மழை பெய்யட்டும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,493 
 

தர்காவில் முருகையன் நுழைந்தபோது, உள்ளே செல்லும் அன்பர்களை நான்… நீ… எனப் போட்டி போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள் சாயபுக்கள்.

‘ஏய் மஸ்தான்… இங்கே வந்துட்டா மனசு நெறைய துஆ ஓதி, காணிக்கை செலுத்தணும். அப்படி செஞ்சா, உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடும்” என நடுத்தர வயதுகொண்ட சாயபு ஒருவர் கீச்சுக் குரலில் அழைத்துக்கொண்டிருந் தார். இவரைப்போல பலரும் வெள்ளைக் குல்லா, லுங்கி, குர்தாவுடனும் மகிமை நிறைந்த தாடியுமாக வசீகரமான வாக்கியங்களைச் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

சாயபுவைப் பார்த்து பணிவுடன் கை கூப்பினான் முருகையன். ‘பாத்திஹா ஓத..’

சிறு பனையோலைத் தட்டில் ஊதுவத்தியும் சிறு சுருளாக மடிக்கப்பட்ட சர்க்கரையும் மகானுக்குப் படைக்க வாங்கியிருந்தான். அந்தக் கும்பலில் வயது முதிர்ந்த சாயபுவைப் பார்த்து அருகில் நெருங்கி, தட்டை அவர் கையில் கொடுத்தான்.

கையில் வாங்கியவர், ”உன்னால் முடிந்த தட்சணையைப் போடு” என்றார் கனிந்த குரலில். 10 ரூபாய் நோட்டை கையில் வைத்தான். எதிரில் உட்காரவைத்து துஆ படிக்கத் தொடங்கினார். முருகையன் மனம், வெள்ளத்தால் உடையக் காத்திருக்கும் அணைபோல, துயரத்திலும் அலைக்கழிப்பிலும் குமுறிக்கொண்டிருந்தது. நினைவுகள், நுரையைப்போல் தளும்பித் தளும்பி மேல் எழுந்துகொண்டிருந்தன.

மழை பெய்யட்டும்சாயபு, பாத்திஹாவில் இறுதியாகச் சொல்லிய ஒருசில வார்த்தைகள் மட்டுமே இவன் காதில் விழுந்தன… ‘யா காதர் காருண்ய ஜோதிநாகூர் பாதுஷா நாயகம் ஆண்டவரே… இந்த மனிதனை ஒரு குறையும் இல்லாமல் காப்பாத்து…’

இவன் அவரை வணங்கி எழுந்தான்.

‘வா… ஆமீன்…’ என, சாயபு நகர்ந்தார்.

முருகையன் நடக்கத் தொடங்கினான். மாலைப்பொழுது மெள்ள வரத் தொடங்கியது. தர்காவின் பின்புறம் வழியாக மெல்லிய

சிறு கோடுபோல வெளியே வந்தவன், மனநலம் குன்றியவர்களும் உடல்நிலை சரியில்லாதவர் களும் தீராத நோயாளிகளும் ஒவ்வொரு பெரிய திண்ணையில் உட்கார்ந்தும் படுத்தும் கிடந்தார்கள். அவர்களைப் பார்த்துக் கலங்கினான். அவர்களுக்கு, தன்னால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்யவேண்டும் என நினைத்தான்.

வியாழக்கிழமை என்பதால், தர்காவில் ஜன நடமாட்டம் அதிகரித்தவண்ணம் இருந்தது. தர்காவைச் சுற்றி நான்கு புறங்களிலும் கடைவீதிகள் கிழக்கும் – மேற்குமாக, வடக்கும் – தெற்குமாக ஓர் ஒழுங்கில் அமைந்திருந்தன. இருள் கூடிக்கொண்டிருந்தது. கடைவீதியில் வரிசையாக இருக்கும் கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே காரைக்கால் மெயின் ரோட்டில் நடக்கத் தொடங்கியபோது, முருகையனுக்குப் பசிக்கத் தொடங்கியது. உயரமான, சிவந்த, கனத்த தொப்பி அணிந்து தாடியோடு இருந்த பாய் ஒருவர், தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த மக்களிடம் துண்டுச் சீட்டு ஒன்றை வழங்கிக்கொண்டிருந்தார். இவன் அருகில் சென்று அவரைப் பார்க்க, இவனுக்கும் ஒரு சீட்டைக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்தபோது அதில் ‘ஹோட்டல் அபுதாபி, நம்பர் 9’ என அச்சிடப்பட்டு இருந்தது. எதிரே வந்த ஒருவரிடம், ”என்ன சீட்டு… இது?” எனக் கேட்டான்.

‘அதோ தெரியுது பாருங்க ஹோட்டல்… அங்க போய் இதைக் கொடுத்தீங்கனா, மூணு பரோட்டாவும் ஒரு ஆம்லெட்டும் தருவாங்க’ என்றார் அவர்.

முருகையன் நடக்கத் தொடங்கியிருந்தான். அவர் சொன்ன விலாசம் இவனுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தர்கா நகரின் தெருக்களில், பித்தம்கொண்டு பல இரவு – பகல்களில் ஒரு பேயைப்போல அலைந்திருக்கிறான். அப்போது ‘பாத்திமா’ பித்து பிடித்திருந்தது.

வெற்றிலை ராவுத்தருக்கு வாத நோய் கண்ட முதல் நாள் இரவில்தான், அவள் மகள் பாத்திமா பீவி, இவன் காதலை ஏற்றுக்கொண்டாள். அவர் வீட்டின் பின்னே நீண்டுகிடக்கும் தோப்பில் ஒரு தென்னையோரமாக அவள் உதடு சிவக்க முத்தமிட்டான். அப்போது வீறிட்ட ஒரு குரல், இருவரையும் விலக்கியது.

‘இன்னைக்கு இதுபோதும்’ என இவனை விலக்கிவிட்டு பாத்திமா எழுந்து போய்க்கொண்டி ருந்தாள். அவள் போய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த கணத்தில், அவள் உடலில் இருந்து கசிந்த வெங்காயத்தின் வாசனை அந்தத் தோப்பு முழுவதும் மிதப்பதாக உணர்ந்தான் முருகையன். பாத்திமா புறக்கதவைத் திறந்து வீட்டுக்குள்ளே நுழைந்தபோது, அம்மா வாப்பாவை இறுகப் பற்றிக்கொண்டிருக்க, அவர் பிதற்றிக்கொண்டி ருந்தார். கோணலாகக் குறுகி இருந்த அவர் வாயில் இருந்து எச்சில் ஒழுகியது.

வெற்றிலை ராவுத்தருக்கு நோய் முற்றிவிட்டதாக மருத்துவர்கள் கைவிட்டார்கள். கொடுத்த மருந்து எதுவுமே கேட்கவில்லை. வாய் கோணிக்கொள்ள, ஒரு காலும் கையும் செயலிழந்துவிட்டன. எப்போதும் பாத்திமாவும், அவள் அம்மா பரக்கத் பீவியும் அழுத முகத்தோடு இருந்தார்கள். பாத்திமாவின் அண்ணன் ஜலில் அபுதாபியில் இருந்தான். அவன் வாப்பாவைப் பார்க்க விரைவில் ஊருக்கு வரப்போகிறான் எனப் பேசிக்கொண்டார்கள்.

பாத்திமாவைத் தனிமையில் சந்திக்க, பல வழிகளில் முயற்சித்தான் முருகையன். ஆனால், முடியவில்லை. ஜமாத்தில் இருந்து வந்து பார்த்த ஊர்ப் பெரியவர்கள், ‘வெற்றிலை ராவுத்தரை நாகூர் தர்காவுக்குக் கொண்டுபோகலாம்’ என அறிவுரை சொல்ல, அதன்படி வளர்பிறை கண்ட நாள் ஒன்றில், ராவுத்தரின் சகோதரர்களின் மகன்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சேர்ந்து, தர்காவுக்கு அழைத்துக்கொண்டு வந்து விட்டிருந்தார்கள். பாத்திமாவும் அவள் அம்மாவும் கூடவே இருந்தனர்.

முருகையன், பின்தொடர்ந்து வந்தான்.

வந்த நாளில் இருந்தே பாத்திமா ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு, தர்காவில் இருந்து வெளியேறி முருகையனின் கையைப் பிடித்துக்கொண்டு, கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள். உடன் வந்திருந்த உறவினர்கள், ஓரிரு நாட்களிலேயே நடையைக் கட்டிவிட்டார்கள். அது பாத்திமாவுக்கும் முருகையனுக்கும் வசதியாகிவிட்டது. இருவரும் கடற்கரைக்குச் செல்லும் தெருவில் நடந்தார்கள்; ஆக்ரோஷமாக வீசும் கடற்காற்றின் வெதுவெதுப்பை உணர்ந்துகொண்டும், எதையோ பேசிச் சிரித்துக்கொண்டும் நடந்தார்கள். கடல், இருவருக்குள்ளும் இனம் புரியாத ஓர் அனுபவத்தைக் கிளர்த்தியது. பாத்திமாவின் முகத்தில், புது அழகும் நளினமும் கூடியிருந்தன. அடிக்கடி தன் வாப்பாவை நினைத்து, நாகூர் ஆண்டவரிடம் துஆ செய்தாள். மணற்பரப்பில் நொண்டிக் கோடு ஆடினாள். கிளிஞ்சல்களைப் பொறுக்கி அலையில் விட்டெறிந்தாள். முருகையனைவிட்டு தர்காவுக்குச் செல்லும்போது, முகம் பதற்றமாகி இறுகிவிடும். ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் நோட்டு ஒன்றை முருகையன் ‘பாக்கெட்டில்’ திணித்தாள். அவன், ஊருக்கும் தர்காவுக்குமாக அலைந்துகொண்டிருந்தான். அபுதாபியில் இருந்து பாத்திமாவின் அண்ணன் ஜலில் வந்திருந்தான். அவனோடு மூன்று பேர் கூடவே இருந்தார்கள்.

ஜலில் வந்த பிறகு, இவர்கள் அடிக்கடி சந்திக்க முடியாமல்போனது. ராவுத்தர், வெற்றிலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர். தொழிலில் ஏகபோகமாகச் சம்பாதித்து நிறைய நிலபுலன்களை வாங்கிப் போட்டிருந்தார். அவரின் ஒரே ஆசை, தன் மகள் பாத்திமாவை நிறைய பவுன் போட்டு சீர் செய்து, நிக்காஹ் நடத்திப் பார்க்க வேண்டும் என்பதுதான். இதை பரக்கத் பீவி, மகன் ஜலிலிடம் வலியுறுத்தினாள். மகளின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவள் அறிந்திருந்தாள். அம்மாவின் சொல்லை ஏற்று, கல்யாண வேலைகளில் ஈடுபடத் தொடங்கினான் ஜலில்.

முருகையன், தர்காவைச் சுற்றியிருந்த ஏழு தெருக்களிலும் அவளைத் தேடி அலைந்தான். இதில் எந்தத் தெருவுக்குள் புகுந்து வந்தாலும் தர்காவுக்கும் போகலாம்; கடலுக்கும் போகலாம். வீதிகளில் செல்லும் கறுப்பு முக்காடிட்டப் பெண்களின் மத்தியில் பாத்திமாவைத் தேடினான். ஒவ்வொரு முக்காடுக்குள்ளும் உள்ளடங்கி ஒளிரும் பாத்திமாவின் கண்கள் தரிசனமாகவில்லை. கடற்கரையில் அலைந்து, கடலோரங்களில் காயும் கருவாட்டு வாசனையை நுகர்ந்தபடி கிளிஞ்சல்களைப் பொறுக்கத் தொடங்கியிருந்தான். வாரக்கணக்கில் மகனைக் காணாத முருகையனின் தந்தை, பல இடங்களில் விசாரித்து, ஒருவழியாக நாகூரில் பார்த்ததாகக் கேள்விப்பட்டு தேடி வந்துவிட்டார்.

மழை பெய்யட்டும்2முருகையன், பாத்திமாவை தர்காவுக்குள்ளும் தேடிக் களைத்து, ஏழு தெருக்களிலும் மீண்டும் மீண்டும் தேடி அலைந்துகொண்டிருந்தான். ‘பாத்திமாவோ…’ என நினைத்து நான்காவது வீதியில் முக்காடு போட்டபடி வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை வெறித்துப் பார்த்தான். அப்போது அதிர்ஷ்டவசமாக அவனைப் பார்த்துவிட்ட அவன் தந்தை சதாசிவம், சட்டெனத் தாவிப் பிடித்து ஓர் அறை விட்டார். அவருடன் வந்திருந்த இருவர் ‘வேண்டாம்’ எனத் தடுத்தார்கள். ஒரு கணப்பொழுதில் கடைகளில் இருந்த ஆட்கள், என்னமோ… ஏதோவெனக் கூர்மையாகப் பார்த்தார்கள். முருகையனின் கையை அழுத்திப் பிடித்து இழுத்துக்கொண்டே, பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார் அவன் அப்பா சதாசிவம்.

பஸ்ஸை விட்டு இறங்கி ஊருக்குள் அவனை இழுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்த ஊர் மக்கள், ”என்ன… என்ன?” எனக் கேட்டார்கள். எதற்குமே பதில் சொல்லாமல் நடந்தார் சதாசிவம். முருகையன் மெயின் ரோட்டில் இருந்த வெற்றிலை ராவுத்தர் வீட்டருகே வந்து ஒரு நிமிடம் நின்று, வீட்டை வெறித்துப் பார்த்தான்; அது பூட்டியிருந்தது. அப்படியே நின்றான். அடுத்த அடி எடுத்து வைக்கவில்லை. ”ஏன்டா நிக்கிறே?” எனக் கோபத்துடன் அவனை அழைத்துக்கொண்டு போனார் சதாசிவம்.

கொஞ்ச நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தான் முருகையன். தமிழ் இலக்கியம் இளநிலை முடித்திருந்தான். முதுகலைப் படிப்பில் சேர்த்துவிட்டால் ‘பயல்’ தெளிந்துவிடுவான் என நினைத்தார் சதாசிவம். வெற்றிலை ராவுத்தர் குடும்பம் பட்டுக்கோட்டை பக்கம் போய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். நிலபுலன்களை எல்லாம், ஊரில் சிலருக்குக் குத்தகைவிட்டிருந்தான் ஜலில். வீடு பூட்டியேகிடந்தது.

முருகையன் பாத்திமாவைத் தேடி மீண்டும் நாகூருக்குச் சென்ற ஒரு நாளில், ராவுத்தர் குடும்பம் ஊரைவிட்டே போயிருந்ததை அறிந்துகொண்டான். அவளைத் தேடி ஏழு கடைவீதிகளில் அலையத் தொடங்கிய மூன்றாவது நாளிலே இரவோடு இரவாக வீட்டைக் காலிசெய்து கிளம்பியிருந்தார்கள் என்றும், ஜலிலுக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்துவிட்டதாகவும் நண்பர் டீக்கடை முருகேசன் அவனிடம் சொன்னார்.

முருகையன் நாகூரில் அவளைப் பார்த்த கடைசி தினத்தில், வானில் நட்சத்திரங்கள் இல்லை. கனத்த மேகங்கள், நிலவைச் சூழ்ந்து இருந்தன. அன்று அவள், அதிகமாகப் பேசவில்லை; கையை அழுத்தமாகப் பிடிக்கவில்லை. கண்களில் தெரியும் தரிசன வெளிச்சம் இல்லை, அவனின் வியர்வை வாசம் பிடிக்கவில்லை… இப்படி நிறைய இல்லை. ஆனால் பேசினாள்; சிரித்தாள்; விடைபெறும்போது சன்னமாக அழுதாள். ‘என்னை மறக்க மாட்டியே?’ என மெதுவாகக் கேட்டாள். திடீரென சந்நதம் வந்ததுபோல, ‘நான் போறேன்; என்னைத் தேடுவாங்க…’ என தர்காவை நோக்கி வேகமாக நடந்து மறைந்தாள். அதுதான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.

முருகையன் பாத்திமாவைத் தேடிக் களைத்து, பிரிவுத் துயரின் அயர்ச்சியில் திளைத்திருந்தான். அவனின் பொழுதுகள் மங்கிய ஒளியால் நிரம்பி வழிந்தன. பாத்திமா குறித்த எந்தத் தகவலும் இல்லை. பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டில் நிரந்தரமான தனிமையும் பாத்திமாவின் சிரிப்பும் உள்ளடங்கிக்கிடப்பதாக உணர்ந்தான்.

முருகையன் தமிழில் இளங்கலை முடித்திருந்ததால், முதுகலை படிக்குமாறு முருகையனை வலியுறுத்தினார் சதாசிவம். கல்லூரிக்குச் செல்லத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, வசீகரமான குரலில் மீண்டும் பாடத் தொடங்கியிருந்தான். அவன் ஒரு நாட்டுப்புறப் பாடகன். சிறு வயது முதலே பள்ளியிலும் ஊர் திருவிழாவிலும் பாடியதால், நாட்டுப்புறப் பாடல் மீது அவன் எப்போதும் நாட்டம்கொண்டு திரிந்தான். உறைந்துகிடக்கும் ஞாபகத்தின் குரலாக, பாத்திமா அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தாள்.

பாவனைகளோடும் ஸ்ருதிகளோடும் கேட்பவர்கள் மயங்க, ஊர்த் திருவிழாவின் தொடக்க நிகழ்வின்போது அவன் பாட்டு பாடி கூட்டம் கூட்டினான். அவன் பாடுவதைக் கேட்ட புலவர் சொக்கப்ப நாயக்கர் மயங்கிப்போனார். உள்ளிக்கோட்டையில் தமிழ் வாத்தியாராக வேலை பார்த்து வந்தார். தான் எழுதிய பாடலுக்கு மெட்டு போட, இவனை அழைத்தார். இவன், சொக்கப்ப நாயக்கர் வீட்டுக்கு அடிக்கடி சென்றான். முருகையனிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து வியந்தார் சதாசிவம்.

முருகையன் எப்போதும் அம்மா பிள்ளையாகவே இருந்தான். அப்பாவின் முரட்டுத்தனம் அவனுக்கு அறவே பிடிக்காது. அப்பா இல்லாத பொழுதுகளில் பாடச் சொல்லிக் கேட்பாள் அம்மா. அவன் பாடும்போது கேவிக் கேவி அழுவாள். அதனால் சமயங்களில் பாட மாட்டான். பாட்டு, படிப்பு எனக் கழிந்துகொண்டிருந்த வேளையில்தான், சொக்கப்ப நாயக்கர் வீட்டுக்கு வந்திருந்தாள் தமிழ்மலர். சொக்கப்ப நாயக்கரின் தங்கை மகள். பி.எஸ்ஸி முடித்துவிட்டு நாயக்கர் வீட்டில் தங்கி எம்.எஸ்ஸி படித்துக்கொண்டிருந்தாள். அவள், மெலிதான தேகமும் நீண்ட கேசமும் வட்ட முகமும் பருத்திக்காயில் இருந்து வெடிக்கும் வெண்ணிற பஞ்சைப்போல சற்றே பெரிதான விழிகளையும் கொண்டிருந்தாள். அவள் பேசும்போது விழிகள் ஒரு வண்டைப்போல ஏதோ ரிதம் பாடும். அதை வேடிக்கை பார்ப்பான் முருகையன்.

அந்தக் கோடைக்காலத்தின் மதியப் பொழுதில் வயலில் இருந்த பனைமரத்தில் நுங்கு வெட்டிக்கொண்டு வந்த முருகையனின் அப்பா, ‘நீ பாட்டு படிக்கிறது எனக்கு சந்தோஷம்தான். அதை வெச்சுப் பொழைக்க முடியாது. படிச்சு நல்ல வேலைக்குப் போக பாரு” என்றார்.

தமிழ்மலர், வெளிப்படையாகப் பேசும் இயல்புகொண்டவள். வட்ட முகத்தில் ஒளிவிடும் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டில் வசீகரமான அழகும் ஒரு நம்பகத்தன்மையும் இருந்தன அவளிடம். முருகையன் பாடும் கிராமத்துப் பாடல்களை, உள்ளுக்குள் மிகவும் அனுபவித்து ரசிக்கத் தொடங்கினாள். அவள் பேசும்போது மட்டுமே முருகையனுக்கு மயில் இறகால் வருடுவதுபோல் இருந்தது. ‘அவளிடம் நெருங்கிப் பழக வேண்டும்’ என்ற ஓர் உத்வேகம் ஏற்பட்டது. சொக்கப்ப நாயக்கர் வீட்டில் இல்லாத பொழுதுகளில், தமிழ்மலர் தோட்டங்களிலும் வயல்களிலும் அடிக்கடி வலம்வந்தாள். அப்போதெல்லாம் முருகையனும் அங்கு ஏதாவது ஒரு வேலையை ஏற்படுத்திக்கொண்டு போவான். தமிழ்மலர், அவனின் உயர்ந்த உடல்வாகையும் கம்பீரமான குரலையும் மிகவும் விரும்பினாள்.

‘உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு’ எனச் சொல்லிக்கொள்ளாமலேயே ஒருவர் மனசுக்குள் ஒருவர் உட்புகத் தொடங்கினார்கள். எந்தக் காரணத்துக்காகவும் ஒருபோதும் முகம் சுளித்துக்கொள்ளவில்லை. தமிழ்மலர், ‘நமக்கு ஏத்த ஆள் இவன்தான்’ எனத் தீர்க்கமாக நம்பினாள். அவளிடம் பழகும்போது ஆறுதலாக இருந்தது முருகையனுக்கு.

அவனுக்குள் மீண்டும் அது வேர் பிடிக்கத் தொடங்கியது. அவன் மனதுள் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பாத்திமா, சற்று தள்ளி ஓர் ஓரமாகிப்போனாள். எப்போதாவது உறக்கம் பிடிக்காத இரவுகளில் வந்து போனாள்.

சதாசிவம், அவனைக் கண்காணிப்பதிலேயே குறியாக இருந்தார். ‘ஏதாவது வேலையைப் பாரு’ என அறிவுரை கூறினார். அர்த்தம் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தவன், இப்போது நல்ல தெளிவுடன் இருப்பதைப் பார்க்க அவருக்கு வியப்பாக இருந்தது. அவன் எதற்காக தர்காவைச் சுற்றிக்கொண்டிருந்தான்… அவனுக்குள் இருக்கும் அந்த ரகசியம் என்ன… என ஒருபோதும் அவர் கேட்க விரும்பவில்லை. ‘அது தனக்கு தேவையும் இல்லை’ எனப் பல நேரங்களில் நினைத்தார். ஆனால், ‘அவனுக்குப் பிடித்திருந்தது பொம்பளைக் கிறுக்கு’ என சொக்கப்ப நாயக்கரிடம் சொல்லி வேதனைப்பட்டார்.

முருகையன், நினைவுகளில் இருந்து சட்டென விடுபட்டான். ஒவ்வொரு முறையும் நாகூருக்கு வந்துபோகும்போது எல்லாம் பாத்திமாவின் நிழலோடுதான் போகவேண்டியிருக்கிறது. சாலைக்கு வந்து பஸ்ஸைப் பிடித்து வாஞ்சூருக்குப் போனான். இரண்டு ஆஃப் பிராந்தி பாட்டிலையும், சாமியார் விரும்பிச் சாப்பிடும் மாட்டுக்கறியையும் வாங்கிக்கொண்டான். மாலைப்பொழுது மலர்ந்துகொண்டிருந்தது. சாமியாரோடு சேர்ந்து சரக்கு சாப்பிடுவது முருகையனுக்கு மிகவும் பிடிக்கும். சாமியார், அவன் மீது அளவுக்கு அதிகப் பாசம்கொண்டிருந்தார். அவனின் லௌகீக வாழ்க்கை செழிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், அது பொய்த்துக்கொண்டே இருந்தது. சாமியாரைப் பார்த்து ஒரு வருடம் ஆகியிருந்தது. உப்பனாற்றின் கரையில் மேற்கே இருந்தது ஆசிரமம். குளிர்ச்சியான அந்த மாலைப்பொழுது மெள்ள மறைந்து மெல்லிய இருள் வந்தது. நடந்து ஆசிரமம் வந்தால் மடம் பூட்டிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தான். சைக்கிளில் வந்த ஒருவரைப் பார்த்து ”மடம் பூட்டிக்கிடக்கே ஏன்?” எனக் கேட்டான்.

”இங்கே இருந்து சாமி போயி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சே… எங்கே இருந்து வர்றீங்க?” என, அவர் பதிலுக்குக் கேட்டார். அவரின் வார்த்தைகள் குழறின.

‘நான் தஞ்சாவூர்ல இருந்து வர்றேங்க. சாமியைப் பார்க்கணும்…’ என முருகையன் சொன்னான். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் சைக்கிளில் ஏறிப் போய்கொண்டிருந்தார் அவர். மடத்தின் திண்ணையில் அமர்ந்தான் முருகையன்.

தமிழ்மலரின் வசீகர உடல்மொழியும், பாசாங்கு இல்லாத பேச்சும், நெகிழ்வான குணமும் முருகையனை அலைக்கழித்தன. சமூகம் சார்ந்த பாடல்களைப் பாடியவன், திடீரென மலர்கள், மலை, பட்டாம்பூச்சி, பறவைகள் குறித்து மெட்டுக்கட்டினான். அந்த மெட்டில் தமிழ்மலர், அருவியில் குளிக்கும் சிறுமியைப்போல நனைந்துகொண்டிருந்தாள்.

சொக்கப்ப நாயக்கரிடம் அவர் மனைவி பாரிஜாதம் ஜாடையாகச் சொன்னாள்.

‘நம்ம வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தங்கச்சிப் பொண்ணும் வேற இருக்குது. அந்தப் பையன் அடிக்கடி உங்களைப் பார்க்க வர்றதை வெச்சு எதுவும் தப்பா கதைகட்டி விட்டுறப்போறாங்க. அந்தப் பையனைப் பத்தி ஊர்ல ஒரு மாதிரி பேசுறாங்க.’

அதற்கு நாயக்கர், ”மழை மண்ணில் பெய்ந்தால்தான் பலன்” எனச் சொல்லிவிட்டு, வாசலில் இறங்கி நடந்தார். அவர் மனைவி ஏதோ சொல்ல முயன்றாள். அதை அவர் காதில் வாங்கவில்லை. சொக்கப்ப நாயக்கருக்கு நெருக்கமானவர்கள் சிலரும் அவரிடம் அதே விஷயத்தைச் சொன்னார்கள். முருகையனை தோட்டத்துக்கு அழைத்தார் நாயக்கர். அவன் சட்டென அவர் காலில் விழுந்தான்.

”ஐயா, என்ன மன்னிச்சுடுங்க. தமிழ்மலரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மலரைக் கட்டிக்கிற தகுதி எனக்குக் குறைச்சல்தாங்க. நீங்கதான் கட்டிவைக்கணும். கண் கலங்காம வெச்சுக் காப்பாத்துவேன்…’ என்றான்.

சொக்கப்ப நாயக்கர் பதில் ஏதும் சொல்லவில்லை. ”சரி… போடா” என அனுப்பி வைத்தார்.

முருகையனின் அப்பாவை அழைத்துப் பேசினார் நாயக்கர். கோபம்கொண்ட அவர் சடுதியில் அமைதியாகி, ”வாத்தியாரே… இன்னக்கி உங்க முன்னாடி தைரியமா நின்னு பேசுறோம். ஒருகாலத்துல எங்க சமூகம் கைகட்டி நின்னுதான் பேச முடியும். இந்தப் பய படிச்சோமா… வேலைக்குப் போனோமானு இல்லாம, கல்யாண ஆசையில அலையுறான்.”

”அதெல்லாம் சரியாயிடும். நீ போயி சோலிய பாரு நாடாரே…” என அனுப்பினார்.

சமூகம் வேற வேறயா இருந்தா என்ன? மனுஷன் எல்லாம் ஒண்ணுதான் என, தன் வாதத் திறமையால் தங்கையையும் மச்சானையும் சமாதானம் செய்து, தமிழ்மலருக்கும் முருகையனுக்கும் ஊரே வியக்கும்படி சிறப்பாகத் திருமணம் முடித்துவைத்தார். சிலர், மறைமுகமாக எதிர்த்தாலும் அதற்குப் பயந்துபோகிற ஆள் இல்லை நாயக்கர் என்பதால் மௌனம் காத்தனர்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அக்ரிகல்ச்சர் துறையில் எழுத்தர் வேலை கிடைத்தது முருகையனுக்கு. காவிரி ஆற்றின் கரையில் இருந்த கிராமத்துக்குக் குடியேறினார்கள். தமிழ்மலர், சிரித்த முகத்துடன் குடும்பம் நடத்தினாள். புன்னகையோடு உலா வந்த முருகையன், அரசு வேலையைப் பார்த்துக்கொண்டு விடுமுறைக் காலங்களில் வயலிலும் உழைத்தான். மூன்று வருடங்கள் கடந்தும் தமிழ்மலர் தாய்மை அடையாமல் இருந்தாள். நாயக்கர் அடிக்கடி வந்து நலம் விசாரித்துப்போனார். சித்த வைத்தியர் கொடுத்த லேகிய உருண்டைகள், தொண்டையில் நமச்சலையும் குமட்டலையும் தந்ததே தவிர, தமிழ்மலருக்குத் தாய்மையைத் தரவில்லை.

மாதத்தின் முக்கியமான மூன்று நாட்களில் தீராத வயிற்றுவலியால் துடித்தாள் தமிழ்மலர். சமயங்களில் இடைவிடாத வலியும் போக்கும் இருந்தன.

அந்தப் பெரிய ஆஸ்பத்திரியின் ஸ்கேன் ரூமில் இருந்து தமிழ்மலரை வெளியே அழைத்து வந்தபோது, அவள் இலையுதிர் காலத்து மரமல்லி மரம்போல வெளிறிப்போயிருந்தாள். பதற்ற ரேகைகள் முகத்தில் துலங்கின. மெலிந்துபோயிருந்தாள்.

ரிப்போர்ட்டை ஒரு முறைக்கு நான்கைந்து முறை கவனித்துவிட்டு சற்று யோசித்தார் டாக்டர். வெளிப்புற ஹாலில் எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தமிழ்மலர். உள்ளே நாயக்கரும் முருகையனும் டாக்டரின் குழப்பமான முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர்.

”மிஸ்டர் முருகையன், உங்க வொய்ஃபோட அடிவயித்துல ரெண்டு கட்டிகள் இருக்கு. உடனே ஆபரேஷன் பண்ணணும்.’

‘சார்…’ – முருகையன் குரல் உடைந்தது.

”பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை” – டாக்டர் தெம்பூட்டினார்.

முருகையனை கொஞ்சம் வெளியே போகச் சொன்னார். நாயக்கரும் டாக்டரும் நீண்ட நேரம் பேசினார்கள். அடுத்த நாளே தமிழ்மலருக்கு ஆபரேஷன் நடந்தது. இரண்டு கட்டிகளையும் அகற்றி, புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தார்கள்.

ஆபரேஷன் முடிந்து, மூன்று மாதங்கள்தான் தமிழ்மலர் உயிரோடு இருந்தாள். வானம் கனத்து மழை கொட்டிய அந்த வெள்ளிக்கிழமையில் அவள் கடைசியாகச் சொன்னது இன்னும் முருகையனுக்கு நினைவு இருக்கிறது… ‘மழை பெய்யும்போல இருக்கு… பெய்யட்டும்’. அதன் பிறகு அவள் பேசவே இல்லை.

கடந்த வருடம் இந்த மடத்துக்கு முருகையன் வந்திருந்தபோது சாமியார் நாலைந்து பேரோடு இதே இடத்தில்தான் அமர்ந்திருந்தார். அப்போதும் சாமியாருக்கு பிராந்தி வாங்கி வந்திருந்தான். இந்தப் பகுதியில் அவரை ‘பிராந்தி சாமியார்’ என அழைப்பார்கள். தன் நிலைமை பற்றியும் தமிழ்மலர் பற்றியும், அடுக்கடுக்கான நிகழ்வுகளையும் அனுபவங்களையும் முருகையன் சொன்னான். சாமியார் பொறுமையாகக் கேட்டு அவனை ஆற்றுப்படுத்தினார். நிறையக் குடித்திருந்தபோதும் போதைக்குள் மயங்காத சாமியார் எல்லாவற்றையும் சொல்லி முடித்தபோது, அவன் போதையில் உறங்கிப்போயிருந்தான்.

நடு இரவில் அவனை யாரோ எழுப்புவதுபோல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்தான். சாமியார்தான் அழைத்தார்…

‘வா… ஆத்துக்குப் போகலாம்.’

அவனுக்குப் போதை கொஞ்சமாகக் குறைந்திருந்தது. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்போல் இருந்தது.

இருவரும் சற்று தூரத்தில் இருந்த ஆற்றின் கழிமுகப் பகுதிக்குச் சென்று அமர்ந்தார்கள். சாமி வெகுநேரம் ஆற்றையே பார்த்தவர் அவனிடம் கிசுகிசுப்பாக, ‘ஆறு உறங்குகிறது… வா போய்விடுவோம்’ என்றார்.

‘சாமி… என்ன சொல்றீங்க?’ எனக் கேட்க, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே வேகமாகத் திரும்பினார்.

இருவரும் மடத்தின் திண்ணையில் வந்து அமர்ந்தார்கள்.

‘ஆறு தூங்குமா… சாமி?’

‘ஆமாப்பா. உன் மலர் தூங்கும்போது… ஆறு தூங்காதா? இந்த உலகத்துல தூங்காத எந்தப் பொருளும் இல்லை.’

‘சாமி போதையில் பிதற்றுகிறார்…’ என நினைத்தவன் உறங்கிவிட்டான். அதன் பிறகு இன்றுதான் வந்திருக்கிறான்.

பொழுது ஏறிவிட்டிருந்தது. சாமி, காசிக்குப் போயிருக்கக்கூடும் என உள்ளுணர்வு உணர்த்தியது. அவருக்காக வாங்கிவந்திருந்த பிராந்தி பாட்டில்கள், சுருட்டுகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் கையில் இருந்தன. மடத்தின் திண்ணையில் நன்றாக ஏறி உட்கார்ந்தான். சாலையில் ஆட்கள் எப்போதாவது இருசக்கர வாகனத்தில் வேகமாகக் கடந்துபோனார்கள். அடர்த்தியான இருள் கொண்டிருந்த இரவில் ஈர வாசனை வீசியது. பாட்டிலைத் திறந்து தண்ணீர் சேர்க்காமல் சாமர்த்தியமாகக் குடிக்கத் தொடங்கினான். பொட்டலத்தைப் பிரித்து பரோட்டாவையும் ஆம்லெட்டையும் சாப்பிட்டான். சாமியாரை வணங்கிக்கொண்டான். போதை ஏறத் தொடங்கியது. மாட்டு இறைச்சியை எச்சில் ஒழுகத் தின்றான். அப்படியே படுத்துவிட்டான். கனவுகள் தாறுமாறாக வந்தன. பாத்திமாவின் கையைப் பற்றிக்கொண்டு தெருவில் நடப்பதுபோல திரும்பத் திரும்பக் கனவுகள். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். வெகு நாட்களுக்குப் பிறகு, இப்படி ஒரு கனவு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டான்.

விடியற்காலையில் எழுந்து உப்பானாற்றைப் பார்த்தபோது, அது வற்றிப்போய் நீர் குறைவாகக் கிடந்தது. கொக்குகள் சில, நீரில் உட்கார்ந்து இருந்தன. காகங்கள் நீராடின. மீன்கொத்திகள் பறந்து பறந்து மீன் பிடித்தன. இந்தக் காட்சி அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது.

கிளம்பி ஊருக்கு வந்தான். ஐந்து வருடங்களாகப் பூட்டிக்கிடந்த வெற்றிலை ராவுத்தர் வீடு திறந்திருந்தது. உற்றுப்பார்த்தபடி நடந்து தன் வீட்டுக்கு வந்தான். நெஞ்சுக்குள் ஏதோ அறுவியது. வீட்டுக்குள் அப்பாவும் சொக்கப்ப நாயக்கரும் பேசிக்கொண்டிருந் தார்கள். முருகையனை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை. அவன் இறுமிக்காட்டினான். அறையில் உட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருக்கும் தமிழ்மலரோடு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அலுவலகம் கிளம்பிப் போகும்போது ஜலில், அவன் வீட்டு வாசலில் நின்று யாரோ இருவரிடம் பேசிக்கொண்டிருந்தான். முருகையன் அவர்களைக் கடந்து ஊர் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, அங்கேயும் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

”ராவுத்தர் மக வாழாம வந்துட்டா தெரியுமா..?”

”தெரியாதே…’ எனப் பேசிய அந்த இருவரும் தன்னைப் பார்ப்பதுபோல் இருந்தது முருகையனுக்கு. இதைக் கேட்டதும் குழப்பம் அடைந்தான். அவர்கள் பேசுவதை முழுமையாகக் கேட்பதற்குள் பஸ் வந்துவிட்டது. அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காமல் இந்த நினைவுகளே முன்னும் பின்னுமாக அலைந்தன. இரவு வேலை முடிந்து வீட்டுக்குள் நுழையும்போது, நாயக்கர் நாற்காலியில் அமர்ந்து அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தார். இவனைப் பார்த்தார்.

”வாடா முருகு…” என அழைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படிக் கூப்பிட்டார். அம்மா, தரையில் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்து நாயக்கர் புன்னகைத்தார்.

”முருகு, உனக்குச் சேதி தெரியுமா?” – அவன் நாயக்கரை உற்றுக் கவனித்தான்.

”வெத்திலை ராவுத்தர் மக பாத்திமா… குலா* சொல்லிட்டு வந்துட்டா?’

சட்டெனத் திரும்பி, அவர் முகத்தை ஊடுருவிப் பார்த்தான்.

‘ம்… அதுக்கு என்ன?’ என்றான் ஒன்றும் தெரியாதவன்போல் மெல்லிய குரலில். நிசப்தம் நிலவியது.

”ஜலில்கிட்ட பேசிட்டேன். ‘சரி’னு சொல்லிட்டான். நீ என்ன சொல்ற?” என்று கேட்டார் நாயக்கர்.

திகைப்புடன் அவரைப் பார்த்தான்.

”இனிமே நீ ‘முகமது அலி’னு பேரை மாத்திக்கிறியா?”

வாசலைப் பார்த்துவிட்டு, ”காத்து ஒரு மாதிரியா அடிக்குது… வானம் இருட்டுது. மழை பெய்யும்போல” என்றாள் அம்மா. மண் வாசனை கிளர்ந்தது.

முருகையனுக்குப் பெரும் குரலெடுத்துப் பாட வேண்டும்போல் இருந்தது!

– ஜூன் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *