மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு நூலால் கட்டி கழுத்தில் மாட்டியிருந்தாள். கிழவியின் வெள்ளையாகிப்போன உதடுகள் இன்று தடித்தும் வறண்டுபோயும் இருந்தன. உடம்பெல்லாம் வியர்வால் நனைந்திருந்தது. மனசு படபடத்தது. சோர்வால் கால்கள் தழுதழுத்தன. சுருண்டு கீழே விழுந்தாள் ரெங்கநாயகி கிழவி.
மக்கள் கூட்டமாய்க் கூடினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து டீ வாங்கிக்கொடுத்தார் ஒருவர். ஆவிப்பறக்க டீயை வாயில் வைத்து உறிஞ்சினாள். டீயின் சுவையை உணர்ந்தாலும் மனம் மட்டும் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“பாட்டிம்மா… எங்க போகனும்” என்றார் டீ வாங்கிக்கொடுத்தவர்.
“தஞ்சாவூர்” என்று மெதுவாகக் கூறினாள்.
“இந்த நேரத்திற்குத் தஞ்சாவூர்க்கு நேரடியாகப் பேருந்து இல்லை. அதனால் பெரம்பலூர் சென்று அதன்பிறகு தஞ்சாவூர் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவரே பெரம்பலூர் பேருந்தில் ஏற்றியும் விடுகிறார். பேருந்து வேகமாய் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. ஜன்னல் சீட்டில் உட்காந்திருக்கும் ரெங்கநாயகி கிளவிக்கு மரங்களெல்லாம் பின்னால் செல்வது என்னவோபோல் இருந்தது.
“ஞா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணேன். ஒத்த பொம்பள குழந்தைய பெத்துப் போட்டுட்டு ஒரேடியா போயிட்டா. அதுக்கப்புறம் மருமவனும், குழந்தைய என்கிட்ட விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணமும் பண்ணிகிட்டான். ஜானகின்னு பெரு வச்சு நான்தான் வளத்தேன். நாலு மாட்ட வச்சிகிட்டு பேத்தியையும் படிக்க வச்சேன். அப்பப்ப மருமவனும் பாத்துட்டுப் போவும். அந்தக் குட்டிய வளர்க்கிறதுக்கு நான் பெரும்பாடு பட்டேன். அவ வயசுக்கு வந்தப்ப அப்படியே அவுங்க அம்மாவ உரிச்சு வைச்ச மாதிரி நின்னா. நான் அவள பாத்துட்டு அழுதிட்டேன். என்னோட பொண்ண உசிரோட பார்க்கிற மாதிரி இருந்தது”
பன்னிரண்டாவது படிச்சிட்டு இருந்தா. மத்த புள்ளைங்க மாதிரி அவளுக்கு பள்ளிக்கூடம் போறதுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். ஒருநாள் போனு வேணுமுன்னு கேட்டு அழுதா. அந்தக் குட்டியின் அழுகைய பார்க்க முடியாம காசு கொடுத்துப் போனு வாங்கிக்கச் சொன்னேன். அப்புறம் எப்ப பார்த்தாலும் போனையே நோண்டிகிட்டு இருப்பா. நானும் அந்த டப்பாவை தூக்கி போடும்பேன். நான் அவளோட நடவடிக்கைய பார்த்துப் பயப்பட்டேன். படிப்பு முடிஞ்சவுடனே, அவுங்க அப்பன்கிட்ட சொல்லி ஒரு கல்யாணத்த முடிச்சுப்புடனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசி பரீட்சை எழுத போன புள்ள, சாயுங்காலம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்ல. நானும் இப்ப வந்துருவா அப்ப வந்திருவான்னு நினைச்சிட்டு, மாட்ட அவுத்து தண்ணீயெல்லாம் காட்டிட்டு இருந்தேன். மனசுக்குள் ஏதோ குத்தி தொளைக்கிற மாதிரி இருந்தது. இருட்டு ஆகிடுச்சு. ரெண்டு நாளாகியும் ஜானகிய கண்டுபிடிக்க முடியல. அப்பத்தான் மளிகைக்கடைக்கார கோபாலு,
“உங்க பேத்தியும் படிக்க வந்த தஞ்சாவூர்க்கார பையனும் ஒன்னா சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னுமோ அவன்தான் உங்க பேத்திய தஞ்சாவூர்க்கு கூட்டிட்டு ஓடியிருக்கனும்” என்றான்.
ரெங்கநாயகி கிழவியின் முகம் வேர்த்துக் கொட்டியது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. பித்துப் பிடித்தது போன்று நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தாள்.
“பாட்டிம்மா டிக்கெட் எடுங்க… எங்க போவுனும்…” கண்டக்கர் கேட்டார்.
கிழவி தன்னுடைய இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் தேடினாள். கைகள் மட்டும் இடுப்பைத் தடவியதே தவிர சுருக்குப் பையைக் காணவில்லை. கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்துத் தேடினாள். சுருக்குப் பை ஆத்தூரில் மயங்கி விழும்போதே விழுந்து விட்டதே. இப்போது எப்படி கிடைக்கும். கிழவி விழிப்பதைப் பார்த்த கண்டக்டர்,
“காசு இருக்கா இல்லையா…”
“இல்லை” என்று கிழவி தலையாட்டியவுடன்,
“ஏ.. கிழவி காசு இல்லாம எதுக்கு வண்டியில ஏர்ற.. இது என்ன உங்கொப்ப வீட்டு பஸ்ஸா..? டிரைவர் வண்டிய நிறுத்துப்பா… கிழவி நீ கீழ இறங்கிக்கோ…”
கிழவி கீழே இறங்க எழுந்திருக்கப்போனாள். பக்கத்தில் உட்காந்திருந்த பெண் ஒருத்தி, “கண்டக்டர், பாட்டிக்குப் பெரம்பலூர் டிக்கெட் ஒன்னு கொடு” என்றாள். கிழவியும் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்தவாறே உட்காந்தாள். மீண்டும் ஜன்னல் வெளியே மரங்கள் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தன.
பேருந்து பெரம்பலூர் வந்து விட்டது. ரெங்கநாயகி கிழவி வண்டியிலிருந்து கீழே இறங்கினாள். கையில் நையா பைசா கூட இல்லை. எப்படி தஞ்சாவூர் போறது. வயித்த வேறு கிள்ளுது. சோத்தவிட பேத்தி ஜானகிதான் முக்கியம். தஞ்சாவூர் போயே ஆகனும். சோர்ந்து உட்காந்துவிட்டாள். காசு இல்ல. உடம்பும் வயிறும் ஒத்துழைக்கணும் இல்லையா? எப்படியெல்லாம் வாழ்ந்தவள் ரெங்கநாயகி. இன்று வேறுவழியில்லாமல் பிச்சையெடுக்க ஆரமித்து விட்டாள். சிலர் முறைத்தார்கள், ஏளனமாய் சிரித்தார்கள், இல்லை போ என்றார்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் ஏராளம். பாவமாய் பார்த்து இரக்கப்பட்டுச் சிலர் காசு போட்டார்கள். வடித்து வடித்துக் கொட்டியவள். வாடிவதங்கி பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள். வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.
இரண்டு மூன்று நாளுக்குள்ளாகக் கையில் இருந்த காச வைத்துக்கொண்டு தஞ்சாவூர்க்குப் பேருந்தைப் பிடித்து விட்டாள். ஜானகியின் முகம் மட்டும் கிழவியின் உள்ளத்தில் ஆணி அடித்தார் போன்று பதிந்திருந்தது. எப்பாடுபட்டாவது ஜானகியை மீட்டு மருமவனின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள்.
“இந்தக் குட்டி ஏ இப்படி செஞ்சா.. நா அவளுக்கு என்ன குற வைச்சன். ஞா பொண்ணு மாதிரி நல்லதான பாத்துக்கிட்டன். அவுங்க அப்பங்காரன், எங்கடி ஞா பொண்ணுன்னு கேட்டா நான் எப்படி திருப்பி கொடுப்பேன். ஐயோ கடவுளே! என்ன சோதிக்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? ஞா குட்டிய என்கிட்ட திருப்பி கொடுத்துரு” பேருந்தில் அமர்ந்து கொண்டு மனதில் நினைப்பவையெல்லாம் வாய்விட்டு அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்குப் பேசிக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் கிழவியை ஒருமாதிரியாகவே பார்த்தார்கள்.
தஞ்சாவூர் பேருந்து நிலையம். எப்படியும் ஜானகிய கண்டுபிடிச்சே ஆகனும். கிழவியின் மனதில் வேறொன்றும் இருக்கவில்லை. தன்னோட குலதெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள். தஞ்சாவூர் நகரத்தெருக்களில் வெற்றுக்கால்களோடு நடக்க ஆரமித்தாள். ஒரு சந்தையும் விட்டுவிடவில்லை. யாராவது ஜானகி மாதிரி சின்னபொண்ணா போனாங்கன்னா, உடனே வேகமாய்ச் சென்று பின்னால் தொட்டு மூஞ்சைப் பார்ப்பாள். இதுபோல போவோரும் வருவோரையும் நிறையமுறை பார்த்து விட்டாள். ஜானகி மட்டும் அவள் கண்களில் தென்படவில்லை. கிழவிக்கு மனதில் உறுதி இருந்தது. ஜானகியை அவுங்க அப்பாவிடம் சேர்த்து விட முடியும் என்று நம்பினாள்.
“ஐயா… பன்னிரண்டாவது படிக்கிற சின்ன பொண்ணு. ஒல்லியா செவப்பா இருப்பா. வலதுபக்கம் உதட்டுக்கு மேல சின்னதா ஒரு மச்சம் இருக்கும். நேர்வாக்கு எடுத்து தலவாரியிருப்பா.. ஞா பேத்தி ஐயா.. தஞ்சாவூர்க்கார பையனோட ஓடி வந்துட்டாளாம். நீங்க பாத்திங்களா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” சாலையில் நின்றுகொண்டு கிட்டதட்ட பைத்தியக்காரி போல ஒவ்வொருத்தராய் நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஏதாவது போட்டா இருக்குமா பாட்டி?” சாலையில் ஒருத்தர்.
“போட்டா… இருந்ததுப்பா.. ஆனா.. சுருக்குப் பை தொலைஞ்சிருச்சி” என்றாள் கிழவி. ஒவ்வொரு வார்த்தையும் யோசனை பண்ணி பண்ணி சொன்னாள்.
“போன் நம்பர் ஏதாவது தெரியுமா?”
“அந்தக் குட்டிக்கிட்ட போனு இருக்கு. ஆனா நம்பர் தெரியாதே!”
நின்று கொண்டிருந்தவர் கிளம்ப தயாரானார். கிழவியும் அவரின் பின்னாலயே சென்றாள். தன்னிடம் விசாரித்ததால் நம்பிக்கை கொண்டாள் கிழவி. ஆனார் அவர் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி சென்று விடுகிறார். கிழவிக்கு ஆதரவாகப் பேசியவர். அந்தத் தம்பியைப் பிடித்தால் ஜானகியைக் கண்டுபிடிக்க உதவி செய்வார் என்று நினைத்தாள். அதனால் பேருந்து பின்னாலயே ஓடினாள். வேகமாக ஓடியதால் மூச்சு இரைத்தது. அப்படியே நின்று விட்டாள்.
“ஏ ஜானகி குட்டி எங்கடி இருக்க. நான் உன்ன எங்கடி தேடுவ.. எங்கிட்ட வாடி.. நான் பெத்த மொவளுக்கு மொவளே! என்ன இப்படி பொலம்ப விட்டுட்டியேடி.. சிறுக்கி மொவளே! அடியே குட்டி…” சாலையில் நின்றுகொண்டு அழ ஆரம்மித்தாள்.
ரொம்ப தூரம் நடந்து வந்தததால் ரெங்கநாயகி கிழவிக்குத் தான் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்றுகூட தெரியவில்லை. அந்தச் சாலையில் கிழக்கும் மேற்குமாய் இருபுறங்களிலும் பேருந்துகளும் லாரிகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும் சைக்கிளில் செல்வோரும் கடந்துக்கொண்டிருந்தன. நடந்து செல்வோர் இங்கிட்டும் அங்கிட்டுமாய் போய்க்கொண்டிருந்தார்கள்.
“எல்லோரும் போறாங்க வராங்க இந்தக் கூட்டத்துல ஞா பேத்தி எங்க இருக்கான்னு தெரியலையே? அடியே குட்டி… எங்கடி இருக்க நீ” வேகமாகவே கத்தினாள் கிழவி.
இப்போது கிழவியின் கண்களுக்குத் தூரத்தில் ஜானகி மாதிரி ஒரு பெண் தெரிந்தாள். உடனடியாகச் சாலையைக் கடக்க முயன்றாள். அந்நேரத்தில் வேகமாகவும் நேராகவும் வந்த ஒரு வண்டி கிழவியின் மெல் மோதியது. தலை தரையில் விழுந்தது. தார்ச்சாலையில் இரத்தம் வழிந்தோடியது. கிழவியின் கண்கள் மட்டும் விழித்திருந்தது. கிழவியைச் சுற்றிக் கூட்டம் கூடினார்கள். விபத்து நேர்ந்த வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ஜானகி. கூட்டத்தினுள் நுழைந்து அடிபட்டது யாருக்கு என்று பார்த்தாள். ஜானகிக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.
“பாட்டி நீயா… இங்க எப்படி வந்த…” கத்தினாள் ஜானகி. ரெங்கநாயகி கிழவியின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். கிழவியின் கண்கள் ஜானகியை உற்று நோக்கின. அவளின் கண்களைப் பார்த்தப்படியே மெல்ல மூடினாள் கிழவி. ஜானகியின் மடியெல்லாம் இரத்தம். சத்தம் போட்டுக் கத்தினாள்.
“உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னுதானே ஓடியாந்தன். பெத்துப்போட்டுட்டு எங்க அம்மாக்காரியும் போயிட்டா… எங்கப்பங்காரனும் இன்னொருத்திய தேடிட்டு போயிட்டான். வயசாயியும் நீதான என்ன கண்ணும் கருத்துமா வளத்த.. கொஞ்சநாள்ள உன்ன ஞா கூட கூட்டிட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேனே… ஐயோ கிழவி ஞா ஊர்லய வந்து செத்தப்போவ… இந்தப் பழிய நா காலம் பூரா சுமந்துட்டு திரியனுமா… குருட்டு கிழவி… எழுந்திருடி…” என்று கிழவியின் கன்னத்தில் ரெண்டு அறை விட்டாள். உடலை குழுக்கினாள்.
“என்ன பெத்த கிழவி… எழுந்திருச்சி வாடி… ” கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் மல்க வானத்தை நோக்கி இரு கைகளையும் நீட்டி ஒப்பாரி வைத்தாள் ஜானகி. அங்கு கூடியிருந்தவர்களின் அனைத்து கண்களும் குளமாயின.