இருளைத் தேடி…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 31,338 
 
 

பத்து வருடங்களுக்குப் பின், சிறிதும் எதிர்பாராத நிலையில், சற்று முன் பட்டணத்துச் சந்தடியில் சந்திக்க நேர்ந்துவிட்ட பட்டுவும் ருக்குவும் அந்த ஓட்டலின் தனியறையை நாடி வந்தனர்; காப்பி குடிக்கவும், கொஞ்சம் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசவும் அது வசதியான இடம்.

வாழ்க்கைச் சந்தியில் இருவர் சந்தித்து இணைய முடிவது எவ்வளவு சாதாரணமும் இயல்புமாகுமோ, அதே அளவு இயல்பானதுதான் இருவர் சந்தித்துப் பிரிந்து விலகிப் போய் விடுவதும்…

இந்தப் பத்தாண்டுகளில் இருவருக்குமே எத்தனையோ தரப்பட்ட, வகைப்பட்ட சிநேகிதிகள் கிடைத்திருப்பர். வாழ்க்கையும் எத்தனையோ தரத்தில், வகையில் பேதமுற்று வேறுபட்டிருக்கும்… விலகிப் போன அந்த நட்பின் நினைவு கொஞ்சம் கொஞ்சமாய்த் தேய்த்து-அல்லது புதிய புதிய வாழ்க்கையின் மாற்றங்களினால், அறிமுகங்களினால் மூடப்பெற்று உள்ளே புதைந்து கொண்டிருந்த சமயத்தில் சற்று நேரத்துக்கு முன் திடீரென்று அவர்கள் இருவரும் வாழக்கைச் சந்தியின் சாதாரண இயல்புக்கேற்பவே, பட்டணத்துச் சந்தடியின் நடுவே, இதற்கு முன் பார்த்தறியாத எத்தனையோ புதிய முகங்கள் ஆயிரக்கணக்கில் நிமிஷத்துக்கொரு அலையாய்க் கடந்து மறைந்து கொண்டிருக்கும் யந்திர இயக்கத்தில் எதிர் எதிரே மோதிக் கொள்வது போல் எதிர்ப்பட்டு, மோதலைத் தவிர்க்க நின்று, நேருக்கு நேர் முகம் பார்த்தபோது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது…

யந்திரம்போல் இயக்கம் கொண்டு விட்டதனால் மட்டும் மனித ராசி யந்திரமாகி விடுமா ….?

அந்தச் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தவள் போல் தன்னையறியா மல் முகம் திரும்பிய பட்டு, அரைவிநாடி நிலைகுலைவுக்குப் பின்னர், நிலைமையைச் சமாளித்தவளாய் அந்த எதிர்பாராத சந்திப்பின் சந்தோஷ உணர்வை ஏற்றுக் கொண்டாள். அப்படித்தான் அவளால் முடிந்தது; அடுத்த விநாடியே அவ்விதத் தயக்கத்திற்காக அவள் உள்ளுற வருந்தினாள்.

மகிழ்ச்சியால் விளைந்த திகைப்பு என்றே அதை எண்ணினாள் ருக்கு. இந்த நிமிஷம் அது தான் உண்மை…

இருவரும் பேசும் திறன் இழந்து, பாசத்தோடு ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொண்டனர்.

‘பட்டு…’ ‘ ருக்கு…’ என்று ஒருவர் பெயரை மற்றவர் மௌனமாக அழைத்துக் கொள்ளும்போது, பரஸ்பரம் இருவர் முகத்திலும் மனம் நிறைந்த புன்னகையின் விகஸிப்பும் கைகளின் இணைப்பில் படிப்படியான இறுக்கமும் விளைந்தன.

சிறிது நேரம் கும்பலிலிருந்து ஒதுங்கி ஓர் ஓரமாய் நின்ற இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ளும் முறையில் சில வார்த்தைகள் பேசிக் கொள்கையில், தங்களில் யாருக்குமே அவசர காரியம் ஏதுமில்லை என்று உணர்ந்தபின், வசதியாய் இருந்து பேச இடம் தேடியே அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

ஓட்டலின் தனியறையில் வந்து எதிர் எதிரே அமர்ந்தபின் ஒருவரையொருவர் தீர்க்கமாயும் அவசரமில்லாமலும் பார்த்துக் கொள்ள முடிந்தது ; அத்துடன் கண்ணாடியில் தெரியும் தத்தமது உருவங்களுடன் பக்கத்திலுள்ள ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் நேர்ந்தது

திடீரென இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரைப் பார்த்து ஒருவர் பலமாகச் சிரித்துக் கொண்டனர். அந்தச் சிரிப்பின் இறுதியில் இருவர் முகத்திலும் உள்ளார்ந்த ஒரு சோகமே படர்ந்தது.

அவர்கள் இருவரிடத்தும் மகிழ்ச்சிக்குரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. ருக்குவின் – முந்தானயால் இழுத்து மூடப்பட்டிருந்த – கழுத்து வெறிச் சென்றிருந்தது. பட்டுவின் கழுத்தில பகட்டானதும் மட்டமானதுமான முத்துமாலை கிடந்தது. ருக்குவின் நெற்றியில் வட்டமான குங்குமப்பொட்டு, பட்டுவின் நெற்றியில் செஞ்சாந்துத் திலகம். இருவர் அணிந்திருந்ததும் சாதாரண வாயில் புடவைகளே; எனினும் உடுத்தியிருந்த விதத்தில் தான் எத்தனை வித்தியாசம்! சாயம் போன தனது நீலப் புடவையினால் போர்வையிட்டது போல் உடலை மூடி மறைத்திருந்தருக்கு சேலைத் தலைப்பை இடுப்புச் செருகலில் இருந்து எடுத்து, பிடரியிலும் கழுத்துக்கடியிலும் கசிந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டபின் தன் கையில் நீண்ட சுருகணயாக வைத்திருந்த ஒரு காகிதத்தை மேஜையின் மேல் வைத்து விட்டு, தலைக்குமேல் சுழலும் மின்சார விசிறியின் காற்றை அனுபவித்தாள். அவள் முகம் சுத்தமாய், வெண்மையாய், மங்கி ஒளியிழந்திருந்தது.

பட்டுவின் முகத்தில் அப்பியிருந்த பௌடரின் மேல் வியர்வை பூத்திருந்ததால் முகமெல்லாம் திட்டுத் திட்டாய் இருந்தது. அவள் அணிந்திருந்த கறுப்பு நிறப் புடவையில் பளபளக்கும் வெள்ளிப் பூக்கள் மின்னின. பட்டுவின் தலையலங்காரம் ருக்குவின் பின்னலைப் போல் ஒழுங்காக இல்லை…கூந்தல் கலைந்தது போலவே வாரப்பட்டிருந்தது; காதோர முடி மட்டும் கவனத்தோடு சுருளாக்கப்பட்டிருந்தது. கழுத்துப் பக்கம் இறங்கிய ரவிக்கை வெட்டு; வயிறும் புஜங்களும் வெளித் தெரிய அணிந்த சேலைக் கட்டு; இவை இருவருக்குமுள்ள வித்தியாசங்கள்.

எவ்வளவுதான் வாட்டமுற்றிருந்த போதிலும் மாறாத பொன்னிறம், இருபத்தைந்து வயதுக்கு மேல் பிராயம் தோற்றும் முகப் பொலிவு, மலர்ந்த விழிகள், கருத்தடர்ந்த கூந்தல்- இவையாவும் இருவருக்கு முள்ள ஒற்றுமைகள் பட்டுவின் சிறப்பு, அந்த நீண்ட மோவாய்; வனப்புடன் மெலிந்து அழகுற உயர்ந்த உருவம்

ருக்குவுக்கு, வடிவாயமைந்த அதரங்கள் ; வசீகரமிக்க புன்னகை; சிலைபோன்ற சிறறுருவத தோற்றம் -மற்றபடி ஓர் இளம் விதவையைப் போன்ற எளிமை – அதுவே ருக்குவின் சிறப்பு.

பேசுவதற்கு நிறைய இருப்பதனாலேயே, என்ன பேசுவது என்ற ஒரு பிரமிப்புடன் இருவரும் மௌனமாய் ஒருவரை ஒருவர் அளப்பது போலும், ஒப்பிடுவது போலும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ருக்கு அன்பு வழியச் சிரித்தவாறே பேச்சை ஆம்பித்தாள “பாட்டி?” என்று அவள இழுக்கவும், பட்டு தோள்களை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினாள்: “ரெண்டு வருஷமாச்சு”

“அப்ப நீ தனியாகவா இங்கே இருககே?… நீ எப்ப, யாரோட பட்டணத்துக்கு வந்தே?” என்று பரபரப்போடு கேட்டாள் ருக்கு.

“பாட்டி செத்தப்புறம், அங்கே ஊர்லே யாரு இருக்கா எனக்கு? நம்ம அரசமரத்தாதது மாமிதான் அவா வீட்டிலே என்னை அழைச்சிணடு போயி வெச்சிருந்தா…தேனொழுகப் பேசி, வெயாவை வழிய வேலை வாங்கறதிலே மாமி ரொம்பக் கெட்டிக்காரி அதனாலே எனனன்னுதான் இருந்தேன் . . ரெண்டு வேளை சாப்பாட்டுக்கும் துணிககும் மட்டுமில்லே, கௌரவமா ஒரு குடும்பத்தோட இருக்க மேன்னுதான், ஆனா அவாளும நொடிச்சுப் போனா…அந்த மாமா யாருக்கோ ஜாமீன் கையெழுததுப் போட்டு, அவன மோசம் பண்ணிப்பிட்டானாம்… எல்லாம் போச்சு !… அப்பதான மாமியோட சொந்தக்காரர் யாரோ வந்து ‘பொண்ணே எங்களோட அனுப்புங்கோ’ன்னு சினிமாவிலே சேத்து விடறதா அழெச்சுண்டு வந்தா –.அப்புறம் அதெல்லாம் ஒண்ணும் சரிப்பட்டு வரல…இப்ப நான் ஒரு சிநேகிதியோட தனியா இருக்கேன்” – அவள் பேச்சே யார் மீதோ குற்றப்பத்திரிகை வாசிப்பது போல் இருந்தது.

பட்டு பேசுகின்ற பேச்சிலிருந்த தயக்கமும் வரட்சியும் அவள் பொய் கூறுவதுபோல் புரிந்தது ருக்குவுக்கு.

“இப்ப யாரோடயோ இருக்கேன்னியே, யாரந்த சிநேகிதி?”

“ம்…உனக்குத் தெரியாது” என்று, கறாராய், ‘நீ தெரிந்து கொள்ள வேண்டியதுமில்லை’ என்பது போல் கூறினாள் பட்டு.

‘இந்தப் பத்து வருடங்களில் எனக்குத் தெரியாத, என்னிலும் அந்நிமோன்யமான சிநேகிதிகள் இவளுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்! சரி, அதனால் என்ன ? அதனால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இவளுக்குத் தோன்ருதா ? நான் தான் அவளைப் பற்றிக் கேட்கிறேன்… அவளுக்கு என்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சியில்லையோ?’ என்று ருக்கு எண்ணமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் “உன் அப்பாவுக்கு உடம்பு குணமாயிடுத்தா ?… அவருக்கு வைத்தியம் பார்க்கத்தானே நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு இங்கே யாரோ சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீங்க?” என்று பட்டு கேட்டதும், தன்னைப் பற்றி இவ்வளவு ஞாபகத்தோடு விசாரிக்கும் பட்டுவை ஒரு கணத்தில் தான் தவறாக எண்ணி விட்டதைக் குறித்து வருத்தமுற்றாள் ருக்கு. எனினும் அடுத்த கணமே பட்டுவின் முகத்தில் தோன்றிய ஒரு வெறும் புன்னகையைக் கண்டதும் ருக்குவுக்குத் தோன்றியது. ‘இவள் இரண்டு மன நிலையில், இரண்டு ஆளாய், இரண்டுங் கெட்டவளாய் இருக்கிறாள்…’

எனினும் அவள் கேள்விக்குப் பதில் சொன்னாள் ருக்கு : “அபபவே-வந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் அப்பா காலமாயிட்டா…”

அப்போது ஓட்டல் சாவர் அறையின் கதவுக்கு மேல் தலை நீட்டிப் பார்த்து உள்ளே வந்தான்.

“என்ன சாப்பிடுவோம்?. .” என்றாள் ருக்கு.

“வெறும் காப்பி…”

“ரொம்ப அழகா இருக்கு.. இவ்வளவு காலத்துக்கப்புறம் பார்த்திருக்கோம்” – என்று ஒரு குதூகலச் சிரிப்புடன் “ரெண்டு ஸ்பெஷல் ஸ்வீட் கொண்டு வாங்கோ” என்று சர்வரைப் பார்த்துச் சொன்னாள் ருக்கு.

ருக்கு, சர்வரிடம் சொல்லிக் கொண்டிருந்த அந்தச் சிறிய இடை நேரத்தில் பட்டு தன் மயமாகி, ஏதோ சிந்தனையுடன் தலை குனிந்திருந்தாள். சர்வர் போனபின், அவள் நிலையை அனுதாபத்தோடு, என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் வெறித்துப் பார்த்தாள் ருக்கு.

திடீரெனத் தலைநிமிர்ந்தாள் பட்டு. ருக்குவைப் பார்த்து மீண்டும் ஒரு வெற்றுப் புன்னகை காட்டினாள்… முகத்தில் ஒரு பொய்ப் பொலிவுடன் “ம்…நீ இப்ப அதே-அந்த சொந்தக்காரர் வீட்டிலேதான் இருக்கியா?”

“ஆமாம், அந்த வீட்டிலேயேதான் இருக்கேன்…ஆனா தனியா இருக்கேன்.”

“தனியாவா? அப்படீன்னா ஏதாவது உத்தியோகம் பாக்கறயா?” என்று கேட்டவாறே ருக்குவின் கையருகே மேசையின் மேலிருந்த நீண்ட காகிதச் சுருணையை எடுத்து “பார்க்கலாமா?” என்றாள் பட்டு.

லேசான தலையசைப்பால் அனுமதியளித்த ருக்கு, பட்டுவை உள்ளும் புறமும் அளப்பதுபோல் தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சர்வர் இரண்டு தட்டுகளில் ஸ்வீட்டைக் கொணர்த்து வைத்தான்; காபியும் காரமும் சொல்லி அவனை அனுப்பினாள் ருக்கு.

அந்தக் காகிதச் சுருணயைப் பிரித்துப் பார்த்த பட்டு அருவருப்பும் கலவரமும் அடைந்தவளாய், கையில் விரிந்திருந்த அந்த அகலமான காகிதத்துக்கு மேலாய்த் தலையை உயர்த்தி ருக்குவைப் பார்த்தாள்.

ருக்கு அமைதியாய்ச் சிரித்தாள்.

அப்போது அங்கே காலடி ஓசை கேட்கவே மீண்டும் அவசர அவசரமாக அந்தக் காகிதத்தைச் சுருட்டினாள். பாதி சுருட்டிய காகிதத்துடன் திருடியைப் போல் பட்டு விழித்துக் கொண்டிருக்கையில், அந்த சர்வர் கொண்டு வந்த பலகாரங்களை மேசையின் மீது வைத்துவிட்டு வெளியேறினான்.

அவன் தலை மறைந்தவுடன் படபடத்த குரலில் கேட்டாள் பட்டு : “என்னடி இது அசிங்கம்?”

ருக்கு அவளைப் பார்த்துப் பெருந்தன்மையுடன் சிரித்தவாறே சொன்னாள்: “இது அசிங்கம்னா நீயும் நானும்-உலகமே அசிங்கம் தான்…அதை நன்னா உத்துப் பார்…பார்க்கவே ஏன் பயப்படறே!… தெளிவான மனசோட பார்…” என்றாள்.

பட்டு மீண்டும் சுளித்த புருவங்களுடன் அந்தச் சித்திரத்தாளை விரித்துப் பார்த்தாள்.

அதில், பிறந்த மேனியாய் ஒரு பக்கம் சாய்ந்து மண்டியிட்டு உட்கார்ந்திருந்தது ஒரு பெண்ணின் உருவம்.

முதலில் பார்க்கும்போது பழக்கமற்ற கண்களுக்கு அந்த ஓவியம் மனத்திலிருந்த அழுக்கின் காரணமாய் ‘சீ’ என்று தோன்றியது அதே படம் இப்போது சற்றுப் பொறுமையாய்ப் பார்க்கையில் – உட்கார்ந்திருக்கும் அந்தத் தோற்றமும், இடதுபுறம் மண்டியிட்டு நீண்டு கிடக்கும் முழங்கால்களின் அமைப்பும், இடுப்பின் வளைவும் வலது கையைத் தரையில் ஊன்றி, வலதுபுறக் கழுத்தை வலிந்து திருப்பி, தோளின் மேல் முகம் புதைந்து கிடக்கும் சிரமும், வயிறு மார்பும், மதர்ப்பும் மடிப்பும், வரியும் நிழலும் – பார்க்கப் பார்க்க சித்திரத்தின் அமைப்பும் அழகும் மட்டுமில்லாமல், அந்தத் தோற்றமே எதிரில் உட்கார்ந்திருக்கும் ருக்குவினுடையது என்றும் பட்டுவுக்குத் தெளிவாயின. பட்டு இரண்டு முறை படத்தின் முக விலாசத்தையும் ருக்குவின் முகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

“இது நீதானே” என்ற பட்டுவின் கேள்விக்குப் பெருமிதத்துடன் தலையசைத்தாள் ருக்கு.

“இதை வரைஞ்சது ஒரு ஆம்பிள்ளையா, பொண்ணா?”

ருக்கு லேசாகச் சிரித்தாள் : “இதை வரைஞ்சது ஒரு ஆட்டிஸ்ட் இப்படிச் சொன்னா உனக்குத் திருப்தி ஏற்படாது இல்லையா?” – என்று மீண்டும் சிரித்து “ஆம்பிளை தான்” என்றாள் ருக்கு.

“இதுக்காக, உனக்கு அவன் பணம் தருவான”

“ம்… தருவா ..எனக்கு உத்தியோகம் என்னன்னு கேட்டியே உத்தியோகம் இதுதான்” என்று ருக்கு சொல்லிக்கொண்டிருக்கையில், பட்டு ருக்குவையே வெறித்துப் பார்த்தாள். அவள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியில் தெரியும் தன்னையும் பார்த்தாள். தன்னை விடவும் எளிமையும் நல்ல குணமும் கொண்ட ருக்கு. கழுத்தையும் முதுகையும் வெளியில் வரும்போது இழுத்துப் போர்த்திக்கொண்டுவரும் ருக்கு – வயிற்றுக்காக எவன் முன்னாலோ போய் நிர்வாணமாய் நிற்கிறாளே’ என்று நினைத்த பட்டுவின் கண்களில் நீர் சுரந்தது.

“ஆமா .. நீ என்ன செய்துண்டு இருக்கே? அந்த சிநேகிதி என்ன உத்தியோகம் பண்றாள்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று ருக்கு கேட்கவும் பட்டுவுக்குத் துயரம் நெஞ்சில் அடைத்தது; உதட்டில. அழுகை துடித்தது.

ஆரம்பத்தில் – சந்தித்தவுடன் – தன்னைப் போலல்லாமல் கௌரவமாக வாழ்க்கை நடத்துகிறாள் ருக்கு என்று எண்ணிய பட்டு, அவளிடம் தன்னைக் காட்டிக்கொள்ளாமல், அந்தரங்கமாய் விலகி விலகியே பேசிவந்தாள். இப்போது தன்னைப் போலவே இவளும் கௌரவமற்ற, அவமானகரமான பிழைப்பு நடத்துகிறவள் தான் என்று தோன்றியபோது பட்டுவின் மனம் ருக்குவை நெருங்கி வந்தது. கௌரவமாய்ப் பிரிந்த தாங்கள் இருவரும் இவ்வளவு கேவலமாய்ச் சந்திக்க நேர்ந்த கசப்பில், திக்கற்ற தனக்கு ஒரு துணையாகவும், வெட்கப்படத்தக்க தன் தொழிலுக்கு ஓர் இனயாகவும் தன்னோடு மீண்டும் உறவு கொண்டுவிட்ட ஒரு பழைய நட்பின் புதிய நிர்மாணத்திற்காக அவள் துயரம் கலந்த மகிழ்ச்சியே கொண்டாள்.

இருப்பினும் ‘நீ என்ன செய்துண்டு இருக்கே?’ என்ற ருக்குவின் கேள்விக்குரிய பதிலை எண்ணிப் பார்த்தபொழுது பட்டு அவமதிப்பால் தலை குனிந்தாள்.

“பட்டு, வருத்தப்படறியா? உன்னை வருத்தப்படற மாதிரி தான் ஒண்ணும் கேட்கலே. முடியுமானா என்னாலான உதவியைச் செய்யலாம்னு தான் கேட்டேன், எங்கே என்னைப் பாரு ..” என்று மேஜை பின் குறுக்காக கை நீட்டிப் பட்டுவின் குனிந்த முகத்தை – அதன் அழகை ரசித்தவாறு – அவளது அழகிய நீண்ட மோவாயைப் பற்றி நிமிர்த்தினாள் ருக்கு. மையால கரையிட்டு, சிவந்து மலர்ந்திருந்த விழிகளில் கண்ணீர் நிறைந்து இமை ரோமங்கள் நனைந்திருந்தன.

பட்டு திடீரென முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். ருக்குவுக்கு அவள் நிலைமை நன்கு புரிந்தது. சிறிது நேரத்தில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, கம்மிய குரலில் பட்டு கூறினாள்: “ருக்கு, நான் என்னைப்பத்தி உன்கிட்டே மறைச்சு மறைச்சு தான் பேசினேன், யாரோ ஒரு குடும்பத்தோட வந்ததாப் பொய்தான் சொன்னேன். நம்ம ஊர்க்காரன் ஒருத்தனை நம்பி, சினிமாவிலே சேரலாம்னு நானே தான் அரசமரத்தாத்து மாமிகிட்டே சொல்லிக்காம ஓடி வந்தேன். அந்தத் துரோகத்துக்கு வேணுங்கறதை இந்த ஒரு வருஷமா அனுபவிச்சுட்டேன், நான் என்ன தொழில் செய்து பிழைக்கிறேன்னு சொல்லிக்க நாக்கு கூசறது. ஒவ்வொரு நிமிஷமும் அந்த இடத்திலேயிருந்து ஓடிடணும்னுதான் மனசு துடிக்கிறது எங்கே போவேன் ? சொல்லு ..ம்… தலைவிதியம்மா, தலைவிதி” என்று மேலே பேச முடியாமல் பெருமூச்சுவிட்டாள் பட்டு.

ருக்கு மௌனமாய் ஏதோ யோசித்தவாறு தட்டிலிருந்ததைச் சாப்பிட்டாள். “ம், சாப்பிடு” என்று பட்டுவிடம் சொன்னாள், இருவரும் மௌனமாகவே டிபனைச் சாப்பிட்டனர்.

திடீரென்று ருக்கு சொன்னாள் : “…ம்… தலைவிதிதான்; அதுக்கு யார் என்ன செய்யமுடியும்? தலைவிதி நம்மை ஏழையாப் பொறக்க வெச்சுடுத்து, நம்மெ அநாதையாகவும் ஆக்கிடுத்து. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் ஒரு நல்ல புடவைக்கும் கூட வழியில்லாம நிர்க்கதியாகவும் நின்னிருக்கோம். தலைவிதியினாலே ஒரு பொண் எளிமையா இருக்கலாம்; கேவலமா ஆயிடக்கூடாது. தலைவிதியின் பேராலே என்ன வேணும்னாலும் செஞ்சுடக்கூடாது. நீ ஏழையானத்துக்குத் தலைவிதிதான் காரணம்னு சொல்லு; நீ கேவலமானத்துக்குக் காரணம் தலைவிதியில்லே; நீதான்!” என்ற ருக்குவின் நயமான உறுதியான பேச்சைக் கேட்டு உதட்டைக் கடித்தலாறு குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்தாள் பட்டு.

ருக்கு தொடர்ந்து சொன்னாள் : “வறுமையிலதான் செம்மை வேனும். பலஹீனப்பட்டுப்போன உடம்பை நோய்க் கிருமிகள் வந்து தாக்கறமாதிரி, மனசை பலவீனப்படவிட்டா எல்லாக் குணக் கேடுகளும் வந்துடும். வறுமையினாலே மனம் பலப்படணும்; கஷ்டம் வந்துட்டுதுன்னு தப்பான வழியிலே போய் வாழ்க்கையை கெடுத்துக்கறதனாலே கஷ்டம் கொறைஞ்சுடுமா? அப்படி கெட்டுப் போறதே ஒரு கையாலாகாத்தனம், இல்லையா? இவ்வளவும் ஏன் சொல்றேன்னா, இப்படிப்பட்ட நிலைக்கு நானும் ஆளாகியிருக்கலாம்…” என்று எதையோ அவள் விவரிக்க நினைத்தபோது, சர்வர் குறுக்கிட்டான்,…

“அப்புறம் காப்பிதானே?” என்று அறைக் கதவின் அப்புறத்திலேயே நின்று கேட்ட சர்வரிடம் ‘ஆம்’ என்று தலையாட்டினாள் ருக்கு.

அதே நேரத்தில் பட்டு யோசித்தாள் : ‘ஒரு பெண் எளிமையாக இருக்கலாம்; கேவலமா ஆயிடக்கூடாதுன்னு நியாயம் பேசுற இவளும் கேவலமான காரியத்தைத்தானே தொழிலா வெச்சிருக்கா…’ என்ற நினைப்போடு கையில் சுருட்டி வைத்திருந்த அந்தச் சித்திரத்தாளை மீண்டும் ஒருமுறை கொஞ்சம் பிரித்துப் பார்வையைச் செலுத்திய பட்டு, உதட்டோரத்தில் லேசாகச் சிரித்துக்கொள்ளுவதை ருக்குவும் கண்ணுற்றாள்.

அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தவாறு கைத்துப்போன உணர்ச்சியுடன் சொன்னாள் பட்டு : “நீ எப்பவும் எதையும் ஆற அமர யோசிக்கிறவ; அடக்கமானவ; என்னெ மாதிரி படபடன்னு நிக்கறவ இல்லை. இவ்வளவும் சொல்ற உன் கதியும் இப்படித்தானே கேவலமா ஆயிடுத்து?” என்று கூறி விஷமத்தோடும் துயரத்தோடும் தலை நிமிர்ந்து ருக்குவைப் பட்டு ஏறிட்டு நோக்கியபோது, பட்டுவின் அறியாமைக்கு வருந்துகிறவள் மாதிரி அவளுடைய அபிப்பிராயத்தை மறுக்கும் முறையில் தலையாட்டினாள் ருக்கு.

“நான் கேவலமான வாழ்க்கை நடத்தறேன்னு நீ சொல்றத்துக்காக நான் வருத்தப்படலே. ஏன் தெரியுமா? நானும் ஆரம்பத்திலே இதெப்பத்தி அப்படித்தான் நெனச்சேன். சாதாரண மனுஷா யாருமே அப்படித்தான் முதல்லே நெனைப்பா…” என்று சொல்லி நிறுத்தியபோது சாவர் காப்பி கொணர்ந்தான. காப்பியையும் ‘பில்’லையும் மேசையின் மேல் வைத்து அவன் வெளியேறிய பிறகு தன் மனத்தில் உள்ள – தன் தொழில் கேவலமானதல்ல; கௌரவமானதே – என்ற பலமான தீர்மானத்தைப் பக்குவமாய் இவளுக்குப் புரியவைக்கத் திறனில்லாமல் வார்த்தைகளைத் தேடி மௌனமாயிருந்த நக்கு, சில விநாடிகள் இடது கரத்தால் புருவத்தையும் கண்களையும் சேர்த்து மூடிக்கொண்டிருந்தாள.

ரூக்கு அழுகிருளோ, என்ற அச்சம் பிறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள பட்டு. ஆனால சறிது நேரத்தில் ஒரு புன்னகையுடன் கூறினாள் ருக்கு : “நீ உன்னைப்பத்தி மறைச்சு மறைசசு என் கிட்டே பேசினதா சொன்னே, இடலையா? பொய்கூடச் சொன்னதாகச் சொன்னே, இல்லையா? ஆனா. நான உன்கிட்டே எதையும் மறைக்கல்லே; நான் செய்யற தொழில் கேவலமனு என் மனசிலே தோணியிருந்தா, இந்தப் படத்தை நீ பார்க்கவே அனுமதிச்சிருக்கமாட்டேன. அதில் இருக்கிறது நான்தான்னு ஒப்புத்திண்டிருக்கவும் மாட்டேன். நான் கௌரவமாகத்தான் வாழறேன் – ஆனா ஆரம்பத்திலே…எனக்கு… இந்த யோசனையைக் கேட்டப்போ உடம்பெல்லாம் கூசிக் குறுகிதது; அழுகையே வந்தது” என்று சொல்லும்போது ருக்குவின் துல் அடைத்தது; மொழி குழறியது.

சற்று மௌனமாய்க் காப்பியை ஆற்றி ஒரு மிடறு பருகியபின் தெளிவான குரலில் பேசலானாள் ருக்கு.

“அப்பா செத்துப்போனதும் நானும் உன் மாதிரி அநாதையாயிட்டேன். ‘ஊருக்குப் போயி, தெரிஞ்சவா நாலு பேரு வீட்டிலே ஒழைச்சுச் சாப்பிடேன்; பட்டணத்தில் உனக்கு என்ன வெச்சிருக்கு’ன்னு இடிச்சு இடிச்சு சொல்ல ஆரம்பிச்சா அந்த வீட்டிலே எனக்குன்னா தெரியும்: அந்த ஊர்லேயும் ஒண்ணும் எனக்கு வெச்சில்லேன்னு. அப்பதான் நெனச்சுண்டேன் ; ‘அவசரப்பட்டு, எட்டாங் கிளாசோட படிப்பெ நிறுத்தினோமே’ன்னு. அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் வர்ரபோது தனக்குத்தானே உழைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லாத ஓர் அநாதையான வயசுப் பொண்ணுக்கு உலகம் ரகசியமா ஓடிவந்து செய்யற உதவி-உனக்குக் கெடச்சிருக்கிற தொழில்தான், ஒரு தடவை எக்ஸிபிஷன்லே ஒரு ஸ்டால்லே வேலைக்கிப் போனேன். ஒரு நாளைக்கு இரண்டு ரூபா சம்பளம்னு கேட்டப்போ எனக்கு மனசு குளிர்ந்தது. அங்கே எனக்கு ஒரு வேலையும் இல்லை; வரவ கேக்கற அவசியமுள்ள, அவசியமில்லாத அநாவசியக் கேள்விகளுக்கெல்லாம் சிரிச்ச முகத்தோட பதில் சொல்லிண்டு இருக்கணும்.

“நான் வேலைக்குப் போனது ஒரு பவுடர் ஸ்னோ ஸ்டால் வேலைக்குப்போன அடுத்த நாள் அந்த ஸேல்ஸ் மானேஜர், எனனேக் கூப்பிட்டுச் சொனனார்-‘நம்ம ஸ்னோவையும் பவுடரையும் மத்தவாளை உபயோகிக்கணும்னு சொலறதுக்கு முன்னே நாமும் கொஞ்சம் உபயோகிக்கணும்’னு அதனாலே நான் அலங்காரமும் செய்துண்டேன், இதெப் பார்த்து அந்தச் சொந்தக்கார மனுஷாள் எல்லாம் தப்பாத்தான் பேசினா. அப்புறம்தான அந்த வீட்டிலேயே ஒரு ரூமை வீட்டுக்காரங்க கிட்டே கேட்டு வாடகைக்குப் பிடிச்சிண்டு தனியாவே வாழறதுன்னு ஒரு முடிவு பண்ணினேன்.

“ரெண்டு மாசம் எக்ஸிபிஷன் முடியற வரைக்கும் என் வாழ்க்கை கஷ்டமில்லாம ஓடித்து எக்ஸிபிஷா முடியறதுக்கு முதல் நாள் அந்த ஸேல்ஸ் மானேஜர் எனகிட்டே வந்து ரொம்ப ஆதரவோட என்னெப்பத்தி விசாரிச்சார். வயசிலே எனக்குத் தகப்பனார் மாதிரி இருந்ததாலே என்னோட நிராதரவான நெலமையை அவர் கிட்டே சொன்னேன, அவர் ஓர் அட்ரஸ் கொடுத்து மறுநாள் அங்கே வந்து சந்திக்கச் சொன்னார். மறுநாள் நான் அங்கே போகு..ம்ம்! என்னத்தைச் சொல்றது? அவர் எனக்குக் காட்டின வழியே, இப்ப நீ இருக்கியே இந்தப் பிழைப்புத்தான். நான யோசிச்சேன : ‘இது தானா வழி… இது ஒண்ணு தானா வழி ..வேற வழியே கிடையாதா வாழறத்துக்கு?’ன்னு யோசிச்சேன்! இப்படி ஒரு வழி இருக்கிறதா நெனைச்சாலே வேற வழி புலப்படாது. பட்டினி கெடந்து அநாதைப் பொணமா சாகிறதானாலும் சரி, இந்தப் பிழைப்பே எனக்கு வாண்டாம்னு வந்துட்டேன்” என்று சொல்லி தம்ளரில் ஆறிக் கொண்டிருந்த காப்பியை மடமடவெனக் குடித்தாள் ருக்கு.

“நான் இருக்கிற வீட்டிலே மாடிமேலே ஒருத்தர் குடியிருந்தார்” என்று கூறுகையில் அவள் குரலில் ஒரு மாற்றமும், முகத்தில் ஒரு மலர்ச்சியும், கண்களில் ஒரு கலக்கமும் பிறந்ததைப் பட்டு கவனித்தாள்.

“நான் கஷ்டப்படறபோதெல்லாம், நிராதரவாய்க் கண்கலங்கி நிற்கும்போதெல்லாம், அந்தச் சொந்தக்கார மனுஷா என்னைச் சுடு சொற்களாலே வடுப்படுத்தின நேரத்திலே எல்லாம், அவர் என்னெப் பார்க்கிற பார்வையிலே எனக்கு ஒரு ஆறுதல் இருந்தது. அவர் எனக்கு உதவி செய்ய முடியும்னும் செய்வார்னும் தோணித்து. அன்னிக்கு ஸேல்ஸ் மானேஜரைப் போய்ப் பார்த்துட்டு மனம் உடைஞ்சு திரும்பி வரபோது அவரை வழியிலே பார்த்தேன்…என் நம்பிக்கைக்குத் தகுந்தமாதிரி அவர் உதவி செய்ய முன் வந்தார்… – நீங்க எங்கே போயிட்டு வர்ரீங்கன்னு எனக்குத் தெரியும்’னு அவர் என்கிட்டே பேச ஆரம்பிச்சார். ‘ஐயோ தெய்வமே! என்னைப்பத்தி அநியாயமா இவர் தப்பா நெனைக்கும்படி ஆயிடுத்தே’ன்னு நெனைச்சப்போ, எனக்கு அழுகையை அடக்க முடியலே…

“ஆனா அவர் சிரிச்சுண்டே சொன்னார் : ‘அதனாலே ஒண்ணும் தப்பில்லே – உங்களுக்குத் தெரியாமல்தான் நீங்க போயிருக்கீங்க; தெரிஞ்சவுடனே மனசுக்குப் பிடிக்காம திரும்பி வந்துட்டீங்கன்னும் எனக்குத் தெரியும். அடுத்தபடி என்ன செய்யப் போறிங்க?’ன்னு கேட்டார்.. என்னைப்பத்தி அவ்வளவு அக்கறை எடுத்துண்டு என்னை அவர் கவனிச்சுண்டு வரார்னு தெரிஞ்சப்ப ‘நீங்க சொல்றபடி கேக்கறேன்’னு சொல்லணும் போலத் தோணித்து. ஆனா என்னவே ஒண்ணுமே சொலல முடியல்லே – பேசாம நின்னேன். அவரே பேசினார் : ‘உங்களை, உங்க மனசை, அறிவை நான் நன்னா புருஞ்சிண்டிருக்கிறவன், சொன்னா – உங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். எதையும் தப்பா நெனச்சுக்க மாட்டிங்கன்னு நம்பறேன்; நாளைக்கு காலையிலே என்னோட வர்ரதானா உங்களை ஒரு கௌரவமான காரியத்தில் ஈடுபடுத்தலாம்னு ஆசைப்படறேன்’னு அவர் சொன்னப்ப, என் வாழ்க்கைக்கே விடிவு வந்துட்டதுனனு நெனைச்சுப் பூரிச்சுப் போனேன்…” என்று சொல்லி நெஞ்சுவிரிய ஒரு நெடுமூச்சிழுத்தாள் ருக்கு.

அப்போது மீண்டும் சர்வர் வந்து எட்டிப் பார்க்கவே “என்ன பட்டு, இன்னொரு காப்பி சாப்பிடுவோமா” என்று வினவினாள் ருக்கு.

“எனக்கு வேண்டாம்…” என்று பட்டு மறுத்ததும், “காப்பிக்காக இல்லே… இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசலாம்… அதுவு மில்லாம முதல் காபி ரொம்ப ஆறிப் போச்சு – ஒரு காபியை ஆளுக்குப் பாதி சாப்பிடலாமே-ம்… ஒரு காபி கொண்டு வாங்க” – என்று அவளிடத்தில் பேசி, சர்வரிடம் கூறினாள் ருக்கு.

“அடுத்த நாள் அவரோட, அவர் அழெச்சிண்டு போன இடத்துக்குப் போனேன்…அதுவரைக்கும் எனக்குத் தெரியாது அவர் ஒரு பெரிய ‘ஆர்டிஸ்ட்’னு. அந்த இடமே ஒரு புனிதமான கோவில் மாதிரி இருந்தது. ‘சித்ர, சில்ப கலாசாலை’ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?… அங்கேதான போனேன். வெளி வராந்தாவிலே பத்து இருபது மாணவர்கள் மெழுகிலே சிலைகள் செய்துண்டிருந்தா… உள்ளே ஒரு ஹால்லே ‘கிளாஸ்’ நடந்துண்டிருந்தது. என்னை மேல் மாடிக்கு அழைச்சிண்டு போனார். அங்கே சுவரிலே மாட்டியிருந்த படங்ககாப் பார்க்கறசசே எனக்கு உடம்பெல்லாம் கூசித்து.

“-‘இதெல்லாம் பார்த்துண்டு இருங்கோ’ன்னு சொல்லிட்டு அவர் கீழே போனார். நான் அந்த ஹால் நன்னா சுத்திப் பார்த்தேன்… ஹால் நடுவிலே ஒரு பெரிய மேடை மாதிரி இருந்தது. அதுக்கு நாலு பக்கமும்-மேலே பெரிய லைட்டுகள் … அந்த மேடை இஷ்டப்படி திருப்பக்கூடிய சுழல்மேடை : அதைச் சுத்திலும் ஸ்டாண்டுகளும் பக்கத்தில் ஸ்டூல்லே சித்திரம் தீட்டறத்துக்கான வர்ணம், பென்சில், பிரஷ்- என்னென்னவோ இருந்தது. அந்தப் படங்கள் எல்லாம் இப்ப நீ பாத்தியே இதைவிடப் பெரிசா, வர்ணம் தீட்டியும் – கரிக் கோட்டிலே வரைஞ்சதும் – பெண்கள், ஆண்கள் எல்லாமே நிர்வாணத் தோற்றமாவே இருந்தது… அதில் ஆபாசம இருக்கிறதாக அப்ப தோணினது ஒரு பிரமைனனு இப்ப புரியறது; ஆனா அப்ப எனக்கு ஒண்ணுமே புரியல்லே அந்தப் படத்துக்குக் கீழே ஒரு ஓரமா ‘ருத்ரா’ன்னு எழுதி இருந்தது ஆமா, அவர் பேரு அதுதான்…

“கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ரெண்டு கையிலேயும் ஐஸ் கட்டி மெதக்கற கூல்டிரிங்ஸ் தம்ளரை ஏந்தி என்னைப் பார்த்துச் சிரிச்சிண்டே அவர் வந்தார். எனக்கு அவரைத் தப்பாவோ அசிங்கமாவோ நெனைக்க முடியல்லே…

“அவர் என் கையிலே ஒரு தம்ளரைக் குடுத்துட்டு தன கையிலே இருந்ததைக் குடிச்சிண்டே அங்கே இருந்த படங்களை எலலாம் கவனமாப் பார்த்தார்…. இவங்க எல்லாம் உங்ககா மாதிரி கௌரவ மான பெண்கள்தான்’னு சொன்னார்… நான் பதிலே பேசல்லே… அவர் சொன்னார் , ‘இது ஒரு கோயில் மாதிரி இங்கே அழகே தெய்வம். இயற்கையே அழகு. அழகான பசுவுககோ, மயிலுக்கோ, காகாக்கோ, மானுக்கோ பத்து முழத்துணியைச் சுத்தி வெச்சா அந்த அழகுகள் எல்லாம் எவ்வளவு ஆபாசமாயிடும்னு கற்பனை செய்து பாருங்கோ’ன்னார்…

“…மனிதனின் அழகே அவன் உடுத்திக்கற ‘துணி’ – அழகா போயிடுத்தே!… துணிக்குத் தனியா அழகு உண்டு… இங்கே அதுக்கே ஒரு வகுப்பு இருக்கு; அங்கே டிசைன்ஸ், ‘என் கிரே விங்ஸ்’ எல்லாம் படிக்கறா; மனிதனின் அழகுங்கறது துணியோட அழகு இல்லே… இன்னும் சொல்லப் போனா துணியும் மணியும் நகைகளும் சிங்காரங்களும் தான் ரொம்ப ஆபாசம்,அழகைக் கெடுக்கறதுக்குப் பேருதானே ஆபாசம்? இப்படி நான் சொல்லும் போது நீங்க ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கணும் இந்த நிர்ணயிப்புகள் எல்லாம் கலைச்சுடரின் முன்னே… அவை இந்த ஹாலின் புனிதத் தன்மைக்கு அப்பால் செல்லாது ; செல்லவும் வேண்டாம்.

‘கலைஞனின் இதயம் ஒளிமயமானது, உலகத்தின் இதயம் காடும் சூதும் பொய்யும் நிறைஞ்சது. இந்த அழகின் பேரொளியை அந்தக் கண்கள் தாங்காது. ஆகையாக கள்ள மனம் படைச்சவங்களுக்கு அழகை ரசிக்கத் தெரியாது. இங்கே அமுகு ஆராதனைக்கே தேவைப்படுகிறது அங்கே – ‘தேவை’ன்னா ஆபாசங்களும் – அது தேவைன்னா – அங்கே ‘அழகா’யிடறது. நல்லா யோசிச்சுப் பாருங்கோ… நிர்வாணம் ஓர் ஆபாசமா? யோசிச்சிப் பாருங்கோ, உங்க உடம்பின் அழகை நீங்க ரசிச்சதில்லையா, தனிமையிலே…? அந்த ரசனையில் ஆபாசமிருந்ததா நினைக்கிறீங்களா? இல்லையே – அந்த ஒருமை நிலையை உங்களோட – பிரபஞசத்தோட-கலைஞன் ஏற்படுத்திக கொள்கிறான்… அதுக்கப்புறம் ‘நான-நீங்கற பேதமில்லை. நித்தியமில்லாத பொய்யான அழகிலிருந்து நித்தியமான ஒரு பிரதிமையை உருவாக்கவே கலைஞன் அழகை வழிபடுகிறான். மெய்யாய்த்தோன்றும் உங்கள் உடலழகு நிலையில்லாத ஒரு பொய்… பொய்யாய்த் தோன்றும் இந்த ஓவியம் சாஸ்வதமான – நித்தியமான ஒரு மெய்’ நீங்கள கடவுளின சிஷ்டி. ஆனா கடவுள் சிருஷ்டிக்க முடிஞ்சது ஒரு பொய்யைத்தான் அதிலேருந்து மெய்யை வளர்த்தது மனுஷனின் கைகள்..மனுஷன் சிருஷ்டிச்ச கலைதான் மெய்!… இப்படிப்பட்ட ஒரு மகத்தான பணியிலே அற்பமான எண்ணங்களுக்கு இடமே இலல. அந்த அற்ப விஷயங்கள ஒரு பொருட்டுமில்ல. தீயில் விழுந்த சருகு மாதிரி அதெல்லாம்.

“இதோ இந்த மேடை மேலே நீங்க ஏறினவுடனேயே இயற்கையின் ஓரம்சமாய் மாறிவிடறிங்க. அப்போது உங்களுக்கு ஆடையிருக்கலாம்; இல்லாமல் போகலாம். அது பொருட்டல்ல. இங்கே அழகே ஓர் ஆடை! கலைஞனின் கடமை அதன் மீது ஆசைப்படுவதல்ல. அந்தப் பொய்யிவிருந்து மெய்யைப் படைக்க வேண்டியது அவன் கடமை. அப்போ பால் உணர்ச்சி அற்றுப்போகிறது. நீங்க ஒண்ணுமே தெரியாத குழந்தைபோல உட்கார்ந்தோ படுத்துக் கொண்டோ இருக்கீங்க; குழந்தை நிர்வாணமாய்த்தான் இருக்கும். குழந்தை ஓர் ஆபாசமில்லை. உங்கள் உருவத்தை வரைகின்ற கலைஞர்களில் யாராவது ஒருத்தன் முழுமையான கலைஞனாய் இல்லாமல் ஆபாச மனம் படைச்சிருந்தால்தான் என்ன? எதன் பேரில்தான் உலகத்தில் தப்பு நடக்கல்லே? குழந்தையைப் பார்த்தும் கூட சில வக்கரித்த மனம் படைத்தவர்கள் ஆபாச ரசனையில் ஈடுபடலாம். அது குழந்தையின் பிரச்னையல்ல. அது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்கிறதுமில்லே. அது அவனையே பாதிக்கும்…’ – இப்படி, ரொம்ப நாழி பல விஷயங்ககா அவர் விளக்கினார் நான் ஒரு பதிலும் பேசலே. ஆனா வந்தவுடனே இருந்தது மாதிரி குனிஞ்ச தலையோட நிற்காம, நிமிர்ந்து அங்கிருந்த படங்களைப் பார்த்தேன, மனசிலே கூச்சமில்லே. அந்த அழகு எனக்குப் புரிஞ்சுது.

“கடைசியிலே அவர் சொன்னார் : ‘இது ஒரு தொழில் இல்லே… இது ஓர் உயர்ந்த கலைப்பணி. அதனாலேதான் அப்படிப்பட்ட ஓர் உயர்வான காரியத்துக்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்னு நெனைச்சேன். இதுக்கு நாங்க தர்ர பணம் ஒரு கலைஞருக்குத் தரும் சன்மானம் தானே ஒழிய, விலையோ சம்பளமோ இல்லே. இதை நீங்க புரிஞ்சிண்டு ஒரு ‘மாடலா’ இருக்க சம்மதிச்சா இருக்கலாம், இல்லேன்னாலும் இங்கே வேறே ஏதாவது ஒரு உத்தியோகத்துக்கு முயற்சி பண்ணிவிடலாம்னுதான் அழைச்சிண்டு வந்தேன. நீங்க இப்ப இல்லேன்னாலும் கொஞ்ச நாளலே இந்தக் கலையைப் புரிஞ்சுண்டா இந்தக் கலைக்கு உதவ முடியும்’னு சொன்னப்ப, ஒரு விநாடி கூடத் தயங்காம ‘இந்தக் கலைக்கு நான் உதவமுடியும்னா அதைப் பெருமையா நெனச்சி – ஒரு ‘மாட’லா இருக்கச் சம்மதிக்கிறேன்னு’ சொன்னேன்.”

அப்போது காப்பி வந்தது. காப்பியை மேசையின் மீதுவைத்து விட்டு, சர்வர் முதலில் கொண்டு வந்த பில்லை எடுத்துத் திருத்தி எழுதி வைத்தான். ருக்கு பழைய நினைவுகளைப் பற்றிப் பேசிய ஆர்வத்தில் முகமெல்லாம் வியர்த்திருந்தாள், அவள் காப்பியை ஆற்றிப் பாதியாய்ப் பகிர்ந்து பட்டுவிடம் தம்ளரை வைத்து வட்டாவில் இருந்ததை அருந்தினாள். ஒன்றுமே புரியாமல், திகைத்தவள் போன்று ஆழ்ந்த சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தாள் பட்டு. அவள் மனத்தில் நிறைக்கப்பட்ட உண்மையானதும், புனிதமானது மான செய்திகள் சுமையாய்க் கனத்து, சொலலிழக்க வைத்திருந்தது அவளை. தன்னைப்போல் ருக்குவையும் கேவலமாய் நினைத்துப் பேசியதை எண்ணி வருந்தினாள் பட்டு. அவ்விதம் பேசியும் தன் மீது வருத்தம் கொள்ளாத ருக்குவின் பெருந்தன்மையையும் எண்ண வியந்தாள். எலலாவற்றுக்கும் மேலாக அவளது தனித்த, சொந்த பிரச்னைகள் வேறு மனத்துள் குமைந்தவாறே இருந்தன இவளைச் சந்தித்த பினபு மீண்டும் திரும்பி அந்தக கேவலமான இருட்டறைக்குத் திரும்பிப் போவதை எண்ணுகையில் தன தலைவிதிக்கு ஒரு முறை குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது. அந்த உணர்ச்சியை விழுங்கியதால அவள் முகமெல்லாம் சிவந்து கழுத்து நரம்புகள் புடைத்துக கண்கள் கலங்கி இருந்தன.

காபபியைக் குடிததுக் கொண்டே ருககு சொன்னாள் : “ஏதோ ஒரு புனித உயர்ச்சியிலே தைரியமா சொல்லிட்டேனே ஒழிய, முதல் நாள பத்துப் பதிசேஞ்சு ‘ஆர்டிஸ்ட்’கள் மத்தியில், மேடையிலே போயி, லைட்டையும் ‘ஆன்’ பண்ணி, அங்கியைக கழட்டிப் போடச் சொன்னவுடனே உதற ஆரம்பிச்சது. ஓடி வந்துடலாம்னு கூடத் தோணிதது, ஆனா அதுவும முடியல்லே காலே நகரல்லே.. அந்தச் சமயத்திலேதான் அவர் சொன்ன வார்த்தைகள் நினைச்சுண்டேன்.

‘…இங்கே அழகே ஓர் ஆடை, ஒரு மகத்தான பணியில் அற்பமான எண்ணங்களுக்கு இடமே இல்லை. அந்த அற்ப விஷயங்கள் இங்கே ஒரு பொருட்டு இல்லை. தீயில் விழுந்த சருகு மாதிரி – அதெல்லாம் இதோ, இந்த மேடையிலே நீங்க ஏறினவுடனே, இயற்கையின் ஓரம்சமா மாறிடறீங்க. அந்த வார்த்தைகளை முழுமையான மனசோட ஏத்துண்டப்புறம் என் உடம்பிலே நடுககம் குறைஞ்சுது. என் காரியததைபபத்தி நெனைக்க எனக்கு வெட்கமோ அவமானமோ இலைலே, அவர் சொன்னது உண்மை. இது கேவலமான ஒரு தொழில்லலே : உயர்ந்த கலைப்பணி” என்று கூறி, மௌனமாய் மேலே பேச யோசித்தவாறு இருந்தாள் ருக்கு.

இவ்வளவு நேரம் பேசாதிருந்த பட்டு ‘சரக்’ கென்று புதுத்துணியைக் கிழித்தது போல ஒரு வார்த்தையைக் குத்தலான அழுதத்ததுடன கூறி : “எல்லாம வயித்துக்காகத தானே?

“கலை -அது இது – அப்படி. இப்படின்னு நீ என்ன பேசினானும் வயிறுதானே உன்னைப்போயி அங்கே நிர்வாணமாய் நிக்க வெக் றது?…ம்… நீ அதையே கௌரவமா பேசிக்கலாம. அதே காரணத் தாலேதான் நானும்…” என்று சொல்ல வந்ததை விழுங்கினாள் பட்டு.

“ஆமாம், நீ இருட்டிலே நிக்கறே! நான் வெளிச்சத்திலே நிக்கறேன்!… இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் வித்தியாசம் உண்டுன்னு சொன்னால் போறுமா ? இதுக்கு அது பூரணமாகவே மாறுபட்டது இல்லையா? அதனாலேதான் ஒண்ணு கௌரவம்; இன்னொண்ணு கேவலம். அது சரி; ‘எல்லாம் வயித்துக்காக’ன்னு ஒரே யடியா முடிவு செய்து விடாதே! கலைஞன் வயித்துக்கு இல்லாம காய்ந்தே போகலாம்; இல்லாட்டா அவன் கலையின் மூலம் கோடி கோடியாய்ப் பணத்தைச் சம்பாதிக்கலாம் ஆனால் அவன் கலையை சிருஷ்டிக்கறதே அதுக்காக இல்லே. என்னை யாரும் கட்டாயப்படுத் தல்லே, யாரையும் திருப்திப்படுத்தறத்துக்காக அந்தக் காரியத்தை நான் செய்யல்லே. அப்படிச் செய்ய முடியாதுடி’ அதன் ஆத்மாவை புரிஞ்சுக்கணும். அப்பத்தான் முடியும்.

” இன்னிக்கி நான் அங்கேயே உத்தியோகம் பண்ணிண்டிருக்கேன், இப்பவும் ‘மாடலா’ போயி நிக்கறதிலே எனக்கு ஓர் உன்னதமான சந்தோஷமிருக்கு அது என்னிக்கும் இருக்கும். காரிலே வந்து இறங்கி ‘மாடலா’ நிக்கற பெரிய மனுஷாளும் உண்டு. உனக்கு வயிறே பிரச்னனனா, கலை உன் வயித்தையும் நிரப்பும். ஆனால் கலையின் நோக்கமே கலைஞனின் வயித்தை நெரப்பறது இல்லே” என்று ருக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது பட்டு பொல பொலவென்று கண்ணீருகுத்து அழுதாள். ருக்குவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள் : ‘எனக்கு என்ன தெரியும்? அறியாத்தனத்தாலே, நான் தப்பா ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிச்சுடு ருக்கு…” என்று அவள் பரிதாபமாய்க் கேட்டபோது, ருக்கு அவள் கரத்தை அழுத்தப் பற்றி “அடி அசடே…என்ன பேசறே? உனக்கு நன்னாப் புரியும்படி விளக்கறதுக்குத்தான் இவ்வளவும் நான் சொல்றேன். உன் மேலே எனக்கு வருத்தம் உண்டாகுமா, என்ன?” என்று தணிந்த குரலில் சிரித்தாள்.

“நீ கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லையா?” என்று பேச்சை மாற்றினாள் பட்டு. ருக்கு ஒரு நிமிஷம் யோசித்துவிட்டுச் சொன்னாள் : “இல்லே…அப்படி ஒரு ஆணே நான் இன்னும் சந்திக்கவே இல்லை”.

ருக்குவின் பேச்சையும் அவளது நிலையையும் பார்க்க, பட்டுவுக்கு உள்ளூறப் பெருமிதமாய் இருந்தது.

“சரி, என்னோட துணையாய் நீ வந்து இரேன். இந்த உத்தியோகத்தைச் சரியா நீ புரிஞ்சுண்டா, நாளைக்கே உன்னை நான் அழைச்சிண்டு போவேன், சம்மதமா?” என்று வினவினாள் ருக்கு.

தாழ்ந்துபோன பெண் ஜன்மமான தன் எதிரே, ஆண் வாடையே படாத, ஒளி மிகுந்த பெண்மைச் சுடராய் நின்று, உதவிக்குக் கரம் நீட்டும் அந்த அழைப்பைப் பட்டுவால் மறுக்க முடியவில்லை.

புனிதமானதும் உயர்வானதுமான அந்த சித்ரசில்ப கலாசாலையின் மாடியிலுள்ள விசாலமான ஹாலுக்குள், பயந்து கூசித் தலைகுனிந்து நடந்தாள் பட்டு.

தலை நரைத்து, பட்டை பிரேம் கண்ணடியணிந்து, நீண்ட அங்கியைப் போன்ற ஜிப்பாவுடன் எழுந்து வந்த அவர் ‘புரபஸர் ருத்ரா’ அவளைப் புனனகையுடன் வரவேற்று ஹாலுக்கள் அழைத்துச் சென்றார். அந்த மேடைக்குப் பின்னாலிருந்த ஸ்கிரீன் மறைவுக்குப் போய, தனது உடைகளைக் களைத்துவிட்டு, அங்கிருக்கும் நீண்ட அங்கியை அணிந்து கொள்ள வேன்டும் என்று ருக்கு அவளுக்கு விளக்கியி தந்தாள்.

அதன்படி அவள் ஸ்கிரீனுக்குப் பின்னால் மறைந்ததும்-வெளியே மனியடித்தது.

தடதடவென மாடிப் படிகளில் மாணவர்கள் வரும் சப்தம் கேட்டது.

ஸ்கிரீனுக்கு பின் நினறிருந்த பட்டு தலை நிமிர்த்து சுவர்களிலிருந்த சில ஓவியங்களைப் பார்த்தாள். அவளுக்குக் கண்கள் கூசின. அந்த உருவங்கள் அழகாக இருப்பதுபோல் தோனறிலுைம் ‘அப்படிப்பட்ட அழகோ, தகுதியோ தனது உடலுக்கு இல்லையே’ எனஎன்ற தாழ்வுணர்ச்சியால் அவள் மனம் வதங்கியது. அவள் ருக்குவைப் பற்றி எண்ணிப் பார்தாள். புனிதமான தன் மேனியைப் பற்றி அவளுக்கு இருக்கும் பெருமிதம் தனக்கு இல்லையே’ எனறு அவசியமில்லாமல் மனம் குமைந்தாள் பட்டு.

அபபோது அவர் ஸ்கிரீன் கதவில் மெள்ளத் தட்டி ஓசைப்படுத்தினார்.

அவள் தனது உடைகளைக் களைந்து அங்கியை எடுத்து அணிந்து கொள்ளப்போன நேரத்தில் மேடைக்குப் பக்கத்திலிருந்து ஒளி சொரியும் விளக்குகள் எரிந்தன! அவற்றுக்கு ‘ஷேடு’கள் வைத்து நிழலும் ஒளியும் கலந்து விழுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்ருந்தன.

‘ஐயோ! இவ்வளவு வெளிச்சமா?’ என்று பதைத்து நின்றாள் பட்டு. ஸ்கிரீனின் இடைவெளியில் முகம் பதித்து ஒரு கண்ணால் வெளியே பார்த்தாள். இருபதுக்கு மேற்பட்ட ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.

பட்டுவின் உடவில் நடுக்கமும், மனத்தில் கலக்கமும் அதிகமாயின. ‘தன்னால் அவ்விதம் நிற்க முடியாது, அந்தச் சக்தி தனக்கு இல்லை’ என்று தீர்மானமாகத் தோன்றியது அவளுக்கு. ஒளி சொரியும் விளக்குகள் பொருத்தப்பட்ட பின் மீண்டும் ஒரு முறை அவர் கதவைத் தட்டியதும், அவள் வெளியே வந்தாள்…

உள்ளே போகும்போது அணிந்திருந்த ஆடைகளையே மீண்டும் அணிந்து தலையைக் குனிந்துகொண்டே அவள் வெளியே வந்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க…என்னாலே” என்ற வார்த்தைகளை யாருக்கும் புரியாமல் குழறிவிட்டு, அவள் விடுவிடென்று அந்த வகுப்பறையினின்றும் வெளியேறி மாடிப்படிகளில் இறங்கும்போது கீழே நின்றிருந்த ருக்குவைப் பார்த்தாள்.

“பட்டு பட்டு” என்று அழைத்தவாறே ஓடி வந்தாள் ருக்கு.

“என்னை மனனிச்சுடு ருக்கு, நான் போறேன் என்னாலே முடியலேடி…ரொமப வெளிச்சமாயிருக்கு…” என்று சொலலிக்கொண்டே ஓடினாள் பட்டு.

“ஓ! முடியல்லேன்னா பரவாயில்லே. இப்ப நீ எங்கே போறே?” என்று அவளைத் தடுத்தாள் ருக்கு.

“நான் போறேன்…என் தலைவிதிப்படி” என்று கூறிவிட்டு ருக்குவின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் காம்பவுண்டைக் கடத்து தெருவில் இறங்கி ஓடினாள பட்டு.

அவள் பின்னால தொடர்ந்து செல்லவிருந்த ருக்குவின் எதிரே அவர்-ருத்ரா-வந்தார்.

“ப்ளீஸ் ஹெல்ப! அங்கே ஸ்டூடன் ஸெல்லாம் காத்திண்டிருக்கா – நீங்களாவது வரணும்” என்று அழைத்ததும், ருக்கு மாடிப்படியேறி மேலே போனாள்.

சற்று நேரத்திற்குப் பின் அழகையே ஆராதிக்கும் அந்தக கலா சந்நிதியில் இருபுறத்திலிருந்தும் பிரகாசமாய்ப் பொழியும் ஒளி வெள்ளத்தில் அழகையே ஓர் ஆடையாய்த் தரித்து, பலர் முன்னே தன் சுடர் மேனியைக் காட்டி நின்றிருந்தாள், ருக்கு.

அதே நேரத்தில் இருளைத் தேடி – அந்தப் போர்வையில் எவனோ ஒருவனோடு தன்னை மறைத்துக்கொள்ள நகரத்தின் ஓர் இருண்ட பகுதியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் பட்டு.

– ஜெயகாந்தன் சிறுகதைகள் – முதற்பதிப்பு 1973 – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

1 thought on “இருளைத் தேடி…

  1. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத கதை,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *