இப்படியும் ஒரு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 3,471 
 
 

அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன!

பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்துக்கு மதிய போசனத்துக்காக அடித்த கல்லூரி ‘பெல்’ மறுபடியும் அடிக்க ஒரு மணித்தியாலம் வழமைபோலிருந்தது. அந்தக் கல்லூரிக்கு மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் தனது வீட்டுக்குச் சென்று அன்றைய மதியம் வயிற்றைக் கழுவி விட்டு மறுபடியும் வந்து, தனது ஆசிரியத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமென்ற உந்தலில் சைக்கிளை மிதித்து, வீட்டுக் குசினி ஓரமாக நிறுத்தியபடி நேரே குசினியை எட்டிப்பார்த்த மதுர நாயகத்துக்குக் கிடைத்த வரவேற்பு..

அவன் அதை நினைத்து வெல வெலத்துப் போனான்.

அவனுடைய முழுவாழ்க்கையிலுமே இந்த முப்பது ஆண்டுகளிலேயே என்றுமே எங்குமே நேர்ந்திருக்காத அவமானம் அன்று தன் வீட்டிலேயே நடந்தது என்னவோ போலிருந்தது.

“சே சே! வர வர எல்லாம் ஒரு மாதிரி யாத்தான் போச்சு. ஆளைத் தெரியாமல் இருந்ததுக்களுக்கு இப்ப கண்ணுந் தெரியாமல் போச்சு…… மீன் கழுவின தண்ணியாலை ஆலாத்தி……..”

மரக்கறிப் பிரியத்தோடு சைவனாகிவிட்ட அவனுக்கு, ஒரு முருங்கைக்காயுடன் சமையலை முடித்து விட்டு , ஏலவே வாங்கியிருந்த மீனை அப்பொழுதுதான் அறுக்கிக் கழுவிய அவன் மாமியார், பாக்கியம் வெளியே பார்க்காது வீசிய தண்ணீர் – அந்தக் கழுவல் நீர் – அவன் மீது – அவன் அணிந்திருந்த அந்த வெள்ளை வெளேரென்ற வேட்டி நாஷனல் மீது பட்டதும் அவர்களுடைய அந்த உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

“ஆரு எப்ப வருகினம் எண்டு பாத்து ஊத்த அது மட்டையாலை அடிச்ச குசினியா சுத்திவரச் சுவர். கிணத்தடிப் பக்கமாக யன்னல் …… நான் என்ன செய்ய?”

உள்ளே குந்தியிருந்தபடி முழந்தாழ்களில் முழங்கைகளை ஊன்றி எதுவும் தப்பித்தவறியேனும் பேசிவிடக் கூடாது என்பது போல் மௌனியாகி, சிலையாக மரக்கட்டையாகி இருந்தாள் அவன் மனைவி கோகிலா.

“கோ..கி..லா!”

மதுரநாயகத்தின் அதட்டலும் கண்டிப்பும் நிறைந்த அழைப்பு என்ன செய்துவிட போகிறது என்று பேசாதிருந்தாள் அவள்.

“கோகிலா! எங்க வீடு பனைமட்டையாலும் தென்னை ஓலையாலும் அடைச்ச மேஞ்சது தான். ஆனால், புருஷனை தெய்வமாக மனுஷனாகப் பாவிக்க பெண் தெய்வங்கள் உள்ளே இருக்கும். கேவலம்…… இந்த உடம்பை வளர்க்கிறதுக்காக அதுகள் ஆடு மாடு எண்டு வெட்டுறதில்லை . அதுகள் பிறவிச் சைவம்….விளங்கிக்கொள்!”

பாக்கியம் சூத்திரமாகச் சொன்னதை வெறுப்போடு புரிந்து கொண்ட மதுரநாயகம் ஆவேசத்துடன் கத்தினான்,

அவனுடைய உடம்பிலிருந்த நெஷனல் கையிலாடிவிட்டு, முற்றத்தில் போய் தொப் பென்று விழுந்தது. சில சில்லறைக்காசுகள் விபத்து ஏற்பட்ட பிரயாணிகள் போல சிதறுண்டன.

உடுத்திருந்த வேட்டியை உரிந்து ஒரு கையால் பிடித்தபடி, சாரத்தை எடுத்து உடுத்துக் கொண்டு, கறுவியபடியும், தனக்குள் ஏதோ சொல்லியபடியும், நெஞ்சு வேகக் கிணற்றடிக்குப் போனான் மதுரநாயகம்.

அந்த வேளையை எதிர்பார்த்திருந்தவள் போலக் கோகிலா தாயைக் கடிந்தாள்.

“என்னம்மா! இது ஆக அநியாயம், நீங்கள் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது!”

“நீ சும்மாயிரு கோகிலா ! எல்லாம் எனக்கு தெரியும். பூனை மாதிரி வாறதும் போறதும் என்ன இது? ஆ? நாங்கள் என்ன கதைக்கிறம் எண்டு ஓட்டுக் கேக்கத்தான்…… அல்லது இஞ்சை என்ன நடக்குது எண்டு இரகசியமாகப் பார்க்கத்தானா அப்பிடி வாறது. வந்தது கண்டனான். ‘கேற்றைத் திறந்து மெல்லமாகச் சாத்திப்போட்டு சைக்கிளையும் இங்கேயே விட்டிட்டு வாறார். எப்பிடியிருக்கும் எனக்கு – உக்ம்!”

பாக்கியம் சற்று உரத்தே பேசினாள். இதற்குப் பிறகும் மதுரநாயகம் மான ரோஷம் கெட்டு அந்த வீட்டில் இருப்பானா என்பது தான் பாக்கியத்துக்கு உள்ளுர இருந்த கேள்வி.

காதில் அத்தனையும் விழுந்ததும் தோய்ந்து கொண்டிருந்த மதுரநாயகம் நீரைக் கடிந்து பார்த்தான்.

வாளியின் அசைப்பில் தளம்பிக் கொண்டிருந்த கிணற்று நீரில் முகம் தெளிவாகத் தெரியவில்லை . கலங்கியிருந்த தன் மனதிலும் நல்ல முடிவு தெரியாது என்பதால், அவன் எதனையோ சிந்தித்தப்படி குளித்து முடித்தான்.

‘கோகிலா’

ஈரத்தை உலர்த்திக் கொண்டே அழைத்தான். அவளுடைய “உம்!” என்ற பதிலுக்காக காத்திராமல், தான் அழைத்தது நிச்சயம் கேட்டிருக்கும் என்ற நினைப்பில் “உள்ளே போய் வேட்டியை எடுத்தண்டு வா!” என்றான்.

“மீன் வெடுக்கோடை உள்ளே போகலாமா? தோய்ஞ்ச பிறகு போகக் கூடாதோ?” பாக்கியம் புறுபுறுத்தாள்.

“நான் கல்யாணம் முடிந்தது கோகிலாவை” மதுரநாயகம் பொறுமையை இழந்து கூறிவிட்டு, கால்களில் ஊறிய மண்சீமெந்துத் தரையெல்லாம் படிய, உள்ளே சென்று ஆடையை மாற்றினான். பின்னர் அப்படியே “சிவ சிவா!” என்று முற்றத்தில் வீசுண்டு கிடந்த நாணயங்களையும், பேனையையும் பொறுக்கி எடுத்து, மாட்டியிருந்த சட்டைக்குள் திணித்தான்.

நேரத்தைப் பார்த்து, “உம்! ஒண்டரை மணியாச்சு!” என்று மூச்செறிந்த அவன் வெளியே கிளம்பும் பொழுது பாக்கியம் கூறினாள், “கோகிலாவைக் கலியாணம் முடிச்சவையாம் கலியாணம். அவளின்ரை மொக்கு அப்பன் பூலோகம் எல்லாம் திரிஞ்சு கண்டுபிடிச்ச மாப்பிளை. றெயின்ட் சட்டம்பிக்கு டாக்குத்தர் மாற்றை சீதனம். இருக்கிற கல்வீடு, நாப்பதினாயிரம் ரூபா சீதனம்……. எல்லாமா ஒரு லட்சம் பெறும். கோகிலாவை முடிச்சவை. உமக்! அதுக்கும் சொன்னபடி நகையிலை மூண்டு பவுண் குறைஞ்சு போட்டு தெண்டு கலியாணத்தை நிறுத்தச் சொன்ன ஆக்கள். பெரிய மனுஷராட்டம் எல்லே கதை! தூ!”

“கோ..கி..லா!”

“……”

“கோகிலா! உங்கம்மாவை வாயைப் பொத்தச் சொல்! உங்கடை சீதனத்தை நான் கேட்டு வரயில்லை. பண ஆசை பிடிச்ச எங்கப்பன் செய்த வேலை…என்னைப் பாழிடத்திலை விட்டது…”

“கோகிலா நான் ஏன்வாய்பொத்த வேணும்? சட்டம்பி உத்தியோகத்துக்கு மரியாதை வேணுமெண்டால் வாயைப் பொத்த வேணும் ஆரு தெரியுமே!…”

பாக்கியம் மிகவும் கேவலமாக அபிநயம் பிடித்துக் கூறினாள். கன்னங்கரேலென்று காணப்பட்ட தன் உதரங்களைப் பிதுக்கி, கைகள் இரண்டையும் முன்னீட்டி அவள் கூறியதை பார்த்துவிட்ட மதுரநாயகம் தவணைச் சோதனை வேறு நடக்குது! எல்லாத்துக்கும் ஒரு முடிவு காணத்தான் வேணும்! என்று நினைத்துக் கொண்டே சைக்கிளை எடுத்தான்.

அவன் போகும் வரை பார்த்திருந்து விட்டு , அவன் போயே விட்டான் தானா என்று நிச்சப்படுத்துவதற்காக ‘கேற்’ வரை வந்து வீதியை எட்டிப்பார்த்த பாக்கியம், “பொறுக்கியளடை நினைவு. என்னையெல்லாம் வாய்பொத்தட்டாம்!” என்றபடி குசினிக்குள் வந்தாள்.

கோகிலா அப்பொழுதும் சிலையாகவே இருந்தாள். ளிந்து கொண்டிருந்த அடுப்பில் வெந்து கொண்டிருந்த மீன் கறிக்கு மேலும் விறகுகளை இட்டபடி, திருவுபலகையில் முழந்தாழ்களை உயர்த்தியபடி அமர்ந்திருந்த அவள் தாயை ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சலனமற்று இருந்தாள்.

காலையில் வெளியே போய் கல்லூரி மூன்றே முக்காலுக்கெல்லாம் முடிந்தும், தாய்வீடு என்றும் வாசிகசாலை என்றும் பொழுதைப் போக்கிவிட்டு இராச் சாப்பாட்டுக்கும் கட்டில் அணைப்புக்கும் சரியாக வரும் கணவனுக்காக, பகல் முழுதும் தாயிடம் ஏச்சு வாங்கிப் பிராணனை வதைக்க விரும்பாத கோகிலா. மௌனம் சிறந்த மொழி என்று காட்டி வந்தாள்.

அந்தக் கல்வீட்டில் சீவியம் காட்டிச் சீதனம் எழுதியதும், அவளுடைய தந்தையார் கண்ணை மூடியதும், அம்மாவாகவும், ஆயாவாகவும் வளர்த்த அம்மாவுடன் பகையை வளர்க்க அவள் விரும்பவில்லை. பல தடவைகள் எங்காவது சென்று குடியிருப்போம் என்று மதுரநாயகம் கேட்டிருந்தும், உதவிக்கு ஆளில்லை’ என்று சாக்குப் போக்குச் சொல்லி, தட்டிக்கழித்தாள் கோகிலா.

அம்மாவை வெறுப்பதற்கு அவள் என்ன காரணங்களையும் கூறமாட்டாளோ, காரணங்கள் கணவனை விரும்புவதற்கும் அவளால் காரணங்கள் காட்டமுடியாது. அவனும், உள்ளவரையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் உமாவைத் தவிர வேறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவள் எண்ணியிருந்தாள்.

ஆரம்பத்தில் மருமகனைப்பற்றி பாக்கியம் கூறியவற்றை மண்ணுக்கேற்ற குணத்தால் மறுத்து வந்தவள், தனக்குக் கொடுத்த சீதனப் பணத்தை மதுரநாயகம் தனது வாளாவெட்டியாக இருந்த தங்கையொருத்திக்குக் கொடுத்து ‘விலைப்படுத்தியதிலிருந்து அவளுக்கு என்னவோ வெறுப்பு.

அன்றிலிருந்து அவள் கணவன் வீட்டுக்குப் போனதுமில்லை. அவர்கள் வந்தாலும் வரவேற்பதுமில்லை . மதுரநாயகத்தின் தம்பி ஒரு முறை அண்ணன் வீடு வந்ததும்,

“அண்ணனுடைய சட்டம்பிச் சம்பளம் அவருக்குச் சைவச்சாப்பாடு போடவே காணாது! நாங்கள் ஏழை எளியதுகள்! ஏதும் ஒரு மீன் உறைப்போடை சிக்கனமாக முடிச்சிடுவம். நூறு மரக்கறி அவிச்சு குண்டோதரனுக்குப் போட்ட மாதிரி இனி வாறவைக்கும் செய்ய எங்கை போறது?” என்றாள். பாக்கியம் குத்தலுடன்.

வெளியில் செல்லும்பொழுது தன் உலக வாழ்க்கையில் உண்மையான அன்பு செலுத்தும் உமா நித்திரை செய்து கொண்டிருந்தாலும் அணைத்து முத்தமிட்டுவிட்டுச் செல்லும் அவன், இன்று அப்படிச் செய்யாமல் புறப்பட்டதைப் பெருங்குறையாக எண்ணிப் புழுங்கினான். கேவலம் வயிற்றுப் பசியை ஒரு கப் பிளேன் டீ’ யுடன் அடக்கிவிடும் சக்திமிக்க அவனுக்கு. அந்த அன்பு மகளின் அணைப்பினைக் கட்டுப்படுத்தவோ, தீர்க்கவோ முடியாதிருந்தது.

மதுரநாயகம் தாய் வீடு சென்று, சகோதரியை மெல்ல அழைத்து மத்தியானம் நடந்ததைக் கூறியதும், வீடே அதிரும் படி அவள் ஓலமிட்டு, உள்ளிலிருந்த மற்றவர்களுக்கு விஷயத்தைக் கக்கி விட்டாள்.

வீடே அழுதது!

தாயாரும், சதோதரி தம்பி முதலியோரும் கலங்கியதை எண்ணித் தானும் கண்ணீர் வடித்தான் மதுரநாயகம்.

“தம்பி! உங்கப்பர் செய்த மோசமான காரியம் உன்ரை கல்யாணம். உழைச்சுத் தேடி உன்ரை தங்கச்சிக்குச் சீதனம் கொடுக்கப் பயப்பிட்ட அந்த மனுஷன் உன்னை வித்தார். இப்ப உன்ரை மானம் இப்பிடி விலை போகுது, இந்த ஊருக்கையே நல்ல பிள்ளையாய் இருந்த உனக்கு இப்பிடி ஒரு வாழ்க்கையோ! விதியே! விதியே!”

தாயார் மரிக்கொழுந்து தலை தலை என்று அடித்து, ‘பெத்த வயிறு பத்தி எரியுதடா!” என்று ஓலமிட்டு வயிற்றிலும் நைய அடித்து, அழுதாள்.

“அ…ம்…மா!” அதட்டியபடி உறுமினான் மதுரநாயகம். “அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறியள்? எங்கையாவது போய்ச் செத்துத் துலையுறான்…நீங்கள் அழவேண்டாம்!”

“ஐயோ! அவன் சொல்லுறதைப் பாத்தீங்களா: நீயேன் சாகவேணும்? இருக்கட்டும் இவளவையளுக்குப் பாடம் படிப்பிக்கிறான்?” மரிக்கொழுந்து பற்களை அழுத்தமாக மென்றபடி கூவினாள்.

“அண்ணா! உழைப்புப் பிழைப்பு இல்லாதவங்களையே என்னமாதிரி மதிக்குதுகள் உலகத்திலே! அண்ணி இதுக்கு என்ன சொன்வை?”

“……”

“அவள் என்னடி சொல்லுறது? மரக்கட்டை மாதிரி தாயைப் பாத்தண்டு இருந்திருப்பாள். கோகிலாவுக்குப் புருஷன் எண்ட மதிப்பே இல்லை. பெரிய மனசு வைச்சுப் பிள்ளையொண்டை மட்டும் பெத்தெடுத்துப் போட்டாள். தங்கப்பவுண் மாதிரி நிறத்திலையும் குணத்திலையும் உள்ள என்ர ஆம்பிளைப் பிள்ளையை வித்தாரே உங்கப்பர்….. ஐயோ! சிவனே!”

மரிக்கொழுந்து அழுதாள்.

அழுது, அழுது ஒப்பாரி வைத்து ஓய்ந்த மரிக்கொழுந்து எதையோ நினைத்துக் கொண்டவள் போல நிதானமாகச் சொன்னாள்.

“தம்பி! இனி நீ அங்கை போகவேண்டாம்!”

“அம்மா”

“ஓமடா! நீ இனியாவது கொஞ்சம் மான ரோஷம் பாரடா! போகாதே…அவள் உனக்கு இனி வேண்டாம்!”

“அம்மா! அவளை வேண்டாம் எண்டால் விட்டுப் போடுறான். ஆனால்….உமா! அம்மா உமா என்னை எப்பிடி நேசிக்குது தெரியுமா?”

“பிள்ளையும் குட்டியந்தான்! நானும் எட்டுப் பெத்தனான். ஐஞ்சைத்தாரை வார்த்துக் குடுத்திட்டன்தானே. அது செத்துப் போச் செண்டு இரு. நீ உன்ரை வேலையைப் பார் போ!”

தாய் கண்டிப்பாகச் சொன்னாள். அவன் மௌனியாகி நின்றான்.

ஒரு கிழமை சென்றது!

கல்லூரி விடுமுறை விடப்பட்டிருந்ததால், சாவகாசமாக வாசிகசாலைக்குச் செல்வது, வேளை வேளைக்கு மரிக்கொழுந்து பழையபடி அகப்பைக் காம்பை வைத்து அவனை உறுக்கி உறுக்கி நன்றாகச் சாப்பிட வைப்பதும் “என்ன மாதிரி இருந்த உடம்பு! இப்பிடியா வளர்த்து அவளவையட்டைக் குடுத்தனன். என்னமாதிரிக் கொட்டுண்டு போனாய் தெரியுமோ? சாப்பிட்டால் உடம்பு வைக்கும்…….” என்ற மரிக்கொழுந்தின் புத்திமதிகளும், ஆறுதல் வார்த்தைகளும் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருந்தன.

உமாவின் நினைவு மதுரநாயகத்தை என்றும் உலுக்கியபடி இருந்தது. இந்த ஒரு கிழமைக் குள்ளேயே சிவந்த அவளுடைய முகம் வாடியிருந்தது, ஊருக்கும் நன்றாகத் தெரிந்தது. பாக்கியம் கூறுகிற வசைமொழிகளுக்கு மரிக்கொழுந்து கேட்டதன் பெயரில் பதிலடி கொடுக்கப் பழகி, பின்னர் அதுவே நாளாந்த வாழ்க்கையாகி அதில் ஊறிவிட்ட அவனுக்கு அந்த வாழ்க்கை பெரிதும் கவலைப்படுத்தவில்லை.

அவனுக்கும் ஆண்மை என்பது இருக்கின்றது என்ற மகத்தான கௌரவத்தை ஊரறியச் செய்து பிறந்த உமாவை நினைக்கும் பொழுது அவனுடனேயே தூங்குவேன் என்று அடம் பிடித்து தனது கால்களை அவனுடைய இடுப்பில் இட்டு ஒரு கையால் அவனைக் கட்டிப் பிடித்தபடி, ” அப்பா நான் நித்திரை போனதும் எழும்பக்குடாது ……” என்று உத்தரவும் பிறப்பித்தபடி துயிலும் அவளை நினைக்கும் பொழுது உள்ளமெல்லாம் பிரிவுத் துயரால் வெந்தது.

“உமா! என் கண்ணே!”

அரைத்தூக்கத்தில் கிடந்த அவன் புலம்பியபடி எழுந்து உட்கார்ந்திருந்ததை அந்த வீட்டில் யாருமே கவனிக்காததால், சைக்கிளை எடுத்தபடி அந்த இரவில், அந்த பனியில், உமாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்பாவைத் தேடித் தேடி அழுது கண்கள் குளமாகிச் சிவந்திருந்த உமாவை அடித்துப் படுக்க வைக்க முயன்று கொண்டிருந்த தாயும் மகளும் மதுரநாயகத்தைக் கண்டதும் ஒரு கணம் துணுக்குற்றனர். பின்னர் ‘அது’ மதுரநாயகம் தானே என்றதும் பாக்கியம் மகளைப் பார்த்துக் கூறினாள்.

“அது சரி கோகிலா! மீன் தண்ணிபட்டிட்டுது எண்டு காசி கதிர்காமம் சேது சிதம்பரம் என்டெல்லாம் போய் தீர்த்தமாடினதாக்கும்.!”

பாட்டியின் குரல் தணிந்து கேட்டதும், ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்த உமா “அப்பா!” என்று சிரித்தபடி கூவிவந்து, அவன் தூக்கி அணைத்துத் தலையைக் கோதியதும் ‘அம்மம்மா ! அம்மா எல்லாரும் அடிக்கினம் அப்பா! அப்பாவோடை நானும் வாறன் அப்பா!” என்று அழுதாள்.

மறு பேச்சின்றி மகளுடன் திரும்பிய மதுரநாயகத்தை ஓடி வந்து வழி மறித்த கோகிலா “எங்கை கொண்டு போறியள்? என்ரை உயிர் போனாலும் போகும். அவளை விடமாட்டன். நீங்கள் போனமாதிரிப் போங்கள். இனி இஞ்சை வரவேண்டாம். என்ரை விஷயத்தைக் கோட்டிலை பாக்கிறன்” என்று கத்திக் கொண்டே, உமா வீரிட்டு அழுததையும் பொருட்படுத்தாது, பறித்தாள்.

நிலத்தில் இறக்கிவிட்டு, உமாவை இரண்டு கையாலும் மாறி மாறி அடித்தாள்.

பின்னர் ‘தற் தற் வென்று உள்ளே இழுத்தச் சென்று, அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள் அவள்.

***

“உமா! இந்தத் தவணையிலிருந்து “மொன்ர சொறிக்குப் போறாளாம்!” வீட்டார் சொன்ன சேதி, மதுரநாயகத்துக்கு மதுரமாயிருந்தது.

உமாவை எப்படியும் வழி தெருவில் காணலாம் என்று புளங்காகித்தான் மதுரநாயகம். அதேவேளை அவனுடைய சந்தோஷத்தை , மானத்தைக் கெடுப்பது போல் தாபரிப்பு வழக்கு கட்டளையும் வந்திருந்தது.

“அம்மா! இனி நீங்க சொன்ன மாதிரி கோகிலா செத்தே விட்டாள். நான் எடுக்கிற முந்நூறு ரூபா சம்பளத்திலே மாதா மாதம் அவளுக்கு மாசியம் செய்யப் போறன்”- அழுதுகொண்டே சொன்னான் மதுரநாயகம்.

“நீ ஏன் அழுகிறாய்? ஆம்பிளை அழலாமா?” மரிக்கொழுந்து தேற்றினாள்.

“நான் ஆம்பிளையாக வளர இல்லையே! அழுவதைத் தவிர வேரை வழி என்ன இருக்குது?”

“சும்மா அலட்டாமல் பேசாமல் இரு. உனக்கு வேறை பொம்பிளை பாத்திருக்கிறம். நீ வாழத்தான் போறாய்?” மரிக்கொழுந்து யாரையோ பழி வாங்கிய பெருமிதங் கலந்த மகிழ்ச்சியுடன் கடறினாள்.

மதுரநாயகம் ஒன்றும் பேசவில்லை !

கல்லூரியில் ‘அக்கா” என்று வகுப்பு மாணவர்கள் காதறிய அழைத்து அவர்களைத் தண்டிக்கச் சக்தியற்று , “என்ன பேச்சு இது?” என்று சிரித்தபடி கூறும் அவனுக்கு தெம்பெல்லாம் தும்புக்குச் சமானம்.

“உமா!” அவன் அப்பொழுது நிலவிய மௌனத்தைக் கலைத்தபடி முணுமுணுத்தது அங்கு கேட்கவே, ‘ அதெல்லாம் வழக்கிலை சொல்லி, கோட்டாலையே பாரமெடுப்பம். நீ கல்யாணத்துக்கு ஓமெண்டு சொல்லு! என்ன?” என்று தாய் கேட்டதும் உமாவின் நினைவில் ‘ஓம் !’ என்றே விட்டான் அவன்.

***

“நீங்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ மறுப்பதாலும், தொடர்ந்து வெறுப்பு நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்தீர்கள் என்று நிரூபிக்கப்பட்டதாலும், பிரதிவாதி மாதம் நூற்றிருபது ரூபா தாய்க்கும் பிள்ளைக்கும் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. குழந்தை உமா சிறு பிள்ளையாதலால் பராயம் முடியும் வரை தாயின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.”

முதலியார் தீர்ப்பை வாசித்ததும் குறுக்கிட்ட மதுரநாயகம், “ஐயா! என் பிள்ளை ” என்று அழுவான் போல கேட்டான்.

“மாதம் இருமுறை பார்க்கலாம்,” நீதிபதி கூறிவிட்டு அடுத்த வழக்கு” என்றார்.

நீதிமன்றத்தைவிட்டு வெளியேறியதும் கலங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் மதுரநாயகம்.

அவன் கட்டவேண்டிய பணம் செலவு எதுவுமேயற்ற அவனுக்குப் பெரியதல்ல. அது உமாவுக்கும் எப்படியும் சுவறும் என்று அவன் நம்பினான். ஆனால் அவளை ஒரு மாதத்தில் இரண்டு தடவைகள் பார்க்கலாம் என்ற உத்தரவை எண்ணியபொழுது நெஞ்சு கனத்தது. தொண்டை மிடற்றியது.

“மாதமிருமுறை எவ்வளவு மணித்தியாலம்…” என்று அவன் தன்னுள் கேள்வி எழுப்பிய படியே , கூடவந்திருந்தவர்களுடன் நகரத் தொடங்கினான்.

உமா பள்ளிக்குப் போகும் பொழுதும், பள்ளியால் வரும் பொழுதும் எப்படியாவது பார்க்கலாம் என்றிருந்த மதுரநாயகத்துக்கு அது கிடைக்கவில்லை. அவ்வேளைகளில் அவன் கல்லூரியிலிருக்க வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது.

அவன் தவிதவித்து ஒரு வருடம் வரை வாழ்ந்து களைத்ததும், மஞ்சுளா அவனுக்கு மற்றொரு துணையானாள்!

சமூகம் என்பது தாய் வீடு மட்டும் தான் என்று அஞ்சிய மதுரநாயகம் அந்தச் சமூகத்தையுயும் உள்ளடக்கி, வேறொரு சமூகம் இருப்பதையோ, அல்லது அது “மரிக்கொழுந்து, குடும்பத்தைக் கெடுத்துவிட்டாள் ! கைகேயி… சூர்ப்பனகை!!” என்று ஏசியதையோ, “மஞ்சுளா! என்னத்தைக் கண்டு மயங்கிவிட்டாள்?” என்று நையாண்டி செய்ததையோ உணராமல் ஏதோ ஒன்று தடுத்துவிட்டது.

“ஓ! அதுவா? மஞ்சுளா குடித்துவிட்டு ஊரெல்லாம் வம்புக்கு இழுபட்டு உலுத்தனாகத் திரியும் அப்பனைத் தவிர, மற்றப்படி அநாதை !”

ஊர் அவளை அறிமுகஞ் செய்தது!

“அந்தளவுக்கு அவளுக்குப் பறுவாயில்லை ” சமூகம் சொல்லி ஆறுதலாகியது.

கட்டிலில் புரண்ட மதுரநாயகம் “உமா ! கிட்ட வா! விழுந்திடப் போறாய்?”

என்றபடி மஞ்சுளாவை இழுத்தணைத்ததை அவள் வெட்கத் துடனும், கணவனையிட்ட வேதனையுடனும் ஏற்றுக் கொண்டாள்.

நித்திரை கலைந்த அவன் கையிற்பட்ட அந்த மென்மையான ஆனால் வளர்ந்த உடலை ஸ்பரிசித்ததும், நாணி எழுந்து, தலைக்குள் கைபுதைத்து இருந்தான்.

மஞ்சுளா விசும்பினாள்!

அந்த விசும்பலில் தான் எத்தனை அர்த்தங்கள் ?

கன்னிமையின் மூச்செல்லாம், கனவெல்லாம் ஏழ்மையின் பெயரால் அங்கு அடியெடுத்து வைத்து விட்ட அவளுக்குத் தீரும் என்ற அவள் தனிப்பட்ட முறையில் எண்ணி, எண்ணி ஏங்கியிருந்த தொல்லாம் பெருமூச்சாகவும், பகற்கனவாகவும் போகத்தான் வேண்டுமா?

“ஏன் என்னை வெறுக்கிறியள்?” எங்கோ வெறித்தபடி கேட்டாள் மஞ்சுளா!

“ம்! நான் ஆரையும் வெறுக்கயில்ேைல என்னைத்தான் எல்லோரும்…..” – அவன் பிள்ளை போல் அழுதான்.

“சே! என்ன இது? ஏன் நீங்கள் அழுகிறியள்?” என்று கேட்டபடி கட்டிலில் எழுந்திருந்து, தன் அழுத கண்களைத் துடைத்துவிட்டு, அவனைத் தன் மடி மீது சாய்க்க முனைந்தாள் மஞ்சுளா !

அவர்களுடைய கரகரத்த ஆனால் விசும்பல் செறிந்த குரலைக் கேட்டு கதவைத் திறந்த மரிக்கொழுந்தைக் கண்டதும் இருவரும் துணுக்குற்று எழுந்து நின்றனர்.

“என்னடா தம்பி! உமாவைப் போல எத்தினை உமா வேணும்? உமா?… மஞ்சுளாவும் பெண்தான். அதுகும் அழகான பெண் பேசாமல் படு.”

மரிக்கொழுந்து போய்விட்டாள் !

‘உமாவைத் தருவியா?” – அந்த அம்மா பிள்ளை செல்லமாகக் கேட்டான்.

“ஆம்!” என்று தலையசைத்தான் மஞ்சுளா!

“விடி!” என்றால் விடியாத இரவு தன் வழியே, என்றும் போல் விடிந்து கொண்டிருந்தது.

அ! அவனைத் தவிர!

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *