பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
“நான் எதுக்கு போகணும்” ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணா” பேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
“அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவ” சொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.
திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள். கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.
சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சே” இடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.
அப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.
நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?
ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே “இனி அங்க வெளயாட போகாத தம்பி” என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.
இரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.
வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி, நந்தியாவட்டை, இருவாச்சி, ஜினியா, வாடாமல்லி, ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.
நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.
– Saturday, November 21, 2009