இங்லீஷ் பாட்டி தூக்கத்தில் இறந்து விட்டாளாம். என்னுடைய கஸின் பாலாஜி காலையில் போன் பண்ணிச் சொன்னான். என்னைப்போல் அவனும் பாட்டியின் ஒரு பேரன்.
பாட்டிக்கு மொத்தம் எட்டு பேரன்கள், நான்கு பேத்திகள். பேத்திகள் நால்வருக்கும் கல்யாணமாகி அவர்களுக்கும் நிறைய குழந்தைகள் உண்டு. எங்களுக்கு நிறைய வகையில் பாட்டி உறவுகள் இருப்பதால், இறந்துபோன பங்கஜம் பாட்டி அடிக்கடி இங்லீஷ் பேசுவதால், பாட்டியை இங்லீஷ் பாட்டி என்றுதான் நாங்கள் சொல்வோம்.
நான் ஆபீசில் லீவு சொல்லிவிட்டு என் காரை எடுத்துக்கொண்டு பாட்டிக்கு இறுதி மரியாதை செலுத்த உடனே கிளம்பினேன்.
பங்கஜம் பாட்டிக்கு வயது அறுபதுத்தைந்துக்கு மேல் இருக்கும். பார்க்க செக்கச் செவேல்னு உயரமா திடகாத்திரமாக இருப்பாள். அவள் படித்து பாஸ் பண்ணியது அந்தக் காலத்து ஏழாம் வகுப்பு. தஞ்சாவூர் கே.எஸ்.ஹைஸ்கூலில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பாட்டியின் அப்பா படிப்பை நிறுத்திவிட்டு, அவளுக்கு திருமணப் பேச்சை ஆரம்பித்து விட்டாராம்.
திருவையாற்றில் நல்ல மாப்பிள்ளை கிடைத்ததும் உடனே திருமணம் செய்து வைத்துவிட்டாராம். நாலு நாள் கல்யாணமாம். தஞ்சாவூர் காக்கா வட்டாரத்தில் இருக்கும் ராணி வாய்க்கால் சந்து முழுவதும் பந்தல் போட்டு ஒரே அமர்க்களமாம்.
பாட்டியின் படிப்பை ஒழுங்காக தொடர வைத்திருந்தால், ஸ்கூல் பர்ஸ்ட் வந்து, தஞ்சாவூர் மெடிகல் காலேஜில் கோல்ட் மெடல் வாங்கி ஒரு பெரிய டாக்டராக இருந்திருப்பாளாம். பாட்டி தன்னைப்பற்றி இப்படி அடிக்கடி பீற்றிக் கொள்வாள்.
தன்னுடைய அரைகுறை ஆங்கிலப் புலமையை தன் கொள்ளுப் பேரன் பேத்திகளிடம் காட்டிக் கொள்வாள். பாட்டி பேசும் ஆங்கிலத்தைப் பார்த்தால் எவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும்.
டைனிங் டேபிளில் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாட்டியிடம் எந்தக் குழந்தையாவது குறுக்கே பேசி தகராறு செய்தால், “ஐ டாக், ஹி டாக்ஸ் வொய் யூ மிடில் மிடில் டாக்?” என்பாள். பாட்டியின் நான்கு வயது கொள்ளுப் பேத்தி லாவண்யா ஒரு நாள் மாடிப்படியில் திடீரென விழுந்து படிகளில் உருண்டாள். அதற்கு பாட்டி, “லாவண்யா சடன்லி பொத் அண்ட் ரோலிங் ஆன் த மாடிப்படீஸ்” என்று சொல்ல நாங்கள் அனைவரும் சிரி சிரியென்று சிரித்தோம்.
வேலைக்காரி, பேப்பர்காரன், தோட்டக்காரன், துணிகளை அயர்ன் செய்பவன், கார் டிரைவர் என அனைவரிடமும் இஷ்டத்துக்கு பாட்டி ஆங்கிலத்தில் புகுந்து விளையாடுவாள். தான் எதைச் செய்தாலும் பாட்டி தைரியமாகச் செய்வாள். கூச்சமோ, வெட்கமோ அறியாதவள் பாட்டி. .
ஒரு தடவை கொள்ளுப் பேரன் முரளி வீட்டில் பாடம் படித்துக் கொண்டிருந்தான். “வாயப் பயம் இனிக்கும், வாயப் பயம் இனிக்கும்” என்று கத்தி படித்தான். அதைக்கேட்ட பாட்டி “டேய் முரளி அது வாழைப்பழம் இனிக்கும்டா…வாயப் பயம் இல்ல, எங்க திருப்பிச் சொல்லு” என்றாள்.
முரளி “போ பாட்டி எங்க எஸ்தர் மிஸ் இப்படித்தான் சொல்லிக் குடுத்தாங்க. நான் அப்படித்தான் படிப்பேன். நான் தப்பா படிச்சா நாளைக்கு என்ன அடிப்பாங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும், “வாயப் பயம் இனிக்கும், வாயப்பயம் இனிக்கும்” என்று உரத்துப் படித்தான்.
பாட்டி, “கடங்காரி, அவ வாய்ல தர்ப்பையை போட்டு பொசுக்க…இதுகளுக்கு ழ, ள, ல ன்னு ஒரு யழவும் வாய்ல ஒழுங்கா வராது. .நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அவளுக்கு வச்சிக்கிறேன் கச்சேரி” என்று எஸ்தர் டீச்சரை திட்டித் தீர்த்தாள்.
மறுநாள் காலை, முரளியை தன் அருகில் உட்காரவைத்து பாட்டி தானே காரை ஓட்டிகொண்டு ஒன்பது மணி ஸ்கூலுக்கு எட்டரை மணிக்கே சென்றாள். ஆங்….பாட்டி கார் ஓட்டக் கற்றுக்கொண்ட கதை ஒரு தனி நகைச்சுவை ட்ராக்.
காரை பார்க் பண்ணிவிட்டு முரளியுடன் டீச்சர்ஸ் ரூமில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த எஸ்தர் டீச்சரிடம் போய், “குட் மார்னிங் எஸ்தர், நான் முரளியின் பாட்டி, நீங்க நேத்து அவனுக்கு வாயப்பயம் இனிக்கும்னு தப்பா சொல்லிக் குடுத்துருக்கீங்க அவனும் அதை அப்படியே வீட்ல வந்து வாயப் பயம் இனிக்கும்னு படிக்கிறான். அது வாழைப்பழம். வாயப்பயம் இல்ல” என்று படபடத்தாள்.
முரளி கண்களில் ஏராளமான மிரட்சியுடன், எஸ்தர் டீச்சர் தன்னை இந்த வருடம் பெயில் பண்ணுவது நிச்சயம் என்று நினைத்து பயந்தான்.
எஸ்தர் எழுந்து நின்றாள். இருபத்திநான்கு வயதிருக்கும். குள்ளமாக, கெச்சலாக, ஸ்கர்ட் அணிந்து வறட்டு ஈர்க்குச்சி கால்களுடன் காணப்பட்டாள்.
“யூ கோ டு த கிளாஸ் ரூம் முரளி” என்றாள். அவன் ஆளைவிட்டால் போதும்டா சாமி என்று புத்தகப் பையுடன் ஓடினான்.
பின் பாட்டியிடம் திரும்பி மரியாதையுடன், “மேடம் வாயப்பயம்தான் சரி. நான் அப்படித்தான் சொல்லிக் குடுப்பேன். வேணும்னா நீங்க பிரின்ஸிகிட்ட போய் கம்ப்ளெய்ன்ட் பண்ணிக்குங்க” என்றாள்.
பாட்டி அவளின் விட்டேத்தியான இந்த பதிலை சற்றும் எதிர் பார்க்கவில்லை.
“ஓ காட்….ஐ வில் சர்டன்லி மீட் ஹர்” என்றாள்.
பத்துமணி வரை காத்திருந்தாள்.
பிரின்ஸி ஒரு பழைய பச்சைநிற பியட் காரில் வந்து இறங்கினாள். ஐம்பது வயது இருக்கும். பாப் கட்டிங் செய்து, ரவிக் அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டிருந்தாள். மடிசாரில் இருந்த பாட்டியைப் பார்த்ததும், கூலிங்கிளாசை கழற்றிவிட்டு, “எஸ் ப்ளீஸ்” என்று புன்னகைத்தாள்.
பாட்டி பொறுமையாக, “மேடம் ஐ நோ, திஸ் இஸ் எ குட் ஸ்கூல். பட் உங்க எஸ்தர் டீச்சர் என் பேரனுக்கு வாயப்பயம் இனிக்கும்னு தப்பா சொல்லிக் குடுத்துருக்காங்க…நான் எடுத்துச் சொல்லியும் ஷி டஸ் நாட் லிசன். திஸ் இஸ் அட்ராஷியஸ். வி ஆர் இன் டமில்நாட். அது வாயப்பயம் இல்ல, வாழைப்பழம். ப்ளீஸ் கால் ஹர் அண்ட் கரெக்ட் ஹர்” என்றாள்.
பிரின்ஸி அமைதியாக, “மேடம் நான் இந்த ஸ்கூலுக்கு இருபது வருடமா பிரின்ஸியாக இருக்கேன். எங்க ஸ்கூல் பயக்க வயக்கமே இதுதான்” என்றாள்.
பாட்டி காரை அவசரமாக கிளப்பி தலைதெறிக்க ஓட்டி வீட்டிற்கு வந்தாள். மறுநாளே முரளிக்கு டி.ஸி. வாங்கி வேறு ஸ்கூலில் சேர்த்தாள்.
பாட்டி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கார் டிரைவிங் ல்கூலுக்குச் சென்று கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். அங்கு ஒரு இருபது வயதுப் பையன் பாட்டிக்கு ட்ரெய்னராக இருந்தான். பாட்டி அடிக்கடி ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்த அவனும் பாட்டியிடம் ஆர்வக் கோளாறில் அடிக்கடி ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக பேசினான். .
பாட்டி கார் கற்றுக் கொள்வதால், டிராபிக் பயத்தில் அடிக்கடி ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தாள். எரிச்சலான ட்ரெய்னர் பையன் பாட்டியிடம் “யு ஆர் வெரி வெரி ஹார்னி” என்றான்.
பாட்டியும் விவரம் புரியாமல் அப்பாவியாக “எஸ் ஐயாம் வெரி ஹார்னி…ஐ வில் ரிடியூஸ் இட்.” என்றாள். இதை பெருமையாக வீட்டில் வேறு வந்து சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
நான் போனபோது பாட்டியை கூடத்தின் தரையில் கிடத்தியிருந்தார்கள். மூக்கில் பஞ்சடைத்து, கால் கட்டை விரல்களை சேர்த்துக் கட்டியிருந்தார்கள். பாட்டியின் தலைமாட்டில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.
பெரியவர்கள் எவரும் அழவில்லை. சீக்கிரம் பாட்டியை எடுப்பதற்கு காத்திருந்தனர். ஆனால் கொள்ளுப் பேத்திகளும், பேரன்களும் “பாட்டி இனிமே பேசமாட்டா…. உம்மாச்சிகிட்ட போயிட்டா” என்று மாய்ந்து மாய்ந்து அழுதன.
பாட்டி குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்லும்போது அங்கிருக்கும் கடவுள்களை ஆங்கிலத்தில் பேர்சொல்லி அழைக்கும் அழகு இருக்கிறதே, அதைக் காண கண்கோடி வேண்டும்.
பிள்ளையாரை எலிபன்ட் காட், ஆஞ்சநேயரை மங்கி காட், முருகனை பீகாக் காட், சிவனை புல்லக் காட், சக்கரத்தாழ்வாரை வீல் காட் மற்றும் நரசிம்மரை லயன் காட் என்று ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை புகட்டும் அழகே தனி.
கடவுளைக்கூட இங்லீஷில் பேர்வைத்துக் கூப்பிட்ட பாட்டி, இன்னும் நிறைய இங்லீஷ் கற்றுக்கொள்ள அவர்களிடமே போய்விட்டார் போலும்.