இதைத்தான் இழப்பேன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,269 
 

” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை சந்திரசேகரனை அழைத்தாள்.

‘ எதற்காகத் தன்னை அழைக்கிறாள். ..? ஏதாவது கொட்டப்போகிறாளா. .? அழப்போகின்றாளா . .? கடவுளே. .! இதென்ன சோதனை. .? ! என் மகளைக் காலம் முழுக்க கண்ணீர் வடிக்க வச்சுட்டீயே ! என்னைத் சுமைத் தாங்கியாய் ஆக்கிட்டீயே. .? ! இவளுக்கு இவ்வளவு பெரிய துக்கம் கூடாது. அதுவும் இத்தனை சின்ன வயதில் கூடாது ! ‘ மனம் பலப்படியாய்ப் புலம்ப, கலக்கமாக அவள் அறையில் நுழைந்தார்.

கொஞ்சம் அழுது வடிந்த முகம். தலைவிரி கோலம், புகை படிந்த ஓவியமாய் அமர்ந்திருக்கும் மகளைச் சங்கடமாக நோக்கினார்.

‘ ஏ. ..! அப்பா ! எவ்வளவு திடகாத்திரமாக இருந்தவள். இந்த பத்து நாட்களில் எப்படி துவண்டு சருகாய்ப் போய்விட்டாள். .? ! காரணம். .? மீள முடியாத துக்கம். இது பத்து தினங்களாக உருகிப்போன உடம்பில்லை. . ஏறக்குறைய இரண்டு மாதங்களாய். .. கணவன் நோய்வாய்ப்பட்டதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் உருகி உருமாறிவிட்ட உடம்பு. எல்லாம் விதி !! அம்மா சௌமியா ! நீ கொட்டாதேம்மா ! ஒரே பொண்ணுன்னு உன்னை சீராட்டிப் பாராட்டி வளர்த்த எனக்குத் தாங்காதும்மா. ! ‘ அவளை பயத்துடனும் சுமையுடனும் பார்த்தவர் தலைக் குனிந்தார்.

” உட்காருங்கப்பா ! ”

அமர்ந்தார்.

” நிம்மி எங்கேப்பா. ..? ”

” உன் மகளா. ..? ”

” ஆமாம் ! ”

” விளையாடப்போயிருக்காள் ..! ”

” நல்லது ! ”

” என்னம்மா. .? ”

” அந்தக் குழந்தைக்கு நாம பேசுறது கேட்கக் கூடாது. ” என்று முணுமுணுத்தவள். …

” நான் உங்களிடம் கொஞ்சம் பேசணும்ப்பா ! ”

” சொல்லும்மா. .? ”

” பதினாறாம் நாள்தானே காரியம் செய்யப்போறீங்க. .? ”

” ஆமாம் ”

” அன்னைக்கு எனக்கு என்னென்ன சடங்குகள் செய்வீங்க. .? ”

‘ அ. .. அதை எப்படிச் சொல்வது. ..? அம்மா ! அம்மா ! என்னைக் கொன்னுடு. கொடுமைப்படுத்தாதே! ‘ என்று இவருக்கு மனசுக்குள் கதறல் வர. .. சட்டென்று வாயில் துண்டை வைத்துக்கொண்டு அடக்கினார்.

” சொல்லுங்கப்பா. .? ”

” வந்து. .. வந்து. ..”

” என் கூந்தலிலிருந்து பூவை எடுக்கப் போறீங்க. பொட்டை அழிக்கப் போறீங்க. உடுத்திக்க வெள்ளைப் புடவைக் கொடுக்கப்போறீங்க. அப்புறம்… இந்தத் தாலி. ..?!…” என்று சொல்லி தன் கழுத்தில் கையை வைக்க. ..

” அம்மா. .. சௌமிஈஈ. ..” அதற்கு மேல் வலி தாங்க முடியாமல் குலுங்கினார்.

” அழாதீங்கப்பா. அன்னைக்கு நடக்கப்போறதைச் சொன்னேன். இதுக்கு ஏன் கலங்கனும். ..? குலுங்கனும். .? என்னைப் பார்த்தீங்களா அழுது முடிச்சி கல்லாகிட்டேன். காரணம். ..? கலங்கிப் பிரயோஜனமில்லேப்பா. இனிமேல் என் எதிர்காலம், வாழ்க்கையைப் பார்க்கணும். ” நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.

குலுங்கிய சந்திரசேகரன். .. மகளை பார்த்தார்.

சோகமாக இருந்தாலும் முகத்தில் தெளிவிருந்தது.

‘ எப்படி இப்படி. ..?!! ‘ ஆச்சரியமாகப் பார்த்தார்.

இவள் பேச்சில் பொய்யில்லை. தெளிவாய் இருக்கிறாள். எப்படி. .? -உள்ளுக்குள் வியந்தார்.

மாண்டவன் மீளப்போறதில்லை ! என்பது தெரிந்து தெளிந்து விட்டாள். படித்தவள் உலகிற்கும் தெரிந்தவள். அதனால்தான் எதிர்காலம், வாழ்க்கை. .. என்று எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறாள்.

இவளை போல் சோகத்தை ஒதுக்கிவிட்டு நிதர்சனத்தைப் பற்றி சிந்திப்போர் நினைப்போர் எத்தனை பேர்கள் இருப்பார்கள்.?

இறந்து போன தன் கணவனை நினைத்து காலம் முழுதும் கலங்கித் தவிக்கும் பெண்களிருக்கிறார்கள்.

இப்படி இழப்பை உடன் உதறிவிட்டு சித்திப்பவள் இவளாகத்தான் இருப்பாள்.

” என்னப்பா யோசனை. ..? ”

” ஒண்ணுமில்லே. நீ பேசணும்ன்னியே. ..சொல்லு. .? ”

” நாளைக்கு எனக்கு எந்த காரியமும் செய்ய வேணாம்ப்பா. .”

” அம்மா. ..ஆ ! ” – அலறினார்.

” காலம் மாறிப்போச்சு. இன்னைக்கு யாரும் விதவைகள் அடையாளத்தில் இருக்கிறதில்லே. மேலும். .. இந்த இந்த சடங்கு, சம்பிரதாயங்களெல்லாம் என் கணவருக்கும் பிடிக்காது. எனக்கும் அதில் உயிர் இருக்கு என்பதைப் பத்தி உடன்பாடில்லே. இந்த பழக்க வழக்கங்களில் உயிர் இருக்கா, இல்லையா. .? மாண்டவங்க ஏத்துக்கிறாங்களா. ஏத்துக்கிட்டதாய் யாராவது நிரூபிச்சிருக்காங்களா. இதனால் யாருக்கு என்ன லாபம், நாட்டம். யாருமே சித்திக்கிறதில்லே, யோசிக்கிறதில்லே. எல்லோரும் செய்யறாங்க. நானும் செய்யறேன். இப்படித்தான் எல்லா பழக்க வழக்கங்களும் நடந்துக்கிட்டிருக்கு. அதனால் அந்த செய்முறைகளெல்லாம் வேணாம். ”

” சௌமிஈ. .”

” ஆமாம்ப்பா. கண்டிப்பா வேணாம். ”

” அப்போ தாலி. .? ”

” அதை மட்டும் எந்தவித சடங்கும் சம்பிரதாயங்களும் இல்லாமல் கழட்டிருறேன்.”

” அம்ம !! ”

” ஆமாம்ப்பா. இது ஒண்ணுதான் என் புருஷனால வந்தது. மத்தது எல்லாம் பெண் என்கிற அடையாளத்தோடு பிறப்பு, வளர்ப்பிலேர்ந்து வந்தது. அதனால் இதைத்தான் நான் இழப்பேன். ! ”

கராறாகச் சொன்னாள்.

இன்றைய உலகம் புரிந்த சந்திரசேகருக்கும் இது சரியாக இருந்தது.

” சரிம்மா. .” – தலையசைத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *