாழத்தான் செய்கிறார்கள். அரசின் இனவாதக் கொள்கையால் ஆயிரத்துத்தொழாயிரத்து எழுபதுகளில் இவர்கள் வாழ்ந்து உழைத்து வளங்கொழிக்கச் செய்த அந்தத்தேயிலைத் தோட்டங்கள் தேசிய மயமாக்கல் என்ற பெயரில் பறித்தெடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள பல டிவிசன்களைக்கொண்ட பல தோட்டங்கள் துண்டாடப்பட்டன. சிறு, சிறு துண்டுகளாகப் பெரும்பான்மை இன மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அவற்றில் வாழ்ந்த தொழிலாளக் குடும்பங்கள் ஒதுக்கப்பட்டு ஓரங்கப்பட்டனர். அவர்கள் போவதற்கு இடமின்றிக் கொதிக்கும் பானையில் இருந்து அடுப்பில் விழுந்தவர்களின் கதிக்குத் தள்ளப்பட்டனர்.

இப்படி வாழ்ந்து கெட்டுப்போன தோட்டந்தான் தொளஸ்பாகே குன்றுகளின் சாரலை அண்டிக்காணப்பட்ட தாமரைவள்ளித்தோட்டம் மேற்கணக்கு, பணியக்கணக்கு, நடுக்கணக்கு என்று மூன்று டிவிசன்களைக்கொண்ட செழிப்பான தோட்டம், இன்று போக்குவரத்துப் பாதைகள் உடைந்து போய் ஆள் நடமாட்டமின்றிப் பாழாகிப்போய் விட்டன. பல் ஆயிரம் கிலோ தேயிலையை அரைத்து உலகின் மிசச்சிறந்த தேயிலையை உற்பத்தி செய்து ஏலச் சந்தையில் மிக அதிக விலையைப் பெற்றுக்கொடுத்த அத்தோட்டத்தின் இராட்சதத் தொழிற்சாலை கண்மூடி மௌனியாக இருக்கிறது. அதன் சுவர்கள் இற்று உழுத்து அநாதரவாகச் சிதைவடைந்து கிடக்கின்றன.

சிறு வயதில் பள்ளிக்காலத்தில் எனது தந்தையே பெக்டரி ஒப்பீஸராக இருந்ததால் அந்தத் தொழிற்சாலையின் ஒவ்வொரு அங்கத்தையும் அறியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தொழிற்சாலை இயங்கும் போது தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பெருஞ்சிங்கம் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து உரக்க குரலெடுத்து உறுமுவது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தும். மற்றச் சமயங்களில் அந்த இயந்திர ஒலி நாம் எந்த ராகத்தை நினைத்துக்கொண்டாலும் அந்த ராகத்தில் இசை எழுப்புவதாகவே ஒலிக்கும். இரவில் அந்த ஓசையைத் தாலாட்டாக நினைத்துக் கொண்டு கூர்ந்து செவிமடுத்தால் தூக்கம் வராத நேரத்திலும் தூக்கம் வந்து விடும்.

தாமரைவள்ளித் தோட்டத்தில் புகழ் பெற்ற ஒரு அம்மன் ஆலயமும் இருந்தது. அம்மன் கோயில் திருவிழாவென்றால் எத்தனை கொண்டாட்டம் சுற்று வட்டாரத்தில் எல்லாத்தோட்டங்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருவர். கலை நிகழ்ச்சிகள் பத்து நாட்களுக்கு நடைபெறும். இந்தியாவில் இருந்தெல்லாம் கலைஞர்கள் பேச்சாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள். நானும் கூட காவடி கோலாட்டம் எல்லாம் ஆடியிருந்தேன். கரகம் பாலித்தல், பங்குனி உத்திரம், டிசம்பரில் ராமநாமபஜனை, இடையில் காமன் கூத்து, என்ன ஒரு கலகலப்பான வாழ்வு இவை எல்லாம் எங்கே போய்விட்டன. ஏன் அந்தக்கோயில் இப்படி பூஜை புனஸ்காரமின்றிப் பாழடைந்து போய் கிடக்கின்றது. நாய்களும் பூனைகளும் மழைக்கொதுங்குவதைத்தவிர மற்றப்படி உயிரற்ற கோயிலாகத் தோற்றமளிக்கிறது. அந்த தோட்டத்தில் எனக்கு மிகப் பிடித்ததொன்று மாடசாமி கோயிலும் கற்குகையும் அதனையொட்டிய சிற்றாறும் ஆகும். வார இறுதி நாட்களிலும் விடுமுறைகளின் போதும் எங்கள் விளையாட்டெல்லாம் அந்த முனியாண்டிக் கோவிலோர ஆற்றில்தான் ஆற்றை மறித்துச் சிறிய அணைகட்டித் தெப்பக்குளமாக்கி நான்கு வாழை மரத்தண்டுகளை ஒன்றாகச் சேர்த்து இணைத்துத் தெப்பம் விடுவதென்றால் எத்தனை இன்பகரமான பொழுதுகள். தோட்டத்தில் யாருக்கும் அம்மை நோய் வந்தாலும் வைசூரி கண்டிருந்தாலும் வேறும் துன்ப துயரங்களின் போதும் காத்தருள வேண்டுமென்று மாடசாமி தெய்வத்தை வேண்டிக்கொண்டு சேவலொன்றைத்தருவதாக நேர்த்திக்கடன்கள் சொல்லிவிடுவார்கள். பின் பெருநாள் அந்தச் சேவலையும் ஒரு போத்தல் சாராயத்தையும் கொடுத்து அதற்கென்று காத்திருக்கும் பூசாரியிடமும் அவரது பரிவாரத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். அப்புறமென்ன? சேவல் தூக்கலாக மிளகாய்ப்பொடி போட்டு உறைப்பான கறிவாயார்! மாடசாமி தெய்வத்துக்கு நன்றி தெரிவித்துப் படைத்த பின் பூசாரியும் பரிவாரத்தினரும் உண்டு குடித்துக் களித்திருப்பர். எம்ழமப் போன்ற வாண்டுப்பட்டாளம் ஐந்தாறு பேருக்கும் கூட பங்கு கிடைக்கும். அந்தக் கறியின் சுவை அம்மா சமைத்த சாப்பாட்டில் கூட இருந்ததில்லை.

அந்தச்சிற்றாறு மாடசாமி கோயில் குகைக்கும் முனியாண்டி சாமிக்கோயிலுக்கும் இடையில் தான் இருந்தது. பதின்மூன்றாம் கொழுந்து மலையில் இருந்து அந்தச்சிற்றாறில் வந்து விழுகின்ற ஓடையை மறித்து ஒரு பீலி வைத்திருக்கிறார்கள். சுமார் பத்தடி உயரத்தில் இருந்து விழும் நீரில் தான் தோட்டத்து மக்கள் பகல் பொழுதில் குளிப்பார்கள் எனினும் பகல் பன்னிரண்டு மணிப்பொழுதில் இளம் ஆண,; பெண் பிள்ளைகள் அங்கு குளிக்கக்கூடாதெனப் பெரியோர்கள் எச்சரித்திருக்கிறார்கள் காத்துக்கறுப்பு பட்டு விடுமாம்.

அப்படிப் பயந்து காய்ச்சல் வந்து அவதிப்பட்டவர்கள் பலரை எனக்குத்தெரியும். என்றாலும் எனக்கு அது மூட நம்பிக்கையாகவே பட்டது. ஒருநாள் நண்பர்கள் யாரும் கிடைக்காததால் நான் மட்டும் அந்தப்பீலியில் குளிக்கப் போனேன். பகல் பன்னிரண்டு மணி பீலி இரண்டு கல்லிடுக்குகளுக்கு இடையில் தான் செறுகப்பட்டிருந்தது. தண்ணீர் தாரையாக நடுவில் வழிய இரு புறமும் உயர்ந்த பாறைகள். தலையைத் தண்ணீருக்குள் பிடித்தால் இரண்டு பாறைகளுக்கும் நடுவில் இருந்த குகைக்குள் கும்மிருட்டு. எனக்கு அப்போது பார்த்து காத்து, கறுப்பு பற்றி ஞாபகம் வந்துவிட்டது. உள்ளே இரண்டு விழிகள் என்னையே பார்ப்பது போன்ற ஒரு பிரமை, நடுக்கமும் பயமும் தலைக்கேறி உடல் வெடவெடத்தது அதன் பின் சோப்புப் போட்டு மறுபடியும் தலையைப்பீலியில் பிடிக்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை. தொடர்ச்சியாக நடுக்கம் தெரிந்தது. நான் பீலியில் குளிக்காமல் வெளியில் ஓடையில் ஓடிய நீரை கோப்பையில் அள்ளிக் கழுவிக்கொண்டு ஓட்டமாய் ஓடி வீடு வந்து சேர்ந்து விட்டேன். நான் பயந்து ஓடி வந்த விடயத்தை யாரிடமும் சொல்லவில்லை. வெட்கமாக இருந்தது.

அதன் பின் அந்தி சாயச் சாய உடம்பு கொதித்துக் காய்ச்சல் ஆரம்பித்து விட்டது. இரவெல்லாம் பிதற்றல் அம்மாவுக்கு விசயம் விளங்கி விட்டது. கோயில் பூசாரியை அழைத்து வந்த மந்திரித்துப் போட்டார்கள். அடுத்த நாள் மை போட்டுப்பார்த்தார்கள். பின் கோடாங்கி வைத்தும் பார்த்தார்கள். ஒன்றிலும் பயனில்லை. இப்படியாக இரண்டு கிழமைகள் ஓடி விட்டன. காய்ச்சல் தானாகவே சரியாகி விட்டது. அதன் பின் நீண்ட நாட்களுக்கு எனக்கு இரவைக்கண்டால் பயம் அப்படியொரு இனந்தெரியாத பயம். சின்ன வயதில் மனதில் பதிந்துபோய் விட்ட இந்தக் காத்து, கறுப்பு, பேய், பிசாசு என்ற பயத்தை இப்பவும் கூட என்னால் துடைத்தெறிய முடியாமல் இருக்கிறது.

இந்தத் தோட்டத்தில் நாதியற்றவர்களாக இப்போதும் பத்துப்பதினைந்து குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஒதுக்குப்புறமாகப் பிழைத்துப் போங்கள் என்று கைவிடப்பட்டு உடைந்து போன இரண்டு லயங்களில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். என்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த வீரமலை, பாக்கியம், கணேசன், செல்லமணி ஆகியோரும் அங்குதான் இருக்கின்றனர். செல்லமணி ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தாள். அவளின் தந்தையை எனக்கு அக்காலத்தில் ரொம்பப்பிடிக்கும் செல்லையா கங்காணி என்று அழைப்பார்கள். நல்ல தத்துவப்பாடல்களைப் பழைய திரைப்படங்களில் இருந்து மனனம் செய்து பாடுவார். எங்கள் வீட்டுத்திண்ணைக் கச்சேரிகளில் அவர் பாடல்களுக்கு முதலிடம் கிடைக்கும். இத்தகைய கச்சேரிகளிகளின்போதும் வேறு நிகழ்வுகளின் போதும் எனது அப்பாவே தலைமை தாங்குவார். நானும் அவர் மடியில் இருந்தவாறே நிகழ்ச்சிகளை ரசித்திருக்கின்றேன் அது ஒரு பொன்னான காலம்.

தோட்டம் துண்டாடப்பட்டு வேலையில்லாமல் போனதுடன் செல்லையா கங்காணிக்குப் புத்தி பேதலித்துப் போய் விட்டது. பிள்ளைகளும் அவரை ஒதுக்கி விட்டனர். குளிக்காமல் கொள்ளாமல் பிசுக்கேறிய தலையும் கிழிந்து அழுக்கான உடையும் மழிக்காமல் வளர்ந்த தாடியும் பாட்டும் சிரிப்பும் அவரைப் பரிதாபத்துக்குரிய ஜீவனாக்கியது. பிச்சைக்காரனாகத்திரிந்தாலும் அவர் யாரிடமும் தானாகப் பிச்சை கேட்பதில்லை. அவர் முன்பு வாழ்ந்த வாழ்வையும் இப்போதைய நிலைமையையும் பார்க்கும் பலரும் தாமாகவே அவருக்கு உணவுப்பொருட்களை வழங்குவார்கள்.

செல்லமணி நான் அந்தத் தோட்டத்துப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலத்தில் எனது நல்ல நண்பி. எப்போதும் என்னுடன் ஒட்டிக்கொண்டே திரிவாள். பாடசாலையில் விளையாடும் போதும் விழாக்காலங்களிலும் எங்களை ஜோடியாகப் பார்க்கும் எல்லோரும் இணைத்துப் பார்த்துக் கேலிப் பேச்சுப் பேசுவார்கள். எங்களுக்கு இதெல்லாம் அப்போது புரியாது. கடைசி வரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். தோட்டம் பிரிக்கப்பட்ட போது எங்கள் குடும்பத்தினர் வேறு தோட்டத்துக்குச் செல்ல நேர்ந்தது. நான் செல்லமணியைப்பிரிந்து சென்ற காட்சி மிகச்சோககரமாக இருந்ததென்று பின்னர் எனது குடும்பத்தினர் கூறினார்கள்.

அண்மையில் ஒரு நாள் என் பழைய ஞாபகங்களை மீட்டுக்கொள்ள அந்தத்தோட்டத்துக்குச் சென்றிருந்தேன். செல்லமணியைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற உள் மனது துடிக்காமல் இல்லை. நாங்கள் பழகிய காலம் மிகப் பால்ய காலமாக இருந்தாலும் ஏதோ உணர்வுடன் கூடிய அந்த உறவின் தடங்கள் இப்போதும் என் இதயத்தில் இருந்து அகன்று விடவில்லை. செல்லமணி வசித்த லயக்காம்பரா எதுவென்று விசாரித்து கதவைத்தட்டிய போது ஒரு வாண்டுப்பயல் வந்து கதவைத்திறந்தான். செல்லமணியின் மகனாக இருக்க வேண்டும். காற்சட்டை மட்டும் போட்டிருந்தான். உடம்பில் துணியில்லை. மெலிந்த தோற்றம், வயிறு ஒட்டிப்போய் விலா எலும்புகள் முன்னுக்கு நீட்டிக்கொண்டிருந்தன. கண்கள் இரண்டும் குழிக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தன. குளித்துப்பல நாளான தலைமயிர் பரட்டையாக இருந்தது. கட்டியான மூக்குச்சளி சீந்தப்படாமல் பச்சையாக ஒழுகி வடிந்து கொண்டிருந்தது. அவனின் அந்தத் தோற்றமே செல்லமணியின் தரித்திர நிலையைச் சொல்லாமல் சொல்லியது.

“”அம்மா எங்கே…?” என்று கேட்ட என்னை அந்நியனாகக் கண்டு மிரண்ட அவன் கண்கள் உள்நோக்கித்திரும்பி வலது கையும் உள்நோக்கிக் காட்டியது. நான் மெதுவாக ஸ்தோப்புக்குள் நுழைந்தேன். அவர்கள் வாழ்ந்து வந்த அந்த லயக்கம்பரா வீடு என்று சொல்வதற்கான எந்த லட்சணத்தையும் கொண்டிருக்கவில்லை. ஒரு இருட்டு குகை போல்தான் இருந்தது. கூரை, சுவர், சுற்றுப்புறம் எல்லாமே புகைக்கரி மண்டிக்கிடந்தது.

ஒரு ஓரமாக அடுப்பும், அதனைச்சுற்றிக் கறுப்பு கறுப்பாகப் பானை சட்டிகளும் உடைந்த பாத்திரம் கோப்பைகளும் ஒழுங்கற்று விசிறிக்கிடந்தன. அடுப்புக்குச் சற்றுத்தள்ளி இளமையிலே கிழண்டு போன ஒரு பெண்ணுருவம் கிழிந்து போன வாழை நாரெனச் சோம்பிப்போய் சுவரில் முதுகை சாத்திக்கொண்டு அமர்ந்திருந்தது. யாரோ வீட்டுக்குள் வருவதை உணர்ந்த அந்த உருவம் தன் பலவீனமான உடம்பைப் பிரயத்தனப்பட்டு நிமிர்த்தித் திரும்பிப்பார்த்தது.

“”யாருங்க?” இந்தக்குரல் நைந்து உருகிப் போய்க்காற்றில் பிசுபிசுத்து ஒலித்தது. “”செல்லமணி நீங்களா?” நிலைமையை சுதாகரித்துக்கொண்ட என் உணர்வுகளுக்கும் சோகம் கப்பிக் கொண்டதால் அது குரலிலும் வெளிப்பட்டது. அந்தப் பெண் தலையாட்டினாள்.

வீட்டுக்கு உள்ளே மேலும் சில வாண்டுப் பிள்ளைகள் சாமான்களை உடைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். முன்பு கதவைத்திறந்த அதே பையனின் சாயலும் தோற்றமும் அவர்களுக்குமிருந்தன. அவர்கள் அனைவரையும் ஒரு சேரப் பார்க்கும் போது பட்டினியால் வாடி வதங்கிய எத்தியோப்பியக் குடும்பமொன்றைப் பார்ப்பது போலிருந்தது. எனக்கு செல்லமணியை ஏன் பார்க்க வந்தோம் என்றிருந்தது. செல்லமணியின் கண்களில் உயிர் வற்றிப்போயிருந்தது. அவை வெறுமனே வருவது யார் என்று அனுமாகிக்க முடியாமல் வெற்றாக வெறித்துப் பார்த்தன. வந்தவனை வரவேற்கும் திராணி கூட அவளிடம் இல்லை. முகத்திலும் கைகளிலும் காயம்பட்ட தழும்புகள் இருந்தன.

வந்திருப்பது யாரென்று சொன்னால் அவளால் புரிந்து கொள்ள முடியுமா? எனக்கிருக்கும் அதே உணர்வுகள் அவளுக்கும் இருக்குமா? நான் நகரத்துப் பாடசாலைக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்னால் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அவள் இருக்கும் நிலையில் அவள் என்ன உணர்வுகளைக் காட்ட முடியும். அவள் இத்தனை காலமும் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே அனுபவித்தவள் இந்த நிலையைக் கண்டு சந்தோஷப்படவா இத்தனை தூரம் வந்தேன்.

நான் ஒன்றுமே பேசவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தேன். நான் சிறு வயதில் விளையாடுவதற்கு
எங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு விளையாட்டு வீடு கட்டியிருந்தேன். சமைக்கப் பானை சட்டி எல்லாம் அதில் இருந்தன. செல்லமணியும் நானும் அம்மா அப்பாவாகப் பாவனை செய்து விளையாட்டுச் சமையல் செய்தமை இப்போதும் நினைவுக்கு வந்தது. என் கண்களில் மெல்ல நீர் கசிய ஆரம்பித்தது. எனக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. கையுடன் கொண்டு வந்திருந்த பிஸ்கட், சொக்லட், பேனா, பென்சில், சோக் பெட்டிகள், விளையாட்டுச் சாமான்கள் அடங்கிய பெட்டியை அந்த வாண்டுப்பையன்களிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து திரும்பி வந்து விட்டேன். மனதும் உடம்பும் கூட அத்தனை கனதியாக இருந்ததை நான் அதற்கு முன்னர் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

செல்லமணியின் கணவன் மகாகுடிகாரன் தோட்டத்தில் வேலையில்லாமல் போனதால் சிங்கள நாட்டுப் புறத்தில் கூலி வேலை செய்யும் அவன் இரவானதும் நன்கு குடித்து விட்டே வீட்டுக்கு வருவான். செல்லமணியையும் அடித்து அவள் பிள்ளைகளையும் துன்புறுத்துவான். பல நாட்கள் அவர்கள் பட்டினியுடனேயே வாழ்ந்தனர். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை. தோட்டப் பாடசாலை மூடப்பட்டு விட்டதால் அவர்கள் சிங்களக் கிராமத்துப் பாடசாலையிலேயே சேர்க்கப்பட்டிருந்தனர்.

செல்லமணி குடும்பத்துக்குத்தான் இத்தகைய நிலையென்றால் கணேசன், பாக்கியம், வீரமலை ஆகியோரின் குடும்பங்களும் அதே நிலையில்தான் இருந்தனர். பறிக்கப்பட்டு விட்ட தம் வாழ்வை அவர்கள் விதி என்று நொந்து கொண்டனர். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர்கள் வாழ்வைப் பறித்துக் கொண்டவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? அவர்களை உயிருடன் கொன்று விட்டவர்கள் யார்?.

தாமரைவள்ளித் தோட்டம் ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை மட்டும்தான். இப்படி எத்தனை தோட்டங்கள் எழுபதுகளையொட்டிய தசாப்தங்களில் அழிந்தொழிந்து போய் விட்டன. தேசிய மயமாக்கலும் காணி உச்ச வரம்புச் சட்டமும் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன நன்மைகளைச் செய்தன? இச் சட்டங்களைக் கொண்டு வந்ததன் நோக்கம் அதனைக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுந்தான் தெரியும்.

இன்றுங் கூட செல்லமணியும் செல்லையாக் காங்காணி போன்றவர்களும் வாழ்ந்திருந்த தோட்டங்கள் புல்மண்டி புதர்காடுகளாகப் பாதைகள் அற்றுப் போய் வாழாவெட்டிகளாகவும் மூளிகளாகவும் காணக்கிடக்கின்றன. ஒரு காலத்தில் அவை பொட்டணிந்து, பூவணிந்து மஞ்சள் நீராடி பொங்கிப் பிரவகித்து குதித்துக் கும்மாளமிட்டு வாழ்ந்திருந்தமைக்கு அவற்றின் எச்ச சொச்சங்கள் மட்டுமே சான்று இனிமேல் இக்கதையும் கூட அதற்குச் சான்றாக இருக்கட்டும்.

(யாவும் கற்பனையல்ல)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *