இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 2,628 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

‘ஏழாம் தேதி கலியாணம்’ என்று நிச்சயிக்கப்பட்டது. ரேவதி அணிந்திருந்த தங்கமும் வைரமும் நகைகளாக உருமாறி வைதேகி மற்றும் சுபாவை அலங்கரித்தன. 

ஆறாம் தேதி அதிகாலையில் ஒரு டூரிஸ்ட் கார். வந்து நிற்க, ரேவதியும் வீராவும் ஏறிக் கொண்டார்கள். 

“பெரியம்மா இன்னிக்குத்தான் என் சிநேகிரி தாரிணி வந்தா, அவளுக்கு அடையாறு பார்க் ஷெராடன்ல இடம் போட்டிருக்கு. நேரே ஏர்போர்ட்லேந்து அங்கே போயிடுவோம். நேரமாகும்.” 

“சாப்பாட்டுக்கு வந்துடுவீங்க இல்லியா?”

”நான் தாரிணியோட சாப்பிட்டு போறேன்!”

“வீரா, நீ?” என்று சாரதம் கேட்டாள்.

”ரேவதி என்ன சொல்றாளோ அதுபடி செய்யறேன் அம்மா!” 

திடீரென்று சாரதத்துக்கு கோபம் வந்தது.

“ஏண்டா வீரா நாளைக்கு உன் அக்காவுக்கும் தங்கைக்கும் கலியாணம், தெரியுமோ இல்லியோ?” 

“நாளைக்குத்தானே அம்மா!” 

“இன்னிக்கு பன்னண்டு மணிக்கு எல்லாரும் வீட்டைக் காலி பண்ணிட்டு மண்டபத்துக்குப் போயிடுவோம். ராத்திரி ஏழுமணிக்கு நிச்சயதார்த்தம். இதெல்லாம் உனக்குத் தெரியுமோ, தெரியாதா?” 

“தெரியுதம்மா..” என்றான். 

”தெரிஞ்சும் எதிலும் பட்டுக்காம, ரேவதி கூடவே போனா எப்படி? பாபு, சத்யா ரெண்டு பேரும் உழைக்கிற மாதிரி நீயும் அக்கறை காட்ட வேண்டாமா?” 

”ஓகே அம்மா… நான் ஏர் போர்ட்லேந்து நேரா இங்க வந்துடறேன். சாப்பிட வரேன்” 

“இந்தாம்மா ரேவதி., உன்னாலதான், நீ வந்த வேளைதான் என் ரெண்டு பொண்ணுக்கும் கலியாணமே நடக்கிறது. நீயும் வந்துரும்மா.. உன் சிநேகிதியையும் அழைச்சுட்டு வா…” 

“ட்ரை பண்றேன்.” 

“அப்படிச் சொல்லாதே ரேவதி… நாங்க கூப்பிட்டாத்தான் அவ வருவான்னா, உன் பெரியப்பாவை அனுப்பறேன்.”

“அப்ப வருவா.. நிச்சயம் வருவா.”

நிச்சயதார்த்தம். 

மண்டபத்தில் உறவினர்களும் குடும்ப நண்பர்களும் நிறைந்திருந்தார்கள். ரேவதி கிளிப்பச்சை நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு, வருகிறவர்களையெல்லாம் புன்முறுவல் பூக்க வரவேற்றாள். இந்தக் காட்சியைக் காண சாம்பசிவத்துக்குப் பெருமிதமாக இருந்தது. சாரதமும் பூரித்துப் போனாள். 

திடீரென்று ஒரு படகுக் கார் வந்து நிற்க அதிலிருந்து சல்வார் கமீஸ் அணிந்து, கண்களை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி தரித்து ஒரு பெண் இறங்கி, எல்லோரையும் அலட்சியமாகப் பார்த்துக்கொண்டே பிரவேசித்தாள். ரேவதி அவளை நோக்கி ஓடினாள். 

“ஹாய் தாரிணி!” 

“நீ சொன்னாயே, உன் பெரியப்பா நேரிலே வந்து அழைச்சாரேன்னு வந்தேன்.” 

இதற்குள் சாம்பசிவம் வந்தார். 

“நீ வந்ததில் ரொம்ப சந்தோஷம் தாரிணி. நாளைக்கு முகூர்த்தம். அதற்கும் நீ அவசியம் வரணும்.” 

“ஐ வில் ஸீ!” என்ற அவள் கண்ணாடியைக் கழற்றினாள். இப்போது அவளுடைய உண்மையான அழகு மண்டபம் பூராவும் பிரகாசித்தது. 

இரு கல்யாணங்களும் அமோகமாக நடந்து முடிந்தன. 

அதற்கு அடுத்த நாள் காலை மண்டபத்தில் அனைவரும் கூடி இருந்தார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் சாப்பாடு முடிந்துவிடும். அதன் பின்னா மண்டபத்தையும் காலி பண்ணலாம். 

திடீரென்று வீரா எழுந்தான், ”யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!” 

சுபா சிரித்தாள். “என்ன அண்ணா, சென்ட்ரல் ஸ்டேஷன் அன்னௌன்சராயிட்டாயா?”

“ப்ளீஸ் லென்ட் புலர் இயாஸ்!”

“வீரா ஷேக்ஸ்ப்பியராகிட்டான்!” என்றாள் வைதேகி. 

“ஜூலியர் சீசர்ல இதை அன்டோனி சொல்றானா, ப்ரூட்டஸ் சொல்றானா?” என்று சார்தாத் கேட்டார். 

“வீரா என்ன சொல்லணுமோ அதைச் சட்புட்டுன்னு சொல்லு.” என்றான் சத்யா. 

“நம்ப வைதேகி, சுபா ரெண்டு பேருடைய கலியாணத்துக்கும் ஆதார சக்தியா இருந்தவ ரேவதி, அதுக்கு மொதல்ல நாம நம்ப நன்றியைத் தெரிவிச்சாகணும்.” 

“தாங்க யூ ரேவதி.” 

“ரொம்ப நன்றியம்மா ரேவதி.” 

“ரேவதிப் பொண்ணு, உனக்கு நான் ரொம்பச் கடமைப்பட்டிருக்கேம்மா.”

“எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ், ரேவதி.”

“அமெரிக்காவில் ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க நீ பாடுபட்டதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலே, ரேவதி.” 

வீரா விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். 

“இப்போ எல்லோரும் சொல்லியாச்சு, நானும் என் நன்றியைக் தெரிவித்துக் கொள்ளுகிறேன். என் திருமணமும் அவள் மூலமாகத்தான் நடக்கப்போறது” 

“என்னடா சொல்றே வீரா!” 

“யார்டா அந்தப் பொண்?” 

“லவ்வா?”

“பொண்ணு யாருப்பா, வீரா?”

“அப்பா! அம்மா!’ பொண்ணின் பெயர் ரேவதி பஞ்சநதம்?” 

சாரதம் சீறி எழுந்தாள், 

“என்னடா சொன்னே?” 

“வருங்கால மனைவியின் பெயரைச் சொன்னேன், அம்மா!” 

“அடப்பாவி! அவ உன் தங்கைடா.” 

“கஸின் ஸிஸ்டரை கஸின் பிரதர் கலியாணம் செய்து கொள்றது நம்ப நாட்ல வழக்கம் இல்லே…” – வைதேகி.

“இங்கிலண்டல உண்டு..” – சார்நாத், 

“ஏன் வீரா, உன் புத்தி இப்படிப் போறது?”

”ஊரே சிரிக்குமே!” – சாந்தா.

“ஊரும் சிரிக்காது. உலகமும் சிரிக்காது” என்றான் சத்யா. 

“என்னடா சத்யா. நீயும்…” 

“மாமி. இப்ப நான் உங்க மாப்பிள்ளை, ‘டா’ போட்டுப் பேசப்படாது… நீங்கன்னு சொல்லணும்.” 

இந்த சமயம் பார்த்து படகுக் கார் வந்தது. கறுப்புக் கண்ணாடி இல்லாமல், புடவை கட்டிய தாரிணி இறங்கி வந்தாள். 

“என்னடி, எல்லார்க்கும் சொல்லியாச்சா?” என்று அவள் ரேவதியிடம் கேட்டாள். 

“வீரா சொன்னார். அவ்வளவுதான் ஒரே கூச்சல், குழப்பம்!” 

”சரி விஷயத்தை எங்கிட்ட விடு!” என்ற தாரிணி எழுந்தாள். அனைவரையும் வட்டமாகப் பார்த்தாள். பிறகு கலகலவென்று சிரிக்கலானாள். பிறகு –

“எல்லார்க்கும் ஒரு செய்தி!” என்றாள். 

எல்லோரும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“வீர்ராகவனுக்கும் என் சிநேகிதிக்கும் இன்னும் சில நாள்ல ஓட்டல் வுட்லண்ட்ஸ்ல கலியாணம். பிரான்ஸ், ஸலிட்ஸர்லண்ட் போன்ற இடங்கள்ல ஹனிமுன். வீரா அப்புறம் அமெரிக்கா போயிடுவார்!” 

“இதைச் சொல்ல நீ யார்?” என்று சாரதம் வெகுண்டாள். 

“நீங்க கோபமா பேசறப்பதான் ரியல் பெரியம்மாவாத் தெரிகிறேள்!” 

“என்ன சொன்னே?”

“நான்தான் ரேவதி, ரேவதி பஞ்சநதம், என் சிநேகிதிதான் தாரிணி, பெரியப்பா நீங்க சொல்லுங்களேன்!” 

ரேவதி எழுந்தாள், சிரித்தாள். 

“என் பேரு தாரணி, ரேவதியும் நானும் சின்ன லயசிலேர்ந்து சிநேகிதிகள். உங்க குடும்பத்தின் முழு சரித்திரமும் தெரியும் எனக்கு. பதினஞ்சு வருஷத்துக்கு மேலா நீங்க யாரும் ரேவதியைப் பார்த்தது இல்லைங்கற ஒரு உண்மையை என்னை அவளாக நடிக்க வைச்சது. ரேவதி ஒரு ரிசர்வ்ட் டைப், எதை எதை எப்படிப் பேசணும், செயலாத்தனும்னெல்லாம். அவளுக்குத் தெரியாது. பெரியம்மாகிட்டயோ. சாந்தாகிட்டேயோ சரிக்குச் சரி நின்று பேச தைரியம் கிடையாது. இதெல்லாம் எனக்குக் கைவந்த கலை, ‘நான் என் பெரியப்பா குடும்பத்துக்கு எல்லாம் செய்யக் கடமைப்பட்டவ. ஆனா என் திட்டங்களை எப்படிச் செய்து முடிப்பதுன்னு குழப்பமா இருக்குன்னா. அதுக்கு அப்புறம்தான் இப்படி ஒரு நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதினோம். ஆனா ஒரு விஷயம். வீராவை எனக்கு முன்னமே தெரியும். ரெண்டு வருஷம் முன்னாடி, என் அப்பா பெசன்ட் நகர்ல கட்டின நாலு மாடிக் கட்டிடத்துக்கு அவர்தான் ஸைட் என்ஜினியர். அப்ப ஏற்பட்ட பரிச்சயம் சிநேகமா வளர்ந்தது. நான் இவ்வளவு சொல்லியும் சந்தேகம் இருந்தா, நானும் ரேவதியும் எங்க பாஸ்போர்ட்டுகளைக் காட்டறோம்.”

“அவசியம் இல்லே, தாரிணி, நீ வந்த அன்னிக்கே, நீ என் தம்பி பொண் இல்லைன்னு எனக்குத் தெரியும்”

“எப்படி பெரியப்பா.. சே… பழக்கதோஷம். அதனால என்ன… பெரியப்பான்னு கூப்பிடத்தில தப்பு இல்லே. எப்படித் தெரியும்.” 

“சத்யா என் காதுக்கு மட்டும் சொன்னான்.”

“சத்யா உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள். 

“நான்தாண்டீ முன்கூட்டியே சத்யாவுக்கு போன்ல சொன்னேன். நாக்கை அறுத்தாலும் ரகசியத்தை வெளியே சொல்லமாட்டான்னு தெரியும். என் அப்பாவுக்கு சத்யான்னா உசிர்” என்றாள் ரேவதி. 

“எனக்கும்தான்!” என்று சுபா சத்யாவின் காதில் கிசுகிசுத்தாள். 

“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு!” என்றாள் சாரதம். 

ரேவதி, “பெரியம்மா இனிமே ஒரு குழப்பமும் இராது. நான் எழுதிக் கொடுத்ததையெல்லாம்தான் என் சிநேகிதி நடத்திக் காட்டினாள். நீங்க வேணும்னா பிரொபசர் சார்நாத்தைக் கேளுங்க!” 

சார்நாத் சிரித்தான். 

“இந்த இரண்டு குட்டிச் சாத்தாள்களுமா ஏதோ விஷமம் செய்யப் போறான்னு எனக்கு ஏற்கெனவே தெரியும். ஆனா விவரமா எதுவும் தெரியாது. ஆனா ஒண்ணு. இந்த ரெண்டு பேராலதான் வைதேகி என் மனைவி ஆனாள்!” என்றான் அவன். 

வீரா எழுந்தான். 

“இவ்வளவெல்லாம் செய்த ரேவதிக்கு – உண்மையான ரேவதிக்கு நாம கடன்பட்டிருக்கோம், அம்மா, கைம்மாறு செய்தாகனும்!” 

“குடும்பத்தையே பிரிச்சு வைச்சவளுக்கு கைம்மாறா” என்றாள் தாரிணி, பிறகு சிரித்துக் கொண்டே 

“அவளுக்கும் என் அண்ணாவுக்கும் இந்த மாசம் கடைசி வெள்ளி அன்னிக்கு ஓட்டல் நியு உட்லண்ட்ஸ்ல கலியாணம். ப்யூர் லவ் மாரேஜ், என் அண்ணா ஹார்வர்ட்ல எங்க ரெண்டு பேருக்கும் பிரொபசர். பேர் கே.குமார், கல்யாண்குமார்!” என்றாள். 

”ரேவதி… நீ என் பொண். நான்தான் கன்னிகாதானம் செய்து கொடுப்பேன்!” 

“எனக்கு வேறு யார் இருக்கா. பெரியப்பா? நீங்களும் பெரியம்மாவும்மான் எல்லாம்.” 

“அப்பப்பா எத்தனை கலியாணங்கள்!” என்றான் சத்யா. 

”என்ன எத்தனைன்னு அசடு வழியறீங்க, சத்யா…நாலு… நீ வைதேகி, தாரிணி, ரேவதி…” 

”அதான் தப்பு: சிவகுமாரை மறந்துட்டியே, அவன் உன் மாமா பிள்ளை இல்லையா?” 

“கலியாணச் சாப்பாட்டுக்குக் குறைச்சலே இல்லே!” என்றான் பாபு. 

“சப்புக் கொட்டி சப்புக் கொட்டி உங்க நாக்கே சின்னதாவிடும்!” என்றாள் சாந்தா. 

திடீரென ஒரு புதுக்குரல். 

சமையற்கார சிப்பந்தி, “சார் இலை போட்டாச்சு!” என்றார். 

பாபு ஓடினான். 

சத்யா நடந்தான். 

வீரா நகர்ந்தான். 

சாம்பசிவம் மட்டும் அசையவில்லை. அவர் இதுவரை அனுபவித்திராத ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தார். அதிலிருந்து அவரை மீட்டு அழைத்துப் போக சாரதத்துக்கு நீண்ட நேரமாகியது. 

(முற்றும்) 

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *