இதெல்லாம் யாருடைய தப்பு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 7,282 
 

பதினைந்து வயதில் எனக்கு அந்தக் காதல் ஏற்பட்டது.தமிழ் மீது காதல்.

தமிழ் மீதா, தமிழாசிரியர் மீதா என்று என் சக மாணவிகள் கிண்டலடித்ததுண்டு. ஆனால் எனக்குக் குழப்பம் இருந்ததில்லை. காதலுக்குக் காரணம் சந்தேகமில்லாமல் தமிழ் ஆசிரியர் முருகேசன்தான். ஆனால் காதல் அவர் மீதில்லை. அவர் சொன்ன கவிதை மீது. அது இட்டுச் சென்ற உலகங்கள் மீது.

அந்தத் தினம் இப்போதும் நினைவிருக்கிறது.சாதாரணமாகவே ‘தமிழ்’ முருகேசனுக்குக் கனத்த குரல்.கோபம் வந்தால் பேச்சு சரளமாக வரும்.அன்று வகுப்பிற்கு வரும்போதே விசையேறியவராக, உணர்ச்சிப் பிழம்பாகத்தான் வந்தார்.

வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த அரசியல் கொந்தளிப்பின் திவலைகள் ஆசிரியர்களின் அறைக்குள்ளும் தெறித்து, அங்கே சர்ச்சை மூண்டு, அதில் கழுத்தளவு இறங்கி, மேஜையைக் குத்தி, புத்தகங்களைத் தட்டி இரைந்து கொண்டிருந்த ‘தமிழ்’ முருகேசன், வகுப்பு எடுக்கும் நேரம் வந்தால், வாதத்தைப் பாதியில் விட்டு விட்டு, அந்தச் சூட்டை மட்டும் சுமந்துகொண்டு வந்ததாகப் பின்னால் தெரிந்தது.

வகுப்பிற்குள் நுழைந்ததும் எடுக்கும் வருகைப் பதிவேட்டைக்கூட அன்றைக்கு முருகேசன் எடுக்கவில்லை.அது கட்டுரை வகுப்பு. பொதுவாக ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்துவிட்டு, ஒரு புத்தகத்தைப் பிரித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து விடுகிற முருகேசன், அன்றைக்கு அதைக் கவிதை வகுப்பாக மாற்றினார்.

அது வகுப்புக்கூட அல்ல. அந்த நிமிடத்தில் தீர்மானிக்கப்பட்ட இலக்கியக் கூட்டம்.பாடத் திட்டத்தில் இல்லாத பாரதிதாசனைப் பிரித்து வைத்துக்கொண்டு ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்’ என்று ஆரம்பித்தபோது குரலில் ஓர் ஆவேசம் கொப்புளித்தது.எங்கோ எவருக்கோ பதில் சொல்லும் ஆவேசம்.‘கங்கை போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்,’ என்று மேலே அதைத் தொடர்ந்தபோது, அதில் கர்வம் தொனித்தது.யாருக்கோ எதையோ நிரூபிக்கிற கர்வம்.

அருவி போலத் தமிழ்க் கவிதை சொல்லக் கேட்டு உடம்பெல்லாம் அனல் பறந்தது.உள்ளத்தில் பூ மலர்ந்தது.

அந்தச் சூடும், பூவும் விவரிக்க முடியாத ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தின. பெருமிதம் தந்தன. பாடப் புத்தகத்திற்கு வெளியே இருக்கும் தமிழுக்கு இத்தனை ருசியா! தேடித் தேடி தமிழ் படிக்க மனம் புறப்பட்டது.

தந்தையும் கணவனையும் போரில் பறி கொடுத்ததற்குப் பின்னும் போர்ப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கொடுத்துத் தனது ஒரே மகனைப் போருக்கு அனுப்பிய புறநானூற்றுத் தாய்; மன்னவனும் நீயோ என்று கேட்ட கம்பனின் கர்வம் ; நான் சோற்றுக் கிள்ளாமல் ஊரைவிட்டுப் போகும்போது உனக்கென்னைய்யா படுக்கை வேண்டிக் கிடக்கிறது என்று பாம்பைப் பாயாக விரித்துக் கிடந்த விஷ்ணுவைப் பார்த்து அதட்டிய புலவனின் கோபம்; கண்ணில் சினமும் கையில் சூலமும் கொண்டு ஆடிய பாரதியின் காளி; மாட்டுக்கா வாய்க்கும் தமிழ் என்ற பாரதிதாசனின் சூடு; எத்தனைவித உணர்ச்சிகள்! எந்தக் காலத்து மனிதர்கள்! அத்தனை பேரையும் செத்துப் போகாமல் அப்படியே கண் முன்னால் உயிரோடு நிறுத்தும் ஒரு மொழி! எவ்வளவு வீரம்! என்ன துள்ளல்!

படிக்கப் படிக்க காதல், வெறியாயிற்று. தமிழ் படிக்க வேண்டும்.படித்த தமிழை நாலு பேருக்குச் சொல்ல வேண்டும்.அந்த ஆசான் மாதிரி நானும் அருவிபோலத் தமிழ்க் கவிதை சொல்ல வேண்டும்.அதைக் கேட்டு நாலு உள்ளம் மலர வேண்டும்.ஆவேச சத்தியங்கள் நெஞ்சில் பூத்தன.

மார்க் நிறைய வாங்கியிருப்பதைப் பார்த்த அப்பா, மருத்துவக் கல்லூரிக்கு மனுப் போடச் சொன்னார்.மறுத்துச் சொன்னபோது முதலில் திகைத்தார்.பிறகு இரைந்தார்.

“தமிழா படிக்கப் போறே?படிச்சு?வாத்தியாரு வேலைக்குத்தாம்மா போவலாம்!”

“ஆமாம்பா, நான் ஆசிரியர் வேலைக்குத்தான் போகணும். தமிழாசிரியர் வேலைக்கு…”

சட்டென்று அப்பாவின் முகம் சிவந்தது.இமைக்காமல் ஒரு நிமிடம் முகத்தை உறுத்துப் பார்த்தார்.பின் பகபகவென்று சிரித்தார்.

“ அட என்னம்மா இது… ஒரு வாட்டி திருஷ்ணாப் பள்ளிக்குப் போய்விட்டுத் திரும்பிக்கிட்டு இருந்தோம். அப்ப என்ன, பத்து வயசு இருக்குமா உனக்கு?உன் மாமன் சுவிட்சர்லாந்தில் இருந்து சாக்லேட் வாங்கியாந்தான்.தங்கக் காயிதம் கத்திப் பளபளன்னு பவுன் மாதிரி இருக்கும்.பிரிச்சு வாயிலே போட்டா சரசரன்னு கரைஞ்சு போகும்.அதைப் பார்க்கிற பெரிவங்க எங்களுக்கே இரண்டைப் பிரிச்சுப் போட்டுக்கச் சொல்லிச் சபலம் தட்டும். ஒரு டப்பா நிறையப் பொரி உருண்டையை எடுத்து அவங்க வீட்டுப் பாப்பாகிட்ட குடுத்தாங்க. நீ அந்த உருண்டைதான் வேணும்னு அழுது ஒரு அடம் பிடிச்ச பாரு, அம்மாடி… அதட்டினாலும் நிக்கலை. அறையக்கூடக் கையை ஓங்கிட்டேன்.அந்தம்மா, ஒரு பொரி உருண்டைக்காகவா என்னை அதட்டிட்டு உன் கையிலே ஒரு உருண்டையை வைச்சப்புறம்தான் ஓய்ஞ்சே.இப்போ பதினெட்டு வயசாச்சு. அந்தப் பச்சைப் பிள்ளையாகவே இருக்கியே! உன் மார்க்குக்கு டாக்டருக்குப் படிக்கலாம்ல?…

“இல்லைப்பா, தமிழ்தான் படிக்கணும்,”‘

அதில் தெரிந்த உறுதியைப் பார்த்து அயர்ந்து போனார்.ஆனால் அப்புறம் அவர் குறுக்கே நிற்கவில்லை.பின்னால் கூட, ‘சந்தர்ப்பத்தை கோட்டை விட்டியேம்மா’ என்று இடித்து ஒரு சொல் சொல்லவில்லை.

மாறாக, கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பரிசு வாங்கி வரும்போதெல்லாம், ‘இது முப்பத்தி ஐந்தாவதும்மா, முப்பத்தி ஆறாவதும்மா’ என்று சொல்லி முறுவலிப்பார். ஆல் இந்தியா ரேடியோவில், ‘சாம்பல் நிறமொரு குட்டி, பாம்பின் நிறமொரு குட்டி’ என்று பாரதியாரின் நாலு வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு பதினைந்து நிமிடம் பேசியபோது, ‘அட பார்றா, தமிழ்தானே, இது தெரிஞ்ச பாட்டுன்னு நினைச்சா இதுக்குள்ளே இத்தினி விஷயம் இருக்கா? என்று தட்டிக் கொடுத்தார்.

அப்பாவினுடைய மனது திலகவதிக்குக் கிடையாது.என்னுடைய ஆவேசமும்தான், அவள் நடைமுறைப்பிராணி, என்னைவிட இரண்டு வயது சிறியவள் என்றாலும், என் தங்கை என்று சத்தியம் செய்தால்கூட நம்பமாட்டார்கள்.தோற்றத்தில் மட்டுமல்ல, சிந்தனை, வாழ்க்கையை அணுகும்முறை, படிப்பு எல்லாவற்றிலும் அவள் நேர் எதிர் துருவம்.எனக்குத் தமிழ் மீது காதல் பிறந்த வயதில் அவளுக்கு எதன் மீதும் ஆர்வம் இல்லை.எதன் மீதும் பக்தி இல்லை.மொழி மீதோ, மனிதர்கள் மீதோ, கலைகள் மீதோ, காதல் இல்லா வாழ்க்கை.அவள் காதலித்ததெல்லாம் தன்னைத்தான்.தன்னுடைய வளர்ச்சி, தன்னுடைய முன்னேற்றம், தன்னுடைய வாழ்க்கை என்று பிராக்டிகலாகத் துடிக்கற இதயம்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது டைப் அடிக்கச் சேர்ந்தாள்.அதானால்தானோ என்னவோ பள்ளி இறுதி வகுப்பில் மார்க் குறைந்தது.மருத்துவக் கல்லூரி கிடக்கட்டும், உள்ளூர் மகளிர் கல்லூரியிலேயே இழுத்தடித்தார்கள்.அவளே போய் அப்ளிகேஷன் வாங்கினாள்.மார்க்கைப் பற்றிக் கவலைப்படாமல் மாத்ஸ் படிக்க மனு போட்டாள்.பி.ஏ., தமிழ் வகுப்பில் இடம் கொடுக்கிறோம் என்று பதில் வந்தது.

“என்னம்மா, நீயும் தமிழ் படிக்கிறியா?” என்றார் அப்பா.

“அந்தத் தப்பை நான் பண்ணமாட்டேன்,” என்றாள் பளிசென்று.மூஞ்சியில் அறைந்த மாதிரி கூம்பிய என் முகத்தைப் பார்த்த அப்பாவின் முகம் வாடியது.

“தமிழ் படிக்கறதுல என்னம்மா தப்பு?”

“அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம்.ஆனால் அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?

“கனவா?”

“வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்னு படிப்பீங்க. வேலை இல்லாக் கொடுமையைக் கூடத் தாங்க முடியாமல் துவண்டு விழுவீங்க. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். சரி, ஆனா வயிற்றுக்கு என்ன வழி?படிப்புங்கறது வேலைக்குத்தானே?ஞானம் பெறுவதற்காகவா?

“இப்படித் தடாலடியாகவே பேசினா எப்படிம்மா?”

“அப்பா, மல்லிகைப்பூ அழகானதுதான்.வாசனையானதுதான்.மனசுக்குப் பிடிச்சா அதைக் கோத்துத் தலையிலே வைச்சுக்கலாம்.ஆனா சமையல் பண்ண முடியுமா?

“அப்போ ஒரு விஷயத்துக்கு யுடிலிடி இருந்தாத்தான் மதிப்பா?”

“ஒரு கமர்ஷியலான சமூகத்தில் அப்படித்தான்.”

“வியாபார உலகத்தில தமிழுக்கு இடமே இல்லையா?தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க?”

“ஆனா அங்கெல்லாம் தமிழ் படிச்சவங்க மட்டும்தான் வேணும்னு கேட்கலையே?”

விவாதத்தின் ஒவ்வொரு வாதத்தையும் கேட்கக் கேட்க எனக்கு உடல் எரிந்தது.எழுதிக் கொண்டிருந்த பேனாவை மூடாமலே விருட்டென்று எழுந்து கூடத்திற்கு வந்தேன்.“அப்பா!” என்று இரைந்தேன்.“இப்ப நிறுத்தப் போறீங்களா இல்லியா?”

“ என்கிட்ட ஏன் கத்தறே? முடிஞ்சா உன் தமிழை ஃபங்ஷனலா நடைமுறைக்கு உகந்ததாப் பண்ணு.இல்லைன்னா கம்முனு இரு.சும்மா கிடந்து கூவாதே,” என்று பதிலுக்குக் கத்திய திலகவதி, படீரென்று கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறினாள்.

திலகவதி தமிழ் வகுப்பில் சேரவில்லை. யாரையோ பார்த்து, எப்படியோ பேசி, பி.ஏ., டூரிஸம் பிரிவில் சேர்ந்தாள்.

நான் எம்.ஏ முடித்தபோது திலகவதி டிகிரி வாங்கினாள்.காலையில் ஜெர்மன், மாலையில் டிராவல் ஏஜென்சி என்று ஏதேதோ படித்து, கூடவே இரண்டு மூன்று சர்டிபிகேட் வாங்கினாள்.

அவளுக்கு மூன்று மாதத்தில், பத்தடிக்கு எட்டடி அறைக்குள் இயங்கும் ஒரு டிராவல் ஏஜென்சியில், ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

“ நான் எம்.ஏ. யா? தமிழா?பி.எஸ்ஸினா கூடப் பரவாயில்லை.சயின்ஸ், மேத்ஸ்னு இரண்டு மூன்று சப்ஜெக்ட் எடுக்கச் சொல்லலாம்.லாங்க்வேஜ், அதுவும் தமிழ், என்னம்மா பண்றது?” என்று பதில் வந்தது.

“எம்.எட்., எம்.ஃபில், எல்லாம் மூணு நாலு வருஷமாய் காத்துகிட்டு இருக்காங்க. நீங்க வெறும் எம்.ஏ.வை முடிச்சுட்டு வந்து கேட்டீங்கன்னா எப்படி.

“ எம்.ஃபில், சேர்ந்துடுமா,” என்றார் அப்பா.

டைப் பண்ணக் கொடுத்திருந்த எம்.ஃபில் தீஸிசை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தபோது வீட்டில் நெய் மணத்தது.சமையலறையில் எட்டிப் பார்த்தேன்.ஏகத்திற்குச் சர்க்கரையும் ஏலமும் கொட்டித் திலகவதி கேசரி கிளறிக் கொண்டிருந்தாள்.

“என்னடி விஷயம்?யாரும் உன்னைப் பெண் பார்க்க வர்றாங்களா?”

“அதைவிடப் பெரிய விஷயம்.விண்ணிலேறி வானையும் சாடுவோம்.டட்டடய்ங்.”

“என்னடி, மாடியிலேர்ந்து குதிக்கப் போறியா?”

“வெளிநாட்டு விமானக் கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு அக்கா.மூவாயிரம் ரூபா சம்பளம்.வருஷத்திற்கு ஒரு இலவசப் பயணம், ஃப்ளைட்ல.”

“கங்கிராட்ஸ்.”

எனக்கும் ஒரு வேலை கிடைத்தது.பக்கத்தில் ஒரு நர்ஸரி பள்ளியில்.பாபா ப்ளாக் ஷீப், ஒன் டூ பக்கிள் மை ஷு சொல்லிக் கொடுக்கிற வேலை.முதல் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்த கவரைப் பார்த்து அப்பா இடிந்து போனார்.உள்ளே ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தது.

“இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம்னு சொன்னாங்களே?”

“கையெழுத்துப் போட 250.கவர்ல குடுக்கறது நூறு.”

“என்ன கண்றாவிம்மா இது… எம்.ஃபில் படிச்சிட்டு…”

அன்று முதல் அப்பா வெறிபிடித்தவர் மாதிரி அலையலானார். கட்சிக்காரர், எம்.எல்.ஏ., மந்திரி என்று போய்ப் பார்த்தார். கட்சிக்காரர்கள் கூட இருந்ததால், மந்திரியிடம் பேச முடிந்தது.நிறைய மார்க் எடுத்தது, தமிழை விரும்பிப் படித்தது, அறுபது, எழுபது சர்ட்டிபிகேட் வாங்கியது, எம்.ஃபில் வரை படித்து வேலை இல்லாமல் இருப்பது எல்லாவற்றையும் சொன்னார்.

“ என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க பொண்ணு மட்டுமல்ல, எம்.ஃபில் படிச்சவன் ஆயிரம் பேர், பி.எச்டி வாங்கினவன் நூறு பேர் சும்மா இருக்கான்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *