இது ஒரு முற்றும் துறந்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 8,576 
 

9-9-99

கம்ப்யூட்டர் துப்பிய கார்டில் அந்தத் தேதியைப் பார்த்த குமாஸ்தா கவுண்ட்டரின் இந்தப் பக்கம் தவிப்புடன் காத்திருந்த என் முகத்தைப் பார்த்தான்.

“பரவாயில்லை சார். உங்களுக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்கு. இந்தாங்க”

அரசாங்க முத்திரை பதித்த அந்த அட்டையை என்னிடம் ஒப்படைத்தான்.

நான் வாங்கி தேதி பார்த்தேன். 9-9-99! மனம் பதறியது. கண்கள் கலங்கின. இளம் மனைவி. மூன்று பெண் குழந்தைகள். தெரிந்த எல்லா இடத்திலும் கடன். காதல் திருமணமென்பதால் உறவுகளோடு பகை. யாரும் உதவப் போவதில்லை. சாரதா என்ன செய்யப் போகிறாள்?

“தைரியமாப் போங்க சார். என்ன பண்றது. உங்களுக்கு முன்னாடி ஒருத்தருக்கு மூணே மாசம் அவகாசத்தோட தேதி வந்துடுச்சு. இன்னும் கல்யாணம் கூட ஆகலையாம். இது முந்தி அவங்கவங்க விதியா இருந்தது. இப்போ அரசாங்க விதின்னு ஆனப்புறம் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது?” என்றார் க்யூவில் நின்ற ஒருவர்…. தளர்வாக வெளியே வந்தேன் உலகம் இருண்டது’ என்று கதாசிரியர்கள் எழுதுவார்களே, அதற்கு இப்போதுதான் அர்த்தம் புரிந்தது.

அந்த அரசாங்கக் கட்டிடத்தின் வாசலில் நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்ற இராணுவ ஜெனரலின் கட் அவுட் இருந்தது. அதற்கு நெருப்பு வைக்கலாமா என்ற ஆத்திரம் எழுந்தது.

என்ன முட்டாள்தனமான உத்தரவு! இரக்கமே இல்லாத இந்த அரசாங்கத்தை எதிர்க்க யாருக்குமே துணிவில்லையா?

இயந்திரத் துப்பாக்கிகளுடன் தலைவர்ங்க உலவினாலும், எதையும் பொருட்படுத்தாமல் குனிந்து ஒரு கல்லெடுத்து அந்த கட் அவுட் மேல் வீசிவிட்டு வேகமாக குறுக்குச் சந்துகளில் ஓடத் துவங்கினேன். களைத்துப் போய் ஒரு மர நிழலில் நின்று மூச்சு வாங்கிய போது என் தோளில் ஒரு கை! அவன் முரட்டுத் துணியில் உடையணிந்து கண்கள் சிவந்திருந்தான்.

“நீ கல்லெடுத்து அடிச்சதை நான் பார்த்தேன். நானும் பாதிக்கப்பட்டவன்தான். என் தேதி என்ன தெரியுமா? 2-1-99 உன்னை மாதிரி ஆளுங்களைத்தான் நாங்க அணி திரட்டிக்கிட்டிருக்கோம். என்னோட வா”

“நாங்கன்னா ?”

“வா, தெரியும்”

அந்தக் காட்டுக்குள் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நடக்க வைத்து என்னை அழைத்துச் சென்றான் அவன்.

பாறைகள் சூழ்ந்த ஒரு பகுதியில் கிட்டத்தட்ட நாற்பது பேர் கூடியிருந்தார்கள். அனல் பறக்க விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

நாங்களிருவரும் ஓரமாக நின்ற கவனித்தோம்.

“ஜனநாயத்தால் நம் நாட்டிற்கு உருப்படியான பலன்கள் இல்லை என்ற நாம் நொந்தது உண்மைதான். திடீரென்று இராணுவப் புரட்சி நடந்து ஆட்சிப் பொறுப்பு இராணுவத் தலைமையிடம் சென்றதை உள்ளுக்குள் வீரவேற்கவும் செய்தோம். ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்து உடனடி விசாரணைகளில் மரண தண்டனைகள் வழங்கிய போதும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. தனி மனிதனுக்கு சொத்து உச்சவரம்பு கொண்டு வந்து அதிகப்படியான சொத்துக்கள் பிடுங்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் பிரமிக்கத்தக்கவை. ஆனால்… மக்கள் தொகையை அதிரடியாகக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வந்த மரணத் தேதித் திட்டம்… மகா கொடுமை!

“வாக்காளர் பட்டியலில் உள்ளோர் எல்லாம் வரிசையில் நின்ற கம்ப்யூட்டர் தீர்மானிக்கும் மரணத் தேதியை வாங்கிக் கொள்வதாம். அந்த தேதி வரைக்கும் வாழ திட்டமிட்டுக் கொள்வதாம். குறிப்பிட்ட இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து எத்தனை லட்சம் பேர் இறந்துவிட்டார்கள்! மரணத்தை நினைத்து மனதளவில் செத்துப் போய் விட்டவர்கள் எத்தனை கோடி!”

“இனியும் இந்த அராஜக அரசாங்கத்தை நாம் எதிர்க்கவில்லை என்றால் நாம் உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் என்றுதான் பொருள். எப்படியும் நம் உயிர்களுக்குத் தேதி குறிக்கப்பட்டு விட்டன. இந்த மரணம் எப்போது நிகழ்ந்தால் என்ன? உயிரைப் பொருட்படுத்தாமல் இந்த இராணுவ ஆட்சியைக் கவிழ்க்க எதுவும் செய்ய உங்களில் தயாராக இருப்பவர்கள் மட்டும் கைகளை உயர்த்துங்கள்”

நானும் கையை உடனே உயர்த்தினேன். அப்போது….

வானத்தில் ஒரே சமயதில் பதினைந்து ஹெலிகாப்டர்கள் பறந்து வந்தன. அதில் இராணுவ வீரர்கள். அவர்களின் இயந்திரத் துப்பாக்கிகள் கீழ் நோக்கிச் சரிந்தன. சரம் சரமாகச் சுடத் துவங்க… நாங்கள் எல்லாத் திசைகளிலும் ஓடினோம்.

இராணுவ ஜீப்கள் நாலாப் பக்கங்களிலிருந்தும் எங்களில் உயிர் தப்பியவர்களைச் சூழ்ந்து கொண்டன. நாங்கள் அந்த இராணுவ அதிகாரி முன்பாக நிறுத்தப்பட்டு, எங்களை ஒவ்வொருவராகத் தூக்கிடலிட உத்தரவிடப்பட்டு…

கால்கள் நடுங்க நான் மேடையேறினேன்.

“கடைசியாக ஏதாவது சொல்ல வேண்டுமா புரட்சி நாயே!”

“சாரதாவையும், என் புள்ளைங்களையும் நினைச்சிப் பார்க்காம நான் அவசரப்பட்டு புரட்சில இறங்கினது தப்புதான். ஏற்கனவே எனக்கு ஒரு வருஷ அவகாசத்திலே தான் மரணத்தேதி கிடைச்சிருக்கு. இந்த ஒரு வருஷமாவது நான் அவங்களோட வாழ்ந்துட்டு சாகறேன். தயவு செஞ்சி என்னை மன்னிச்சுடங்க அய்யா!”

“இங்கே மன்னிப்புக்கே இடமில்லை . ம்! ஆகட்டும்!”

என் முகத்தில் கறுப்புத் துணி மாட்டி, சுறுக்குக் கயிற்றை மாட்டி….

“சாரதா!” என்ற அலறினேன்.

“என்னங்க? என்னாச்சி? ஏன் இப்படிக் கத்தினீங்க?” என்றாள். பதட்டமான சாரதா என் உடம்பில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தபடி.

இரவு விளக்கொளியில் என் மூன்று பெண்களும் தரையில் உறங்கிக் கொண்டிருக்க, நான் சாரதாவைப் பார்த்து, “ச்சே நான் ரொம்ப் பயந்துட்டேன் சாரதா. நம்ம நாடு மிலிட்டிரி கைல போயி… அவங்க மரணத் தேதித் திட்டம் அறிவிச்சி…” எல்லாம் சொன்னேன்.

“நல்ல கனவு கண்டீங்க போங்க தண்ணி குடிச்சிட்டுப் படுங்க”

“ஏன் சாரதா, பேச்சுக்குக் கேக்கறேன். திடீர்னு நிஜமாவே நான் செத்துட்டா இந்தக் குடும்பத்தை நீ சமாளிச்சிடுவியா?”

“அய்யோ! என்ன பேச்சுங்க இது! உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இப்படி அர்த்தமில்லாம் கேள்வி கேக்காதீங்க. காலைல கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்” என்றாள் சாரதா.

அர்ச்சனை செய்துவிட்டு சாரதா நவக்கிரகங்களைச் சுற்றிய போது, நான் உண்டியலில் காசு போட்டுவிட்டு பிரகாரப் படிக்கட்டில் அமர்ந்தேன்.

பத்மநாபன் அருகில் வந்து, “என்னப்பா, எப்படி இருக்கே?” என்றான்.

“ம். நீ எங்கய்யா கோவிலுக்கு? அதிசயமா இருக்கே” என்றேன்.

“தொடர்ந்து நாற்பத்தெட்டு நாள் கோயிலுக்கு வந்து எலுமிச்சையில் விளக்கேத்தணும். இது ஒரு பரிகாரம் தேவேந்திர சுவாமிகள் சொன்னாரு.”

“யார் அது?”

“இன்னிக்கு நாடு பூரா அவரைப் பத்திதானே பேச்சு. உன் ஜாதகம் கூடத் ல்லை. பிறந்த தேதி, நட்சத்திரம் சொன்னாப் போதும். ரெண்டே நிமிஷத்துல உன் பிரச்சினைக்கெல்லாம் தீர்ப்பு சொல்றார்.

அவர் சொல்றது அப்படியே நடக்குதுப்பா. பெரிய பெரிய அரசியல்வாதிகள்லாம் வந்துட்டுப் போறாங்க. என் வீட்டுக்குப் பக்கத்திலதான் இருக்கார். சாயங்காலம் வர்றியா?” நான், சாரதா, பத்மநாபன் மூவரும் சுவாமிகள் எதிரில் அமர்ந்திருக்க….

அவர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். கண்களைத் திறந்த சுவாமிகள் சலனமின்றி தலையசைத்தார். பத்மநாபன் என்னை அறிமுகப்படுத்தினான். பிறந்த தேதி, நட்சத்திரம் கேட்டார். சிந்தனையில் ஆழ்ந்தார்.

“நீங்க இவர் மனைவியா?” என்றார் சாரதாவைப் பார்த்து.

“ஆமாம்”

“கொஞ்சம் வெளில இருங்கம்மா, தம்பி, நீயும்தான்” என்றார் பத்மநாபனைப் பார்த்து.

இருவரும் சென்றதும், “தம்பி மரணம் என்பது சுகமா? சோகமா?” என்றார் என்னைப் பார்த்து.

“தெரியலை சுவாமி, அனா எனக்கு மரணம் ஒரு பயம்”

“அதில் பயப்பட என்ன இருக்கிறது? தினசரி உறக்கம் ஒரு மரண ஒத்திகைதானே? பரிபூரண விடுதலை அல்லவா அது! ரத்தமும் சதையும் கொண்ட இந்த உடலுக்கு மட்டும் தானே அழிவு?”

“என் குடும்பத்தை கடைசி வரைக்கும் காப்பாத்தணுமே சுவாமி. அதுக்கு என்ன பண்றது?” எனக்கு மூணு பெண் குழந்தைங்க. அவங்களை வளர்த்து, படிக்க வெச்சி, கல்யாணம் பண்ணிக் கொடுத்து…. சுவாமிகளின் புன்னகைக்குப் பொருள் விளங்கவில்லை. “என் கணிப்புப்படி 9-9-99 அன்ற உன் வாழ்க்கை முடிகிறது தம்பி.”

“அய்யோ ! இன்னிக்கு தேதி 8-9-99ங்க சுவாமி. நிஜமாத்தான் சொல்றீங்களா?” அதிர்ந்தேன் நான்.

“என் வாக்கு பொய்த்ததில்லை. வீட்டிற்குச் சென்று இறைவனைத் துதித்தபடி இரு . கவலை வேண்டாம். மரணம் சந்தோஷமான விஷயம். போய் வா!”

பொம்மை போல எழுந்து வெளியே வந்தேன்.

“ஏங்க ஒரு மாதிரியா இருக்கீங்க? என்னங்க சொன்னார் சுவாமிகள்?”

“வீட்டுக்குப் போகலாம்” என்றேன் உணர்ச்சியே இல்லாமல்

“ஏன் ஒரு மாதிரியாப் பேசறீங்க? ஏன் இப்படி வேர்த்திருக்கு?”

நான் மொனமாக நடந்தேன்.

வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து சுவாமிப் படத்தையே பார்த்தபடி இருந்த என்னை அசைத்தாள் சாரதா.

“எனக்கு பயமா இருக்குங்க. என்னாச்சுங்க?”

“என்னோட எல்.ஐ.சி. பாலிசிரெண்டும் பேங்க் லாக்கர்ல இருக்கு சாரதா.”

“அதுக்கென்ன இப்போ?”

“நீ தைரியமா இருக்கணும் சாரதா. என் ஆபீஸ்லயே உனக்கு வேலை தருவாங்க. குழந்தைங்களை நல்லாப் படிக்க வை”

“என்னென்னவோ பேசறீங்களே. சுவாமிகள் என்னங்க சொன்னார்.”

“நாளைக்கு நான் செத்துடுவேனாம் சாரதா”

“அய்யோ! அதெல்லாம் நம்பாதிங்க. நீங்க நல்லாத்தான் இருக்கீங்க. நாளைக்க ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வீட்ல நல்லா ரெஸ்ட் எடுங்க இந்த ஜோசியத்தைத் தூக்கி எறிஞ்சிடுங்க. முதல்ல மனசுல பலம் வேணும். நாளைக்கு உங்களுக்கு எதுவும் நடக்கலைன்னான உற்சாகமாயிடவீங்க இல்ல?”

“இல்லை சாரதா. கனவுலயும் அதே 9-9-99 நாளைக்கு 9-9-99 சுவாமிகளே சொல்லிவிட்டார். கந்த சஷ்டி கவசம் எடு”

“இந்தப் பேத்தலை நிறுத்தப் போறீங்களா இல்லையா? என்றுக் கத்தினாள் சாரதா.

மாலையில் பெரிதாக மழை வந்தது. இடி மின்னல்

ஒரு பலமான இடியில் … வீட்டின் கூரையில் சட்டென்று ஒரு விரிசல் தோன்ற… சில விநாடிகளில் டமடமவென்று சரிந்தது…..

“சாரதா?” என்று அலறினேன்.

“என்னங்க? என்னாச்சி? ஏன் இப்படிக் கத்தினீங்க?” என்றாள் பதட்டமமான சாரதா என் உடம்பில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்தபடி.

“ச்சே! நான் பயந்துட்டேன் சாரதா. நான் செத்துப் போறதா கனவு கண்டதா ஒரு கனவு. அந்தக் கனவுலயும் நான் செத்துப் போய்ட்டேன். சரி, நீபடு. நான் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துட்டுப் படுக்கறேன்” என்றேன்.

டி.வி.யை ஆன் செய்தேன்

“சிறப்புச் செய்தி விண்வெளியிலிருந்து பாதை விலகிய ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் நேற்று கண்டுபிடித்திருக்கிறார். அவரின் கணிப்புப்படி இந்த விண்கல் வருகிற 9-9-99 அன்று பூமியைத் தாக்கும் என்றும் பூமியை விட மூவாயிரம் மடங்கு பெரிய கல்லான இது தாக்கினால் பூமி தூள் தூளாகிச் சிதறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.”

பின்குறிப்பு இது ஒரு முற்றும் துறந்த கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *