கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,502 
 

சபேசன் கையை வைத்ததும் காத்திருந்தது போல “படக்” என்று திறந்து கொண்டது கதவு. சார்த்தி வைக்கவில்லை போலிருக்கிறது. கெüரி உள்ளேதான் இருக்கவேண்டும். வீட்டுக்குள் மெல்ல மெல்ல இருட்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. சோபாவின் மீதும் மற்ற இருக்கைகள் மீதும் புத்தகங்களும் துணிக்குவியல்களும் கண்டமேனிக்கு இறைந்து கிடந்தன. தரை முழுக்கக் குழந்தையின் விளையாட்டுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஓரிரண்டு இடங்களில் மூத்திரம் பெய்து துடைக்கப்படாமல் சிறு குட்டைகளாகத் தேங்கிக் கிடந்தன. எப்போதும் எதையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பவள் கெüரி. அவளுக்கு எப்போதும் அழுக்கோ ஒழுங்கீனமோ அறவே பிடிக்காது.

ஊரில் படிக்கும்போது வீட்டில் தன்னுடைய மேஜையை பார்த்துப் பார்த்து அடுக்கியும் துடைத்தும் வைப்பதிலேயே அதிகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள்.

அவளுக்குக் கொடுக்கப் பட்ட அலமாரி மணக்க வேண்டுமென்று ஊதுவத்திகளைக் கொளுத்தி அலமாரியை இறுக்க மூடி வைப்பாள். திறக்கும்போது “குப்”பென்று முகத்தில் அடிக்கும் மணம் அவளுக்கு ரொம்பப்பிடிக்கும். அவளுடைய அண்ணன் மூர்த்தியும், சபேசனும் அவளை சீண்டுவதற்காக அலமாரியின் கதவை பரக்கத் திறந்து வைத்து ஓடிவிடுவார்கள்.

கல்யாணம் ஆகி டெல்லிக்கு அவள் கணவனுடன் குடிவந்தபோதும் அவளைப் பார்க்க வரும்போதெல்லாம் எதையாவது துடைத்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி வைத்துவிட்டுத்தான் கதவைத் திறந்திருக்கிறாள். அல்லது சபேசனுக்காக கதவைத் திறக்கும் பல நேரங்களில் துடைப்பக்கட்டை கையில் இருக்கும்.

சோபாவில் சத்தம் செய்யாமல் உட்கார்ந்து கொண்டான் சபேசன். உள்ளே சென்று எட்டிப்பார்க்கத் தயக்கமாக இருந்தது. வீட்டுக்குள் கவிந்து கிடந்த மவுனத்தின் அடர்த்தியை மெல்ல ஊடுருவிக் கொண்டிருக்கும் இருள் அதிகரிக்க வைத்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. குழந்தை மெல்ல சிணுங்கும் ஒலி கேட்டது. சரி, கெüரி இனி எழுந்து வருவாள். பார்த்து விட்டு மிகத் தூரத்தில் உள்ள அவன் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும். நிலைமையைப் பொறுத்து இங்கேயே தங்க நேர்ந்தாலும் நேரலாம். சபேசனுக்கு மிகவும் பயமாகவும் அதே சமயம் வெறுப்பாகவும் இருந்தது. தேவையில்லாத எதையோ ஒன்றை தேவையே இல்லாமல் இழுத்துப்போட்டுக் கொண்டது போலத் தோன்றியது. இப்போது கூட எழுந்து விடுவிடுவென்று எழுந்து வெளியே போய்விடலாம்.

ஆனால் வந்து விட்டு இப்படி ஓடிப்போவது பற்றி கெüரிக்குத் தெரியவந்தால் என்ன நினைப்பாள்? என்ன நினைத்து என்ன நடக்கப் போகிறது?

குழந்தையின் அழுகை ஒலி இன்னும் அதிகமாகக் கேட்டது. உள் அறையிலிருந்து கெüரி கால்களைத் தேய்த்துக் கொண்டு வரும் சத்தம் கேட்டது. நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான் சபேசன். இடுப்பில் ஓளவால் போல தொங்கிக்கொண்டே வந்தது குழந்தை. எதையோ கண்டு பயந்தது போல அழுகை தொடர்ந்தது. சபேசனைப் பார்த்ததும் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கி அழுகையை நிறுத்த முயற்சி செய்தது போலத் தோன்றியது. கண்கள் முழுதும் சலிப்பும் அலுப்புமாக குழந்தையை லேசாக உலுக்கிக்கொண்டே எதிரில் இருந்த ஒற்றை சோபாவின் நுனியில் உட்கார்ந்தாள் கெளரி. முகம் சற்று வீங்கியிருந்தது போல இருந்தது. அழுதிருக்க மாட்டாள். நேற்றிலிருந்து சரியாகத் தூங்காததினால் இருக்கலாம். அல்லது ரொம்ப நாட்களாகத் தொடர்ந்து வரும் மன உளைச்சலுக்காகவும் இருக்கலாம். எதற்கும் அழுகிற ரகத்தைச் சேர்ந்தவள் அல்ல கெüரி என்பது அவனுக்குத் தெரியும்.

“வந்து ரொம்ப நாழியாச்சா”?

“இல்லை. நீ ஏதாவது சாப்பிட்டியா இல்லையா”?

சமைத்திருக்க மாட்டாள். ஓட்டலில் இருந்து வாங்கி வந்த பொட்டலத்தை டீப்பாயின் மீது வைத்தான் சபேசன். யாருக்காகவோ வாங்கி வந்தது போல எதையும் கண்டு கொள்ளாமல் வேறு எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கெüரி. அழுவதைக் கொஞ்சம் ஒத்திப்போட்டு டீப்பாயின் மீது கிடந்த பையை இழுப்பதில் ஆர்வம் காட்டியது குழந்தை. எரிச்சிலுடன் அதன் கையிலிருந்து பையைப் பிடுங்கித் தூர வைத்துக்கொண்டாள். குழந்தை சிரித்துக் கொண்டே சபேசனிடம் தாவியது. குழந்தையை சபேசனிடம் கொடுத்து விட்டு கெளரி எழுந்து தயங்கியவாறு நின்றாள்.

“காபி சாப்பிடறயா?”

“பால் வாங்கி வரணுமா?”

“இல்லை. வெங்கடேஷ் ஆத்து மாமி வந்திருந்தா. வம்பு வேணுமில்லே. ஒரு பால் பாக்கெட் கொடுத்து விஷயம் தெரிஞ்சிக்கிட்டுப் போகணும்னு வந்திருந்தா. ஒரு நிமிஷம் இரு வந்துடறேன்”

“காப்பியெல்லாம் எதுவும் வேணாம். உக்காரு. வாசுவோட ஆபீஸிலிருந்து ஏதாவது கேட்டாங்களா?” அங்கே ஏதாவது ஃபோன் செய்தாராமா?

“இதுவரைக்கும் ஒண்ணும் இல்லை. அவரோட பிஏ ரெண்டு மூணு வாட்டி போன் பண்ணிக் கேட்டா. அப்படின்னா அவாளுக்கும் எதுவும் தகவல் இருந்திருக்காது இல்லையா?”

“அப்படித்தான் இருக்கணும்”

நீ மூர்த்திக்கெல்லாம் போன் பண்ணி ஒண்ணும் சொல்லல்லியே? அம்மா தவிச்சுப் போவா”

“இன்னும் இல்லை. ஆனால் எவ்வளவு நேரம் தள்ளிப் போடறது? போலீசுக்கும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டே. ஆச்சு. இதோ இருபத்தி நாலு மணிநேரத்துக்கு மேலே ஆகப்போறதே. வாசுவோட ப்ரண்ட்ஸ் கும்பலுக்கும் ஒவ்வொருத்தனுக்கா போன் பண்ணிக் கேட்டுட்டேன். நேத்து அந்த தேவேந்தர் வீட்டுக்குத்தான் போயிருக்கார். அவனோட பொண்டாட்டி ஊர்லே இல்லையாம். பெரிய ஜமா சேர்ந்திருக்கு. எக்கச்சக்கமா குடிச்சிருக்காங்க. நெறைய பேர் அங்கேயே சாப்பிட்டு தூங்கியிருக்கானுங்க. ஆனால் வாசு எட்டு மணிக்கே கிளம்பிட்டாராமே. அவ்வளவு அதிமாகவும் குடிக்கலைன்னு சொன்னான் அந்த தேவேந்தர். மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு”

“என்ன ஆனாலும், எவ்வளவுதான் தலைகீழா குடிச்சிருந்தாலும் ராத்திரிக்கு எப்படியும் வீடு வந்து சேர்ந்துடுவார். எல்லாம் எப்படி வந்து சேருது பாரு சபேஸ். ஏற்கனவே அவரோட அக்கா “பணம் கொண்டு வந்து தந்தால் போதும் இவளுக்கு. அவன் எப்படியோ குடிச்சுக் குட்டிச்சுவராகட்டும்னு விட்டிருக்கா” ன்னு போன முறை ஊருக்குப் போயிருந்தப்போ சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா. ஏதோ நானே அவருக்கு தினம் ஊத்தித் தர்ற மாதிரி. அவ தம்பி செய்யுற அழும்பு யாருக்குத் தெரிஞ்சிருக்கு. இப்போ ராத்திரி வீடு திரும்பலேன்னு அவாளுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான். நானே ஏதோ செய்துட்டேன்னு என் தலை மேலே போட்டுடுவா. நான் என்ன செய்யட்டும் சபேஸ்?”

அழுகைக்கான ஆயத்தங்கள் துவங்கின. இவள் அழுது விட்டால் தேவலை போல இருந்தது அவனுக்கு. அழுகையை அடக்கிக் கொள்ள அவள் எடுத்துக் கொள்ளும் சிரமம் அவளைக் கொஞ்சம் விகாரமாகக் காண்பித்தது போல இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ரொம்பவும் சங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்லியாக வேண்டும் என்பது போல இருந்தது அவன் முயற்சி –

“நீ வேறே. – ஊருக்குப் போயிருந்தப்போ என் கிட்டேயும் இப்படித்தான் ஆரம்பிச்சா அவரோட அக்கா. நான் நல்லா சொல்லிட்டேன். எல்லாம் உங்க தம்பி செய்யற வேலைதான். கெüரி என்ன செய்வா? அவருக்கு அமைஞ்ச சகவாசம் ஒண்ணும் சரியில்லேன்னேன். அதுதான் அவளே பார்த்திருக்காளே. அப்போ பிடிச்சே வயசுக்கு மீறின சாவகாசம். கல்யாணத்துலே ஊரே பார்த்ததே? எல்லாம் கிழடுகள். அந்தப் பத்திரிகையிலே எழுதறேன். இந்தப் பத்திரிகையிலே எழுதறேன்னு பேர் ஊர் தெரியாத வாயிலே நொழையாத பேரையெல்லாம் சொல்லிண்டு திரிஞ்சதுகள். எல்லாம் குடிகாரக் கிழங்கள். அதுகளை விழுந்து விழுந்து கவனிக்கவே எனக்கும் மூர்த்திக்கும் நேரம் பத்தலை. ராத்திரி அந்த கிழங்கள் உளறிக்கொட்டினதை எல்லாரும் கேட்டுண்டுதானே இருந்தா. வாசுவும் அவரைச் சேர்ந்தவாளும்தானே ஏதோ பெரியவா அருள்வாக்கு கேக்கிற மாதிரி பரவசத்தோட கேட்டுண்டு இருந்தா. அவளுக்கு எல்லாம்ó நல்லாத் தெரியும். ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறா. உன்னைக் குத்தியாகணுமே?”

சபேசனுக்கு அவன் குரலே விசித்திரமாக இருந்தது. இந்த சமாதானமெல்லாம் கெüரியை ஒன்றும் செய்யாது. அவளுக்கு எல்லாம் தெரியும். எல்லாமே புரியும். மிகவும் தெளிவானவள். அவள் உறுதிக்கும் தெளிவுக்கும் அவள் எல்லாம் எங்காவது வேலைக்குப் போயிருந்தால் ஆயிரமாயிரம் சபேசன்களும் மூர்த்திகளும் வாசுக்களும் இவளுக்குக் கைகட்டி சேவகம் புரிந்திருப்பார்கள். காலால் இட்ட வேலையைத் தலையால் செய்ய தண்டனிட்டுக் காத்திருப்பார்கள்.

ஒரு குடிகாரக் கணவனுக்கு முழுநேரச் சேவகம் செய்வதை பரமானந்தமாக அவள் எடுத்துக் கொள்ளும்போது யாரும் ஏதாவது செய்யவோ சொல்லவோ முடியுமா?

குழந்தை அவன் சட்டைப் பைக்குள் கையை விட்டு குடைய முயற்சி செய்தது. மெல்ல சோபாவின் பக்கவாட்டுப் பிடியின் பக்கத்தில் நிறுத்தி வைத்தான். மொபைல் ஒலித்தது.

“என்ன ஏதாவது தெரிஞ்சதா?”

“இல்லை. நான் கெüரி ஆத்துலேதான் இருக்கேன். நீ எப்போ வர்றே?”

“நீங்க அங்கேயே இருங்கோ. வந்துண்டே இருக்கேன். குழந்தைகளை ராணி ஆத்திலே விட்டிருக்கேன். ஆட்டோ லேதான் இருக்கேன்.”

“சரி. நேர்லே வா. பேசிக்கலாம்”

கெளரி சலித்துக் கொண்டாள். உனக்கு எதற்கு இந்தத் தொந்தரவு எல்லாம் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டாள் –

“அவளை எதுக்கு தொந்தரவு செய்யணும். குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு வரணும். அவளுக்கும் ஆபீஸ் இருக்கு. ஏன் இப்படி செய்யறே சபேஸ்?”

சபேசன் அமைதியாக இருந்தான். என்ன சொல்வது? சட்டைக் கைகளை மடித்துக் கொண்டு வாஷ் பேசின் நோக்கிச் சென்றான். சோபாவின் பக்கக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தது குழந்தை. அவனைப் பார்த்து நட்புடன் சிரித்தது. சபேசனுக்கு ரொம்பவும் வேதனையாக இருந்தது. வாஷ்பேசினில் நீரை அருவியாகப் பாயவிட்டு முகத்தில் சலக் சலக் கென்று அடித்துக் கொண்டான். சில்லென்ற தண்ணீர் கண்களில் படும்போது மிகவும் இதமாக இருந்தது. இன்று ராத்திரி தூக்கம் உண்டோ இல்லையோ. எங்கே தேடித் தேடிப் பிடித்தான் மூர்த்தி இந்த மாப்பிள்ளையை? எல்லாம் செய்துவிட்டு அவன் கிருஷ்ணகிரியில் நிம்மதியாக இருக்கிறான் – தாலுக்காபீஸ் ஃபைல்களுடன் மாரடித்துக் கொண்டு. லேசாகக் கண்ணில் எரிச்சல் படுவது போல இருந்தது. தண்ணீரை சளக்சளக் என்று அடித்துக் கொண்டான். கெüரி உள்ளே இருந்து துண்டு எடுத்துக் கொண்டு வந்து சோபாவின் மேல் போட்டாள். குழந்தை சோபாவின் கைப்பிடியை இன்னும் மொத்திக் கொண்டு இருந்தது. மிகவும் அலுப்புடன் சோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டான் சபேசன். குழந்தை அவனிடம் தாவி வர முயற்சித்து கீழே விழுந்தது. குழந்தையை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டான். எச்சõல் ஒழுகி சட்டையில் அங்கங்கு ஈரமாக இருந்தது. அவனுடைய சட்டைப் பைக்குள் எதையோ தேடுவது போல மிகவும் தீவிரமான முயற்சியை மீண்டும் மேற்கொள்ள ஆரம்பித்தது. மிகவும் அருகாமையில் மிளிர்ந்த அதன் கண்களும் சிரிப்பதைப் போல இருந்தது. அதன் கண்களில் கெüரி ஒüல்ந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது. இந்த ஒரு அழகை, அற்புதத்தை விட்டு என்ன இழவுக்கு இரவு பகல் தெரியாமல் குடித்து தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு மற்றவர் களையும் கஷ்டப் பட வைக்கவேண்டும் இந்த வாசுவுக்கு? நேற்று எங்கோ பார்ட்டிக்குப் போனவன் இப்போது வரை முழுக்கத் திரும்ப வில்லை. எந்தத் தகவலும் இல்லை. நண்பர்களைக் கேட்க வேண்டாம் – போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டாம் என்கிறாள் கெüரி. இவ்வளவு பெரிய நகரத்தில் எங்கிருந்து தேடித் தொலைப்பது? டெல்லியில் அங்கங்கு மிகச் சாதாரணமாக நடக்கும் கொலைகளும் அடித்துத் தூக்கி எறிந்து செல்லும் வாகன ஓட்டிகளின் குரூரங்களும் வயிற்றைக் கலக்கி வருகின்றன. இவையெல்லாம் அவளுக்கும் தெரியும். பின் என்னதான் செய்யலாம் என்று நினைக்கிறாள்? மிகவும் வெறுப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

கெளரி காபி டம்ளரை டீப்பாயின் மீது வைத்து விட்டு தரையில் உட்கார்ந்து குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். குழந்தை திமிற முயற்சித்தது. ஒரு செல்லமான அதட்டலுடன் மடி மீது இருத்திக் கொண்டாள்.

“நேத்து ஸ்கூட்டரும் எடுத்துக்கிட்டுப் போகலை. காலையிலேயே அந்த தேவேந்தர் கடன்காரன் காரிலே அழைச்சுண்டு போனான். இன்னிக்கு எங்கேயோ ஹரியானா பக்கம் கிராமத்துலே ஷ÷ட்டிங் போயிருக்கானாம். சரி. இவரும் போயிப்பார்னு ஆரம்பத்துலே நினைச்சேன். ஆனா ஷ÷ட்டிங்லேருந்து பாதிலேயே திரும்பி வந்த சதீஷ் சொன்னான் வாசு அங்கே போகலையாம். அதுக்கப்புறம்தான் கொஞ்சம் பயம் வந்தது சபேஸ். இந்த மனுஷன் எங்கே என்ன பிரச்னைன்னாலும் வீட்டுக்கு வந்துடுவாரே? ஞாபகம் இருக்கா? ஒரு தடவை விரல்லே அடிபட்டுண்டு ரத்தமா ஒழுகியும் அந்தக் கையை வச்சுண்டு நேரா வீட்டுக்குத்தானே வந்தார்?”

சபேசனுக்கு எதையும் கேட்கவோ நினைத்துப் பார்க்கவோ பிடிக்கவில்லை. மிகவும் எரிச்சலாக இருந்தது. ஒரு முறை யாரையோ அடித்தோ அல்லது எங்கோ அடிபட்டோ சுண்டுவிரல் அறுந்து தொங்க ரத்தம் சொட்டிக் கொண்டே வந்து கதவைத் தட்டினான். அன்று வனஜாவையும் இவனையும் சாப்பிட அழைத்திருந்தாள் கெüரி. அலறியடித்துக் கொண்டு அவனை வாரிப்போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு இழுத்துக் கொண்டு எல்லோரும் ஓடினார்கள். ஆஸ்பத்திரியையே அதகளம் செய்தான் வாசு. விரலில் தையல் போட வந்த டாக்டரை இழுத்து இழுத்து அடிக்கப் போனான். அவன் தாய், சகோதரி, என்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் வைதான். தனியார் மருத்துவமனை என்பதால் போலீஸ் கேஸ் ஆகாமல் சமாளிக்க முடிந்தது. “நேரா வீட்டுக்குதானே வந்தார்” என்று இப்போது பெருமை வேறு அடித்துக்கொள்கிறாள். தலையெழுத்து.

இப்போதைக்கு வாசுவைப்பற்றி ஏதோ ஒரு செய்தி அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரியே என்றுதான் தோன்றியது. இப்போதைய அவஸ்தைக்கு ஏதோ ஒரு செய்தி வந்து தொலைந்தால் எவ்வளவோ தேவலை என்று தோன்றியது.

செய்யக்கூடாததை செய்து தொலைத்து எங்கேயாவது கைதாகியிருந்தால் யாரிடம் சொல்லியாவது யார் காலில் விழுந்தாவது வெளியில் கூட்டி வரலாம்.

எங்காவது அடிபட்டுத் தொலைத்திருந்தால் யார் சிபாரிசாவது பிடித்து ராஜவைத்தியம் பார்க்கச் சொல்லலாம். கொஞ்ச நாளைக்கு வீட்டோடு இருப்பான்.

எங்காவது யாருடனாவது ஓடித்தொலைத்திருந்தாலும் இன்னும் நல்லதுதான். கெüரிக்கு இதுபோன்ற இம்சைகள் இல்லாது நிம்மதியான வாழ்க்கையைத் துவக்க உதவி செய்யலாம். அவள் அண்ணன் மூர்த்தியும் அவன் மனைவியும் இவளை ராணி மாதிரி வைத்துத் தாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு இதுமாதிரி இம்சைகள் தான் பிடித்திருக்கிறது. என்ன செய்து தொலைக்க முடியும்?

கீழே ஆட்டோ உறுமி நிற்கும் சத்தம் கேட்டது. வனஜாவாக இருக்கலாம். குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு பால்கனி பக்கம் சென்று எட்டிப் பார்த்தான். வனஜாதான். இவளுக்கும் பாவம் அலைச்சல். முகத்தில் எரிச்சலும் பதைப்புமாக வந்து இறங்கினாள். எதிர் வீடுகளின் பால்கனிகளில் சிலர் நின்று கொண்டு இங்கேயே எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்பது போலத் தோன்றியது. அவர்கள் வேறு ஏதாவது வேலைகளுக்காகக் கூட நின்று கொண்டு இருக்கலாம். வனஜாவை எதிர்கொண்டு அழைத்து வருவது போல குழந்தையுடன் விறுவிறுவென்று இறங்கிக் கீழே போனான். அவளிடம் எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். அழவேண்டாம் என்றும் எதையும் அதிகம் கிளறவேண்டாம் என்றும் சொல்லவேண்டும். இவள் அழுதாலும் கெüரி அழ மாட்டாள். கெüரிக்காக இல்லா விட்டாலும் வாசுவின் மேல் வனஜாவுக்கு அலாதியான பிரீதி உண்டு. மிகுந்த மரியாதை உண்டு. வாசுவும் வனஜாவிடம் மிகுந்த மரியாதையுடன் பழகுவான். “மன்னி மன்னி” என்று உருகிப்போவான். “அந்தக் குடியை மட்டும் விட்டு விட்டால் அவரைப் போல திறமையானவர்களும் நல்ல மனசு உள்ளவர்களும் யாரும் கிடைக்கமாட்டார்கள்” என்று விசேஷ இடங்களில் வாசுவை முகம் தெரியாத யாராவது ஒருவரிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டிருப்பாள் வனஜா. “உங்க கெüரி என்ன பாடுபடுத்தறதோ – மனுஷன் இப்படிக் குடிச்சுக் கரைஞ்சு போறார்” என்று இவனிடம் எப்போதாவது ஆரம்பிப்பாள்.

கெளரியும் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்திருக்கிறாள். குழந்தைக்கான பிஸ்கட்டுகளும் சாக்லேட்டுக்களும் இன்னொரு பையில்.

“சின்னது அடம் பிடிக்கலையே? தானும் வர்றேன்னு?”

“அதுக்கு அங்கே புதுசா ஜமா சேர்ந்திருக்கு. ராணியோட சொந்தக்காரங்க யாரோ வந்திருக்காங்க. ஒரே வானரப்பட்டாளம். இது அதுகளோட சேர்ந்துடுத்து. ராணிகிட்டே ராத்திரி எவ்வளவு லேட்டானாலும் வந்துடறேன்னு சொல்லியிருக்கேன். உங்க ஃபிரண்டு கிட்டே சொல்லிட்டீங்களா?”

“இன்னும் இல்லை. ராத்திரி பார்த்துட்டு சொல்லலாம். மூர்த்தியோட அம்மா ரொம்ப டென்ஷன் ஆயிடுவா. கொஞ்சம் பார்த்துட்டு போன் பண்ணலாம்னு இருக்கேன். என்ன இருந்தாலும் நாமதானே சமாளிச்சாகணும்? அவனுக்கு இப்போதைக்கு போன் பண்ணி என்ன செய்யப்போறான்?”

படிகளில் ஏறுவதற்குமுன் வனஜாவிடமிருந்து பைகளை வாங்கிக் கொண்டான். ஏறுவதற்கு முன் நீள மூச்சு வாங்கிக் கொண்டாள் வனஜா. பின்பக்கம் நிழலாடுவதுபோல இருந்தது. வாட்ச்மேன் பகதூர் தயங்கி நின்று கொண்டான். அவனுக்கு செல்ல வழிவிட்டார்கள் இருவரும். பகதூர் கடந்து செல்லும்போது மதுவும் பீடியின் வீச்சமும் கலந்த நெடி வலுவாகத் தாக்கிச் சென்றது. வனஜா முகம் சுளித்துக் கொண்டே படியேறினாள்.

கெளரி வீட்டைத் திருத்திக் கொண்டிருந்தாள். கலைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த சபேசனுக்கு வேறே வேலை இல்லை. அர்த்த ராத்திரியிலே உன்னையும் தொந்தரவு பண்ணிண்டிருக்கான். நீ எதுக்கு குழந்தையை விட்டுட்டு வந்தே வனஜா?” கொஞ்சம் கலக்கம் தெளிந்த புன் முறுவலுடன் கெüரி கேட்டாள்.

“ரொம்பவும் வேண்டியது தான்” என்று முணுமுணுத்தான் சபேசன்.

வனஜா ஒன்றும் பேசாமல் தான் கொண்டு வந்த பையை கெüரியிடம் கொடுத்து விட்டு குழந்தையை எடுத்துக் கொண்டாள். குழந்தை அவள் முகத்தை சிரித்துக் கொண்டே நக்க ஆரம்பித்தது. வெளிக்கதவை சாத்தி விட்டு வந்த கெüரி சமையலறை நோக்கிப் போக ஆரம்பித்தாள்.

“எங்கே போறே? ஒண்ணும் வேணாம். நீ இரு”

“இல்லை. எனக்கும் தலையை வலிக்கற மாதிரி இருக்கு. ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடலாமே” என்று கெüரி உள்நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கெளரியின் தலை மறைந்ததும் வனஜா சபேசனின் கையைப் பிடித்து ஜாடை காட்டி முன்னறைக்கு இழுத்துப் போனாள்.

“நீ கொஞ்சம் குழந்தையை பார்த்துண்டிரு. நாங்க ஸ்டேஷன் போயிட்டு வந்துடறோம். கெüரி வேணாம்னுதான் சொல்றா. எனக்கென்னமோ பயமாயிருக்கு” சபேசன் கிசுகிசுப்பது போன்ற குரலில் தொடங்கினான்.

“ஹோம் மினிஸ்டிரி முரளிக்கு ஒரு போன் பண்ணி கேட்டுண்டு போங்களேன். கொஞ்சம் உதவியாயிருக்கும்”

யாருக்கும் சொல்ல வேணாம்னு ஏற்கனவே அந்த சண்டி ஒத்தைக் கால்லே நின்னுண்டிருக்கு. இன்னும் முரளிக்கெல்லாம் போன் பண்ணா என்னை அதகளம் பண்ணிடுவா. போலீசுக்கே வருவாளான்னு தெரியலியே. நேரம் ஆயிண்டேயிருக்கு. கொஞ்ச நேரம் பார்ப்பேன். இவ ஸ்டேஷன் வரலைன்னா அப்புறம் வேணும்னா அவளுக்குத் தெரியாமே முரளிக்கு சொல்லிப் பார்க்குறேன். முரளிக்கு சொன்னா கொஞ்ச நேரத்துலே பெரிய டெல்லி போலீஸ் படையே வாசல்லே நிக்குமே. அதுவேற பார்க்க வேண்டியிருக்கு.

“ஸ்டேஷனுக்கு போன் பண்ணு. நானே அங்கே போய் பேசிக்கிறேன்னு முரளிக்கு சொல்லிப் பாருங்கோ”

வனஜாவின் முகத்தில் சலிப்பும் அலுப்பும் கலந்த ஒரு பார்வை மின்னலாகத் தோன்றி மறைந்ததை கவனித்தான் சபேசன்.

“என்ன ஆலோசனை எல்லாம் பலமா இருக்கு?” என்று யாருக்காகவோ கேட்பது போல காப்பி டம்ளர்கள் வைத்த தட்டை தூக்கிக் கொண்டு அறைக்குள் வந்தாள் கெüரி. காபி தம்ளர்களை நோக்கி சடாரென . திமிறிப் பாய்ந்த குழந்தையை இறுக்கிக் கொண்டாள் வனஜா. தயக்கத்துடன் ஆரம்பித்தான் சபேசன்.

“முரளிக்குப் போன் பண்ணிட்டு ஸ்டேஷனுக்குப் போகலாமான்னு பார்க்கிறேன்”

“கொஞ்சம் பார்க்கலாம்ன்னு தோணுது. நீ என்ன சொல்றே வனஜா? ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிண்டு இருக்கணுமா”?

சபேசனுக்கு எரிச்சலாக வந்தது. இவளுக்கு எதிரில் பேசினால் சரியாக இருக்காது. கொஞ்சம் வெளியில் போவது போல போக்குக் காட்டி முரளிக்கு சொல்ல வேண்டும். நாளைக்கு ஒன்று கிடக்க ஒன்று ஆனதென்றால் அவனுடைய உதவி தேவைப்படும். முதலில் ஏன் சொல்லவில்லை என்று அவன் கடிப்பான்.

“வெளியிலே போய் போன் பேசிக்கலாம்னு யோசிக்கிறமாதிரி இருக்கு. சரி பேசிக்கோ. போற மானம் போயிண்டுதான் இருக்கு. இன்னும் போகட்டுமே”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீ என்ன சொல்றியோ அப்படியே பண்றேன். நான் அதுக்கு வெளியிலே போகலே. பத்து நிமிசத்துலே வந்துடறேன்”.

கதவைச் சார்த்தி வைத்து விட்டு வெளியேறினான் சபேசன். படியில் இறங்கும்போது மேலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் பகதூர். இவனைப் பார்த்து ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை சபேசன். கட்டிடத்தை விட்டு இறங்கி தெருமுனை பீடா கடையை நோக்கி நடக்கத் துவங்கினான். சிகரெட் வாங்கிக் கொண்டு அருகிலிருந்த பஸ் ஸ்டேண்ட் பலகையில் உட்கார்ந்தான். முழு போதையில் பெஞ்சில் சாய்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ஒருவன் தவம் கலைந்தது போல எரிச்சலடைந்து தலைமாற்றிப் படுத்துக் கொண்டான். சபேசனுக்கு வெறுப்பாக வந்தது. மூர்த்திக்குப் போன் செய்து எல்லாம் சொல்லிவிடலாம். உன் தங்கையை அழைத்துக் கொள். நீ சலித்துத் தேடிய மாப்பிள்ளை எங்கேயோ குடித்துவிட்டு தெருப்பொறுக்கிக் கொண்டு இருக்கிறான். கொஞ்ச நேரத்தில் என்ன செய்தி கிடைக்கப் போகிறதோ காத்திரு என்று சொல்லி விடலாமா என்று யோசித்தான். கெüரி கொன்று விடுவாள். பக்கத்தில் இருந்த குடிகாரன் எழுந்து யாரையோ ரொம்பவும் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். வீட்டுக்குப் போகலாம். கெüரியின் முன்னாலேயே முரளியிடம் பேசிவிட்டு ஸ்டேஷனுக்குப் போகலாம் என்று தீர்மானித்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கதவு கொஞ்சமாக சார்த்தியிருந்தது. வெளியே நின்றிருந்த பகதூர் இவனைப் பார்த்ததும் சற்றுத் தயங்கி கீழே விடுவிடுவென்று போக ஆரம்பித்தான். பெருங்குழப்பத்துடனும் பதட்டத்துடனும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான். வனஜா சட்டென்று வெளியே வந்து உதட்டின் மீது விரல் வைத்து ஒன்றும் பேசாதே என்பது போல ஜாடை காட்டினாள். உள்ளே சிசுருûக்ஷ பலமாக நடந்து கொண்டிருந்தது. குளியலறையில் வாசுவை ஸ்டூலில் உட்கார வைத்து சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தாள் கெளரி. அவன் உடையெல்லாம் எங்கோ சேற்றில் போட்டுப் புரட்டி எடுத்தது போல இருந்தது. கெட்ட கெட்ட வார்த்தைகளில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தான். இந்தியில் தமிழில் பஞ்சாபியில் என்று பல மொழிகளில் கெட்ட வார்த்தைகள். “வனஜா இருக்கா. இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்று குழந்தையைக் கடிந்து கொள்வது போல கிசுகிசுத்தாள் கெüரி. எட்டு ஊருக்குக் கேட்பது போல “ஷி ஈஸ் மை ஒன்லி ஸிஸ்டர்” என்று உரக்கக் கத்தி முக்காலியில் இருந்து விழப்பார்த்தவனைத் தாங்கிக் கொண்டாள் கௌரி. அவள் சபேசனையோ வனஜாவையோ கண்டு கொள்ளவில்லை. பள்ளி செல்லும் வழியில் தவறிப்போன குழந்தை மீண்டும் வீடு தேடி வந்ததைப்போல சீராட்டிக் கொண்டிருந்தாள். சபேசனுக்கு எரிச்சலாக இருந்தது. வனஜா அவனைப் பார்த்து கண்ஜாடை காட்டினாள். “போகலாம்” என்பது போல் தலையாட்டிவிட்டு கெüரியிடம் “என்ன ஆச்சாம் கெளரி?” என்றான். கெüரி அவனைக் கண்டு கொள்ளாமல் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வாசுவின் வாயைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவன் தலை தொங்கிக் கொண்டிருந்தது. அங்கேயே தூங்குவதற்கு ஆயத்தம் செய்வது போல சரிந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தான் சபேசன். கெüரி அவன் பக்கம் திரும்புவது போலத் தெரியவில்லை.

“சரி, கிளம்பு” என்றான் வனஜாவிடம். வனஜா ஒன்றும் பேசாமல் கிளம்புவதற்கு ஆயத்தமானாள். சோபாவில் படுத்துக் கொண்டிருந்த குழந்தை சிணுங்கிக் கொண்டே திரும்பிப் படுத்தது. குழந்தை கையில் பற்றியிருந்த பையின் வார்ப்பட்டையை மெல்ல விடுவித்து பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானாள் வனஜா.

“கதவை சார்த்திக்கோ கெüரி. நாளைக்குப் பார்க்கலாம்”

உள்ளே வாசு பாத்ரூம் கதவை ஓங்கி எட்டி உதைத்துக் கொண்டிருந்தான். கௌரி ஈரம் படிந்த கைகைளைத் துடைத்துக் கொண்டு கதவை சார்த்திக் கொள்ள ஆயத்தமாக வெளியே வந்தாள்.

சபேசனும் வனஜாவும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாமல் கீழே இறங்கினார்கள். வனஜா மொபைல் போனில் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வந்து விடுவதாக பக்கத்து வீட்டுக் காரியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சின்ன வெளிச்சப்புள்ளியாக தூரத்தில் வந்த ஆட்டோ, கை காட்டியதும் தூர விலகிப்போனது. பஸ் ஸ்டேன்டில் இருந்த குடிகாரன் தீவிர உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

“ஆட்டோ கண்டிப்பா கிடைச்சிடும். இல்லேன்னாலும் ராத்திரி பஸ் ஏதானா வராமல் போகாது”

வனஜாவுக்கும் தனக்கும் நம்பிக்கை சொல்லிக் கொண்டு இருந்தான் சபேசன். இரவு மெல்ல கரைந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *