இயற்பெயரைத் தொலைத்தவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 10,458 
 
 

பன்னிரெண்டு பேர் கொண்ட அந்த அறையில் எல்லோரும் வேலைக்குச் சென்றிருக்க சுந்தர் மட்டும் தனியாக இருந்தான்.

குடும்பம் விட்டுப் பிரிந்திருத்தலின் துயரம் இப்படியான சமயங்களில் தான் தழும்பி நிற்கும். உடல்நலக் குறைபாடுகள் வரும் போதும், நெடிய விடுப்புக்களின் போதும், விசேச தினங்களின் போதும் உருவாகும் தனித்து விடப்பட்டது போன்ற மனநிலை அவனுக்குப் புதிது இல்லை என்றாலும் இன்று கால் விரலில் இருக்கும் வலி அதைச் சற்று அதிகமாக்கி இருந்தது.

குறுக்கும் நெடுக்குமாய் விரவப்பட்ட கம்பிப் படுக்கைகளால் சூழப்பட்டிருந்த படுக்கையில் தன் கால் பாதத்தை மேல் நோக்கி இசட் வடிவில் வைத்த படி வலியால் முனங்கிக் கொண்டே குப்புறக் கிடந்தவனின் அந்தக் கோலம் புது வகையானதாக இருந்தது. புண்ணாகிப் போயிருந்த தன் கால் விரல் எதிலும் தட்டிடாமல் இருக்க அவனுக்கு அந்தக் கோலம் தான் வசதியாக இருந்தது.

தன் படுக்கையின் இரு பக்கமும் இருந்த கம்பியைப் பிடித்த படியே உறங்கிக் கொண்டிருந்தவனின் தூக்கத்தை வேலை முடிந்து அறைக்குத் திரும்பியிருந்த நண்பர்களின் குரல் கலைத்தது.

”டேய்….இப்படியே வச்சுக்கிட்டு இருக்காமல் போய் டாக்டரைப் பார்த்து ஒரு ஊசியப் போடு. இல்லைன்னா இன்னும் பெரிசா சீல் வச்சு விரல் வீணாப் போயிடும்” என்று அவர்கள் சொன்னதும் சரி என்று சொல்வதைப் போல தலையை ஆட்டினான்.

***

பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு வந்து நேற்றோடு ஆறு வருடத்தை முடித்திருந்தவன் இரண்டாவது முறையாக விடுப்பில் ஊருக்குச் சென்று விட்டு நான்கு தினங்களுக்கு முன்பு தான் திரும்பியிருந்தான். இப்படியான வாழ்வில் இரத்த சம்பந்தமில்லாதவர்கள் உறவாக மாறுவதும், உண்மையான நட்பின் அடையாளங்கள் அழுத்தமாய் தன்னைப் பதியமிட்டுக் கொள்ளவதும் இயல்பான விசயம். சொந்த உறவுகளை விட இப்படியான உறவுகளே அவனுக்கு அதிகம். நண்பர்கள் சூல் உலகால் வாழுபவனாகவே அவனின் அந்நிய மண்ணின் வாழ்க்கை அமைந்திருந்தது. அவன் வேலை செய்து வந்த கம்பெனி அந்த வருடம் மருத்துவமனைகளிலும் ஒப்பந்த வேலைகளை எடுத்ததால் பல புதிய பணி வாய்ப்புகள் உருவாகின. பட்டதாரி என்ற தகுதி அடிப்படையில் அவனுக்கும் அங்கிருந்த மருத்துவமனை மருந்தகத்தில் உதவியாளர் பணி கிடைத்தது.

தன்னோடு வேலை செய்பவர்களுக்கு அவ்வப்போது மாத்திரைகளை இலவசமாக வாங்கிக் கொடுப்பதாலும், மருந்துகள் வாங்க வரும் செவிலியர்களிடம் சில மாத்திரைகளை இரவல் வாங்கி கைவசம் வைத்திருப்பதாலும் உடல் சார்ந்த நோவுகள் என்றால் உடன் வேலை செய்பவர்களுக்கு முதல் ஆளாய் இவன் தான் நினைவுக்கு வருவான். நண்பர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிறு, சிறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்துகள் கொடுத்து அனுபவத்தால் அரை மருந்தாளுனனாக மாறியிருந்தவனுக்கு அந்த அனுபவ அறிவால் தீர்க்க முடியாத வகையில் அன்றைய பொழுது ஒரு உடல் பிரச்சனையோடு விடிந்தது. படுக்கையை விட்டு எழுந்ததில் இருந்து ”நீர்கடுப்பு” (நீர்சுருக்கு). சிறுநீர் சீரான இடைவெளியில், அளவாகப் பிரியாமல் சொட்டுச் சொட்டாகப் பிரிய அதோடு சேர்ந்து வலியும் பிரிந்தது. காலங்காத்தால இந்தக் காரணத்தைச் சொல்லி மேற்பார்வையாளரிடம் லீவு கேட்டால் கடித்துக் குதறாத குறையாய் கத்துவான் என்பதால் ஒரு பாட்டில் நிறைய குடிதண்ணீரைப் பிடித்துக் குடித்து விட்டு வேலைக்குக் கிளம்பினான்.

தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஐந்து நிமிட நடைத் தொலைவில் இருந்த பெரிய புல் மேட்டைக் கடந்ததும் இருக்கும் ஒரு குட்டிச்சுவரில் ஏறி மறுபக்கம் இறங்கினால் அவன் வேலை செய்யும் மருத்துவமனைக்குப் போய் விடலாம், குட்டிச் சுவரில் ஏறி இறங்குவதற்கு வசதியாக அதன் இரு பக்கமும் மணல் மூட்டைகளையும், பெரிய கற்களையும் போட்டு வைத்திருந்தனர். இந்த இத்யாதிகள் எல்லாம் இவனைப் போலவே அங்கு வேலைக்குச் சென்று வரும் நண்பர்களின் ஏற்பாடு! முறையான சாலை வழியாகச் சென்றால் இருபது நிமிடங்களுக்கும் மேலாகும் என்பதால் அவர்கள் உருவாக்கிக் கொண்ட வழி அது!!

வேலைக்குக் கிளம்பி வந்த பத்து நிமிடத்திற்குள் ஐந்து தடவை சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது என்பதை விடச் சுருக்கென்று நுனியில் நிற்கும் எரிச்சலும், கடுப்பும் அவனுக்கு ரணமாக இருந்தது. டாக்டரிடம் போய் இதைச் சொல்லி மருந்து கேட்க சங்கோஜமாக இருந்ததால் மருந்தகத்தில் வேலை செய்யும் மருந்தாளுனரிடம் விபரத்தைச் சொன்னான். அவர் ஒரு பொடி பாக்கெட்டைக் கொடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கச் சொன்னார். ஒருவித புளிப்பும், உப்பும் கலந்த சுவையில் இருந்த அதைக் கலந்து குடித்த பின்பும் கடுப்பு குறையாததால் முன் அனுமதி பெற்று அறைக்குத் திரும்பினான்.

இரவு ஷிப்ட் வேலைக்குச் செல்லும் இரண்டு நண்பர்கள் மட்டுமே அறையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் ”சாலிது”. கிளை மேலாளரின் உறவினர் என்ற ஒரே ஒரு தகுதி ஐம்பத்தைந்து வயதிலும் அழுக்குப் படாத டைம் கீப்பர் வேலையை அந்நிய மண்ணில் அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தது. அறிவிப்புப் பலகையிலும், அலுவலகக் கோப்புகளிலும் மட்டும் தான் அவர் பெயர் சாலிது. ஆனால் “மண்ட”(மண்டை) என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். உடன் வேலை செய்யும் பலருக்கும் அந்தப் பெயர் தான் அவரின் அடையாளம்.

சிறு, சிறு தவறுகளைச் செய்து விட்டு நிர்வாகத்திடம் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் இவன் உள்ளிட்ட பலருக்கும் ஆபத்பாந்தவனாய் இருப்பவர். தன் அனுபவத்தால் கிடைத்த படிப்பினைகளால் எதையும் அவர் கையாளும் விதமும். சொல்லும் யோசனைகளும் பல நேரங்களில் மிகச் சரியானவைகளாக அமைந்து விடும். அதிலும் குறிப்பாக நிர்வாகத்திற்குத் தெரியாமல் வெளியிடங்களுக்கு பகுதி நேர வேலைகளுக்குச் செல்லும் போது மேற்பார்வையாளரோ அல்லது நிர்வாகம் சார்ந்தவர்களோ பார்த்து விட்டால் அவர்களிடம் சொல்லச் சொல்லி அவர் கூறும் யோசனைகள் எவராலும் யோசிக்க முடியாதவைகளாக இருக்கும். அதனால் “அறிவாளி” என்ற பொருளில் எல்லோரும் “மண்ட” என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே நிலைத்தும் விட்டது.

இவனைக் கண்டதும் என்னடா சீக்கிரம் வந்துட்ட? உடம்புக்குச் சரியில்லையா? என்றார்.

”காலையில இருந்து நீர்கடுப்பு தாங்கல மண்ட. நானும் பவண்டோல இருந்து ஆஸ்பத்திரி பொடி வரைக்கும் குடிச்சிப் பார்த்துட்டேன். ஒன்னும் கேக்கல. நிக்கவே முடியல. புளியைக் கரைச்சு குடிச்சா சரியாயிடும்னு கதிரு சொன்னான். அதான் வந்துட்டேன்” என்று அவன் சொன்னதும் மாப்ள…..கொட்டை எடுத்த புளி வாங்கப் போறீயா? இல்ல எடுக்காதது வாங்கப் போறீயா? என்று நக்கலடித்த இன்னொரு நண்பன், ”மண்ட………ஏதாவது மருந்து சொல்லு. மாப்ள கடுப்புல கேக்குறான்ல” என்றான்.

மொதல்ல புளியைக் கரைச்சு அதுல வெல்லக்கட்டியைப் போட்டு கலந்து குடிச்சுப் பாரு. பானக்கத்துக்கு நிக்கலைன்னா நான் வேற மருந்து சொல்றேன். என் மாமு ஒருத்தன் ஊருல இருந்து சுத்திப் பார்க்க வந்திருக்கான், ஊர்க்காரன் இரண்டு பேரும் அவனும் என்னையப் பார்க்க வாரானுக. அதுனால இன்னைக்கு லீவு போட்டிருக்கேன். அவனுகளுக்கு பார்ட்டி கொடுத்து அனுப்பிட்டு எட்டு மணிக்கு வந்துடுவேன். என்று சொல்லி விட்டு மண்ட கிளம்பியதும் அருகில் இருந்த ஹைபர் மார்க்கெட்டில் புளியும், வெல்லமும் வாங்கி வந்து கரைத்துக் குடித்தான். அறைக்கு வந்த இருபது நிமிடத்திற்குள் பத்துத் தடவை சிறுநீர் கழித்து விட்டான். காலிரண்டை ஒடுக்கியும் வயிற்றை இறுக்கியும் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது?

என்னடா கடுப்பு நின்னுடுச்சா? என்று கேட்டுக் கொண்டே கொஞ்சம் மப்பும் பாதித் தெளிவுமாய் எட்டரை மணி வாக்கில் வந்த மண்டயிடம் புளியைக் கரைச்சு அரைச் சட்டி குடிச்சிட்டேன். நிக்கல, டாக்டர்கிட்ட போகலாம்னு பார்க்கிறேன் என்றான்.

டேய்……..இதுக்குலாமா டாக்டர் கிட்டப் போவானுக. அவன் ஏதாச்சும் கடுப்புல உனக்கு காயடிச்சிடப் போறான். இதுலாம் சின்ன விசயம். நான் ஒரு வைத்தியம் சொல்றேன். அதைச் செய். உடனே சரியாயிடும். சுண்ணாம்பை எடுத்து வலது கால் கட்டை விரலில் நல்லா அப்பிட்டு தூங்கிடு. காலையில் கடுப்பு நின்னுடும்.

வேதனையில் இருப்பவனுக்கு வைத்தியம் தானே முக்கியம். அது எப்படி வைத்தியமா இருந்தா என்ன? புகையிலை போடும் பழக்கமிருந்த தன் நண்பனின் சுண்ணாம்பு டப்பியிலிருந்து பாதியை வழித்து கொஞ்சம் நீர் ஊற்றிக் குழைத்து தன் வலது கால் கட்டை விரல் முழுக்க அப்பிக் கொண்டு படுத்து விட்டான். மண்டயின் இந்த வைத்தியத்தைக் கேட்டு நண்பர்கள் கேலி செய்த போதும் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடுப்பு நின்று காலையில் நிம்மதியாய் எழுந்து வேலைக்குப் போனால் போதும் என நினைத்தான்.

நினைப்பது போல் எதுவும் நிகழ்வதில்லை என்பது அவன் விசயத்திலும் சரியாகவே அமைந்தது. விரும்பியது போல் அவனுக்கு விடியல் இருக்கவில்லை. நேற்றிரவு வரை இம்சித்துக் கொண்டிருந்த நீர்கடுப்பு இல்லாமலிருக்க அதற்குப் பதிலாக மடக்க முடியாத அளவுக்கு வலது கால் கட்டை விரலில் வலி இருந்தது. கொதகொதவென வெந்து சிவந்திருந்த விரல் வழியாக வலி உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது.

படுக்கையிலிருந்து எழாமல் தலையைத் தூக்கிப் பார்த்தவன் வேலைக்குச் செல்லாமல் மண்ட மட்டும் தூங்கிக் கிடப்பதைக் கண்டதும் வேதனையும் கோபமும் கலந்த குரலில் யோவ் மண்ட………யோவ் மண்ட…….என நான்கைந்து தடவை குரல் கொடுத்தான். இவன் படுக்கையில் படுத்திருப்பதைப் பார்த்து விட்டு இன்னைக்கு நீ வேலைக்குப் போகலையா? என்று அவர் கேட்டதும் யோவ்……….உன் பேச்சைக் கேட்டு சுண்ணம்பைத் தடவி விரலைப் பாரு. வெந்து போச்சு. வலி உயிர் போகுது. இருக்குற வலிக்கு இருந்த நீர்கடுப்பே தேவலைன்னு தோணுது என்றான். அவரோ சிறிதும் பதட்டமின்றி ”தேங்காய் எண்ணெய் போட்டா ஆறிடும். இதுக்கு போய் ஏன் கத்திக்கிட்டு கிடக்க. போய் காலைக் கழுவிட்டு வந்து தேங்காய் எண்ணெயைப் போடு” என்றார்.

நிற்கவே முடியவில்லை. இதில் எங்கே காலைக் கழுவுறது? சூரியன் உச்சிக்கு ஏறி அதன் உக்கிரத்தைக் காட்டுவதைப் போல அவனின் விரல் வலியும் உக்கிரத்தைக் காட்டத் துவங்கி இருந்தது. கணுக்காலின் ஓரம் முழுக்கக் கம்பைக் கொடுத்துக் கட்டியது போல் இறுகியிருக்க வலது கால் கட்டை விரல் இரண்டு மடங்கு வீக்கத்துடன் சீல் பிடித்திருந்தது. வீக்கத்திற்குள் இருந்த சீலை வெளியே எடுத்து விட்டால் தான் வலி போகும் எனத் தெரிந்தாலும் அதை எடுக்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை.

***

தாள முடியாத வலியாலும் நண்பர்களின் வற்புறுத்தல்களாலும் மருத்துவமனைக்குக் கிளம்பியவனுக்கு வலது காலில் செருப்பை மாட்ட முடியவில்லை. இடது காலில் மட்டும் மாட்டிக் கொண்டு கிளம்பினால் பார்க்கிறவன் என்ன நினைப்பான்?. தவழ்வது போன்ற நடையில் நடந்து புல் மேட்டைத் தாண்டி குட்டிச்சுவரின் மீது ஏறி மறுபக்கம் இறங்க எத்தனித்தவன் அங்கு இறங்குவதற்காக போட்டு வைத்திருந்த மணல் மூட்டைகளையும், கற்களையும் காணாமல் பேரதிர்ச்சியுற்று சுவரின் மேலேயே நின்று கொண்டான். சுத்தமாக சவரம் செய்த முகம் போல அந்த இடம் இருந்தது.

குதித்து இறங்கும் அளவுக்குத் தான் சுவரின் உயரம் என்றாலும் இப்போது இருக்கும் நிலையில் அப்படிச் செய்ய அவனுக்குத் தயக்கமாக இருந்தது. சாலை வழியாகப் போகலாம் என்றால் வந்த வழியே திரும்பவும் பத்து நிமிடம் நடந்து போய் தான் டாக்சி எடுக்க வேண்டும். கவனமாக இதிலேயே இறங்கிடலாம் என நினைத்துச் சுவற்றின் மீது உட்கார்ந்து பேலன்ஸ் செய்த நொடி பொத்தென சறுக்கி விழுந்ததில் விரல் தரையில் போய் மோத அடிவயிற்றிலிருந்து எந்த ஆசனமும் செய்யாமலேயே குண்டலி அவன் தலைக்கு ஏறியது.

விரல் நகம் சதையை விட்டு விலகி வெளியே நின்றது. அகோரத்தின் உச்ச பட்ச முகத்தோடு அந்தச் சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்தான். அங்கிருந்து ஐந்து நிமிட நடை நேரத்தில் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு இருந்தும் நுரை தள்ளாத குறையாய் நின்று நிதானித்து அவன் வந்து சேர இருபது நிமிடங்களானது.. இதுலாம் தேவையா உனக்கு? மண்ட சொன்ன வைத்தியத்தைக் கேக்காதேன்னு அப்பவே நாங்க சொன்னோம்ல என்று திட்டித் தீர்த்த நண்பன் ஒரு வீல் சேரில் அழைத்துச் சென்று நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமர வைத்தான்.

விரல் ஏன் இப்படியாச்சுன்னு மருத்துவர் கேட்டால் என்ன காரணம் சொல்றது? சுண்ணாம்பை வழிச்சு அப்பிய காரணத்தைச் சொல்லவும் முடியாது. வேறு என்ன காரணம் சொல்லலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் மனதில் இது மாதிரியான அபத்த விசயங்களைச் செய்யும் போது உண்டாகும் கேலிகளும், கிண்டல்களும் அதன் மூலம் உருவாக்கப்படும் கேலிச் சித்திரங்களும் ஒருவனின் இயற்பெயரையே மாற்றிவிடும் என்று புத்தகம் ஒன்றில் படித்தது நினைவில் வந்து போனது.

நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நல்லசிவன் என்று வீட்டில் தனக்கு வைத்த குலசாமியின் பெயரைப் பெரும் சண்டையிடலுக்குப் பின் சுந்தர் என்று மாற்றிய நாள் தொடங்கி இன்று வரை யாரும் அந்தப் பெயரை வைத்துக் கேலி செய்யாமலிருந்ததே கர்மப்பயன் என்று நினைத்திருந்தான். ஆனால், தன்னுடைய இந்தச் செயலால் அந்தக் கர்மப்பயன் காலாவதியாகி சுந்தர் என்ற தன் இயற்பெயர் தொலைந்து போய் விடுமோ? என்ற பயம் அவனுள் விசுவரூபம் எடுத்தது. தன்னுடைய இந்தச் செயலால் பட்டப்பெயர் வைத்து ஒருவன் கூப்பிட ஆரம்பித்தாலும் அது

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின்

வாழ்வை எழுதிக் கொண்டிருக்கிறது – என்ற பிரமிளின் கவிதை இறகைப் போலாகி தன்னோடு வேலை பார்க்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பரவி அதுவே மெல்ல ஊர்க்காரன், உறவுக்காரன் என சிறகை விரிக்க ஆரம்பித்து விடும். ஒற்றைச் சிறகு விழாத வரைக்கும் தான் தன் இயற்பெயருக்கு ஆபத்தில்லை. விழுந்து விட்டால் அதன்பின் சாலிது என்ற ”மண்ட”யின் இயற்பெயருக்கு நேர்ந்த கதி தான் தன் இயற்பெயருக்கும் வந்து சேரும் என நினைக்கும் போதே அவனுக்குத் தலைவலிப்பது போலிருந்தது.

தலையைச் சுவற்றில் சாய்த்து கண்களை மூடி உட்கார்ந்திருந்தவனிடமிருந்து திடீரென கிளம்பிய அலறலில் அந்த அவசரச் சிகிச்சைப் பிரிவே அதிர்ந்து போனது. அங்கு பணியில் இருந்த காவல் துறையினரும், செவிலியர்களும், இவனின் நண்பனும் என்னமோ ஏதோவென்று பதறி ஓடி வந்தனர். வெள்ளையும், சிவப்புமாய் சிதறிக் கிடந்த இரத்தத்தை பார்த்து விட்டு என்னாச்சு? இவ்வளவு இரத்தம் எப்படிடா? எனக் கேட்ட நண்பனிடம், “இந்தக் குழுமை முண்டம் ஷீ காலால் விரல்ல மிதுச்சுட்டாண்டா” என்றான். அவன் குழுமை எனக் காட்டியவன் கேவலமாக மதிப்பிட்டாலும் நூறு கிலோவுக்கும் குறையாத எடையுடன் இருந்தான்.

மடை திறந்து ஓடிய வெள்ளம் சட்டென வடிந்ததைப் போல சிறிது நேரத்தில் வலியின் வீரியம் குறைவதை உணர்ந்தான். நகம் மட்டும் முழுதாகப் பிய்ந்து தொங்கியது. ஆனால் வலியும், வேதனையும் தாங்கிக் கொள்ளும் அளவிலேயே இருந்தது. சுண்ணாம்பால் கால் விரல் வெந்த கதையை மடை மாற்ற அந்தக் கடவுளே குழுமை வடிவில் வந்து தன் காலை மிதித்தாக நினைத்து நன்றி சொல்லிக் கொண்டான். மருத்துவரிடம் தான் சொல்ல நினைத்திருந்த பொய் காரணத்தை மனதிற்குள்ளேயே சொல்லி ஒத்திகை பார்த்துக் கொண்டான். தன் இயற்பெயருக்கு பங்கம் வரும் வகையில் தன்னிலிருந்து விழுந்து வானமாய் விரியக் காத்திருந்த இறகை விழாமலிருக்கச் செய்து விட்ட திருப்தியோடு உட்கார்ந்திருந்தவனை ”சுண்ணாம்பு” என்று அவன் நண்பன் சப்தமிட்டு அழைத்த நொடியில் அதுவரையிலும் தான் பிடித்து வைத்திருந்த இறகு வானமாய் விரியத் தயாராகி விட்டதைப் போலிருந்தது அவனுக்கு.

இன்னதென்று யூகித்துச் சொல்ல முடியாத நிகழ்வுகளால் பின்னிப் படரும் வாழ்க்கையில் ”சுந்தர்” என்ற தன் இயற்பெயரைத் தொலைத்த துயரம் சுனாமியாய் சுழற்றியடிக்க விரல் புண்ணாகிப் போனதற்கான உண்மையான காரணத்தை மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லி விடும் முடிவோடு அவரின் அறைக்குள் நுழைந்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “இயற்பெயரைத் தொலைத்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *