உடன்பிறப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,722 
 
 

பார்வதிக்கு திருமணம் நடந்து… அனைத்து சடங்கு,சம்பிராயுதங்கள் எல்லாம் முடிந்து,
அன்று  தன் கணவனோடு சேர்ந்து புகுந்த வீட்டிற்கு கிளம்புகிறாள்.

தன் தங்கையின் இந்த பிரிவு மனதில் பெரும் பாரமாகி அழுத்த … உள்ளுக்குள் இருக்கும் வருத்தத்தை வெளிக்காட்டாது … சிவந்த கண்களுடன் மௌனமாக நின்றிருந்தான் ராகவ் .

பார்வதி, அவள் கண்களில் துளிர்க்கும் கண்ணீரை கைக்குட்டையால் ஒற்றியபடி …
அவ்வபோது எழும் விம்மல்களை அடக்கிக்கொண்டு… அப்பா.. அம்மா .. சித்தி … சித்தப்பா என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாரானாள்.

“புருஷன் வீட்டிற்கு போனதும் எங்களை மறந்து விட மாட்டியே ?!”

“நீ போற இடம் ஒன்றும் ரொம்ப தூரமில்லை. பஸ்ஸை பிடித்தா.. இங்கேயிருந்து இரண்டு மணி நேரம் ..

கார்ல வந்தா ஒன்றரை மணி அவ்வளவு தான் … டக்குனு வந்து நிப்போம் .. அழாம சந்தோசமா போயிட்டு வா !”

“எப்பவும் நீயும் மாப்பிள்ளையும் ஒத்துமையா ,சந்தோசமா இருக்கணுமா”

” அடிக்கடி போன் பண்ணி பேசுமா ..”

“உன் சுட்டி தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துட்டு பொறுப்பா … இருக்கணும் “

புத்திமதிகளும் … கேலி கிண்டலும் .. அங்கே தவழ்ந்தது.

அவள் கடைசியாக அண்ணனிடம் வந்து நின்றாள்.

அண்ணண் ராகவுக்கும், பார்வதிக்கும் ஏழு வயது வித்தியாசம். அவள் அப்பா செல்லம் . சரியான குறும்பு … சுட்டித்தனம் அதிகம். அவள் செய்த தவறுக்கு .. நிறைய நேரங்களில் அண்ணன் தான் மாட்டிக்கொள்வான் .

“அவ தான் சின்ன குழந்தை … உனக்கு எங்க போச்சு அறிவு !. “

“சும்மா அவளையே குறை சொல்லாதே … அவ பாவம் சின்ன புள்ள !? “

பார்வதி, பள்ளிக்கூடம் போனது முதல்.. காலேஜ் போயி … இன்று கல்யாணம் வரைக்கும் … வீட்டில் எல்லோருக்கும் குழந்தையாகவே கவனிக்கப்பட்டாள் .

ராகவுக்கோ … அவள் பிறந்த பிறகு, இன்று வரைக்கும் “இன்னும் பொறுப்பா இருக்கணும் . பத்தாது ” என்ற அறிவுரை … திட்டு மட்டுமே கிடைக்கும் .

அவனுக்கு .. பார்வதியை பொறுத்தவரை, அவளோடு சிறிய வயதில் சண்டை போடுவதும் .. அப்பா அம்மா சொல்வதற்காக விட்டு கொடுத்து போவதும்.. வெறுப்பாக, கோபமாக வரும் . அவன் சற்று பெரியவன் ஆனதும் … அவளை மிகவும் பாசமாக பார்த்துக்கொண்டான்.

இருந்தாலும் அவள் ஏதாவது சுட்டித்தனம் பண்ணி அவனை மாட்டி விட்டு …திட்டு வாங்கி வைத்து விட்டு சிரிப்பாள்.

அப்போதெல்லாம் அவனுக்கு, அந்த முதல் நிகழ்வு … அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது … நடந்தது நினைவுக்கு வரும்.

ஒருநாள் அவன் அம்மா வந்து அவனிடம் …

“பாப்பா தூங்கறா … நானும் அப்பாவும் பக்கத்துல கடை வரைக்கும் போயிட்டு வந்துடறோம் . நீ அவளை தனியா விட்டுட்டு எங்கேயும் போயிடாதே ..  பக்கத்திலிருந்து பார்த்துக்கோ … எழுப்பி விட்டிடாதே … “

என்று பலத்த அறிவுரை மற்றும் கண்டிப்போடு பேசி விட்டு போனார்கள் .

பார்வதி.. முன் அறையில் தொட்டிலில் தூங்கி கொண்டிருக்க … அம்மா அப்பாவோடு ஸ்கூட்டரில் கிளம்பி கடைக்கு போக ..

ராகவ் வீட்டு வாசலில் உட்க்கார்ந்து இருந்தான் . அடிக்கடி பார்வதி உறங்கும் தொட்டிலை திரும்பி பார்த்த படியே இருந்தான். பாப்பாவை அவன் பொறுப்பாக பார்த்து கொள்ள வேண்டும் . இல்லாவிட்டால் சரியான திட்டு அல்லது அடி விழ கூடும் என்று மனது சொல்லிக் கொண்டே இருந்தது .

வெளியே தெருவில், ஏதோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது . சற்று நேரத்தில் நாய்கள் சில கூட்டமாக சத்தம் போட…அதுவும் வீட்டிற்கு மிக அருகே சத்தம் பலமாக வர … ராகவ் பதட்டமானான்.

தங்கை உறங்கும் தொட்டிலை தீரும்பிப் பார்த்தான் . தொட்டிலில் அவள் நெளிவது போல இருந்தது .

உடனே வேகமாக வெளியே ஓடி போய் … கல்லை விட்டெறிந்து நாய்கள் கூட்டத்தை கலைத்து விட முயன்றான்.

கடும் முயற்சிக்கு பின் .. அந்த நாய்களை விரட்டிய பின் … அந்த சப்தம் ஓய்ந்தது.
அவன் நிம்மதி பெருமூச்சோடு … தொட்டிலை திரும்பி பார்த்தான் .

அப்போது தொட்டிலில் இருந்து, சிறிய சிணுங்களில் … தொடங்கிய அழுகை அதிகரிக்க ஆரம்பித்தது.

ராகவ் … அதிர்ச்சியோடு தொட்டிலுக்கு அருகில் ஓடி போய் … துணியை விலக்கி பார்த்தான் .

தொட்டிலுக்க வெளியே இருந்து இவன் முகம் தெரிந்ததும் … பார்வதி ஏதோ புதிய உருவத்தை பார்த்து போல மேலும் அதிகமாக அழ தொடங்கினாள்.

ராகவ் பயந்து போய் … “பாப்பா அழாதே … நா ராகவ் உன் அண்ணன்தான் …அம்மா இப்ப வந்துடுவாங்க “

அவனுடைய சமாதான பேச்சு ஏதும் எடுபடவில்லை …

ஏதோ பொம்மைகள் எடுத்து ஒலி எழுப்பினான் . தொட்டிலை ஆட்டி பார்த்தான்.
அவளின் அழுகை அதிகமாகி கொண்டுதான் இருந்தது .

ராகவுக்கு முதலில் , அப்பா அம்மா வரும் போது , பாப்பா அழுது கொண்டிருந்தால்… வரக்கூடிய விளைவுகளும், அவர்களின் கோபமான முகங்களும் … விழ போகும் அடி உதைகளும் தான் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது .

ஆனால் , நேரம் ஆக ஆக … விடாமல் அழுது கொண்டிருந்த தங்கையின் குரலை கேட்டு , மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவன் அறிவுக்கு எட்டிய முயற்சியெல்லாம் செய்து பார்த்து விட்டான் . அம்மா கொடுத்துவிட்டு போன பால் பாட்டிலை எடுத்து அவள் வாயில் வைத்தாலும்.. அதையும் தட்டிவிட்டு அழுது கொண்டே இருந்தாள் .

இப்போது அவனுக்கும் அழுகை வர ஆரம்பித்தது . அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிய தொடங்கியது. கண்ணீரோடு தொட்டிலுக்குள் எட்டி பார்த்து … அழுதபடியே “அழாதே பாப்பா … அம்மா இப்ப வந்துடுவாங்க … ” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தான் . அப்படியே அவளை கட்டியபடி தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தான் .

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது . பாப்பா இப்போ அழவில்லை . அதுக்கு பதிலாக பால் புட்டியை சப்பியபடியே அவள் அமைதியாக இருந்தாள் .

ராகவ் ஆச்சர்யமாகி அவளை பார்த்தான் . பாப்பா அவனை பார்த்து சிரித்தாள் .

“அட பாவி … என்னை அழுக வைத்து விட்டு … இப்ப சிரிக்கிறாளே ” அவனுக்கு அவள் செய்கை கோபப்படுத்தினாலும் … ஒரு வழியாக அவள் அழுகை நின்றதே .. என்று நிம்மதியாக இருந்தது.

அப்போது அவன் அப்பா அம்மா வரவும் … அங்கே நடந்து முடிந்த கலவரங்கள் எதுக்கும் அடையாளம் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. பாப்பா இப்போது அமைதியாக பால் குடித்துக்கொண்டிருந்தாள்.

ராகவ் அந்த பழைய நினவுகளில் இருந்து மீண்டு … இப்போது தன்னிடம் வந்து நின்ற பார்வதியை பார்த்து சிரித்தான் .

கடந்த சில நாட்களாக … அவளை விட்டு பிரிவது மிக கஷ்டமாக இருக்கு என்று …சொல்லிக் கொண்டு இருந்த ராகவ் .. இப்போது சிரிப்பதை பார்த்ததும் அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது .

” ஏன் அண்ணா .. இனிமே இந்த தங்கையோட தொல்லை இல்லைனு சந்தோசப்படுறியா …?!”

அவள் அப்படி கேட்டதும் ராகவ் பதறியபடி ..

“ச்சே சே .. அப்படி இல்லைடா … எனக்கு அந்த பழைய நியாபகம் வந்துடுச்சு. நான் உன்கிட்டே அடிக்கடி சொல்வேனே … முதல் முதலா உன்னை என்கிட்ட பாத்துக்க சொல்லி விட்டுட்டு போய் … நீ அழுது … நான் அழுது .. அதுதான் ” என்றான் .

அவன் அடிக்கடி அந்த நிகழ்ச்சியை அவளுக்கு சொல்ல, இருவரும் சிரித்து கொள்வதும் பார்வதிக்கு நினைவு வந்தது.அப்பாவுக்கு அடுத்தபடி … தன் மீது ரொம்ப அக்கறை எடுத்து கொள்ளும் அண்ணனை விட்டு பிரிவது அவள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் அவன் கையை பிடித்துக் கொண்டு குலுங்கி அழ … அவள் அழுவதை கண்டு அவனும் அழ … அங்கிருந்தவர்கள் எல்லோரும் கண் கலங்கினார்கள் .

அண்ணன் அடக்க முடியாமல் அழுவதை கண்டதும் … பார்வதி அவனை சமாதானப் படுத்த “அய் …அண்ணா அழாதே .. இதோ நான் அழவில்லை…பாரு ” என்று சிரிக்க ,
” ஆமா … நான் அழ ஆரம்பிச்சா … நீ சிரிப்பியே …  நீ எப்போதும் சிரித்துக்கொண்டே  இருப்பது தான் எனக்கு பிடிக்கும் ” என்று சிரித்தான் .

ஆனாலும் அவன் கண்களில்இருந்து கண்ணீர் வழிவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *