கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,752 
 

(1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ர உம்மாகா……! என்ர உம்மாகா…….!

“என்ர உம்மாலெக்கோ …. என்ர உம்மாலெக்கோ …..!

“என்மகளே…….! என்மகளே…….!

அபயம் தேடும் அவலக் குரல்கள். குஞ்சும் குராலுமாகக் கத்துகிறார்களே? அந்திப்போதின் நடைபயிற்றும் முது குரலொன்றுஞ் சேர்ந்தல்லவா முகாரி பாடுகின்றது? கோழிக்கூட்டினுள்ளே நரி புகுந்துவிட்டதா?

பக்கத்து வீட்டிலிருந்துதான் கூச்சல் கேட்கிறது. என் உள்ளத்திலே பரபரப்பு, உடலிலே உத்வேகம். ஓடுகிறேன்.

குதிரையாக வளைகிறது என் முதுகு. என்னையறியாமலே கை முதுகைத் தடவிவிடுகிறது. தடவிய கையைப் பிசைகிறபோது பிசுபிசுக்கிறதென்றால் அதற்கு என்ன அர்த்தம்?

தட்டு வேலி நுழை கடப்பின் ஊடே தடைதாண்டிப் பந்தயம் என்னவேண்டி இருக்கிறது. நுழை கடப்புக்குத் தடிக்கூர்களும், ஈர்க்குல் முனைகளும் இருந்துதான்

ஆகவேண்டும் போலும், சமாளித்துக்கொண்டு ஓடுகிறேன்.

கையில் பிடித்திருக்கிற குறைக் கொள்ளியால் மேகத்தைப் பிளந்துகொண்டு பாய்கின்ற மின்னலின் கோலங்காட்டியும், தூற்றல் துளிகளால் அணைந்துவிடாதவாறு முந்தானையால் விதானம் செத்து கரங்களிலே வெண்கல, தகர விளக்குகள் ஏந்தியும் வருகிற நாலைந்து பெண்களும், ‘ருவச் சகிதம் இரண்டொரு ஆண்களுமாக ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது.

மெல்லிய ஊதல் காற்றின் உராய்வைக் கட்டளையாக எண்ணி இடுப்பப்பியாசம் எடுக்கின்ற மங்கிய விளக்கச் சுடரொளியில் திண்ணையில் ஒரு மருங்கில் குல விருத்திக் கலையின் உயிருள்ள சில ஏடுகள்.

நஞ்சுண்ட கயல்கள் இரண்டு மல்லாந்து புரள, கடை வாய்களிலே வெண் நுரை இழிந்தோட சினைவராலொன்று தரையிலே கிடந்து துடியாய்த் துடிக்கிறது. தாய்மை நெறு நெறுக்கும் பெண்மை. தாய்மையின் தாய்மையான தோல் போர்த்தகங்காள ரூபலாவண்யம். “மகளே … மகளே” என்று மாரடிக்கின்றது. “உம்மா…. உம்மா” என்று தாயின் புகழ்பாடும் நண்டுஞ் சிண்டுகளுமான ஐந்து சிறுசுகள். இடையிலே ஏந்திப்பிடித்த குழந்தையுடன் ஒதுங்கும் மூத்தவள்.

“இவள் நாசமத்துப்போவாள் உட்டுத் தொலைய இந்தச் சனியனுக்கு நாள் வரல்லய”

“அந்த ராசா ஆண்டில் காத்தில வந்து போனா ரெண்டா இது தான் மகுறுவம்”

“வகுற நசியும்- பெரள உடாம மல்லாத்திப் புடிகா”

“என்னகா இது மாசந்தானே?”

“எங்காலகா புள்ள? எட்டுமாசந்தானே? என்ர சின்னவன் பொறந்து கெடக்கத்தானே இவர் வந்துபோன”

வந்தவர்கள் சும்மா இருப்பார்களா? இருந்தால் வந்ததற்கே கருத்தில்லாமல் போய்விடுமே! ஏதேதோ வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள்”

“கத்தாதங்க புள்ளயாள், பெரியம்மா நீபோய் மீசக்காறப் பரிசாரியாரக் கூட்டிக்குவாகா”

வந்திருந்த முதன்மையூக்கம் திறந்திருந்த வாய்களுக்குச் சீல் பண்ணுகிறார். மனுஷியும் முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு புறப்படுகிறாள்.

“க்ஆ….. து…..! என்ன பொடிச்சது?”

ஈரம் தோய்ந்த மணலிலே மிரிதடி சளக், களக் என்று சுருதி கூட்ட பரிசாரியார் பின்னும் முன்னுமாக தொங்கோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாக வருகிறார். கூடிநின்ற பெண்கள் பரிசாரியின் குரலுக்கு மரியாதை கொடுப்பதுபோல முக்காட்டை இழுத்து முகங்களை மறைத்துக்கொண்டு வழிவிட்டு ஒதுங்குகிறார்கள். பரிசாரியின் காம்பொடிந்த குடை, கணுவிலே சாய்வு தேடுகிறது. இல்லாவிட்டாலும், திண்ணைப்படி என்று அழைக்கப்பட்டுமிடத்தில் பாதுகை ஒதுக்கிடம் பெறுகிறது. இருப்பது ஈரம் தோய்ந்த கிராம்பன் பாய் என்றாலும் அது ஒன்றும் பரிசாரியாருக்குப் புதிய அனுபவம் அன்று. வைத்தியரின் முன் வட்டா ஒன்ற எழுந்தருளுகிறது. வட்டாவா அது? வெளியே சொல்லக்கூடாது தான்…..! துருப்பிடித்த ஜெம்பிஸ்கட்டின் ஜுனியர்’. அதனகத்தே உலர்ந்துபோன காட்டிச் சுண்ணாம்பு, கயறுப் பாக்குத் துணிக்கைகள், அழுகியவையும், வாடியவையுமான வெறுமை இலைகள் – வெற்றிலைகள் இத்தியாதி….!. வைத்தியர் கைப்பிடித்துப் பரிசோதிக்கிறார். நிலைமை ஆபத்தானது என்பதை அவரது முகக்குறியிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.

“முன்னெல்லாம் இப்படியில்லையே! ஒரு புள்ள தவிடு வறுத்தேடு…” கட்டளைக்கு மதிப்பளித்து ஒரு பெண் அடுப்படியில் அமர்கிறாள். புகை! குடிசையெங்கும் நீக்கமற நிறைந்து எல்லோரது கண்களையும் துருவித் துளாவுகிறது. நீரில் ஊறி உப்பிய முருக்கந்தடிகள், தீர்த்தமாடிய ஓலைக் கூந்தல்கள்,

இவைகளிடமிருந்து வேறு எதைத்தான் எதிர் பார்க்கமுடியும். வாழ்க! மண்ணெண்ணெய்யைக் கண்டு பிடித்த புண்ணியவான். அடுப்பெரிகிறது. தவிட்டொத்தனமும் நடக்கிறது. வைத்தியரின் கைதேர்ந்த தைலம் உச்சந்தலையில் தோய்கிறது. தகர விளக்கின் சுடர் ஒரு முறை பலமாகத் துடித்து நிமிர்கின்றது. கயல்கள் நீந்தத் தொடங்குகின்றன.

2

செலகா

சுலைகா என்னும் அரபிப் பதத்தின் மருவிய தோற்றம் என்பது மருதமுனைப் பெண்கட்குத் தெரியாது. தெரியக் காரணமுமில்லை. செலகா என்றுதான்

அழைப்பார்கள். செல்லமாக அல்ல.

சுலைகா

சிறு கைத்தொழில் அபிவிருத்தி, குடிசைக் கைத்தொழில் பெருக்கம், அதிக உழைப்புப் போன்ற பொருளாதாரக் கூச்சல்களுக்கு நடைமுறையில் ஜெயமளிக்கும், ஆயிரக்கணக்கான தொழிலாளப் பெண்களின் பட்டியலில் மருதமுனை வனிதையர் குழாத்தில் அவளுக்கு ஒரு சிரஞ்சீவித்துவ அங்கத்துவம்.

பாயிழைப்பதென்பது, இறுக்கமான வார்த்தைகளில் சுருக்கமாக வடித்தெடுத்துக் கூறிவிடக்கூடிய ஒன்றா? சேறு, அட்டை, முள்ளி, தாமரையின் கருக்கு முதலானவற்றோடு போராடி, அல்லையிலே பன்பிடுங்கி, அதனடியைச் சாம்பல் குழம்பில் அபிஷேகம் செய்து, வெண்மணற் பரப்பிலே பரப்பி வெய்யிலிலும் வங்காளக் கடலோட்டும் காற்றிலும் உலரவைத்து, அம்புக்கூரென்னும் சிதைந்துபோன சிறு கத்தியால் அழகுபடக் கிழித்து, சாயத்திலே குளிப்பாட்டி, ‘றிற்றயட்’ ஆன அகப்பைக் கணையால் வாட்டி எடுத்தபின்ன ரல்லவா பாய் முடயத் துவங்கவேண்டும்!

சொட்டுப் பாலூற்றிச் சுட்டிறக்கிய வட்டில் அப்பம் போல தண்மதி தவழ்ந்து ஒளியூட்டினாலும் சரி, இல்லா விட்டாலும் சரி முற்றத்து மணலிலே கூட்டமாக மொய்த்தமர்ந்து பறக்கப் பறக்கப் பாயிழைத்தும் கூட சுலைகாவால் குழந்தைகளின் பாதி வயிறுகளைத்தான் நிரப்பமுடிந்தது.

பிட்டவிப்பது, அவளின் காலை உத்தியோகம். இரவிலே இடித்து வறுத்த மாவை, நீரூற்றிப் பிசைந்து குழலிலே இட்டு பானையிலே தூக்கி வைப்பதற்குள், அவள் குசேலப் பிரயத்தனம் எடுக்கவேண்டி இருக்கும். புரண்டு, விழுந்து, எழுந்து முலை சுவைக்கும் குழந்தை, முதல்பிட்டு தனக்கென முரண்டுபிடிக்கும் பிள்ளை, உம்மா அவன் அடிக்காங்கா” என்று அழுது முறையிடும் பாலகன், கையைப் பிடித்திழுத்து எனக்கு முகம் கழுவிஉடு” என்று கட்டளை இடும் சிறுமி, இத்தியாதி தொந்தரவுகளுக்கிடையே அவள் தன் கடமையில் ஈடுபடுவாள்.

குழலிலிட்டுப் பானையில் தூக்கி வைக்கப்பட்ட மாபிட்டாகத் தள்ளப்படுவதற்குள் தான் எத்தனை தத்துக்கள். கண்டம் எப்படியாக இருந்தாலும் பிட்டை உருப்படியாகத் தள்ளிவிடுவாள். அவளுக்கு அவ்வளவு கைவன்மை. குழல் கண்டத்திலிருந்து தப்பி வந்துவிட்ட பிட்டுக்கள், குழந்தைகளின் கண்டத்திலிருந்தல்லாவா தப்பிப் பிழைக்கவேண்டும். பிட்டுகளுக்கு மாத்திரம் உயிரும், உணர்வும் இருக்குமானால் சுலைகாவின் குழந்தைகளெல்லாம் மேடர் கேசிலே மாட்ட வேண்டியவர்கள் தான்.

திடீர் தலாக் ஆனாலும் கைம்மை என்னும் கையறு நிலையை அடைந்தாலும் கிடைக்கின்ற புறமோசன்’ கதிர் பொறக்குவதுதான். கதிர் பொறுக்கும் கலை இருக்கின்றதே அது மட்டக்களப்புப் பெண்களுக்கு மாத்திரம் கைவந்த கலை. இந்தக் கலையிலே கதிஜாக் கிழவிக்கு, கண்ணை மூடிக்கொண்டு டிப்ளோமா’ பட்டம் கொடுக்கலாம். இந்தக் கதீஜாவின் சிரேஷ்ட புத்திரிதான் நம் சுலைகா.

வயது சுமார் முப்பதுக்கு மேலே இருக்கலாம். குலவிருத்திக் கலையில் அவள் யாருக்கும் சளைத்தவளல்ல. பதினைந்தாண்டு மங்கை உட்பட ஏழு குழந்தைகட்குத் தாய். இன்னம் இருமாதமோ, ஒருமாதமோ கடந்தால், எட்டாவது சாதனை. பத்து வயதில் மனைவியாகி, முப்பது வயதில் மாமியாராகும் பெண்டிருக்கும் எங்களூரில் ஒன்றும் குறைவில்லை.

3

ஆரம்பத்திலே நடந்தேறிய அமளியும், துமளியும் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒன்றும் புதிய அனுபவமல்ல. மூத்தமகள் தரித்ததிலிருந்து தவணைக்கு ஐந்தாறுக்குக் குறையாமல், இன்றுவரை இப்படியான கண்டத்திற்கு ஆளாகிவருகிறாள் சுலைகா. ஒவ்வொரு தடவையும் ஜன்னியும், வலிப்பும் வரும்போதெல்லாம், மீசக்கார வைத்தியரின் தைலம் கைகொடுத்துதவும். சஞ்சீவித் தைலமா அது? ஜன்னி மடங்கியதும், மாந்தர்படும் வர்ணநீருக்கு அரசாங்க ஆஸ்பத்திரியில் தான் பஞ்சமா?

இவ்வளவுக்கும் அவள் ஒரு புருஷன்காறி. கணவன் என்ற தெய்வம் தம்பன் கடவையில் ஏதோ ஒரு மாட்டுப் பட்டியில் திருப்பள்ளி கொண்டிருக்கிறதாம். தெய்வத்தின் திருப்பள்ளியெழுச்சி இரண்டு வருடத்துக் கொருமுறை நிகழ்வதென்பது தவிர்க்கமுடியாதது. பாததரிசனத்துக்காக சர்வபரித்தியாகம் பண்ணவும் ஏங்கித்தவிக்கும் பக்தைக்கு பருவத்துக்குப் பருவம் திருக்கோலம் கொண்டருளி முத்தியளிப்பதொன்று போதாதா?

இருந்தாற்போல் சுலைகாவின் காதைச் செருப்பழுகை தீண்டும். வந்து வாசலிலே நிற்பது யாரென்று அறிவதற்கு ஒன்றும் சிரமப்படமாட்டாள். மட்டிடும் கலையில் அவள் மகா சமர்த்தி. வாசலுக்கு வருவாள் வழிகொண்டு அழைப்பதற்காக.

ஆஜானுபாகுவான ஆகிருதி. நேரம் பார்க்கத் தெரியா விட்டாலும் கூட இலங்கைக்கு முதன் முதல் இறக்குமதி செய்யப்பட்ட நீள் சதுரக் கைக்கடிகாரம் கறுத்தக் கைக்கு அழகாகத்தான் இருக்கும். கட்டி இருப்பது வலக்கையில் தான் அதற்கென்ன? அதுவே புதிய பஷனாக அமைந்து விட்டால், அரைக்கை வாலாமணி, மௌலனா பளயகாட்சாறன், உள்ளணியான பச்சவடச் சறுவால் தெரியக் கூடியதாகக் சாறனைத் தூக்கிப்பிடித்து நிற்பதில்தான் எத்தனை கம்பீரம்! வழுக்கை மண்டையை மறைத்துச் சுற்றப்பட்டிருக்கும் பட்டுக் கைலேஞ்சியில் எத்தனை ஜ்வொலிப்பு! மூக்கைத் துளைக்கும் அத்தர் நெடி. கண்ணிறைந்த கணவன், கறுப்பாலழகன், கையிலே என்ன? கோழிக்கூட்டு வாழைப்பழச்சீப்பா? ஊருக்கு வந்தால் பழம், தயிர், ஈரல், இறைச்சி, மீன், முட்டை இவற்றிலொன்றும் குறைவில்லை; கையிலிருப்பது குறையுமட்டும்! கைக்கனம் கரைந்ததும் சுலைகா குடைந்தெடுக்கப்படுவாள்.

என்ன இருந்தாலும் இதம் தெரியாதவள் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாளே! கரியிலே ஆடிய லங்கா சாரியினூடாக பாலும் தேனீரும் கலந்ததுபோல தொட்டம் தொட்டமாகப் பளபளப்பது என்ன? சுலைகாவின் உடலா? அப்படியானால் சீலை பீற்றல் நிறைந்ததா? இந்துஸ்தான் நடிகையின் வாக்கில் கறங்காட்டம் ஆடும் கூந்தல் மயிர்கள் –

“அவர்தாண்டா ஒங்க வாப்பா”

இப்படி எத்தனையோ தடவைகள். ஆரம்பத்திற் கொஞ்சம் ஊடல், பிறகு எல்லாம் சரியாகிவிடும். பெண்மை என்பது மென்மையானது தானா?

நிலம் ஈரலிப்பாக இல்லாவிட்டாலும் முயன்றால் பயிர் செய்யமுடியும் என்பது ஆதம்பாபா போன்ற அசல் உழவர்களுக்கு யாரும் சொல்லவேண்டாம். உழவன் ஏர்பூட்டி, உழுது விதைவிதைத்து நீர் பாய்ச்சினால் நிலம் மறுத்துவிடுவதில்லை மரகதம் போர்த்து பொன்மணி சிலிர்த்து பொலிவு காட்டுவதில் தானே நில மங்கைக்குப் புகழ். இந்தப் பெருமையொன்று போதாதா? வாழ்நாளெல்லாம் எண்ணி எண்ணி மகிழ. பூமி புரம் இடந்தால் மலட்டுத்தரை என்று ஏசுபவர்க்கா பஞ்சம்! அறுவடை முடிந்த பின்னும் வயலுட் சுற்ற வேண்டுமென்ற அவசரம் ஒன்றும் உழவனுக்கில்லை. நிலத்துக்குத்தான் எவ்வளவு பொறுமை; பொறுமையில் பெண்கள் நிலத்துக்கு நிகரா?

முக்திப் பரிமாறல் முடிந்ததும் தெய்வத்துக்குத் தாமதிக்க முடியுமா? இவள் மட்டும்தானா பக்தை? தம்பன் கடவையிலும் ஒரு பக்தை இருக்கிறாளே! இன்னும் எத்தனை பக்தைகளோ? எதிலுமே தெய்வத்துக்குத் தனி வழிதான். தபால், தந்தி, பணம் இவற்றின் பரிமாறல் மனிதர்களுக்குத் தானே?

4

“சறுபத் எங்கடி”?

“சறுபத்துக்க நானெங்க போவேன்?”

உருண்டுபோய் உடைத்தவையெல்லாம் மண்கோப்பைகள். கலகலத்துச் சிதறியவையெல்லாம் கிளாசுகள்.

“ஊர் வழக்கப்படி ஆறுமாசத்துக்குத்தான் சோறு தருவாங்க. கலியாணம் முடிஞ்ச இந்த ரெண்டு வருசமாக மூலைக்க படுத்துக்கிட்டு நுண்ணுமையாகத்திண்டது காணாதா இன்னமின்னம் தர அவியளுக்கு காணி மியால வருகுதா? ஒடஞ்சவையெல்லாம் ஊராஊட்டுச் சாமான்.”

ஆசியா உம்மாவின் அழுகை ஆத்திரமாக மாறியது. வாய்காரி வாயைக் காட்டினாள், கைகாரன் கையைக் காட்டினான். அடுப்பங்கரையில் இருந்த தாய் ஆத்திரக்காறியாக மாறினாள். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

“தம்பி தம்பி இருக்கிறதெண்டா ஒழுங்கா இரியுங்க. தறியில ஏறினாலும் ரெண்டு சாறன் நெய்யலாம். நீங்க ஒழச்சி சருவத்துக் குடியுங்க, இல்ல சாராயத்தக்குடியுங்க. ஆகுமெண்டாப் பாருங்க, ஆகாட்டி சலாமத்தாப்போய் வாருங்க.

மாமியின் உதாசீனம் தந்த முடுக்கம் மருமகனை வீட்டைவிட்டே போகச் செய்தது. போனது யாருமல்ல நமது ஆதம்பாவா- சுலைகாவின் தெய்வம் ஆதம்பாவாவேதான்.

ஆண் பிள்ளையிலும் வீண்புள்ளையுண்டா விரலுக்கேற்ற மோதிரம் கிடைக்காமலா போகும்?

‘ம்……! கொமர் இருந்து பெருமூச்சு உடுகுது….. எந்த முடவன் கையிலாவது புடிச்சுக் குடுத்துற்றா ஒரு பாரம் கழிஞ்சிரும், என்று ஏங்கி இருந்த கதீஜாவின் சிரேட்ட புத்திரி – திருநிறைச் செல்வி சுலைகா உம்மாவின் கழுத்தில் மணமகன் ஆதம்பாவாவின் தாலி – சங்கைக்கு ஒரு வெள்ளி மணிக்கோவை ஏறியது. ஆமாம் சுலைகா இப்போது ஆதம்பாவாவின் இரண்டாம் தாரம்.

5

மேல்நாட்டில் என்னவோ முக்கி முனகி மூன்று பிள்ளைகள்தான் பெறுகிறார்களாம். நமது சுலைகா எட்டுப் பிள்ளைகட்குத்தாய். எவ்வளவு பெரிய பாக்கியம். ரஷ்யாவிலே என்றால் வீரத்தாய் பட்டம் கிடைத்து விடும். மூத்தமகள் இப்போது பெரிய மனுசி.

கூரை இற்றுப்போன குடிசைகளை நீக்கிப்பெய்தால் மழைக்கென்ன குறை வந்துவிடுமாம்? சொல்லாமல் சொல்லிக்கொண்டு சுவர்க்களியைக் கரைத்தாலும் கல்லாலே கட்டி விட சுலைகாவின் மகளுக்கென்ன வாத்தி மாப்பிள்ளையா கிடைக்கப்போகிறான். என்னதான் வாடைக்காற்று முட்டி மோதி வெற்றி கண்டாலும் சுலைகாவின் குடிசை பைசா நகரத்து சாய்ந்த கோபுரமாகி விடாது.

ஏழைகட்கென்னவோ தேவைகள் குறைவுதான். ஆனாலும் கூரை வேயாமலும், வேலி பொத்தாமலும் இருக்க முடிவதில்லையே. குடிசை வேய்தல், வேலி பொத்தல், வைத்தியப் பொறுப்பைக் கவனித்தல் ஆகிய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த சுலைகாவின் தாயான சுமைதாங்கிக் கதிஜாவுக்கு நிரந்தரச் சுமைதாங்கியாக இருக்கப் பூரண விருப்பம் தான். அவளுக்கக் கரு நெல்லிக்கனி கொடுக்க யாரும் முன்வரவில்லையே!

தங்கையாவது சாமான்ய நிலைந்து இருந்திராவிட்டால் ஒதுங்க இடம் கிடைத்திருக்குமா? ஒன்பது ஜீவன்களுக்கு ஒண்ட இடம் கொடுத்தாளே தங்கை! ஆம் கலைகாவின் தங்கைக்கு நல்ல புரிஷனும் தனிக்குடித்தனமும்.

6

சுலைகா பாய்முடைந்து கொண்டிருக்கிறான். குலவித்தை அழிந்துபோகக்கூடாதே என்ற கவலையாலல்ல. குடலைக் கீரைப்பூச்சி அரிப்பதனால் ஏற்படும் அழற்சியைச் சகிக்க முடியவில்லை என்பதனால். மகளும் தான் பாய் இழைத்தாள்.

“உம்மா வாப்பாகா”

அண்ணார்ந்து பார்கிறாள், தெய்வம் குடைபிடித்து நிற்கிறது. சுலைகாவின் கண்ணீர் ஏன் மழைநீரைப் பழிக்க வேண்டும்? என்னதான் இருந்தாலும் இரத்தபாசம் வலிவுள்ளதுதான்.

“வாங்க வாப்பா”

பாயெடுத்துப் போடுகிறாள் மகள். தானிழைத்த பாயில் தன் தந்தை அமருவதில் தான் இவளுக்கு எவ்வளவு பெருமிதம். வாப்பாவின் கை கடுக்குமே என்ற பரிவுணர்வு மகளுக்கு. கோழிக்கூட்டு வாழைச் சீப்பும், இரத்தம் சொட்டும் மாட்டீரலும் தெய்வத்தின் கையில்.

“இவிய தாண்டா நம்மட வாப்பா”

சின்னத்தம்பிக்குச் சுட்டிக்காட்டி வாப்பாவை அறிமுகம் செய்துவைக்கிறாள். தாய் செய்துவந்த காரியம் இன்று மட்டும் மகள் செய்யவந்த மர்மமென்ன? மைத்துனி கொடுத்த தேனீர் தெய்வத்தின் களை போக்குகிறது. தங்கையும் புருஷனும் சுலைகாவை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினர். மூவர் முகங்களிலும் வெற்றியின் விகசிப்பு. பெண்மை எளிதில் இளக்கக்கூடியதுதானா?

பகலுணவு –

இராச்சாப்பாடு –

தங்கையும் புருஷனும் ஒரு அறையுள் தாழிட்டுக் கொள்கின்றனர். ஒதுங்கிக்கொள்கிறார்கள்! சொக்கலாம் பீடிப்புகை சுருள் சுருளாகச் சுழன்று ஓய்கின்றது. ஆயாசம்! பதிவிரதையல்லவா. சுலைகா பக்கத்தில் கிடந்த பாதி தணிக்கையான சீலம்பாயில் அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்.

“உம்மா மௌத்தாகிக் கனநாளா?”

“ஆறு மாசம்”

“ஊடும் அழிஞ்சி போச்சி. எனக்கும் இந்த ஊர் புடிக்குதில்ல. வளவவித்து எடுத்துக்கிட்டு தம்மங்கடவைக்குப் போவம் வா?

பூளைக்குப் புத்தி இருந்தால் விளக்கைத் தட்டிவிடுமா? இருள். சுலைகாவின் கன்னம் அள்ளி நெருடப்படுகின்றது. பற்கள் பலமாகப் பதிந்தாலும் ரத்தம் பொசியவில்லை. மகளுக்குத் தெரியுமா வாப்பாவின் கடுப்பு? அவசரக்காறி விளக்கை ஏற்றிவைக்கிறாள்,

“சம்மதந்தான்”

குழந்தை துயின்றுவிட்டதால் கிடத்த எழும்புகிறாள் சுலைகா.

‘மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா? என்ன இருந்தாலும் அவள் ஏன்ர பெண்சாதிதானே! அவள்ற சொக்கு சருவத்து மாதிரி தெய்வம் இந்த உலகத்திலில்லை.

“புள்ள வாப்பாவுக்குப் பாய் தந்துபோட்டு புள்ளயள ஆல ஊட்டுக்க கொண்டுபோய் வளத்திக்குப்படுகா”

என்ர மனசறிய நடப்பதில் எவ்வளவு கெட்டிக்காறி. பாய் விரிக்கக்குள்ள, இவ்வளவு புள்ளப்பெத்தும் சரியாத குத்துமுலையால என்ர தோளை முட்டிப்பார்த்தாளே! அடிவயிறு தெரியவல்லவா சேலையைச் சோர விட்டிருக்கிறாள். தலகாணியா கொண்டாறாய்? ஒண்ட வாழக்குத்தி தொட இருக்கக்குள்ள தலகாணி என்னத்துக்கு?’ தலையணையைப் போட்டு படுக்கையைச் சரிசெய்கிறாள்.

முக்திக்கு முதற்கட்டம்.

எங்கே போகிறாள்…… கோடிப்பக்கமா? என்ர சக்கரப் பொண்டாட்டியல்லவா? வரட்டும். ஆறுதலா வரட்டும். அவள் ஆசையாப்போட்ட பாய் ஆறுதலாய் படுப்பம்’ சுலைகா வருகிறாள். எரிந்து கொண்டிருந்த விளக்கை

அணைக்கிறாள். ‘ஆ…..ஆ….. இவளன்றோ மனைவி….’

இருளை ஊடுருவிக்கொண்டு பளயகட் சாரன் இமயமாய்ப் புடைத்து, குடையாக நிமிர்ந்து நிற்கின்றது. தெய்வத்துக்கத் திரேகமெங்கும் பாண் போறணையின் காங்கை.

தோளிலே குழந்தையைச் சுமந்தவண்ணம் படலையைத் தாண்டுகிறாள் சுலைகா.

வெளியே எங்கும் இருள்!

இருளின் அந்தகாரத்தை ஊடறுத்து சுலைகாவின் எதிர்கால இலட்சியம்போல எங்கோ தூரத்து வீடொன்றில் எரிந்துகொண்டிருந்த தகர விளக்கு தன்னுடைய சின்னஞ் சிறு ஒளிக் கற்றையால் அவளை வரவேற்கிறது.

– தினகரன், 1961,

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *