கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 12,024 
 
 

“ம் ம் ம் ……………. என்ரை பந்து தொலைந்து போட்டுது. அம்மா அம்மா அம்மா பந்து தொலைந்து போட்டுது. ம்ம்ம்….. எனக்கு பந்து வேணும் “ என்று அழுதவாறு சுகி அம்மா சாந்தியிடம் ஓடி வந்தாள். சுகியின் அழுகைச் சத்தம் கேட்டு அறையில் இளைப்பாறிக்கொண்டிருந்த ராம் அக்கா ஏன் சுகி அழுகிறான் எனக் கேட்ட வண்ணம் வெளியே வந்தான். சாந்தி சுகியைப் பார்த்து சிணுங்கல் சத்தத்தை நிற்பாட்ட சைகை காட்டியவாறு ராமுக்கு “சுகி பந்தை தொலைத்துப் போட்டாளாம் அதுதான் அழுகிறாள்” என்று பதில் கூறினாள். “அக்கா! சுகி பாவம் அவளுக்கு அந்த பந்தில் சரியான விருப்பம். அதுதான் அழுகிறாள்.. புது பந்து ஒன்று வேண்டி தருவதாக சொல்லுங்கோ” என ராம் சுகியை சாந்தப் படுத்த முயன்றான். “இல்லை தம்பி இப்படிதான் நாங்கள் வாங்கி வாங்கிக் கொடுக்க அவளுக்கு கவனமே இல்லை. அம்மா கூறியதைக் கேட்ட சுகியின் அழுகை மேலும் கூடியது. விம்மி விம்மி அழுதாள். “அது சரி அக்கா பந்து விளையாடோக்கை தொலையிறதுக்கு அவள் பாவம் என்ன செய்வாள். “ என்ற ராமின் தீர்ப்பை கேட்ட சாந்தி “சரி அம்மா சுகி மாமா சொல்லுற படியால் நான் புதுப் பந்து வாங்கித் தருவன்” எனச் சொல்லி சுகியின் அழுகையை நிற்பாட்டினாள். மேலும் “சுகி ஒரேஞ் யூஸ் தாறேன் குடியுங்கோ” எனச் சொல்லி சுகியைக் கூட்டிக் கொண்டு குசினிக்குள் போனாள் சாந்தி. சிறு நேரம் கழித்து “தம்பி ராம் நீங்களும் ஒரேஞ் யூஸ் குடியுங்களேன்” என ராமுக்கு கிட்ட வந்தவள் ராம் ஆடாமல் அசையாமல் நின்றதைக் கண்டு அவனை உற்று நோக்கினாள். அவன் முகம் வாடி இருந்தது. “என்ன தம்பி யோசிக்கிறாய்” என ராமை வினவினாள். “ஒன்றுமில்லை அக்கா குழந்தை பந்தையிழந்து தவித்ததைப் பார்த்ததும் எனது இழப்பு ஞாபகத்துக்கு வந்து விட்டது. “என்ன தம்பி சொல்கிறாய்” கேட்டாள் சாந்தி. “சுகி இழந்தது பந்து நாங்கள் வாங்கி விடலாம். நான் இழந்ததை பெற்றுக் கொள்ள முடியாதே “ என ராம் புலம்ப சாந்தி விடயத்தை புரிந்து கொண்டவளாக “ஏன் தம்பி இப்ப அதையெல்லாம் யோசிக்கிறாய்” என ராமினை சமாதானப் படுத்தி விட்டு அவசரமாக குசினிக்குள் சென்று தனக்குள்ளேயே அழுது கொண்டாள். அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்ட ராமின் நினைவுத் திரையில் கடந்த கால நினைவுகள் மீளத் தொடங்கின.

பல வருடங்களுக்கு முன்பு ராம் ஒரு கல்லூரி மாணவன். வேளாங்கண்ணி மகா வித்தியாலத்தில் 10ம் தரம் படித்துக் கொண்டிருந்தான். ராம் படிப்பில் மட்டும் இல்லாது பேச்சு கட்டுரை போட்டிகளிலும் ஈடுபட்டு அவன் திறமை மகாவித்தியாலத்தில் ஓங்கி இருந்தது. வருடா வருடம் வரும் பரிசளிப்பு விளாவில் நிறைய பரிசுகளை பெற்றுக்கொள்வான். இந்த ஆண்டும் பரிசளிப்பு விழா நெருங்கிக் கொண்டிருந்தது. பரிசு பெறுவோர் பற்றிய விபர அறிக்கையில் தனக்கு பல பரிசுகள் கிடைக்க இருப்பதை அறிந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான். ராம் தனது கல்வியில் காட்டும் அக்கறையை கண்டு மகிழ்ச்சி கொண்ட பெற்றோர்கள் வருடா வருடம் பரிசளிப்பு விழாவிற்கு முன்பு புது உடுப்பு வாங்கி தமது பரிசாக கொடுப்பார்கள். அந்த உடுப்பை அவன் பரிசளிப்பு விழாவிற்கு அணிந்து கொள்வான். அதே போன்று இந்த வருடமும் அவனுக்குரிய புது உடுப்பு தயாராக இருந்தது. எப்போது பரிசளிப்பு விழா வரும் என்ற ஆவலோடு நாட்களை எண்ணிக் கொண்டேயிருந்தான் ராம்.

பரிசளிப்பு நாள் வந்தது. பெற்றோருடன் அவர்கள் ஆசையோடு வாங்கித் தந்த புதிய ஆடைகளை அணிந்து கொண்டு போனான். பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகி மாணவர்கள் வரிசை வரிசையாக சென்று பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ராமுவின் முறையும் வந்தது. ராம் ஜந்து தடவைகள் மேடை ஏறி பரிசுகளை வாங்க வேண்டி இருந்தது. அதிக பரிசுகளைப் பெறுபவன் ராம் ஆகத் தான் இருந்தான். அதனால் அவனுக்கு பலத்த கைதட்டல் சபையில் இருந்து கிளம்பியது. ஜந்தாவது தடவை பரிசு வாங்க சென்ற போது கை தட்டும் ஒலி விண்ணைத் தொட்டது. ராம் மிகவும் மகிழ்ச்சியுடன் ஜந்தாவது முறையும் மேடை ஏறி பரிசைப் பெற்றுக் கொண்டு படியால் கீழே இறங்குகின்றான். முதல் படியில் காலை வைத்த ராமுவுக்கு கீழே இறங்க முடியவில்லை. ஒரே இருளாக இருந்தது. ராம் படியினை பார்க்க முடியாது கால் தவறி விழுகின்றான். அருகே நின்ற ஆசிரியர்கள் அவனைத் தாங்கிப் பிடித்து ஒரு புறமாக கொண்டு செல்கின்றார்கள். முதல் உதவிக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் உடனே சென்று ராமினை கவனிக்கின்றார்கள். பார்வையாளர்களாக இருந்த பெற்றோரும் அக்கா சாந்தியும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகின்றார்கள். அவர்கள் உடனே ராமினை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுகின்றார்கள். ராம் பார்வையை முற்றாக இழந்து விட்டான் என வைத்தியர்களால் அறிவிக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை ராம் பார்வையற்று இருக்கின்றான். ராம் மீது அளவில்லா அன்பு வைத்திருந்த பெற்றோர்கள் ராம் இற்கு ஏற்பட்ட நிலையால் மனம் உடைந்து காணப்பட்டார்கள்.

சாந்தியும் தனது தம்பிக்கு நடந்ததை எண்ணி எண்ணி மிகவும் கவலையடைந்து தனது பல்கலைக்கழகப் படிப்பையும் கைவிட்டு ராமினை கவனிப்பது தான் தனது வேலை எனக் கூறி ராமினைக் கவனித்து வந்தாள். பல ஆண்டுகட்கு பின்பு அவளை திருமணம் செய்யுமாறு எல்லோரும் வற்புறுத்த ராம் தொடர்ந்து என்னுடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சம்மதித்து இருந்தாள். அதேபோல் ராம் இனை தனது குழந்தை போல் கவனித்து வருகின்றாள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் போரை தொடங்க பயத்தால் வீட்டை விட்டு ஓடி சிலகாலம் கிளிநொச்சியில் இருந்தபோது பெற்றோரும் ராம் பற்றிய கவலையுடன்இ நோயும் சேர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக இருவரும் இறந்து விட்டார்கள். சாந்தியின் கணவன் படித்தவர் என்பதால் கனடாவுக்கு விண்ணப்பித்து ராம் இனது நிலையையும் எடுத்துக்கூறி ராமையும் கூட்டிக்கொண்டு கனடாவுக்கு வந்து விட்டார்கள்.

குசினிக்குக்குள் இருந்து வெளியே வந்த சாந்தி ராம் இப்போதும் ஆழ்ந்த யோசனையில் இருந்த ராமினைக்கண்டதும் “ என்ன தம்பி இன்னமும் யோசித்துக் கொண்டேயிருக்கிறாய்”; எனக் கேட்டபடி ஓடி வந்தாள். “ஓம் அக்கா பந்தில் இருந்து பறக்க தொடங்கி பழையதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்திட்டன்” என்றான் ராம்.

“அக்கா இழப்புக்கள் என்பது எவ்வளவு பொல்லாதது. எனக்கு வந்த இழப்பைப்போல் இந்த உலகத்தில் யாருக்கும் வரக்கூடாது. ஆனால் எதை இழந்தாலும் ஒரு அருமையான அக்கா எனக்கு இருக்கிறா என நினைக்க பெருமையாக உள்ளது” என சோகத்திலும் சாந்தியைப் பாராட்டிக் கொண்டான். அதைக் கேட்டதும் சாந்தி அழுதபடி “தம்பி எப்படி உங்கடை பார்வை திடீரென போனதோ அதே போல் தெய்வாதீனமாக திரும்ப வரும்” எனக்கூறி ராமினை சமாதானம் செய்தாள். “அக்கா பார்வையில்லாமல் பல வருடம் கழிந்து பழகிப் போட்டுது. அப்படி பார்வை வந்தால் தமிழீழம் கிடைத்த பின்பு எமது ஊரை ஒருமுறையாவது பார்க்க வேணும். அந்த மண்ணை நான் திரும்பவும் சுதந்திர பூமியாய் பார்க்க வேணும் அக்கா “ என ராம் கூற ராம் தனது சோகத்துக்குள்ளும் தனக்குள்ள தேசப்பற்றை வெளிக்காட்டியதைக் கண்டு ராம் இன் தலையை தடவி “ராம் நீ என்ரை தம்பி என்று சொல்ல எவ்வளவு பெருமையாக இருக்கிறது. உனது ஆசை நிறைவேறும்” எனக்கூறிவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள். ராமும் தனத பழைய நினைவுகளை மீட்க உதவிக்கு நன்றியாக சுகியை அழைத்து அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தான்….சாந்தி தமிழ் ஈழம் மலரவேண்டும் தனது தம்பியின் பார்வை திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *