இரண்டாவது கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 3,367 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைக்கு ஒரு தலையணையை வைத்துக் கொண்டு இரவு பத்தரை மணிக்கெல்லாம் திண்ணையில் ஒரு ஜமக்காளத்தை விரித்துச் சுவாமிநாதன் படுத்துவிட்டான். அவன் பக்கத்தில் அவனுடைய கடைசிப் பெண் காமு படுத்துக் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் தூங்குமுன் அவள், “தூங்கறச்சே என்னைத் தனியா விட்டுவிட்டுப் போயிடாதே அப்பா” என்று அப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தாள். சுவாமிநாதன் தன் தலையைத் தூக்கி முழங்கை மேல் வைத்துத் தாங்கிக் கொண்டு காஸ்லைட் வெளிச்சத்தில் காமுவின் முகத்தையே பார்த்தவனாக என்னவெல்லாமோ பற்றி யோசித்தான். முப்பத்தைந்து வருஷம் வாழ்க்கையில் அடிப்பட்டவனுக்கு யோசிக்கவா விஷயம் அகப்படாது? ஆனால் அந்த நிலையிலே அவனுடைய யோசனைகளுக்கு முடிவே இராது போலத் தோன்றிற்று.

காஸ்லைட்டுக்கு அடியில் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்த கோஷ்டியில் ஒருவன், “தூக்கம் வராவிட்டால் இப்படி வந்து உட்காரேன், சாமா. இங்கேயும் ஒரு கை ‘வாண்டிங்’” என்றான்.

“அட பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்று சொல்லுகிறாயே? அவனுக்கு என்னமாடா இன்னிக்குத் தூக்கம் வரப்போகிறது?” என்றான் வேறொருவன்.

பேசிய இருவரும் யார் யார் என்றுகூடச் சுவாமிநாதன் பிரக்ஞையில் தட்டவில்லை; ”குழந்தை முழிச்சிண்டால் நான் பக்கத்தில் இல்லை என்று அழும்” என்று தனக்கு அப்போது சீட்டாட மனம் இல்லாததை ஒரு காரணம் சொல்லி விளக்கினான்.

“நடக்கட்டும். இன்னிக்கு ஒருநாள்தானே இந்த வாழ்வு? நாளை முதல் அந்தப் பொண்ணையார் கவனிக்கப் போறா!” என்று கேலியாகச் சொன்னான் சுவாமிநாதனுக்கு மிகவும் ஆப்தனான நண்பன் ஒருவன். இதைக் கேட்டவர்கள் எல்லோரும் லேசாகச் சிரித்துவிட்டு மறுபடியும் அப்போதைய முக்கியமான காரியமாகிய சீட்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வ சாதாரணமான இந்தக் கேலிப்பேச்சும் சிரிப்பும் சுவாமி நாதன் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தன. அதுசமயம் பெண் வீட்டிலிருந்து, “எல்லாருக்கும் சாப்பாடாகிவிட்டதா? வேறு ஏதாவது தேவையா?” என்று விசாரித்துக்கொண்டு ஒருவர் வந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பெண்ணின் தகப்பனார் தமக்கு மாப்பிள்ளையாகப் போகிறவர் அந்தச் சந்தடியில் அப்படிப் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு, “இங்கே தூங்க முடியாதே! நம்மாத்து மாடி அறையிலே படுக்கைபோடச் சொல்றேனே!” என்று உபசாரமாகச் சொன்னார். சுவாமிநாதன், “வேண்டாம். இங்கே யாராவது வருகிறவர்களைப் பார்க்கவேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டான். அவன் அப்பொழுது தனிமையைத்தான் வேண்டினான்; ஆனால் அதைச் சொல்லிக்கொள்ளத் தைரியம் இல்லை. அன்று அவர்கள் வீட்டு மாடியில் தன் பெண்ணையும் எடுத்துக்கொண்டு போய்ப்படுத்துக் கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை. இரண்டு நிமிஷம் வேறு என்ன சொல்லலாமென்று யோசித்துக்கொண்டு நின்றுவிட்டு அவன் மாமனார், “உள்ளே போய் விசாரிக்கிறேன்” என்று முணுமுணுத்து விட்டுப் போய்விட்டார்.

முதலில் கேலி செய்த ஆப்த நண்பன் மறுபடியும் கேலி செய்தான்; “ஏண்டா சாமா? அவாத்து மாடியிலே போய்ப் படுத்துக்கக் கூடாதோ? அந்தப் பிராமணராகவா வந்து சொல்லியிருக்கப் போறார்? அவருக்கு அவ்வளவு தெரியாது. ஆத்திலேயிருந்து வந்திருக்கும். நீ வரலைன்னு சொன்னதைத் தெரிஞ்சுண்டு கோவிச்சுக்கப் போறாடா! போ!”

சுவாமிநாதன் இந்தக் கேலிக்கும் பதில் சொல்லவில்லை. அவனும் இதற்கு முன்னெல்லாம் எவ்வளவோ கல்யாணங்களுக்குப் போய்க் காஸ்லைட் அடியில் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டே எல்லாரையும் கேலி செய்தவன்தான். இந்த மாதிரிக் கேலி செய்யப்பட வேண்டிய காலம் ஒன்று வருமென்று அவன் அப்பொழுதெல்லாம் கனவிலும் எண்ணியது இல்லை. அவன் மனைவி மூன்று குழந்தைகளைத் தன் தலையில் கட்டிவிட்டுத் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போய் விடுவாள் என்று அது நேருமுன் யாராவது அவனிடம் சொல்லியிருந்தால், அவன் நம்பியே இருக்கமாட்டான். அவன் வாழ்க்கையில் முக்கால் வாசிக்குமேல் ஏன் இருபத்து ஏழு வருஷங்கள்- அவளுடன் கழிந்தவை. அவனுக்கு எட்டாவது வயசிலே கல்யாணமாகி விட்டது. அவன் தாய் இறக்குமுன் தன் கடைசிப் பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண் குளிரப் பார்க்க வேணுமென்று எட்டு வயசிலேயே ஏற்பாடு செய்துவிட்டாள். ஆனால் அந்தக் கல்யாணம் நடந்து பத்து வருஷத்துக்குமேல் அவள் உயிருடன் இருந்தாள். அப்படியும் அவள் இறக்கும்போது அவள் மனத்தில் பெரிய குறை ஒன்று இருக்கத்தான் இருந்தது. சாமாவுக்குக் குழந்தை பிறக்குமுன் அவளுக்கு இறக்க மனமில்லை. ஆனால் காலன் அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டான். படிக்கவைத்துக் கல்யாணம் செய்வித்து மற்ற எல்லாமும் செய்தவர் அவன் முத்தண்ணாதான்.

மணி பதினொன்று அடித்துவிட்டது; அவர் இன்னும் வந்தபாடில்லை. அடுத்த ரயில் பதினொன்றரை மணிக்கு. அதற்கும் வராமல் இருந்து விடுவாரோ என்று சுவாமிநாதன் எண்ணும்போது அவனுக்குப் பகீரென்றது. ஆனால் வராதிருக்க நியாயம் இல்லை . வந்துவிடுவார்.

தனக்கு முதல் மனைவியாக வாய்த்திருந்தவள் தன் முத்தண்ணா வீட்டில் மன்னியால் பிரியமாக வளர்க்கப்பட்ட சிறுமி தான் என்று அவன் ஞாபகப்படுத்திக் கொண்டான். அநாதையாக விடப்பட்ட தூரபந்துதான் அந்தப் பெண். இருபத்தேழு வருஷம் அவளுடன் வாழ்ந்துவிட்டு இப்பொழுது அவளைப் பற்றி “முதல் மனைவி” என்று எண்ணும்படியான நிலைமை வந்துவிட்டது; அவளை இனி வரப்போகும் ஒருத்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி வந்துவிட்டது. அவள் ஸ்தானத்தில் வீட்டிலோ, உள்ளத்திலோ, வேறு யாரையும் அங்கீகரிக்க மனமில்லைதான். ஆனால் தன் குழந்தைகளை உத்தேசித்துச் செய்யப்பட்ட அந்தக் காரியம் அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்குமோ! கடவுளுக்குத்தான் வெளிச்சம். வருகிறவள் எப்படி இருப்பாளோ? பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தாள். பிறந்த வீட்டில் அவ்வளவாகச் சுபீக்ஷம் என்று சொல்லமுடியாது. பொறுப்புத் தெரிய வயசும் ஆகி இருந்தது. தம்பி தங்கைகள் மத்தியில் பழகி வளர்ந்தவள்தான். ஆனால் தன் குழந்தைகளை எப்படி நடத்துவாளோ!

சுவாமிநாதனுக்கு இளையாள் கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் பலபேரைத் தெரியும். அவர்கள் குடும்பங்கள் படும் அவஸ்தைகளும் தெரியும். ஆயிரத்தில் ஒன்று இரண்டுக்கு மேல் இரண்டாவது கல்யாணம் சரியாகப் பலிப்பதில்லை என்றும் தெரியும். இவ்வளவும் தெரிந்திருந்தும் அவன் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளத் துணிந்துவிட்டான். வேறு என்ன செய்வது?

வாசலில் குதிரை வண்டி வந்து நின்றது. முத்தண்ணாவும் மன்னியும் அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் சுவாமிநாதன் எழுந்து ஒன்றும் சொல்லாமல் அவர்களை எதிர்கொண்டு அழைப்பவன்போல் நாலடி முன்னோக்கி நடந்து நின்றான்.

“காலம்பற ரயிலிலேயே வரணும்னு பாத்தேன். முடியவில்லை…குழந்தைகளெல்லாம் சௌக்கியமா, சாமா?” என்று விசாரித்தார் முத்தண்ணா.

ஆனால் சாமிநாதனின் கண்கள் முத்தண்ணாவைச் சரியாகப் பார்க்கவில்லை . அவருக்குப் பின்னால் கையில் தன் பேரக் குழந்தையுடன் வந்துகொண்டிருந்த மன்னியைத்தான் பார்த்தான். மன்னியின் கண்கள் கலங்கியிருந்ததுபோல் அவனுக்குத் தோன்றிற்று. அவன் கண்களும் கலங்கின.

தாய் இருக்கும்போது கூட அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்ததெல்லாம் அவன் மன்னிதான். அவளுக்குக் கல்யாணமாகி வெகுநாள்வரையில் குழந்தை இல்லாமல் இருந்ததால் சுவாமி நாதனைத் தான் ஊராரும் அவளுக்கு அவளுடைய மூத்த பிள்ளை என்று சொல்லுவது வழக்கம். சுவாமிநாதனின் முதல் மனைவி இறந்ததற்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்திப்பது இதுதான் முதல் தடவை . தன் ‘மூத்த பிள்ளை ‘ மனைவியை இழந்து தவிக்கும்போதுகூட மன்னி வர இயலாமல் போய்விட்டது. அவளே அப்பொழுது படுத்த படுக்கையாக உயிருக்கு மன்றாடிக் கொண்டு இருந்தாள். இப்போதும் அவள் மிகவும் துர்ப்பலமாகத்தான் இருந்தாள். ஆனால், “சாமாவின் கல்யாணத்திற்குப் போகாமல் இருப்பதா?” என்று அவள் தன் உடல் நிலையையும் கவனிக்காமல் வந்திருந்தாள்.

உண்மையிலேயே சுவாமிநாதன் அவளை எதிர்பார்க்கவில்லை. கல்யாணம் செய்துகொண்டு இரண்டொரு நாளைக்கெல்லாம் தன் இரண்டாவது மனைவியுடன் கிராமத்துக்குப் போய்த் தன் மன்னியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்வது என்று அவன் உத்தேசித்திருந்தான். அவன் அதற்கு முன்னரே மன்னியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்க வேண்டியவன்தான். சாகக்கிடந்து பிழைத்த அவளை அவன் பார்க்கப்போகாமல் இருந்தது பெரும் பிசகே. ஆனால் ஆபீஸிலும் புது மானேஜர் வந்து ஏக ரகளையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகூட விடுமுறை என்று சொல்லிக் கொள்ளுவதற்கு இல்லை. அவன் கல்யாணத்துக்குக்கூட இப்பொழுது அவனுக்குக் கிடைத்திருந்த லீவ் இரண்டே நாட்களுக்குத்தான். அவன் தன் மன்னியைப் பற்றி முத்தண்ணாவுக்கு எழுதி விசாரித்து அறிந்து கொள்வதுடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று.

இப்பொழுது அவனுடைய மன்னியே எதிர்பாராத விதமாக வந்துவிட்டாள். அவளை நன்கு அறிந்த சுவாமிநாதனுக்கு அவள் அவனுடைய இரண்டாவது கல்யாண விஷயம் கேட்டு என்ன பாடுபட்டிருப்பாள் என்று ஊகித்துக் கொள்ளமுடியும். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ள அவன் தீர்மானிக்குமுன்னே பல தடவை தன் முத்தண்ணாவுக்கு எழுதிக் கேட்டான். அவர் ஒன்றிலும் பட்டுக்கொள்ளாமல், ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் கல்யாணம் செய்து கொண்டுவிடுவதுதான் சரி என்று தொனிக்கும்படியாக எழுதிவிட்டார். ஆனால் அவர் தம் தம்பிக்குப் பெண் தேடிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவராக இல்லை. ஜாதகம் எடுத்துக் கொண்டு தம்மிடம் வந்தவர்களையெல்லாம் அவர் பட்டணத்தில் இருந்த சுவாமிநாதனிடம் அனுப்பி விட்டார்.

ஒரு ஜாதகம் பொருத்தமாயிருந்தது. பட்டணத்திலேயே ரயில்வேயில் சொற்பச் சம்பளத்தில் வேலையாக இருந்தார் பெண்ணின் தகப்பனார். பெண்ணைப் பார்த்து விட்டுப் பிடித்திருந்ததால், இதை முடித்துவிடலாமா என்று முத்தண்ணாவுக்கு எழுதினான், சுவாமிநாதன். முத்தண்ணாவே பட்டணம் வந்திருந்து லௌகிகம் பேசவேண்டியதையெல்லாம் பேசி முகூர்த்தம் வைத்து ஏற்பாடு செய்துவிட்டுப் போனார். அப்போதும் தன் இரண்டாவது கல்யாண விஷயத்தைப் பற்றி மன்னி என்ன நினைக்கிறாள் என்று கேட்க அவனுக்குத் தைரியம் வரவில்லை .

முகூர்த்தம் மறுநாள். மன்னியும் வந்துவிட்டாள். அவளிடம் என்ன சொல்லுவது என்று சுவாமிநாதன் யோசித்துக்கொண்டு கண் கலங்கியவனாக நின்று கொண்டிருக்கையில், அவனுடைய மூத்த பெண் சரோஜா வீட்டுக்குள்ளிருந்து குதித்துக் குதித்து ஓடி வந்து அப்பா காலைக் கட்டிக்கொண்டாள். அவளுக்கு வயசு ஏழுதான் இருக்கும். ராமேசுவரம், ஆஸ்பத்திரி என்று போய்ப் பெற்ற குழந்தை அது. ஏற்கனவே அப்பாவுக்கு மிகவும் செல்லம்; தாயை இழந்த பின் கேட்கவேணுமா?

“நான் சித்தியோடெ பேசிண்டிருந்தேன், அப்பா!” என்றாள் சரோஜா.

அவள் வருகை சுவாமிநாதனுக்குத் தெய்வாதீனமாகப் பட்டது. “அடீ அசடே! இதோ பார்; யார் வந்திருக்கா பார். பெரியம்மா வந்திருக்காளே!” என்றான்.

அந்தப் பெரியம்மாவிடம் சரோஜாவுக்கு உயிர். அவள் சந்தோஷக் கூச்சலுடன் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் போய் அணைத்துக் கட்டிக் கொண்டாள். அவளுடைய பெரியம்மா தன் இடுப்பில் இருந்த குழந்தையைத் தனக்குப் பின்னால் வந்த தன் மாட்டுப்பெண்ணிடம் கொடுத்துவிட்டுச் சரோஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு, “சாமா, நீயும் படுத்துக்கோ. நாழியாயிடுத்து. நான் போய்ப் பொண்ணைப் பாத்துவிட்டு வறேன். காலம்பறப் பேசிக்கொள்ளலாம்…” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

“ஏன் அண்ணா , மணி வரவில்லையோ?” என்று கேட்டுக் கொண்டே காமு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்தான் சுவாமிநாதன்.

அவனுடைய முத்தண்ணாவும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, “மணி காலை ரயிலில் வந்தாலும் வருவான். இன்னிக்குக் கொஞ்சம் வேலையிருக்கு என்றான்” என்று சொன்னார். அதற்குள் அவர்தாம் முக்கிய சம்பந்தி என்று அறிந்து கொண்டு பெண் வீட்டார் ஆகாரம் கொண்டு வந்து வைத்துக் கொண்டு உபசாரம் பண்ணலானார்கள்.

“போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வா அண்ணா . நானும் சித்த படுத்துக்கறேன்” என்று சுவாமிநாதன் சொன்னான். முத்தண்ணா உள்ளே போனவுடன் ஜமக்காளத்தில் காலை நீட்டிக்கொண்டு படுத்துவிட்டான்.

ஆனால் தூக்கம் வருவதாக இல்லை . வருபவர் போகிறவர் சந்தடியும், மறுநாளைய காரியங்களுக்காகச் செய்யப்படும் அவசர ஏற்பாடுகளின் சந்தடியும் அவன் காதில் ஒலித்தன. மணி பன்னிரண்டாகியும் சாப்பாட்டுக்கடைகூட முடியவில்லை.

பெண் வீட்டிலிருந்து கனத்த அவசரமாக யாராவது ஒருவர் வந்து அகாரணமாக யாரையாவது பார்த்து, “எல்லாம் சரியாக வந்ததா?” என்று உரத்த குரலில் விசாரித்துவிட்டுப் போவார். பக்கத்தில் சீட்டாட்டம் வேறு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கல்யாணத்துக்கென்று வந்து சிறிய இடத்தில் பல குடும்பத்துக் குழந்தைகள் சேர்ந்ததனால் அவை திடீர் திடீரென்று தூக்கத்தில் கூக்குரல் கொடுத்து மாறி மாறி அலறிக் கொண்டிருந்தன. முத்தண்ணா ஆகாரத்தை முடித்துக் கொண்டுவந்து, “சாமா தூங்கிப் போயிட்டான்” என்று யாரிடமோ சொன்னது அவன் காதில் விழுந்தது. “நான் பெண்ணாத்துக்குப் போய்விட்டு வறேன்” என்று சொல்லிவிட்டு மன்னி போனதும் அவன் காதில் விழுந்தது. ஆனால் அவன் கண்ணை இறுக மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்து விட்டான். |

இருபத்தேழு வருஷங்களுக்கு முன் நடந்த தன் முதல் கல்யாணத்துக்கு முந்திய தினமும் இப்படித்தான் இருந்திருக்குமா என்று சுவாமிநாதன் யோசித்துக் கொண்டிருந்தான். அந்தக் கல்யாணத்தில் ஒரே ஒரு சம்பவந்தான் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. நலங்கில் ஒருவர் கையிலிருந்து ஒருவர் வெற்றிலை பாக்குப் பிடுங்கிக் கொள்ளும் பொழுது ஐந்து வயசு நிரம்பாத தன் மனைவியை வெடுக்கென்று கிள்ளிவிட்டான். வலி தாங்காமல் அவள் ஹோவென்று அழுதாள். சுற்றியிருந்தவர்கள் இரண்டு பேரையும் இல்லாத கேலியெல்லாம் செய்துவிட்டார்கள். இப்படி யோசித்துக் கொண்டே சுவாமிநாதன் தன்னையும் அறியாமல் உண்மையிலேயே தூங்கிப் போய்விட்டான்.

காலையில் மேளகாரர்கள் வந்து காதருகில் கர்ண கடூரமாகச் சப்தம் செய்தவுடன்தான் அவன் விழித்துக் கொண்டான். அவன் மனம் நிர்மலமாய் ஒரு சிந்தனையும் இன்றிச் சூன்யமாயிருந்தது. நல்ல வேளையாக அவனுடைய குழந்தைகள் அவனுடைய மன்னியைச் சுற்றிக் கொண்டு இருந்ததால் அவனை ஒன்றும் தொந்தரவு பண்ணவில்லை. அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் குழந்தைகளும் வந்து தொந்தரவு கொடுத்திருந்தால் அவைகளை ரொம்பவும் கடிந்து கொண்டிருப்பான்.

அன்று தனக்கு இரண்டாவது கல்யாணம் ; தன் குழந்தைகளுக்கு ஒரு தாய் – இயற்கையால் இல்லாத ஒரு தாய்- வர இருந்தாள் என்ற ஞாபகம் அவனுக்கு வந்ததும் திக்கென்றது. அவன் சாதாரணமாகக் காமத்தாலோ, குடும்ப வாழ்க்கை என்கிற இன்பத்தாலோ பீடிக்கப்பட்டவன் அல்ல. அவள் இருந்தவரையில் எல்லாம் சரியாக நடந்து வந்துவிட்டது. அவன் எதைப்பற்றியுமே அதிகமாகக் கவலைப்படவேண்டி வந்ததில்லை . இனி..?

குளித்துவிட்டு ஈரம் போகத் தலையை உதறுபவனைப் போல ஒருதரம் உதறிவிட்டு எழுந்து பல்துலக்கிக் காபி சாப்பிட உள்ளே போனான்.

“அப்பா! எங்க பெரியம்மா வந்திருக்காளே, உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டாள் காமு.

“தெரியாதே! எங்கே?” என்று கேட்டுக் கொண்டே சுவாமி நாதன் மன்னி கொண்டுவந்து கொடுத்த காபியைச் சாப்பிட்டுவிட்டு அவளுடன் பல முக்கியமல்லாத விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு நின்றான். அப்புறம் ஸ்நானம் செய்துவிட்டு வரப் போனான்.

முகூர்த்தம் ஏழரை மணிக்கே வைத்திருந்தது. அதனால் சுவாமிநாதனுக்குச் சிந்தனை செய்ய அவ்வளவாக அவகாசம் இல்லை. இருந்தாலும் ஒவ்வோர் அடியிலும் அது அவனுடைய இரண்டாவது கல்யாணம் என்பதை அறிவுறுத்த ஏதாவது காதில் விழுந்து கொண்டே இருந்தது. “இரண்டாவது கல்யாணம்; விரதம் கிடையாது”, “இரண்டாவது கல்யாணம்; பரதேசம் கிடையாது” என்று ஏதாவது யாராவது அவன் காதில் விழும்படியாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சுவாமிநாதனுக்கு இருந்த கலவரத்திலே எங்கேயாவது தப்பி ஓடிவிடலாமா என்றிருந்தது. ஆனால் மூன்று குழந்தைகளைப் படைத்துவிட்டு மனைவியைப் பிடுங்கிக் கொண்ட அந்தத் தெய்வம் தனக்கு என்னதான் விதித்திருந்ததோ பார்த்து விடுவோமே என்று தோன்றிற்று. மனத்திலிருந்த கலக்கத்தை யெல்லாம் அகற்றிவிட்டு நிச்சிந்தையுடன் கல்யாண காரியங்களில் ஈடுபட முயன்றான்.

கணவனும் மனைவியும் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தனர். பாட்டும், மேளக்காரன் ஊதலும் சேர்ந்து காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத்தான் சுவாமி நாதனுக்குத் தோன்றின. ஆனால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த புது மனைவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவளுக்கு வளர்த்தி இல்லையே தவிர வயசுமட்டும் ஆகிவிட்டது. பார்க்கப் பொறுப்புத் தெரிந்து நடந்து கொள்ளத் தெரிந்தவள்போலத்தான் இருந்தாள். பார்ப்பதற்கும் நன்றாகவே இருந்தாள். சுமாராகப் பாடவும் தெரியும்போல் இருந்தது.

திடீரென்று அருகிலிருந்த எல்லாச் சப்தங்களுக்கும் மேலாக ஒரு சப்தம் அவன் காதில் கேட்டது. காதில் விழுந்தவுடனேயே அது காமுவின் குரல் என்று சுவாமிநாதன் அறிந்து கொண்டு விட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவனுடைய மற்ற இரண்டு குழந்தைகளும் பந்தலில் அவர்களுடைய பெரியம்மா பக்கத்தில் நின்றுகொண்டிருந்தன. காமுவை மட்டும் அங்கே பந்தலில் காணோம். வெளியே முத்தண்ணாவின் பிள்ளை மணி, அப்பொழுதுதான் ஊரிலிருந்து ரயிலில் வந்து இறங்கியவன், சட்டையைக் கூடக் கழற்றாமல் காமுவைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான். காமு, “அப்பாகிட்டப் போகணும்! அப்பாகிட்டே” என்று சப்தம் போட்டுக் கொண்டிருந்தாள். மணி சிறிது நேரம் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். அவள் அடங்கவில்லை. சட்டென்று மணி பந்தலுக்குள் வந்து, “இந்தா சித்தி; உன் குழந்தை செய்கிற பிடிவாதம் சகிக்கவில்லை. நீயே பார்த்துக்கொள், உன் பெண்ணை” என்று சொல்லிவிட்டுக் காமுவை, நாணிக்கோண முயன்றுகொண்டு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த கல்யாணப் பெண்ணின் பக்கத்தில் உட்கார்த்திவிட்டான்.

காமு சத்தம் போடுவதை நிறுத்திக்கொண்டு நிமிர்ந்து தன் ‘சித்தி’யைப் பார்த்தாள். சுவாமிநாதனும் அந்த நிமிஷம் அவள் மனத்தில் என்ன இருக்கும் என்பதை அறிய விரும்புகிறவனைப் போல அவள் முகத்தைப் பார்த்தான். அதில் வெறுப்போ, அதிருப்தியோ இருந்ததாகத் தெரியவில்லை. அவள் உண்மையில் சற்று நகர்ந்து தன் குழந்தையை அணைத்துக் கொள்பவளைப் போலச் சாய்ந்தாள் என்று சுவாமிநாதனுக்குத் தோன்றிற்று. அவன் மனத்தில் ஒருவிதமான சாந்தி பிறந்தது.

“முகூர்த்தத்துக்கு நாழியாகிறதே” என்று சாஸ்திரிகள் சொல்லிக் கொண்டிருந்தார்.

– 1944, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *