விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்!
கணேசனுடன் திருமணமான போது,பொது சொத்து பிரிக்கப்பட்டதில் வந்த ஓட்டு வீட்டுடன் கிடைத்த இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து, தங்களுக்கு பிறந்த குழந்தைகளை காப்பாற்ற கஷ்டப்பட்டனர். ஆரம்பத்தில் குழந்தைகளை உள்ளூர் அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். உடல் நிலை சரியில்லையென்றாலும் அரசு மருத்துவமனைக்குத்தான் போகவேண்டும்!
நெல்லை அரைத்த முழு அரிசியை விற்று விட்டு குருணை அரிசியில் உணவு சமைத்து உண்டு சேமித்து வாழ்ந்தவள்,பின் நகரத்துக்கு சென்று மளிகை கடை வைத்து இரவு பகலாக பாடுபட்டு பக்கத்து ஊரில் பூமியை வாங்கி பத்து ஏக்கர் வரை விரிவுபடுத்தினர்!
கணவர் படிக்கவில்லையென்றாலும் உறவு மற்றும் உத்தமர் என்பதால் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு இருபத்தைந்து வருடத்துக்குள் வீடு,நிலம்,கார் என உழைத்து உயர விசாலாட்சியின் புத்திசாலித்தனமும்,உழைப்புமே காரணம். வெகுளியான கணவனை வெற்றிக்குரியவனாக்கியவள் விசாலாட்சி!
‘இத்தனையிருந்தும்,மகளுக்கு நகை,கார்,சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்தும்,மகனை நன்றாக படிக்கவைத்தும் மகனுக்கு பெண் அமையவில்லையே’ என கவலை!
தனிக்குடித்தனம்,தனி சம்பளம் வெளியூர் இருப்பிடம் என இருக்கும் ஆண்களையே இன்றைய பெண்களுக்கு பிடித்துப்போவதால் விவசாயமும்,மளிகை கடையும் நடத்தி பெற்றோருடன் வசிக்கும் தன் மகனுக்கு பெண்அமையாதது மனக்குறையை தந்தது. ஒழுக்கமானவன்,புத்திசாலி,அழகானவன் தான்!
விசாலாட்சி ,கணவன் கணேசன்,மகன் வருணன்,திருமணமான மகள் கலையரசி தன் கைக்குழந்தையுடன் பக்கத்து ஊரில் பெண்பார்க்க சென்றனர். மகனுக்கு பெண்ணை மிகவும் பிடித்துப்போனதை அறிந்த கணேசன் “நகை,நட்டு,சீர்வரிசை,கார் எதுவும் வேண்டாம்,எனக்கு இருக்கிற சொத்துல பாதிய கல்யாணமாகி அடுத்த வாரமே உங்க பொண்ணு பேருக்கு எழுதி வச்சிடறேன். டவுன்ல புதுசா கட்டின பங்களா வீட்டை ஏற்கனவே என் மகன் பேர்ல எழுதி வச்சுட்டேன். விவசாயத்துல வருசம் பத்து லட்சம்,தேங்காய்,பண்ணை வருமானம் அஞ்சு லட்சம் தேறும். எல்லாத்தையும் மகனுக்கே விட்டுடறேன். கல்யாண செலவையும் நாங்களே செஞ்சிடறோம். இப்ப வாங்கின புது காரையும் அவங்களே வச்சுக்கட்டும். நானும் விசாவும் மளிகை கடைக்குமேல இருக்கிற பழைய வீட்டுக்கே போயிடறோம். மளிகைல வர்றதை வச்சு வாழ்ந்திடறோம். எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீங்க பொண்ணக்கொடுத்தா போதும். வீட்டு வேலை செய்ய ஒரு வேலைக்காரிய கூட வச்சிடறோம்” என்று மாப்பிள்ளையின் அப்பா சொன்னதைக்கேட்ட பெண்வீட்டார் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிவிட்டு பெண் உள்பட திருமணத்துக்கு ‘சரி’என தலையாட்டினர்!
“அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்”என பெண்ணின் அம்மா அவசரம் காட்டியதும் உறுதியாகி விட்டதை உணர்ந்து மகிழ்ச்சியடைந்தார் கணேசன். ஆனால் விசாலாட்சி தன் கணவர் இப்படி அவசரமாக முடிவு சொல்வார் என்றோ, தமக்கிருக்கும் அத்தனை சேமிப்புகளையும் மருமகளாக வரும் பெண்ணுக்கு கொடுப்பதாக கூறுவார் என்றோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
கையெடுத்து கும்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினர்!
அடுத்த நாள் மகள் கலையரசியின் வாடிய முகத்தை பார்த்த கணேசன் ஆடிப்போனார்!
“அப்பா,அவருக்கு வேலையிக்குன்னு சொந்த வீடு கூட இல்லாதவருக்கு என்னக்கட்டிக்கொடுத்தீங்க. கொரோனாவுல அவருக்கு வேலை போயிடுச்சு. நாளைக்கு சென்னையிலிருந்து கிளம்பி அவரு வரப்போறாரு. எங்களுக்கு மளிகைக்கடையையும்,அதோட இருக்கிற வீட்டையும் கொடுத்திடுங்க. வருங்கால மருமகளுக்கு பாதி சொத்த எழுதப்போறதா பொண்ணு பார்க்கறப்ப சொன்னீங்கில்ல?மீதிய என் வீட்டுக்காரருக்கு எழுதிடுங்க. இல்லைன்னா இன்னைக்கே நான் செத்திடுவேன்”என மிரட்டும் தொணியில் பேச, ‘சரி’ என அப்பாவியாக தலையாட்டியவர் கொடுத்தவாக்கை காப்பாற்றி, மகனுக்கு திருமணத்தை நடத்தி,புது வீடு,கார்,விளையும் பூமியை கொடுத்து விட்டு மருமகளுக்கும்,மருமகனுக்கும் சொத்துக்களை எழுதிவைத்து விட்டு,திருமணமான போது பங்கு வந்த பூர்வீக பழைய தோட்டத்து ஓட்டு வீட்டில் குடியேற, இருக்கும் பணத்தில் ஒரு மாட்டை வாங்கி,மாட்டின் கயிரை ஒரு கையிலும்,மனைவி விசாலாட்சியின் கையை இன்னொரு கையிலும் பிடித்தபடி சென்றார் கணேசன்!
ஊரில் எதிர்பட்ட மிகவும் வயதான தனது தந்தையின் நண்பரை பார்த்த போது “கணேசா நீ சனாதன தர்மப்படி செய்திருக்கே. எம்பது வயசுலேயும் தன் பேர்ல சொத்துக்களை வச்சிட்டு,பணத்தாசை,பதவியாசை புடிச்சு அலையறவங்களுக்கு மத்தில உத்தமனா,வள்ளுவர் கண்ட இல்லறத்துறவியா வாழப்போற உன்னப்பார்த்தாலே பாபம் போயிடுமப்பா. அந்த பழனி மலை முருகன் உனக்கு நிம்மதியும்,மோட்சமும் கொடுப்பார்” என கூறி ஆசீர்வதித்து,திருநீறு வழங்கியது கணேசனுக்கு மகிழ்சியளித்தது!
‘அப்பா அடிக்கடி சொல்லுவார் அறுபதுக்கு மேல சொத்து வச்சிருந்தா சொகம் போயிடும்’னு என்பதை மந்திர சொல்லாக அசை போட்டு நினைத்துக்கொண்டார். விசாலாட்சிக்கு மட்டும் விசனம் உறக்கத்தை கெடுத்தது. நாளடைவில் இதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டு காலத்தை கடத்த பழகிக்கொண்டார்கள் இல்லறத்துறவிகள்!