இரண்டாவது மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 4,468 
 
 

எனக்குத் தெரிந்து தாத்தா இப்பொழுது மூன்றாவது முறையாக இறந்திருக்கிறார். பஸ் எரிப்பில் உயிர் துறந்தவர்கள் எண்ணிக்கை பதினொன்றைத் தொட்டதாக ‘தமிழன்’ நாளேட்டில் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். கட்சித்தலைவரொருத்தர் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறபோதெல்லாம், கொஞ்சம் நிம்மதியாக தும்மணுங்கிறதுக்காக பத்து ஏக்கர் பரப்பில் சின்னதாக வீடொன்றைக் கட்டிவைத்திருந்தார். சின்னவீடென்றாலும், காவலுக்கு ஓர் ஆள் வேண்டுமில்லையா? ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஆள், அற்பசங்கைக்காக சாலையைக்கடக்க, அரசு பேருந்தொன்று இரண்டு நாளைக்குப் முன்பு மோதியதில், அங்கேயே அவனது ஆயுளும் முடிந்துபோனது. வார இதழொன்று, பஸ்ஸை விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுனர், ஆளுங்கட்சியின் வட்டச் செயலாளர் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு மொய் எழுதியதைப் படம்பிடித்து போட்டிருந்தது. விபத்துக்குள்ளான பேருந்துக்கு உபயோகிக்கபட்ட, டீசல் பாக்தாத்தில் வாங்கப்பட்டதென்றும், டில்லிக்குச் சென்ற அமைச்சரொருவர், கையோடு அதைக்கொண்டுவந்ததற்கு ஆதாரமிருப்பவாதாகவும், எதிர்கட்சிக்கு ஆதரவான தலைவரொருவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இரண்டுநாள் கழித்து தலைவர், ‘என்னைக் கொல்ல ஆளுங்கட்சியில் சதியென அறிக்கை வாசிக்க, தொண்டர்கள் மண்ணெண்ணெய் டின் சகிதம் கிளம்பிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தில் டைலர் பஞ்சாட்சரமும் கலந்து கொண்டாரென்கிற செய்திதான் எனக்கு நம்பமுடியாததாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

தாத்தாவை நடுவாசலில் கிடத்தியிருந்தார்கள். வீடு கொள்ள உறவினர்கள், தாத்தாவுடைய அந்திமக்கால நண்பர்கள், ஒருசிலகட்சிக்காரர்கள் அக்கம்பக்கத்து மனிதர்களென கூடியிருந்தார்கள். பாட்டிமாத்திரம் இடைக்கிடை ஒற்றைக்குரலில் திடீரென்று உரத்து ஒப்பாரிவைக்கிறாள். கண்ணாடிப்பெட்டியில் இருக்கும் தாத்தாவின் காதில் விழவேண்டுமென நினைத்திருப்பாள் போலிருக்கிறது. உடல் வெள்ளைத் துணியில் சுற்றிவைத்திருந்தது. முகத்தைக் கவனமாக தவிர்த்திருக்கவேண்டும்: தாத்தாவின் வழக்கமான முகமில்லை. கறுத்தும், இறுக்கமாகவும் இருந்தது; நெற்றியின் மத்தியிலிட்டிருந்த நாமம் முன் தலை வழுக்கையை ஆக்ரமித்திருந்தது, நெற்றி நிறைய வரி வரியாய்க் கோடுகள். தாத்தாவுக்கென எழுதபட்ட விதியை அங்குதான் பதிவு செய்திருக்கவேண்டும். கோடுகள் கொஞ்சம் ஆழமானதாகவே இருந்தன. தாத்தா பத்திரமாக சேமித்துவைத்திருக்கும் கிராமபோன் தட்டுகளை வாசிக்கிற ஊசிகள் ஒருவேளை அவற்றில் எழுதியிருப்பதென்னவென்று வாசிக்கக்கூடும். ‘தாத்தாயணத்திற்கும்’ நிறைய காண்டங்கள் உண்டென்று நம்புகிறேன்: பிறந்தபோது தேவர்கள் பூமாரி பொழிந்திருக்கலாம், வில்லொடித்து பாட்டியை மணமுடித்திருக்கலாம், கோசலை, கைகேயி, மந்தரை, இராவணனென அவரோடு சம்பந்தபட்டவர்கள், இக்கோடுகளிடையேதான் எங்கோ ஒளிந்திருந்திருக்கக்கூடும். கண்கள் பல்லாகுழிபோலவிருக்க, விழிமடல்களிரண்டும் தாழம்புபோல வெக்கையில் பழுத்திருந்தன; வாயுடன் கன்னமிரண்டையும் சேர்த்துப்பார்க்க, வெகுநாட்களாக பின்வாசலில் கணுமரமாய் பட்டுப்போய் நின்றிருந்த முருங்கைமரத்தின் ஞாபகம். தாத்தாவின் கன்னம் மிருதுவானது, ஒருவகையில் சொரசொரப்பாக்கிய இரப்பர் ஏடுபோல. ஒரு சில சந்தோஷக் கணங்களில் எனது தலையைப் பாந்தமாக அவரது கன்னத்தில் அணைத்து வாங்கிகொள்கிறபோது அவர் உபயோகிக்கும் காட்டமான மூக்குப்பொடியின் வாசம் வேட்டி, சட்டை, பாடி, துண்டு என எங்கும் பிரவேசித்து நித்திரைகொண்டிருக்கும், நித்திரைக்கு இடையூறுசெய்பவர்களை சட்டென்று கைகொள்ள அணைத்துகொள்ளூம். அவ்வாசம் தாத்தா உடலில் இப்போதும் இருக்குமாவென என்னை நானே கேட்டுக்கொண்டேன். பிறகு இன்னொரு கேள்வி: தாத்தா உடலைச் சுற்றியிருப்பது கதர்த் துணியா? காடாத் துணியா என்பது அது, எனக்கு நினைவு தெரிந்து கதர்தான் உடுத்துவார், ‘காதிபவன்’களில் தைத்து விற்கிற சட்டைகளென்றால் முகத்தைச் சுளிப்பார். ஒன்றே முக்கால் மீட்டர் எடுக்கவேண்டும், எடுத்துவருவார். எங்கள் வீட்டிலிருந்து நான்குவீடு தள்ளியிருக்கிற பஞ்சாட்சர நாய்க்கர்தான் அவரது பிரத்தியேக தையல்காரர். அவர் ஜாக்கெட் ஸ்பெஷலிஸ்ட். ஆண்கள் வாடை கூடாது. விதிவிலக்காக தாத்தா சட்டையை மட்டும் மறுபேச்சின்றி தைத்துக்கொடுப்பார். துணியை வீடுதேடிவந்து வாங்கிப்போவார், கூடவே மரிக்கொழுந்து செண்ட் வாசனையும் வரும். பிறகு மூன்று நாட்கள் கழித்து அவரே எங்கள் வீட்டு நடைவரை வந்து கொடுத்துவிட்டுப்போவார், மரிக்கொழுந்து செண்ட் வாசனைமாத்திரம் நடையைவிட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது. காதில் சுண்டுவிரல் கணக்கில் ஒரு முனை மழுங்கிய பென்சிலும், கழுத்தில் மீட்டர் ரிப்பனுமாக, கால்களை மறைத்த லுங்கியுடன் தையல் எந்திரத்தை தடதடவென மிதித்தபடி இருப்பார். நான் சின்னப் பையனாக இருந்தசமயம், விலகியிருந்த லுங்கியூடாக தெரிந்த தூண்மாதிரியான அவரது இடதுகாலைப் பார்த்து அரண்டது நிஜம். சுருள்சுருளாய் தலைமுடியும், உதட்டுக்கு மேலே பென்சிலில் கோடு போட்டதுபோல மீசையுமாய், கண்களில் கறுப்புக்கண்ணாடியுடன் தலைக்குமேலே மாட்டியிருக்கும் போட்டோவில் உள்ள எம்ஜிஆர்போல தன்னைக் காண்பித்துக்கொண்டிருப்பவருக்கு, தண்டனை அதிகம்போல தோன்றியது. தாத்தா பொடிமட்டையைத் தட்டி, ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கிலிழுத்தக் கையோடு இரண்டுமுறை, வீதியில் போகிறவர்களை பயமுறுத்துவதுபோல தும்மி முடித்துவிட்டு, ‘பஞ்சாட்சரம் லேசுபட்டவனல்ல’ என்று சொல்கிறபோது மூக்கு ஒழுகும். அதைத் துண்டில் துடைத்தபடி, ‘ஜாக்கெட்டில் சொக்குபொடி போட்டுத் தைக்கிறானென்பதாக ஊர்முழுக்கப் பேச்சு’, என்பார். தாத்தா உடலை வெள்ளைத் துணியில் சுற்றியிருந்ததால், பஞ்சாட்சரத்தின் சட்டை எதையும் அவருக்கு அணிந்திருப்பார்களா என்பது எனக்கு நானே கேட்டுக்கொண்ட மூன்றாவது கேள்வி.

தாத்தாவின் முகத்தை கிட்டத்திற் பார்க்க ஆசை. சாகும் வரை, தன்மீது மர்மபுற்றொன்றை வளர்த்துக்கொண்டு உழன்றுவந்தவர். அவரது கண்களில் புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பின் தேடலைக் கவனித்திருக்கிறேன், உதடுகளிலும் சேட்டைகளுக்குப் பஞ்சமிருக்காது. கக்கிய மாணிக்கத்தைக் காலக்கிரமத்தில் கண்டுபிடித்தாகவேண்டும் என்பதுபோல ஒருவிதப் பதட்டமும், பரபரப்பும் அவரது தேடலில் உண்டு. அதற்காக வனப்பிரவேசம் மேற்கொள்ளவும், அங்கே காடுமேடென்று அலையவும் அவர் தயார். இந்தக் கடைசிநேரத்திலாவது, அவரது மர்மப்புற்றை இடித்துப் பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். ‘அபயம்! அபயம்! குரல் தாத்தாவுடையதுதான். ஆச்சரியமாகவிருந்தது, தாத்தா பிறர்சார்ந்து இயங்கும் நபரல்ல. சுடுகாடுவரை நடந்துசென்று தனக்கான கொள்ளியை வைத்துக்கொள்வேனென்பார். கால்மாட்டில் தலையைச் சாய்த்தபடி உட்கார்ந்திருக்கும் பாட்டிக்குத் அவரது குரல் கேட்டிருக்குமா? தாத்தாவின் முகத்திலிருந்து பக்கம்பக்கமாக நிறைய படிக்கிறேன். குற்றப்பத்திரிகையா, தீர்ப்பா குழப்பமாக இருக்கிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? நானுங்கூட ஒருவகையில் சாட்சியாக இருக்கலாம், யாருக்குத் தெரியும்? இந்தவழக்கில், தாத்தாவைச் சுற்றிக் கூடியிருப்பவர்களின் பங்கென்ன? முகமற்ற அவர்களது தலைகளைப்பார்க்க, தாத்தாவின் வழக்கில் பார்வையாளர்களாக இருக்கக்கூட இவர்களுக்கு யோக்கியதையில்லையென நினைக்கிறேன், ஒருவேளை அப்படியுமிருக்குமோ தாத்தாவை எரித்த தீ அவர்களது முகத்தையும் எரித்திருக்குமோ? சட்டென்று இருள் கவ்வுகிறது. தாத்தாயில்லாத உலகம் பகலுக்கானதல்ல என்பதுபோல. இனி புலருதலிருக்காதோ? உட்கார்ந்திருந்த கூட்டமெல்லாம் புறப்பட்டுப் போய்விட்டது பாட்டி உட்பட. அம்மா, எனது சகோதரி, வெளியூரிலிருந்து துக்கத்திற்கு வந்திருந்தவர்களுக்கு, சமயறையில்வைத்து ரகசியமாய் காப்பிக்கொடுத்துகொண்டிருந்த எனனோட அத்தை..ம் ஒருவருமில்லை. கொளுத்திவைத்திருந்த வத்தியும், மாலையில் வாடிக்கெண்டிருந்த பூக்களின் வாசமும் கலந்த மூட்டத்தில் தாத்தாவும் நானும். சட்டென்று எழுந்து நிற்கிறார், கண்களில் இமைத்தலில்லை, விரல்களிலோ, கால்களிலோ அசைவில்லை, விறைத்துக்கொண்டு எழுந்து நிற்கிறார். முகத்தில் சற்றுமுன்பிருந்த கறுமையில்லை, இரத்தம் பாய்ச்சிய சிவப்பு. மறுபடியும் உயிரோடு எனக்குமுன்னே. இரத்தமும் சதையுமாக. உயிரோடிருந்தாலே இரத்தமும் சதையும்ந்தானா? புலனுணர்வுகளை கணக்கில் கொள்ளமாட்டார்களாமா? கண்கள், செவி, மூக்குமாக என்று சொன்னால் என்ன குடிமுழுகிப் போயிடும்? கேட்பது நானல்ல தாத்தா, என்னைத்தான் கேட்கிறார். உங்களிடம் பதிலிருந்தால் சொல்லுங்களேன். பாட்டி நீ சொல்லு.. எங்கே பாட்டி? பாதிக் கண்கண்களை மூடியபடியிருந்தாள், விழியோரங்களில் உலராதக் கண்ணீர், அவளது வெள்ளை இரவிக்கையும், தாலிக்கயிறும் ஈரமிட்டுக்கிடக்க, நூற் சேலையின் விலகிய முந்தானையும், செவசெவவென்று நீட்டிய முழங்கால்களுமாக அமர்ந்திருக்கிறாள். கால்களை நீட்டுகிறாள். வலதுகையை உயர்த்தியவள், தனது இடதுகை மடக்கி கக்கத்தினை ‘வறுக்வறுக்கென்று’ கூச்சமின்றி சொறிந்துகொள்கிறாள், பின்னர் தரையில் முந்தானையை விரித்துப்போட்டபடி படுக்கிறாள்.

பாட்டி! ‘தாத்தா திரும்ப வந்திருக்கார், எழுந்திரு. இல்லை, அவள் அங்கில்லை. எழுந்துபோயிருந்தாள். சற்று முன்புவரை தாத்தாவினுடைய காலடியில் சருகுபோலக் கிடந்தவள், எங்கே போய்த் தொலைந்தாள்.

அவளைத் தேடாதே. அதனால் எந்தப் பிரயோசனமுலில்லை. நான் அவளைவிட்டு விலகி வெகுதூரம்வந்திருக்கிறேன்.

இல்லைத் தாத்தா. நீங்கள் எங்கும் போகலை. இங்கேதான் இருந்திருக்கணும், இனியும் இருப்பீங்க. விலகி வெகுதூரம் போனதென்பது கற்பனை. ஒருவேளை எல்லோரும் சொல்றதுமாதிரி, மரணத்தில் வாசலை மிதிச்சுட்டுத் திரும்பியிருக்கலாம்.

ஆச்சரியமாயிருக்கிறதா? உலகம் உருண்டை என்கிற உண்மையையாவது ஒப்புக்கொள்கிறாயா இல்லையா? நாம் ஒரே புள்ளியில் இருப்பதுபோல தோற்றமிருப்பினும், நான் முடிவில் இருக்கிறேன், நீங்கள் ஆரம்பத்திலிருக்கிறீர்கள். தாத்தாச் சொல்வதில் உண்மை இருக்கலாம்.

பாட்டி சின்னவயதில் வெள்ளைவெளேரென்று இருப்பாளாம். அப்போது புதுச்சேரி, பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழ் இருந்துவந்தசமயம். புதுச்சேரியிலிருந்து, வில்வண்டி கட்டிக்கொண்டு, யூனியன் பிரதேசத்திலிருந்த(1) கிராமமொன்றில் நடந்த உறவினர்வீட்டு திருமணத்திற்குச் சென்றிருக்கிறார்கள். பாட்டி நிறைய நகைகளுடன், பார்க்க லட்சணமாகவும் இருந்திருக்கிறாள். எல்லையிலிருந்த சுங்க இலாகா அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டார்களாம். எசமானிஅம்மாவை நகையுடன் வேலைக்காரனொருவன் கடத்திபோவதாக நினைத்து விட்டார்கள். பாட்டியை விசாரிக்க, அவள் தத்துபித்தென்று உளறுகிறாள். தாத்தாவைப் பிடித்துவைத்துக்கொண்டார்கள். பிறகு புதுச்சேரியிலிருந்த சில உறவுக்கார பெரிசுகள் போய் இரண்டுபேரையும் மீட்டுவர வேண்டியிருந்திருக்கிறது. தாத்தாவுக்கு அவமானமாகப்போய்விட்டதாம். கொஞ்சநாள் வீட்டிலேயே அடைந்துகிடந்திருக்கிறார். அவரது முதல் மரணம் அப்போதுதான் சம்பவித்ததாகச் சொன்னார்.

நான் அப்போது இளைஞன். கல்லூரியில் படித்திருந்த நேரம். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். நண்பர்களுடன் அரட்டைஅடித்துவிட்டு ஒரு புதன்கிழமை இரவு வீட்டிற்குத் திரும்பினால், தாத்தாவினுடைய அறையிலிருந்த வானொலியில் உங்கள் விருப்பம் நடபெறுவதன் அடையாளமாக, பாடலை விரும்பிக்கேட்டிருந்ததாக வழக்கம்போல அறிவிப்பாளர், பெயர்களை வாசித்துக்கொண்டிருக்கிறார். என் அறைக்குள் நுழைய இருந்தவனைத் தடுத்து நிறுத்தியவள் அம்மா.

செந்தில், எங்க சுத்திட்டுவர? ரேடியோவைக்கூட நிறுத்தாமல் உங்க தாத்தா மொட்டைமாடிக்குப் போயிட்டார். மார்கழிமாசப் பனியில நனைஞ்சபடி இந்த நேரத்துல அங்க உட்கார்ந்து என்ன பண்றார்? போய் பார்த்துவா.

மாடிப்படிகளில் கால்வைத்தபோதே, பனியின் தாக்கத்தை உணரமுடிந்தது. மாடியை அடைந்தபோது சிலுசிலுவென்று ஊதற்காற்று. அடித்துக்கொண்டிருந்தது. சன்னமான மஸ்லின் துணிபோல நிலவொளி படிந்திருந்தது. பார்வையின் விஸ்தீரணத்தை ஆக்ரமித்துகொண்டு ஆகாயம். நட்சத்திரங்களற்ற நிலாக்காலம். தாத்தா நின்றபடி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.. நிலாவின் முதுகை எட்டிபார்த்துவிடவேண்டுமென்பதுபோல பார்வை.

அவர், தனக்குத்தானே பேசிக்கொள்வதைப்போல உணர்ந்தேன்.

இது நிலாக்காலம். நட்சத்திரங்கள் மரணித்திருக்கின்றன அல்லது அவை இருந்தும், இல்லாததுபோலவொரு மாயவெளியை, பொய்த்தோற்றத்தை ஏற்படுத்திருக்கின்றன. அதற்கான காலத்தில், அவை மீண்டும் உயிர்பெற்றெழும், வீரியத்துடன் பிரகாசிக்கும்..

தாத்தா.. யாரிடம் பேசறீங்க..

உங்கிட்டதான்.. இங்கே வா பக்கதுலவா. நீ நிஜமாண்ணு தெரிஞ்சுக்கணும். சித்தெ முன்னே நான் இறந்திருந்தேன். உயிர்பிழைச்சு நில நொடிகள்தான் இருக்கணும்.

தாத்தா, எங்கிட்ட இதுமாதிரி பேசினா நான் ஓரளவு புரிஞ்சிக்குவேன். மத்தவங்க அப்படி நினைக்க மாட்டாங்க..

உனக்குத் தெரியாது, மரணம் பலருக்கும் பலமுறை நேருது. அதைப் புரிஞ்சுக்கிறதுக்குப் பக்குவம் வேணும். என்னாலகூட ஒரு சில மரணங்க¨ளைத்தான் அடையாளபடுத்த முடிஞ்சிருக்கு. உயிர், ஆன்மா, மனம் எல்லாம் ஒன்றுதான். உயிர் பிரிந்துவிட்டதென்று ஒரு புறமும், ஆன்மாவிற்கு மரணமில்லையென்று மறுபுறமும் பேச நான் தயாரில்லை, உண்மையில் இரண்டுமே சாத்தியம். அதாவது நட்சத்திரங்களைப்போல. அமாவாசையும் பௌர்ணமியும் நட்சத்திரங்களின் சிலுவைமரணங்களையும், உயிர்த்தெழல்களையும் அடையாளபடுத்துகிற வெளிகள். அதுபோல நமது மனங்களுக்கும் அதற்கான வெளிகளிருக்கின்றன. அந்த வெளிகளோடு பரிச்சயம் ஏற்படுகிறபோது, நமது மரணமும், உயிர்த்தெழலும் உணரப்படும்.

உங்களுக்கு?

நானறிந்து, இது இரண்டாவது மரணம்.

என்ன யோசனை? உங்களுக்கு நேர்ந்த முதல் மரணத்தைப்பத்திச் சொன்னீங்க, உங்க மூன்றாவது மரணத்திற்கான காரணமோ, எல்லோரும் அறிந்ததுதான். எனக்கு உங்கள் இரண்டாவது மரணம் பற்றித் தெரிஞ்சுக்கணும்.

எனது மூன்றாவது மரணத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?

நீங்க பயனம் செய்த பஸ் எரிக்கபட்டதில் இறந்ததுதானே உண்மை?

வழக்கம்பொல தெற்றுப்பல் தெரிய சிரிக்கிறார்.

தாத்தாவின் அறையை எனதாக்கிக்கொண்டு இரண்டுவாரம் ஆகப்போகிறது. மாதக் கடைசி, பைக்குக்கு பெட்ரோல் போடவேண்டும். மனைவியிடம் கேட்டேன்:

அம்மாவும் பாட்டியும் எங்கே? நூறு ரூபாய் இருந்தா கொடு, பெட்ரோல் போடணும்.

எங்கிட்டே ஏது. மளிகைச் சாமான் கொஞ்சம் தேவைப் படுது, அதையே மாசம் பொறந்து வாங்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறேன்.

கல் நெஞ்சக்காரி, கையை விரிக்கிறாள். தாத்தா பணத்தை வைக்கிற இடங்களில் முயற்சித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்குக் கைசெலவுக்குப் பணம் வேண்டுமென்றால், தாத்தாவிடந்தான் போய் நிற்பேன். பணத்தை ஓரிடமாக வைத்துக் கொள்கிற பழக்கம் அவருக்கில்லை. மேசையில், முகச்சவர உருப்படிகளுக்கிடையில், அலமாரி டிராயரில், அவரது ஆஸ்மா மற்றும் சர்க்கரைவியாதிக்கான மருந்துகளோடு, ஒருவாரத்திற்குமுன் திரும்பிய சலவைத் துணிகளுக்குக் கீழே, இரண்டு நாளாகப் போட்டுக்கொண்டிருக்கும் சட்டையில், அவரது இடுப்பைஅலங்கரிக்கும் சிங்கப்பூர் பெல்ட்டில்… அவரது துணிகளின் கீழே தேடுகிறேன், அவரது உருப்படிகளோடு உருப்படியாக இரவிக்கையொன்று, பாட்டியுடையதாக இருக்கவேண்டும். திட்டுத் திட்டாக பொடிக்கறைகள், பொடியின் வாடையோடு கலந்து ஒரு வித அத்தர்மணம் – மரிக்கொழுந்து செண்டின் வாசம். இரவிக்கையை மாத்திரம் பிரித்தெடுத்து வாசலுக்குக் கொண்டுவந்து எரித்தேன். என்ன செய்கின்றீர்கள், மனைவி கேட்கிறாள், தாத்தாவின் இரண்டாவது மரணத்திற்கு கொள்ளிவைக்கிறேன், என்கிறேன்.

நன்றி: யுகமாயினி பிப்ரவரி இதழ்

1. 1947க்கு முன் ஆங்கிலேயர்வசமிருந்த இந்தியப் பகுதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *