இதுவும் மழலைதான்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,694 
 
 

சியாமளாவிற்கு, தான் நடந்து கொள்ளும் விதத்தை நினைத்தால், அவளுக்கே வெட்கமாக இருந்தது. சுத்தமாகப் பேச்சே வராத, இரண்டு வயது குழந்தையை தன்னுடைய ஜென்ம விரோதி போல் நினைத்து, நடந்து கொள்வது, ஒன்றும் பெருமைப்படக் கூடிய செயலல்லவே. இத்தனைக்கும் அந்தக் குழந்தை, இந்த வீட்டிற்குள் வந்தது முழுக்க முழுக்க இவளுடைய விருப்பத்திற்காகவும், வற்புறுத்தலாலும் என்று சொன்னால், கேட்பவர்க்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கும்.
இதுவும் மழலைதான்!சியாமளாவுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பே கிடையாது என்பது, அவளுக்கு மணமான, இரண்டாவது ஆண்டே தெரிந்து விட்டது. அவளை காதலித்து மணந்து கொண்ட தியாகுவும், அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாததால், அவர்களுடைய இல்லறம் இனிதே போய்க் கொண்டிருந்தது.
இன்னும் சொல்லப் போனால், தியாகுவின் சகோதர, சகோதரியர் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு, தியாகுவும், சியாமளாவும் மிகவும் அன்னியோன்யமாகவும், நன்றாகவும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான், திடீரென்று சியாமளாவை அந்த மனநோய் தாக்கியது.
இரண்டு மாதங்களுக்கு முன், திடீரென்று சியாமளா தினமும் காலையில் அழ ஆரம்பித்தாள். அதுவும், என்ன விஷயத்திற்கு என்றால், “25 ஆண்டுகளுக்கு முன், யாரோ ஒரு சொந்தக்காரர் பெயர் சொல்லி, அவர் என்னை பார்த்து இப்படிச் சொன்னார்; அதனால்தான், எனக்குக் குழந்தை இல்லை; நான் மலடி. திடீரென்று தியாகுவிற்கு ஏதாவது ஆகிவிட்டால், நான், அனாதையாகி விடுவேன்…’ என்று சொல்லி, சரியாக சாப்பிடாமல், தூங்காமல், நேரம் காலம் இல்லாமல், எதிலும் ஈடுபாடு இல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.
தியாகு எவ்வளவோ சமாதானம் சொல்லியும், நாளுக்கு நாள் அழுகை அதிகமாக, இனி வேறு வழியில்லை என்ற நிலை வந்த பின், அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் கூட்டிப் போனான். மன அமைதிக்கு மருந்துகள் எழுதிக் கொடுத்ததோடு, “இவர் கவனத்தைத் திசை திருப்ப, ஏதாவது முயற்சி செய்யுங்கள்…’ என்று மருத்துவர் கூற, தியாகு என்ன செய்வது என்று யோசித்தான்.
தியாகுவின் வீட்டில், தியாகுவை தவிர, அவனது சொந்தங்கள், குறிப்பாக, சகோதரிகள் அனைவரும் மிகவும் வசதி குறைந்த நிலையில் வாழ்பவர்கள். வேடிக்கை என்னவென்றால், சியாமளா ஏங்கும் குழந்தைச் செல்வம், தியாகுவின் சகோதரிகள் வீட்டில் ஏராளமாக இருந்தன.
யாருடைய குழந்தையை சியாமளா கொஞ்ச விரும்புகிறாளோ, அந்தக் குழந்தையையும், தாயையும் தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான். ஆனால், அவன் நினைத்த அளவு, அவன் திட்டத்திற்கு எளிதாக யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. பணமிருந்தால், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நினைத்த தியாகுவை, அவனுடைய சகோதரிகளின் மகன்களும், மகள்களும் வேறு பாதையைக் காட்டினர்.
“உன்னிடம் பணம் நிறைய இருக்கிறது; குழந்தை இல்லை. எனவே, எங்களுடைய தேவைக்கு பணம் கொடு. ஆனால், நாங்கள் உங்கள் வீட்டில் வந்திருக்க மாட்டோம்…’ என்றனர். தியாகு குழம்பிப் போய் இருந்த போதுதான், திருநெல்வேலியில் வசிக்கும் ஒரு அக்காவின் மூத்த மருமகள் ராணி, கொஞ்சம் மசிந்து வந்தாள்… “நான் என் குழந்தையை வளர்க்க தருகிறேன்; ஆனால், என் முதலாவது ஆண் குழந்தையையும் என்னோடு அழைத்து வருவேன். உங்களுக்கு சம்மதமா?’ என்றாள். இந்த முதல் குழந்தை சமாச்சாரம் தியாகுவை பொறுத்தவரை ஒன்றுமில்லாத விஷயமாயிற்று.
ராணியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. அவளைப் பொறுத்த வரை, ஒரு பாதுகாப்பான இடம், வேளைக்கு நல்ல சாப்பாடு மற்றும் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்பதாக தியாகு சொல்லியிருந்தான். எதற்கும் உருப்படாத, இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்ற தன் கணவனை நம்பினால், தன் குழந்தைகளின் வாழ்க்கையும், தன்னுடையது போல்தான் ஆகும் என்று புரிந்ததால் தான், தியாகு வீட்டில் வந்து தங்கி, சமையல் வேலை செய்யவும், கைக்குழந்தையை அவர்களுக்கு தத்து கொடுக்கவும் சம்மதித்திருந்தாள் ராணி.
கைக்குழந்தையும், தன் கண் பார்வையிலேயே இருக்கும்; வசதியாக வளரும். பெரிய குழந்தையையும், அந்த நிழலிலேயே வளர்த்து விடலாம் என்ற எண்ணத்தில்தான், இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டாள். ஆக, ராணியின் முதல் குழந்தை முத்துவைத் தவிர, மற்றபடி இந்த ஏற்பாடு ராணி, சியாமளா இருவருக்குமே சவுகரியமாக இருந்தது.
முத்துவிடம், சியாமளாவிற்கு இருந்த வெறுப்பு, எந்த அளவு என்றால், சராசரி மனிதாபிமான அன்பைக் கூட, அந்தக் குழந்தையிடம் காட்ட விரும்பவில்லை அவள். இத்தனைக்கும், முத்து, சியாமளா சொல்லும் சின்னச் சின்னக் காரியங்களைச் செய்தான்.
“அம்மாவிடம் போய் தண்ணி வாங்கி வா…’ என்று சொன்னால், அவனுக்கு சொல்ல தெரியா விட்டாலும், ராணி புரிந்து கொண்டு தண்ணீர் பாட்டிலை முத்துவிடம் கொடுத்து விடுவாள். முத்து, அந்த பாட்டிலில் இருந்து தண்ணீர் கேட்டால் தர மாட்டாள் சியாமளா. காரணம், அவன் அந்த பாட்டிலில் வாய் வைக்கக் கூடாது என்ற எண்ணம்.
அதே போல், சியாமளா காபி குடித்த கிளாசை கொடுத்தனுப் பினால், அதை, அழகாய் சமையலறை வாஷ் பேசினில் போடுவான் முத்து. கீழே குப்பை இருந்தால், பொறுக்கிக் குப்பைத் தொட்டியில் போடச் சொன்னால், அதையும் செய்வான். ஏனோ தெரியவில்லை, சியாமளாதான் அந்தக் குழந்தையிடம் ஒட்டவே இல்லை.
ஒரு சமயம், ராணி சமையலறையில் சப்பாத்தி செய்து கொண்டிருந்த போது, அவள் அசந்திருந்த வேளையில், அந்த சப்பாத்தி சுடும் தவாவை, அப்படியே பத்து விரல்களாலும் பிடித்து விட்டான் முத்து. அப்படியே அந்தப் பத்து பிஞ்சு விரல்களும், வெந்து போய் விட்டன. ஆனால், அப்போதும், கதறும் அந்தக் குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ளவில்லை சியாமளா. சாதாரணமாக, யாருக்கு எது என்றாலும், மருந்து கொடுக்கும் சியாமளா, முத்து கை விரல்களில் எரிச்சல் தாங்காமல் கத்தியபோது, எதுவுமே நடக்காதது போல், உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, தியாகுவுக்கே கொஞ்சம் கோபம் வந்தது.
“என்ன பெண் இவள்… இவள் ஏங்குவது தாய்மைக்காக என்றால், ஒரு இரண்டு வயது குழந்தை கதறும் போது, அதைத் தூக்க வேண்டாம்; குறைந்தபட்சம் அந்தக் குழந்தைக்கு மருந்தாவது கொடுக்கலாமே…’ என்று நினைத்தான்.
அதே போல், இன்னொரு நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டான் முத்து.
அவன் விழுந்த வேகத்தில், அங்கிருந்த டைல்ஸ் ஒன்று உடைந்து விட்டது. குழந்தைக்கு பலமாக அடிபட்டு, அவன் கதற, அதைப் பார்த்து ராணியே கலங்கி விட்டாள்.
அந்த நேரத்திலும், சியாமளா சொன்ன முதல் வாக்கியம், “மை காட்… இப்போ இதே மாதிரி கலர் டைல்சுக்கு எங்கே போவது… வேறு கலர் டைல்ஸ் போட்டால், பாத்ரூமே அசிங்கமாகி விடும். சே… பார்த்து அழைத்து வரக் கூடாதா ராணி, என்னக் குழந்தை இவன்?’ என்று பேசியபோது, தியாகுவுக்கே, தன் மனைவியின் நடத்தையை நினைத்து, வெட்கமாக இருந்தது.
குழந்தை, அழகாக இருந்தால் மட்டுமே கொஞ்சுவேன் என்பது போல் செயல்படும் தன் மனைவியின் மகப்பேறு இல்லாத நிலையை நினைத்து, இனி வருத்தப்படத் தேவையே இல்லை என்று நினைத்தான் தியாகு.
ராணி கடைக்குப் போயிருந்தாள்.
ராணி வந்த பின், இரண்டு வேலைக்காரிகள் செய்யும் வேலையை, அவள் ஒருத்தியே செய்தாள். வீட்டு வேலை மற்றும் சமையல்; அதோடு காய்கறி வாங்கக் கடைக்கு போவது என்று, அனைத்தும் ராணியின் பொறுப்பில் வந்து விழுந்தது. ராணியும், இன்முகத்தோடு செய்தாள்.
ராணி கடைக்குப் போகும் சமயங்களில், சியாமளா தூங்காத நேரமாக இருந்தால், குழந்தையைப் பார்த்துக் கொள்வாள். அன்றும், அப்படித்தான் பார்த்துக் கொள்ள சம்மதித்தாள்.
ராணி போகும் போது, சிரித்துக் கொண்டிருந்த குழந்தை, ராணி மறைந்த சில வினாடிகளில் சிணுங்க ஆரம்பித்து, அடுத்து, பெரிய அலறலாக மாறியது. சியாமளா தன்னிடம் இருந்த அனைத்து விலையுயர்ந்த பொம்மைகளையும், குழந்தையின் முன் வைத்தாள். அதோடு, குழந்தைக்கு பால் கொடுக்கலாம் என்று நினைத்து, பாலை சூடு செய்த போது, அதுவேறு சுடச்சுட கையில் கொட்டி, கையே சிவந்து விட்டது.
ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய, கண்களை சிமிட்டும், பேசும், சிரிக்கும் பொம்மையை, குழந்தை கையில் கொடுத்த போது, அந்தப் பொம்மையை அப்படியே தூரத் தள்ளி விட்டது குழந்தை.
கை வேறு எரிந்தது. எழுந்து, மருந்து போடலாம் என்றாலோ, அலறும் குழந்தையை வைத்துக் கொண்டு, போட முடியவில்லை. என்ன செய்வது என்று சியாமளா விழித்துக் கொண்டிருந்த நேரத்தில், முத்து திடீரென்று குழந்தையின் முன்னால் வந்து நின்று, அதை, கிச்சு கிச்சு மூட்டி, என்னவோ உளறினான். அதுவரை அழுது கொண்டிருந்த குழந்தை சிரித்தது. சியாமளாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.
முத்துவை பார்த்து சிரித்தாள் சியாமளா. அவன் மெல்ல இவள் மடியில் அமர்ந்து கொண்டான். சியாமளா அவனை உதறவில்லை. 5,000 ரூபாய் பொம்மை, ஓரத்தில் கிடந்தது. இரண்டு குழந்தைகளும், சியாமளாவின் மடியில் விளையாடிக் கொண்டிருந்தன.

– கிரிஜா ஜின்னா (அக்டோபர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *