முதல் ஆபரா. கனத்த திரைசீலைகளுக்குப் பின்னால் உலகம் உருபெறவில்லை. கனப்பு அறை போல டிரேஸ்டன் நகரின் மேன்மை பொருந்திய கனவான்கள் சுற்றிலும் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். பலத்த சிரிப்பொலிகளும் போலியான முக பாவனைகளும் கிளாராவுக்குப் புதிது. ஆங்காங்கே தெரிந்த குழந்தைகளின் கண்களைப் பார்த்து எதையோ தேடினாள். இறுக்கமான முகத்தை விட தந்தையின் இறுக்கமான பிடி அவளை உட்கார வைத்திருந்தது. ஆபராவின் மேன்மை பற்றிய கதைகள் ஒரு மாதமாகவே வீட்டில் ஆரம்பித்திருந்தன. டிரேஸ்டன் நகருக்கு வரும் முதல் மொட்சார்ட் ஆபரா. விலகிய திரைக்குப் பின்னால் கதறல்களுடன் பாடிய கிழவியை காலத்துக்கும் கிளாரா மறக்கப்போவதில்லை. அவளது மகள் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டானாம். உன் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் ஒரு காளையோடு கூட நான் ஓடத் தயாராக இருந்திருப்பேன் கிழவியே என கிளாரா நினைத்து களுக்கென சிரித்தாள். கையில் பிடி இறுகியதில் அடுத்த இரு நாட்கள் பெர்ரி கொடி போல பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. அதற்குப் பிறகு ஆபராவில் சத்தமாகச் சிரித்தது வாக்னர் அரங்கில் தான் – ஐம்பது வருடங்களுக்குப் பிறகான ஏளனச் சிரிப்பு – அச்சிரிப்புடன் ஆபரா புது எல்லைகளைத் தாண்டத் தொடங்கியது, விலகும் மேகம் போல கிளாராவின் உலகைப் பின்னுக்குத் தள்ளியபடி.
‘அறிஞர் கதே வீட்டு விருந்தாளியாகப் பெரும் காத்திருப்புப் பட்டியல் இருக்கு பெண்ணே! உனது இந்த வாசிப்பு அவரது கதவை நிரந்தரமாக மூடிவிடும்’
பயணங்கள் ஆரம்பித்தன. குரங்காட்டியின் வித்தை போல இசையை சுமந்தபடி ஐரோப்பா முழுவதும் பனிரெண்டு வயதில் பல முறை வலம் வந்தவள், முதல் முறையாக அரசர்களின் வாசலைத் தட்டத் தொடங்கினாள். முதல் வாழ்த்து மகுடத்தை அளித்தவர் கதே.
எப்படியும் இருநூறு வயதாவது இருக்கும் தாத்தாவுக்கு. காது கூட மந்தம் தான் போலிருக்கு, சரியாயிருக்கிறது எனச் சொன்னபின்னும் என் இருக்கையின் பஞ்சனையை சரிசெய்து பின்புறம் தொட்டபடியே இருக்கிறார். எழுந்தால் விரல்கள் இன்னும் முன் நீண்டு விடுமோ என பயத்தில், அசைந்தபடி இருக்கையை சரி செய்துகொண்டாள்.
‘நீ என்ன வாசிக்கப் போகிறாய் எனச் சொல்லக்கூடாது. நானே கண்டுபிடிப்பேன்!’ – கண்சிமிட்டளுடன் தனது பச்சை இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார் கதே.
முதலில் சிறு சறுக்கல்களுடன் குரங்கு குட்டிக்கரணம் அடித்தது. ஆட்டம் சூடுபிடித்ததும் அவரவர் நிலை மறந்தனர். எட்ட முடியா தூரங்களை சென்றுச் சேரும் முனைப்போடு கைவிரல்கள் பியானோவின் மூலைகளுக்குப் குதித்தோடியது. திமிங்கலம் கனத்த கடற்பரப்பைக் கிழித்து வெளியே பாய்ந்தது. முதுகெலும்பு இல்லா சிறு ரேயா மீன்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக திமிங்கலத்தைத் தொடர்ந்தன. நன்நீர்சுழல் அடர் பச்சை நிறத்தில் கடந்து சென்றன. வாயைப் பிளந்து நூற்றுக்கணக்கான ரேயா மீன்களை விழுங்கி அவர்கள் பாதையின் எதிர்புறம் விலகிச் சென்றது திமிங்கலம். குறுக்கே வரும் சற்றே பெரிய சால்மன்களை அது கண்டுகொள்ளவில்லை. சிறு அசைவு தரும் கனப்பரிமான மாற்றங்களே அதன் குறிக்கோள். ஊதா நிறப் பாசிகளுக்குள் பல ரேயா மீன்கள் தஞ்சம் புகுந்தன. சில பாதியிலேயே விலக திமிங்கலத்தின் பெரு வாய்க்குள் பத்திரப்படுத்தப்பட்டன. பெரிய வயிறு பெரிய பசி. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு ஒரு இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது. சால்மன்களுக்குக் கவலை இல்லை. அவை பாதியில் உதிர்ந்துவிடும். பெரும் கட்டுமான திமிங்கிலமும் சில ரேயா மீன்கள் மட்டும் வண்டலாகத் தங்கிவிடும். எழும்பி அடங்கியது உயிர்த்திருக்கும் சாகசம். இவ்வளவுதானா என எண்ணும் நேரத்தில் நீர்பரப்பை விட்டு செந்நிற ஜ்வாலை வெளிவருகிறது. சீற்றம் குறையாத பிரம்மாண்ட தாய்ப்பந்தின் ஆட்டம் தொடங்குகிறது. ஒரே ஒரு கணம் உயிர்ப்பிடிப்பின் அத்தனை விளையாட்டுகளும் ஒடுங்குகின்றன. கதேவின் அறையில் அந்த நொடியில் எதுவுமில்லை, சில கையசைப்புகள் தவிர அங்கு மனித இருப்பின் வேலை என எதுவும் மிஞ்சவில்லை. வேட்டை முடிந்தது என போலி கெளரவத்தின் பெருமிதத்தில் தொடாத ஆழமான கருமைக்குள் ஜ்வாலையின் வெளிச்சம் புகுந்தது. இலைகள் உதிர்ந்த பட்டமரம் போல வெறுமையும் தளர்ச்சியும் கிளாராவைத் தாக்கின. சொனாட்டா ஓய்ந்ததும் யார் பேசத் தொடங்குவது என ஆழமான மெளனம் அந்த அறையில் நிலவியது.
வென்றது கதே.
தனது கனத்த இருக்கையை பின்னுக்குத் தள்ளி எழுந்து நின்றார். இந்த தாத்தா இவ்வளவு உயரமாக இருந்தாரா என குழம்பியவள் ஒரு கணம் தடுமாறி பியானோ மேஜையை விட்டு நகர்ந்தாள். பூவிதழ் மங்கைகள் படம் போட்ட தரைவிரிப்பில் சற்று தடுக்கியபடி அவளருகே வந்தார் கதே. ஐரோப்பாவின் சிந்தனையாளர்களின் மகுடம் எனப்பெயர் போன கதே பனிரெண்டு வயது நிரம்பாத கிளாராவின் முன் மண்டியிட்டு அவளது கைகளை தன் கன்னத்தோடு அழுத்தினார். ஒரு நிமிடம் முடிந்து ரெண்டாவது ஆரம்பித்திருந்தது. களைத்திருந்த கிளாராவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முழுவதாய் ஐந்து நிமிட சிறைவாசத்துக்குப் பின் கதே எழுந்தார். இல்லை எழுப்பிவிடப்பட்டார். அவரது தோல் சுருக்கங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட விரல்களை அழுத்தித் துடைத்தாள். சந்தேகமே இல்லை.கண்டிப்பா இருநூறு வயதுதான். அறையின் வலது மூலையில் இருந்த குதிரை பொம்மைகள் தனக்கு வேண்டுமென கேட்க நினைத்தாள். அடக்க முடியாத வல்லமை தனக்குள் வியாபித்தது போல கதே அவளைக் கடந்து அடுத்த அறைக்குள் நுழைந்துவிட்டார். கிளாராவின் கைகளைப் பற்றிய நிலையிலேயே அவரது கைகள் இருந்தன. அலைகளற்ற கடலை தனக்குள் உணர்ந்தவர் போல அவர் மோன தரிசனம் அவரது முகத்தில். பெரிய மலையை கையால் அள்ளி இடப்பெயர்வு செய்தது போல களைப்பு அவளது முகத்தில்.
– தொடரும்…
– ஜனவரி 2013