இடைவெளி இல்லாத சந்தோஷங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 7,967 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விஜயா ஆபீஸ் விட்டு வரும் போது வழக்கமில்லாத வழக்கமாக நரசிம்மனும், செல்லம்மாவும் ரொம்பவும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

புருவத்தை உயர்த்தியவாறே நோட்டமிட்ட அவளை கண்டு, “ஒரு நல்ல செய்திம்மா!” என்றார் நரசிம்மன்.

“விஜி! உனக்குத் திருமண யோகம் வந்தாச்சுடி!” என்ற செல்லம்மாவின் முகத்தில்தான் எத்தனை திருப்தி.

விஜி சலனப்படவில்லை.

மனத்தில் ஒரு சின்ன சோகம் ஆட்கொண்டது.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இத்தனை மகிழ்ச்சியா?

அவளை அனுப்பிவிட்டு அவர்களால் எப்படி இருக்க முடியும்?

“எனக்குத் திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை. இன்னும் சில வருஷங்கள் போகலாம்மா!” என்று அப்பாவிடம் மனசு விட்டு அவள் எத்தனையோ தரம் கூறியிருந்தும் பெற்ற மனம் ஒத்துக் கொளளவில்லை.

“ஒண்ணு மட்டும் சொல்றேன்ம்மா! சென்னையிலேயே என் வாழ்க்கை அமையுமானால் நன்றாக இருக்கும்…” என்று மட்டும் தன் உள்ளக் கிடக்கையைக் கூறியிருந்தாள் அவள்.

“செல்லம்! குழந்தைக்கு டிபன், காப்பி கொடு. பேசிக் கொண்டே சாப்பிடட்டும். விஜிம்மா! நீ போய் டிரஸ் மாத்திட்டு வா, எல்லா விஷயங்களையும் சொல்றேன்!” என்றார் நரசிம்மன்,

தன்னுடைய சாதனையைப் பற்றிக் கூறப் போகும் பெருமிதம் அவர் முகத்தில் பளிச்சிட்டது.

உடை மாற்றிக் கொண்டு வந்த விஜயா, காப்பியைப் பருகிவிட்டு, டிபனைக் கொறிக்க ஆரம்பித்தாள்.

“போன மாதக் கடைசியிலே வந்தானே ஒரு மாநிறமான பி.ஈ. பையன், அவனுக்கு நம் சொத்துப் பத்துக்கள் தெரிய வேண்டுமாம். நாம் இருப்பது சொந்த வீடானால் அதை அவன் பெயரில் மாற்றிவிட வேண்டுமாம். இன்னும்…” என்று மேலும் பேச வந்தவரை விஜயா இடை வெட்டினாள். ”

“போதும்ப்பா!”

“இந்த மாத முதல் வாரம் பெங்களூர்வே இருந்து வந்தாங்களே. அந்தப் பையனுக்கு ஸ்டேட்ஸ் போகணும்னு ஆசையாம். அந்தச் செலவை நாம் ஏத்துக்கிட்ட அடுத்தகணமே, ‘உங்க பெண் கழுத்திலே தாலியைக் கட்டிடு வேன்’று தந்தி கொடுத்திருக்கான்மா!”

“விடுங்கப்பா!” எரிச்சலோடு கூறினாள் அவள்.

“இன்னும் ஒண்ணே ஒண்ணும்மா! மதுரையிலேயிருந்து ஒரு பேங்க் எம்ப்ளாயி வந்திருத்தானே அவன் என்ன எழுதியிருக்கான்னு தெரியுமா?”

“சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாம்ப்பா! இந்த மாதிரி கடிதங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் எழுதப்பட்டிருக்கும். சீக்கிரம் சொன்னீங்கன்னா நான் என்னோட ஃபைலைக் கொஞ்சம் பார்ப்பேன்!” சலிப்போடு கூறினாள் விஜயா.

இந்த வயசுப்பொண்ணுக்கு இப்படிக்கூட ஒரு சலிப்பும், கசப்பும் இருக்க முடியுமா? ஏன் இப்படி உற்சாகமே இல்லாமல் இருக்கிறாள்?

ஒரு நல்ல மண வாழ்க்கைக்கு மனதுக்குள் கற்பனைக் கோட்டைகள் கட்டிக் கொண்டு அதை ஆவலோடு எதிர்பார்க்கும் வயசில்லையா இவளுக்கு?

ஒருவேளை பெற்ற அம்மா, அப்பாவை விட்டு எப்படிப் பிரிந்திருக்கிறதுன்னு உள்ளுக்குள் கவலைப்படுகிறாளா?

“என்னப்பா மௌனமாயிட்டீங்க?” அவர் சிந்தனையைத் தட்டி எழுப்பினாள் விஐயா.

“உம்! ஏதோ நினைப்பு!” என்று சமாளித்தார் அவர்.

பிறகு, “மதுரைப் பையனைப் பற்றியும் சொல்லி முடிச்சுடறேன் விஜிம்மா! அப்புறம் உன் இஷ்டம்!” என்று ஆரம்பித்தார்.

“அந்த மதுரைப் பையன் மோகன் எழுதியிருக்கான், அவனுக்குச் சொல்லிக்கும் படியா மனுஷர்கள் யாருமில்லையாம், அம்மா மட்டும்தான். ஆடம்பரம் வேண்டாம். நகைகள், பாத்திரங்கள், புடைவைகள் என்று எந்த பேரமும் வேண்டாம். எனக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது, முக்கியமானது பெண்ணுக்கு என்னைப் பிடித்திருப்பது தான். அதைத் தெரியப் படுத்த வேண்டுகிறேன் என்று எழுதியிருக்கானம்மா!”

விஜயாவின் முகத்தில் மூட்டமிட்டிருந்த சலிப்பும், எரிச்சலும் சற்றே கலைந்து, மெல்லிய புன்முறுவல் தவழவாரம்பித்தது.

“உம்! விஜிக்கு இந்தப் பையனைப் பிடிச்சாச்சு!” அம்மா குதுகலப்பட்டாள்.

“எனக்குப் பையனைப் பிடிச்சிருக்கோ, என்னவோ அவரது வாசகங்கள், அணுகுமுறைகள் பிடிச்சிருக்கு…..” மெல்ல மொழிந்தாள் அவள்.

“அப்போ விஜிம்மா! திருமண ஏற்பாடு களைச் செய்யலாமா?”

”உங்க இஷ்டம் அப்பா!” பெரிதாக ஒன்றும் நாணப்படாதது போலவே மகிழ்ச்சி யையும் பிரதிபலிக்கவில்லை அவள்.

எழுந்து தன்னறைக்குச் சென்றாள் விஜயா.

மோகன் வந்தான்.

“யாருமில்லாததால் எனக்கு நானே வர வேண்டியிருக்கு சார்!” என்று அவன் கூறினான்.

“ஏன் அப்படிச் சொல்றீங்க மாப்பிள்ளை! நாங்கள்ளாம் உங்களுக்கு இல்லையா?” என்று நரசிம்மன் குறுக்கிட்டார்.

“தேங்க்யூ ஷார்!” என்றவன், மற்ற விஷயங்களையும் பேசி முடிவாக திருமணத் தேதியை நிச்சயித்துவிட்டு. அழைப்பிதழ்கள் அச்சடிக்கச் சென்றான்.

“பை தி பை, விஜயாவுக்கு அஃபிஷியலா எத்தனை இன்விடேஷன் வேண்டும்?” தயக்கத்தோடு கேட்டான்.

“ட்வென்ட்டி இஸ் இனஃப்” என்றாள் வீஜயா.

“நான் வேலையைக் கன்ட்டின்யூ பண்ணிட்டுமா?” பெற்றோர்கள் எதிரிலேயே கேட்டாள் அவள்.

“திருமண சமயத்தில் ஒரு மாதம் லீவ் போட்டுவிட்டால் அது பற்றி அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம்னு நினைக்கறேன்!”

“ஒ.கே.” திருப்தியோடு புன்னகை செய்தாள்.

மதுரையில் விஜயா இருந்த நாட்களில் அவள் மோகனை நன்கு புரிந்து கொண்டாள். கடிதத்தில் எழுதியிருந்தபடி அவன் ஆடம்பரங்களை வெறுத்தான். அமைதியே உருவாக இருந்தான்.

தம்பதிகளை அழகர் கோயிலுக்குப் போய் வரும்படி அனுப்பினாள் மோகனின் அம்மா.

அடுத்து மீனாட்சி கோயிலுக்கு அனுப்பி வைத்தாள்.

மதுரையும் தன் கணவனைப் போலவே அமைதியாக உள்ளதாக எண்ணினாள் அவள், சென்னையைப் போல, பார்க்கும் மனிதர்கள் எல்லாம் பரபரத்து ஓடவில்லை. இவர்கள் அவசரத்தில் ஒரு நிதானம் இருந்தது. இதயத் துடிப்பிற்கு இணையாக அவர்கள் உடலில்.

“விஜி! எப்படி இருக்கு எங்க ஊர்?”

“ஐ லைக் மதுரை வெரிமச்!”

“அப்படியா? சென்னையை விடவா”

“உம்! நம்ப மதுரையாச்சே?” அவள் கன்னத்தில் குங்கும ரேகைகள் ஓடி மறைந்தன.

மோகனின் மனத்தில், “இதந்தரும் மனையாள் அன்பு, சுதந்திர மனங்களின் காதல்’ என்ற வரிகள் ஓடின.

அழகிய பூங்காவில் அமைதியான மலர்கள், நிலவொளியில் குளிப்பது போல் அவர்கள் இல்லத்தில் மணமும், ஒளியும் நிறைந்திருந்தன.

போனது தெளியாமல் இருபத்து நான்கு நாட்கள் ஓடிவிட்டன.

“விஜி! உன் விடுமுறை நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றதே…”. திடீரென ஞாபகம் வத்தாற்போல் கேட்டான் மோகன்

அவனது மனநிலை அவளுக்குப் புரியவில்லை.

“விஜி”

“உம்!”

“இன்னும் நான்கே நாட்கள் தான் இருக்கு…”

“எதற்கு?”

“நீ சென்னைக்குப் புறப்படுவதற்கு.”

“ஓ! நான் எப்போது புறப்படுவேன்னு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?”

“இல்லை, உலகத்திலுள்ள கடிகாரங்கா எல்லாம் நிறுத்திவிடலாமான்து பார்க்கிறேன், மேகங்களை வானில் விதைத்து. கதிரவன் மணிக்கணக்கைக் காட்டக்கூடாது என்று உத்தரவிடலாமான்னு பார்க்கிறேன்.”

க்ளுக்கெனச் சிரித்தாள்.

“தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்தவர்னு புரிகிறது. அதனால்தானே தனிமைத் தவிப்பைக் கலாரசனையோடு கட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால்…” என்று எழுந்து கொண்ட விஜயா படுத்திருந்த அவனது தலைமுடியைக் கோதியவாறே அவரைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்ன சொல்ல வந்தாய் விஜி? என் நிறுத்திட்டே ?”

“திருமணமானதும் ஒரு ஆணும், பெண்ணும் இணைபிரியாமல் இருப்பது தான் வாழ்க்கை என்றால், உங்கள் சங்க காலத் தமிழன் திரைகடலோடித் திரவியம் தேடப் புறப்பட்டிருப்பானா?”

மோகன் தட்டென எழுந்து விடுகிறான். என்ன.. என்ன சொல்ல வருகிறாள் அவனது புது மனைவி,

“விஜி! மனம் விட்டுப் பேசு!”

“நீங்க என்ன நினைக்கறீங்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை இது தம்பதிகள் இருவரும் சேர்த்து உழைத்துச் சம்பாதித்து முன்னேறும் உலகம். சில வருடங்களாவது இரண்டு பேரின் வருமானமும் வங்கியில் வளர்ந்து பெருக வேண்டும். வருங்கால வாழ்க்கைக்கு சேமிப்பு இருக்கு மானால் தன்னம்பிக்கையும் வளருமல்லவா? அப்புறம் குழந்தைகள்னு பிறந்துட்டா மனைவி அவர்களைத்தானே கவனிச்சாகணும்?”

பிரமிப்போடு அவளைப் பார்த்திருந்த மோகன்,”பலேபலே! உன்னைதான் பாராட்டறேன், கற்பனைகளில்லாத சபலங்களில்லாத, ஏன் சந்தோஷங்களில்லாத ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம் என்கிறாய்! அப்படித்தானே?” என்றான்.

“இடைவெளியில்லாத சந்தோஷங்களும் கசந்துதான் போகும்!”

“அதுதான் தவறு. இடைவெளின்னா தனிமைன்னு அர்த்தம், பிரிவுன்னு அர்த்தம்…”

“ஐயோ பாவம்! எனக்கு வேலை இருக்கு” என்று கூறிவிட்டு சென்றாள் விஜயா.

அன்று பரபரப்பாக முன்னதாகவே பேங்க்கிலிருந்து திரும்பிய மோகன் “விஜி நாளைக்கு சென்னைக்குப் புறப்படனுமில்லயா?” என்றான்

“இல்லை. நான் புறப்படுவதாக இல்லை!”

“ஏன் விஜி! அன்று சொன்னதெல்லாம் சரிதான். நான் ஒப்புக் கொள்கிறேன் விஜி!” ஆறுதலான குரலில் கூறினான் மோகன்.

“அப்பா நமக்கு அந்தக் கஷ்டத்தை வைக்கவே இல்லை. இங்கே இருக்கற கிளை ஆபீஸூக்கு எனக்கு மாற்றலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னும் இரண்டு தினங்களில் தான் வேலைக்குச் சேரணும். இந்தாங்க அப்பாவோட லெட்டரும். என் அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரும்! “என்று அவற்றை அவனிடம் தந்தாள்.

அதைப் பார்த்துவிட்டு திருப்பித் தந்தவன் முகத்தில் எவ்விதக் குதூகலத்தையும் காணோம்.

“நான் வேலைக்குப் போறதில் உங்களுக்கு இஷ்டமில்லையா?” தயக்கத்தோடு கேட்டாள்

“இடைவெளியில்லாத சந்தோஷங்கள் கசந்து போகுமேன்னுதான் பயப்படறேன்!” என்றான்.

விஐயா சுலகலவென்று சிரித்தாள்.

“உங்க பேங்க்குக்கும் என் ஆபீஸூக்கும் நிச்சயம் நிறைய இடைவெளி இருக்கிறது!”

“ஆனால் நமக்குள் அந்த இடைவெளி நிச்சயமாக எப்போதும் இருக்கக் கூடாது! புரிகிறதா விஜி?” என்று அவளை எட்டிப் பிடிக்க முயன்றான் மோகன்.

அவன் கைக்குள் அகப்படாமல் தப்பிச் சென்று மறைந்தாள் அவள்.

– 06-07-1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *