இடுக்கண் வருங்கால் நகர்க…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2023
பார்வையிட்டோர்: 4,553 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படுத்திருந்த கணவனை எழுப்பினாள் நிரஞ்சனா, “என்னங்க… என்னங்க…உங்களைத்தான். கொஞ்சம் எந்திரிங்க…” குரல் உயர்த்தினாள்.

மெதுவாக ஓணான் போல் தலை உயர்த்தினான் பரணிவாசன்.

“என்னடி அவசரம்? தூங்குகிறவனை எழுப்புற?”

“அவசரம்தான். கொல்லைப் பக்கமே போக முடியலைங்க, பின்னாடி, அவன் தான் இன்னாசி முத்து – கொட்டகை போட்டுக் கள்ளச் சாராயம் மதுக்கசாயம் வித்துக்கிட்டு இருக்கான். சந்தைக் கடை மாதிரி ஒரே சப்தம், கெட்ட கெட்ட பேச்சு பேசிக்கிட்டுச் சண்டை வேற… தாங்க முடியல்ல..”

“கவலைப்படாதே. நேரா போய் அந்த இன்னாசி முத்தை நாலு வாங்கு வாங்கறேன்…”

தலையில் அடித்துக் கொண்டாள் நிரஞ்சனா.

“அய்ய! தான் உங்களைப் போய்க் கேக்கச் சொல்லலே. அந்த இன்னாசி முத்து ஒரு மாதிரியானவன். இப்பத்தான் அம்பத்தி ஆறாவது தடவையா ஜெயில்லேயிருந்து விடுதலையாகி இருக்கான்!”

“வேறென்ன செய்யச் சொல்ற நிரஞ்சி?”

“மாசம் பொறந்தா சுளையா வாடகை நானூறு ரூபாய் வாங்கறாரே பூதலிங்கம்… அவர் கிட்டச் சொல்லி இன்னாசி முத்தைக் காலி பண்ண வையுங்க…”

“அவர் ஒரு தொடை நடுங்கி. அநியாயத்தை யார் தட்டிக் கேட்டால் என்ன? நியாயம் பொறந்தா சரி. நானே போய்க் கேக்கறேன்.”

“கேளுங்க வேணான்ல. ஆனா கொஞ்சம் அடக்கி வாசிங்க.”

“சரி நிரஞ்சி!”

***

பரணிவாசனைப் பார்த்ததும் ஏக அமர்க்களமாய் வரவேற்றான் இன்னாசி முத்து.

“வாங்க தலைவரே! வாங்க வாங்க.”

“இன்னாசி முத்து! உன் கூடக் கொஞ்சம் பேசனும். வெளியே வரியா?”

“உள்ளவே பேசலாம். ஏன் இந்த மாம்பழ வாசனை உனக்குப் புடிக்காதா?”

“தயவு செஞ்சு வெளியே வா!”

இன்னாசிமுத்து எழுந்து வெளியே வந்தான் . கடைசிப் புகையை இழுத்து விட்டுப் பீடியைக் கொலை செய்தான்.

“சொல்லுங்க…”

“நீ செய்யறது நியாயமா?”

“ஏன்? மத்தக் கடைகளை விட நான் சரக்கை விலை குறைச்சுத்தானே விக்கறேன்…”

“இன்னாசிமுத்து! விளையாடாதே! ஒரு வாழற வீட்டுக்குப் பின்னாடி நீ பாட்டுக்குக் கொட்டகை போட்டுக்கிட்டுச் சாராயம் கீராயம் வித்துக்கிட்டு இருக்கியே. சரியா?”

விகாரமாகச் சிரித்தான் இன்னாசி முத்து.

“குடிமக்களுக்கு நான் செய்யுற சேவையைப் புரிஞ்சுக்காம பேசுறீங்க பரணி. மலிவு விலை மது பாக்கெட் அஞ்சு ரூபாய்க்குக் கூட கெடைக்காம அவனவன் அவதிப்படுறான், நான் மனசு பொறுக்காம அது இதுவெல்லாம் கலந்து 21 நாள் ஊறவைச்சுக் காய்ச்சி, நியாயமான விலையில் வித்துக்கிட்டிருக்கேன். அது புடிக்காம யாரோ உங்களைத் தூண்டி விட்டுருக்காங்க பரணி…”

“அட ஏய்யா என் வீட்டுக் கொல்லைல விக்கற? அதுதான் கேள்வி!”

“நீங்க எதுக்கு அடி போடுறீங்கன்னு புரியுது . பரணி! நீங்க தினமும் இலவசமா இங்கே குடிச்சுக்கலாம். மாசம் அம்பது ரூபாய் கொடுத்திடுறேன். கண்டுக்காதீங்க…”

“நான் ஒண்ணு கேட்டா நீ ஒண்ணு பேசிக்கிட்டே போறே. ஒரு வாரம் டயம் தர்றேன், மரியாதையா இடத்தைக் காலி பண்ணலே போலீஸுக்குப் போவேன் ஜாக்கிரதை…!”

இதுவரை மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்த இன்னாசி முத்து பால் மாறினான்.

“இன்னாய்யாது இன்னா…! நானும் போனாப் போவுதுன்னு மருவாதியா பேசுனா, அலட்டிக்கிறியே…என்னய்யா நா பாக்காத பொல்லாத போலீசு. இந்தச் சப்தமும் நாத்தமும் புடிக்கலேன்னா கொல்லைக் கதவை இழுத்துச் சாத்திக்க. அதை விட்டுட்டு இந்த மெரட்டுற வேலை வச்சுக்காதே. புல் பூண்டு இல்லாம உன்னைத் தொலைச்சுருவேன்…”

இருவரின் வாக்குவாதத்தில் ஜனத்திரள் குழுமியது. மெஜாரிட்டி ஆதரவு இன்னாசி முத்து பக்கம்தான்.

“இவ்வளவு பேசுறியா இன்னாசி? போலீஸைப் பாத்துப் புகார் செய்துட்டு வரேன்….”

“தாராளமாப் போ! எனக்குப் பயமா? இன்சுபெட்டரை நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லு…”

இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த காவல் நிலையத்துக்குப் பரணிவாசன் வேக வேகமாய் விரைந்தான்.

***

சப் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் படு சரிவாய் அமர்ந்து கால்களை மேஜை மேல் நீட்டியிருந்தார். அவர் எதிரே முப்பது வயதில் ஒரு பெண்.

எஸ். ஐ. அந்தப் பெண்மணியை ஆபாச அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்தார்.

“சார்!” என்றான் பரணிவாசன்.

கர்ண கடூர முகபாவத்துடன் திரும்பி னார் எஸ். ஐ. “யாருய்யா நீ?”

“என்.பரணிவாசன்”

“இருக்கட்டும். அதுக்கென்னா இப்ப?”

“நான் சர்க்கரை ஆலைல வேலை பாக்கறேன் . ராமசாமி நகர்ல குடியிருக்கேன்.”

“இதெல்லாம் ஏய்யா என்கிட்டச் சொல்ற?”

“எங்க வீட்டுக்குப் பின்னாடி கள்ளச் சாராயம் விக்கறாங்க. எடத்தைக் காலி பண்ணுயான்னு சொன்னா ஆபாசமா பேசுகிறான். போலீஸையே திட்டுகிறான்…”

“யாரு இன்னாசிமுத்தா?”

“ஆமாங்க…”

“யோவ் உன் பேரென்ன சொன்னே…ஆங்…பரணிவாசன்! உனக்குப் புள்ளை குட்டிக இருக்கா?”

“ரெண்டு பசங்க. ஒருத்தன் ப்ளஸ் டூ. இன்னொருத்தன் நைன்த் படிக்கிறான்…”

“அப்புறம் என்னய்யா வேண்டாத வேலை? நாட்ல ஆயிரம் அயோக்கியத்தனம் நடக்கும். அதைப் போய்க் கண்டிப்பியா நீ?. அது போகச் சாராயம் குடிக்கிறது தப்பில்லைன்னு கவர்ன்மெண்ட்டே விக்கற நேரமிது. கண்டதுல மூக்கை நீட்டாம உன் குடும்பத்தைக் கவனி போய்யா…”

“இதான் உங்க பதிலா? நான் மேலிடத்துக்குப் புகார் பண்ணுவேன்…”

“போய்டுவியா நீ? பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி பெண்டெடுத்துருவேன்…”

அதற்குள் ஏட்டு வேகமாய் வந்து பரணி வாசனை வலுக்கட்டாயமாய் வெளியே தள்ளி வந்தார்.

“வேண்டாம் சார். பார்க்கப் படிச்ச ஆளாயிருக்கிங்க. அந்த ஆள்கிட்டே வாதம் பண்ணாதீங்க. நியாயம் கிடைக்காதுங்க. நான் ஒரு வழி சொல்றேன். பேசாம வீட்டைக் காலி பண்ணிட்டு டீசென்டா வேறொரு வீட்டுக்குக் குடி போங்க. அது தான் பிரச்னைக்குத் தீர்வு…” – அறிவுரை சொன்னார் ஏட்டு.

பரணிவாசன் தளர்வாய் வீட்டுக்கு வந்தான், நடந்ததையெல்லாம் மனைவியிடம் விவரித்தான்,

“அந்த ஏட்டு சொன்னதுதான் சரி. உடனே வேறே வீடு பாருங்க. போய்டுவோம்..” என்றாள் அவள்.

***

அடுத்த ஒரு வாரத்தில் வேறொரு வீடு பார்த்து விட்டான் பரணிவாசன்.

“வீடு பாத்துட்டேன் நிரஞ்சி!”

“வாடகை?”

“அம்பது ரூபா கூட 450 ரூபாய் வாடகை, மூவாயிரம் அட்வான்ஸ்…”

“பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க? இந்த வீட்டுக்குக் குடுத்த அட்வான்ஸ் மூணு மாச வாடகை பாக்கிக்குச் சரியாயிடும்…”

“அதான் ஒண்ணும் புரியலை. மூவாயிரத்துக்கு என்ன செய்யறது…?”

“ஒரு வேடிக்கையைக் கவனிச்சீங்களா…? அந்த இன்னாசிமுத்து நாம இந்த வீட்ல தொடர்ந்து இருக்கிறதுக்கு மாசம் ஐம்பது ரூபாய் தரத் தயாராய் இருந்தான். ஆனால் நாம் ஏற்கெனவே உள்ள வாடகையை விட மாசா மாசம் ஐம்பது ரூபாய் கூட குடுத்து இந்த இடத்தை விட்டுக் காலி பண்ணிப் போறோம்! அதோட மூவாயிரம் அட்வான்ஸ்!” – சொன்னபடி தன் கையிலிருந்த இரண்டரை பவுன் மூங்கில் வளையைக் கழற்றிக் கணவனிடம் நீட்டினாள் நிரஞ்சனா.

– 21-10-1990

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *