உணர்வில்லாத இனமும் கெடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 4,282 
 
 

ஓளிவேலன் ஊரில் பெரிய மனிதர், ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தவர், யார் உதவி என கேட்டு வந்தால் இல்லை என சொல்லமால், தன்னால் முடிந்த உதவியை உடனே செய்துக் கொடுப்பார், பல நல்ல குணங்கள் அவரிடம் இருந்தாலும், தன் சாதி என்பதை, எப்போது விட்டுக் கொடுக்க மாட்டார், சாதி என்பது அவருக்குள் ஆல மரமாக வேறுன்றி நிற்கிறது.

“ஏய் பாண்டி உன்கிட்ட எத்தன தடவ சொல்றது, மண்டைல எதையும் ஏத்திக்காத” என்றார் ஒளிவேலன்.

“நான் என்னங்கய்யா செஞ்சேன்” என்று தலையை சொரிந்து கொண்டே கேட்டான் பாண்டி.

“தேங்கா, இளநி, காஞ்ச ஓலையை தனித் தனியா பிரிச்சு போடுனு எப்பவும் சொல்றேன், எதுவும் குப்பை இல்லை எல்லாம் காசுதான், சருகு கூட அடுப்பெரிக்க ஆவும், எப்ப பாரு ஒன்னாவே போட்டு வைக்க, தினமும் நான் சொல்லிட்டே இருக்கனுமா?”

இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஒளிவேலனின் மகன் ஆபரனும், மகள் சங்கவியும் வந்தனர், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே, தன் தந்தையிடம் பேசத் தயங்கி தயங்கி நின்றனர்.

“என்ன ஆபரா ரெண்டு பேரும் எதுக்கு வந்தீங்க, சொல்ல வந்ததை சொல்லுங்க, ஏன் தயங்கி தயங்கி நிற்கீங்க?”

ஆபரன், “அப்பா, அது வந்து ஞானவேல் சித்தப்பா வந்திருக்காங்க……” என்று தான் பேச வந்ததை சொல்ல முடியாமல் இழுத்தான்.

“எவன் உனக்கு சித்தப்பன், அவன் செத்து பல வருஷமாச்சு, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செஞ்சவன், கூட இருந்தே குழி பறிச்சு ஏமாத்தி திண்ணவன், அவனை சித்தப்பன்னு சொல்ற” என்று கோபமாக கத்தினார்.

ஒளிவேலன் நாணயமானவராக இருந்தாலும், மற்றவர்களிடமும் அதே நாணயத்தை எதிர்பார்ப்பார், கூட பிறந்த தம்பி தன் கூட இருந்து, தனக்கு தெரியாமல் பணத்தை எடுத்திருக்கிறான் என தெரிந்ததும், வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார், தன் அண்ணனை விட்டு சென்ற பிறகு, தான் செய்த தவறை நினைத்து திருந்தி இருந்தாலும், ஒளிவேலன் தன் தம்பியை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆபரன், “அப்பா என்ன இருந்தாலும், சித்தப்பா உங்க தம்பிதானே?”

“ஆபரா என் கோபத்தை கிளறாத, நீ எதுக்கு வந்த முதல்லே அதைச் சொல்லு”

“அப்பா, சந்திராவதி அத்த உடம்புக்கு முடியாம இருந்தாங்க, இன்னைக்கு காலைல இறந்துட்டாங்க, நாளைக்கு அடக்கம் பண்றாங்க, நாம போய் பார்த்துட்டு வரலாம்…” என்று ஆபரன் சொல்ல முடியாமல் தவித்தான்.

“ஏய் பல வருஷத்துக்கு முன்னாடி கருமாதி செஞ்சவளுக்கு, திரும்ப என்னல கருமாதி வேண்டி கெடக்கு, நீ வந்ததுலருந்து செத்த எளவுகளைப் பத்தியே பேசிட்டு இருக்க”

சங்கவி, “அப்பா பழச இப்போ எதுக்குபா பேசிட்டு, சந்திராவதி அத்த உங்க கூட பிறந்த பொறப்பு, இதுவர அவங்க கூட எந்த தொடர்பும் இல்லை, கடைசியா அவங்க முகத்தை ஒரு தடவ பார்த்துட்டு வரலாம்பா”

“சங்கு நம்மளுக்குனு குடும்ப கௌரவம் இருக்கு, அவ அதை குழி தோண்டி புதைச்சிட்டு போய்ட்டா, நம்ம சாதியை விட கீழ் சாதிக்காரனை கல்யாணம் செஞ்சு, குடும்ப கௌரவத்தை அசிங்கப் படுத்திட்டா, அன்னைக்கே அவளை தலை முழுகி கருமாதி செஞ்சாச்சு, இனிமே அவளைப் பத்தி பேசாத, ஆமா சொல்லிட்டேன்”

ஆபரன், “அப்பா அத்த வேற சாதில கல்யாணம் செஞ்சது தப்பா?, அப்படின்னாலும் சாகுற வர, அவங்களை குடும்பத்துலருந்து தள்ளிதான வச்சிருந்தீங்க, அந்த தண்டனை போதும்பா, கடைசியா ஒரு தடவ அவங்க முகத்த பார்த்துட்டு வரலாம்பா, இனிமே பார்க்க முடியாதுப்பா”

“எனக்கு குடும்ப கௌரவம் முக்கியம், முதல்ல ஒன்ன புரிஞ்சிக்க, அவ செத்ததை அவ புருஷன் சொன்னானா, இல்லை அவ புள்ளைக சொல்லிச்சா, ஏமாத்தி பிழைச்சவன்தான சொன்னான், முறையா அவ புருஷன்தான சொல்லனும், மரியாத தெரியாத குடும்பம், அதுக்கு போய் வக்காலத்து வாங்கிட்டு இருக்க”

சங்கவி, “அப்பா இது என்ன நல்ல காரியமா?, வெத்தலை பாக்கு வச்சு கூப்பிட, யார் சொன்ன என்னப்பா, விஷயம் கேள்விப்பட்டா போக வேண்டியதான, இப்ப அவங்க முறையா கூப்பிடுவதா முக்கியம், வாங்கப்பா போயிட்டு வரலாம்”

“இங்க பாரு சங்கு நீங்க சொன்னீங்கனு, அங்க போனோம்னு வச்சுக்க, அங்க அவங்க இனம்தான் இருக்கும், நமக்கு அங்க மதிப்பு மரியாத இருக்காது, மரியாத இல்லாத எடத்துல, நமக்கு என்ன வேலை, போய் வேலையை பாருங்க, சும்மா வெட்டியா பேசிட்டு, நேரத்த வீணாக்காதீங்க போங்க”

ஆபரன், “அப்பா நாம போறது துக்க காரியத்துக்கு நல்ல காரியமில்லை, அங்க நமக்கு மரியாத கொடுத்தா கொடுக்கலைன்னா என்னப்பா, கடைசியா ஒரு தடவ அத்த முகத்த பார்க்கனும்பா”

“சரி உன் சித்தப்பன்னு சொன்னியே என்னிடமா சொன்னான், உன்னிடம்தானே சொன்னான், மொதல்ல எனக்குதான சொல்லனும், அவனுக்கு அந்த மரியாத தெரியல, நீங்கதான விஷயத்த சொன்னீங்க, அதனால நீங்களே போங்க, ஆனா நீங்க போனா, உங்களை நான் தலை முழுகிருவேன்”

ஆபரனும் சங்கவியும் அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்து, அழைத்துச் சென்றுவிடலாம் என நினைத்துப் பேசினர், ஆனால் அவரின் பேச்சில் இருவரும் பொறுமையை இழந்தனர், இதுக்கு மேல் அப்பாவிற்கு என்ன சொல்லி புரிய வைப்பதென்று, பொறுமையை இழந்து இருவரும் பேசத் தொடங்கினர்.

ஆபரன், “அப்பா! எதுப்பா மரியாத கௌரவம், அத்த வேற சாதில கல்யாணம் முடிச்சதால் குடும்ப கௌரவம் போச்சா?”

சங்கவி, “நீங்க அத்தைக்கு பார்த்த மாப்ள சதா குடி, புகைன்னு இருந்தவன், செத்து இருபது வருஷம் ஆச்சு, அன்னைக்கு அவன் கும்பம் நடுத்தெருவுல பிச்சை எடுக்க நின்னுச்சு”

ஆபரன், “சாதி உங்க இனம்ன்னு சொல்ற, உங்க சாதிலருந்து அந்த குடும்பத்துக்கு என்ன செஞ்சீங்க, இப்ப அந்த குடும்பம் எங்க இருக்குன்னு தெரியுமா?, உங்க இனத்துலருந்த குடும்பம் என்ன ஆச்சுன்னு, உங்க சாதில தேடுனீங்களா?”

சங்கவி, “அந்த குடும்பம் பரிதவிச்சி நின்னப்ப, அவங்களை கூட்டிட்டு போய் அத்த, மாமவோட ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்துல வேலை போட்டுக் கொடுத்து, தங்க இடமும் கொடுத்து, அவன் பிள்ளைகளை படிக்க வச்சு, எல்லா செலவையும் செஞ்சது அத்த, அந்த நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா?”

ஆபரன், “சந்திராவதி ஆடை ஏற்றுமதி நிறுவனம், அந்த நிறுவனத்துல அத்தயும் ஒரு பங்குதாரர், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அத்த பெயர்ல இருக்கு”

சங்கவி, “அத்த நீங்க சொல்றதை கேட்டு, நீங்க பார்த்த மாப்ளய கல்யாணம் செஞ்சிருந்தா, அத்த இன்னைக்கு அன்னக் காவடியா இருந்திருக்கனும், ஆனா மாமா அத்தைக்கு கொடுத்தது கௌரவமான வாழ்க்க, நம்ம சாதி மாப்ளயால கிடைச்சிருக்குமா?”

ஆபரன், “மதிப்பு, மரியாத இருக்காதுன்னு சொல்றீங்க, அத்தைக்கு அங்க இருக்கற மதிப்பு, மரியாத என்ன தெரியுமா, சந்திராவதி ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம், அத்த பேர்ல பள்ளிக்கூடமும் கல்லூரியும் நடக்கு, அதுல வசதியான யாரும் படிக்க முடியாது”

சங்கவி, “ஆதரவில்லாம படிக்க வசதி இல்லாதவங்களுக்கு மட்டும் அனுமதி, ஏற்றுமதி நிறுவனத்துல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் மட்டுமில்லாம, அவங்க பிள்ளைகளுக்கு இலவச கல்வியும் சேர்த்து கொடுக்காங்க”

ஆபரன், “மாமா, அத்தையால் வாழும், இந்த குடும்பங்கள் அத்தைக்கு கொடுக்கற மரியாதையை பார்த்தா அசந்து போவீங்க, அத்த மாமா கார் தெருவுல போறப்ப, அவங்களுக்கு எந்திரிச்சு நின்னு மரியாத கொடுக்காங்க”

சங்கவி, “அத்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தையும், அவங்க வடிக்கிற கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியலை, இது நம்ம சாதில கல்யாணம் செஞ்சிருந்தா அத்தைக்கு கிடைச்சிருக்குமா”

ஆபரன், “எனக்கும், தங்கச்சிக்கும் அம்மா இல்லை, அந்த நினைப்பே எங்களுக்கு இல்லாம, அம்மாவா இருந்து எங்களை வளர்த்தது அத்த, எங்க மன உணர்வுகளை புரிஞ்சிக்காம, சாதின்னு சொல்லி எங்களை அத்தகிட்டருந்து பிரிச்சு வச்சீங்க, பிள்ளைக உணர்வை புரிஞ்சிக்காத, நீங்க எங்களை பெத்தவரா”

சங்கவி, “அத்தையும், மாமாவும் எங்களுக்கு அம்மா இல்லாத வலி தெரிய கூடாதுன்னு, உங்களுக்கு தெரியாம வீட்டுக்கு கூட்டிட்டு போய், எங்களுக்கு பாசத்தைக் கொட்டி அம்மா, அப்பாவா, எங்க மனசுல நின்ன அவங்க எங்க, சாதி பெயர சொல்லிட்டு, மனித உணர்வுகளை புரிஞ்சிக்காத, நீங்களா எங்களை பெத்தவர்”

ஆபரன், “தென்ன மரத்துலருந்து வர, எந்த பொருளும் வீண் இல்லை பணம்னு சொல்றீங்க, கடவுள் நமக்கு கொடுத்த உயிரை எப்ப எடுப்பார்ன்னு யாருக்கும் தெரியாது, வாழ்ற கொஞ்ச காலம் சாதியால நிம்மதியிழந்து, உறவிழந்து என்ன சாதிக்க போறீங்கப்பா?”

சங்கவி, “உங்க சாதில நீங்க எப்படி இருக்கீங்க, எந்த உயரத்தில் இருக்கீங்கனு யோசிச்சுப் பாருங்க, மாமா வேற சாதிதான் ஆனா மாமா எல்லா சாதி மக்கள் மனசுலயும், உயர்ந்த இடத்துல இருக்காங்க, மாமாவை கல்யாணம் செஞ்ச அத்தயும் அதே உயரத்துக்கு போய்ட்டாங்க, ஆனா நீங்க இன்னும் உங்க சாதியை சொல்லிட்டு, நிக்கற இடத்துலதான் நிக்கீங்க”

ஆபரன், “நாங்க அத்தைக்கு, இல்லை எங்க அம்மாக்கு, இறுதி அஞ்சலி செலுத்தப் போறோம், அதைத் தடுக்க முடியாது, நீங்க என்ன எங்களை தலை முழுகுறது, சாதி வெறிப்பிடிச்ச உங்களை, நாங்க தலை முழுகுறோம் வரோம் இல்லை போறோம்”

ஆபரனும் சங்கவியும் மாறி மாறி, தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டிச் சென்றனர், இருவரும் பேசியதை கேட்ட ஞானவேல், தன் அண்ணன் சிலையாக நிற்பதைப் பார்த்து, சித்தப்பனாக அவர்களை சமாதனப் படுத்தினார்.

ஞானவேல் சொல்வது எதையும் கேட்பதாக இல்லை, “சித்தப்பா அவர் மனித இனமாக இருந்தா, அத்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரட்டும், வரலைன்னா எங்களுக்கு அப்பா இல்லை, இதுல எந்த மாற்றமும் இல்லை” என்று தன் சித்தப்பாவை அழைத்துக் கொண்டுச் சென்றனர்.

ஒளிவேலன் தன் பிள்ளைகள் பேசியதை கேட்டு கற்சிலையாக நின்றார், தன் பிள்ளைகளா தன்னிடம் பேசினார்கள் என்பதை நம்ப முடியாமல், அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியாக விழுந்ததிற்கு, அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

சங்கு ஊதும் சத்தமும், வெடிச் சத்தமும் கேட்க, அவரையும் அறியாமல் அவர் கால்கள் நடக்க, எதிரில் வந்த இறுதி ஊர்வலத்தின் முன் நின்று, “என் தங்கச்சிய கடைசியா சுமக்கிற பாக்கியத்தை கொடுப்பியா” என தன் மச்சானிடம் கேட்க, தன் மீதிருந்த சவப் பெட்டியை ஒளிவேலனிடம் கொடுக்க, தன் தோளில் சுமந்தபடி நடக்க, அனைவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *