இருப்பும் இழப்பும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 8,292 
 
 

“மஞ்சு! குசினிக்குள்ளை சாப்பாடு தட்டாலை மூடி வைச்சிருக்கிறன். எடுத்துக் கொண்டு போய் மாமாவுக்குப் பக்கத்திலை வைச்சுவிடு பிள்ளை.” பழைய கதிரை ஒன்றிற்குள் இருந்து, கிழிந்த உடுப்பு ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்த மங்கை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஓலைப்பாயிலிருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த மஞ்சு, ஒருவித ஏக்கத்துடன் தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

“அண்ணாவை வந்தவுடனை எல்லாருமா சேர்ந்து ஒண்டா சாப்பிடுவம் எண்டு சொன்னியள். இப்ப?”

“இப்பவே ரண்டு மணியாப் போச்சு. அவையள் எப்ப வருகினமோ தெரியாது. மாமா மருந்து எடுக்கிறவர். சாப்பிடாமல் இருந்தா உடம்புக்கு கூடாது.”

மஞ்சு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு ஓலைக் குடிசைக்குள் புகுந்தாள். மண்குடிசை, செங்கல் வீட்டின் பின்புறம் இருந்தது. அவள் போவதையே வெறித்துப் பார்த்தபடி அம்மா இருந்தாள். தகப்பனின் நிறம் மகளிற்கு இடம் மாறியிருந்தது, வாழ்க்கையில் எவ்வளவு கொடூரத்தை ஏற்படுத்தி விட்டது. கறுப்பு என்றால் கூட பரவாயில்லை. அது என்ன நிறம்? சாம்பலில் எண்ணெய் விட்டுக் குழைத்து அப்பியதுமாப்போல்!

உள்ளே மாமாவைக் காணாததால், வெளியே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தாள் மஞ்சு. வீட்டிற்குக் கிழக்குப் புறமாகவிருந்த குறுக்கு வேலிக்கம்பியைப் பிடித்தபடி, எதிர்ப்புறக் காணிக்குள் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். வருஷம் பூராவும் விளைச்சலைத் தந்த அந்தக் காணி, இப்போது முள்ளும் புதருமாகிக் கிடக்கின்றது.

ஒவ்வொரு நாளும் அந்தக் காணிக்குள் இராமலிங்கத்தார் என்னத்தை எட்டிப் பார்க்கின்றார்?

“மாமா!” என்று மஞ்சு பதட்டத்தில் கத்தியதில் இராமலிங்கத்தார் திடுக்கிட்டுத் திரும்பினார்.

“கிணற்றடியையும் வீட்டையும் தவிர, வேறொரு இடமுமல்லே போகக்கூடாது எண்டு சொல்லியிருக்கினம். கண்ணிவெடி எங்கையெல்லாம் புதைஞ்சு கிடக்குதோ ஆருக்குத் தெரியும்.”

மஞ்சு ஏதாகிலும் பேசினால் இராமலிங்கத்தின் முகத்தில் ஒரு வேதனையின் சாயலில் புன்னகை தோன்றும். தற்பாது காப்புக்காக வைத்திருந்த தடியை ஊண்றிக் கொண்டு மஞ்சுவை நோக்கி வந்தார். மங்கை திருமணம் செய்யும் வரையும் காத்திருந்ததில் இராமலிங்கத்திற்கு திருமணம் நடக்காமலே போய் விட்டது. மங்கையின் கணவன் கதிரவேலு இருக்கும் வரையிலும்இ அவருடன் இவருக்கு எந்த நாளும் பிணக்குத்தான். பிரச்சினை உருவாகுவதே கோவிலில் இருந்துதான். கதிரவேலுவுக்கு அருணகிரிநாதர், பட்டினத்தார், விவேகசிந்தாமணி பாட்டுகள் என்றால் உயிர். இராமலிங்கத்தார் அவற்றை கோவிலிலே பாடக்கூடாதென்பார்.

வாழ்க்கையைத் தோச்சுப் பிழிஞ்சு கடைந்தேறியவர்களின் காட்டுக் கத்தல் என்பார்.

கதிரவேலு காணாமல் போனதன் பின்புதான், தங்கைச்சிக்கு தரவாகவும் – தனது எதிர்காலம் கருதியும் அங்கே வந்து ஒட்டிக் கொண்டார்.

இராமலிங்கம் குடிசைக்குள் வந்து சேரும் வரைக்கும் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள் மஞ்சு. வந்தவர் குடிசைக்குள்ளிருந்த சாக்குக் கட்டிலில் சரிந்து கொண்டார்.

“உம். என்னடி பிள்ளை? மாதமும் ஒண்டாப் போச்சு. அயலட்டையிலை இன்னமும் சனம் வந்து சேரேல்லைப் போல கிடக்கு.”

“அதுதான் பொட்டுப் பிரிச்சு பூராயம் பாக்கிறியளோ? சரி மாமா, மேசையிலை சாப்பாடு வைச்சிருக்கிறன்.”

“ஓம் பிள்ளை. அது சரி, எப்ப யோகன் வாறது எண்டு அறிவிச்சவன்?”

“அண்ணாவை மத்தியானம் வந்திருக்க வேணும். இன்னமும் காணேல்ல.”

ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சன நடமாட்டம் இருந்தது. ஒருவேளை அவசரப்பட்டுத் தெல்லிப்பழைக்கு வந்துவிட்டோமோ என நினைத்தாள் மங்கை. இருந்ததோடு இன்னுமொரு வருஷம் கொழும்பிலை இருந்துவிட்டு வந்திருந்தால், அவர்களின் வாழ்க்கை வட்டத்திலும் ஒரு ‘அஞ்ஞாத வாசம்’ வந்து போயிருக்கும்.

*****

பாதை குண்டும் குழியுமாக மோசமாகி இருந்தபடியால்,, காரை ஓட்டுவதற்கு யோகனுக்கு நெடுநேரம் எடுத்தது. இது என்ன கனடாவா, காரை சறுக்கிக் கொண்டு ஓட்டுவதற்கு! மனைவி ரேவதி, பிள்ளைகள் துவாரகன், அனு இவர்களைச் சுமந்தபடி நாலுமணியளவில் கடகடவென்ற சத்தத்துடன் கார் வந்து சேர்ந்தது. ரேவதியின் சொந்த ஊர் நாவற்குழி. அவளின் பெற்றோருக்கு இடம் பெயர்ந்து அல்லற்படும் பாய்க்கியம் கிடைக்கவில்லை. இன்னமும் நாவற்குழியில்தான் இருக்கின்றார்கள். யோகனது குடும்பம் கனடாவிலிருந்து நேற்றே நாவற்குழி வந்திருந்தது.

வந்தவுடன் அம்மா ஒப்பாரி வைத்து அழுவாள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான் யோகன். ஆனால் அது நடக்கவில்லை. ஒப்பாரியை அவள் அடகு வைத்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன.

வீடு சின்னாபின்னமாகி சிதறிப் போய் கிடந்தது. வாசலில் இருந்த இரண்டு இரும்புக் கேற்றுகளும் இப்போது இருக்கவில்லை. வீட்டிற்கும் முன்பக்க வேலிக்குமிடையிலிருந்த நிலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. கடைசியாக இடம்பெயர முன்பு அந்த நிலத்தில் – செவ்வரத்தை, நந்தியாவட்டை, நித்தியகல்யாணி, துளசிச்செடிகள் எல்லாம் செழித்து சடைத்து இருந்தன. இப்போது பாளம் பாளமாக வெடித்துப் போயிருந்தது நிலம்.

“யோகன், வரேக்கை எல்லா அறையளும் ஒழுகினபடி. பிறகு மேசன் ஐயாத்துரையின்ர மகன்தான் ஓடுகளை தரம் பிரிச்சு, குசினிக்கும் ஒரு அறைக்குமாக போட்டுத் தந்தவன். மிச்ச அறையள் பாவிக்க ஏலாது.”

“கொட்டிலை வடிவா மேஞ்சு வைச்சிருக்கிறன். மஞ்சு சாணகத்தாலை மெழுகி வைச்சிருக் கிறாள். நாலைஞ்சு பெடி பெட்டையளுக்கு ரியூசன் சொல்லிக் குடுக்க உதவும். கொழும்பிலை இருக்கேக்கை எத்தினை பேருக்கு படிப்புச் சொல்லிக் குடுத்திருப்பாள். ஒரு சதம் காசு வாங்கியிருக்கமாட்டாள்.”

வாங்கின் ஒரு நுனியில் யோகன், ரேவதி பிள்ளைகளுமிருக்க மறு நுனியில் மஞ்சு இருந்தாள். மங்கை இன்னமும் கதிரைக்குள்தான் புதைந்திருந்தாள். இப்போதுதான் அவர்கள் ரேவதியையும் பிள்ளைகளையும் முதன் முதலாக நேரில் பார்க்கின்றார்கள். மஞ்சு யோகனைப் பார்ப்பதும் நிலத்தைக் குனிவதுமாக இருந்தாள்.

“அம்மா! எங்கை மாமாவைக் காணேல்ல. ஒருக்கா வந்து பாத்திட்டுப் போ எண்டு கடிதம் போட்டிருந்தார். ஹொஸ்பிட்டலிலை இருந்ததிற்குப் பிறகு சரியாப் பயந்திட்டார் போல.”

“அவருக்கு இப்ப கொட்டில்தான் தஞ்சம். என்ன மாதிரி திடகாத்திரமாக இருந்தவர். இப்ப முந்தியைப் போல ஒண்டுக்கும் ஏலாது. ஒன்பது பத்துக் குளிசைகள் எண்டு ஒரு நாளைக்குப் போட்டால்தான் உடம்பு கொஞ்சம் அசையும். மருந்தை நிப்பாட்டினாள் முடிஞ்சிடும். கொழும்பிலை இருக்கேக்கை ஒருக்கா இந்தா போறன் எண்டு ஹொஸ்பிட்டலிலை படுத்துக் கிடந்தவர்.”

“அண்ணா! காலை ஒருக்கா காட்டு” என்று சொல்லிக் கொண்டே உரிமையுடன் யோகனின் காலைத் தூக்கிப் பார்த்தாள் மஞ்சு. அது இன்னமும் மாறாத வடுக்களாகி பெரிய பள்ளங்களாகக் குழி விழுந்து கிடந்தது. அவை யோகன் கடைசியாக பங்கு கொண்ட சண்டையின் தழும்புகள். பலாலி மிக் காம்பின் எல்லைப் புறங்களில் நடந்த சண்டை. முதல் வரிசையில் நின்று போரிடுகையில் சன்னங்கள் துழைக்க, நண்பர்கள் இழுத்து வந்து பற்றைக்குள் போட்டதும், தப்பிப் பிழைத்ததும் தனிக் கதை. அதன் பிறகு வாழ்க்கை என்ற போராட்டத்தில் அவனால் ஓட முடியாமல் போய் விட்டது. இப்போது கூட அவனால் நடக்கத்தான் முடியும். ஓட முடியாது. அதற்குப் பின் எவ்வளவோ நடந்து விட்டன. யோகன் வெளிநாடு போய்விட்டதால் எதுவுமே நடக்காமல் போய் விடவில்லை.

“அண்ணா! இப்ப கால் எப்பிடி இருக்கு?”

“தங்கைச்சி! வாழ்க்கையிலை ஏதாவது நடந்து கொண்டே இருக்க வேணும். விறுவிறுப்பா! இல்லாட்டி வாழ்க்கை வெறும் உப்புச் சப்பற்றதாப் போய் விடும்.”

மஞ்சுவின் வாழ்க்கையில் எது நடந்தது? விறுவிறுப்பா! வெறும் உப்புச் சப்பற்ற….. அவளின் நெஞ்சு விம்மித் தணிகிறது.

*** *** ***

திண்ணையிலிருந்து எல்லாரும் இஞ்சிப் பிளேன்ரி குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அம்மா! நான் ஒருக்கா இவையளை மாமாவிட்டை அறிமுகப்படுத்திப் போட்டு வாறன்” சொல்லிக் கொண்டே இருக்கையை விட்டு எழும்பினான் யோகன்.

குடிசையை அண்மிக்கும்போது இராமலிங்கத்தார் அனுவுக்கும் துவாரகனுக்கும் கதை சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. உள்ளே சாம்பராணி வாசனை தூக்குத் தூக்கியது.

” தம்பி யோகனே, வா. தலை அடிச்சுப் போடும். குனிஞ்சு வா.”

“என்ன மாமா, கதை சொல்லிக் கொண்டிருக்கிறியள் போல.”

“இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் விட்டா பிள்ளையளுக்கு இன்ரறெஸ்ரா சொல்ல வேற என்ன இருக்கு?”

“ஏன் மாமா எங்கட நாட்டுக்கதைகளையும் சொல்லுங்கோவன்.”

“இப்பென்ன இண்டைக்கே கனடா போகப் போற மாதிரி! வந்தனியள் ஒரு மூண்டு மாதம் நிண்டுதானே போவியள்? றுதலா சொல்லுவம்.”

“ஒரு மாதம் நிக்கிறதுதான் மாமா திட்டம்.”

‘ஒரு மாதம்’ என்று யோகன் சொன்னவுடன் இராமலிங்கத்தின் நெஞ்சு திக்கென்றது. முகம் இருண்டு கறுத்துப் போனது.

“இவன் பாலச்சந்திரன் – கள்ளியங்காடு. இது கிருஷ்ணா – திருக்கோணமலை.”

“யோகன்! ஊருகளை விட்டிட்டு பேருகளைச் சொல்லு. எல்லாரும் கனடாவிலை இருந்து வந்த க்கள்தானே!”

“ஓம் மாமா. இவன் திருக்குமார். இதிலை கிருஷ்ணதேவா மாத்திரம் தனிக்கட்டை.”

“அப்ப என்னைப் போல எண்டு சுருக்கமா சொல்லு.”

மண் குந்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த எல்லாரும் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார்கள். இராமலிங்கத்திடம் கதைத்துக் கொண்டிருப்பதில் பொழுது போவதே தெரியாது. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தி நாலில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மகாநாடு பற்றிய புதினங்களைச் சொல்வதென்றால் அவருக்குப் படு குசி. நேரில் பங்கு பற்றி அடிதடி பெற்ற அனுபவம். அவர்கள் எல்லாருக்கும் இராமலிங்கத்தைப் பிடித்துப் போய் விட்டது. கதை முடிந்து இருக்கையை விட்டு எழும்பினார்கள்.

“யோகன் ஒரு விஷயம் கதைக்க வேணும்?” என்று முத்தாய்ப்பிட்டார் இராமலிங்கம். இங்கிதம் புரிந்த நண்பர்கள் விலக, யோகன் அவர்களைப் போக விடாது தடுத்துக் கொண்டான்.

“பரவாயில்லை மாமா. நாங்கள் எல்லாரும் நண்பர்கள்தான். நீங்கள் சொல்லுங்கோ!”
“மஞ்சுவுக்கு ஒண்டுமே சரிவராதா?”

திடீரென்ற இந்தக் கேள்வியை யோகன் எதிர்பார்க்கவில்லை.

“சாதகங்கள் சரிவருகுதில்லை எண்டு அம்மா சொல்லுறா.”

“அம்மாவை விடு. நீ ஏதாகிலும் பாத்தியா? சாதகங்களை மாத்திரம் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. அவளின்ர நிறமும் ஒரு பிரச்சினை யோகன். இந்த உலகத்திலை ணுக்கொரு நிறம், பெண்ணுக்கொரு நிறம் எண்ட நிலை மாற வேணும்.”

தன்னைப் போல அவளும் தனித்து விடுவாளோ என்பது இராமலிங்கத்தாரின் கவலை.

“தம்பியவை நான் சொல்லுறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஆனால் அதுதான் உண்மை. வெளிநாட்டிலை இருந்து வாறவை, வடிவான பெம்பிளப்பிள்ளையளாப் பாத்து கலியாணம் செய்து கொண்டு போயிடினம். அதுவும் தாங்கள் என்ன நிறம் எண்டது பற்றி அவைக்குக் கவலை இல்லை. பெம்பிள சிவப்பா இருக்க வேணும். சில இடங்களிலை மாப்பிள்ளையே பெம்பிளைக்கு சீதனமும் குடுக்கிறதாகவும் கேள்விப்பட்டன். அப்பிடியெண்டா மஞ்சு போலப் பிள்ளையளை ஆர் செய்யுறது?”

உண்மைதான். அதை யோகனும் அறிவான். அவனால் என்ன செய்ய முடியும்? காசு, நகை எல்லாவற்றையும் குடுக்கலாம். மாப்பிள்ளையை எப்பிடிக் குடுப்பது?

“அது சரி. நீயென்னத்தைச் செய்யிறது. பிள்ளையளுக்கு நல்லா தமிழ் படிப்பிச்சிருக்கிறாய். அட்சரம் பிசகாமல் நல்ல தமிழிலை கதைக்குதுகள். வெளிநாடு போனாலும் நீ செய்த ஒரு நல்ல காரியம், பிள்ளையளுக்கு தமிழ் சொல்லிக் குடுத்ததுதான்.”

மாமாவுடன் கதைத்ததில் யோகனின் மனம் கனத்துப் போயிருந்தது. இராமலிங்கத்தின் கேள்விகள், வந்திருந்த நண்பர்களில் கிருஷ்ணாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி ஒரு பதியத்தைப் போட்டது. போகும் போது பதியத்திலிருந்து ஒரு முளை அரும்பு விட்டு கள்ளத்தனமாக மஞ்சுவை எட்டிப் பார்த்தது.

*** *** ***

இன்று அம்மாவுடனும் மாமாவுடனும் கதைத்து ஒரு முடிவு எடுத்து விடவேண்டும் என விரும்பினான் யோகன். கிருஷ்ணா நேற்று பாலச்சந்திரனுடன் தங்கிக் கொண்டான். அவனுக்கு யாழ்ப்பாணத்தில் தெரிந்தவர்கள் யாருமில்லை. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவருடன் தங்கிக் கொள்வான். இன்று அவன் காரணத்தோடு வரவில்லை. யோகன் வரும்போது திருக்குமார் குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு வந்தான். திருக்குமார்தான் இப்போது கலியாணப் புறோக்கர்.

“ஒருநாளைக்கு எண்டாலும் இரவு நில் எண்டா கேட்டால்தானே! சுடுகுது மடியைப் பிடி எண்ட மாதிரி மனிசியையும் பிள்ளையளையும் தள்ளிக் கொண்டு நாவற்குழிக்கு ஓடி விடுகிறாய்.”

“இஞ்சை உங்களுக்குக் கஸ்டம் அம்மா!”

“இஞ்சை ஒரு பிரச்சினையும் இல்லை. இப்ப வெய்யில்காலம். மழை ஒழுக்கு பிரச்சினை இல்லை. விறாந்தையிலை பாயை விரிச்சு விட்டேனெண்டால் இருபது பேர் மட்டிலை படுத்து எழும்பலாம்.”

“இண்டைக்கு ஒடியல் கூழ் அண்ணா. மூக்கு முட்டப் பிடிச்சுப் போட்டு எல்லாருமா இஞ்சையே நில்லுங்கோ.”

மஞ்சு பேச்சில் ஜெயித்து விடுவாள். கடைசியில் தங்கையின் பேச்சுக்கு மகுடிப் பாம்பாக அடங்கினான் யோகன்.

பாதுகாப்பு வலயத்தில் மிகவும் பாதுகாப்பாக இருந்த மீன்கள் கொழுத்து தினவெடுத்து இருந்தன. அரசாங்கம் மீன் பிடிப்பதற்கு ஏற்படுத்தியிருந்த தடையைத் தளர்த்தியிருந்ததால் மீன்கள் தாராளமாகவும் மலிவாகவும் கிடைத்தன.

கூழ் குடிக்கும் படலம் முடிவடைந்ததும் எல்லாரும் விறாந்தையில் சரிந்து கொண்டார்கள். வேப்பமரம் பூத்து வாசனை வீசியது. தேசமெங்கும் அனல்காற்று வீசிற்று. முற்றத்தில் வேப்பம் பூ வடகம் காய்ந்து கொண்டிருந்தது.

குசினிக்குள் அம்மாவும் ரேவதியும் மஞ்சுவும் கனடாப் புதினங்கள் பற்றிக் குசுகுசுத்தபடி இருந்தார்கள். யோகன் திருக்குமாருக்கு கண்ணைக் காட்டினான். திருக்குமாரின் மனைவி விறாந்தையில் இருந்தபடியேஇ குசினிக்குள் எட்டிப் பார்த்து “அம்மா! இஞ்சை ஒருக்கா வந்துட்டுப் போங்கோ” என்றாள். அம்மாவின் பின்னால் மஞ்சு எழுந்தாள். “நீ இஞ்சை இரு! உன்னோடை கனக்கக் கதைக்க வேணும்” என்று மஞ்சுவைப் பிடித்து குசினிக்குள் இருத்திக் கொண்டாள் ரேவதி. ஒருநாளுமில்லாதவாறு தனது கையை பலாத்காரமாகப் பிடித்து இழுத்த அண்ணியை வியப்புடன் பார்த்தாள் மஞ்சு.

சற்று நேரத்தில் மங்கையின் சிரிப்பொலி வீட்டை நிறைத்தது. அம்மா இப்படிச் சிரிப்பது அத்தி பூப்பது போல்தான்.

“எங்கே திருமதி கிருஸ்ணா?” என்றபடியே ஒவ்வொருவராக குசினிக்குள் புகுந்தார்கள். மஞ்சு வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்.

மூடியிருந்த மஞ்சுவின் கைகளை இழுத்து விட்டாள் ரேவதி. கடைசியில் தோற்றுப்போன மஞ்சுவின் முகம் – வெட்கம், ஆனந்தம், கண்ணீர் என மாறி கடைசியில் இத்தனை காலமும் தேக்கி வைத்திருந்த கவலை வெடித்து அழுகையாயிற்று. இராமலிங்கத்தாருடன் பேச்சுக் கொடுப்பதற்காக கொட்டிலுக்குச் சென்றான் யோகன். மாமா முள்ளுவேலியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு அடுத்த வளவிற்குள் மூழ்கிக் கொண்டிருந்தார்.

“அம்மா! என்னம்மா எப்ப பாத்தாலும் மாமா குறுக்கு வேலியோடை மினக்கெடுறார்?”

“ஒரு நாளைக்கு ஒருக்கா எண்டாலும் உந்தக் குறுக்கு வேலியை எட்டிப் பாக்காட்டி உவருக்குச் சரிவராது. உனக்கு வேலாயுதத்தைத் தெரியும்தானே! அடுத்த வளவுக்கை குத்தகைக்கு தோட்டம் செய்தவர். அவர் மாமாவின்ர பெஸ்ற் பிறண்ட். அந்தாள் வந்திட்டுதா எண்டுதான் அடிக்கடி போய் பாக்கிறார்.”

“அவர் வந்திருந்தா, இங்சையும் ஒருக்கா வந்து எட்டிப் பாப்பர்தானே. உதுக்குப் போய் எந்த நாளும்.”

யோகனுக்கு சிறுவயது ஞாபங்கள் தலை தூக்கின. நவராத்திரி, திருவெம்பாவை எல்லாத்துக்கும் வேலாயுதத்திடம்தான் வாழைக்குலைகள் வாங்குவார்கள். நிலத்திலே குலை கொள்ளக் கூடியளவிற்கு கிடங்கு அகழ்ந்து, அதற்குள் குலையை வாழை இலைச் சருகுகளால் சுற்றி, வாழைமடல் தண்டுகளை கிடங்கின் மேல் பரப்பி பின் அதன் மேல் மண்ணை மெதுவாக மூடுவார். கிடங்கிற்கு சற்றுத் தள்ளி,இன்னொரு சிறிய பொந்து தோண்டி கிடங்குடன் இணைய வைப்பார். தேங்காய் சிரட்டையின் கண்களை உடைத்து விட்டு, அதற்குள் பொச்சுகளை திணித்து நெருப்பூட்டி பொந்திற்குள் வைத்து கரையெங்கும் மண் பரப்பி, ‘பூ… பூ’ என்று ஊதுவார். புகை வாழை மடல் தண்டுகளினூடு பரவி மண்ணிற்குள்ளால் வெளிக் கிழம்பும். அப்படியே ஒரு நாளைக்கு இரண்டு தடவை வீதம் இரண்டு நாட்கள் புகை ஊதுவார். குலை பச்சையும் மஞ்சளுமாக தோன்ற தூக்கித் தருவார்.

“அம்மா! இப்ப வேலாயுதம் அண்ணை எங்கை இருப்பார்?”

“இஞ்சை பார் இவன்ர கதையை.. ர் ர் எங்கை இருப்பினம் எண்டு ஆர் கண்டது?”

உண்மைதான். ஒரு விடியற்புறமாக நாலைந்து மணத்தியாலங்களிற்குள், மந்திரவாதி துணியை மூடி எடுப்பதற்குள், ஊரே காலியானது. இந்த இடம்பெயர்வு எத்தினை பேருக்குள் விரிசலை ஏற்படுத்தி விட்டது. அண்ணன் – தம்பி; பெற்றார் – பிள்ளைகள், அயலட்டைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்குமிடையிலான உறவுகளை எல்லாம் சிதைத்து விட்டது.

இரவு மாமாவுடன் கதைக்கலாம் என்று யோகன் நினைத்திருக்கையில், இராமலிங்கத்தாரைப் பிடித்து நடத்திக் கொண்டே திருக்குமார் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான்.

“இராமலிங்கண்ணை விழப்பாத்திட்டார். அதுதான் பிடிச்சுக் கொண்டு வாறன்” என்றான் திருக்குமார்.

“மஞ்சுவுக்கு ஒரு சம்பந்தம் சரிவரும் போல கிடக்கு” என்ற திருக்குமாருக்கு,
“!” என்றார் இராமலிங்கம்.

காது கேட்கவில்லையோ அல்லது அவரால் நம்ப முடியவில்லையோ தெரியவில்லை. திருக்குமார் திரும்பவும் சொன்னான்.

“ஆரடா மாப்பிள்ளை! நீதானே தம்பி” என்றாரே பார்க்கலாம். திருக்குமாரின் மனைவி கொடுப்பிற்குள் சிரித்துக் கொண்டாள்.

இராமலிங்கம் ஏகப்பட்ட குசியில் இருந்தார். எங்கே தன்னைப் போல மஞ்சுவும் திருமணம் செய்யாமல் இருந்து விடுவாளோ என்ற பயம் இப்போது அவரை விட்டு நீங்கி விட்டது. ‘அதுதான் கூழ் காச்சிக் கொண்டாடி இருக்கிறாளோ?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். பொழுதுபட்ட நேரத்தில் பாலச்சந்திரனும் கிருஷ்ணாவும் சைக்கிளில் வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்குள் காலெடுத்து வைக்கும்போது, வீரபத்திரர் கோவில் பக்கமாக க்கள் கத்திக் குழறும் அவலக்குரல் கேட்டது. இப்போது எந்தச் சத்தமுமே அலறலாகத்தான் இருக்கிறது.

என்னவென்று பார்த்து வரப் புறப்பட்டார்கள்.

தூரத்தே மொட்டையாகிப் போய்விட்ட பனைமரங்களும் தென்னை மரங்களும் தெரிகின்றன. கோயிலுக்கு முன்பாகவிருந்த பனங்கூடல் ‘ஷெல்’லடி பட்டு அரையும் குறையுமாகி மூழியாகிப் போயிருந்தது. காலகாலமாக ஒரு அரக்கனைப் போல, கோவில் வாசலில் இருந்த அரச மரம் வெட்டப்பட்டிருந்தது. கோவில் மணி சீந்துவாரற்று துருப்பிடித்துக் கிடந்தது. ஒரு காலத்தில் எப்படி சுறுசுறுப்பாக ஆரவாரமாக இருந்த ஊர் இன்று சாக்கடையாகிக் கிடக்கிறது. எத்தனை மிருகங்கள் நாங்கள் இல்லாத போது இந்தக் காணிகளிற்குள் உலாவியிருக்கும்? கோவிலைச் சமீபிக்கையில் சத்தம் தச்சு வேலை செய்பவர்கள் பகுதியிலிருந்து வருவதை அறியக்கூடியதாகவிருந்தது.

குடில் வீடுகளிற்கு முன்னால் சனம் குழுமியிருந்தது. அழுகையும் ஒப்பாரியுமாக.

ஆட்டிற்கு குழை ஒடிப்பதற்காக பூவரசு வேலிக் கரைக்குச் சென்ற ஒருவனின் கால் கண்ணி வெடிக்குப் பலியாகியிருந்தது. முழங்காலிற்கு கீழே இரத்தம் பெருக்கெடுத்த நிலையில் முனகிக் கொண்டிருந்தான். கார் ஒன்று வந்து சேர அவனை அதற்குள் ஏற்றினார்கள். தேகம் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. யோகன் ஒருகணம் மாமாவை நினைத்துக் கொண்டான்.

வீடு திரும்பிப் போகும்போது நன்றாக இருட்டி விட்டது. வாசலில் எல்லாரும் இவர்களைப் பார்த்தபடியே நின்றார்கள். அனு ஓடி வந்து யோகனிடம் தொங்கிக் கொண்டாள்.

“அப்பாஇ இண்டைக்கு தாத்தா ஒரு புதுக்கதை சொல்லித் தந்தவர்”

“என்ன கதை அனு?”

“காலொடிந்த ஆட்டிற்கு கண்ணீர் விட்ட புத்தரின் கதை அப்பா” என்றாள் அனு.

*** *** ***

இரவு நெடு நேரம் வரை கதைத்துக் கொண்டிருந்தார்கள். சுடச் சுட தேநீர் கொண்டு வந்து குடுத்து விட்டுப் போனாள் மஞ்சு. அடிக்கொரு தடவை கிருஷ்ணாவை சீண்டி வேடிக்கையாக இருந்தார் இராமலிங்கம். இப்போது முன்பு போல அவரால் கலகலப்பாக இருக்க முடியவில்லை. கொஞ்சம் கதைப்பதற்குள் இழைத்துப் போகின்றார்.

“கனடாவிலை இருந்து இஞ்சை வர எவ்வளவு மட்டிலை ஒவ்வொருத்தருக்கும் செலவாகுது?”

“ஆயிரத்து எண்ணூறு டொலர்கள். ஏன் மாமா நீங்களும் ஒருக்கா கனடா வந்து பாக்கலாமே!?”

“கண் பார்வையும் மங்கிக் கொண்டு வந்திட்டுது. இனியென்னத்தை நான் பாக்கிறது. சொந்த மண்ணிலை நாலு இனசனத்தோடை இருக்கேக்கை செத்துப் போயிட வேணும் எண்டதுதான் இப்ப என்ர ஆசை. ஒருவேளை நான் செத்தா, என்ர செத்த வீட்டுக்கு எல்லாரும் வருவியளோ?”

“இதென்ன இண்டைக்கு இராமலிங்கம் அண்ணை மடக்குக் கேள்வியள் எல்லாம் கேட்கிறார். நாங்கள் வராமல்!”

“தயவு செய்து ஒருத்தரும் இஞ்சை வந்துடாதையுங்கோ! அந்தக் காசை எல்லாருமா சேத்து மஞ்சுவுக்குக் குடுங்கோ.”

“நல்ல ஒரு மாமாதான் நீங்கள்.”

கடைசிவரை சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற ஓர்மம் உடைய மாமாவைப் போல பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். பத்து மணி வரையும் நீ£டித்த உரையாடலுக்குஇ திருக்குமாரும் பாலச்சந்திரனும் முற்றுபுள்ளி வைத்து தங்கள் வீடுகளிற்குச் சென்றார்கள். யோகனும் கிருஷ்ணாவும் வீட்டு விறாந்தையில் சரிந்து கொண்டார்கள். ஒரு மண்ணெண்ணை விளக்கு அறைக்கும் விறாந்தைக்கும் இடையிலிருந்து துடித்துக் கொண்டிருந்தது.

மஞ்சுவிற்கு ஒரு இருப்புக் கிடைத்ததில் யோகனுக்கு திருப்தி. இந்த நேரத்தில் அப்பாவும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரு ‘மோட்டர் பம்’பின் மீது கொண்ட சையால் காணாமல் போய் விட்டார். ‘கரண்ட்’ இல்லாத நேரத்தில் அதற்கு ஒரு பெறுமதி இல்லை என்று தெரிந்து கொண்டும் விசர்த்தனமாக எடுத்த முடிவில் அழிந்து போனார்.

எத்தனை பேர் வீடுகளுக்கு சென்று, விறகுகளும் மிச்ச சொச்ச சாமான்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். யோகனும்தான் அப்போது அவருடன் கூடச் சென்றான். அது ஒரு மழை நாள். அளவெட்டி வீதியால் வந்து அம்பனை வீதிக்கு ஏறும்போது சடசடவென ஷெல் அடிச் சத்தம் கேட்டது. மழைக்கு அந்த ஒலி வீறாப்புடன் எதிரொலித்தது. ஒரு கடைக்குள் ஒதுங்கி நின்றார்கள். திடீரென என்ன நினைத்தாரோ, “நான் போகப் போறன். நீ வாறியா?” என்றார் அப்பா. “பொறுங்கோ அப்பா! ஷெல் அடி கொஞ்சம் தணியட்டும்” என்று யோகன் சொல்லி முடிப்பதற்குள், “நீ வீட்டை திரும்பிப் போ. உனக்குக் காலும் ஏலாது” என்று சொல்லி விட்டு பாய்ந்து சைக்கிளில் ஏறிப் போய்விட்டார். அவரது பிடிவாதம் கடைசியில் அவருக்கு வினையாக முடிந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

உண்மையிலே அப்பா ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. எப்படி அப்படியொரு துணிச்சல் திடீரென அவருக்கு வந்தது என்பது யோகனுக்கு இன்னமும்தான் புரியவில்லை. துளித் துளியாகச் சேர்த்த சொத்தை இழக்கும் நேரம் வரும்போது எல்லாருக்கும் அப்பிடியான ஒரு மன நிலைதான் வருமோ?

அப்பா எங்கோ பத்திரமாக இருப்பதாகவும்இ என்றோ ஒருநாள் திரும்பி வந்து விடுவார் என்றும் அம்மா நம்பிக்கை கொண்டிருக்கின்றாள்.

திரும்பி மறுபுறம் சரிந்து படுத்தான் யோகன். கிருஷ்ணாவின் குறட்டை ஒலி தாள லயத்துடன் முழங்கியது. அவனது குடும்பம் எண்பத்திமூன்று இனக்கலவரத்துக்குள் அடக்கம். காலி வீதியில் எரியும் கார் ஒன்றிற்குள் அப்பா, அம்மா, தம்பி தங்கை என ஐந்து பேரும் தூக்கி எறியப்பட்டார்கள். அவனது காலம்இ அவன் மாத்திரம் காரினின்றும் வழுகி விலகி வீதியில் விழுந்து கொண்டான். காரிற்குள் இருந்த ஒட்டு மொத்தக் குடும்பத்தின் கதறலைக் கேட்டுக் கொண்டே சிறுவனான அவன் மயங்கிப் போனான்.

மஞ்சுவிற்கு உறக்கம் வரவில்லை. யோகன் போர் முனைகளில் இருந்த நாட்களில் எத்தனை நாட்கள் இப்படி உறங்காமல் விழித்திருந்திருப்பாள் அவள்.

“அண்ணா இந்தா போர்வை. போத்துக் கொண்டு படுங்கோ. சாமத்திலை குளிரும். உங்களுக் கும்தான்”

“அண்ணா! நுளம்புச் சுருளை இதிலை கொழுத்தி வைக்கட்டுமா?”

நிமிடத்திற்கு நிமிடம் ஒரே ‘அண்ணா’ புராணமாக இருந்தாள்.

“எடியேய் போய் படடி கெதியா” என்றாள் மங்கை.

“அம்மா! நித்திரை வருகுதில்ல.”

“கொஞ்ச நாளைக்கு அப்பிடித்தான் இருக்கும்.”

“போம்மா!”

யோகன் அன்று அப்பாவுடைய நினைவுகளுடன் உறக்கத்திற்குப் போனான். விடியற்புறம் நாலு மணி இருக்கலாம். ஒரு கையில் விளக்கும், மறுகையில் தட்டமும் கொண்டு அப்பா பூ புடுங்குகின்றார். தேவாரம் அப்படியே காற்றில் எழுந்து வந்து இவன் காதில் விழுகிறது. மெய் மறந்து போகின்றான். பக்கத்து வீட்டிலே மாடுகள் சாணி போடும் சத்தமும்இ தொடர்ந்து பால் கறக்கும் ஓசையும் கேட்கிறது. “தம்பி யோகன்இ ஒருக்கா எழும்பு. பாம்பு ஒண்டு பூமரங்களுக்கிடையிலை நிக்குது” அப்பாதான் கூப்பிடுகின்றார். திடுக்கிட்டு கண் விழிக்கின்றான். பிரமை. அப்படியே முற்றத்தை எட்டிப் பார்க்கின்றான். பூ மரங்களற்று மொட்டையாகிப் போவிட்ட பூமியிலிருந்து ஒரு சாரைப் பாம்பு நெளிந்து நெளிந்து தெரு வீதிக்குள் போக எத்தனிக்கிறது. பயந்து போய் விட்டான் யோகன்.

அதன் பிறகு யோகனுக்கும் நித்திரை வரவில்லை. நிலவு பால் போல எறித்தது. எழுந்து நடமாடித் திரிந்தான். சீதளக் காற்று வேப்பம் பூ வாசனையுடன் மெல்லத் தழுவிச் சென்றது. குடிசைக்குள் காலடி எடுத்து வைத்து மாமாவை எட்டிப் பார்த்தான். மாமா குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

*** *** ***

மஞ்சுவின் கலியாண எழுத்து, வெய்யில் தணிந்த ஒரு மாலை நேரப் பொழுதில் நடந்தது. ஆடம்பரமில்லாமல் ஊரில் இருந்த கொஞ்சப் பேரின் சீர்வாதத்துடன் அவளின் வாழ்க்கை தொடங்கியது.

மங்கையைக் காட்டிலும் இராமலிங்கத்தாரே மகிழ்ச்சியில் இருந்ததாகப்பட்டது. குழந்தை களைக் கூட்டி வைத்துக் கதைகள் பல சொல்லி, பல வினோதமான நொடிகளும் போட்டார். தியாகி திலீபனின் கதை அன்றைய கதைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்தது. கோடை காலமாதலால் பொழுது நீண்டு கொண்டே போயிற்று. முற்றத்தில் கதிரைகளைப் பரப்பிஇ புகையிலை பாக்குப் போடுவதும் தேநீர் அருந்தி சிரிப்பதுமாக விருந்தினர்கள் இருந்தார்கள். இடையிடையே அரசியலும் வந்து போயிற்று. இராமலிங்க, யோகனை கை ஜாடை செய்து கூப்பிட்டார். ‘எல்லாம் நல்லபடி முடிந்து விட்டன. வா’ என்று கூட்டிக் கொண்டு குறுக்கு வேலிப் பக்கமாகச் சென்றார். பயந்து பயந்து அடியெடுத்து வைத்தான் யோகன். ‘அங்கை பார்!’ என்று அடுத்த வளவிற்குள் கை நீட்டினார் இராமலிங்கம். அடுத்த வளவின் முள்ளுப் பற்றைக்குள் சாரமொன்றின் பகுதி ஒன்று சிக்கியிருந்து காற்றினுள் படபடத்தது. அது கதிரவேலு கடைசியாக அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதிதான்.

யோகன் நிமிர்ந்து மாமாவைப் பார்த்தான். அவன் பார்வையில் கேள்வி தொக்கி நின்றது. இராமலிங்கம் ‘மாம்’ என்பது போல் தலையை ஆட்டினார்.

“அப்பா உயிருடன் திரும்பி வருவார் எண்டு அம்மா காத்திருக்கின்றாள். அவளின்ர காத்திருப்பு அப்பிடியே இருந்து விட்டுப் போகட்டும். நீ ஒண்டும் சொல்லிப் போடாதை யோகன்.”

யோகனிற்கு கண்கள் முட்டின. இராமலிங்கத்தார் அவனைக் கட்டிப் பிடித்து தழுவிக் கொண்டார். அதுவே யோகனுக்கும் இராமலிங்கத்தாருக்குமான கடைசித் தழுவலாக இருந்தது.

கலியாண எழுத்து நடந்து, இரண்டாம் நாட்காலையில் மாமாவிற்கு தேநீர் குடுப்பதற்காக குடிசைக்குள் நுழைந்தபோது அவர் இறந்து கிடப்பதை மஞ்சு கண்டாள்.

இராமலிங்கத்தின் சடலத்திற்கு கொள்ளி வைத்ததால் மேலும் ஒரு மாதம் நின்றுவிட்டுப் போவதென யோகன் முடிவு செய்தான். கிருஷ்ணதேவாவும் அவனுடன் தங்கிக் கொண்டான். பாலச்சந்திரனும் திருக்குமாரும் குறிப்பிட்ட நாளில் திரும்புவதென முடிவு செய்தார்கள்.

மங்கை தனக்குள்ளாக கதைத்துக் கொண்டு விசர் பிடித்தது போலத் திரிந்தாள். சில மணி நேரங்கள் மகிழ்ச்சி. பின் மீண்டும் துயரம். ஒவ்வொரு தடவையும் பழைய நினைவுகளிலிருந்து தப்பித்து வெளியே வர அவள் முயற்சிக்கும் போதும் ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உள்ளே இழுத்து விடத்தான் செய்கிறது.

‘ஊரிலை இனசனத்தோடை இருக்கேக்கை போய் விட வேண்டும்’ என்று இராமலிங்கம் சொன்னதில் ஏதாவது அர்த்தம் இருக்கலாம் என அவள் நினைத்தாள். அங்கேதான் அவளது சிந்தனைக் கப்பல் இப்போது நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றது. ஒரு தேவாரப் புத்தகமொன்றை சாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதே பழைய கதிரைக்குள் முடங்கிக் கிடக்கின்றாள்.

ரேவதியும் மஞ்சுவுமாக குசினிக்குள் இருந்த மேசை ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து விறாந்தையினுள் வைத்தார்கள்.

புத்தகத்தினின்றும் கண்களைத் தாழ்த்தி என்ன நடக்கின்றது எனப் பார்த்தாள் மங்கை.
மாமாவின் படமொன்றைக் கொண்டு வந்து மேசைமீது வைத்து விட்டு குத்து விளக்கொன்றைக் கொழுத்தி வைத்தாள் மஞ்சு. யோகனது பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுமாக முற்றத்திலே ஓளித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கதிரையை விட்டெழும்பிய மங்கை படுக்கையறைக்குள் சென்று சூட்கேசினுள் கிளறி ஏதோ ஒன்றை எடுத்தாள். அது கதிரவேலுவினுடைய ஒரு பழைய படம். அதைக் கொண்டு வந்து இராமலிங்கத்தின் படத்திற்குப் பக்கத்தில் வைத்து விட்டு, குத்து விளக்கினுள் மேலும் எண்ணெயை ஊற்றினாள். உள்ளேயிருந்து வந்த மஞ்சு அம்மாவின் செய்கையைத் திகைப்புடன் பார்த்தாள்.

“அம்மா! அம்மா!! இஞ்சை ஓடி வாங்கோ” என்ற அனுவின் குரல் கொட்டிலிற்குள் இருந்து கேட்டது. “பிள்ளை, ஒருக்கால் எட்டிப் பார். ஓடிப் பிடிச்சு விளையாடினதுகள். விழுந்து போச்சுப் போலக் கிடக்கு” என்று ரேவதியைப் பார்த்து மங்கை சொன்னாள்.

கொட்டிலிற்குள் சென்ற ரேவதியும் மஞ்சுவும் மூக்கைப் பொத்தியபடி போன வேகத்தில் திரும்பினார்கள்.

“ஒரே மணம். புழுத்த நாத்தம். ஏதோ செத்துக் கிடக்குது போல.”

“அண்ணா, மூக்குக்கு துணியைக் கட்டிக் கொண்டு போய் பாரண்ணா.”

மூக்கிற்கு லேஞ்சியைக் கட்டிக் கொண்டு கொட்டிலிற்குப் போன யோகனும் கிருஷ்ணாவும்இ வரும் போது ஒரு பித்தளைக் குடத்துடன் வந்தார்கள். முற்றத்திலே அதைத் திருப்பிக் கவிட்டுக் கொட்டினார்கள். உள்ளேயிருந்து நாட் பட்ட சோறு கறியள் எல்லாம் கூழாம் பாணியாக வந்து வெளியே விழுந்தன. இடையிடையே நனைந்து ஊதிப் பருத்த பச்சை சிவப்பு மருந்துக் குழிசைகள் ஏராளமாகக் கிடந்தன. அவற்றிலிருந்து கொழுத்த புழுக்கள் நெளிந்து நெளிந்து வெளியே வந்து கொண்டிருந்தன.

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *