இன்னுமொரு கிளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 9,397 
 
 

மார்லின் பேக்கர் தூரத்தில் வருவதைக் கண்டதும்.எனக்கு எதோ செய்கிறது. வழக்கப்போல் ,’ஹலோ,குட்மோர்னிங்’ சொல்லி விட்டுப ;போகத்தான் நினைக்கிறேன். நீண்ட நாளாக அவளைச் சந்திக்கவில்லை. எங்களின் திடிர் சந்திப்பு தயக்கத்தைத் தருகிறது. அவள் நெருங்;கி வந்ததும் அவள் முகத்தை மிக அருகில் கண்டபோது,’ஹலோ மார்லின் ஹவ் ஆர் யு’ என்று கேட்கத்தான் தோன்றியது.அவளும் நானும் ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய சினேகிதிகள்.இன்று இருவரும் அன்னியர்கள்போல் பழகவேண்டிய நிர்ப்பந்தம்.

ஐந்து வருடங்களுக்குமுன் அவள் எங்கள் ஆபிசுக்கு வந்தபோது, அவளது குரலில் வீணையின் இனிமையைக் கற்பனையிற் கண்டவள் நான். ஓரு அழகிய பூந்தோட்டம் பெண்ணுருவில் பவனிவரும் அழகு அவளுடையது.அவளின் அழகிய தோற்றத்தைவிட அவளது இனிய,அன்பான பழக்கத்தால் பலரைக் கவர்ந்தவள்.அவளுக்கு அப்போது இருபத்தைந்து வயது.பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் உலகம் சுற்றிப் பார்த்துவிட்டு; வந்த அனுபவத்துடன் எங்கள் ஆபிசுக்கு அவளது உத்தியோகத்தின் முதலாம் பாகம் ஆரம்பத்திருந்தது.இளமை பொங்க அன்று வந்தவளின் கண்களில் இன்று ஏக்கம் தழுவிய வரட்சி தெரிகிறது.

‘ஹலோ ராஜி’ அவள் என்னையுற்றுப் பார்த்தாள்.அவளைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.

”எப்படியிருக்கிறாய் மார்லின்?’ நான் உண்மையான கரிசனத்துடன் கேட்டேன். புரட்டாதி மாதக் காற்றில் அவள் பொன்னிறத் தலைமயிர்கள். அலைபாய்ந்தன.

‘ஸோ..ஸோ’ உணர்ச்சியற்ற புன்சிரிப்புடன் சொன்னாள்.

அதற்குமேல் அவளிடம் பேச்சைத் தொடரத் தயக்கமாகவிருந்தது. எதைப் பற்றிப் பேசுவது?

ஆங்கிலேயர்கள் தர்மசங்கடமான நேரங்களில் காலநிலை பற்றிய விடயங்களைப் பேசுவார்கள். அதையாவது பேசலாமா? மார்லின் எனது நெருங்கிய சினேகிதியாயிருந்தவள் அவளிடம்போய்ப் போலித்தனமாக உறவாட நான் விரும்பவில்லை.

‘சங்கீதா வேலையை விடுவதாகக் கேள்விப் பட்டேன்..’ மார்லின் அப்படிச் சொன்னது எனக்கு இன்னும் தர்மசங்கடத்தையுண்டாக்கியது.சங்கீதாவும் மார்லினும்; இருதுருவங்கள்.ஒருத்தரை ஒருத்தர் நேரடியாகப் பகைத்துக் கொள்ளாத உறவைப் பரிமாறிக் கொண்டவர்கள்.

‘சங்கீதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன்’ நான் மார்லினுக்குச் சொன்னேன்.

‘ஊரிலா அல்லது இங்கேயே..லண்டனிற்தானா?’

மார்லின் இதையெல்லாம் ஏன் கேட்கிறாள் என்று தெரியும்.நான் மறுமொழி சொல்லவில்லை. மார்லின் என்னை ஊடுருவிப் பார்க்கிறாள்.

‘ராஜி லன்ஞ் ரைம் என்னைச் சந்திக்க முடியுமா?’அவள் குரலில் ஒரு அவசரம். அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்’ உம், சந்திக்கிறேன்’ என்றேன்.

நான் எனது டிப்பார்ட்மென்டுக்குப்போகப் படியேறுகிறேன் அவள் தனது டிப்பார்ட்மென்ட் நோக்கி நகர்கிறாள்.ஆறு மாதங்கள் வேலைக்கு வராமலிருந்தவள் இன்றுதான் வந்திருக்கிறாள்.சோர்ந்துபோன தோற்றம்,உடைந்துபோன வாழ்க்கையின் பிரதிபலிப்பு.முப்பது வயதில் முதிர்ச்சியடைந்த அலுப்பு.

எனது டிப்பார்ட்மென்டில் கால் வைத்ததும் சங்கீதாவின் கல கலவென்ற சிரிப்பு என்னை வரவேற்கிறது.இன்னும் சிலவாரங்களில் ‘திருமதி’யாகப்போகும் சந்தோசம் அவள் குரலில் தொனிக்கிறது.

நான் மௌனமாக எனது இருப்பிடத்துக்குப் போகிறேன்.

எஸ்தர் என்கோமா என்ற எனது சக ஆபிசர்- செம்பாபுவே நாட்டைச் சேர்ந்தவள்-எந்த விடயத்தையும் இரண்டுதரம் கேட்டு விளங்கிக் கொள்ளும் என் சினேகிதி. எனது மௌனத்தை அவதானித்து விட்டு என்னிடம் வருகிறாள்.

‘வட் இஸ் த மேட்டர் ராஜி?’எஸ்தர் என்கோமா என்னைக் கேட்கிறாள்.

அவளை நிமிர்ந்து பார்க்கிறேன். எந்தநேரமும் சூயிங்கம் துவளும் அவளது வாயிலிருந்து துவண்டு நசிந்த பல கேள்விகள் வருவதுண்டு. கிட்டத்தட்ட ஐந்தடி ஆறங்குலம் கொண்ட எஸ்தர் குழந்தை மாதிரிக் கேள்விகள் கேட்பதை நான் எப்படிப் பொறுமையாகச் சகிக்கிறேன் என்று எங்கள் ஆபிசில் சிலர் கேட்டிருந்கிறார்கள்.

கள்ளங் கபடமற்ற நாற்பது வயதுப் பெண்ணான எஸ்தர் என் மறுமொழிக்குக் காத்திருக்கிறாள்.

‘நதிங் த மேட்டர் எஸ்தர்..’ என்ற எனது மறுமொழி அவளுக்குத் திருப்தி தரவில்லை.

அவள் எனது முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள். ஏதோ கேட்கப் போகிறாள் என்று நன்றாகப் புரிந்தது.

‘எஸ்தர் என்ன அப்படி என்னைப் பார்க்கிறாய்’ நான் எனக்குள் வரும் எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமற் கேட்கிறேன்.

‘ மார்லின் பேக்கர் கல்யாணம் செய்து விட்டாளா?’ எஸ்தரின் கேள்வியால் எனக்கு வரும் ஆத்திரத்தை வெளிப் படுத்த்pக்காட்ட முடியவில்லை.

‘ எஸ்தர்..இதைக் கவனமாகக் கேள். மார்லினின் கணவர் ரமேஷ்தான் அவளை விவாகரத்து செய்து விட்டு இந்தியாவுக்குப் போய் இரண்டாம் தரம் திருமணம் செய்திருக்கிறாராம்…அந்தத் துக்கத்தில் மார்லின் ஆறுமாதம் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு இன்றுதான் பழையபடி வேலைக்குத் திரும்பியிருக்கிறாள்’

எஸ்தர் என்கோமாவுக்கு விடயங்களை விளக்கிச் சொல்லி அலுத்துப்போனவள் நான்.

சங்கீதா எங்களைத் தாண்டிப் படியிறங்கிப் போவது தெரிந்தது. நான் கொம்பியுட்டரைத் தட்டிவிட்டு என் வேலையைத் தொடங்கினேன்.

இன்று எப்படியும் சங்கீதா மார்லினைச் சந்திக்கப்போவது நிச்சயம் என்று எனக்குத் தெரியும். எனது நினைவு முடிவுபெறாத நிலையில் சங்கீதாவின் குரல் கேட்டது,’அவள் வந்திருக்கிறாள்’ .சங்கீதாவின் குரலில் நையாண்டித்தனம் ஊடுருவியிருந்ததை நான் உணர்ந்த படியால், நான் சங்கீதாவைத் திரும்பிப் பார்க்கவில்லை.

‘மார்லின் பேக்கர் வேலைக்கு வந்திருக்கிறாள்’ சங்கீதா ஆச்சரியத்துடன் என் தோள்களையுலுக்கினாள்.

‘ஆமாம்..அவள் வேலையிலிருந்து லீவு எடுத்திருந்தாள்…இப்போது திரும்பி வந்திருக்கிறாள்…அவள் வேலையை விட்டு ஒரேயடியாகப் போகவில்லையே?’ நான் மறுமொழி சொல்கிறேன்.

‘ உம்..உம்.. அவளுக்கென்ன..இன்னொருத்தனைப் பிடிப்பது கஷ்டமா அவளுக்கு?’ சங்கீதாவின் குரலிலிருந்த அழுக்குத் தனம் எனக்கு அருவருப்பைத் தந்தது. நான் ஒன்றும் பேசவில்லை..எனது மௌனம் சங்கீதாவுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்குப் புரிந்தது.

‘சங்கீதா மார்லினில் உனக்கேன் இத்தனை கோபம்?’ நான் நேரடியாகச் சங்கீதாவைப் பார்த்துக் கேட்கிறேன் கேட்கக் கூடாத கேள்வியது. சங்கீதாவும் மார்லினும் ஒருத்தனைக் காதலித்தவர்கள். அவர்கள் காதலித்த ரமேஷ் மார்லினைத் திருமணம் செய்தான்.

ஆபிசில் கூட்டம் வரத் தொடங்கி விட்டது. டேவிட்டும் ஸ்ரிவனும்.ஹோமோசெக்சுவல் தம்பதிகளின் மெல்லிய கிசுகிசுப்பு எங்களைத் தாண்டிப் போகிறது.

எப்போதும் எதிலிலோ அல்லது யாரிலோ கோபப் படும் லாரா ஹான்ஸனின் அவசர நடை தூரத்திற் கேட்கிறது.ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தள்ளுவண்டியில் ஆபிசுக்கு வரும் ஹரிசன் பீல்டின் இருமல் ஆபிசை நிறைக்கிறது.

சங்கீதாவிடம் நான் கேட்டகேள்விக்கு அவள் மறுமொழி சொல்லவில்லை.அவளது அழகிய விழிகளின் ஆத்திரம் எனக்கு விசித்திரமாகவிருக்கிறது.

‘ரமேஷின் வாழ்க்கையை அநியாயமாக்கிய மார்லினில் எனக்குக் கோபம்.இந்தியர்கள் என்றால் இந்த வெள்ளையர்களுக்கு ஒரு இளக்காரமா? அவர்களுடன் காதல் பண்ணுவது,கல்யாணம் செய்வது.விவாகரத்து செய்வது அதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு’- சங்கீதா பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

உலகம் பரந்த இந்தியர்களெல்லாம் அப்பழுக்கிலாத உத்தமர்கள் என்று சங்கீதா அவர்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கப் போகிறாளா?

ரமேசுக்கும் மாலினிக்குமிடையில் என்ன பிரச்சினை? ஏன் அவர்கள் விவாகரத்து செய்துகொண்hர்கள் என்ற விளக்கம் தெரியாமல் சங்கீதா ஏன் உளறிக் கொட்டுகிறாள்?

அவளை நான் ஏறிட்டுப் பார்க்கிறேன். சங்கீதா மிகவும் கவர்ச்சியான பெண்.எடுப்பான தோற்றம்.எப்போதும் மிகவும் நாகரிகமான உடுப்புக்களை அணிவாள். எந்தவிதமான குளிர்காலத்திலும் அவள் சில்க் சேர்ட் அணியத் தயங்கமாட்டாள். மெல்லிய ஸில்க் மேலாடையைத் தாண்டி இளமை எட்டிப் பார்ப்பதை மற்றவர்கள் பார்ப்பது அவளுக்குத் தெரியும்.

‘பாவம் ரமேஷ் இரண்டாம்தாரம் செய்ய என்ன கஷ்டப்பட்டிருப்பானோ?’ சங்கீதா பெருமூச்சு விடுகிறாள்.என்ன முதலைக்கண்ணீர்? லண்டன் மாப்பிள்ளைக்கு இந்தியாவில் பெண்கிடைப்பது கஷ்டமாம்!

எங்கள் மனேஜரின் வருகையைக் கண்டதும் அவள் தனது இடத்திற்குப் போய்விட்டாள். எனது பக்கத்தில் நின்றிருந்தால் இன்னும் எதையெல்லாமோ பொரிந்து தள்ளியிருப்பாள்.

கொம்பியுட்டரில் எனது பார்வை பதிந்திருந்தாலும் எனது சிந்தனை மார்லினைத் தொடர்கிறது.

ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் ஆபிஸ் எக்கவுண்ட் டிப்பார்ட்மென்டில் ரமேஷ் வேலைக்குச் சேர்ந்த அதே கால கட்டத்தில் அந்த டிப்பார்ட்மென்ட செக்ரட்டரியாக வந்தவள் மார்லின் பேக்கர்.

தனது பல்கலைப் படிப்பான பொலிட்டிக்கல் சயன்ஸ் பட்டதாரிப் பட்டம் கிடைத்த கையோடு உலகம் சுற்றிப் பார்த்துவிட்டு, லண்டன் திரும்பியள், தனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை எக்கவுண்ட டிப்பார்ட்மென்ட செக்ரட்டரியானாள். வந்து சில வாரங்களிலிலேயே,ஐந்து மாடிக்கட்டிடத்தில் பணிபுரியும் முன்னூறு மேற்பட்ட உத்தியோகத்தரில் பலரைப் பழக்கம் பிடித்துக் கொண்டாள். இன்னுமொரு வேலை தேடாமல் தனது உத்தியோகத்தில் சந்தோசமாகத் தங்கி விட்டாள். தானொரு நல்ல அழகி என்ற கர்வம் எதுவுமின்றி எல்லோருடனும் அன்பாகவும் சினேகிதமாகவும் பழகினாள்.

ஓரு நாள் நான் அவளையும் ரமேஷையும் லிப்டில் ஒன்றாகக் கண்டபோது அவர்களின் கண்களில் படர்ந்திருந்த காதலை விபரிக்க எந்த மொழியும் தேவையில்லை.

அவள் வந்த வருடம் நடந்த நத்தார்ப்பண்டிகைப் பார்ட்டியில் அதிகாலை இரண்டுமணிவரைக்கும் ஒன்றாக நடனமாடிய ஜோடிகளில் மார்லினும் ரமேசும் ஒரு ஜோடியாகும்.

‘எனக்கு இந்து சமயத்தைப் பற்றிச் சொல்லேன்’ ஒருநாள் நான் மார்லினுடன் கன்டினுக்குச் சாப்பிடப் போனபோது என்னைக்கேட்டாள்.அவள் முகம் சிவந்திருந்தது. நான் அவளது அழகிய கன்னத்தைக் கிள்ளியபடி,’ ஏன் ரமேஷ் சொல்லித் தரவில்லையா?’ என்றேன்.

ஆங்கிலப் பெண்களுக்கும் நாணம் வரும் என்று அன்று நான் தெரிந்து கொண்டேன்.

அன்று பினனேரம் வேலை முடிந்து அண்டர்கிரவுண்ட ட்ரெயினுக்கு நான் போய்க் கொண்டிருக்கும்போது மார்லினும் வந்தாள்.

‘என்ன ரமேஷ் லிப்ட் தரவில்லையா?’ நான் வழக்கம்போல் மார்லினைச் சீண்டினேன்.அவள் என்னை நேரே பார்த்தாள் முகத்தில் தயக்கம் எதையோ சொல்ல எத்தனிப்பது தெரிந்தது.

‘ என்ன சொல்லப் போகிறாய்,இன்னும் எட்டுமாதத்தில் ஒரு பிள்ளை பிறக்கப் போகிறது என்ற சொல்லப் போகிறாயா?’அவளுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளையாசை என்ற எனக்குத் தெரியும்

எனது கேள்விக்கு அவள் சட்டென்ற சிரித்தாள்.

‘ரமேஷ் என்னைக் கல்யாணம் செய்ய ஆசைப் படுகிறான்’ மார்லினின் குரலில் தேன் பாய்ந்தது.

அவள் முகத்தில் நிலவு பளிச்சிட்டது. பெரும்பாலான ஆங்கில இளம்; பெண்களுக்குக் கல்யாணத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் மார்லின் வித்தியாசமானவள். அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.

‘எனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்’மார்லின் ஏன் எனக்கு இதைச் சொல்கிறாள்?

ட்;ரெயின் ஏதோ ஒரு இடத்தில் நின்றது.; தகரத்தில் அடைபடும் மீன்கள் மாதிரி பின்னேரம் ஆறுமணிக்குத ஆயிரக் கணக்கான பயணிகள் ட்ரெயினில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்.

‘இந்தியர்கள் குடும்பத்தில் மிகவும் அக்கறையானவர்கள்தானே?’ அவள் தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டாள்.

‘உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் குடும்பத்தில் அக்கறையுள்ளவர்கள்.

நான் அழுத்தமாகச் சொன்னேன்.

அவள் முகத்திற் திருப்தி. இறங்கவேண்டிய தனது இடம் வந்ததும் இறங்கிக் கொண்டாள்.

ஓரு சில கிழமைகளின் பின் சங்கீதா எங்கள் டிப்பார்ட்மென்டுக்கு வேலைக்கு வந்தாள்.

வந்து சில தினங்களிலேயே மார்லினைப் பற்றித் திட்டத் தொடங்கி விட்டாள்.’வெட்கம் கெட்ட பிறவிகள், லிப்டில் முத்தமிட்டுக்கொண்டு வந்தார்கள்.’

சங்கீதா முழங்கினாள்.மார்லினும் ரமேசும் ஒருத்தொருக் கொருத்தர் முத்தம் கொடுத்ததைப் பார்த்து விட்டாள் போலிருக்கிறது!

”ஓ கே, நோ கிஸ்ஸிங் இன் த லிப்ட் என்று நோட்டிஸ் ஒட்டுவோமா?’ எனது கிண்டல் அவளின் கோபத்தைக் கூட்டியது.

அடுத்த நாள் எனது புரஜக்ட் விடயமாக எக்கவுண்ட் டிப்பார்ட்மென்டுக்குப் போக வேண்டியிருந்தது.ரமேஷ் பிஸியாக இருந்தான்.வழக்கமாக என்னுடன் அதிகமாகப் பேசமாட்டான். மார்லினும் நானும் நல்ல சினேகிதிகள் என்ற அவனுக்குத் தெரியும்.

‘எப்போது அந்த விசேட நாள்?’ இவன் தன்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டதை மார்லின் எனக்குச் சொன்னது ஞாபகம் வந்ததால் நான் ரமேஷைக் கேட்டேன். அவன் வெட்கத்துடன் தலையைச் சொறிந்து கொண்டான். மார்லினின் பெயரைக் கேட்டதும் அவன் முகத்தில் காதல் பொங்கி வழிந்தது.

மார்லினும் ரமேசும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற விடயம் ஆபிசில் அடிபட்டபோது எரிச்சல் பட்ட ஒரேயொரு ஜீவன் சங்கீதா.

‘ ஏன் இந்த இந்தியர்களுக்கு இந்த வெள்ளைத் தோலில் இந்தப் பைத்தியமோ? சங்கீதா முணுமுணுத்தாள்.

காதல் என்ன மற்றவரின் கலர் பார்த்தா வரும்?

திருமணத்தன்று வெண்ணிறத் திருமண ஆடையில் மார்லின் ஒரு இளவரசி மாதிரித் தோன்றினாள்.ரமேஷ் இந்தியத் திருமண ஆடையலங்காரத்தில் ஒரு இளவரசன் மாதிரி வலம் வந்தான்.

‘உங்கள் இருவரையும் பார்த்து உனது தாய் மிகவும் சந்தோசப் படுவாள்’ நான் ரமேசுக்குச் சொன்னேன்.

அவனின் தாய்க்குச் சுகவீனம் காரணமாக அவளால் லண்டனுக்கப் பிரயாணம் செய்ய முடியவில்லை. அவளின் சுகவினம் காரணமாக ரமேஷ் நீண்ட விடுமுறை எடுத்துக் கொண்டு இந்தியா போயிருந்ததால் இப்போது அவனுக்கு இந்தியா செல்ல நீண்ட விடுமுறை கிடைக்காததால் அவனின் திருமணம் லண்டனில் நடந்தது.இந்தியாவிலிருந்து அவனின் தகப்பனும் சகோதரர் குடும்பமும் வந்திருந்தனர். மார்லினின் அழகில் அவர்கள் சொக்கி விட்டார்கள். பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிகவும் நல்ல மனிதர்களாகத் தெரிந்தார்கள்.

‘எனது இளைய மகன் அமெரிக்காவிற் படிக்கிறான் ஜப்பானியப் பெண்ணை விரும்புகிறான் போலிருக்கிறது….எல்லாம் அவர்களின் தலைவிதி..அவர்கள் சந்தோசமாக இருந்தாற் சரி.அவர்களின் நல்ல வாழ்க்கைக்கு ஆசிர்வதிப்பதுதானே ஒரு தகப்பனின் கடமை’ என்று ரமேசின் தகப்பனார் பெருமூச்சடன் சொன்னார்.

‘ராஜி..’ என் சிந்தனை கலைந்தது. எஸ்தர் ஏதோ என்னிடம் கேட்பதற்காக நின்று கொண்டிருந்தாள். ஸ்ரேசனரி அறைக்குப்போய் அங்கு தனக்குத் தேவையான பென்சில் பேப்பர்களை எடுக்காமல் எனது மேசையிலிருந்து அள்ளிக் கொண்டுபொவது எஸ்தரின் ‘அன்பான’சினேகிதத்தின் ஒரு பிரதிபலிப்பு.

‘என்ன எஸ்தர்?’ என்று கேட்படி திரும்பினேன்.

‘மார்லின் தற்கொலை செய்த கொள்வதற்காக ஓவர்டோஸ் எடுத்தாளாம்..உண்மையா?’ எஸ்தர் என்னைக் கேட்கிறாள்.

மார்லின் ஆறுமாதம் வேலைக்கு வரவில்லை.ஏன் வரவில்லை என்று கேட்பது அநாகரிகம்.’எப்படியிருக்கிறாய்?’ என்று நான் ஒரு தரம் போன் பண்ணியபோது,’ ராஜி, பிளிஸ் தயவு செய்து என் தனிமையைக் குலைக்காதே’ என்றாள்.

அதன்பின் இன்றுதான் அவளைக் கண்டிருக்கிறேன்.அவள் என்ன செய்தாள் என்று எனக்குத் தெரியாது. எஸ்தருக்கு எத்தனையோ வதந்திகள் தெரிந்திருக்கின்றன.

‘எஸ்தர் எனக்கு மாhலினின் தனிப்பட்ட விடயங்கள் தெரியாது’

நான் எஸ்தருக்குச் சொன்னேன்.

‘நீ அவளுடைய சினேகிதியாச்சே’

நான் எஸ்தரிடம் எதையோ மறைப்பதாக என்னைக் குற்றம் சாட்டுகிறாளா?

‘எஸ்தர், ஆங்கிலேயர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பத்திரமாக வைத்திருப்பார்கள்…..’ நான் உண்மையைச் சொன்னேன்.

‘ம்ம்..இவர்களுக்கெல்லாம் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது இவர்களாற் தாங்க முடியாதிருக்கிறது’ எஸ்தர் சப்புக் கொட்டிவிட்டு நடந்தாள்.

டெலிபோன் மணியடித்தது. மார்லின் பேசினாள்.

‘ ராஜி, லன்ஞ் ரைம் நாம் சந்திக்கவேண்டாம்.ஆபிஸ் முடியவிட்டு என்னுடன் கொஞ்ச நேரம் செலவளிப்பாயா?’ மார்லினின் கேள்வியில் கெஞ்சல் தயவு செய்த என்னைச் சந்திக்கப்பார் என்ற கெஞ்சல் அது.

அக்டோபர் மாதக் காற்று காதிற் புகுந்து உடம்பைச் சிலிர்க்கப் பண்ணியது.

‘உன்னிடமிருந்து நான் ஒதுங்கிக் கிடந்தது பற்றி நீ என்னுடன் கோபமாக இருக்கிறாயா?’ அவள் சிவப்பு வைனைக் குடித்தபடி கேட்டாள்.

‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டினேன்.

‘ரமேசில் உள்ள ஆத்திரத்தில் இந்தியர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் போலிருந்தது.அதை நீ உணருவாய் என்று நினைக்கிறேன்’.

அவளின் குரல் சோகத்தால் விம்மியது. சிவப்பு வைனை மடமடவென்ற குடித்தாள்.நாங்கள் இருவரும் ஒரு வைன் பாரில் உட்கார்ந்திருந்தோம்.நான் ஆப்பிள் ரசத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

மார்லின் மற்ற ஆண்களுடன் ‘சினேகிதமாகப்’ பழகிக் கொள்வதனாற்தான் ரமேசுக்கும் மார்லினுக்கம் பிரச்சினை வந்தது என்ற அபிசில் வதந்தியடிபடுவது மார்லினுக்குத் தெரியுமோ என்னவோ.ஆனால் இவள் ரமேசில் குற்றம் சுமத்துகிறாள்.

‘உன்னுடன் தொடர்பில்லாமலிருந்ததற்கு மன்னிப்புக் கோருகிறேன்’ அவள் கண்கள் கலங்கியிருந்தன.அவளின் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டேன்.

‘தனிமை சிலவேளை நல்லது.. உனது நிலையில் அதை நீ விரும்புவதை நான் புரிந்துகொள்வேன்’ என்றேன்.

‘ ஐ லவ் ரமேஷ் ‘ அவள் அழத் தொடங்கி விட்டாள்.

‘அவன் இப்போது வேறொருத்தியின் கணவன்’ நான் அவளுக்கு அதை ஞாபகப் படுத்தத்தான் வேண்டுமா?

‘இன்று ஏன் ஆபிசுக்க வந்தேன் என்றிருக்கிறது. ரமேஷ் மாறுதல் எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் என்னைக் கண்டதும் பலர் என்னைப் பார்த்து ஏதோவெல்லாம் கிசுகிசுக்கிறார்கள் என்று தெரிகிறது’

‘அது இயற்கைதானே’ நான் முணுமுணுக்கிறேன்.

‘ எது இயற்கை?’அவள் குரலில் ஆத்திரம்.

‘மற்றவர்களைப் பற்றி வம்பளப்பது மனித இயற்கையில் ஒன்றில்லையா?’

‘எனது வாழ்க்கையின் சோகத்தைத் தெரியாமல் இப்படியெல்லாம் அவர்கள் என்னைப் பற்றிக் கண்டபாட்டுக்குப் பேசுவது நியாயமில்லை’ அவள் குரல் உயர்ந்தது.

நான் இன்னொரு ஆப்பிள் ஜூசுக்க ஆர்டர் கொடுத்தேன்.அவள் கண்கள் கலங்கி பொல பொலவென்று கொட்டிக்கொண்டிருந்தது.ரமேசில் இவ்வளவு அன்புள்ளவள் அவனை ஏன் விவாகரத்து செய்தாள்?

அவன் ஊருக்குப் போய் இரண்டாம்தாரம் செய்து கொண்டதை நினைத்தால் பழைய ஞாபகங்கள் மனதில் பொங்கி வழிகிறதா?

‘நல்ல காலம் சங்கீதா அவனைச் செய்யவில்லை.’ மார்லின் விரக்தியாய்ச் சிரித்தாள்.

‘அவனை உனக்கு வெண்டாம் என்று தள்ளி வைத்தாய்.அதன் பின் அவன் யாரைச் செய்தாலும் உனக்கென்ன?’ நான் குழப்பத்துடன் கேட்கிறேன்

‘எங்களுக்குத் தெரிந்த பெண் ரமேசால் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.’அவள் குமுறினாள்.

‘அவன் உன்னைத் துன்புறுத்தினானா?’

எனக்குப் புரியவில்லை.மார்லின் மற்ற ஆண்களுடன்’சினேகிதமாகப்’ பழகுவதை ரமேஸ் கண்டித்தனாற்தானே பிரச்சினையே வந்தது?

அப்படியில்லையா?;

‘ராஜி, மற்றவர்கள் பேசும் கேடுகெட்ட வாந்திகளை நீயும் நம்புகிறாயா?’ மார்லினின் நேர்மையை நான் சந்தேகிக் மாட்டேன், ஆனால் அந்த வதந்திகள் அத்தனையும்,..?

‘ராஜி, தங்களின் குறைகளை மறைக்க எந்தப் பொய்களையும் சொல்லி மற்றவர்களை நம்ப வைப்பவதில் ஆண்கள் மகா கெட்டிக்காரர்கள் என்று உனக்குத் தெரியும். ரமேஷ் தன்னிலுள்ள குறையை மறைக்க அதாவது தனது ஆண்மையின் குறையை மறைக்க எனக்குக் கெட்ட பெயர் தந்தான்.அப்படியான மனிதனுடன் எப்படி வாழ்வது?’

மார்லினின் கேள்வி நியாயமானது!

‘உனக்கென்ன வயதாகி விட்டதா? ஓரு நல்ல மனிதனை நீ சந்திக்கலாம்….’

.நான் சொல்ல வந்தததை முடிக்கவில்லை.

‘…ஒன்றிரண்டு குட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம்’ அவள் சொல்லி முடிக்கிறாள்.

குழந்தைகளை மிகவும் விரும்புபவள் மார்லின். தனது திருமணத்தைப் பற்றிப் பேசமுதல் குழந்தைகளைப் பற்றித்தான் சொன்னாள்.

பாவம் அவள் காதலிததுக் கல்யாணம் செய்து பிள்ளைகளைத் தருவான் என்று நினைத்;தவனுடனான வாழ்க்கை உடைந்து விட்டது. இன்னொருவனை விரும்பி……

மார்லினின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகிறது?

‘பை த வேய்..சங்கீதாவுக்கும் கெதியில் திருமணம் நடக்கவிருக்கிறது’

‘கேள்விப் பட்டேன்’ அவள் சுருக்கமாகச் சொல்கிறாள்.

ஓருகாலத்தில் சங்கீதா ரமேசை மிகவும் விரும்பினாள் என்பது ஆபிசிலுள்ள பலருக்கும்; தெரிந்த இரகசியம்.

‘ரமேசின் மனைவியைச் சந்தித்தாயா?’ மார்லின் கேட்டது எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.

‘மார்லின் நீ என்னுடைய சினேகிதி..அவன் உன்னுடனான உறவை உடைத்துக்கொண்டபோது அவனுடன் எனக்கென்ன பேச்சு? அத்துடன் அவன் வேறு இடத்துக்கு எப்போதோ போய்விட்டான்.

‘பாவம் அவனைக் கல்யாணம் செய்த அந்தப் பெண்’ மார்லின் தனது கைப் பையை எடுத்துக்கொண்டு எழும்புகிறாள்.

‘ஏன் அவளைப் பாவம் என்கிறாய்’ நானும் எழுந்தபடி கேட்கிறேன்.

‘ அவளும் என்னைப்போல ஒரு இலவுகாத்த கிளியாக இருந்து ஏமாறப் போகிறாள்’

மார்லின் சொன்னது புரியாமல் அவளைப் பார்க்கிறேன்.

‘அந்தப் பெண்ணுக்கும், உலகத்திலுள்ள பெரும்பாலான பெண்கள்போல தனக்கும் குழந்தைகள் பிறக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும் என்று நம்புகிறாயா?’மார்லின் என்னைக் கேட்கிறாள்.

‘அது இயற்கையான எதிர்பார்ப்புதானே?’நான் சொல்கிறேன்.

மார்லின் சில வினாடிகள் என்னையுற்றப் பார்க்கிறாள்.

‘ரமேசுக்குத் தகப்பனாகும் தகைமை கிடையாது..’

மார்லின் என்னைக் கூர்மையாகப் பார்த்தபடி சொல்கிறாள்.

நான் திடுக்கிட்டபடி நிற்கிறேன்.

‘ஒரு குழந்தையை உண்டாக்கும் ஆண்மையின் விந்தின் அளவு ரமேசுக்கு இல்லை..அந்தப் பிரச்சினையை வைத்திய முறையில் தீர்க்கலாமா என்று பார்க்கவும் அவனுக்கு விருப்பமில்லை. தனது ஆண்மைப் பிரச்சினையை மறைக்க, எங்கள் திருமணப் பிரச்சினைக்குக் காரணம் எனது நடத்தை என்ற அபாண்ட பழி சொன்னான். நான் அந்த ஆத்திரத்தில் விவாகரத்து எடுத்துக் கொண்டேன். பல உண்மைகளை மறைத்துக் கொண்டு.தன்னை ஒரு படித்த மாப்பிள்ளையாக்கி இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதுதான் ஆண்மையா?’ மார்லினின் பதில் சொல்ல என்னால் முடியவில்லை.

– இந்தியா டு டேய் பிரசுரம்–1998.

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *